Friday, September 27, 2013

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழகத்தில் சாத்தியமா?

நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டபின், மஹாராஷ்டிர அரசு மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அரசு கொண்டுவரும் சட்டங்கள் பலவற்றில் பொதுமக்களின் கருத்தை ஒட்டியே இருக்கும். ஆனால் இந்த சட்டத்தைப் பொறுத்தவரை பொதுக்கருத்துக்கு மாறாகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.  ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் போன்ற முன்னோடிகளின் சீர்த்திருத்தக் கருத்துக்களும், தபோல்கரின் உயிர்த்தியாகமும் இந்த சட்டத்தை அங்கே சாத்தியமாக்கி இருக்கின்றன. ‘’தமிழக மக்கள் மஹாராஷ்டிர மக்களை விட முற்போக்கானவர்கள்தான். அங்கேயே மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் சாத்தியமென்றால் இங்கே ஏன் முடியாது?’’ என்கிறார் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

கடவுள் மறுப்புக்கொள்கையும் மூடநம்பிக்கைகளுக்கும் சாதியத்துக்கும் எதிரான பெரியாரின் பிரச்சாரமும் தமிழகத்தை ஒரு முற்போக்கு மாநிலமாக்கியது. அவருடைய சுயமரியாதை இயக்கம் ஜோசியம், ஜாதகம் உட்பட பல மூடநம்பிக்கைகளுக்கு எதிராக களமிறங்கி போராடியது. ஆகவே பெரியார் இயக்கங்கள் தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் வரவேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றன. ‘’மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். அரசியலமைப்புச் சட்டத்தின் 51ஏ - எச் பிரிவு மக்களின் விஞ்ஞான மனோபாவத்தையும், மனிதத்தன்மையையும், கேள்விகேட்கும் திறனையும், சீர்த்திருத்தத்தையும் வளர்க்கவேண்டும் என்கிறது. ஆகவே மத்திய மாநில அரசுகளுக்கு இத்தகைய சட்டத்தைக் கொண்டுவரும் கடமை இருக்கிறது. மேலும் மூடநம்பிக்கைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். பொருள், பணம், நேரம் என்று இழந்திருக் கிறார்கள். ஆகவே இதுவே சரியான நேரம்’’ என்கிறார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலிபூங்குன்றன்.  2009ல் தி.மு.க. ஆட்சியிலிருந்தபொது பேராசிரியர் மா.நன்னன் தலைமையிலான சமூக சீர்த்திருத்தக்குழுவில் பங்கேற்றிருந்ததாகவும் மூடநம்பிக்கை ஒழிப்பு உட்பட பல திட்டங்களை அரசுக்கு அப்போது அளித்ததாகவும் ஆனால் அதற்குள் அ.தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்றுவிட்டதாகவும் தெரிவித்தார்   கலிபூங்குன்ற ன்.

இடதுசாரிகளும் இந்தச் சட்டத்திற்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கி இருக்கின்றனர். ‘’மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தி இது குறித்த விழிப்புணர்வை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் ஸ்டீபன் நாதன். ஆனால் வலதுசாரிகளிடமிருந்து இச்சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு வரக்கூடும். பெரியார் இயக்கங்கள், இடதுசாரிகள், தி.மு.க. ஆகியவை இச்சட்டம் தமிழ கத்தில் வரவேண்டும் என்கின்றன."மத்திய மாநில அரசுகள் இச்சட்டத்தை இயற்றவேண்டும். அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத் திட்டம் பள்ளி - கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்’’ என்று கோரியிருக்கும் கருணாநிதி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51ஏ-எச் குறித்தும் குறிப்பிட் டிருக்கிறார்.

