Sunday, November 18, 2012

சொந்த ஊர்லயே அகதி ஆவோம்னு நினைக்கலையே...- தர்மபுரி சந்தித்த பேரவலம்

முள்ளிவாய்க்காலைப் போலவே மிகமோசமான தாக்குதல் இது. தர்மபுரி மாவட்டத்தின் ஒதுக்குப்புறமான கிராமத்தில் அதுவும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்டுள்ளதால், அந்தத் திட்டமிட்ட தாக்குதலே மெள்ளமெள்ள அமுக்கப்படுகிறது. 

தர்மபுரியில் நத்தம், அண்ணா நகர், கொண்டம்​பட்டி கிராமங்களில் நடந்திருக்கும் வன்முறை வெறியாட்டங்களை எழுதுவதற்கு வார்த்தைகள் போதாது. தமிழகத்தில் இதுவரை நடந்த கொடூரச் சம்பவங்களான கீழ்வெண்மணி, வாச்​சாத்தி, கொடியங்குளம் ஆகியவற்றை இது மிஞ்சி விட்டது. ஒரு காதலைக் காரணமாகக் காட்டி, மூன்று ஊர்களை மொத்தமாகக் கொளுத்தி, அந்த மக்க​ளின் 50 ஆண்டு கால வாழ்​வாதாரத்தை முழுமையாக அழித்திருக்கும் கொடுமையை இந்த அரசாங்கம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தலித் இளைஞரான இளவரசனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த திவ்யாவும் செய்துகொண்ட காதல் திருமணம் மட்டும்தான் இந்த தலித் கிராமங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு தீயால் அழிக்கப்​பட்டதற்குக் காரணமா? நிச்சயமாக அது மட்டும் அல்ல. ஏனென்றால், அண்ணா நகரில் தீ வைத்த பிறகு, '30 வருடங்களுக்குப் பிறகு இன்னைக்குத்தான் தீபாவளி கொண்டாடுகிறோம்’ என்று கும்மாளம் போட்டபடி சென்றிருக்கிறது வன்முறைக்கும்பல். அதென்ன 30 வருடங்கள்?


தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கங்களின் மூலமாக பொதுவுடைமைத் தத்துவம் ஆழ வேரூன்றிய பகுதி தர்மபுரி. 1984-ல் தர்மபுரியில் அப்பு, பாலன் ஆகியோரைக் காவல்துறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதன் நினைவுச் சின்னம் இருக்கும் ஊர்தான் இந்த நாய்க்கன்கொட்டாய். அந்த நினைவுச் சின் னத்தின் வலப்புறம் நான்கு கிலோ மீட்டர் சென்றால், கொண்டம்​பட்டி. இடப்புறம் திரும்பினால், கூப்பிடு தூரத்தில் அண்ணா நகர். நாய்க்கன்கொட்டாயின் மறுமுனையில் வலப்புறம் திரும்பினால் இருக்கிறது நத்தம். இந்தக் கிராமம்தான் இளவரசனின் சொந்தக் கிராமம்.

இந்த மூன்று கிராமங்களிலும் ஒரு வீடுகூட, வாழ்​வதற்கு ஏதுவாக இல்லை. அந்த அளவுக்கு வீடுகள் சேதமாக்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு ஊரிலும் மாலை 4.30 மணியளவில் தாக்குதல் தொடங்கி இருக்கிறது. வந்தவர்களில் பெண்களும் பள்ளி மாணவர்களும் இருந்தனர் என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தி. வந்த பெண்கள், வன்முறையில் ஈடுபடவில்லை என்றாலும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் தலித் பெண்களை ஆபாச அர்ச்சனைகள் செய்ததாகவும், அண்ணா நகரைச் சேர்ந்த பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

''ரவி, சின்னத்தம்பின்னு நத்தம் கிராமத்தில் சிலர் கலப்புத் திருமணம் செய்து இருக்காங்க. அதெல்லாம் அவங்​களுக்குப் பிடிக்கலை. நக்சல்பாரிகளுக்குப் பயந்து எங்ககிட்ட எந்த வம்புதும்பும் இல்லாம இருந்தாங்க. அந்தக்கட்சி காலப்போக்கில இல்லாமல் போனதும், இளவரசன் கல்யாணத்தை சாக்கா வெச்சு இப்படிப் பண்ணிட்​டாங்க' என்கிறார் அண்ணாநகரைச் சேர்ந்த வசந்தா. இதுதான் 30 ஆண்டு வன்மத்தின் காரணம்.

இந்த வன்மத்துக்கு, மாமல்லபுரத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, 'மற்ற சாதியைச் சேர்ந்த யாராவது நம் சாதியைச் சேர்ந்தவர்களை காதலித்தால் கையை வெட்ட வேண்டும்’ என்று தூபம் போட்டார். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய காடுவெட்டி குரு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் ரஜினிகாந்த் தொடுத்த வழக்கை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் பணித்ததன் பேரில் அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. தர்மபுரி கிராமங்களைப் பார்வையிட வந்த வழக்கறிஞர் ரஜினிகாந்தை சந்தித் தோம்., ''தாக்கப்பட்ட மூன்று கிராமங்களுக்கும் அருகில் இருக்கும் கிருஷ்ணாபுரம் அரியமங்கலத்தில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நடந்த கூட்டத்தில் மாமல்லபுரத்தில் பேசியது போலவே வன்முறையைத் தூண்டும் வகையில் காதல் திருமணங்களுக்கு எதிராகப் பேசி இருக்கிறார் காடுவெட்டி குரு. அக்டோபரில் இளவரசன் - திவ்யா திருமணம் நடக்கிறது. நவம்பரில் மூன்று கிராமங்கள் கொள்ளை அடித்துக் கொடூரமாகத் தாக்கப்படுகின்றன. இந்த மூன்றையும் ஒரே நேர்க்கோட்டில் நடந்த சம்பவங்களாகவே பார்க்க வேண்டும். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பேச்சு தூண்டுகோலாக அமைந்துள்ளன. எனவே, குருவைக் கைது செய்யவேண்டும்' என்றார் ஆவேசமாக.

மூன்று கிராமங்களிலுமே சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்பட்டு உள்ளன. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சாதி மறுப்புத் திருமணம் செய்து​கொண்ட நேதாஜி என்பவர் இப்போது எங்கிருக்கிறார் என்பது அவரது வீட்டுக்கே தெரியாது. இன்னமும் அவர் வெளியூரில் தலை மறைவாக வசிக்கிறார். அவரது வீடு இருக்கும் கொண்டம்பட்டிக்குச் சென்றபோது சின்னாபின்னமான வீட்டில் அவரது தாய் வேடியம்மாள் கதறி அழுதுகொண்டு இருந்தார். நேதாஜியின் தம்பி ராமச்சந்திரன் நம்மிடம் பேசுகையில் ''இந்த ஊரில் கலப்பு மணம் செய்தவங்க வீடுங்களைத் தேடித்தேடி எரிச்சிருக்காங்க. மத்த வீடுகள்ல பீரோவை உடைச்சு பணம், நகையை கொள்ளை அடிச்சிருக்காங்க. எங்க ஊர்க்காரங்களை சொந்த ஊர்லயே அகதிங்க மாதிரி கவர்ன்மென்ட் தர்ற சோத்துக்கு வரிசையில் தட்டு ஏந்த வெச்சுட்டாங்க. ஈழத்து அகதிகளைப் பார்த்து கண்ணீர் விட்டிருக்கோம். ஆனால், நாங்களே இப்படி அகதி ஆவோம்னு நினைக்கலை' என்று கண்ணீர் விட்டார்.

அதிகமாக பாதிக்கப்பட்ட நத்தம் கிராமத்தில் எந்த வீடும் பாக்கி இல்லை. இளவரசனின் வீடு சூறையாடப்பட்டு நொறுக்கப்பட்டது. மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், டிவி, பீரோ, வாஷிங் மெஷின், ஃபேன், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என்று ஒன்றையும் விடாமல் எரித்து இருக்கின்றனர். திவ்யாவின் தந்தை உடலை இளவரசனின் வீட்டு முன் வைத்து, இளவரசனின் வீட்டை அடித்து நொறுக்கியதுதான் முதல் தாக்குதல். அதன்பிறகு, ஒரு கும்பல் நெடுஞ்சாலைக்குச் சென்று உடலை வைத்து சாலை மறியல் செய்து இருக்கிறது. 42 மரங்களை வெட்டி நடுவில் போட்டு போக்குவரத்தைத் தடை செய்த பின், கிராமங்களுக்குள் ஒருவரையும் விடாமல் தங்கள் வேட்டையைத் தொடங்கி இருக்கின்றனர். ஒவ்வொரு கிராமத்துக்கும் 1,000 பேர் வந்ததாக மக்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு வீட்டுக்கும் 50 பேர் வந்திருக்கின்றனர். அவர்களது நோக்கம் மிகத் தெளிவானது. உயிர்ச்சேதம் இல்லாமல், பொருட்சேதம் செய்து தலித் மக்களின் வாழ் வாதாரங்களைச் சிதைத்து இருக்கிறார்கள். பணம், நகை, கேஸ் சிலிண்டர் போன்றவற்றைக் கொள்ளை அடித்து கையோடு கொண்டு வந்திருந்த வண்டியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் பெட்ரோல் குண்டுகளை வீட்டில் எறிந்து இருக்கின்றனர். முதல் வீடு எரியத் தொடங்கியதுமே தலித் மக்கள் உயிருக்குப் பயந்து ஓடி, தப்பித்து இருக்கின்றனர். இரவு 9.30 மணி வரை நீண்ட இந்த கோரத்தாக்குதல்களின்போது கைபேசி மூலம் காவல்துறையையும், தீயணைப்புத் துறையையும் தொடர்புகொண்டு உதவி கேட்டிருக்கின்றனர். ஆனால், காவல் துறை உதவிக்கு வரவில்லை. .

தாக்கியவர்களின் தரப்பு விளக்கத்தை அறிவதற்காக திவ்யாவின் ஊரான செல்லன்கொட்டாய்க்குச் சென்றபோது, பூட்டிய வீடுகளே வரவேற்றன. காவல் துறையினரைத் தவிர வேறு யாரும் அந்த ஊரில் இல்லை.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க், ''இதுவரை 127 பேரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறோம். மற்றவர்​கள் தலைமறைவாக இருக்கிறார்கள். வெகு விரை​வில் அனைவரையும் பிடித்து விடுவோம். நான்கு எஃப்.ஐ.ஆர்-கள் ஊரை எரித்ததற்கும், சாலை மறியல் செய்ததற்கும், மரங்களை வெட்டி பொதுச்சொத்துக்​களுக்கு சேதம் விளைவித்ததற்கு தலா ஒன்றுமாக ஆறு எஃப்.ஐ.ஆர்-கள் போடப்பட்டு உள்ளன' என்கிறார்.

அமைதி திரும்புவது மட்டுமல்ல... நிரந்தரமான நியாயம் வேண்டும்!

- கவின் மலர், படங்கள்: செந்தளிர்

நனறி  : ஜுனியர்  விகடன்

Thursday, September 27, 2012

இடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது?


ரு கால்களையும் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் லவீனாவுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி காவல் துறையினர் இடிந்தகரை கடற்கரை யில் நடத்திய தடியடிக்குப் பின், காணாமல்போன தன் குழந்தையைத் தேடிச் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் லவீனாவின் உடலைத் தீண்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். ஓட முடியாத லவீனா அதிர்ந்துபோய், 'நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன். என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட குரூரத்தின் உச்சம், ''உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா? நாங்க கூப்பிட்டா வர மாட்டியா?''

 இன்று வரை லவீனாவால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. பெண்கள் முன்னணி யில் நிற்கும் இடிந்தகரைப் போராட்டத்தில், அவர்களைப் பின்வாங்கச் செய்ய, காவல் துறை எதேச்சதிகாரத்தின் அனைத்து உத்திகளையும் கையாள்கிறது. ஆனால், அதையும் தாண்டி போராட்டத்தில் தன்னார்வத்துடன் பங்கெடுக் கிறார்கள் பெண்கள். தடியடி நடந்த அன்று கைதுசெய்யப்பட்ட 65 பேரில் 7 பேர் பெண்கள். அவர்கள் யாரும் 
எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படாமலேயே, 36 மணி நேரச் சட்ட விரோதக் காவலுக்குப் பிறகு, ரிமாண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த 36 மணி நேரத்தில் அவர்களை இயற்கை உபாதையைக் கழிக்கக்கூட அனுமதிக்கவில்லை காவலர்கள். அந்தப் பெண்களிடமும் லவீனாவிடம் கேட்டது போலவே உதயகுமாருடன் தொடர்பு படுத்திப் பேசி வசைச் சொற்களால் அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

''கைதான ஏழு பெண்களின் உடைகளை முழுக்கக் களைந்து சோதனை என்ற பெயரில் திருச்சி சிறையில் அப்பட்டமான மனித உரிமை மீறலில் இறங்கியிருக்கிறது காவல் துறை!'' என்றார் போராட்டக் குழு உறுப்பினர்களில் ஒருவரான முகிலன்.

நியாயத்தை மட்டுமே துணையாகக்கொண்டு அற வழியில் போராடுபவர்களை எப்படி எல்லாம் ஒடுக்க முடியுமோ, அப்படி எல்லாம் ஒடுக்க முயல்கிறது காவல் துறை.

பெண்களின் நிலையைக் காட்டிலும் மிகவும் பரிதாபமாக இருக்கிறது அங்கே இருக்கும் குழந்தைகளின் நிலைமை. மனரீதியாகக் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தைகள் இரவுகளில் திடீர் திடீரெனத் தூக்கம் தொலைத்து எழுந்துவிடுவதாகவும், 'போலீஸ் வருமா’ என்று அச்சத்துடன் கேட்டுக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார் இடிந்தகரை வெண்ணிலா. இங்கு உள்ள குழந்தைகளுக்கு முறையான, முழுமையான கவுன்சிலிங் உடனடித் தேவை.

தேசத் துரோகக் குற்றச்சாட்டுடன் பாளையங்கோட்டை சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று பெயிலில் வெளியே வந்திருக்கும் கிஷனிடம் பேசினேன். மிரண்ட குரலில் மருண்ட கண்களுடன் பேசத் தொடங்கினான். ''நான் வீட்டுக்குள் இருந்தப்போ போலீஸ் வந்துச்சு. பயந்துபோய் இன்னொரு வீட்ல ஒளிஞ்சுக்கிட்டேன். அங்கேயும் வந்து என்னைப் பிடிச்சுட்டுப் போனாங்க. வழியில வண்டியிலவெச்சு அடிச்சாங்க. கூடங் குளம் போலீஸ் ஸ்டேஷன்லயும் அடிச்சாங்க'' என்றவனிடம் ''தேசத் துரோகம் என்றால், என்னவென்று தெரியுமா?'' என்று கேட்டேன். ''அப்படின்னா..?'' என்று உதட்டைப் பிதுக்கினான். கிஷனைப் போல 16 வயதுகூட நிரம்பாத நான்கு சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று திரும்பி இருக்கிறார்கள். காசா காலனி என்று அழைக்கப்படும் சுனாமி குடியிருப்பில், வீடுகளுக்குள் புகுந்து காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களுக்குச் சாட்சியாக ஜன்னல்கள், டி.வி, ஃபிரிஜ், பாத்திரங்கள்... எல்லாம் உடைந்து கிடந்தன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன. பந்தலில் இருந்த மூன்று ஜெனரேட்டர்களில் இரண்டைக் 'கொள்ளை’ அடித்துச் சென்ற போலீஸ், மூன்றாவதை உடைத்து மணலை அள்ளிக் கொட்டிவிட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் வைத்துவிட்டுச் சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள் மக்கள்.

சுனாமி நகரில் நடந்தவற்றைப் பற்றி கண்ணீருடன் விவரித்தார் அனிதா.
''சுனாமி நகர்ல போலீஸ்காரங்க செஞ்ச அட்டூழியங்களை நேருக்கு நேர் பார்த்தேன். எப்ப போலீஸ் வந்து அடிச்சு விரட்டிருமோங்கிற பயத்துல வீட்ல தங்காம மாதா கோயிலுக்கு வந்தோம். இங்கே நாங்க அசந்த சமயத்துல உள்ள புகுந்த போலீஸ் மாதா சிலையை உடைச்சு, சிலைக்குக் கட்டியிருந்த சேலையைக் கழட்டிப்போட்டு, பீடத்து மேல அசிங்கம் பண்ணிவெச்சுட்டுப் போயிருக்காங்க. எங்க கோயில் அவங்களுக்கு கக்கூஸா என்ன? மாதாவை நாங்க நம்புறோம்னு மாதாவை அவமானப்படுத்தினாங்க. உதயகுமார் சாரை நம்புறோம்னுதான் நடக்க முடியாத பொண்ணுகிட்டகூட, அவரை வெச்சு தப்புத் தப்பா பேசுறாங்க. இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம். கடற்கரைக்கார மனுஷங்களைப் பத்தி இன்னும் அவங்களுக்குத் தெரியலை. உதயகுமார் சார் சொன்ன வார்த்தைக் குக் கட்டுப்பட்டுத்தான் நாங்க அமைதியா இருக்கோம். இல்லேன்னா, நடக்குறதே வேற'' என்று ஆவேசமும் அழுகையுமாக முடித்தார்.
இடிந்தகரையில் மக்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்திய நாளன்று, விமானம் தாழப் பறந்ததால் அந்த அதிர்ச்சியிலேயே உயிர் இழந்த சகாயத்துக்கு மூன்று பெண்கள் உட்பட நான்கு குழந்தைகள். மனைவி சபீனா இன்னும் கணவனை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறார். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மீனவர் அந்தோணியின் குடும்பத்துக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கிய   தமிழக அரசு, சகாயத்தின் மரணத்தைக் கண்டுகொள்ளவில்லை. இதுவரை சகாயம் மரணம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைகூட பதியப்படவில்லை.

