Monday, June 14, 2010

செங்கடல்


மீளாத்துயர்க்கடலில் 
திக்கறியாமல் தத்தளிக்கிறேன்
துயரத்தின் நீலம் சுற்றிச்சூழ
கரங்களை துயர்நீரில் தடைபடாமல்
காற்றின் குறுக்கே வீச முயன்று தோற்கிறேன்.
கரை தென்படாமல்
தொடுவானம் வரை 
துயரத்தின் உவர்ப்பு நீலநிறத்தில்
பேரலையாய் நினைவுகள் எழும்பி மோத
நினைவிழக்கிறேன்.

கண்விழிக்கையில் 
சமதளத்தில் என் உடல்
கரங்களை வீசுகிறேன்.
துயர்நீர் தட்டுப்படவில்லை.
காற்றில் அலைகின்றன கரங்கள்
கோப்பையில்
துயரக்கலப்படமில்லா
நீலநிறமற்ற நீர்
பாய்ந்து பருகுகிறேன்.
அடைத்த செவிகளில் 
இதுவரை ஒலித்த ரீங்காரம்
காணாமல் போன நொடியில்
பேரிரைச்சலொன்று செவிப்பறையைத் தாக்க
சுற்றிலும் துயரத்தின் பேரலைகள் 
நினைவுகளாய் மோதும் பெருஞ்சத்தம்
நீலநிற கண்ணீரின் ஆழத்தில்
கண்ணாடி அறையில் நான்
சுவர்களை துளைத்து துயரைக் கடந்து ஊடுருவும்
என் விழிகளுக்கு
கரை தென்படவில்லை
இம்முறை தொடுவானமும்கூட.
பேரலை பொங்கி மோத
மீண்டும் நினைவிழக்கிறேன்.

இப்போது கண்விழிக்கையில்
மண் தரையில் என் உடல்
துயரத்தின் உவர்ப்பில்லை
நினைவுகளாய்  பேரலைகள் இல்லை
கரங்களை அசைக்கிறேன்
காற்றில் சப்தமெழுப்பி அலைகின்றன அவை
மகிழ்ச்சி பொங்க 
எழுந்து கால்களை ஊன்ற எத்தனிக்கிறேன்
நிலைதடுமாறி வீழ்கிறேன்
ஒரு உயிரற்ற உடல்மீது

நாசிக்குள் மயிர் கருகிய மணம்
குருதியின் வாடை
தொடுவானம் வரை மனிதஉடல்க்ளும் சதைக்கூழமும்
தொலைவிலே துப்பாக்கிகளின் ஓசை
மனிதர்களின் பேரவலக் குரல்கள்
காலடியில் குண்டுகளின் அதிர்வு
துப்பாக்கிகள் மௌனிக்கும் ஓசையும்
துல்லியமாய் கேட்கிறது
கூடுகளிலிருந்து உயிர்பறவை சிறகடிக்கும் சப்தமும்
செவிவழி பாய்ந்து இதயத்தை தைக்கிறது
கண்ணெதிரே துயர்நீரின் கடல்
இப்போது செந்நிறத்தில்
நீலநிறத்தினதைவிடப் பெரியதாய்

கண்ணீர் நதியாயய் பெருக்கெடுத்து 
நிறபேதமின்றி செங்கடலோடு கலக்கிறது.
உள்ளிருந்தும் புறத்தேயிருந்தும்
துரோகத்தின் நாற்றம் 
காற்றில் பரவி மூச்சையடைக்க
இம்முறையும் நினைவிழக்கிறேன்

மீண்டும் கண்விழிக்கையில்
அதே பழைய நீலநிற துயர்நீர்
இப்போதும் பேரலையாய் துன்ப நினைவுகள்
இம்முறையும் திக்கறியாமலிருக்கிறேன்.
இனி
விழிகளால் ஊடுருவி
தேடப்போவதில்லை
தொடுவானத்தையோ கரையையோ.

செங்கடலைப் போலல்ல
நீலக்கடலில் ஒரு துரும்பாயினும்
கிட்டிவிடும் தப்பிக்க!

