Tuesday, May 15, 2012

கவிதைகள் சில...

தொலைந்த காதல்
நம் உடல்கள் தழுவிக்கொள்கின்றன
கரங்களின் இயக்கம் அநிச்சை செயலாய் நடக்கின்றது
விழிகள் மூடிக்கொள்கின்றன
எல்லாம் முடிந்த பின்னர்
காமம் கழிந்த்தொரு கணத்தில்
எதிரெதிர் திசைகளில் படுத்துக்கொள்கிறோம்
நமக்குத் தெரியும்
நேற்றைப் போல இன்றைப் போல
நாளையும் வரப்போகுமிந்த
காமம் கழிந்த கணத்தை
அன்றாடம் உணர்வது போல
உணர முடியவில்லை
நம் காதல் தீர்ந்த கணத்தை.
*


புதையுறும் கூழாங்கற்கள்

வெள்ளம் வற்றிய நதியில்
சேற்றினடியில் கிடக்கும்
கூழாங்கற்கள் போன்று உன் நினைவுகள்
நீ சென்ற பின்னும் புதையுண்டு கிடக்கின்றன.
மறுவெள்ளம் வருகையில்
அடித்துச் செல்லக்கூடும் என்கிற
எதிர்பார்ப்பு பொய்த்தது.
புதுவெள்ளமும் வற்றியபின்
இப்போது புதிதாய்
பழையவற்றோடு சேர்த்து மேலும்
சில கூழாங்கற்கள்
மறுவெள்ளத்துக்கும் இவை
அடித்துச் செல்லப்படாது நிச்சயமாக
ஆனாலும் மேலும் கூழாங்கற்கள் மட்டும்
சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
*

களவு போன இரவு

தன் விஷக்கொடுக்குகளால்
என் இரவை
கொத்தியெடுத்துச் சென்றது காலம்
திருப்பித்தருமாறு
இரைந்து நிற்கிறேன்
இரக்கமற்ற காலம்
என் கோரிக்கையை நிராகரிக்கிறது
நீண்டநேர யாசித்தலுக்குப் பின்னர்
காலம் துப்பிவிட்டுச் சென்ற
ஓர் இரவுக்குள்
எனக்கு மட்டும்
ஒளித்துவைக்கப்பட்டிருந்தது
ஒரு பகல்
*

முத்தமெனும் நிலவறை

மௌனத்திற்குள் ஒளிந்து கொண்டன
நம் சொற்கள்
முத்தத்திற்குள் ஒளிந்துகொண்டன
நம்மிருவரின் மௌனங்களும்
*