பொதுச் சமையல் செய்து உண்டு ஆண்களும் பெண்களும் பேதமற்று வாழும் கொம்யூன் வாழ்க்கை போன்றே இடிந்தகரை மக்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கிறது. வீடுகளில் சமைப்பது இல்லை. லூர்து மாதா ஆலய வளாகத்தில்தான் சாப்பாடு தயாராகிறது. அதைத்தான் சாப்பிடுகிறார்கள். பால், தண்ணீர் விநியோகம் இல்லை. இடிந்தகரையில் இருந்து வெளியே சென்று தண்ணீர் லாரி ஒன்றில் மக்கள் தண்ணீர் சுமந்து வருகிறார்கள். ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய். பகல் முழுக்க மின் தடை. இரவில் மட்டுமே மின்சாரம். மருந்துப் பொருட்கள் இல்லை. பேருந்து வசதியை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டது அரசு.

மளிகைப் பொருட்கள், காய்கறி என்று எதுவும் ஊருக்குள் வருவது இல்லை. கடல் வழியாகப் படகுகளில் வரும் உணவுப் பொருட் களை வைத்தே பொதுச் சமையல் நடக்கிறது. நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்ட போர்ப் பிரதேசம்போல இருக்கிறது இடிந்தகரை. பிரசவ வலியில் துடித்த ஒரு பெண்ணைப் பத்திரிகை யாளர்கள் வந்த வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்று பிரசவம் பார்த்திருக்கிறார்கள்.

யாரிடம் பேசினாலும் ஒரு கட்டத்துக்குப் பின் அழுகிறார்கள். அந்தக் கண்ணீர் கழிவிரக் கத்திலோ, சுய பச்சாதாபத்திலோ வந்த கண்ணீர் அல்ல. ஒருங்கிணைந்த போராட்டம் என்றால் என்ன என்று உலகுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் ஒரு போராட்டத்தில் விளைந்த நெகிழ்ச்சி, ஆவேசம் எல்லாம் கலந்த உணர்ச்சிப் பிரவாகம். அந்தக் கண்ணீர் வரலாற்றில் இடம்பெறும்!

''தனிநபர் வழிபாடு எனக்குப் பிடிக்காது!''
பொது மக்களின் பல அடுக்குப் பாதுகாப்பைத் தாண்டிச் சென்று சுப.உதயகுமாரனையும் போராட்டக் குழுவினரையும் சந்தித்தேன். தன்னை இடிந்தகரை பெண்களுடன் இணைத்துப் பேசும் காவல் துறையினரின் போக்கைக் கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கும் உதயகுமார், ''கைதுசெய்யப்பட்ட பெண்களிடம் ராதாபுரம் காவல் நிலையத்தில் மிகவும் தரக்குறைவான முறையில் நடந்திருக்கிறார் ஓர் அதிகாரி. மற்றோர் அதிகாரி, 'உதயகுமார், லூர்து மாதா கோயிலின் உள்ளே பெண்களுடன் நேரம் செலவழிக்கிறார்’ என்று முன்னரே கொச்சையாகப் பேசி இருக்கிறார். மக்களின் ஆவேசத்தை எதிர்கொள்ள முடியாமல், மிகத் தரக் குறைவாக நடந்துகொள்கிறது காவல் துறை'' என்கிறார்.


''லூர்து மாதாவுக்கு அடுத்து உதயகுமாரன்தான் எங்கள் தெய்வம் என்கிறார்களே இடிந்தகரை மக்கள்?''
''அவர்களுடைய அன்புக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால், போராட்டக் குழுவினர் வழிகாட்டும் வழியில்தான் நான் செயல்படுகிறேன். தனிநபர் வழிபாடு எனக்குப் பிடிக்காத ஒன்று. போராடும் மக்களிடையே இப்படியான உணர்வு இருப்பதை மாற்றுவோம். இது ஒரு கூட்டுப் போராட்டம். என்னை மட்டும் இதில் முன்னிறுத்து வதை நான் விரும்பவில்லை. இந்த எண்ணத்தை யும் நாளடைவில் சரிசெய்வோம்!'' என்கிறார் தீர்க்கமாக.

Monday, September 10, 2012

அற்புதங்கள் நிகழட்டும்

முன்னெப்போதுமில்லாதபடி
கடல் அலைகள் தாலாட்டட்டும்
குளிர் இதமாய் வீசட்டும்.
உறக்கம் உங்களைத் தழுவட்டும்
விளையாட்டையும் படிப்பையும்
போராட்டத்துக்குத் தின்னக்கொடுத்த
எங்கள் குழந்தைகளே
தென்றலில் மிதந்து வரும்
தேனமுத கானம்
உங்கள் செவிகளை எட்டட்டும்.

இடிந்தகரையிலிருந்து புயலாகிப் புறப்பட்டு
கடற்கரையில் மையம் கொண்டிருக்கும்
சீற்றங்கொண்ட தோழர்களே.
இன்றிரவு மட்டும் தென்றலாகி
சற்றே கண்ணயருங்கள்
மழைத்துளிகள் இன்றிரவு மட்டும்
மீண்டும் மேகமாகி விடட்டும்
கனவுகளில் அற்புதங்கள் நிகழ்ந்து
உலைக்களம் காணாமல் போகட்டும்

நாளை விடிகையில்
காக்கிச் சட்டைகளின் முகத்தில்
நீங்கள் விழிக்க நேரிடலாம்
ஆனாலும் என்ன..
குடிநீரும் உணவும்தந்து
உங்களால் அவர்களின் பசியாற்றமுடியும்
அதற்கு அவர்களின் கைம்மாறு
கண்ணீர்ப்புகையாகவோ தடியடியாகவோ
இருக்கக்கூடும்

ஆனாலும் தோழர்களே
எழுதியதிலேயே எப்படி முடிக்க என்று
குழ்ம்பித் தவிப்பது இப்போதுதான்.
அற்புதங்கள் கனவில் மட்டுமல்ல
நிஜத்திலும் நிகழும் சாத்தியங்கள் உண்டு
என்றுதான் நிறைவாய்
சொல்லத் தோன்றுகிறது.

Sunday, September 09, 2012

கூடங்குளம் பெண்கள் குழந்தைகளின் சென்னை வருகை

துவரை, இடிந்தகரையில் இருந்து போராடிய மக்கள், திடீரென்று சென்னையைத் தொட்டார்கள்! 

இடிந்தகரை மக்களை குற்றவாளிகளாகத்தான் கருதுகிறது காவல் துறை. இடிந்தகரையில் இருந்து குழந்தைக ளோடு சென்னைக்கு வந்த பெண்கள் சொன்ன தகவல்கள், அப்படித்தான் நினைக்க வைக்கின்றன.

சென்னைக்கு வந்த 20 பேர் குழுவில் இருந்த சேவியரம்மா, ''நாங்க தனியார் பஸ்ல பயணிகளோடு பயணிகளா வந்தோம். திசையன்விளை வரும்போதே ஒரு போலீஸ்காரர் பஸ்ல ஏறி, எங்களை யார் என்னன்னு விசாரிச்சார். 'நாங்க கிறிஸ்துவ அமைப்பு சார்பா குழந்தைகளை சாந்தோம் சர்ச், கோல்டன் பீச் சுத்திக் காண்பிக்க டூர் கூட்டிட்டுப் போறோம்’னு சொன்னோம். வேற வழியில்லாம பொய் சொல்ல வேண்டி இருந்துச்சு. 'நீங்க எல்லாரும் ஒரு பஸ்லதான் வர்றீங்களா, வேற ஆட்கள் வேற பஸ் எதுலயாவது வர்றாங்களா?’ன்னு துருவித் துருவிக் கேட்டார். 'இந்த பஸ்ல மட்டும்தான் வர்றோம்’னு சொன்னோம். அப்புறம் மதுரையில் ரெண்டு போலீஸார், பஸ்ஸை நிப்பாட்டி ஏறினாங்க. 'நாங்க இடிந்தகரையில இருந்து வர்றோம்’னு சொன்னவுடனேயே, 'சென்னையில குண்டு வீசத்தான் வர்றீங்களா? யார் கழுத்தை நெரிக்கப் போறீங்க?’னு கேட்டு மிரட்டினாங்க.
அப்புறம் அதிகாலை 4 மணிக்கு பஸ்ஸை பெருங்களத்தூரில் நிறுத்தினாங்க. அங்கேயும் போலீஸ் வந்து எங்களை இறங்கச் சொல்லி மிரட்டுச்சு. குழந்தைங்க பயத்துல அழ ஆரம்பிச்சுட்டாங்க. 6.30 மணி வரைக்கும் பஸ் அங்கேயே நின்னுச்சு. பஸ்ல இருந்த மத்த பயணிகள் சத்தம் போடவும், அவங்களுக்கு மட்டும் வேற பஸ் ஏற்பாடு பண்ணி அனுப்பிட்டாங்க. 'நாங்க கோயம்பேட்டுக்குப் போகணும். எங்க சொந்தக்காரங்க எங்களைக் கூட்டிட்டுப் போகக் காத்திருப் பாங்க’ன்னு பிடிவாதமா நாங்க பஸ்ஸை விட்டு இறங்கலை. அப்புறம் முன்னாடி பின்னாடி போலீஸ் ஜீப் வர, எங்களை ஏதோ குற்றவாளிங்க மாதிரி கோயம்பேடு வரை கூட்டிட்டு வந்தாங்க. நாங்க தங்குற இடத்திலும் போலீஸ் வெளியே நின்னுக் கிட்டே இருந்தது. இப்போ இங்கேயும் நிக்கிறாங்க.

இடிந்தகரையில் இருந்து வர்றோம்னு சொன்னவுடனேயே போலீஸ்காரங்க பார்த்த பார்வையே வேற. அந்த ஊர்ல பிறந்தது எங்க குற்றமா? நாங்க என்ன பாவம் பண்ணினோம்? ஒரு வருஷமா எந்த வன்முறையிலும் இறங்காம அகிம்சை வழியிலதானே போராடுறோம். எங்களை இவ்வளவு அவமரியாதையா நடத்தணுமா போலீஸ்? இந்தப் பச்சை மண்ணுங்கதான்  குண்டு வீசப் போகுதுங்களா?'' என்றார் குமுறலுடன்.
''எங்களை யாரும் தூண்டிவிடவில்லை. தன்னெழுச்சியாக நடக்கும் போராட்டத்தை மத்திய அமைச்சர் நாராயணசாமி திரும்பத் திரும்ப வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகச் சொல்லி கொச்சைப்படுத்துகிறார். உண்ணாவிரதப் போராட் டத்துக்கு எதுக்குப் பணம்? ஒரு கொட்டகையைப் போட்டு அதுக்குக் கீழே உட்கார்ந்திருக்கோம். எங்களைப் பார்க்க பல அரசியல் கட்சிகள், இயக்கங்களில் இருந்து வர்றாங்க. எங்களோட அதிகபட்சச் செலவு அவங்களுக்கு ஒரு தண்ணீர் பாக்கெட் கொடுக்கிறதுதான். இதுக்கு என்ன செலவாகிடும்? விவசாயிகளும், மீனவர்களும் 100 ரூபா கிடைச்சா அதுல 10 ரூபாயைப் போராட்டத்துக்குக் கொடுக்கிறாங்க. அதனால் எங்க போராட்டத்தைத் தயவு செஞ்சு கொச்சைப்படுத்தாதீங்க'' என்று அந்தப் பெண்கள் கேட்டுக்கொண்டனர்.

''குழந்தைகளிடம், கனவு காணுங்கள் என்றார். அப்துல் கலாம். ஆனால் எங்கள் பிள்ளைகளோ இரவில் கனவு கண்டு உளறும்போதுகூட, 'அணு உலை வேண்டாம்’ என்றுதான் சொல்கிறார்கள். ஓட்டுக்கு மட்டும் இடிந்தகரை மக்கள் வேண்டும். ஆனால், எங்க கோரிக்கையை மட்டும் கண்டுக்க மாட்டாங்களா? காற்றாலை, அனல் மின்சாரம்னு எப்படி வேணும்னாலும் மின்சாரத்தைத் தயாரிக்கலாம். மக்களைக் கொன்னுதான் மின்சாரம் உற்பத்தி பண்ணணுமா? நெய்வேலி மின்சாரத்தைத் தமிழ்நாட்டுக்கு மட்டும் பயன்படுத்தினாலே போதும். அதை வேற மாநிலங்களுக்கு அனுப்பிட்டு, தமிழர்களுக்குன்னு சொல்லி எங்க ஊரை நாசமாக்குறாங்க. பொய்யா மின்வெட்டுன்னு ஜோடிச்சு, கூடங்குளம் செயல்பட ஆரம்பிச்சா மின்வெட்டு போயிடும்னு தமிழ்நாட்டு மக்களை நம்ப வைக்கிறாங்க.

நாங்க எல்லாருமே இரட்டை இலைக்குத்தான் ஓட்டுப் போட்டோம். முதல்வரும் ஒரு பெண்தான். அதனால் எங்களைப் புரிஞ்சுப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு. எங்களுக்கு ஆஸ்பத்திரி கட்டித் தர்றாங்களாம். எங்களுக்கு ஆஸ்பத்திரி வேண்டாம். ரோடு வேண்டாம். அணு உலையும் வேண்டாம். அதுக்குப் பதிலா ஒரு தொழிற்சாலை கட்டுங்க போதும்'' என்று கண்ணீர் விட்டு அழுதனர்.  

இடிந்தகரை மக்கள் மேல் போட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் குழந்தைகள். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் குழந்தைகளான மலியாவுக்கும் சாஷாவுக்கும் அணு உலையின் ஆபத்துக்களை விளக்கிக் கடிதம் எழுதி, அதை அமெரிக்கத் தூதரகத் தில் ஒப்படைத்துள்ளனர். ஆஸ்திரேலிய மக்களுக்கும், ரஷ்ய மக்களுக்கும் எழுதப்பட்ட கடிதங்களையும் அந்தந்தத் தூதரகங்களில் ஒப்படைத்துள்ளனர். முதல்வரைச் சந்திக்க முடியாமல் முதல்வரின் தனிப்பிரிவில் அவருக்கான மனுவைச் சேர்த்துள்ளனர் குழந்தைகள்.  எல்லைகளைக் கடந்தும் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டம் தொடர்கிறது!


படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்

Wednesday, September 05, 2012

மேரிகோம் - இந்தியாவின் இரும்பு மனுஷி


'மணிப்பூரின் இளவரசி’ மேரிகோம்... இப்போது இந்தியாவின் 'இரும்பு மனுஷி’! புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இருந்து வந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கும் பெண். லண்டன் ஒலிம்பிக்ஸில் குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலம் வென்ற தன்னம்பிக்கை நட்சத்திரம்.
 ''எனது பாக்ஸிங் வாழ்க்கை அத்தனை எளிமையானதாக இல்லை. பாக்ஸிங் விளையாட்டில் ஈடுபட ஒரு பெண்ணுக்கு ஆண்களைவிட அசாதாரண முயற்சியும் கடின உழைப்பும் மனதளவில் அபார தெம்பும் இருக்க வேண்டும். எப்போதோ எங்கேயோ கிடைத்த ஒவ்வொரு சின்ன ஆதரவும் எனக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக இருந்தது. அதற்காக நான் நிறைய விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. பாக்ஸிங் இஸ் மை லைஃப். அதனால் நான் விட்டுக்கொடுத்தேன்!''- சிநேகமாக எதிரொலிக்கிறது மேரிகோமின் குரல். ஒலிம்பிக்ஸின் வெண்கல வெற்றிக்கு இன்னமும் பாராட்டு மழையில் நனைந்துகொண்டு இருந்தவரைத் தொட்டுத் தொடர்ந்து எடுத்த பேட்டியில் இருந்து...  