- கவின் மலர்

(’தலித் முரசு’ மே, 2010 இதழில் வெளியானது)

Tuesday, June 08, 2010

பெருவெளி

காதலும் காமமுமற்ற
ஒரு பெருவெளியில் நான்.
விழிகளை அகலவிரித்தாலும்
காட்சிக்குள் விழ மறுத்து
விலகி ஓடும் ஏதோ ஒன்று.
அதரங்களின் திறப்பில்
வெளிப்படும் மொழி
அந்நியமாய்.
பரந்த வெளியின் காற்றனைத்தையும்
உள்ளிழுத்தாலும் மூச்சடைப்பு.
ஒலிக்கலவை காதுகளில் அறைய
அதனூடே இசையை தேடித் திரிகிறேன்.
ஒலிக்கவில்லை
தனிமையின் இசை கூட.
ஆதிமனுஷியாய்
கனிகிழங்கு உண்கையில்
நா கசந்து உடன் ஜீரணித்து
வெளியேற்றுகின்றேன் நரகலை.
காயசண்டிகை நான்.
சமவெளியில் என் காலடித்தடஙகள்
குழிகின்றன பள்ளத்தாக்காய்.
எதிரில் தென்படும்
உருவங்களின் இதழ்சுவையிலும்
இனிப்பில்லை.
இப்பெருவெளி வாழ்க்கையிலிருந்து
விடுபட்டு
பால்வெளியின் எல்லைக்குட்ப்ட்ட
பூமிக்குச் செல்ல எத்தனிக்கிறேன்..
இந்த பெருவெளியின் கடவுச்சீட்டை
தொலைத்து விட்ட நான்.


(ஜூன், 2010 உயிரெழுத்து இதழில் வெளியானது)Tuesday, June 01, 2010

சீமானுடன் ஒரு கலைந்துரையாடல்

நான் பணிபுரியும் பத்திரிகையின் முதல் இதழ் வெளியாவதற்கு முன்பு இரண்டு இதழ்கள் நாஙக்ள் தயாரித்தோம். அவை தனிச்சுற்றுக்கு மட்டும் விடப்பட்டன. கடைகளில் விற்பனைக்கு வரவில்லை. இவற்றில் முதல் இதழுக்காக இயக்குநர் சீமானோடு கல்லூரி மாணவர்களின் உரையாடல் ஒன்றை தொகுத்தளித்தேன்.2009 ஜூலை மாதத்தில் நடந்த கலந்துரையாடல் இது. விற்பனைக்கு இதழ் வராததால் நிறைய பேர் பேட்டியை படித்த்திருக்க வாய்ப்பில்லை.அவர்களுக்காக.....
மேடைக்கு முன் மக்கள் கூட்டம். மைக்கில் தமிழ்ச் சமூகத்தை விளாசு விளாசு என்று விளாசுகிறார். அவ்வபோது கண்கள் சிவந்து கோபம் கொப்பளிக்க பேசுகிறார். வேறு யார்? நம்ம சீமான்தான். எப்போதுமே அரசியல் கட்சிகளையும், ஆட்சியாளர்களையும், மக்களையும் அவர் மட்டும்தான் கேள்வி கேட்க வேண்டுமா என்ன? சென்னை லயோலா கல்லூரி ஊடகக் கலைகள் துறையின் மாணவர்கள் கிளரன்ஸ், ஜெயசந்திர ஹஷ்மி, புஷ்பராஜ், மாநில கல்லூரியின் ஆராய்ச்சி மாணவி ரேவதி, அண்ணா பல்கலைக்கழகத்தின் இதழியல் மாணவி கவியரசி, மார்க்கெட்டிங் துறையைச் சேர்ந்த சித்ரா ஆகியோர் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள்அவர்களது  கேள்விக்கணைகளும் சீமானின் சளைக்காத பதில் களுமாக களை கட்டியது ஒரு மாலை நேரம். அவரது வளசரவாக்கம் வீட்டின் மாடியில் கீற்று வேயப்பட்ட குடிலில், பிரம்பு நாற்காலியில் அமர்ந்தபடி, ஒருபுறம் சேகுவேரா, மறுபுறம் பிரபாகரன் படங்கள் சகிதம் தேநீரோடு தொடங்கியது சந்திப்பு.

இப்போதெல்லாம் நடிகர்கள் திடீரென்று அரசியலுக்கு வந்து விடுவது பற்றி என்ன நினைக்கிறீங்க?

