Thursday, December 06, 2018

நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே...-         கவின் மலர்


கஜா புயல் இரவு அடிக்கப்போவதாக வானிலை அறிக்கைகள் சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில்தான் நாகப்பட்டினத்தில் பத்தாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டதாக வந்த செய்தியைப் பார்த்தேன். எனக்கு அதிர்ச்சியாகவே இருந்த்து. ஏனெனில் பத்தாம் எண் கூண்டு ஏற்றப்படுவதென்பது அதிக ஆபத்து என்பதை அறிவேன். இதுவரை நாகையில் அப்படி ஏற்றப்பட்டதாக நானறிந்து தெரியவரவில்லை. நாகைக்கு தொடர்புகொண்டு எச்சரித்தபோது கூட யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் அப்போது நன்றாக வெயில் அடித்துக்கொண்டிருந்தது.
ஆனால் மாலையில் நிலைமை மாறத் தொடங்கியது. மேகங்கள் சூழ கடும் மழையோடு கூடிய காற்று இரவு பத்து மணிக்குத் தொடங்க, அன்று இரவு யாரும் உறங்கி இருக்கவில்லை. விடிய விடிய அடித்த கடும் மழையிலும் புயல் காற்றிலும் கடல் உறுமலிலும் யாரும் உறங்கி இருக்கவில்லை. உலகம் அழிகிறதோ என்று தோன்றும் அளவுக்கு சப்தம் இருந்ததாக மக்கள் சொல்கின்றனர்.
அந்த இரவு டெல்டா மக்கள் மறக்க விரும்பும் இரவு. அந்த ஓர் இரவு தங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும் என அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அரசு எச்சரித்திருந்தாலும் வழக்கமான புயல் எச்சரிக்கை என்றே பலரும் நினைத்திருக்க, வந்த்தோ இதுவரை வரலாற்றில் காணாத புயல். வயதானவர்களைக் கேட்கையில் 1952 புயலுக்குப் பின் இதுவே கடுமையான புயல் என்கின்றனர். ஆனால் அப்போதைய புயலில்கூட இத்தனை அழிவு இல்லை என்கின்றனர்.
பலர் அருகில் இருந்த சமுதாய நலக்கூடங்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் சென்று பாதுகாப்பாக இருந்துகொண்டனர். ஒன்றும் ஆகாது என நினைத்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்தனர். ஓலைக் குடிசைகளில் இருந்தவர்கள் ஓட்டு வீடுகளில் இருந்தவர்கள், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீடுகளில் இருந்தவர்கள் என எவரும் தப்பவில்லை. எல்லோர் வீடுகளிலும் கூரைகள் பறந்தன. அதைப் பார்த்து அலறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிவிடலாம் என்று வீட்டை விட்டு வெளியேறியவர்களை காற்று பழிவாங்கியது. எங்கிருந்தோ வந்த ஓடுகள் அவர்கள் மீது வந்து விழுந்தன. ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள், முறிந்த மரங்களின் கிளைகள் எல்லாம் ஓடியவர்கள் மீது தூக்கி வீசப்பட்டன. பெரும் மரங்கள் நடுவே விழுந்து மேலே நகர முடியாமல் பயமுறுத்தின. தங்கள் மேல் ஏதாவது மரம் விழுந்து விடுமோ என்கிற நடுக்கமே பலரை அச்சுறுத்தியது. இவை எல்லாவற்றையும் விட பேய்த்தனமாக வீசிய காற்று அவர்களை நகரவிடாமல் கீழே தள்ளியது. விழுந்து எழுந்து விழுந்து எழுந்து சில அடிகள் தொலைவில் இருந்த இடங்களுக்குச் செல்வதும் ஒளியாண்டு தொலைவாக இருந்த்து பலருக்கு. விழுந்த்தில், ஓடுகள் தாக்கியதில் பலருக்கும் உடலெங்கும் காயம். இதில் கைக்குழந்தைகளை வேறு வைத்துக்கொண்டு ஓடிய பெண்களின் நிலை இன்னும் கொடூரம். அன்று தப்பி உயிர் பிழைத்த்தே மறுபிறவி போல என்கின்றனர் பலரும்.
