Wednesday, February 02, 2011

பத்திரிகைத்துறைக்கு வருவதற்கு முன்னும் பின்னும்


நான் சாஃப்ட்வேர் துறையில் இருந்தபோது என்னோடு கூட பணியாற்றிய ஒருவருடன் இன்று இணையம் மூலம் பேசினேன். அவரோடு உரையாடுகையில் தான் உணர்ந்தேன். நான் முன்பு வாழ்ந்த வாழ்க்கைக்கும், இப்போது வாழும் வாழ்க்கைக்குமான வேறுபாடு.

அப்போது எனக்கு ஊதியம் அதிகம். இப்போது பெறுவதை விட சரியாய் இரண்டு மடங்கு. அதையும் கூட சேமித்ததில்லை. குறுந்தகடு வெளியிடுவது, பதிப்பகம் வைத்து நூல்கள் வெளியிடுவது என்று செலவு செய்து வாழ்ந்த வாழ்க்கை அது.  ”வியர்வையின் குரல்” என்கிற புதுகை பூபாளம் கலைக்குழுவின் இசைப்பேழைக்காக மட்டும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவானது. இப்போது அப்படியான வெளியீட்டு முயற்சிகளையோ, பதிப்பக முயற்சிகளையோ நினைத்துக்கூட பார்க்க முடியாது. அப்போது இரண்டு அறைகள, ஒரு கூடம், சமையலறை கொண்ட இப்போதுள்ளதை விட கொஞ்சம் பெரிய வீடு..நண்பர்கள் புடைசூழ எப்போதும் நிறைந்திருக்கும் வீடு. வெளியூர்களிலிருந்து வரும் இயக்கத்தோழர்கள் பலர் எங்கள் வீட்டில் தான் தங்குவார்கள். எல்லோரும் எந்த விகல்பமுமின்றி ஒன்றாக வாழ்ந்த வீடு அது. ஆதம்பாக்கத்தில் இருந்தோம் அப்போது. நான் அப்போது Web programmer ஆக இருந்ததால் உருப்படியாக இரண்டு விஷயங்கள் செய்தேன். தமுஎகசவிற்கென்றும் தீக்கதிர் நாளிதழுக்கென்றும் தனியாக இரண்டு இணையதளங்கள் வேண்டுமென்பது என் நெடுநாளைய கனவாய் இருந்தது.

சண்முகராஜ் வேண்டிய இமேஜ்கள் எல்லாவற்றையும் செய்து தர நான் இணையதளத்தை டிசைன் செய்தேன். தமுஎகச இணையதளம் எப்படி அமையவேண்டும் என்பதை ஒரு நாள் இரவு
ச. தமிழ்ச்செல்வன், நண்பர் ரமேஷ் (கீற்று) , நான், சண்முகராஜ் நால்வரும் அமர்ந்து எங்கள் வீட்டில் இரவு முழுவதும் பேசிப் பேசி.. பேச்சு பின்னர் பொதுவான அரசியல், பண்பாட்டுத்தளத்திற்குச் சென்று....மூன்றரை மணிக்கே தூங்கினோம்.  மென்பொருள்துறையில் இருந்துகொண்டு சமூகம் பற்றி சிந்திப்பவர்கள் மிகக்குறைவு. அது முடிஞ்சவன் பொழைச்சுக்கோ என்கிற கொள்கை உள்ள ஒரு துறை. அதில் ரமேஷ் வித்தியாமானவராய் நின்றார். சிற்றிதழ்களை வாங்கி கீற்று.காமில் இலவசமாக வெளியிட்டார். அப்போது நான் என்னைப் போல் ஒருவரைப் பார்த்தேனென்றால் அது ரமேஷ் ஒருவராகவே இருந்தார். இன்றைக்கு நிறைய இளைஞர்கள் ஐ.டி. துறையிலிருந்து பல்வேறு இயக்கங்களில் செயல்படுவதைப் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது.

சரி. அதிருக்கட்டும். விஷ்யத்திற்கு வருகிறேன். தமுஎகசவின் இணையதளத்தை உருவாக்கி முடித்துவிட்டு திருவண்ணாமலை தமுஎகச மாநாட்டில் அறிவித்தோம். மிக சந்தோஷமான தருணமது. தோழர் தமிழ்ச்செல்வன் என்னையும் சண்முகராஜையும் மேடைக்கு அழைத்து இணையதளம் உருவாகியிருப்பதை அறிவித்தார்.  முதன்முதலில் “மகளே” என்று அப்போது என்னை அழைத்தார் தமிழ்ச்செல்வன். இன்றளவும் என்னை கலவையான உணர்வுகளுக்குள் ஆழ்த்தும் ஒற்றைச்சொல்லாக அந்த “மகளே” உள்ளது.  அப்போது ரமேஷும் மாநாட்டுக்கு வந்திருந்தார். அவருக்குத் திருமணமாகவில்லை அப்போது. அதன்பின்னர் ரமேஷின் திருமணம் நடந்தது. அவருடைய திருமணத்தில் திருவுடையானும் நானும் இயக்கப்பாடல்கள் கொண்ட கச்சேரி பாடினோம். இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது ரமேஷ் - பிரியா தம்பி திருமணம். சீமான், சுபவீ, ஜெயபாஸ்கரன், ஞானி உள்ளிட்ட பலரும் வந்து வாழ்த்தினார்கள். .