''ஓய்வு எடுக்கக்கூட நேரம் இல்லை இப்போது. நான் பிறந்த மணிப்பூர் மண்ணின் மக்கள் என் மீது பொழியும் அன்பில் நெகிழ்ந்துகொண்டு இருக்கிறேன். நான் இந்தத் துறைக்கு வந்தபோது 'இது பெண்களுக்கான துறை இல்லை. ஆகவே, உன்னால் சாதிக்க முடியாது’ என்றனர். நான் திருமணம் செய்துகொண்டபோது, 'இனி இவள் அவ்வளவுதான்’ என்றனர். நான் இரட்டைக் குழந்தைகள் பெற்ற பின்னர், 'இனி உடல்நிலை அனுமதிக்காது’ என்றனர். ஆனால், நான் என்னை நிரூபிக்க விரும்பினேன். இந்தியாவில் ஒரு வரலாற்றை உருவாக்க விரும்பினேன். இதோ தமிழ்நாட்டில் இருந்து என்னைப் பேட்டி எடுக்கிறீர்கள். நினைத்ததைச் சாதித்த திருப்தி!''
''அது என்ன... வெண்கலப் பதக்கம் வென்ற பிறகும் தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல்போனதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறீர்கள்?''
''பழங்குடி விவசாயக் கூலிக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். கடமை உணர்வு எங்கள் வளர்ப்பில் ஊட்டப்பட்டது. 'தங்கம் வென்று வா’ என்றுதான் இந்த தேசம் என்னை ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அனுப்பியது. ஆனால், என்னால் வெண்கலம்தானே வெல்ல முடிந்தது. அதனால், அந்த மன்னிப்பு.''  
''ஒரு பெண்ணாக இந்த உயரத்தை எட்ட உங்கள் போராட்டம் எங்கு தொடங்கியது?''  
''என் வீட்டில் இருந்து. நான் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்க என் தந்தையின் எதிர்ப்பு ஆரம்பத்தில் தீவிரமாக இருந்தது.  ஆனால், என் அம்மா எனக்கு தொடக்கத்தில் இருந்தே உறுதுணையாக இருந்து ஊக்கம் அளித்தார். குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறவே ஒரு ஒலிம்பிக்ஸ் அளவுக்குப் போராடி னேன். 14,000 ரூபாய்க்கு வீட்டில் இருந்த பசுவை விற்றும் கடன் வாங்கியும் பயிற்சி பெற்றேன்.
2005-ம் வருடம் திருமணம். 'இனி, குடும்பத்தைக் கவனித்துக்கொண்டால் போதும். விளையாட்டு வேண்டாம்’ என்று முன்னைக் காட்டிலும் அதிக நெருக்கடி கொடுத்தார்கள். அப்போது என் மாமனார் கொடுத்த ஊக்கம்தான் என்னைத் தொடர்ந்து பயணிக்கச் செய்தது. ஆனால், அடையாளம் தெரியாத சிலரால் அவர் கொல்லப்பட்டார். நான் தொடர்ந்து போட்டிகளில் பங்கெடுத்துப் பட்டம் வெல்வதைத் தடுக்க முடியாததாலேயே அவரைக் கொன்றார்கள் என்று அறிந்தபோது, நான் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றேன். அந்தச் சமயம் நான் கர்ப்பமாக இருந்தேன். இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானேன். என் மாமனார் கொலையானதால் இனி விளையாடப்போவது இல்லை என்று முடிவுஎடுத்து இருந்தேன். ஆனால், என் கணவரின் ஆறுதலும் ஆதரவும் என்னை மீண்டும் மனம் மாற்றி குத்துச்சண்டை மேடை ஏற்றியது. 15 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயிற்சியில் ஈடு பட்டேன். பல சமயங்களில் குழந்தைகளைக்கூட கவனிக்க முடியவில்லை. இத்தனை சிரமங்களுக்குப் பிறகு 2008-ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்றேன். நான்காவது உலக சாம்பியன் பட்டம் அது. 'இது ஒரு ஆரம்பம்தான்’ என்று அப்போது முடிவெடுத்தேன். நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.''  
''முதல்முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பின் மணிப்பூர் அரசு உங்களுக்குக் காவல் துறையில் கான்ஸ்டபிள் பணி வழங்கியது. அதை ஏற்க மறுத்தீர்கள். பின்னர் 8,500 ரூபாய் சம்பளத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணி அளித்தது. இப்போது என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்? அந்தச் சம்பளம் உங்கள் பயிற்சிகளுக்குப் போதுமானதாக இருக்கிறதா?''
''இரண்டு பதவி உயர்வுகளுக்குப் பிறகு, இப்போது 31,000 ரூபாய் சம்பளம். ஒரு வாரப் பயிற்சிக்குக்கூட இது போதாது!''
''ஆனால், கிரிக்கெட் விளையாட்டுக்கு கோடிகளைக் கொட்டுகிறார்களே?''
''கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதுவும் ஒரு விளையாட்டுதானே? ஆனால், மற்ற போட்டிகளுக்கும் அதே அளவு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்!''
''உங்கள் ரோல் மாடல் யார்?''  
''ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி. அதோடு அபிநவ் பிந்த்ரா, சாய்னா, யோகேஸ்வர் தத், சுஷில் குமார், விஜய்குமார், ககன் நரங் என்று ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற ஒவ்வொருவருமே எனக்கு ரோல் மாடல்கள்தான். இவர்கள் ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது!''
''மேரிகோமுக்கு வேறு என்னவெல்லாம் பிடிக்கும்?''
''என் குழந்தைகள் ரெங்பா, நைன்நாவை ரொம்பவும் பிடிக்கும். கடவுள் நம்பிக்கை அதிகம். மணிப்பூர் மாநில உணவுகள் அனைத்தும் பிடிக்கும். சாம்பியாங் என்று ஒரு உணவு. இஞ்சி, பச்சை மிளகாய், பட்டாணி எல்லாம் போட்டு... நினைத்தாலே நாவூறும்! அப்புறம் மணிப்பூர் மக்களுக்காகப் போராடும் இரோம் ஷர்மிளாவை மிகவும் பிடிக்கும். அவரது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்!''
''இந்த வெற்றிகளுக்கு நீங்கள் யாருக்கு நன்றி கூற விரும்புகிறீர்கள்?''
''என் கணவருக்கு! அவருடைய ஆதரவு இல்லாமல் என்னால் இதைச் சாதித்திருக்க முடியாது. அவர் மட்டும் 'எதற்கு இதெல்லாம்? குடும்பத்தைப் பார்’ என்று சொல்லியிருந்தால், நான் என்னவாகி இருப்பேன் என்று என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி!''

Tuesday, September 04, 2012

மற்றுமொரு இனப்படுகொலை - மியான்மர்


ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மனித உயிர்களின் ஓலம் அடங்கும் முன்பாகவே, இதோ அதற்கு நிகரான இன்னொரு இனப்படுகொலை நிகழ்ந்து வருகிறது மியான்மரில். முன்பு பர்மா என்றழைக்கப்பட்ட இப்போதைய மியான்மரில் பௌத்தம்தான் பிரதான மதம். அங்கு வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிறுபான்மையினர். இதுவரை கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 20,000 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஊடகங்களில் பெரிதாக இதுகுறித்த செய்திகள் வரவில்லை. இவ்வளவு பெரிய இனப்படுகொலை நடந்தபின்னும் உலகின் கவனம் மியான்மர் பக்கம் திரும்பவில்லை. இவை எல்லாமே ஈழத்தை நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஈழத்துக்காக ஒலித்த குரல்கள் எப்படி இலங்கைக்குள்ளும், தமிழ்நாட்டுக்குள்ளும் மட்டுமாக ஒலித்ததோ, அப்படியே ரோஹிங்கியா முஸ்லிம்களின் குரல்களும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. 

அகதிகளுக்கும் கூட ‘இது எங்கள் நாடு’ என்கிற உணர்வும் அங்கே திரும்பவும் சென்று வாழ முடியவில்லையே என்கிற ஏக்கமும் புலம் பெயர்ந்து வாழும் அகதிகளுக்கு இருக்கும். ஆனால் எந்த நாடென்றே தெரியாமல், எந்த நாட்டிலும் குடியுரிமை பெறாமல், ஒரு தேசிய இனமாகவும் ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்படாமல் அநாதைகள் போல வாழிடத்திலேயே அலைய நேர்ந்ததுண்டா நீங்கள்? கண்ணெதிரே பெற்ற பிள்ளைகளையும், பெற்றோரையும் கொன்று, உடன்பிறந்த சகோதரியை ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்கையில் காப்பாற்ற வழிதெரியாமல் கதறியதுண்டா? நீங்களும் நானும் ஒரு பாதுகாப்பான சமூகத்தில் வாழ்கிறோம். ஆனால் மியான்மரில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை இதுதான்.

எதற்காக இந்த படுகொலைகள்? மியான்மரின் ராகின் மாகாணத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைச் செய்தது என்று கூறி மூன்று முஸ்லிம்களை கைது செய்தது மியான்மர் அரசு. ஆனால் இளம்பெண்ணின் படுகொலைக்கு ரோஹிங்கியா முஸ்லிம்களை பழிவாங்கவேண்டும் என்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மிகத் தீவிரமான இன எதிர்ப்புப் பிரசாரம் முடுக்கி விடப்பட்டது. முஸ்லிம்கள் மீதான வன்முறை தொடங்கியது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.  தொடக்கத்தில் இருதரப்பிலும் உயிர்ச் சேதங்கள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் ராகின் பௌத்தர்களின் கை ஓங்கியது. கடைகள், கல்வி நிலையங்கள், வங்கிகள் என்று அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்குச் சட்டம் முஸ்லிம்களை வீட்டுக்குள் முடக்கிப் போட்டதால், அவர்களை வேட்டையாடிய பௌத்த ராகின்களுக்கு மிக வசதியாகப் போய்விட்டது. அவர்களின் வீடுகளுக்குள்ளேயே சென்று அவர்களைக் கொன்றனர். ஊரடங்கு உத்தரவுக்கு ராகின் வன்முறையாளர்கள் செவிசாய்க்கவில்லை. காவல்துறையும் ராணுவமும் இவர்களுக்கு உதவின. உள்நாட்டில் வாழ வழியில்லாத முஸ்லிம்கள், உயிரைக் காத்துக்கொள்ள படகுகளில் வங்கதேசத்துக்கு அகதிகளாகச் சென்றனர். ஆனால் வங்கதேசமோ ஏற்கனவே 3 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் தங்கள் நாட்டில் இருப்பதால் மேற்கொண்டு அகதிகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறி திருப்பி அனுப்பியது. நடுக்கடலில் போவதற்கு திக்கற்று அலைந்து திரிந்தே பசியிலும் பட்டினியிலும் நோயுற்றும் பலர் இறந்துபோயுள்ளனர். இது ஒருபுறம் என்றால் படகுகளில் தப்பித்துச் செல்லும் அகதிகளை குறிவைத்து ஹெலகாப்டர் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். அகதிகளாகத் தப்பித்தவர்கள் கதி இதுவென்றால், உள்ளேயே இருந்தவர்கள் பேரினவாத குழுக்களிடம் சிக்கி தங்கள் உயிரை இழக்கின்றனர். படுகொலை செய்யப்பட்டு இறந்த முஸ்லிம்களின் தலைமுடியை அகற்றி மொட்டையடித்து, அவர்களுக்கு பௌத்த்த் துறவிகள் போன்று உடை அணிவிக்கப்பட்டு, புகைப்படங்கள் எடுக்கப்பட்டு முஸ்லிம்களால் கொல்லப்பட்ட்து போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு கலவரங்கள் தூண்டப்படுவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை உண்மை என்று நம்பும் மியான்மர் நாட்டினர் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். ரோஹிங்கியா மக்கள் மத்தியில் வேலை செய்துகொண்டிருந்த தொண்டு நிறுவனமான கிலிஜிஷிணிகிழி ''இது போன்ற மோசமான நிலைமையை, நாம் இதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. இனப்படுகொலை என்பதைக் குறிக்கும் சர்வதேச சட்டத்தினால் வரையறுக்கப் படக் கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஹிங்கியா வங்காளிகள் என்ற இனம், மியான்மரில் அழிந்து கொண்டிருக்கிறது." என்கிறது.

இந்த கோரத்தாக்குதல்களைக் கண்டித்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட போராட்டம் நடைபெற்றது. ஜெர்மன் தலைநகர் பெர்லினிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாகிஸ்தான் அரசு இந்தப் படுகொலைகள் நிறுத்த மியான்மர் அரசை நிர்பந்திக்கவேண்டும் என்றும் அந்த நாட்டுடன் உள்ள ராஜிய உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படிச் செய்யாவிட்டால், பாகிஸ்தானில் உள்ள மியான்மர் நாட்டினரைத் தாக்குவோம் என்றும் தாலிபான்கள் எச்சரித்துள்ளனர். மியான்மரில் உள்ள தனது பணியாளர்களை ஐ.நா.சபை திரும்ப அழைத்துக்கொண்ட்து. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனது பார்வையாளர்களை மியான்மருக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மியான்மர் அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. துருக்கி நாட்டு அரசு நிலைமையை நேரில் ஆய்வு செய்ய மியான்மருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லுவை அனுப்பியது. ‘மேற்கு மியான்மரில் இனச் சுத்திகரிப்பு நடக்கிறது’ என்கிறது சவுதி அரேபியா பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி மியான்மர் அதிபர் தைன் சென்னுக்கு தாக்குதல்களை நிறுத்தக்கோரி கடிதம் எழுதினார். ஆனாலும் தாக்குதல்கள் நிற்கவில்லை. சீனாவும் இந்தியாவும் இதுகுறித்து கனத்த மௌனம் சாதிக்கின்றன. நோபல் பரிசு வென்ற மியான்மரின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்-சாங்-சூ-கீயும் இது குறித்து மௌனம் சாதிக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசை வென்ற இன்னொருவரான தலாய் லாமாவும் இது குறித்து மௌனம் சாதிக்கின்றார். ஒருவேளை அமைதிக்கான நோபல் பரிசை, இதுபோன்ற சமயங்களில் அமைதியாய் இருப்பதற்காக வழங்கப்பட்டது என்று புரிந்துகொண்டார்களோ என்னவோ?

ரோஹிங்கியா முஸ்லிம்கள் 8 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கவில்லை மியான்மர் அரசு. திருமணம் செய்துகொள்ள ராணுவ உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.  எல்லைக் காவல்படை உட்பட 4 இடங்களில் அனுமதிப் பத்திரம் பெறப்பட வேண்டும்.. திருமணம் செய்யாமல் ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது அங்கு குற்றம். அப்படி வாழ்ந்து கருவுற்ற ஓர் இளம்பெண்ணின் கால்நடைகளையும் உடைமைகளையும் ராணுவத்தினர் அபகரித்துச் சென்ற சம்பவமும் நடந்தது. 2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது. மிகக் குறைவான ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படும். அவர்களுடைய நிலங்கள் பிடுங்கிக்கொள்ளப்படுகின்றன.  ஓரிடத்தில் இருந்து இன்னொரு இட்த்திற்கு நாட்டுக்குள்ளேயே இடம்பெயர அரசின் அனுமதியை அவர்கள் பெறவேண்டும். உயர்கல்வி வழங்கப்படுவதில்லை. பாஸ்போர்ட் கிடையாது. 7 வயது முதலே குழந்தைகள் தொழிலாளிகளாக்கப்படுகிறார்கள். நாட்டின் மிக அபாயகரமான, மோசமான தொழில்கள் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பாலம் கட்டுவது, பாதைகளை சீரமைப்பது போன்ற பல கட்டுமானப் பணிகளிலும் இவர்களே குறைந்த கூலிகளில் அடிமைகள் போல வேலை வாங்கப்படுகிறார்கள். இவர்களின் வீடுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் காவல்துறை நுழைந்து சோதனை செய்கிறது. அவர்கள் கூடும் இடங்களில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்படுகின்றன. ராணுவம் முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லாங்கு செய்வது வாடிக்கையாகிப் போனது. இத்தனை அடக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகம் இந்நேரம் பொங்கியெழுந்திருக்க வேண்டும். ஆனால், குர்துக்கள், பாலஸ்தீனியர்கள் போல அவர்களை வழிநடத்த ஒரு தலைவர் அவர்களுக்கு இல்லை என்பதால் அது நடக்கவில்லை.. ஆங்-சாங்-சூ-கீ போல ரோஹிங்கியாக்களுக்கு மக்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய தலைவர்கள் இல்லை. ’விஷீst யீக்ஷீவீமீஸீபீறீமீss ஜீமீஷீஜீறீமீ வீஸீ tலீமீ ஷ்ஷீக்ஷீறீபீ” என்று அகதிகளுக்கான ஐ.நா ஹைகமிஷனர் கிட்டி மெக்கின்ஸி இவர்களைக் கூறுகிறார்.

படகுகளில் தப்பித்து, கடலில் தத்தளித்து தடுமாறியவர்களைக் காப்பாற்றிக் கரைசேர்த்த்து இந்தோனேஷிய கடற்படை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முகமது ஷஃபிருல்லாஹ் என்கிற சிறுவன ஊடகங்களிடம் கூறியது இது. ‘’நாங்கள் 200 பேர் தப்பித்து வந்தோம். எங்கள் மக்கள் பலர் சிறையில் வாடுகிறார்கள். எங்கள் குடும்பத்தின் நிலம் அபகரிக்கப்பட்டது. என் சகோதரன் காட்டுக்குள் இழுத்துச்செல்லப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துவிட்டான். அங்கேயுள்ள மக்களுக்கு மருத்துவ வசதிகளோ, உணவோ இல்லை” 

மியான்மரில் நடப்பவை தொடர்பான விடியோ பதிவுகள் இணையத்தில் செய்தித்தொகுப்புகளாக்க் கிடைக்கின்றன. அவற்றை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அத்தனை சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள், படுகொலைகள். வங்கதேசத்தில் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படும் அகதிகள் நடுக்கடலில் படகுகளில் அமர்ந்து கதறியபடியே விண்ணை நோக்கி இரு கைகளையும் நீட்டி ‘அல்லாஹ்! இந்த வேதனை வேண்டாம். நாங்கள் எங்கு செல்வோம். எங்களை அழைத்துக்கொள்.’ என்று பிரார்த்திப்பதைப் பார்ப்பவர்களின் கல் மனமும் கரைந்துவிடும். இப்படி வங்கதேசத்தால் திருப்பி அனுப்பப்படும் படகுகளின் கதி என்னவென்பதே தெரியவில்லை.

இத்தனை பேரை பலிகொண்டிருக்கும் இந்த இனப்படுகொலை குறித்து இந்திய ஊடகங்களில் பெரும்பகுதி, அரசைப் போலவே மௌனம் சாதிக்கின்றன. சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இந்த இனப்படுகொலைகளை எதிர்த்து ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத் தவிர பெரிய எதிர்வினைகளோ, ஊடகப்பதிவுகளோ தமிழகத்தில் இல்லை. இந்திய அளவிலும் இல்லை. மியான்மர் குறித்து தெரிந்துகொள்ள இணையம் மட்டுமே ஒரே ஒரு வழியாக இருக்கிறது . ஆனால் அதே இணையம்தான் மியான்மரில் முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தைப் பரப்பவும் காரணமாக இருந்தது. 

அண்டை நாடு என்கிற முறையில் இந்தப் படுகொலைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப்போகிறதா இந்தியா? அல்லது ஒரு கண்டன அறிக்கையாவது இந்திய அரசு வெளியிடுமா என்கிற எதிர்ப்பார்ப்பு இந்திய முஸ்லிம்களிடையே உள்ளது. அதையாவது நிறைவேற்றுமா அரசு? Thursday, August 09, 2012

தேவை..கருணை அல்லது கருணைக் கொலை..!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோனாலி முகர்ஜிக்கு 26 வயது. அண்மையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் கிருஷ்ணா டிரத்தைச் சந்தித்த அவர், ''எனக்கு அரசு உதவ வேண்டும்... அல்லது என்னைக் கருணைக் கொலை செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஏன்?