ஆனால், தி.மு.க. இப்படி கோரியிருந்தாலும், அதன் சொந்த கட்சி உறுப்பினர்களே மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு உள்ளனர். மாநில மாவட்ட தலைவர்கள் அளவில் இலலை என்றாலும் கீழ்மட்டத்தில் உள்ள் தொண்டர் களிடையே அத்தகைய மனப்பாங்கு காணப்படுகிறது. அண்ணா துரையும் கருணாநிதியும் தங்கள் பகுத்தறிவுப் பேச்சுக்கள், திரைப்படங்கள்-நாடகங்கள், எழுத்துக்கள் என்று சாத்தியபப்பட்ட அனைத்து வழிகளிலும் பிரச்சாரம் செய்தனர்.  இப்போதுகூட நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கான பிரச்சாரம் அது.  தி.மு.க. தன் பகுத்தறிவு பிரச்சாரத்தால் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இப்போது கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்களே கடவுளை வழிபட கோவிலுக்குச் செல்கிறார்கள். அவருடைய மஞ்சள் துண்டு குறித்து பலரும் விமர்சித்தும் அதை எடுக்கவில்லை. தி.மு.க.வின் தொலைக்காட்சி சேனல்களில் அறிவியலுக்கு எதிரான புராணங்கள் எல்லாம் ஒளிபரப்பாகின்றன. தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று கூறியிருக்கிறார். முன்பெல்லாம் தி.மு.க.வின் அடிப்படை உறுப் பினர்கள்கூட கடவுள் நம்பிக்கை உண்டு என்று சொல்வதற்குக் கூட தயங்கிய காலம் ஒன்று இருந்தது. புட்டபர்த்தி சாய்பாபா சென்னை வந்தபோது தன் வாயிலிருந்து லிங்கம் எடுத்து திமுக தலைவர் துரைமுருகனுக்குத் தந்தார். தயாளு அம்மாள் சாய்பாபாவின் கால்களைத் தொட்டு வணங்கியது சர்ச்சைக்குள்ளானது.

முதல்வர் ஜெயலலிதா மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டுவருவாரா? ‘’ஜெயலலிதாவின் சொந்த நம்பிக்கைகள் அவரை அதற்கு அனுமதிக்காது. ஆனால் அவர் என்ன செய்வார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதிரடியாக ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக கொண்டுவந்தாலும் வரலாம். அவருடைய குணநலனை அடிப்படையாக வைத்துச் சொல்கிறேன். ஆர்வத்தை வைத்து அல்ல’’ என்கிறார் கொளத்தூர் மணி. பெரியாரின் கொள்கைகளில் இருந்து விலகிப்போய்விட்டதாக தி.மு.க. மீது விமர்சனங்கள் இருந்தாலும் அது வெகுதூரம் போய்விடவில்லை என்பதற்கான சான்றுகள் சில உண்டு. முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் கோயில் திருவிழா ஒன்றில் தீமித்ததை ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று வர்ணித்தார் கருணாநிதி. தி.மு.க.காரர்கள் யாரும் நெற்றியில் திருநீறு இடக்கூடாது என்றார். 

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அதன் பகுத்தறிவுக்கு ஒவ்வாத தன்மைக்குப் பெயர் போனது. சில மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சகம் தமிழகத்தின் முக்கிய கோயில்களில் மழைவேண்டி யாகம் நடத்தச் சொல்லி உத்தரவிட்டது. அதன்படியே பல கோயில்களிலும் யாகம் நடந்ததை பகுத்தறிவு இயக்கங்கள் கண்டித்தன. ‘’மாணவர்களுக்கு தொடக்கப்பள்ளியிலேயே மரம் வளர்த்தால் மழை வரும் என்று சொல்லிக்கொடுத்துவிட்டு இங்கே அரசு தன் குடிமக்களை தவறாக வழிநடத்துகிறது. இது அறிவியலுக்கு ஒவ்வாத செயல்’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.