இத்தனை கொடூரங்களை செய்துவிட்டு புயல் சென்றுவிட்ட்து. மறு நாள் காலையில் வெளியில் வந்து பார்த்தவர்களுக்குக் காத்திருந்த்து பெரிய அதிர்ச்சி. த்ங்கள் வீடுகள் தரைமட்டமாகிப் போனதைக் கண்ட பலரும் அழுது கதறினர். டெல்டாவெங்கும் ஓலம் எதிரொலித்த்து. ஓர் இரவில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கிக்கொண்டு, வீடுகளையும் பிடுங்கிக்கொண்ட்த் புயல். சில கான்கிரீட் வீடுகளும் இடிந்து விழுந்திருந்தன. ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் விழுந்து ஊரே போர்க்களமாக்க் காட்சியளிக்க, விக்கித்து நின்றனர். ஓரளவுக்கு அதிர்ச்சி விலகாமலேயே ஏதாவது செய்தாகவேண்டும் என்பதறகாக ஆங்காங்கே இளைஞர்கள் ஒன்றுகூடி மரங்களை சாலைகளில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அதனால் வழி கிடைத்தபின்னர்தான் அவர்கள்  வீடுகளுக்குச் செல்ல முடிந்த்து.
வீடுகள் இருந்த இடங்களில் சிலருக்கு மண் மேடுதான் இருந்த்து. சேறும் சகதியுமாக இருந்த வீடுகளுக்குள் நுழைய முடியாத நிலை.  கடலை ஒட்டிய வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்திருந்த்து. கோடியக்கரையில் ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் புகுந்த கடல்நீர் அது பள்ளமான பகுதி என்பதால் வெளியேற முடியாமல் அங்கேயே இப்போது வரை தேங்கிக்கிடப்பதைப் பார்க்க முடிந்த்து.
நாகை மாவட்ட்த்தின் கடற்கரை கிராமங்களில் இருந்த படகுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு உடைந்து நொறுங்கின. பல படகுகளில் இஞ்சின்கள் பழுதாகிக் கிடக்கின்றன. இந்தப் படகுகளை எல்லாம் சரிசெய்ய லட்சக்கணக்கில் ஆகும்.  இதன் காரணமாக மீன்பிடித் தொழில் கடுமையாக் பாதிக்கப்பட்டிருக்கிறது.  வேதாரணியம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறையில் புயல் ஒரு கோரத்தாண்டவம் ஆடி இருக்கிறது.  செருதூர் தொடங்கி ஆறுகாட்டுத்துறை வரை இதுவே நிலைமை. அனைத்து கடற்கரை கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. 
நாகை மாவட்ட்த்தில் மாந்தோப்புகளும் தென்னந்தோப்புகளும் வேதாரணியம் பகுதியில் அதிகம் உண்டு. புஷ்பவனம், நாலுவேதபதி போன்ற கிராமங்களில் அத்தனை தென்னைகளும் விழுந்து கிடப்பதைக் காணச் சகியாமல் அவற்றின் உரிமையாளர் கண்ணீர் விடுவதைப் பார்த்தால் உள்ளம் உருகிவிடும். இங்கு பலருக்கு தென்னை மரங்கள்தான் ஒரே ஆதாரம். அதை வைத்துத்தான் பிள்ளைகளை படிக்கவைத்துக்கொண்டிருந்தனர்.  மாமரங்கள் அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்ட்து போல கிடக்கின்றன. அழகழகான ஊர்கள் இம்மாவட்ட்த்தில் உண்டு. அத்தனை அழகும் அதன் மரங்களால் வந்த்துதான். வெயிலே படாத ஊர்கள் உண்டு. ஆனால் இப்போது நிழலில்லாமல் வெயில் காயும் ஊராக பல ஊர்கள் மாறிவிட்டன.