2006 ஏப்ரல் 22,  நள்ளிரவு 2 மணி. மொட்டைமாடியில் தன் குடும்பத்தாருடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் சோனாலி முகர்ஜி. தூக்கத்தில் இருந்த சோனாலி, முகத்தில் ஏற்பட்ட திடீர் எரிச்சல் காரணமாகச் சட்டென்று விழித்துக்கொள்கிறார். அவர் முன் நின்றுகொண்டு இருந்த மூன்று இளைஞர்கள் ஓடி மறைகிறார்கள். அவர்கள் சோனாலியின் பொலிவான முகத்தில் அமிலத்தை ஊற்றிஇருக்கிறார்கள். வலியிலும் எரிச்சலிலும் துடிக்கிறார் சோனாலி. என்ன நடந்தது என்றே அவருக் குத் தெரியவில்லை.
ஆயிற்று ஒன்பது ஆண்டுகள்... இன்றைக்கு சோனாலியின் முகத்தைப் பார்ப்பவர்கள் அதிர்ந்துபோகிறார்கள். முகம் உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. இரு விழிகளிலும் பார்வை இல்லை. நரம்புகள் சிதைந்ததால், வலது காதின் செவித் திறனையும் இழந்துவிட்டார் சோனாலி. இவை அல்லாமல் மூச்சுத் திணறலும் குறைந்த ரத்த அழுத்தமும் அடிக்கடி வருவது உண்டு. இத்தனை கொடுமைகளையும் அவர் அனுபவிப்பது எதனால்? தன் பின்னால் சுற்றிய, தன்னை நோக்கித் தகாத வார்த்தைகளால் பேசிய, தன்னைப் பாலியல் சீண்டல் செய்த மூன்று இளைஞர்களைத் துணிவாக எதிர்த்ததுதான் காரணம்.


அப்போது கல்லூரி மாணவியான சோனாலி, தேசிய மாணவர் படையிலும் ஆர்வமுடன் செயல்பட்டுவந்தார். துணிச்சல்மிக்கவர். சோனாலி கல்லூரிக்குச் செல்லும்போதும் வரும்போதும் அந்த மூவரும் அவரைப் பின்தொடர்ந்து சீண்டியபடி இருந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களுடைய தொல்லை பொறுக்க முடியாத சோனாலி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக அவர்களிடம் கடுமையான தொனியில் சொல்லியிருக்கிறார். இதனால் கோபமுற்ற அவர்கள், ''அழகான முகம் இருக்கிறது என்பதால்தானே இப்படிப் பேசுகிறாய்... உனக்குத் தக்க பாடம் புகட்டுகிறோம்'' என்று கூறி, சொன்னதை அந்த இரவில் செய்தும் காட்டியிருக்கிறார்கள். அந்த ஓர் இரவு சோனாலியின் அத்தனை பகல்களையும் இருளாக்கிவிட்டது!

சோனாலிக்கு இதுவரை 22 அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. அவருடைய தொடைப் பகுதியில் இருந்து சதையையும் தோலையும் எடுத்து முகத்தில் வைத்து ஓரளவு முகத்தை வடிவத் துக்குக் கொண்டுவந்திருக்கின்றனர் மருத்துவர்கள். ஆனாலும், பார்வை கிடைக்கவில்லை. அவருடைய சிகிச்சைக்காகவே ஆலைத் தொழிலா ளியான அவருடைய தந்தை தன் நிலத்தை விற்று, சொத்துகளை இழந்து கடனாளி ஆகி இருக்கிறார். சோனாலியின் நிலையைக் கண்ட அவருடைய தாய் மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருக்கிறார். ஒரு கட்டத்தில் உறவினர்களும் நண்பர் களும் கைவிட்ட நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மாநிலத்தின் மூன்று முதல்வர்களைச் சந்தித்து விட்டார் சோனாலி. ஆனால், ஒரு பயனும் இல்லை. ஒரு சாதாரண சாலை விபத்தில்கூட காயம்பட் டால் அரசாங்கம் நஷ்டஈடு அளிக் கிறது. ஆனால், சோனாலிக்கு அரசாங்கமோ, குற்றவாளிகள் தரப்போ நஷ்டஈடு என்று ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை.

சோனாலியின் மீது அமிலத்தை ஊற்றிய  மூவரில் பிரம்மதர்  ஹர்ஜாவை இளங்குற்றவாளி என்று கூறி விடுதலை செய்துவிட்டது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம். தபஸ் மித்ரா, சஞ்சய் பஸ்வான் ஆகிய மற்ற இருவரும் பெயிலில் வெளிவந்துவிட்டனர். குற்றம் இழைத்துவிட்டு குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர் ஆனால், எந்தத் தவறும் செய்யாத சோனாலி, தன் வாழ்க்கையை இழந்து இன்று அரசின் கருணையை அல்லது கருணைக் கொலையை நாடி நிற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். அமிலம் வீசுவதால் பெண்ணின் வாழ்க்கையே பாழாகிறது என்பதை மனதில்கொண்டு, பாலியல் குற்றத்துக்கு இணையாக இந்தக் குற்றத்தையும் பார்க்கவேண்டும்; அல்லது இதற்கென்று தனி சட்டப்பிரிவு உண்டாக்க வேண்டும். சோனாலியை நோக்கி வீசப்பட்டது அமிலம் அல்ல; ஆணாதிக்கச் சமூகத்தின் வன்ம ஊற்றில் இருந்து பீறிட்டுப் புறப்பட்ட விஷம்.
சோனாலி முகர்ஜியுடன் அலைபேசியில் பேசினேன். குரலில் விரக்தி தொனித்தாலும், தனக்கு நேர்ந்த அநீதி குறித்த நினைவுகளின்போது ஆவேசப் படுகிறார். எப்படியாவது உதவி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையும் அவரது பேச்சில் தெறித்தது.
''தைரியமான பெண்ணான நீங்கள் ஏன் கருணைக் கொலை கோரிக்கையை வைத்தீர்கள்?''
''வாழ வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், வெறும் வாக்குறுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு யாராலும் வாழ்ந்துவிட முடியாது. ஒன்பது ஆண்டுகளாக உறுதி மொழிகளால் மட்டுமே வாழ்ந்துவருகி றேன். எல்லா வாசல்களும் மூடப்பட்டு விட்ட நிலையில்தான் இப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. இப்போதும் யாருடைய உதவியாவது கிடைத்தால் வாழவே விரும்புகிறேன்.''
''அரசுத் தரப்பில் யாருமே உதவவில்லையா?''
''இல்லை. நாங்கள் அலைந்ததுதான் மிச்சம். இதை ஒரு சீரியஸான விஷயமாகக்கூட யாரும் பார்க்கவில்லை. இது எனக்கு மட்டுமான பிரச்னை இல்லை. அனைத்துப் பெண்களுக்குமான பிரச்னை. ஆனாலும், இதை யாருமே பொதுவான விஷயமாகப் பார்க்காதது வருத்தமாக இருக்கிறது.''
''குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட பெயிலை எதிர்த்து மேல்முறையீடு செய்வீர்களா?''
''குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட நானோ, அவர்களுடைய மிரட்டலாலேயே  அங்குஇருந்து வேறு ஊருக்குக் குடிபெயர வேண்டி இருந்தது. இதைத்தான் இந்தச் சமூகமும் அரசும் விரும்புகிறதா? சட்டம் அவர்களுடைய பாக்கெட்டில் இருப்பது எப்படி என்பதும் எனக்குப் புரியவில்லை. ஆனால், அவர்கள் தண்டிக்கப்படும் வரை நீதிக்காக நான் போராடுவேன்.''
''பெண்கள் அமைப்புகள் உங்களுக்குத் துணையாக வந்தனவா?''
''சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகளில் யாரும் எனக்குத் துணையாக இல்லை. இப்போது ஊடகங்களில் என் பேட்டிகளையும் என்னைப் பற்றிய செய்திகளையும் பார்த்த பிறகு, ஓரளவுக்குப் பெண்கள் அமைப்புகள் என்னைத் தொடர்புகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தன. ஆனாலும் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை.''
''சிகிச்சைக்காக சென்னை வந்தீர்களே... என்னஆயிற்று?''
''ஆமாம் வந்தேன். கண் சிகிச்சைக்காக 'சங்கர நேத்ராலயா’ மருத்துவமனைக்கு வந்தேன். கண்ணின் உட்பகுதியான கார்னியாவை மாற்ற வேண்டும் என்றனர். அதற்காகப் பெருந்தொகை செலவாகுமாம். அதனால், வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டேன். கண் சிகிச்சை மட்டுமல்லாது மற்ற சிகிச்சைகளுக்கும் சேர்த்து ஏறத்தாழ 17 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அத்தனை பணத்துக்கு எங்கே போவது?''
''முன்பு உங்களுடைய லட்சியம் என்னவாக இருந்தது?''
''நிறையக் கனவுகள் இருந்தன. நிறையப் படிக்க வேண்டும். பி.ஹெச்டி. முடிக்க வேண்டும். படிக்க முடியாத நிலையில் உள்ளவர்களையும் படிக்கவைக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாக இருந்தது. ஆனால், இப்போது உயிரோடு வாழ வேண்டும் என்பதே ஒரு குறிக்கோளாக இருக்கையில், வேறு லட்சியங்கள்குறித்து யோசிக்க முடியவில்லை.
அமில வீச்சுக்கு முன், பின் என்று என் வாழ்வை இரண்டாகப் பிரிக்கலாம். அந்தக் கொடூர சம்பவத்துக்குப் பின் எனக்கு எதிலுமே ஆர்வம் இல்லை. இப்போதைக்கு வாழ வேண்டும். அதற்கான வழியைத் தேட வேண்டும். அவ்வளவுதான்.''
''தன்னை நிராகரிக்கும் பெண்களின் மீது ஆண்கள் தாக்குதல் தொடுப்பது என்ன மனநிலை?''
''ஆண்களின் ஈகோதான் காரணம். தங்கள் மீது அவர்களுக்குத் தன்னம்பிக்கை இல்லாதபோது இப்படி நடந்துகொள் கிறார்கள். ஒரு பெண் தன்னை ஒதுக்கிவிட்டாலோ, விருப்பத்துக்கு அடிபணிய மறுத்தாலோ, ஆண்கள் இந்த அளவுக்குச் செல்வதை ஆளுமைச் சிதைவு (பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்) என்றே சொல்வேன். அது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையையே சிதைக்கும் கோரத்தை அவர்கள் உணர வேண்டும்.''

Wednesday, August 08, 2012

ஸ்ருதி இல்லாத வீடு

மாலை 4.15 மணி. வழக்கம்போல பள்ளிக் குழந்தைகளைச் சுமந்துகொண்டு செல்கிறது அந்த வேன். ஒட்டுநர் தன் இருக்கையில் அமர்ந்து வாகனத்தைச் செலுத்திக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு குழந்தையாக இறக்கிவிட்ட பின், இன்னும் எட்டு குழந்தை கள் வேனில் இருக்கிறார்கள். அப்போது அலைபேசி ஒலிக்கிறது. சென்னை சேலையூர் சீயோன் பள்ளியில் படிக்கும் குழந்தை ஸ்ருதி, பேருந்து ஓட்டை வழியாகக் கீழே விழுந்த செய்தி அந்த ஓட்டுநருக்கு வருகிறது. அவர் ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன்!

 தன் குழந்தை பள்ளிப் பேருந்து விபத்தில் உயிரிழந்த அதே நொடி, அவர் இன்னொரு பள்ளியின் குழந்தைகளைச் சுமந்துகொண்டு சென்ற வேனை ஓட்டிச் சென்றிருக்கிறார். செய்தியைக் கேட்ட பின்னும் பிஞ்சுக் குழந்தைகளைப் பொறுப்புடன் அவரவர் வீட்டுக்குச் சென்று சேர்த்துவிட்டுத்தான் விபத்து நடந்த இடத்துக்கு வந்திருக்கிறார்.

''நம்மளை நம்பி குழந்தைகளை ஒப்படைச்சிருக்காங்க. அவங்களை அப்படியே விட்டுட்டு வர முடியுமா? அதனால், பத்திரமாகக் கொண்டுபோய் விட்டுட்டு வந்தேன். எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. எப்படி யும் பிள்ளை பொழைச்சுருவானு நினைச் சேன். நான் மனுஷங்களை நம்புறவன். நூறு பேர் வேடிக்கை பார்த்தாலும், அதுல மூணு பேரு பிள்ளையை ஆஸ்பத்திரியில சேர்த்துருவாங்க. எப்படியும் அவ பொழைச்சுருவானு நினைச்சேன்.

எல்லாப் பிள்ளைகளையும் விட்டுட்டு நான் திரும்பி வரும்போதே வழியில டிராஃபிக் ஜாம். வேனை நிறுத்திட்டு ஜனங்களோட ஒருத்தனா ஸ்பாட்டுக்கு நடந்துதான் போக முடிஞ்சது. 'ஒரு குழந்தைக்கு இப்படியாகி ஸ்பாட்லயே உயிர் போயிடுச்சு’னு என் காதுபட மக்கள் பேசிக்கிறாங்க. ஆவேசமா ஸ்கூல் நிர்வாகத்தைத் திட்டுறாங்க. நான்தான் குழந்தைக்கு அப்பானு யார்கிட்டயும் சொல்லிக்கலை. ஸ்பாட்டுக்கு வந்து பார்த் தப்போ, பஸ் எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. ஸ்ருதி, என் மனைவி, நண்பர்கள் யாரையுமே காணோம். ஆஸ்பத்திரிக்கு குழந்தையின் உடலைத் தூக்கிட்டுப் போயிட்டதா சொன்னாங்க'' - அதற்கு மேல் பேச முடியாமல் கண்ணீர்விடுகிறார் ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன்.

சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார். ''நான் ஆட்டோ டிரைவரா இருந்தேன். இப்போதான் ஸ்கூல் வேன் ஓட்டுறேன். எத்தனையோ பேரு என் வண்டியில தவறவிட்ட பொருளை எல்லாம் பத்திரமாத் தேடிப்போய்த் திருப்பிக் குடுத்திருக்கேன். டிரைவருங்களை எப்படி மதிப்பாங்கனு உங்களுக்குத் தெரியாததா? என்னதான் உழைச்சாலும் எவ்வளவுதான் நேர்மையா  இருந்தாலும் 'இங்கே வாடா’ன்னுதான் கூப்பிடுவாங்க. அவ்வளவுதான் எங்க ளுக்கு மரியாதை... நானெல்லாம் செத்தா யாருங்க வரப்போறா? என் பொண்ணுக்குப் பாருங்க... எவ்வளவு கூட்டம். 20,000 பேர் இருக்கும்னு சொல்றாங்க. பொதுமக்களோட ஆதரவை என்னைக்கும் என்னால மறக்க முடியாது. மீடியாக்காரங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கேன். இத்தனை கூட்டம் எங்கே இருந்து வந்துச்சு? என் மகளை இதுக்கு முன்னால யாருக்குத் தெரியும்? விஷயம் தெரிஞ்சவுடன் ஓடோடி வந்த பல பேரை எனக்கு யாருன்னே தெரியாது. ஒரு கஷ்டம்னா யாருன்னே தெரியாம வந்த ஜனங்களைப் பார்க்கும்போது...'' என்று முடிக்க முடியாமல் மீண்டும் கண்ணீரின் பிடிக்குள் செல்லும் சேதுமாத வனைப் பார்க்கையில் துயரும் நெகிழ்ச்சியு மாகக் கண்கள் குளமாகின்றன.

'நடுரோட்டில் மயக்கம் போட்டு விழுந் தாலும்கூடக் கண்டுகொள் ளாத நகரத்து மக்கள்’ என்று சென்னைக்கு இருக் கும் பிம்பத்தை உடைத்து எறிந்திருக்கிறது சுருதியின் மரணம்.

பகலிலும் துயரத்தின் இருள் படிந்துகிடக்கிறது ஸ்ருதியின் வீடு. அவள் துள்ளி விளையாடிய அந்த வீட்டில் கனத்த மௌனம். அவளுடைய அண்ணன் பிரணவும் ஸ்ருதியும் எப்போதும் எல்லாவற்றுக்கும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள். இப்போது பிரணவுக்குச் சண்டை போடத் தங்கை இல்லை. அவன் உள்ளம் ஸ்ருதிக்கு நேர்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதை அவன் கண்கள் பிரதிபலிக்கின்றன. ''எப்ப வும் சண்டை போட்டாலும் வெளியில பிரணவை யாராவது அடிச்சுட்டா 'எங்க அண்ணனை நீ எப்படி அடிக்கலாம்’னு சண்டைக்குப் போவா ஸ்ருதி'' என்கிறார் ஸ்ருதியின் தாய் ப்ரியா.


வீட்டில் உள்ள புகைப்பட ஆல்பம் பூராவும் ஸ்ருதியே நிறைந்திருக்கிறாள். நடனம், பாட்டு, ஓவியம் என்று எல்லாவற் றிலும் பரிசு வாங்கும் ஸ்ருதியின் படங்களில் தெரியும் மின்னல் போன்ற முகமும் பளீர் கண்களுமாக ஓர் ஓவியம்போல் இருக்கிறாள். ''பாட்டுன்னா ஸ்ருதிக்கு ரொம்ப இஷ்டம். டி.வி-யில் அவளுக்குப் பிடிச்ச பாட்டு வந்தா பாடிக்கிட்டே டான்ஸ் ஆடுவா. அவளுக்குப் பிடிச்ச விஷயம் பாட்டும் டான்ஸும். பரதமும்

கர்னாடக சங்கீதமும் கத்துக்கிட்டா. திடீர்னு ஸ்ருதி சத்தமா 'ஸரிகமபதநிஸ’னு பாடி பிராக்டீஸ் பண்ணுவா. எல்லாப் போட்டிகள்லேயும் கலந்துப்பா. அவளுக்குச் சமைச்ச காய்கறி பிடிக்காது. பச்சைக் காய்கறியா சாப்பிடுவா. சாயங்காலம் ஸ்கூல் முடிச்சு வந்தவுடன் பையை வெச்சுட்டுக் கிளம்புவா. அப்புறம் அவ எந்த வீட்டுல இருக்கான்னே தெரியாது. இந்த ஏரியாவுக்கே அவ செல்லப் பிள்ளை. எல்லாருக்கும் அவளைப் பிடிக்கும். அவ பேச்சும் சிரிப்பும் எல்லாரையும் கவர்ந்துரும். 'எங்க வீட்டுக்கு வா... உங்க வீட்டுக்கு வா’னு அக்கம்பக்கத்தில் உள்ளவங்க அவளைக் கூப்பிட்டுக் கொஞ்சுவாங்க. அவ எங்க பிள்ளைனு சொல்றதைவிட, இந்த குவார்ட்டர் ஸுக்கே பிள்ளையா இருந்தா'' என்ற ப்ரியாவை அக்கம்பக்கத்து வீட்டினர் ஆமோதித்தனர்.