அதிமுக அமைச்சர்களும் தொண்டர்களும் மதம் தொடர்பான சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகரிக்கும்போது தமிழக மக்களும் ஊடகங்களும் அதற்கு தகுந்த எதிர்வினை புரிந்திருக்கின்றன. முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது ஒவ்வோர் ஆண்டும் அமைச்சர்களே மண்சோறு சாப்பிடுவது, தேர் இழுப்பது, அலகு குத்திக்கொள்வது, காவடி எடுப்பது, தீச்சட்டி ஏந்துவது போன்றவற்றில் ஒவ்வோர் பிப்ரவரி 24ம் முதல்வர் பிறந்தநாளின்போது ஈடுபடுவது சகஜமான காட்சிகள்.  அமைச் சர்களான கோகுல இந்திரா மண்சோறு உண்டதும், ப.வளர்மதி தீச்சட்டி ஏந்தியதும் தமிழ்நாட்டில் அதிசயங்கள் இல்லை. அதுபோலவே ஜெயலலிதா குருவாயூர் கோயிலுக்கு குட்டி யானையை காணிக்கையாய் அளித்ததும். ஜெயலலிதா தன் ஜோசியரைக் கேட்காமல் எதுவும் செய்வ தில்லை என்று சொல்லப்படுகிறது. முன்பு ஆட்சியிலிருந்தபோது, மகாமக குளத்தில் குளித்தால் நல்லது என்கிற மூடநம்பிக்கையில் லட்சம் மக்கள் கூடும் கும்பகோணத்துக்குச் சென்று, நெருக்கடியால் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதை தமிழக மக்கள் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது.

தான் மீண்டும் பதவிக்கு வந்ததால் கோயிலுக்குக் காணிக்கையாய் தன் நாக்கை வெட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றிய  தன்னுடைய ’பக்தை’க்கு அரசு வேலை அளித்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. சென்ற வாரத்தில் வெளியிடப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் ஆணை ஒன்று வியப்பை அளிப்பதாய் இருந்தது. கோயில் சொத்துக்களில் நாத்திகர்களுக்கு உரிமையில்லை என்றது அந்த ஆணை. அதாவது கோயில் நிர்வகிக்கும் சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் நாத்திகர்களின் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது என்பதே அந்த ஆணை. சுய மரியாதை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் இப்படியொரு ஆணை!  ‘’இந்து சமய அறநிலையத்துறை என்பது நீதிக்கட்சி ஆட்சியில் கோயிலின் கணக்குவழக்குகளைப் பார்த்துக்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு துறை. அதற்கு மேல் அதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இப்படியொரு ஆணையை பிறப்பிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே விரோதமானது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இது ஒன்றும் நேபால் போல இந்து நாடு அல்ல’’ என்கிறது திராவிடர் கழகம்.

‘திராவிட இயக்கங்களுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் வேறுபாடு உள்ளது’’ என்கிறார் எழுத்தாளர் பாமரன். திராவிட கட்சிகள் மட்டுமல்ல, பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில் எல்லா கட்சிகளூம் போட்டி போடுகின்றன. எதிர்க்கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் பெரியார் பிறந்தநாளில் அவருடைய படத்துக்கு பூஜை செய்த செய்திகள் வந்தன. இந்து மக்கள் கட்சி, அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் சுப. உதயக்குமார் ‘நாசமாய் போக வேண்டும்’ என்று மிளகாய் அரைத்து செய்வினை வைத்தது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கூச்சனூர் சனீஸ்வரர் கோயிலுக்கு சனிப்பெயர்ச்சிக்காகச் சென்று வழிபட்டார்.

தமிழகத்தின் இப்படியான அத்தனை மூடநம்பிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் பெரியார் இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என முனைப்புடன் இருக்கின்றன. ‘’ஒத்த கருத்துடைய இயக்கங்களை ஒன்று திரட்டி தமிழக அரசை நிர்பந்திப்போம்’’ என்கிறார் ஸ்டீபன் நாதன். ‘’தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்’’ என்கிறார் கொளத்தூர் மணி. ‘’தமிழக அரசு செய்யுமா என்பதைவிட, செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவோம்’’ என்கிறார் கலிபூங்குன்றன்.