வேளாணி முந்தல் என்கிற கிராமத்தில் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவருக்குக் கணவர் இறந்துவிட்டார். பெண்குழந்தை ஒன்று. ஆடுகளை வளர்த்து வருகிறார். அவை மட்டுமே அவரின் வாழ்வாதாரம். இந்தப் புயலில் அவருடைய பத்து ஆடுகள் இறந்துவிட, இப்போது நாதியற்றுக் கிடப்பதாக அழுதார்.  இவரைப் போல பல பெண்களும் ஆண்களும் ஆட்டையும் மாட்டையுமே கொண்டு வாழ்க்கை நடத்திவந்தனர். இவர்களை ஏதுமற்றவர்களாக மாற்றிவிட்டது இப்புயல்.  நான் சென்று பார்த்தபோது தலைஞாயிறுக்கு அருகேயுள்ள அரிச்சந்திரா நதியில் கூட்டமாக கால்நடைகள் செத்து மிதந்ததைப் பார்க்க முடிந்தது.
அரசாங்கம் உடனடியாக வந்து இறந்த மாடுகள் ஆடுகள் மற்றும் கோழிகளை கணக்கெடுக்காத்தால் சில இடங்களில் அவற்றை அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டு வைத்திருந்த்தையும் காண முடிந்த்து. எடுத்துப் புதைத்துவிட்டால், அதை வளர்த்த்தற்கான நிரூபணமே இல்லாமல் போய் விடும் என்கிற அச்சம் மக்களுக்கு. இதன் காரணமாக, பல இடங்களில் கால்நடைகளின் உடல் அப்படியே கிடக்க, நோய் பரவும் அபாயமும் இருந்த்து.  நல்லவேளையாக அவை அப்புறப்படுத்தப்பட்டன.
முகாம்களில் தங்கியுள்ள மக்களின் அவதி சொல்லி மாளாது. குறிப்பாக பெண்கள் படும் பாடுகளை அவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். கழிப்பறை தொடங்கி எல்லாமே அவர்களுக்குப் பிரச்சனைதான். மாதவிலக்கு ஆகிற பெண்களின் கதை இன்னும் மோசம்.  மாற்று உடைகள் இன்றி, சரியான சாப்பாடு இன்றித் தவிக்கும் அவர்களின் கதை மிகப் பரிதாபமானது. குழந்தைகள் இரவுகளில் கொசுக்கடியில் தவிக்கின்றனர். கொசுக்கடி காரணமாக நோய் பரவும் ஆபத்து ம் உண்டு. அடிக்க்டி பெய்யும் மழை வேறு அவர்களுக்குத் தடையாக இருக்கிறது. சகதியான ஊரில் வெளியில் எங்கேயும் படுக்க முடிக்காது. பலர் தார்ச்சாலைகளில் வந்து அமர்ந்துகொள்வதையும் ஆங்காங்கே காண முடிந்த்து.  அப்படி தார்ச்சாலையில் அமர்ந்து இரவு நேரத்தில் பேசிக்கொண்டிருந்த நான்கு பெண்கள்தான் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நீர்முளையில் ஒரு வேனில் அடிபட்டு இறந்தனர். ஆகவே அதன்பின் அச்சம் ஏற்பட்டு, சாலைகளில் அமர்வதைத் தவிர்த்தனர் மக்கள். ஆனால் அவர்கள் ஒண்டி உட்கார்ந்துகொள்ள, உறங்குவதற்கு ஓரிடம் இல்லாமல் போய்விட்ட்து. ஏனெனில் பல சமுதாயக் கூடங்களில் ஒரு ஹாலில் 200 பேர் வரை தங்கவேண்டுமெனில் அது மூச்சு முட்டும் சிரம்ம். சில இடங்களில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அந்த இட்த்தைத் தந்துவிட்டு வெளியிக்ல் ஆங்காங்கே கிடைத்த இட்த்தில் ஆண்கள் படுத்துக்கொள்வதையும் காண முடிந்த்து. மொத்தத்தில் டெல்டா உறங்கி பல நாட்களாகின்றன.