''ஸ்ருதி படிச்ச சீயோன் ஸ்கூல் தாளாளருடைய மகன் கல்லூரியில படிச்சப்ப டூர் போனார். போன இடத்துல புதைகுழில விழுந்து இறந்துட்டார். அப்போ இதே தாளாளர் பத்திரிகையில கொடுத்த பேட்டியை நான் படிச்சேன். 'கல்லூரி நிர்வாகம் அலட்சியமா இருந்ததாலதான் என் பிள்ளை இறந்தான்’னு அன்னைக்குக் குத்தம் சொன்னார்.

ஆனா, ஏழாயிரம் பிள்ளைகளைக் காப்பாத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிற இவரே இன்னைக்கு அலட்சியமா இருந்துட்டாரே! அவருக்கு ஒரு நியாயம்; எனக்கு ஒரு நியாயமா? நீங்களே சொல்லுங்க'' என்று கேள்வி எழுப்பிய சேதுமாதவனைத் தொடர்ந்த ப்ரியா, ''எப்பவும் பிள்ளைகளோட ஷூ, டிபன்பாக்ஸுன்னு காணாமப் போயிடும். நாங்கள்லாம் பிள்ளைங்கதான் காணடிச்சுடறாங்கனு நினைச்சுட்டு இருந்தோம். பிள்ளையே விழுந்ததுக்கு அப்புறம்தான் தெரியுது, அதெல்லாம் அந்த ஓட்டை வழியா விழுந்துருக்குனு. ஷூ, டிபன் பாக்ஸ் போனா வாங்கிக்கலாம். எங்க ஸ்ருதியை எங்களுக்கு யார் திருப்பித் தருவாங்க?'' என்று தேம்பியபடியே தொடர்ந்தார் ப்ரியா.

''மெயின் ரோட்டுல பஸ் வந்து பிள்ளைகளை இறக்கிவிடும். அங்கேர்ந்து அவளைக் கூட்டிட்டு வீட்டுக்கு வர்றதுக்கு வழக்கம்போலக் காத்திருந்தேன். பஸ் எங்களைக் கடந்து 200 அடி போய் யூ-டர்ன் எடுத்துத் திரும்பி வந்து நிற்கும். அப்படிக் கடக்கும்போது பிள்ளைகள் எங்களுக்குக் கை ஆட்டுவாங்க. அப்படி அன்னைக்கும் என்னைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே கையாட்டினா ஸ்ருதி. அதுதாங்க அவளைக் கடைசியா உயிரோட பார்த்தது. யூ-டர்ன் எடுத்துத் திரும்பி வர்றதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. யாருக்கும் வரக் கூடாது இந்த மாதிரி சாவு... நாங்க இத்தனை துக்கத்துல இருக்கும்போது, வீட்டுக்கு யாரோ மூணு பேர் வந்து ஸ்கூல் பேரை பத்திரிகைகாரங்ககிட்ட சொல்லாதீங்க’னு மிரட்டினாங்க. கூடியிருந்த கூட்டமே அவங்களைத் துரத்தி அனுப்பிடுச்சு'' என்றார்.

''எங்களுக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்கக் கூடாதுங்க. செத்தும் கொடுத்த சீதக்காதி மாதிரி என் பொண்ணு தன் உயிரைக் குடுத்து இந்த நாட்டுக்கே ஒரு பாடம் சொல்லிக்குடுத்துட்டுப் போயிருக்கா. இப்பப் பாருங்க அங்கங்க ஸ்கூல் பஸ்ஸை எல்லாம் செக் பண்றாங்களாம். பல புள்ளைங்களோட உயிரைக் காப்பாத்த என் பொண்ணு உயிர் குடுத்துருக்கா. இனி, ஒரு புள்ளைக்கு இந்த நிலைமை வரக் கூடாதுங்க'' என்கிறார் சேதுமாதவன்.

ஸ்ருதியின் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது வீட்டுக்குள் பரவி இருந்த துக்கத்தின் இருள் வெளியேயும் பரவி இருந்தது.

Saturday, August 04, 2012

டீச்சர்களுக்கும் டிரஸ்கோட்


மீபத்தில் கல்வித் துறையின் அறிக்கை ஒன்று கவனம் ஈர்த்தது. அதில் 'ஆசிரியர்கள் - ஆசிரியைகள் கண்ணியக் குறைவாகவும், மாணவ-மாணவிகள் இடையே ஏற்றத்தாழ்வையும், மனச் சலனத்தையும், தாழ்வுமனப்பான்மையையும், மரியாதைக் குறைவையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் உடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், குருவன்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கணித ஆசிரியை முத்துச்செல்விக்கு ஒரு மெமோ அளிக்கப்பட்டு இருக்கிறது. மெமோவுக்குக் காரணம்? பள்ளிக்கு அவர் சுடிதார் அணிந்துவந்தது. என்ன தொடர்பு இவை இரண்டுக்கும்? 

 மெமோ பெற்ற பிறகும் விடாமல் சுடிதார் அணிந்து பள்ளிக்குச் செல்லும் முத்துச்செல்வியைச் சந்தித்தேன். ''எங்கள் பள்ளிக்குக் கூடுதல் உதவிக் கல்வி அதிகாரி வந்தபோது சுடிதார் அணிந்திருந்தஎன்னிடம், 'இது என்ன கோலம்? இனிமேல் சேலையில்தான் வர வேண்டும்’ என்றார். அப்படியான அரசு ஆணை எதுவும் இல்லை என்பதால், நான் அவர் ஆணையின்படி செயல்படவில்லை. ஆனால், இதை மையமாகவைத்து என்னைப் பழிவாங்குகிறார்கள். அந்த மெமோவில், '5, 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுத்தல் தெரியவில்லை என்பதாலும், நீங்கள் சுடிதார் அணிந்து வருவதாலும் உங்கள் மேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று கேட்டிருக்கிறார்கள். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுத்தல் தெரியவில்லை. ஆனால், எட்டாம் வகுப்புக் கணித ஆசிரியருக்கு எந்த மெமோவும் அளிக்கப்படவில்லை. நான் இந்தப் பள்ளியில் சேர்ந்தே ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்கு முன் மாணவர்களுக்கு கணிதம் கற்பித்த ஆசிரியர்களும் அதே பள்ளியில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கும் மெமோ தரப்படவில்லை. என்னிடம் மட்டுமே விளக்கம் கேட்டிருப்பது, நான் சுடிதார் அணிந்து வருவதற்காகப் பழிவாங்கும் செயல்தானே? மெமோவில் முக்கால்வாசி உடைபற்றியும் இரண்டே இரண்டு வரிகள் மாணவர்களுக்கு வகுத்தல் தெரியாததுகுறித்தும் வருகின்றன. ஆண் ஆசிரியர்கள் முன்பெல்லாம் வேட்டிதான் அணிந்து வந்தார்கள். காலப்போக்கில் அவர்கள் பேன்ட்-ஷர்ட்டுக்கு மாறிவிடவில்லையா? எங்களை மட்டும் இன்னமும் சேலை கட்டச் சொல்லி நிர்பந்திப்பது என்ன நியாயம்? மேல்நிலை வகுப்பு மாணவிகளுக்குச் சீருடையாக முன்பு பாவாடை- தாவணி இருந்தது. ஆனால், கண்ணியமான உடை என்பதாலேயே இப்போது சுடிதாரைச் சீருடையாக்கி இருக்கிறது அரசு. மாணவிகளுக்குக் கண்ணியமாக இருக்கும் ஆடை, ஆசிரியைகளுக்குப் பொருந்தாதா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சுடிதார்தானே அணிகிறார்கள். என்னிடம் கேள்வி எழுப்பும் அதிகாரிகள் அவர்களிடம் கேள்வி எழுப்ப முடியுமா?'' என்று கேட்கிறார் முத்துச்செல்வி.

கல்வித் துறையின் கட்டாயத்தை விடுவோம். சேலை உடுத்துவது ஆசிரியைகளுக்கு ஏன் அவஸ்தையாக இருக்கிறது? இது தொடர்பாக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சிலர் நம்மிடம் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

''அரசின் அறிக்கையில் 'மனச் சலனம்’ என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. எந்த ஆடை மனச் சலனத்தை ஏற்படுத்தும் என்பது வகுப்புகளுக்குச் செல்லும் எங்களுக்குத்தானே தெரியும்? இதைச் சொல்லவே சங்கடமாக இருக்கிறது... ஆனால், சொல்லியாக வேண்டிய அவசியமும் இருக்கிறது. சேலை கட்டி நிற்பதால் வகுப்பறையில் நாங்கள் படும் அவஸ்தையை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. என் சக ஆசிரியை ஒருவர் திரும்பி நின்று போர்டில் எழுதிக்கொண்டு இருந்தபோது, மாணவன் ஒருவன் செல்போனில் அவரைப் படம் பிடித்துவிட்டான். அந்தப் படம் இணையத்திலும் பரவிவிட்டது. மன உளைச்சலில் அவர் அந்தப் பள்ளியைவிட்டே விலகிவிட்டார். நானும் பல சமயங்களில் அந்த அவஸ்தையை எதிர்கொள்ள நேர்கிறது. இதனாலேயே பாடம் நடத்துவதில் இருந்து கவனம் விலகி, ஆடை கண்ணியத்தைக் காப்பதிலேயே கவனமாக இருக்க வேண்டியதாக இருக்கிறது!'' என்கிறார் ஓர் ஆசிரியை.

கவிஞர் செல்மா பிரியதர்ஷனும் ஆசிரியைகளின் ஆதங்கத்துக்கு ஆதரவாக, ''நான் பத்து ஆண்டுகளாகக் கிராமப்புற அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன். என் மனைவி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். வகுப்பறை யில் பதின்பருவ மாணவர்கள் முன்னால், சேலை அணிந்து கரும்பலகையைப் பயன்படுத்துவதில் உள்ள அசௌகரியங்களை அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். சேலையைவிட சுடிதார்தான் பாதுகாப்பானது என்று கருதும் ஆசிரியைகள் பலர் உடைக் கட்டுப்பாடு காரணமாகவே சேலை அணிந்துவருகின்றனர். ஆசிரியர்கள் எளிமையாக, கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்கிற ஆலோசனை வரவேற்கத்தக்கதே. ஆனால், எந்தப் பணியிலும் தங்கள் பணிச்சூழலுக்கு ஏற்றவாறு உடையைத் தேர்ந்தெடுத்து அணியும் ஜனநாயக உரிமை இருக்கிறதுதானே!'' என்று கருத்துத் தெரிவிக்கிறார்.

பெண்களுக்கு இந்தப் பிரச்னை என்றால், ஆண்களுக்கோ விநோதமான சிக்கல். ''நான் ஒரு முறை வேட்டி அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்றேன். அப்போது என்னை அழைத்து, 'தமிழாசிரியர்தான் வேட்டி அணிந்து வர வேண்டும். நீங்கள் இனிமேல் இப்படி வரக் கூடாது’ என்றார் தலைமை ஆசிரியர். இதை நான் எங்கு சென்று புகாராகப் பதிவது?'' என்கிறார் அந்த ஆசிரியர்.

சமூகச் செயற்பாட்டாளராகவும் இருக்கும் ஆசிரியை ஒருவர், ''அரசுக்கு எதிராக ஏதாவது பேசினால் வேலைக்கு ஆபத்து என்ற அச்சத்தினாலேயே பலர் வாய் மூடி இருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரத்துக்குக் கொஞ்சமும் இடம் இல்லை. அடிமைகள்போல் இருக்கும் எங்களை மேலும் நசுக்கும் இந்த அறிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாங்கள் அணியும் உடைகளை அரசு தீர்மானிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நவீன வன்முறையின் மூலம் நினைத்ததைச் சாதிக்க நினைக்கிறது அரசு. ஆசிரியர்களுக்கும் சமூகப் பொறுப்பு உணர்வு இருக்கிறது. மாணவர்கள் மத்தியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எதை உடுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தும் அளவுக்கு நாங்கள் அறிவு மழுங்கிக்கிடப்பவர்கள் அல்ல. பொதுவான அறிக்கையாக இருந்தாலும், மறைமுகமாகப் பெண்களை அச்சுறுத்தும் இந்த ஆணாதிக்க அறிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.

கரும்பலகையில் எழுதும்போது கவனம் முழுவதும் முதுகு தெரிகிறதா... இடுப்புப் பகுதி வெளியே தெரியாமல் இருக்கிறதா என்பதிலேயே இருந்தால், பாடம் எப்படி ஒழுங்காக எடுக்க முடியும்? ஒரு சாக்பீஸ் கீழே விழுந்தால்கூட உடனே குனிந்து எடுக்கத் தயக்கமாக இருக்கும். இப்படிப்பட்ட சேலை தேவைதானா என்பது ஆசிரியைகளின் கேள்வி. இரு சக்கர வாகனத்தை ஓட்ட, பேருந்து பிடிக்க என்று எல்லாவற்றுக்கும் பொருத்தமான உடை சுடிதார்தான். இதே தமிழ்நாட்டில்தான் கல்லூரிகளில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பணிக்கு வருகிறார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் மட்டும் சுடிதார் அணிய ஏன் தடை?  ஆசிரியர் களின் உடைகுறித்துக் கவலைப்பட்டு கலாசாரக் காவலர் அவதாரம் எடுக்கும் அரசுக்கு, பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிவறைகள்கூட இல்லாமல் பெண்கள் படும் அவஸ்தைகள் கண் ணுக்குத் தெரியவில்லையா? சிறுநீர் கழிக்கக்கூட புதர் மறைவையும் திறந்தவெளிக் கழிப்பிடங்களையும் பெண்கள் நாடும் அவல நிலைகுறித்து என்றேனும் இதுபோலக் கவலைப்பட்டு இருக்கிறதா?

''ஆசிரியர்கள் டிப்-டாப்பாக இருக்கக் கூடாது!''
ந்த விவகாரம் தொடர்பாக அரசுத் தரப்பின் விளக்கத்தை அறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவபதியைத் தொடர்புகொண்டபோது, ''அந்த அறிக்கை குழந்தைகளுக்கு... மாணவர்களுக்குத்தான். நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டு கேள்வி கேட்குறீங்க!'' என்று பதில் அளித்து அதிரவைத்தார். உடனே, அருகில் இருந்த கல்வித் துறை இயக்குநர் மணியிடம் முழு விவரம் கேட்டுத் தெரிந்துகொண்டவர், மணியிடமே அலைபேசியைத் தந்தார். ''அது ஒரு பொதுவான அறிக்கை. ஒரு நாளிதழில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஓர் ஆசிரியரின் படம் வந்தது. அந்தப் படத்தில் அவர் சினிமா ஹீரோபோல டிப்-டாப்பாக இருந்தார். ஓர் ஆசிரியர் அப்படி எல்லாம் இருக்கக் கூடாது. அதனால்தான் இப்படி ஓர் அறிக்கை வெளியிட நேர்ந்தது'' என்றவர், மீண்டும் அமைச்சரிடம் அலைபேசியைத் தந்தார். ''நாகரிகமான முறையில் டிரெஸ் பண்றவங்களுக்கு எதுக்குக் கோபம் வரணும்? அந்த அறிக்கை அதிருப்தியை உண்டாக்கி இருக்குனு சொன்னவங்கள்லாம் நாகரிகமா டிரெஸ் பண்றவங்க கிடையாதுபோல இருக்கு!'' என்றவர், பதில் கேள்வியன்று கேட்டார். ''ஒரு டீச்சர் மாணவனைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங் களே? இது மாதிரியெல்லாம் நடக்குதா இல்லையா? இப்படி ஒழுக்கம் இல்லாதவங்களா இல்லாம, ஒரு ரோல் மாடலா இருக்கணும்னுதான் இப்படி ஓர் அறிக்கை. இதுல கோபப்பட எதுவும் இல்லை!'' என்று முடித்துக்கொண்டார்.