திமுகவின் கருத்தையறிய முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியத்தை தொடர்புகொண்டபோது "இயல்பாகவே பகுத்தறிவாளர்கள் மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்படவேண்டும் என்று விரும்புவார்கள். பெரும்பாலான ஆத்திகர்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஏனெனில் கடவுள் நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் வெவ்வேறானவை. நரபலி போல இன்னொரு உயிரை சித்தரவதை செய்யும் மூடநம்பிக்கைகளை ஆத்திகவாதிகூட ஏற்றுக்கொள்ளமாட்டார். இதுபோன்றவற்றையெல்லாம் தடுக்கும் சட்டம் கொண்டு வருவது நல்லதுதானே? ஆனால் அது அதிமுக ஆட்சியில் நடக்காது. கோயில் சொத்துக்களில் நாத்திகர்களுக்கு பங்கில்லை என்று அறிவித்த அ.தி.மு.க. அரசா கொண்டுவரும்? பெரியாரின் சீர்த்திருத்தக் கருத்துக்களான பெண்களுக்கு சொத்துரிமை, சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்தது போன்றவற்றை தி.மு.க. தான் செய்தது. அதுபோலவே கலைஞர் விதைத்திருக்கும் இந்த விதையை அவரே மரமாக்குவார் என்று நம்புகிறேன்’’ என்றார்.

அ.தி.மு.க. வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சமரசத்திடம் பேசியபோது ‘’ போன ஆட்சியில் ஆடு-கோழி பலியிட தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தோம். ஆனால் அதை பெரியாரிஸ்டுகளே ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களின் நம்பிக்கையில் கைவைக்கிறார்கள் என்று எதிர்த்தார்கள். இரணியன் - பிரகலாதன் காலத்திலிருந்தே சமூகம் இரண்டு தரப்பாகத்தான் இருக்கிறது. பெரியாரும் ஆன்மீகவாதிகளும் ஒரே சமூகத்தில் இருந்தனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் புத்தர் மாதிரி யாராவது வந்து அவர்கள் கருத்தைச் சொல்வார்கள். ஒரு சிலர் அவர்களை பின்பற்றுவார்கள். மூடநம்பிக்கை எது என்பது அவரவர்தான் தீர்மானிக்கமுடியும். ஒவ்வொருவருக்கும் மூடநம்பிக்கை மாறும். இதையெல்லாம் சட்டம் போட்டு தடுக்க முடியாது. அப்படிப் போடவேண்டிய அவசியமும் இல்லை’’ என்கிறார்.

நன்றி : (இந்தியா டுடே)

Monday, September 23, 2013

ஒரு பக்க நீதி - பெண்களின் பாதுகாப்பு குறித்த நீதிபதி கிருபாகரனின் கருத்து

பெருகி வரும் பாலியல் குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கும் போக்கு பொதுச்சமூகத்தில் அதிகமாக இருக்கிறது. பெண் அணியும் உடை சரியில்லை; அவள் சென்ற நேரம் சரியில்லை; அவள் சென்ற இடம் சரியில்லை; என்று எல்லாவற்றையும் பெண்கள் மீது பழிபோட்டுவிடுவது தவறு செய்த ஆண்களை தப்பவிடுவதற்கு சமம். சாமானியர்கள் இப்படி சிந்திப்பதில் வியப்பில்லை. ஏனெனில் காலங்காலமாக அனைத்து பாலினத்தவருக்கும் ஊட்டப்படும் ஆணாதிக்கத்தின் விளைவுதான் இது. ஆனால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரனும் இதே கருத்தை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. நாடு முழுவதுமிருந்து பெண்ணியவாதிகள் இவருடைய கருத்துக்கு கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் பெண்களுக்கான நீதிமன்றத்தை திறந்துவைத்துப் பேசிய நீதிபதி கிருபாகரன் ‘’வீட்டில் மனைவி, சகோதரியை விரும்பும் ஆண் வெளியில் செல்லும்போது மிருகமாகி பெண்கள் மீதான பாலியல் வன்முறையைச் செய்கிறான்’’ என்று அத்தோடு நிறுத்தாமல் அடுத்துப் பேசியதே சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது. ‘’ஆண்கள் மட்டுமே நடக்கும் தவறுகளுக்கு காரணம் என்று சொல்ல முடியாது. சில சூழல்களில் பிரச்சனை வரும் என்று தெரிந்தே ஏன் அந்தச் சூழலுக்குச் சென்று தானாக மாட்டிக்கொள்ள வேண்டும்? டில்லி மாணவி தவறான நேரத்தில் பயணம் செய்ததும் அக்குற்றம் நிகழ காரணம். பெண்கள் தாங்களே சிக்கலை வரவழைத்துக்கொள்ள வேண்டாம்.’’ என்றார்.