மின்சாரத்துக்குப் பழகிவிட்டிருக்கும் மக்களுக்கு இருள் மிரட்டுகிறது. மின்சாரம் இல்லை என்பதே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. சரிந்து கிடக்கும் மின் கம்பங்களின் எண்ணிக்கையைப் பார்க்கையில், எல்லா இடங்களுக்கும் மின் விநியோகம் கிடைக்க குறைந்தபட்சம் இன்னும் ஓரிரு மாதங்கள்  தேவைப்படும். சோலார் விளக்குகளும் தார்ப்பாய்களும்தான் இன்று டெல்டாவின் முக்கிய தேவையாக இருக்கிறது.  விழுந்துகிடக்கும் மின்கம்பங்கள், பல்வேறு உயரங்களில் சரிந்து நிற்கும் மின்கம்பங்களுக்கு இடையிலான மின்கம்பிகள் இன்று பலருக்கு துணி உலர்த்தும் கொடியாகி இருப்பதைக் காண முடிந்த்து.
பிற மாவட்டங்களில் இருப்போருக்கும், தமிழ்நாட்டுக்கு வெளியே இருப்போருக்கும் இந்தப் புயலின் தாக்கம் சென்று சேரவில்லை என்றே சொல்வேன். நடந்த பேரழிவில் ஊடகத்தில் வந்தவை மிக்க் குறைவே. இந்திய அளவிலான ஊடகங்கள் ஏறத்தாழ புறக்கணிக்கவே செய்தன. அவற்றுக்கு சென்னை விமான நிலையம் மூழ்கினால் மட்டுமே அது முக்கியமான செய்தியாக இருக்கும்.  மக்கள் தங்களுக்குள் உதவிக்கொண்டனர். கேரளாவிற்கோ, சென்னை வெள்ளத்துக்கோ கிடைத்த்து போன்ற உதவிகள் முதலில் கிடைக்கவில்லை. மக்கள் பசியிலும் பட்டினியிலும் கிடந்து தவிப்பதைக் காணச் சகிக்கவில்லை.  தனிமனிதர்கள் களமிறங்கி சமூக வலைத்தளங்களில் தாங்கள் கண்டவற்றை பகிரத் தொடங்கியவுடன் தான் ஊடகங்கள் பல விழித்துக்கொண்டு டெல்டா நோக்கி வரத் தொடங்கின. பேரழிவின் தாக்கத்தை மெல்ல மெல்ல தமிழகம் இப்போதுதான் உணரத் தொடங்கியதாகத் தெரிகிறது.
பசுமையாய் நின்று சூழலை சமன் செய்த எங்கள் கோடியக்காடு...இன்று கஜா புயலுக்குப் பின், முற்றிலும் அழிந்து வான்வழி தாக்குதலில் குண்டு போட்டு சிதைந்துபோன இடம் போல் காட்சியளிக்கிறது. ராமர் பாதம் என்றொரு இடமுண்டு. உயரமான அந்தக் கட்டடத்தின் மேல் நின்று பார்த்தால் கோடியக்காடு கண்களுக்கு விருந்து போல பச்சைப் பசேலென காட்சியளிக்கும். நேற்று அங்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனேன். சென்றமுறை கோடியக்காட்டின்வழி நண்பர்களுடன் சென்ற பயணம் நினைவில் வந்து போனது. யாருமற்ற கடற்கரையில் ஆயிரக்கணக்கான பறவைகள் பார்வையாளர்களாய் இருக்க, ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவதுஎன்று குரலெடுத்துப் பாடிய நினைவுகளும் நெஞ்சில் மோதின.  சொல்லாமல் எங்கள் காடள்ளிப் போனது இப்புயல். நூற்றுக்கணக்கான மான்களையும் காட்டுக் குதிரைகளையும் இன்னபிற விலங்குகளையும் வாரிக்கொண்டுபோனது கடல். அவை காரைக்கால், தரங்கம்பாடி என வெவ்வேறு ஊர்களில் கரையொதுங்கின.  நண்பரொருவர் சொன்னார்.
டெல்டாவின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கட்டும். கண்ணீரின்றி இம்மாவட்டங்களிலிருந்து வெளியேறிவிட முடியாது. எழுத்தில் வடிக்கவொண்ணா துயரம். காட்சிவழி ஊடகங்களிலும் காட்டவொண்ணா துயரம்.
திருச்சியிலிருந்து மாணவர்கள் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட டெல்டாவின் நாடியம் கிராமத்து  விவசாயிகள், அவர்களை திருப்பி அனுப்புகையில், நன்றி தெரிவிக்கும் விதமாக வீழ்ந்து கிடந்த தென்னை மரங்களில் இருந்து இளநீர் காய்களைப் பறித்து ஏற்றி அனுப்பியுள்ளனர்.