Thursday, July 26, 2012

அழிபடும் தடயங்கள்


நீயற்ற பொழுதுகள்
வெறுமையாய் கழிகின்றன
என் ஏக்கத்தின்
தீராத பெருமூச்சு
புயலாகிச் சீறுகிறது கடற்பரப்பில்
பெருமூச்சோ சிறுமூச்சோ
என் சுவாசக் காற்றல்லவா அது
ஆனந்தமாய் உள்ளிழுத்துக்கொள்
தெறிக்கும் நீர்த்திவலைகளில்
என் தொடுகையை உணர்வாயா அன்பே
என் கண்ணீர் கரிக்கும உப்புநீரை
சுவைத்துப் பார்
பாதம் தொடும் அலைகளில்
முத்தங்களை அனுப்புகிறேன்
பெற்றுக்கொண்டதுபோக
மிச்சமிருக்கும் முத்தங்களால்
காதலர்களின் கரையோர காலடித்தடங்களை அழிக்கிறேன்
நாம் கைகோர்த்து நடக்கும் நாள்வரை
காதலரின் தடயங்களை அழித்துக்கொண்டேயிருப்பேன்
அவர்களிடத்தில் இரக்கம் கொள்ளாதே
கவனம் அன்பே 
என்றேனும்
காதலர்கள் வந்துபோனதன்
அடையாளமாய் 
அழிபடாத காலடித்தடங்கள்
தென்படக்கூடும்
அன்றைக்கு
நான் மட்டும் எங்கோ
கரை ஒதுங்கி இருப்பேன்Wednesday, July 25, 2012

திருநங்கைக்கு மறுக்கப்படும் சொத்துரிமை


பெண்களுக்கான சொத்துரிமையே மிகத் தாமதமாகக் கிடைத்த நாட்டில், திருநங்கைகளுக்கான சொத்துரிமை மட்டும் அத்தனை எளிதில் கிடைத்துவிடுமா? அதற்கான போராட்டத்தில்தான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கிறார் திருநங்கை ஸ்வேதா. 
பிரச்னை என்னவாம்?
சென்னை ராயபுரம் காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை ஸ்வேதா. தனது பாலினம் குறித்து தெரிய ஆரம்பித்தவுடன் மும்பைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறினார். சென்னை திரும்பியவர், திருநங்கை களுக்காகச் செயல்படும் 'சகோதரன்’ அமைப்பில் ஊழியராகப் பணியாற்றுகிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டில்தான் தன் தாயைச் சந்தித் தார். முதலில் தயங்கிய சொந்தங்கள், இப்போது இவரைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டார்கள். அதன் பிறகு நடந்ததை ஸ்வேதாவே சொல்கிறார்.
''என் மாத வருமானம் 5,000 ரூபாய். நான் தங்கி இருந்த வீட்டுக்கு வாடகையே 3,000 ரூபாய். அதனால் போக்குவரத்துச் செலவுக்கும் சாப் பாட்டுக்கும் பணம் போதவில்லை. அதனால் அம்மா வுக்குச் சொந்தமான ஒரு வீட்டில் என்னை குடியிருக்கச் சொன் னார்கள். அங்கேதான் வந்தது சிக்கல்.
அந்த வீட்டில் இரண்டு தளங்கள். ஒன்று என் அம்மாவுக்குச் சொந்தமானது, இன்னொன்றில் என் சித்தி இருக்கிறார். என் அம்மா 10 வருடங்களாக அங்கு போகவே இல்லை. அந்த வீட்டை லீஸுக்குக் கொடுத்துவிட்டு போரூரில் வேறு ஒரு வீட்டில் இருக்கிறார்கள். லீஸுக்கு இருந்தவர்களைக் காலி பண்ணச் சொல்லிவிட்டு, அந்த வீட்டில் தன்னுடைய மகளைக் குடி வைத்திருக்கிறார் சித்தி. எனக்காக அந்த வீட்டை அம்மா கேட்ட பிறகும், 'தர மாட்டேன்’ என்று சித்தி கூறியதுதான் பிரச்னைக்குக் காரணம்'' என்ற வரைத் தொடர்ந்து பேசினார் ஸ்வேதாவின் தாய் சுந்தரி.
''நான் குடி வெச்சிருந்தவங்களை என் தங்கச்சி சரளாவும் தங்கச்சி வீட்டுக்காரர் ஹரிகிருஷ்ணனும் சேர்ந்து வெளியேத்திட்டு, அவங்க பொண்ணைக் கொண்டுவந்து குடிவெச்சிட்டாங்க. அதுவே தப்பு. ஸ்வேதா வீடு இல்லாமக் கஷ்டப்படவே, நான் அந்த வீட்டைக் கேட்டேன். தர மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டாங்க. அவங்களுக்கு லோக்கல் ரவுடிகள், அரசியல்வாதிகள் சப்போர்ட் இருக்கு. அதனால் ஆள் வெச்சு மிரட்டுறாங்க. ஸ்வேதாவையும் மிரட்டினாங்க. நாங்க போலீஸுக்குப் போனோம். ராயபுரம் ஏ.சி. முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்துச்சு. லீஸ் பணம் 90,000 ரூபாயும் இதுவரைக்கும் அவங்க கட்டின வீட்டு வரிக்கும் சேர்த்து 1,20,000 ரூபாயை ஸ்வேதா கட்டினா... வீட்டைத் தர்றதா முடிவாச்சு'' என்கிறார் சுந்தரி.
அதன் பிறகும் விவகாரம் கமிஷனர் அலுவலகம் வரை வளர்ந்தது எப்படி?
பேசிய பணத்துடன் போயிருக்கிறார் ஸ்வேதா. அப்போது சித்தி சரளா, வீட்டை இடித்துத் தருவதாகவும் அங்கேயே புது வீடு கட்டிக்கொள்ளுமாறும் சொல்லவும் மீண்டும் பிரச்னை.
''நான் திருநங்கை என்பதால்தான் அப்படிச் சொல்கிறார். 'நான் புள்ளை பெத்துருக்கேன். உன்னைப்போல இல்லை. என் பொண்ணு வாழ்ந்த வீட்டில் உன்னை வாழவிட மாட்டேன். வீட்டை இடிச்சுத் தர்றேன். வேணும்னா புதுசா கட்டிக்கோ’ என்கிறார்கள். பணத்தையும் வாங்கிக்கொண்டு, வீட்டையும் இடித்து மண்ணாக்கித் தந்தால் மறுபடியும் வீடு கட்ட பணத்துக்கு எங்கே போவேன்? என் சொந்த வீட்டில் வாழ்வதற்கு நான் எத்தனை கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. என் சொந்தக்காரர்களே இப்படி என்றால், சமுதாயத்தில் மற்றவர்கள் என்னை எப்படி நடத்துவார்கள்?'' என்றார் ஸ்வேதா.
சென்னை மாநகரக் காவல் துறை ஆணையரின் உத்தரவின்பேரில் மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சரளா, ''வீட்டின் நடுவில் கோடு போட்டுப் பிரித்து ஒரு பகுதியை இடித்துத்தான் தருவேன். இப்போது ஒரே படிக்கட்டின் வழியாகத்தான் இரண்டு வீடுகளுக்கும் பாதை இருக்கிறது. ஸ்வேதா மாதிரி திருநங்கையும் நாங் களும் ஒரே படிக்கட்டை எப்படிப் பயன்படுத்துவது? அது எனக்குக் கேவலம்'' என்று கறாராய்ச் சொல்கிறார்.
ஸ்வேதாவின் முடிவு என்ன?
''வழக்குப்  போடும் முடிவில் இருக்கிறேன். ஆனாலும் அதற்கு வாய்ப்பு இல்லாமல் சித்தி எனக்கு வீட்டைக் கொடுத்துவிடுவார் என்று நம்புகிறேன். என்ன இருந்தாலும் அவர் என் ரத்த சொந்தம்தானே'' என்கிறார் ஸ்வேதா.
ரத்த பாசம் ஜெயிக்குமா என்பதைப் பார்க்கலாம்.

படங்கள்: ஆ.முத்துக்குமார், ச.இரா.ஸ்ரீதர்

Tuesday, July 24, 2012

கவிதைகள் செழித்து வளர்ந்த
அடர்வனத்தில் 
சொற்கள் கிளைகளாயின
எழுத்துக்கள் இலைகளாகின
படிமங்கள் மலர்களாகவும்
வடிவங்கள் கனிகளாகவும்...

எவ்வளவு தேடியும்
தென்படவில்லை மொழிமட்டும்

களைப்புடன்
ஒரு கவியடியில் அமர்ந்தேன்
முகில் கருநிறமாதல்
மொழிக்கான அறிகுறியென்றது
உச்சியிலிருந்த சொல்லொன்று

உட்கூறுகளைக் காண விழைந்து
ஆயுதங்கொண்டு குறுக்காகப் பிளந்தேன்
அக்கவிதையை

நிலத்துடனான தொடர்பறுபட்டுக்
துண்டாகி வீழ்ந்தது கவி
மண்ணை ஆழத்தோண்டி
உற்று நோக்கினேன்.
துடித்துக்கொண்டிருந்தது வேர்
மொழியருந்தும் தாகத்துடன்
கவிதையின் உணர்வுகளாய்..

Wednesday, July 18, 2012

குடும்ப வன்முறை...குமுறும் பெண்மை

படங்கள் : ஆ.வின்செண்ட் பால்

மாலினிக்கு 20 வயது. திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் கர்ப்பிணி ஆனாள். பேறுகாலக் கவனம் செலுத்த வேண்டிய கணவனோ இன்னொரு பெண்ணைவீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கினார். கர்ப்பக் காலத்தில் சத்தான காய்கறிகள், உணவு வகை களைச் சாப்பிடவேண்டிய மாலினிக்கு, ஒரு டம்ளர் பால்கூடத் தரப்படவில்லை. செலவுக்குப் பணமும் தராமல் தேவைகளையும் கவனிக்கவில்லை. மாலினியின் நிலைமை என்ன ஆகும்?  
 வேலைக்குச் செல்லும் கீதா பகல் முழுக்க அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்த பின் ஓய்வைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியாது. வீட்டு வேலைகள் மலையெனக் குவிந்துகிடக்கும். கணவர் வருவதற்குள் வீட்டைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் கன்னத்தில் பொளேரென விழும் அறையில் தொடங்கி, சுவரில் தலையை மோதி உடைக்கும் அளவுக்குக் கொடுமை இருக்கும். கீதாவுக்கு எப்போதுதான் விடிவுக்காலம்?
மிதுனாவின் கணவன் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு, வீட்டாரின் நிர்பந்தத்துக்காக மிதுனாவைக் கட்டிக்கொண்டார். இதனால், மிதுனாவிடம் பட்டும்படாமலும்தான் நடந்துகொள்வார். ஆசையோ, பாசமோ, நேசமோ காட்டாமல், 'என்ன’ என்றால் 'என்ன’ என்பதோடு உரையாடல் நின்றுபோகும். கணவனுக்கு உடல் தேவை அழுத்தும் நள்ளிரவுகளில் மட்டும் சில நிமிடங்கள் மிதுனா விட்டம் நோக்கியாக வேண்டும். ஒரு வசவு, ஓர் அதட்டல்கூட இல்லாத அந்த வாழ்க்கையின் கொடூரத்தை மிதுனாவால் மட்டுமே உணர முடியும். மிதுனாவின் வாழ்க்கை?
நான்கு சுவர்களுக்குள் இப்படிப் பெண்களுக்கு எதிராகத் தினம் தினம் அரங்கேறிக்கொண்டு இருக்கும் வன்முறைக்குத் தீர்வுதான் என்ன?  
சராசரியாக வாழும் பெண்களுக்கு மட்டும்தான் இந்த நிலை என்றில்லை. சமூகத்தில் முற்போக்கான பெண்களுக்கு உதாரணங்களாகச் சொல்லப்படுவோரும்கூட குடும்ப வன்முறையில் இருந்து தப்பிக்க முடிவது இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஆங்கில எழுத்தாளர் மீனா கந்தசாமி. தான் காதலித்து மணந்த கணவன் சார்லஸ் அன்றனி என்கிற தர்மராஜா தன்னை அடித்துத் துன்புறுத்தத் தொடங்கியபோது, அதில் இருந்து தப்பிக்க வழியின்றித் தவித்திருக்கிறார் மீனா. ஒருகட்டத்தில் யாருடனும் பேசக் கூடாது, தொடர்புகொள்ளக் கூடாது என்று கட்டுப்படுத்தப்பட்டதோடு, அவருடைய மின்னஞ்சல் தொடர்புகளை அழித்தல், ஃபேஸ்புக் கணக்கை முடக்குதல், செல்போனில் உள்ள அனைத்து எண்களையும் அழித்தல் என்று அடையாள வன்முறையும் தொடங்கி இருக்கிறது. மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார் மீனா கந்தசாமி. ஒரு கட்டத்தில் தன் கணவருக்கு ஏற்கெனவே திருமணமான செய்தியை அறிந்தபோது, அவரை விட்டு வந்திருக்கிறார் மீனா கந்தசாமி.
இப்படி எல்லாத் தரப்புப் பெண் களையும் விட்டுவைக்காத இந்த குடும்ப வன்முறைக்கு என்ன காரணம்?
''சமூக மதிப்பீடுகளில் இருந்து தான் குடும்ப வன்முறை தோன்றுகிறது. ஆண்கள் பெண்களைவிட அதிக விஷயங்கள் தெரிந்தவர்கள் என்றும், பலசாலிகள் என்றும் கருத்து இருக்கிறது. பெண்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி, அவர்களை அடித்துத் துன்புறுத்தி அவர் களை நல்வழிப்படுத்தும் உரிமையும் கடமையும் ஆண்களுக்கு இருப்ப தாக இந்தச் சமூகம் நம்புகிறது. மனைவியை அடிக்கும் எந்தக் கணவனும் அதைத் தவறு என்று நினைப்பது இல்லை. 'என் மனைவி தவறு செய்கிறாள். நான் அவளைத் திருத்துகிறேன்’ என்றே அடிக்கும் ஒவ்வொரு கணவனும் நினைக் கிறான். வன்முறையின் கொடூரம் என்ன என்றால், அது உரையாட லைத் தடை செய்கிறது. பெண் களுக்குள் நம்பிக்கை இன்மையை விதைக்கிறது. வீட்டில் வளர்க்கும் விலங்குகளான நாய் அல்லது பூனைக்கு ஒப்பானவளாக ஒரு பெண்ணைத் தரமிறக்குகிறது'' என்கிறார் மீனா கந்தசாமி.
பெரும்பாலான பெண்கள் வீட்டுக்குள் நடக்கும் வன்முறையை வெளியில் சொல்வது இல்லை. அது ஒரு சாதாரண விஷயம் என்றே சிறு வயது முதல் போதிக்கப்பட்டு இருக்கிறது. கணவர் மீதோ, கணவர் வீட்டார் மீதோ காவல் துறையில் புகார் அளித்தால், அது கௌரவக் குறைச்சலாகிவிடும் என்று பெண்கள் கருதுவதே பல ஆண்களின் கேடயம். அப்படியானால், பாதிக்கப்படும் பெண்களுக்கு என்னதான் நிவாரணம்?
'விவகாரத்து வேண்டாம்; ஆனால், இந்தக் கொடுமைகளை என்னால் சகித்துக்கொள்ள முடியாது’ எனும் பெண்களுக்கானதே குடும்ப வன் முறைத் தடுப்புச் சட்டம். இந்தச் சட்டத்தின்படி காவல் துறைக்குச் செல்ல வேண்டியது இல்லை. இந்தச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தால், மாவட்டம்தோறும் உள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் முறையிடலாம். பெரும்பாலும் பெண்கள்தான் அந்தப் பொறுப்பில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை அழைத்து கவுன்சிலிங் செய்வதுதான் அவர்களின் முதல் பணி. இந்தச் சட்டத்தின் கீழ் கணவர் மீது வழக்கு தொடுக்கலாம். வழக்கறிஞர் வைத்து வாதாட வசதியற்ற பெண்களுக்கு இலவச வழக்கறிஞர் சேவை யும் அளிக்கப்படுகிறது.
''வன்கொடுமைக்கு ஆளாக்கும் ஒரு மனிதனோடு வாழ இந்தச் சட்டம் நிர்பந்திக்கிறதா? ஏன் அந்தப் பெண் கணவனை விவாகரத்து செய்யவிடாமல் குடும்பத்துக்குள்ளேயே இந்தச் சட்டம் சமரசம் செய்துவைக்க முயல்கிறது?'' என்கிற கேள்வியோடு வழக்கறிஞர் அஜிதாவை அணுகியபோது, ''பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பணியிடத்திலோ, பொது இடத்திலோ நடந்தால் அவற்றுக்கான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், வீட்டுக்குள் நடப்பவற்றுக்கு மட்டுமே அப்படியானதொரு சட்டம் இல்லாமல் இருந்தது. அதனால், கேட்பார் யாரும் அற்ற நிலை இருந்தது. அதை இந்தச் சட்டம் மாற்றி அமைத்துஉள்ளது. அவ்வளவு எளிதாக குடும்ப பந்தத்தைவிட்டு நம் சகோதரிகள் பிரிந்து வர விரும்புவது இல்லை. சச்சரவுகளுக்குச் சமரசம் கண்டு குடும்பத்துக்குள்ளேயே வாழ விரும்புபவர்களுக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பு வழங்குகிறது'' என்றார்.
இந்தச் சட்டத்தின்படி புகார் அளிக்கப்பட்டால் யாரையும் கைதுசெய்ய சட்டத்தில் இடம் இல்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தால், எப்படி எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்படுகிறதோ,  அதைப் போலவே இந்தச் சட்டத்தின்படி புகார் அளித்தால் டி.ஐ.ஆர் (Domestic Incident Report) பதிவுசெய்யப்படும். அந்தப் புகாரின் அடிப்படையில், மாவட் டப் பாதுகாப்பு அதிகாரி புகாருக்கு உள்ளான நபரை அழைத்துப் பேசுவார்.
''இந்தச் சட்டம், 'புகுந்த வீட்டார்’ என்ப தற்குப் பதிலாக 'பகிர்ந்துகொள்ளப்பட்ட மண வீடு’ (Shared Householders) என்று அழகான பதத்தைக் கையாள்கிறது'' என்கிறார் அஜிதா. இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண்ணை ஓர் ஆணோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ வீட்டில் இருந்து வெளியேற்ற முடியாது. திருமண வாழ்வில் அவளுக்குக் கணவன் வீட்டில் வாழ முழு உரிமை உண்டு. இதற்கு 'குடியிருப்பு உத்தரவு’ என்று ஓர் உத்தரவைப் பாதுகாப்பு அதிகாரி பிறப்பிப்பார். அவளுக்கு வேண்டிய பாதுகாப்பை வழங்க வேண்டியது வீட்டா ரின் கடமை. இதற்கான பாதுகாப்பு உத்தரவையும் தனியாகப் பாதுகாப்பு அதிகாரி பிறப்பிப்பார். இந்தப் பாதுகாப்பு உத்தரவை மீறினால் 20,000 அபராதமும்  ஓராண்டு சிறைத் தண்டனையும் உண்டு.
''கணவன் மீதோ, கணவன் வீட்டார் மீதோ புகார் அளித்தால் குடும்பம் சிதைந்துவிடும். வாழ்க்கை போய்விடும் என்று பல பெண்கள் அஞ்சுகிறார்கள். அப்படி பயப்படத் தேவை இல்லை. உண்மையில் குடும் பத்தில் நிகழும் சிக்கல்களைத் தீர்த்துவைத்து, வன்முறையில் இருந்து பெண்களைக் காக்கிறது இந்தச் சட்டம்'' என்று தைரியம் அளிக்கிறார் அஜிதா.
1098 என்ற தொலைபேசி எண்ணில் குடும்ப வன்முறை தொடர்பான புகாரை அளிக்கலாம். ''பெண்களிடமே இந்த எண்குறித்து போதிய விழிப்பு உணர்வு இல்லை. 'புள்ளிராஜா’ விளம்பரம் மூலம் எய்ட்ஸ் குறித்த விழிப்பு உணர்வைப் பரவலாக்கிய முயற்சிபோல, இந்தச் சட்டம் குறித்தும் அப்படியான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மகளிர் சட்ட உதவி மையச் செயலாளர் ஜான்சி.
இந்தச் சட்டம் குறித்த மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் ஜான்சி. ''திருமணமான பெண்கள் மட்டுமல்ல; பெற்றோரோடு வாழும் பெண்களும்கூட வீட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டால், புகார் அளிக்கலாம். பெண் காதலிப்பது பிடிக்காமல் தாங்கள் பார்த்த மாப்பிள்ளை யைத் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துவார்கள். அந்தப் பெண் மறுக்கும் பட்சத்தில் அறைக்குள் பூட்டிவைப்பது, அடித்துத் துன்புறுத்துவது, 'குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம்’ என்று எமோஷனல் பிளாக்மெயில் செய்வது போன்ற சித்ரவதைகளுக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் நிவாரணம் பெறலாம்'' என்று கூடுதல் தகவலுடன் முடிக்கிறார்.  
முகம் தெரியாத தோழி ஒருத்தி எழுதிய வலி மிகுந்த வரிகள் குடும்ப வன்முறையின் கோர முகத்தை உரத்துச் சொல்கின்றன...