அரசியலுக்கு யாரும் வரலாம். சினிமா அவங்களுக்கு முகவரி அட்டையைத் தருது. எளிதான அறிமுகம் கிடைக்குது. நீண்டகாலம் சமூகத்திற்காக உழைத்த மிகப்பெரிய தலைவரைவிட ஒரு திரைக்கலைஞன் சுலபமாக புகழ் பெற முடியுது. ஆரோக்கியமான சினிமா வர ஆரம்பித்தால் இதற்கெல்லாம் வாய்ப்பில்லை. நம் தமிழ்நாட்டு மக்களை நம்பமுடியாது. கேரளாவில், மேற்கு வங்கத்தில் ஆரோக்கியமான சூழல் இருக்கு. அங்கே அரசியல் வேற, திரைப்படம் வேற என்ற புரிதல் மக்களிடம் இருக்கு. மக்களிடம் ரொம்ப புகழ் பெற்ற நடிகர் கூட அங்கே அரசியலுக்கு வரமுடியாது. இங்கே அப்படிக் கிடையாது. பாலூத்துறது, கும்பாபிஷேகம் செய்றது, தீக்குளிச்சு சாகுறது இப்படி எல்லை மீறிப் போயிடுச்சு. இதையெல்லாம் மாணவர்களாகிய நீங்கதான் மாத்தணும்

மக்களின் அறியாமையை சினிமாக்காரங்க தப்பாக பயன்படுத்திக்கிறாங்கன்னு சொல்லலாமா?

ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு. பார்வையாளர்கள் நிராகரிச்சா நாங்க தப்பா படம் எடுக்க மாட்டோம். உங்களைப்போல மாணவர்கள்தான் நிறைய படம் பார்க்குறீங்க. ஒரு குத்துப்பாட்டு திரையரங்கத்தில் ஓடும்போது அதை ரசிக்காம எழுந்து வெளியில போனீங்கன்னா படம் ஓட்டுறவரே அடுத்த காட்சிக்கு அதை வெட்டி எறிஞ்சுடுவார். அதை விட்டுட்டு நீங்க பாட்டுக்கு விசில் அடிச்சு அந்த பாட்டை ரசிச்சீங்கன்னா தொடர்ந்து இப்படித்தானே பாட்டு வரும்?. நீங்க சீட்டி அடிச்சுல்ல ரசிக்கிறீங்க!”

 எங்க கல்லூரி சார்பா ஒரு கருத்துக் கணிப்புக்காக ஒரு கிராமத்துக்கு போனப்போ முதலமைச்சர் எப்படி இருக்கணும்னு நினைக் கிறீங்கன்னு கேட்டபோது ஒருத்தர்முதல்வன்அர்ஜுன் மாதிரி இருக்கணும்னு சொன்னார். இதை நீங்க எப்படி பார்க்கறீங்க?

 “திரைப்படத்தில் கதாநாயக வழிபாடு நிறைய இருக்குகற்பனையில் உதித்த கதாபாத்தி ரங்களை காப்பியங்களில் வருவது போல அவதார புருஷர்களாக, தேவதூதர்களாக மக்கள் பார்க்கிறாங்க.கொலை பண்றவணும் படம் பார்த்துதான் கொலை பண்ணேன்னு சொல்றான். கல்யாணம் பண்றவனும் படம் பார்த்துதான் கல்யாணம் பண்ணேன்னு சொல்றான். நதியா வந்தப்போ நதியா வளையல், நதியா பொட்டுன்னு நிறைய வந்தது. ஆட்டோகிராப் படம் வந்தப்போ ஆட்டோகிராப் சேலைன்னு வந்து வித்துது. திரையில் சிரிச்சா மக்கள் சிரிக்கிறாங்க. அழுதா அவங்களும் அழுறாங்க. மக்கள் நல்ல விஷயங்களையும் எடுத்துக்குறாங்க. கிழக்குச் சீமையிலே படப்பிடிப்பு சமயத்தில் ஒரு கிராமத்தில் சாதிக் கலவரம். எல்லா மக்களும் அரிவாளோடு ஓடுறாங்க. ஒரு பத்து பேர் மட்டும் போகலை. ஏன்னு கேட்டப்போதேவர் மகன் படம் பார்க்குறதுக்கு முன்னாடி நாங்களும் இப்படித்தான் இருந்தோம். அதற்க்குபின்னாடி தப்புன்னு தோணிடுச்சுனு சொன்னாங்க. ஆக, அந்த பத்து பேரை தடுத்த பெருமை ஒரு சினிமாவுக்குத்தான். அதனால்தான் சினிமா பொழுதுபோக்கு இல்லைன்னு சொல்றேன்.”

 மசாலாத்தனம் இல்லாத சினிமா சாத்தியமா?