அதன்பின்னர் தீக்கதிருக்கான இணையதளத்தை உருவாக்குவதில் மும்முரமானேன். இன்றைக்கு தீக்கதிர் இணையதளம் ஒரு நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டாலும், அதன் முதல் முயற்சியும், முதல் இணையதளம் நான் தான் உருவாக்கினேன் என்பதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியும் திருப்தியும். இதிலும் சண்முகராஜின் உழைப்பு பெரும் பங்கு வகித்தது. எனக்கு போட்டோஷாப், பிளாஷ் வகையறாவெல்லாம் எதுவும் தெரியாது. சண்முகராஜ் தான் இதையெல்லாம் செய்து கொடுத்தது. இருவரும் இணைந்து செய்த முயற்சியால் தீக்கதிர் இணையதளம் உருவானது. அன்றைய சி.பி.எம். மாநிலச் செய்லாளர் என்.வரதராஜன் இணையதளத்தை துவங்கி வைத்தார். அது மற்றொரு சந்தோஷமான தருணம்.

இந்த வேலையெல்லாம் செய்துகொண்டிருந்தாலும் இடையிடையே தீக்கதிர் நாளிதழுக்காக தோழர் குமரேசனும் தோழர் மயிலைபாலுவும் அவ்வபோது அளிக்கும் அசைன்மெண்டுகளை என் விடுமுறை நாட்களில் செய்வேன். எனக்கு இந்த வேலை பிடித்திருந்தது. ரொம்பப் பிடித்திருந்தது. பேசாமல் வேலையை விட்டுவிட்டு பத்திரிகைத்துறைக்குச் சென்றாலென்ன என்று தோன்றியது. அதற்கு முக்கிய காரணம் தோழர் அ.குமரேசன் கொடுத்த ஊக்கம்தான். மனம் ஒரு குரங்குதானே. இடையில் ஒரு முறை தமுஎகசவின் பயிற்சி முகாம் ஒன்று காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் நடந்தது. அம்முகாமிற்கு வந்த பேராசிரியர் ச. மாடசாமியின் பேச்சில் லயித்துப்போன நான் அன்று பூராவும் டீச்சராக வேண்டும் என்று..அதிலும் குழந்தைகளுக்கு டீச்சராக வேண்டுமென்றும் கனவு காண ஆரம்பித்தேன்.

அப்போதுதான் தோன்றியது ...நான் ஏன் அந்த வேலை செய்யவேண்டும்..இந்த வேலை செய்ய வேண்டுமென்று குரங்கு போல தாவித்தாவி யோசிக்கிறேன் என்று சிந்தித்தேன். என் இயல்புக்கு கொஞ்சம் கூட பொருந்தாத ஒரு மென்பொருள் வல்லுனராய நான் வேலை பார்ப்பதைவிட கலையோடு தொடர்புடையை, இலக்கியத்தோடு தொடர்புடைய், மக்களோடு தொடர்புடைய ஏதாவதொரு பணியை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமே என்று நினைத்தேன். ஆனால் பெரும் ஊதியம் வாங்கும் நான் அதை விட்டுவிட்டு வந்தால் என்னை உலகம் என்னை பைத்தியம் என்று தான் சொல்லும். அதனால் சமயம் பார்த்துப் பொறுத்திருந்தேன்.

அந்தச் சமயமும் வந்தது உலகப் பொருளாதார நெருக்கடி (Recession).எங்கள் கம்பெனியில் சேர்ந்து 6 மாதத்தில் கன்பர்ம் பண்னுவார்கள். கன்பர்ம் பண்ணியவர்களை வேலையை விட்டுத்தூக்குவதில் நடைமுறை சிக்கலிருந்ததால், சேர்ந்து ஆறுமாதங்கள் ஆகாதவர்களை முதலில் வேலையை விட்டு அனுப்பினாரக்ள். அதில் நம்ம வேலையும் காலி. துயரமும் கவலையும் வருவதற்கு பதில் சந்தோஷமும் நிம்மதியும் வந்தது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்கிற கேள்வி இருந்தாலும் கூட எனக்குப் பிடித்தமான மீடியா துறையில் செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு என்று தோன்றியது. வந்துவிட்டேன்.