இந்தச் செய்தி வெளிவந்தவுடன் பெண்ணியவாதிகளும், பெண்கள் இயக்கங்களும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தன. அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உ.வாசுகி நீதிபதி கிருபாகரனுக்கு கண்டனக் கடிதம் எழுதினார். இந்தியாவின் முதல் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரலான இந்திரா ஜெய்சிங், நீதிபதிகள் ஆணாதிக்கக் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று அறிவுரை வழங்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவத்திக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார். ’’நீதிமன்றங்களில் கூட பெண் வழக்கறிஞர்கள் வழக்கு நடத்தும்போது சில சமயங்களில் ஆண் நீதிபதிகள் ஆணாதிக்கத்துடன் பேசுவதும்,  ஒரு வேளை நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவற்றை பெண் வழக்கறிஞர்கள் பொறுத்துக்கொள்வதும் நடக்கிறது’’ என்று நீளும் அக்கடிதத்தின் நகல் சட்ட அமைச்சர் கபில் சிபலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பெண் வழக்கறிஞர்களை மரியாதையாக நடத்தும் நீதிபதி கிருபாகரன் பொது இடத்தில் இன்னும் கூடுதலான சமூக அக்கறையுடன் பேசியிருக்க வேண்டும் என்கிறார் வழக்கறிஞர்  அருள் மொழி. ‘’சில நீதிபதிகள் பெண்கள் குறித்து மோசமான கமெண்ட்டுகளை சொல்வதும் ஆனால் அவர்களே பெண்கள் குறித்த வழக்கில் பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்வதும் உண்டு. அதுபோலவே பெண்களுக்கு ஆதரவாக உள்ள சிலர் தீர்ப்பில் பாதகமாகச் சொல்வதும் உண்டு. நீதிபதி பொது இடத்தில் கருத்து தெரிவிக்கையில் பிரச்சனையின் வீரியத்தை தெரிந்துகொண்டு கருத்து தெரிவிப்பது நல்லது. பொதுச் சமூகத்தில் வெளிப்படும் ஒரு மேம்போக்கான கருத்தை நீதிபதி பிரதிபலித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படியான கருத்துக்களால், நீதிமன்றத்தில் பெண்களுக்காக நல்ல தீர்ப்புகளைச் சொல்லும்போது அவை எடுபடாமல் போகும் வாய்ப்பும் உள்ளது’’ என்று இந்தியா டுடேயிடம் தெரிவித்தார்.

’’பெண்களுக்கான நீதிமன்றத்தை திறந்துவைத்துப் பேசும் நீதிபதி! அச்சமில்லாமல் பெண்கள் தங்கள் மீது நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து புகாரளிக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, தவறான நேரத்தில் வெளியே போகாதே என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? இந்திய அரசியலமைப்புச் சட்டம் நம்மை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் எந்த நேரத்திலும் பயணம் செய்யும் உரிமையை வழங்கி இருக்கிறது. ஆனால் இதை மறுக்கும் வகையில் நீதிபதி பேசியிருக்கிறார். இது குற்றவாளிகளுக்கு துணை போகும் பேச்சு. பெண்கள் பொது இடத்துக்கு தைரியமாகச் செல்லும் வகையில் அந்த இடத்தை பாதுகாப்பாக ஆக்கித்தருவது சமூகத்தின் கடமை. ஆனால் ஓரிடத்துக்கு, இந்த நேரத்தில் போகாதே என்று கூறுவது அபத்தம். பெண்கள் செல்போன் வைத்துக்கொள்ளகூடாது. சூரிய அஸ்தமனத்துக்குப் பின் வெளியே வரக் கூடாது போன்ற கருத்துக்கள் எல்லாமே பெண்ணின் உரிமையான தகவல் தொடர்பை பாதிக்கின்றன.’’ என்று உ.வாசுகி இந்தியா டுடேயிடம் தெரிவித்தார்.