நாகை நம்பியார் நகர் மீனவர்கள் அவர்களுக்கு கேரளாவில் இருந்து வந்த நிவாரணப் பொருட்களில் அவர்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம், வானவன்மாதேவி, புஷ்பவனம் போன்ற மீனவ கிராமங்களுக்கு அப்பொருட்களை அளித்துவிட்டனர்.  போலவே, வண்டல் கிராமத்துக்கு எங்கள் குழு சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கியபோதுதான் தெரியும். அங்கு செல்வோரை கடந்த ஐந்தாறு நாட்களாக படகில் ஏற்றி அழைத்துக்கொண்டுப் போவது நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன்,சகாதேவன்,வெற்றிவேல் ஆகியோர்தான் என. படகை லாரியில் ஏற்றிச் சென்று அந்தப் பகுதியில் இந்தச் சேவையை செய்து வருகின்றனர். இதில் சுவாரஸ்யம் என்னவெனில் பொருட்களை எடுத்துச் சென்று விநியோகம் செய்யச் சென்ற குழுவிலும் நம்பியார் நகர் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இப்பணியில் ஈடுபட்டிருப்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் சேவை இவர்களுக்குத் தெரியாது. இரு குழுவும் வண்டல் செல்லும் படகில் ஏறுகையில்தான் சந்தித்துக்கொண்டனர். இந்த எளிய மீனவ மக்கள் நெகிழ வைக்கிறார்கள்!

இப்படி மனிதம் ஊற்றெடுத்த நிகழ்வுகளும் உண்டு. என் சாதிக்கு அதிகம் வேண்டும். அவர்களுக்கு வேண்டாம் என ஆதிக்க சாதி மக்கள் சொன்ன மனிதம் செத்த நிகழ்வுகளும் உண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரை, ஒரே ஒரு புயல் அடித்த ஊரையும் சேரையும் ஒன்றாக்கிவிடும் என நான் நம்பவில்லை. ஒரேயோர் இயற்கை பேரிடருக்குக் கூட அந்த சக்தி கிடையாது. ஆகவே இந்த சாதியப் பாகுபாடுகள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் இதே புயல் தென்மாவட்டங்களில் அடித்தால் நிலைமை வேறுதான். தென் மாவட்டங்களை ஒப்பிடுகையில் கீழத்தஞ்சையிலுள்ள சாதியம் குறைவுதான். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதிலொன்று பொதுவுடமை இயக்கம்.

தென்னை விவசாயிகளின் துயரைச் சொல்லி மாளாது. நாங்கள் புஷ்பவனம் கிராமத்துக்குச் சென்று ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். “இவ்வளவு நேரம் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறோம். சாதாரண காலத்தில் வந்திருந்தால் முதலில் இளநீர் வெட்டிக்கொடுத்துவிட்டுத்தான் பேச்சைத் தொடங்கி இருப்போம். இப்போ பாருங்க…எல்லாம் விழுந்துகிடக்கு’ என்று தன் தென்னை மரங்களைக் காட்டினார். தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், முந்திரித் தோப்புகள் வைத்திருப்போர் போக ஒரு சில மரங்களை வைத்து மட்டும் பேணிவந்து அதையே வாழ்வாதாரத்துக்கு ந்மபிக்கொண்டிருந்த எளிய மக்களும் உண்டு. அவர்கள் இன்று செய்வத்றியாது திகைத்து நிற்கிறார்கள்.
இதுவரையிலான இயற்கைப் பேரிடர்களின்போது நிவாரணப்பொருட்களில் தார்பாலின் ஷீட்டுகளை வழங்கி யாராவது பார்த்திருக்கிறீர்களா? இந்த கஜா புயலுக்குப் பின்னான நிவாரணத்தில் உணவுக்கு அடுத்தபடியாக மக்களுக்குத் தேவையாக இருப்பது அதுவே. கூரைகள் பறந்துவிட்ட குடிசைகள், ஓட்டு வீடுகள், ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளில் இப்போதைக்கு ஃப்ளெக்ஸ் பேனர்களை சிலர் கூரையாக்கி வைத்திருக்கின்றனர். பேனர் கலாசாரம் பெருகிவிட்டதெனத் திட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்று அவைதான் கைகொடுக்கின்றன.