அதைவிட இதில் சம்பளம் குறைவுதான். ஆனால் ஒரு கேபினுக்குள் அமர்ந்துகொண்டு யாருக்காகவோ டாட் நெட்டையும், ஏ.எஸ்.பி.யையும், ஜாவாஸ்கிரிப்டையும் படிக்க வேண்டியதில்லை. கூகுள் சர்ச் போக வேண்டியதில்லை. மூளையை யாருக்கோ வாடகைக்கு விடவேண்டியதில்லை என்று குதூகலித்தது மனம். பெரும் விடுதலை கிட்டிய உணர்வெனக்கு.

இதோ.. இன்று நான் ஒரு பத்திரிகையாளர். அதே சிஸ்டம், அதே கேபின், அதே கூகுள்.. ஆனால் தேடுபொருள் வேறு. Product வேறு. என் product ஐ பயன்படுத்தப்போவது யாரென்றே தெரியாத நிலையில்லை. என் சாஃப்ட்வேர் துறையில் மக்களுக்காக, இயக்கத்துக்காக என்று செய்ய நினைத்ததை செய்ய எனக்கு பெரும்பொருள் தேவைப்பட்டது. அது இணையதள உருவாக்கமாக இருந்தாலும் சரி..பதிப்பகம் வைத்து நூல்கள், சி.டி.க்கள் போடுவதாக இருந்தாலும் சரி. இப்போது என்னிடம் அத்தனை பணமில்லை. ஆனால் அப்போதிருந்ததை விட இப்போது இன்னும் அதிகமான மக்களைச் சென்று சேர்வதாய் உணர்கிறேன்.

சாஃப்ட்வேரில் ஒவ்வொரு பாராட்டும் பணமாக உருமாறும். ஒவ்வொரு இடித்துரைப்பும் பணிமீதான மிரட்டலாக ஒலிக்கும். ஆனால் பத்திரிகைத்துறையில் ஒவ்வொரு பாராட்டும் என் முடிவு சரிதானென்று எனக்குக் கூறிக்கொண்டேயிருக்கின்றது. ஒவ்வொரு இடித்துரைப்பும் என்னை மென்மேலும் வளர்த்துக்கொள்ள உதவுகின்றது. 

முகம் தெரியாத வாசகர்கள் நம் எழுத்தைப் பார்த்து எழுதும் கடிதங்க்ளிலும், தொலைபேசியிலும் மின்னஞ்சல்களிலும் கூறும் வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது எனக்கான தேடலும் வெளியும்.

என் வேலையைப் பறித்த உலகப் பொருளாதார நெருக்கடிக்கு நன்றி!
Thank you Recession! 

20 comments:

  1. நம் மனமும் அறிவும் ஒருங்கே விரும்பும் துறையில் பணியாற்றும் சுதந்திரம்தான் வாழ்க்கையில் முதன்மையான சுதந்திரம்.அதை 35 வருடங்களாக அனுபவித்து வருகிறேன். இன்னொரு தலைமுறையிலும் ஒருவர் அதே உணர்வுகளை வெளிப்படுத்துவது பெரும் மகிழ்ச்சி தருகிறது. வாழ்த்துகள். ஞாநி

    ReplyDelete
  2. எதார்த்தம்...மனதுக்கு பிடித்த வேலையை செய்தால் அந்த சந்தோசமே தனிதான்..

    ReplyDelete
  3. [[[என் வேலையைப் பறித்த உலகப் பொருளாதார நெருக்கடிக்கு நன்றி! Thank you Recession!]]]

    இப்படிச் சொல்லும் முதல் கம்யூனிஸ்ட் நீங்களாகத்தான் இருக்கும்..!

    உங்களுடைய முன் வரலாறு எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் இன்றுதான் தெரிந்து கொண்டேன். உங்களைப் போன்று வளம் கொழிக்கும் துறையில் இருந்தவர்கள் அதனைத் துறந்து பத்திரிகைப் பணிக்கு வருவது அபூர்வம்..! தைரியமாக வந்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..! இதே துறையில் நீங்கள் நிச்சயம் உயர்வீர்கள்..!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் கவின்...
    தோழர் ராஜி பெருமிதத்தின் மின்னல் கண்களில் தெரிய கவனித்துக் கொண்டேவர நிதானமாக வாசித்து முடித்தேன்...
    வாழ்த்துக்கள் கவின்...
    வேறு சொற்கள் இல்லை இப்போதைக்கு...

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  5. @gnani @nandha @unmai thamizhan @ venu

    மிக்க நன்றி! உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகள் மேலும் உரமூட்டுமெனக்கு.
    மீண்டும் நன்றிகள்!