டில்லி, மும்பை சம்பவங்களில் ஊடகங்கள் கூட அப்பெண்கள் ஆண் நண்பருடன் வெளியில் சென்றதாகவே தெரிவிக்கின்றன. ‘நண்பர்’ என்று சொல்லாமல் ‘ஆண் நண்பர்’ என்று கூறுவதன் மூலம் பொதுமக்களின் உளவியலுக்குள் இந்தப் பெண்கள் அங்கே இன்னொரு ஆணுடன் சென்றது தவறு என்கிற கருத்தை மறைமுகமாக கொண்டு சேர்க்கின்றன. ஒரு தோழியோடு அப்பெண்கள் போயிருந்தால் ‘பெண் நண்பருடன்’ என்று எழுத மாட்டார்கள் அல்லவா? இப்படியான செய்திகள் வெளிவருவதும், நீதிபதி கூறியது போன்ற கருத்துக்களும் பொதுமக்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும். பிரச்சனைகளை உலகுக்குச் சொல்லும் ஊடகங்களும், நீதித்துறை ஜாம்பவான்களும் பெண்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் ஜாக்கிரதையாக சமூகப் பொறுப்புடன் தெரிவிக்கவில்லையெனில் கடுமையான கண்டனங்களை சந்திக்க நேரிடும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

(நன்றி : இந்தியா டுடே)

Sunday, September 15, 2013

ஆடை கட்டுப்பாடு

தமிழகத்தின் கலை அறிவியல் கல்லூரிகளில் இனி மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு கொண்டு வரப்போவதாக உயர்கல்விக்கான கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இன்றைய மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜீன்ஸ் மற்றும் டி-சர்டுகளை அணியக்கூடாது என்கிற கட்டுப்பாட்டை மாணவர்கள் வரவேற்கவில்லை. இந்திய மாணவர் சங்கம்(எஸ்.எஃப்.ஐ) இந்த முடிவை கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் மாணவர் காங்கிரஸ், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆகிய மாணவர் அமைப்புகள் இதை வரவேற்றிருக்கின்றன. மாணவர் காங்கிரஸ் செயலாளர் சுனில் ராஜாவை இந்தியா டுடே தொடர்புகொண்டபோது ''இதை வரவேற்பதால் எங்களை குறுகிய மனப்பான்மை உடையவர்கள் என்கிறார்கள்.  பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்கத்தான் சீருடை கொண்டுவரப்பட்டது. அதுபோலத்தான் இதையும் பார்க்கவேண்டும். கிராமப்புறத்தில் இருந்து நகருக்கு வந்து படிப்பவர்கள், நகரில் அணியும் ஸ்லீவ்லெஸ், டி-சர்ட், ஜீன்ஸ் போன்றவற்றைப் பார்த்து தாழ்வு மனப்பான்மை கொள்ள் வாய்ப்பு உண்டு. நகரங்களிலிருந்து கிராமப் பகுதி கல்லூரிகளில் இடம் கிடைத்துச் செல்பவர்கள் இந்த உடைகளை அணிந்தால் அவர்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். அத்துடன் நம் கலாசாரத்தின்படி உடை அணிவதை ஏன் எதிர்க்கவேண்டும்?'' என்கிறார்.