 “சாத்தியம்தான். இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் Œங்க, நா@டாடிகள் @பான்ற படங்களே சாட்சி

 ‘பசங்கபடத்தை யதார்த்தம் என்று எப்படி சொல்றீங்க? டீன் ஏஜ் வயசுப் பையங்களின் கதையை குழந்தைகள் மேல திணிக்கிறது எப்படி யதார்த்தம்னு சொல்ல முடியும்? இரானிய திரைப்படங்களில் எல்லாம் குழந்தைகளுக்கான படங்கள் இப்படியா வருது?

 “ஒண்ணு தெரிஞ்சுக்குங்க! இரானில் 12  வயசுக்கு மேற்பட்ட அல்லது 55  வயதுக்கு மேற்பட்டவங்களை மட்டுமே திரையில் காண்பிக்கணும். இடைப்பட்ட வயதில் உள்ள பெண்களை திரையில் காண்பிக்கக் கூடாதுன்னு சட்டமே இருக்கு. அதனால் அவங்க கதையை யோசிக்கும்போதே அதற்கேத்தமாதிரி யோசிக்கிறாங்க. ‘பசங்கபடத்தில் வருவது போல நிஜத்தில் நடக்கலையா என்ன? இது மாதிரி படம் பண்றதே ஒரு அதீத முயற்சி. அதுலயும் குறை சொல்லி கவுத்துறாதீங்க. சும்மா எதுக்கெடுத்தாலும் ஹாலிவுட், இரான்னு போய் நிக்கக் கூடாது. அவங்களுக்கு உலக சந்தை. எங்களுக்கு நாலைஞ்சு மாவட்டம்தான். இங்கே நமக்கென்ன முடியுமோ அதைத்தான் நாம செய்ய முடியும். அதுலயும் குறை சொல்லி இது மாதிரி முயற்சிகளையும் தடுக்காதீங்க.”

திரைப்படங்களில் பெண்களை மிக மோசமாக சித்தரிக்கிறாங்களே?

படங்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக வணிகரீதியாக சில விஷயங்களை தோல்விபயத்தில் சேர்க்கிறார்கள். அது தேவை இல்லை என்பது இப்போது நிரூபிக்கப்பட்டிருக்கு.”

தமிழ்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால்  தமிழக அரசு வரிவிலக்கு அளிப்பதை எப்படி பார்க்கறீங்க?

அப்படியாச்சும் இவங்க தமிழில் பெயர் வைக்க மாட்டாங்களான்னு ஒரு நப்பாசையில அப்படி அரசாங்கம் அறிவிச்சுது. நாங்ககூட தமிழ் பாதுகாப்பு இயக்கம் தொடங்கினோம். ஆனால் இங்கே என்ன நடக்குது? தமிழில் தலைப்பு மட்டும் வைச்சுட்டு உள்ளே பூராவும் முழுக்க முழுக்க ஆங்கிலம். உலகத்திலேயே எம்.நாகராசு என்று ஆங்கிலத்தில் தனது முதல் எழுத்தை போட்டுக் கொள்பவன் தமிழனாகத்தான் இருப்பான். .நாகராசு அல்லது மு.நாகராசுன்னு போட்டா குறைஞ்சுடுமா? சா..பூ..த்ரீன்னு ஒரு படம். இது என்ன மொழின்னே தெரியலை. என்னைக் கேட்டால், தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதைவிட தமிழில் பெயர் வைக்காத படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்கலாம். பாடல்களில் பிறமொழி கலப்பு அதிகமா இருக்கு. பெண்ணின் தொடையை காண்பிப்பதுதான் ஆபாசம் என்றில்லை. சண்டைக் காட்சிகள்தான் வன்முறை என்றில்லை. இந்த மொழிக் கலப்புதான் மிகப்பெரிய ஆபாசம்; வன்முறை. நான்கூட வாழ்த்துகள் படத்தில் பிறமொழி கலப்பில்லாமல் செய்திருந்தேன். ஆனா அதை மக்கள் வரவேற்கலையே! படம் தோல்விதான். தூயதமிழ் அவங்களுக்கு ஏனோ அந்நியமா தெரியுது. தமிழர்களிடமிருந்து தமிழ் தூரமாகி விட்டது. ‘சாயங்காலம் கூப்பிடுறேன்இப்படி சொன்னா புரியாதா? ‘ஈவினிங் கால் பண்றேன்; கை பண்றேன்னாத்தான் புரியுமா? வாக்கு அரசியல் முக்கியமாக ஆகிட்டதால வாக்கு வங்கி குறைஞ்சுடு மோன்ற பயத்துல பல பிழைகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை.”