    ReplyDelete
  6. தங்கச்சுமையை உதறிவந்தமைக்கு வாழ்த்துக்கள். அமைத்துக்கொள்வதை விட அமைவதைக் கொண்டு திருப்தியடைபவர்கள் தான் பலர்,என்னையும் சேர்த்து. அதை உதறிவர துணிச்சல் வேண்டும். கவின் மலரிடம் அது அதிகமாகவே உள்ளது. வாழ்த்துக்கள்.!மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்! அன்புடன்-tm.frank

    ReplyDelete
  7. யாரோ எவரோ என்றுதான் ஃபேஸ்புக்கில் தங்களது கருத்துக்களை பார்க்க ஆரம்பித்தேன்.நிறைய எழுதுங்கள்.இணையம் வாயிலாகவே சாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.வாழ்த்துக்கள்!-writersuryakumaran.blogspot.com

    ReplyDelete
  8. Anonymous8:10 pm

    //என் இயல்புக்கு கொஞ்சம் கூட பொருந்தாத ஒரு மென்பொருள் வல்லுனராய நான் வேலை பார்ப்பதைவிட கலையோடு தொடர்புடையை, இலக்கியத்தோடு தொடர்புடைய், மக்களோடு தொடர்புடைய ஏதாவதொரு பணியை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமே என்று நினைத்தேன்.//
    it is ur OPINION. But is it TRUE for ever ?? !!

    ReplyDelete
  9. மனதுக்கு பிடித்த வேலையை செய்தால் அந்த சந்தோசமே தனிதான்.

    ReplyDelete
  10. இதே ஊடகத்துறை இன்று அரசியலுக்கு கட்டுப்பட்டும் சினிமாவிற்கு விற்கப்பட்டும் இருக்கும் நேரத்தில் தங்களைப் போன்ற பத்திரிக்கையாளரை சந்தித்ததில் மகிழ்கிறேன்... இதே துறையில் சாதிக்க வாழ்த்துக்கள்!
    -சித்திரன்

    ReplyDelete
  11. இந்த இடுகையை இரண்டாம் முறையாய் படிக்கிறேன் கவின். உங்களுக்கு பிடித்த துறையில், எந்த சமரசங்களுக்கு ஆட்படாமல், நீங்கள் விரும்பியதில் வாழும் வாழ்க்கை ரொம்பவே பொறாமையாக இருக்கிறது கவின்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  13. வணக்கம்,
    எனது தினமணிக்கதிரில் வெளிவந்து தற்போது எனது வலைப்பூவில் பதிவேற்றப்பட்டிருக்கும் எனது சிறுகதையை இங்கே
    http://authormichael.blogspot.com/2011_04_01_archive.html படிக்கவும்

    ReplyDelete
  14. when I read your posts my mind was searching for the writer's details, couldn't find on this blog, fortunately, when I started reading this post, here its completely explained, I wish your success on present work. and God Bless.

    ReplyDelete
  15. எனக்கான நியாயங்களை( அரசு வேலையை விட்டதற்கு) தேடி கொண்டு இருக்கையில், உங்கள் பதிவு அந்த நியாயங்களை எனக்குள் பூத்து குலுங்க செய்தது.

    ReplyDelete
  16. எதையோ தேட.. உங்களது அனுபவத்தினை படிக்க வாய்ப்பாக அமைந்தது. நமது செயல் நல்வழியில் நாலு பேருக்கு பயன்பட்டால் நல்லதுதானே. உங்களைப் பற்றி என்னோடு இருக்கின்ற சிலர் அவர் ஒருதலைப் பட்சமாக இருக்கின்றவர் என்று கூறுவார்கள். ஆம். நானும் ஒருதலைப் பட்சமானவன்தான். பாதிக்கப்படுபவர்களின் பக்கம் தானே மனிதர்கள் இருப்பார்கள். உங்கள் பணி தொடரட்டும்.
    ஜெ.பிரபாகர் கப்பிகுளம்

    ReplyDelete
  17. dear kavin malar,
    i am peter, friend of solai mariappan and vishnupuram saravanan from kodavasal(broher of charles) presently at pallavaram in government service doing aituc work also

    the article is very moving and i believe i perceived the the emotions and meaning you have presented in the article. the language itself shows that you are no more an it employee .

    with regards and greetings,

    peterdurairaj

    ReplyDelete
  18. Anonymous8:11 am

    அருமை

    ReplyDelete
  19. உங்களோடு நான் பல இடங்களில் முரண்பட்டாலும், யாருக்கோ வேலை செய்வதைவிட மனதிற்கு பிடித்ததை செய்யலாம் என்ற நிலையில் ஒத்து போகிறேன்..

    ReplyDelete