வீடுகளில் கொஞ்ச நஞ்சம் மிஞ்சியவற்றை தொடர்ந்து பெய்யும் மழையில் இருந்து காக்க தார்பாலின் தேவைப்படுகிறது.
தமிழகத்திலேயே அதிக குடிசைகளைக் கொண்ட நாகை மாவட்டத்தின் அத்தனை குடிசை வீடுகளையும் காற்று தனதாக்கிக் கொண்டது. புயல் அடிக்கும் மாவட்டத்தில்தான் தமிழகத்திலேயே குடிசைகளும் அதிகம் உள்ளன என்பது எத்தனை விந்தையாக இருக்கிறது. இவ்வீடுகள் கான்கிரீட் வீடுகளாக அரசு மாற்றாதவரை இழப்புகள் பெருமளவில்தான் இருக்கும்.
குடிசைகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். சொன்னால் நம்புவீர்களா? மாற்று உடை இல்லாமல், புயல் அடித்த அன்று அணிந்த உடையோடு ஆறேழு நாட்கள் வரை அவர்கள் இருந்தனர்.
ஒரு சிறுவன் புயல் அடித்த அன்றிரவு கால்சட்டை மட்டும் அணிந்திருந்தவன், நாங்கள் பார்க்கையில் கொட்டும் மழையில் ஒரு கோழிக்குஞ்சு போல மேல்சட்டையின்றி நடுங்கிக்கொண்டிருந்தான். இதில் குளிர்க் காய்ச்சல் வேறு பலருக்கு. இரக்கமே இல்லாமல் கொட்டியது மழை. ஒரு மூட்டை அரிசியும், மூவாயிரம் பணமும் ஒரு முகாமுக்கு ஒரு நாளைக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் ஊரில் எல்லோருக்கும் உணவு மூன்றுவேளைக்குக் கிடைக்காது என்பதால் ஒரேயொரு வேளை மட்டுமே உண்ணும்.கிராமங்களைப் பார்த்தோம். அவ்வூரின் குழந்தைகளும் அப்படியே. கைக்குழந்தைக்குக் கூட பால் இல்லை. அவற்றும் அதே உணவுதான். இந்த ஒருவேளை உணவும் கிடைக்காத கிராமங்கள் உண்டு.
இந்நிலையில்தான் ஒரு பிஸ்கட் பாக்கெட்டுக்கு கையேந்தும் நிலை இன்று.
வரலாறு காணாத துயரமிது. காணும் காட்சிகள் அப்படியே சுனாமியை நினைவுப்படுத்தி விடுகின்றன. மனம் பின்னோக்கிப் போய் ஸ்தம்பித்துவிடுகிறது.
புயலுக்குப் பின்னர், நாகை வந்ததும் முதல்நாள் கண்ட காட்சிகளில் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். பின் அடுத்த கிராமத்துக்குச் சென்றால் அதைவிட பயங்கரம். அடுத்த இடத்தில் அதைவிட பயங்கரம். இப்படிப் பார்த்துப் பார்த்து ஒருகட்டத்தில் எல்லாம் மரத்துப் போயின.