'இன்று மலர்களைப் பெற்றேன். 
என் பிறந்த நாளுமல்ல... 
வேறெந்த விசேஷ நாளுமல்ல; 
எங்கள் முதல் வாக்குவாதம் நேற்றிரவு அரங்கேறியது. 
அவன் தன் தீ நாக்குகளால் என்னைப் பொசுக்கினான்; 
நான் அறிவேன் 
அவன் அதற்கு வருந்துகிறான் என்று
 இந்த மலர்களின் மூலம்.

இன்று மலர்களைப் பெற்றேன். 
எங்கள் மண நாளோ 
அல்லது 
வேறெந்த விசேஷ நாளுமோ அல்ல; 
நேற்றிரவு என் உடலைச் சுவரில் வீசி 
என் வலியைப் பிழிந்தான். 
நம்ப முடியாத ஒரு கொடூரக் கனவு போன்று இருந்தது. 
நான் அறிவேன் அவன் வருந்துகிறான்... 
இந்தப் பூக்கள் அவன் மனதைச் சொல்கின்றன;

இன்று மலர்களைப் பெற்றேன். 
இன்று அன்னையர் தினமோ 
அல்லது 
வேறெந்த விசேஷ நாளுமோ அல்ல; 
நேற்றிரவு அவன் கரங்கள் வன்மையாய் 
என்னை மீண்டும் தாக்கின 
முன்னெப்போதும் இல்லாதவகையில்... 
என்ன செய்வேன் அவனைப் பிரிந்து? 
பொருளாதாரமின்றி என் குழந்தைகளை 
எப்படிக் காப்பேன்?
நான் அஞ்சு கிறேன்... 
விலக எண்ணுகிறேன். 
ஆனால்... 
அவன் வருந்துகிறான்... 
நான் அறிவேன் 
இந்தப் பூக்கள்விடு தூது மூலம்.

இன்று மலர்களைப் பெற்றேன். 
இன்று விசேஷமான தினம். 
என் இறுதிச் சடங்குக்கான நாள். 
நேற்றிரவு அவன் கரங்களின் வன்முறையைத் தாங்காமல் 
என் உயிர் பிரிந்தது. 
நான் அவனைப் பிரியும் வலுவுள்ளவளாக இருந்திருந்தால்... 
இன்றைக்கு நான் மலர்களைப் பெற்றிருக்க மாட்டேன்!’