உங்கதம்பிபடத்துல போராட்டம் தனியாகவும் குடும்ப வாழ்க்கை தனியாகவும் பிரிக்கிறீங்களே? அது எப்படிச் சரியாகும்? இரண்டும் ஒன்றாக இருப்பதுதானே நியாயம்? ‘படிச்சிட்டு பிறகு போராட வாஎன்று சொல்வது எப்படி சரி?

 “இப்போ நான் சிறைக்கு போனேன். அப்பா அம்மா எல்லாருக்கும் என்னைப்பத்தி தெரியும். அதனால தாங்கிக்கிட்டாங்க. நானும் தாங்கிக்கிட்டேன். ஆனால் வேறு ஒரு படிக்கிற பையன் சிறைக்கு போறான்னு வைச்சுப்போம். அவனுக்கு எதிர்காலமே கேள்விக்குறியாகிடும். அவங்க வீட்டில், வெளியில் அவனை எப்படி பார்ப்பாங்கன்னு இருக்குல்ல? அவன் ஒருத்தன் சிறைக்கு போறதால அதை பார்த்து பயந்து போராட வர துடிக்கும் ஆயிரம் பேர் தயங்குவாங்க. படிச்சிட்டு அதிகாரியா இருந்தா, சமூகத்துக்கு எதுவும் செய்ய முடியாது என்பதெல்லாம் சும்மா. அரசு அதிகாரியா இருக்குற  இறையன்பு தனது துறையில் எல்லோரையும் கணிப்பொறிக்கு மாற்றி இருக்கிறார். கைப்பந்து பயிற்சி கொடுக்கிறார். இப்படி நல்லா படிச்சு அதிகாரியா இருந்தாலும் தனது அதிகாரத்திற்குட்பட்டு நல்லது செய்யலாம்தான்.” 

 அப்போ செட்டிலாகிட்டு போராடிக்கலாம்னு சொல்றீங்களா?

அப்படி இல்லை.என் ஒருவனால 10 பேர் சாதிப்பது தடைபடக்கூடாது. எல்லோரும் என் பின்னாடி போராட வாங்கன்னு கூப்பிட்டால் நான் சுயநலவாதி ஆகிடுவேன்.”

முத்துக்குமார் தீக்குளித்த பிறகு எழுந்த மாணவர் போராட்டம், முதலில் படிப்பு பிறகு போராட்டம் என்ற அடிப்படையில்தான்  கை விடப்பட்டதா?

மாணவர்கள் மிக அர்ப்பணிப்போடு போராடினார்கள். ஆனாலும் கூட ஒரு கட்டத்துக்கு மேல் அந்தப் போராட்டம் செல்லவில்லை.காலவரையின்றி கல்லூரிகளை மூடியபிறகு போராட்டம் என்ன ஆனது? வகுப்புகளுக்கு போகும் வாய்ப்பு இருக்கும்வரை போராட்டம் இருந்தது. வீட்டுக்கு போன பிறகே என்ன ஆனது? அதுதான் யதார்த்தம். இதுலகூட பார்த்தீங்கன்னா  சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் வந்தது போல் மருத்துவ மாணவர்கள் ஏன் வரலை?”

இரண்டு வருஷத்துக்கு முன்னால் இதே போல் அரசாங்கம் காலவரையற்ற விடுமுறை விட்டபோது, ஹாஸ்டல் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வகுப்புக்குப் போக மறுத்தாங்க. அது போல் ஏன் இந்த விஷயத்தில் நடக்கலை?

முத்துக்குமார் தீக்குளித்ததற்கு பிறகு அனைத்து மாணவர்களும் ஓடிவந்து அமைப்பு துவங்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். உணர்வுகள் அதிகமாக இருக்கையில் அவர்கள் போராடினார்கள். இப்போது என்ன ஆச்சு? கலைஞ்சு போச்சு. திரும்ப அவங்களை கூப்பிடணும். வழிகாட்டணும். இருக்கும் தளத்தை போராட்டக்களமாக மாற்றணும்.”

உணர்வுரீதியாக திரளும் கூட்டம் இப்படித்தான் ஆகும். ஏன் நீங்க மேடையில் பேசும்போது இவ்வளவு உணர்ச்சிவசப்படுறீங்க? உங்களை பின்பற்ற நினைப்பவர்களையும் உங்களின் இந்த குணம் தாக்காதா?