சுனாமியின்போது நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. எங்கள் வீட்டுக்கும் எங்கள் கல்லூரிக்கும் இடையிலான ரயில்வே டிராக்கில் நான் நடந்துவந்துகொண்டிருந்தேன். சுனாமி வந்து ஏறத்தாழ ஒரு வாரம் இருக்கும். இரண்டு பையன்கள் கையில் ஒரு கேனுடன் நின்றுகொண்டிருந்தனர். என்னிடம் வந்து 'தீப்பெட்டி இருக்கா?' என்றனர். நான் 'இல்லை' என்றேன். ஏன் என்று கேட்டபோது புதருக்கு நடுவில் கைகாட்டினர். அங்கே ஒரு பெண்ணின் உயிரற்ற உடல். கால் மட்டும் வெளியே தெரிந்தது. காலுக்கு அருகிலேயே ஒரு குழந்தை. பொம்மைபோல உப்பி வெள்ளை வெளேரென வெளுத்திருந்தது. எனக்கு அந்நாளில் பிணங்களைப் பார்ப்பது மரத்துப் போயிருந்தது. அதிர்ச்சியெல்லாம் இல்லை. (எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் அப்படித்தான் இருந்தது)
சரிவில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தீப்பெட்டி வாங்கியவர்கள் கேனில் இருந்த மண்ணெண்ணெயை இரு உடல்களின் மீது கொட்டி தீமூட்டிவிட்டினர். நானும் அவர்களும் எதிரெதிர் திசைகளில் நடந்து சென்றோம். உடல்கள் எரிந்துகொண்டிருந்தன.
இந்த சம்பவம் சாதாரண பொழுதுகளில் நடக்க வாய்ப்பே இல்லை. ஓர் அசாதாரண சூழல் நிலவிய நாட்கள் அவை. கொத்துக்கொத்தாய் பிணங்கள் இல்லையே தவிர, அதே அசாதாரணச் சூழல்தான் இப்போதும் நிலவுகிறது.
அதே அகதி வாழ்க்கை. அதே முகாம். அதே..அதே..எல்லாம் அதே..அரசாங்கமும் அதே...
இச்சூழலை வெளியில் இருந்து பார்ப்பவர்களால் சரியாக உள்வாங்க முடியாது என்பது உண்மை.  எப்படி இயற்கையின் அழகை கண்ணால் காண்பது போல் கேமிரா வழியே பார்த்தால் உள்வாங்கமுடியாதோ அதுபோலவேதான் இயற்கை பேரிடர்களும். அதன் கோரத்தை நேரில் பார்த்தால்தான் உணரமுடியும்.  ஊடகங்களின்வழி நாம் காணும் எதுவும் அக்கோரத்தை நமக்குத் தெரிவிப்பதில்லை என்பதே உண்மை.
 நாங்கள் சென்ற கிராமங்களில் பல இடங்களில் மக்கள் 'அத்திப்பட்டி போல எங்கள் கிராமத்தைக் காணாமல் ஆக்கப் போகிறார்கள் பாருங்கள்' என்றனர். சொல்லிவைத்தது போல தொடர்ச்சியாக இப்படி மக்கள் கூறியது எனக்கு வியப்பாக இருந்தது. தங்கள் கிராமமும் தாங்களும் காணமலாக்கப்படுவோம் என்கிற அச்சம் சாதாரணமானதில்லை. ஆம் இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடி வரை இங்கே அசாதாரணச் சூழல்தான் நிலவுகிறது.
இந்த அசாதாரணச் சூழல்தான் பலரை நிவாரணப் பணிகளில் ஈடுபட வைத்திருக்கிறது. நிவாரணப் பணிகளுக்கு அரசை நிர்பந்திக்கவேண்டும் என்பது உண்மையே. மக்களுக்குள் எத்தனை நாட்கள் உதவிக்கொள்ள முடியும் என்கிற கேள்வியிலும்  நியாயம் இருக்கிறது. ஆனால், கண்ணெதிரே குடிக்க நீர் வேண்டும், பசிக்கிறது உணவு தாருங்கள் என்று கையேந்திக் கேட்கும் சகமனிதர்களுக்கு அந்த நேரத்தில் அவர்களுக்கு வேண்டியது கிடைக்க ஆவண செய்யவில்லையெனில் நம் மனசாட்சி நம்மை மன்னிக்குமா? அதன் காரணமாகவே இத்தகைய பணிகளில் ஈடுபடவேண்டிய தேவை இருக்கிறது. என்ன செய்வது? நமக்கு வாய்த்த அரசாங்களுக்குக் காதும் கேட்கவில்லை. கண்களும் இல்லை. அவர்களை நம்பி நம் மக்களை கைவிடுதல் எவ்வகையிலும் நியாயம் இல்லை.

jkavinmalar@gmail.com

(நன்றி : - உயிர்மை, டிசம்பர் 2018)

x