Sunday, July 15, 2012

மூன்று நிற வானவில்


தாம்பரம் செல்லும்  ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் பறந்துகொண்டு இருந்தன. கடலுக்குள் நீந்தும் ஒரு சிறிய மீனைப் போல என் ஸ்கூட்டி அந்தச் சாலையில் போய்க்கொண்டு இருந்தது. மனம் பரபரத்ததைப் போலவே என் வாகனமும் பரபரப்பாகச் சென்றுகொண்டு இருந்தது. முன்னால் செல்லும் வாகனங்களின் மிக அருகில் நான் சென்ற பின்னரும்கூட பிரேக் போட்டு வேகத்தைத் தடை செய்யப் பிடிக்கவில்லை. அப்படி ஓர் ஆர்வம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு முரளியைப் பார்க்கப்போகிறேன் என்பதே எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. இப்போது எப்படி இருப்பான் முரளி? என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. அவனுடைய அழகான முகம் கண் முன் வந்து நின்றது. என் வாகனத்தின் முன்னால் சென்ற வாகன அணிவகுப்பு எல்லாம் மறைந்து எங்கு பார்த்தாலும் முரளியின் பால் வடியும் குழந்தைப் பருவ முகமே தெரிந்தது. முரளி நல்ல அழகு. அவனை அழைத்துக்கொண்டு நடந்தால், சாலையில் எதிர்ப்படுபவர் எல்லோருமே அவனைக் 'குட்டிப் பையா’,  'செல்லம்’ என்று அவன் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சிவிட்டுத்தான் போவார்கள். சின்ன பிள்ளையான அவனோ எல்லோ ரிடமும் ஒட்டிக்கொள்வான். அவர்கள் ஒரு வார்த்தை பேசினால், நூறு வார்த்தைபேசு கிறவனாக இருந்தான். ஒவ்வொருவரிடம் இருந்தும் அவனைப் பிரித்தெடுத்துக் கூட்டி வருவதற்குள் உயிரே போகும்!
பத்தாம் வகுப்பு விடுமுறையின்போது ஊரில் உள்ள பெரியம்மா  வீட்டுக்குச் சென்றபோதுதான் முரளியை முதன்முதலாகப் பார்த்தேன். பெரியம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக் குழந்தை அவன். ''முரளிக் கண்ணா... நீ யாரு செல்லம்?'' என்று கேட்டால், அம்மாவையும் அப்பாவையும் ஏமாற்றக் கூடாது என்று ''அஸ்க்கு புஸ்க்கு... ஆராச்சும் ஒருத்தரைச் சொல்வேன்னுதான கேக்குறீங்க. நான் அம்மா - அப்பா செல்லம்!'' என்று பதில் சொன்ன முதல் நாளே, அவனை எனக்குப் பிடித்துவிட்டது. அங்கு இருந்த ஒரு மாதமும் அவனை என்னுடனேயே வைத்துக்கொண்டேன். அவனும் என்னிடம் நன்றாக ஒட்டிக்கொண்டு செல்லப்பிள்ளையாகிப்போனான். ''அக்கா... அக்கா'' என்று என்னைச் சுற்றிச் சுற்றி வந்தான்.
டவுனுக்கு சினிமாவுக்குப் போனாலோ, கடைக்குப் போனாலோ அல்லது எங்கும் போகாமல் இருந்தாலோகூட முரளி எனக்குத் தேவைப்பட்டான். அவனுடைய அழகான சுருள் சுருளான முடி நெற்றியில் மட்டும் கொஞ்சமாக வந்து விழும். அழகான பெரிய சிரிக்கும் கண்கள். அந்தக் கண்கள் 'பளிச்’ என்று இருக்கும். அந்தக் கண்களின் அழகுக்காகவே அவனைப் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். ''அது ஏன்க்கா எல்லாக் கடையிலயும் உப்பை மட்டும் வெளியே வெச்சிருக்காங்க?'' என்று படபடவெனக் கண்களை அடித்துக்கொண்டு அவன் கேட்பதே இதயத்தைக் கொள்ளை கொள்ளும். ''ஏன் வானம் ப்ளூ கலர்ல இருக்கு?'', ''ஏன் அந்த அண்ணன் உன்னைப் பார்த்து எப்பப் பாரு சிரிக்கிறான்?'', ''ஏன் நாம தினம் குளிக்கணும்?'', ''பூனை, நாயெல்லாம் யாரு குளிப்பாட்டுவாங்க?'' - இப்படி அவன் கேள்விகள் விரிந்துகொண்டே சென்றன. பல சமயம் எனக்குப் பதில் தெரியாத கேள்விகளாகக் கேட்டு என்னைத் திணறடித்தான்.
விடாது அவன் கேட்டுக்கொண்டு இருந்த கேள்விகளே அவனது புத்திசாலித்தனத்தை உணர்த்தின. அவன் வயதில் மற்ற குழந்தை களுக்குத் தெரியாத விஷயங்கள் அவனுக்குத் தெரிந்தன. அவனுக்கு நான் பாடம் கற்றுக் கொடுத்தேன். அவன் கற்றுக்கொண்ட வேகம் என்னை வியக்கவைத்தது. அந்த ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்த அன்று, ''அக்கா... நீங்க சொல்லிக் கொடுத்த தைத்தான் ஸ்கூல்ல சொல்லிக்கொடுக்குறாங்க. டீச்சர் போர்டுல எழுதுறதுக்கு முன்னாடியே நான் எழுதிட்டேன். 'யாரு சொல்லிக்கொடுத்தா?’னு டீச்சர் கேட் டாங்க. நான், 'எங்க அக்கா’னு சொன் னேனே!'' என்று என் கழுத்தைக் கட்டிக் கொண்டான். நான் அவனைத் தூக்கி முத்தமிட்டேன்.
மறுநாள் அவனுடைய அம்மாவும் அப்பாவும் என்னைத் தேடி வந்து நன்றி சொன்னார்கள். முரளியின் அம்மா சரிதா அக்காவும் எனக்கு நெருக்கமானாள். முரளியின் அப்பாவுக்கு மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கும் வேலை. அவர் கொண்டுவரும் பணம் வாய்க்கும் வயிற் றுக்கும் சரியாக இருந்தது. சரிதா அக்கா ரொம்ப அழகு. அவளுக்குத் திருமணம் ஆகி விட்டது என்று சொன்னால்  யாரும் நம்ப மாட்டார்கள்.
முரளிக்காகவே ஒவ்வொரு விடுமுறையின்போதும் பெரியம்மா வீட்டுக்குச் செல்வது எனக்கு வழக்கமாகி இருந்தது. முரளியை அழைத்துக்கொண்டு வெளியே செல்வது எனக்குப் பிடித்தமான ஒன்று. வெளியே செல்லும்போது அவன் என் கைகளைப் பிடித்துக்கொள்வான். ஒரு நொடிகூட விட மாட்டான். அவன் கைகளின் மென்மை என்னை வியக்கவைக்கும். குழந்தைகளுக்கே உரிய மென்மையும் மிருதுத்தன்மையும்கொண்ட அந்தக் கைகளைப் பற்றிக் கொள்வது எனக்கு விருப்பமானதாக இருந் தது. ஒவ்வோர் ஆண்டும் விடுமுறைக்குச் செல்லும்போதும் அவன் எவ்வளவு வளர்ந்திருக்கிறான் என்பதைப் பார்க்கும் ஆவலுடன் செல்வேன். அவன் கைகளின் மென்மை குறைந்திருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் அதே ஆவலுடன் கைகளைப் பற்றிப் பார்ப்பேன். ஆள்தான் வளர்ந்தானேயழிய, அவன் கரங்களில் குழந்தைமை பெருகிக்கொண்டே இருந்தது. வளர வளர முரளியின் கேள்விகள் அதிகரித்தன. அவனுடைய கேள்விகளுக்கு ஆசிரியர்களேகூடச் சில சமயம் உடனே பதில் சொல்ல முடியாமல் திணறுவார்களோ என்று தோன்றும்.
''முரளி... நீ என்னவாகப்போறே?'' என்று சரிதா அக்கா கேட்டபோது அவன் சட்டென்று சொன்னான்... ''பெரிய்ய்யவனாவேன்!''
''ஆகி..?''
''இப்பவே கேட்டா எப்புடிம்மா..? தெரியலையே!'' என்றான். சரிதா அக்கா விடாமல், ''டாக்டராவியா? எல்லாருக்கும் ஊசி போடலாம்'' என்றாள். ''தெரியாது!'' என்றான். எனக்குத் தெரிந்து சரிதா அக்கா விடாமல் அவனை ''டாக்டராவியா?'' என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். அவன் ஒருபோதும் ''சரி'' என்று சொன்னது இல்லை. அக்காவுக்கு அவனை டாக்டர்ஆக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
சரிதா அக்கா ஒருநாள் அவனை மடியில்வைத்துக் கொஞ்சிக்கொண்டு இருந்தபோது நான் போய் அவனை அழைத்தேன். அப்போதும் அக்கா ''டாக்டராவியா?'' என்று கேட்க, எப்போதும் ''தெரியாது'' என்று சொல்பவன் அன்றைக் குப் படாரென்று ''முடியாது'' என்றான். அக்காவின் முகம் மாறியது. ''அக்கா, அவன் புத்திசாலிக்கா! பெரிசா வருவான் பாருங்க. டாக்டராத்தான் வரணும்னு என்ன? அதெல்லாம் முரளி ஜம்முனு வந்துடுவான் பாருங்க'' என்றேன். ''ஆயிஷானு ஒரு கதை. அதுல வர்ற பொண்ணு... சின்ன பொண்ணு. அப்படி ஒரு அறிவு அவளுக்கு. ஸ்கூல்ல அவள் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாம டீச்சருங்க எல்லாரும் முழிப்பாங்க... அப்படி ஒரு புத்திசாலிப் பொண்ணு. அந்தப் பொண்ணு மாதிரிதான் இருக்கான் நம்ம முரளி!'' என்றேன். அக்காவுக்குப் பெருமை பிடிபடவில்லை.
முரளியின் மிடுக்குக்கும் அறிவுக்கும் அவன் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவான் என்றும் எனக்கு அவ்வப்போது தோன்றியது உண்டு. ஆனால், இத்தனை புத்திசாலிப் பையன் எதற்குக் கைகட்டி அரசாங்கத்துக்கு வேலை பார்க்க வேண்டும் என்று அந்த நினைவைப் புறந்தள்ளிவிடுவேன். ஓயாமல் கேள்வி கேட்கும், சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளும் அவனுடைய அறிவைப் பார்க் கையில், அவன் ஒருவேளை விஞ்ஞானி ஆவானோ என்று தோன்றியது. வழக்கறி ஞராக, அரசாங்க அதிகாரியாக, ஆசிரிய ராக என்று பலவாறாக அவனைக்கற்பனை செய்து பார்த்தாலும் எதிலும் அவனைப் பொருத்த முடியவில்லை.
வாகனத்தின் ஹாரன் சத்தம் நினைவுகளைக் கலைத்தது. பல்லாவரத்தை நெருங்கிவிட்டு இருந்தேன். பேருந்து நிலையத்தில் கூட்டம் நின்றுகொண்டு இருக்க... அதில் கண்களுக்குப் பட்ட இள வட்டப் பையன்களைப் பார்த்தேன். இவர் களில் யார் மாதிரி முரளி இப்போது இருக் கக்கூடும்? இப்போது அவனுக்குப் பதினாறு, பதினேழு வயது இருக்கும். எனக்கு அவனைப் பார்க்கும் ஆவல் அதிகமாகியது. என் வாகனத்தை அருகில் இருந்த ஒரு ஹோட்ட லில் நிறுத்திவிட்டு, காபி குடிக்க அமர்ந் தேன். முரளிக்கு நான் போடும் காபி என்றால் ரொம்பவே பிடிக்கும் என்பது நினைவுக்கு வந்தது.
சரிதா அக்காவிடம் இருந்து காலை பத்து மணிவாக்கில் போன் வந்தபோது சந்தோஷமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. நெடுநாளைக்குப் பிறகு பேசும் சந்தோஷம் அக்காவின் குரலில் தெரிந்தது. அக்காவின் கணவர் கடை வைத்திருந்தார். அதில் நஷ்டமாகி கந்துவட்டிக்குக் கடன் வாங்கி, இப்போது சாப்பாட்டுக்கே குடும்பம் கஷ்டப்படுவதைச் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. முரளி என்ன படிக் கிறான் என்று கேட்டேன். சரிதா அக்கா வின் குரல் கம்மியது. குற்றவுணர்வு தொனிக்கும் குரலில் சொன்னாள், ''அவனைப் படிக்கவைக்க முடியலை. வேலைக்குப் போறான்!'' என்றாள். நான் அதிர்ந்துபோனேன். என்னால் எதுவும் பேச முடியவில்லை. ''ஏன்க்கா?'' என்றேன். பலவீனமான, ஏமாற்றம் அடைந்த குரலுடன் நான் கேட்டது எனக்கே கேட்கவில்லை. ''வீட்டுக் கஷ்டம்தான். வேறென்ன? புள்ளைய வேலைக்குப் போகச் சொல்ல எனக்கும் விருப்பம் இல்லை. அவனை ஸ்கூலைவிட்டு நிப்பாட்டியாச்சு. நாலு காசு வருமேனு அவனை வேலைக்கு அனுப்பினோம். வேற வழியில்ல!'' என்றாள் தயக்கத்துடன்.  ''அக்கா... அவன்... அவன்... எப்படி இருக்க வேண்டிய ஆளு தெரியுமாக்கா? ஏன்க்கா?'' நான் விசும்பத் தொடங்கினேன். சரிதாக்கா எதுவும் பேசவில்லை. அவள் மூக்குறிஞ்சும் சத்தம் மட்டும் அவள் அழுதுகொண்டு இருக்கிறாள் என்று உணர்த்தியது. அவன் என்ன வேலை பார்க்கிறான் என்று கேட்டேன். 'கிடைச்ச வேலையைச் செய்வான். இப்போகூட அவனுக்காகத்தான் உன்னைக் கூப்பிட்டேன். முரளி அங்கேதான் மெட்ராஸுக்கு வந்திருக்கான். வந்த இடத்துல பணத்தை யாரோ பிக்பாக்கெட் அடிச்சுட்டாங்களாம். யாருகிட்ட கேட்குறதுனு அவனுக்குத் தெரியலை. எனக்கு போன் பண்ணினான். எனக்கு மெட்ராஸ்ல யாரைத் தெரியும்... உன்னைத் தவிர? அதான் உன் நம்பரை உங்க பெரியம்மாகிட்ட வாங்கி இப்போ பேசுறேன். அவனுக்குக் கையில ஒரு நூறோ எரநூறோ குடுக்க முடியுமா?'' அக்கா குரலில் நடுக்கமும் தயக்கமும் தெரிந்தன.
''சரிதாக்கா... நான் பார்த்துக்குறேன். அவன் நம்பர் குடுங்க!'' என்று எண்ணைக் குறித்துக்கொண்டேன்.
''அவனைப் படிக்கவைக்க முடியலைனு கஷ்டமா இருக்கு. அறிவான பையனை இப்படி வேலைக்கு அனுப்புற நெலமை வந்துடுச்சேனு கஷ்டப்பட்டோம். ஆனா, என்ன செய்யிறது? அவருக்கும் நடுவுல ஆக்சிடென்ட்ல கால்ல அடிபட்டு எக்கச்சக்க செலவாச்சு. அவருக்கு எஸ்.டீ.டி. பூத்துக்கு அப்ளிகேஷன் போட்டிருக்காங்க. இன்னும் வரலை. எப்படிப் பொழைக்க? அதனால, நான் ஊர்ல ஒரு ஜவுளிக் கடையில வேலை பார்க்குறேன்!''- அக்காவின் குரல் அடைத்துக்கொண்டது.
''ஜவுளிக் கடையிலயா?''- நான் அதிர்ச்சியுடன் கேட்டேன். நாளிதழ்களில் நான் பார்த்த செய்திகளும் பார்த்த சினிமாக்களும் நினைவுக்கு வந்து பதற்றமாகி, ''ஏன்க்கா அங்கெல்லாம் போறீங்க?'' என்றேன். அக்கா வெறுமையாகச் சிரித்தாள். ''முரளி அப்பாவுக்கு மருந்து மாத்திரை மட்டும் மாசம் மூவாயிரம் ஆகும். அதுக்காகத்தான். எப்படியாச்சும் அவரைச் சரிபண்ணி நல்ல நெலமைக்குக் கொண்டாந்துடணும். அதுக்காகத்தான் நானும் முரளியும்...'' - அவள் குரல் கம்மியது. அதில் தெரிந்த விரக்தியும் வெறுமையும் என்னைச் சுழற்றியடித்தன.
பெரியம்மா வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டதால், நான் பல ஆண்டுகளாக அவர்களைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. கடைசியாக முரளியை என் திருமணத்தில் வைத்துப் பார்த்ததுதான். குடும்பத்தோடு வந்திருந்தார்கள். மேடையில் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பின் முரளி என் அருகில் வந்து நின்றுகொண் டான். அப்போது வளர்ந்திருந்தான். என்னைப் பார்த்துச் சிரித்தான். ''அக்கா... புடைவையில சூப்பரா இருக்கீங்க!'' என்றான். நான் எனக்குக் கொடுக்கப்படும் பரிசுப் பொருட்களை அவனிடம் கொடுத்து பின்னால் வைக்கச் சொன்னேன். நெடுநேரம் கால்கடுக்க என்னோடு நின்று அந்த வேலையைச் செய்தான். ''மாப்பிள்ளை அழகா இருக்காரு!'' என்று எனக்கு மட்டும் கேட்குமாறு கிசுகிசுத்தான். சாப்பாட்டுப் பந்தியில் எங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டான். மண்டபத்தைக் காலி செய்துவிட்டு வீட்டுக்குப் போனோம். நான் என் தோழிகளுடன் சென்று அமர்ந்து சற்றே கதை பேசிக்கொண்டு இருந்துவிட்டு அப்படியே தூங்கிப்போனேன்.
கண் விழித்தபோது முரளியைக் காணவில்லை. கடற்கரைக்கு விளையாடப் போயிருக்கிறான் என்றார்கள். எட்டரை மணிக்குத்தான் நான் அவனைப் பார்த் தேன். கேட்டைத் திறந்துகொண்டு வீட்டுக் குள் வந்தவன் என்னை நோக்கி ஓடி வந்தான். அவனுக்கு மூச்சிரைத்தது. 'டொட்டடொய்ங்’ என்று வாயாலேயே மியூஸிக் போட்டுவிட்டு, கைகளை விரித்தான். புத்தம் புதிய பேனா அவன் கைகளில் மினுமினுத்தது.
''உங்களுக்குத்தான்க்கா... கல்யாணத்துக்கு கிஃப்ட்!'' என்றான். ''காலையில கொடுக்காம இப்ப வந்து குடுக்குறியேடா!'' என்றேன். ''பீச்சுக்குப் போற வழியில இதை வாங்கினேன். நாங்க காலையில சீக்கிரமே ஊருக்குப் போயிடுவோம். நீங்க இன்னிக்கு சீக்கிரம் ரூமுக்குள்ள போயி தூங்கிடுவீங்கல்ல. காலையில லேட்டாத்தானே எந்திரிப்பீங்க... அதுக்குள்ள நாங்க போயிடுவோம். அதான் இப்ப தரேன்!'' என்று அவன் சொல்ல... என் முகம் சிவந்தது.
வீட்டில் பெரியவர்கள் மத்தியில் அவன் விகல்பம் இல்லாமல் சொல்லிவிட... நான் நெளிந்தவாறே, ''பேனா அழகா இருக்கு... தேங்க்ஸ்!'' என்றேன். அவன் சிரித்தான். சிரிக்கும்போது முரளி இன்னும் அழகு. வளர வளர முரளி இன்னும் இன்னும் அழகாகிக்கொண்டே இருக்கிறான் என்று தோன்றியது. முன்னைவிட அவன் முகத் தில் அறிவுக் களை கூடியிருந்தது.
சரிதா அக்கா அவன் வகுப்பில் முதல் மாணவனாக வருவதாகக் கூறினாள். மாநில அளவில் நடந்த பொது அறிவு விநாடி வினா போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றதை, பாட்டு, நடனம் என்று ஒன்றையும் விடாமல் கலந்துகொண்டு அவன் பரிசு பெறுவதை என்னிடம் கூறும்போது, அக்காவின் முகத்தில் தெரிந்த பெருமிதமும் சந்தோஷமும் கண்ணிலேயே நிற்கின்றன. 'செல்லமே’ என்று அவனுடைய மென்மையான கரங்களைப் பற்றிக்கொண்டேன். அன்று பார்த்ததோடு சரி! அவனை அதன் பின் நான் இப்போதுதான் பார்க்கப்போகிறேன்.
காபியைக் குடித்து முடித்திருந்தேன். சரிதா அக்கா கொடுத்த எண்ணுக்கு அழைத்தேன். முரளியுடன் பேசப்போகிறேன். எனக்குச் சந்தோஷம் மனதை நிறைத்தது. மறுமுனையில் ''யாரு?'' என்ற குரலுக்கு ''முரளி..'' என்று நான் இழுக்க... ''முரளிதான் பேசுறேன்... நீங்க!'' என்ற அந்தக் குரல்... இது அவன் குரலா? அப்படித் தெரியவில்லையே... எனக்கு உறைத்தது. அவன் சின்ன பையனா இன்னும்? பதின்பருவ வயதுக்கே உரிய பையன்களின் குரல் அது. லேசாக உடைந்து ஓர் ஆணின் குரலாகவும் இல்லாமல் ஒரு சின்னப் பையனின் குரலா கவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் இருந்தது.
''முரளீ... நான் அக்காடா!'' என்றேன். மறுமுனையில் அவன் குரலில் உற்சாகம்.
''அக்காஆஆஆ... எப்படிக்கா இருக் கீங்க... எத்தனை நாளாச்சு பார்த்து?'' என்று ஏறத்தாழ கூவினான்.
''நான் பல்லாவரத்துல இருக்கேன் முரளீ... நீ எங்கே இருக்கே?'' என்றேன்.
''நான் தாம்பரம் வசந்தபவன் பக்கத்துல இருக்கேன்'' என்றான். ''சரி... அங்கேயே இரு. நான் வரேன் என்ன?'' என்றுவிட்டு தொடர்பைத் துண்டித்தேன்.
வெளியே வந்து வண்டியை எடுத்துக்கொண்டு தாம்பரம் நோக்கிச் செலுத்தினேன். வசந்தபவன் வாசலில் நிறுத்தினேன். எங்கே அவன்? தேடினேன். ஒரு டிரான்ஸ்ஃபார்மருக்கு அருகில் நின்றுகொண்டு அவனுக்கு அழைத்தேன். ''முரளி... டிரான்ஸ் ஃபார்மர் பக்கத்துல வா!'' என்றேன். ''இதோக்கா!'' என்றுவிட்டுத் துண்டித்தான். இரண்டு நிமிடங்கள் காத்திருந்தேன். ஆளைக் காணவில்லை. மீண்டும் கைபேசியை எடுக்க முனைந்தபோது, பின்னால் இருந்து கேட்டது அந்தக் குரல்.... ''அக்கா!''
திரும்பிப் பார்த்தேன். அதிர்ந்து நின்றேன். இவன் முரளியா? இது... இது... முரளியா? இளைத்துப்போய்... கருத்துப்போய்... முகம் கை கால்கள் எல்லாம் தோலுரிந்து. ஆனால், அந்தப் பளிச்சிடும் கண்கள் அது முரளிதான் என்றன. என்னால் நம்ப முடியவில்லை. பேச்சு எழவில்லை. ''முரளி!'' என்று சன்னமான குரலில் அழைத்தேன். ''எப்படிக்கா இருக்கீங்க? எத்தனை வருஷம் ஆச்சு?'' என்றான். திருமணத்தன்று நான் பார்த்த அவனுடைய மலர்ந்த முகம் நினைவுக்கு வந்தது. அந்த முரளியா இது? எப்படி இப்படிப் கருத்துப்போனான்? என்னால் அது முரளிதான் என்பதை நம்ப முடியவில்லை. அவன் முகத்தையே பார்த்தேன். ''என்னக்கா அப்படிப் பார்க்குறீங்க?'' என்றான்.
''ஒண்ணுமில்ல..'' என்றவாறே அவனை அழைத்துக்கொண்டு வசந்தபவனுக்குள் நுழைந்தேன். எதிரெதிரில் அமர்ந்தோம்.
''என்ன சாப்பிடுறே!'' என்றேன்.
''நீங்க சூப்பரா காபி போடுவீங்கள்ல... ம்... இப்போ வாங்கியாவது குடுங்க!'' என்றவனைக் கட்டாயப்படுத்தி, தோசை சாப்பிடவைத்து, பிறகு காபி வாங்கிக் கொடுத்தேன்.
''உங்க டேஸ்ட் வராதுக்கா!'' என்றான்.
''முரளி... அதையெல்லாம் ஞாபகம் வெச்சிருக்கியா?'' என்றேன். ''அதெப்படி மறக்கும்? உங்களுக்கு ஒரு பேனா குடுத்தேனே அது எங்கே?'' என்றான். நான் விழித்தேன். ''உங்க கல்யாணத்துக்கு கிஃப்ட் குடுத்தேனே... அது எங்கே?'' என்றான். சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், வீட்டில் பத்திரமாக இருப்பதாகப் பொய் சொன்னேன்.
''நீங்க முன்னைவிட கொஞ்சம் குண்டா கிட்டீங்க!'' என்றான். நான் சிரித்தேன். ''வீட்டுக்குப் போகலாம்... வா!'' என்றேன். வீடு எங்கே இருக்கிறது என்கிற அவன் கேள்விக்கு, 'அசோக் நகர். அரை மணி நேரத்துல போயிடலாம்’ என்றேன். ''இல்லேக்கா! அவ்வளவு தூரம் வந்தா லேட்டாயிடும். இன்னொரு நாள் வர்றேன்!'' என்றான்.
சரிதா அக்கா கூறியதுபோல அவனுக்கு வெறும் 200 ரூபாய் தர மனம் இடம் கொடுக்கவில்லை. அலுவலக நண்பரிடம் 1,000 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டுதான் கிளம்பியிருந்தேன். திரும்பிப் போவதற்கு பெட்ரோல் போட 50 ரூபாய் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, என்னுடைய பர்ஸில் இருந்து 1,000 ரூபாயை எடுத்து அவன் கையில் கொடுத்தேன்.
''அக்கா! இவ்வளவு வேணாம். ஊருக்குப் போகத்தான் காசில்லக்கா. அதுக்குமட்டும் குடுங்க!'' என்றான்.
''பரவாயில்லை வெச்சுக்கோ முரளி...'' என்று அவன் கையில் திணித்து ''ஊருக்கு எப்படிப் போகப்போறே?'' என்றேன்.
''இங்கே ஏறினா சீட் கிடைக்காதுக்கா... கோயம்பேடு போயிடுறேன். ஆவடி, அம்பத்தூர் பஸ்ல ஏறினா போயிடலாம்!'' என்றான். ''இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும்?'' என்றேன் ஆச்சர்யமாக.
''இங்கேதான் இருந்தேன்க்கா. ஒரு ஆபீஸ்ல ஆறு மாசம் ஆபீஸ் பாயா இருந்தேன். ரெண்டாயிரம் குடுத்தாங்க. பஸ்ல போகும்போது ஃபுட்போர்டுல அடிச்சுக் கீழே விழுந்துட்டேன். மூணு மாசம் ஆஸ்பத்திரியில இருந்தேன். அதனால அம்மா பயந்து ஊருக்கே வரச் சொல்லிட்டாங்க. போயிட்டேன்!'' என்றான். மனதைப் பிசைந்து வலிப்பதுபோல் இருந்தது.
வாய் பேசிக்கொண்டு இருந்தாலும் அவனிடம் வேறு ஏதோ ஒன்றைக் கேட்க வேண்டும் என்று மனம் துடித்துக்கொண்டு இருந்தது. அவன் என் ஸ்கூட்டிக்கு அருகில் வந்து, ''உங்களுதாக்கா? நல்லாருக்கு!'' என்று வண்டியின் மேல் அமர்ந்துகொண்டான். இப்படித்தான் பெரியம்மா வீட்டு சைக்கிளின் மேல் அவன் உட்கார்ந்துகொள்வான். நான் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டு மிதிப்பேன். சக்கரம் சுற்றுவதைக் கண்டு சிரிப்பான். அப்புறம் கொஞ்சம் வளர்ந்த பின் சைக்கிளில் வெளியே தெருவில் வலம் வர வேண்டும் என்று அடம்பிடித்து அழைத்துச் செல்லச் சொல்வான். அவனுக்காக நான் சைக்கி ளின் பின்னால் அவனை அமர்த்திக்கொண்டு இரண்டு தெருக்களைச் சுற்றிவிட்டு வருவேன்.
''வண்டியில ஒரு ரவுண்ட் போகலாமா?'' என்றேன். அவன் சற்று யோசித்துவிட்டு, ''வேணாம்க்கா! ஊருக்குப் போகணும். அப்பாவுக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு வாங்கின காசுக்கு நாளைக்குள்ள வட்டி கட்டணும். ஒருத்தர்கிட்ட கேட்டிருக்கேன். தர்றேன்னுருக்கார். அதை வாங்கணும். இருட்டுறதுக்குள்ள போனாத்தான் உண்டு. அதனால கிளம்பட்டுமாக்கா?'' என்றான்.
எனக்குள் எதுவோ உடைந்தது. இவன் சின்னப் பையன் இல்லை. பொறுப்பாக வீட்டுக் கடனுக்கு வட்டி கட்டும் அளவுக்கு வளர்ந்துவிட்ட முரளி. அப்போதுதான் அவன் முகத்தை நன்றாக உற்றுப்பார்த்தேன். அரும்பிய மீசை, அடர்த்தியான புருவங்கள், கசங்கலான பழைய சட்டை, நைந்த பேன்ட் என்று ஒரு தினுசான கோலத்தில் இருந்தான். எனக்கு ஏதோ செய்தது. அவனுக்கு ஒரு பேன்ட்- ஷர்ட் எடுத்துக் கொடுக்கலாமா என்று ஒரு யோசனை ஓடியது. ஆனால், அதை அவனிடம் சொல்லவே சங்கடமாக இருந்தது. ஒருவேளை பழைய உடுப்புகளைப் போட்டிருப்பதால் பரிதாபப்பட்டு நான் வாங்கித் தருகிறேன் என்று நினைத்துவிடுவானோ என்று பயமாக இருந்ததால் அந்த நினைவைப் புறந்தள்ளினேன். நான் தூக்கி வளர்த்த முரளியா இவன்? இத்தனை பெரியவனாக... எங்கே போனது முரளியின் அழகு..? யார் போலவோ அல்லவா இருக்கிறான்..? பெருமூச்சு விட்டேன்.
''அக்கா... கிளம்பட்டுமா?'' என்றான். நான் தலையாட்டினேன். ''தேங்க்ஸுக்கா. நீங்க இல்லாட்டி நான் ஊர் திரும்ப என்ன பாடுபட்டு இருப்பேனோ?'' என்றான்.
''ச்சீ...ச்சீ... இப்படியெல்லாம் பேசக் கூடாது! அக்காகிட்ட தேங்க்ஸ் சொல்லக் கூடாது!'' என்றேன்.
''சரி... வாபஸ்!'' என்று சிரித்தவன் கையசைத்துப் புறப்பட்டான். நான்கைந்து அடிகள் சென்ற பின் அவனைக் கூவி அழைத்தேன். நின்று திரும்பிப் பார்த்தான். அருகே நெருங்கி அவன் கைகளைப் பிடித்தேன். அவனது உள்ளங்கை காய்த்துப் போய் சொரசொரவென்று இருந்தது. என் கைகளில் முட்கள் குத்திய உணர்வு. அவனுடைய பளிச்சிடும் கண்களைப் பார்த்தவாறே கேட்டேன்.
''ஏண்டா இப்படி ஆயிட்டே?''
''எப்படி?''
''கருத்துப்போய், இளைச்சுப்போய், தோலெல்லாம் ஒரு மாதிரியாகி... ஏன்?''
''ஆங்... கட்டட வேலைக்கும் மூட்டை தூக்குற வேலைக்கும் போனா அப்படித்தான்!''- சிரித்துக்கொண்டே சொன்னான். நான் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தேன். என் இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டு என்னிடம் கேட்டான்.
''அக்கா! மெட்ராஸ்ல எனக்கு ஒரு வேலை பார்த்துக் குடுப்பீங்களா? எங்கேயுமே சம்பளம் சரியா தர்றதில்ல. எவ்வளவு வேலைன்னாலும் செய்வேன்க்கா. எவ்ளோ வெயிட்னாலும் தூக்கிடுவேன். ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்கக்கா!''
நான் அழத் தொடங்கினேன்!