அங்கே தமிழன் ஈழத்தில் செத்துக்கிட்டு இருக்கும்போது இங்கே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடக்கும் கிரிக்கெட் போட்டியை சாலை ஓரக்கடையில் நின்னு வேடிக்கை பார்த்தா எப்படி? எனக்கு உணர்ச்சி இருக்கு. அதனால் உணர்ச்சிவசப்படுறேன்.எதை எப்படி பேசணுமோ அப்படித்தான் பேசணும். உண்மையை பேசும்போது உரக்கத்தான் பேசணும் நான் அங்கே உள்ள எனது மக்களோடு இருக்கிறேன்.இது எனது போராட்டம். அதனால் என் பேச்சு அப்படித்தான் இருக்கும். இழவு வீட்டில் ஏன் கதறி அழறேன்னு கேட்டா எப்படி?”

இங்கே ஈழம் பற்றி பேசுபவர்கள் ஒருமுறையாவது இலங்கை அகதிகள் முகாமிற்குச் சென்று பார்த்தீங்களாஇங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் முதலில் பூர்த்தியாகி இருக்கிறதா என்று யாரவது பார்த்தீங்களா?

அவர்கள் மேல் அக்கறையோடுதான் இருக்கிறோம். அவர்களுக்குச் சரியான கழிப்பறை கூட இல்லை. கழிவறை கட்டுவதற்காக சிலரிடம் நன்கொடைக்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம். அவர்களுக்கு செய்யணும். சேர்ந்து செய்யணும். அகதிகள் முகாமில் இருப்பவன் உயிரோடிருக்கிறான். அங்கே செத்துக் கொண்டிருக்கிறான். எந்தச் செடி வதங்கி நிற்கிறதோ அதற்குதான் முதலில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.”

தமிழ்த்தேசியம் பேசும் நீங்கள் ஏன் தலித்தியம் பேசுவதில்லை? அந்த மக்கள் உங்க கண்களுக்கு தெரியலையா?

நீங்கள் ஏன் சேரியிலேயே கொண்டுபோய் பிரச்சனையை நிறுத்துகிறீங்க? நாங்க ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் பேசுறோம். சாதியை மறந்து தமிழன் என்று ஒரு சாதியாய் இணைவது பற்றி பேசினால் நீங்க திரும்பத் திரும்ப கொண்டு போய் சேரியில் நிறுத்துறீங்க. சாதியை மறந்து வாங்க! பிறகு பாருங்க!”

தமிழனுக்கு தனி நாடு கிடைத்துவிட்டால் போதுமா? சாதிய ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் தீர்ந்து விடுமா என்ன?

நீங்க தீராதுங்குறீங்க. நான் தீரும்னு  சொல்றேன். நீங்க நம்பிக்கையற்று பேசுறீங்க. முதலில் சாதியை மறந்து ஒன்றுபடுங்க! பிறகு பாருங்க! சாதிக்குள் நின்று தமிழ்த் தேசியம் பேசினா கஷ்டம். முதலில் அடைய வேண்டியது விடுதலை. அதன் பிறகுதான்  சாதி, மதமெல்லாம் வருது.”

நீங்க தேர்தல் பிரசாரத்துக்குப் போன போதுஈன சாதிஎன்று ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருக்கீங்க. உங்களுக்குள் சாதி வித்தியாசம் பார்க்கும் குணம் இருப்பதால்தானே இப்படி பேசினீங்க?

ஈன சாதி என்றால் அசிங்கமான பிறவி, இழி பிறவி என்ற அர்த்தத்தில்தான் பேசினேன். நீங்கள் சொல்லுவது போல் நான் அந்த பார்வையில் பேசவில்லைஇந்திய இலங்கை கிரிக்கெட் பந்தயத்தை பார்த்து ரசிப்பவனைப் பற்றி பேசும்போது ஆத்திரத்தில் தாங்க முடியாத வேதனையில் வந்த சொல் அது. பிரணாப் முகர்ஜியை அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வாங்கன்னு கெஞ்சுறோம். அவங்க கிரிக்கெட் அணியை அனுப்புறாங்க.கோபம் வராதா?”

பிரபாகரனை அடிக்கடி சந்தித்து இருக்கீங்களா?

அடிக்கடி சந்திக்க முடிந்தால்  அவர் எப்படி தலைவராக இருக்க முடியும்?”

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? ஒரே புதிராய் இருக்கே?

அது கொஞ்ச நாளைக்கு யூகமாகவே இருக்கட்டுமே!”