ஜீன்ஸ் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் அணியும் உடை என்பதையே மறுக்கிறார் எஸ்.எஃப்.ஐ.யின் மாநிலத் தலைவர் ராஜ்மோகன். ''ஏழை மாணவர்களுக்கு ஜீன்ஸ்தான் வசதி. வாரம் ஒரு முறை துவைத்தால் போதும். ஆனால் பேண்ட் - சர்ட் போட்டால் தினமும் மாற்றவேண்டி இருக்கும். ஜீன்ஸ் அணியக்கூடாது என்று சொல்வதன் மூலம் அவர்களுக்கு சிரமம்தான் ஏற்படுகிறது. இந்தியாவில் வேறெந்த உயர்கல்வி நிறுவனத்திலோ, பல்கலைக்கழகத்திலோ இப்படி நடைமுறை கிடையாது. உடைக்கும் அறிவுக்கும் தொடர்பு இல்லை. இது பிற்போக்குத்தனமான நிலப்பிரபுத்துவத்தனத்தின் வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம்.'' என்கிறார்.

எஸ்.எஃப்.ஐ. நிர்வாகிகள் கல்லூரி கல்வி இயக்ககத்துக்குச் சென்று சமப்ந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து உடைக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். மாணவர்கள் இப்போது கண்ணியமாகத்தான் உடை உடுத்துகிறார்கள்; எங்கேயோ இருக்கும் விதிவிலக்குகளை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையும் கட்டுப்படுத்தக்கூடாது என்கிறது எஸ்.எஃப்.ஐ.

சென்ற ஆண்டு இதேபோல பெண் ஆசிரியர்களுக்கு மட்டும் உடைககட்டுப்பாடு கொண்டு வந்தது தமிழக அரசு. சேலை மட்டுமே அணிந்து வரவேண்டுமென்றும் சுடிதார் அணிந்து வரக்கூடாது என்றும் சுற்றறிக்கை எல்லா பள்ளிகளுக்கும் வந்தது. அதை மீறி சுடிதார் அணிந்து வந்தவர்களுக்கு மெமோ கொடுத்த சம்பவங்களும் நடந்தன. இதற்கான எதிர்ப்பு என்பது சிறிய அளவிலேயே இருந்தது. ஆனால் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்த உடைக்கட்டுப்பாடு மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதைக் காண முடிகிறது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ''இது எங்கள் தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் செயல். இதை அனுமதிக்கமுடியாது'' என்கிறார் காட்டமாக.

எது நாகரிகம், எது கலாசாரம் எது கண்ணியம் என்கிற கேள்விகள் எல்லாமே வரையறுத்துக் கூற முடியாதவை. நீ இதைத்தான் உண்ண வேண்டும் என்று ஒருவருடைய உணவு விஷயத்தில் எப்படி கட்டுப்படுத்த முடியதோ அதுபோலவேதான் உடை விஷயத்திலும் ஒருவரை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசு உணரவேண்டும். தனக்கு எந்த உடை வசதியோ அந்த உடையை அணிவதில் வேறெவரும் தலையிடுவதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. ''உடையினால்தான் தவறுகள் நிகழ்கின்றன என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தவறு செய்பவர்கள் எந்த உடையிலும் தவறு செய்வார்கள். அதிகாரிகளின் அறிவிப்புடன் இதை நிறுத்திக்கொள்ளவேண்டும். மறுபரிசீலனை செய்து உடைக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று அரசை கேட்கிறோம். அப்படியும் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றாலும் மிகப்பெரிய அளவில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம்'' என்கிறார் ராஜ்மோகன்.

இந்தித் திணிப்பு, கல்விக்கட்டண உயர்வு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்று சமூக அக்கறையுடன் சமூகம் சார்ந்த விஷயங்களுக்காக போராடிவந்த மாணவர்களை இன்றைக்கு தங்கள் தனிமனித உரிமைகளுக்காக போராடவேண்டிய நிலைக்கு அரசு தள்ளியிருக்கிறது.

(நன்றி : இந்தியா டுடே)

Friday, September 06, 2013

திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் - கசிந்த ஆவணச் சான்று

முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடப்பதை தமிழ்மக்கள் தொடர்ந்து உலகுக்கு எடுத்துக்கூறி வருகிறார்கள். என்றாலும் ராஜபக்‌சா அரசு தொடர்ந்து தமிழர் பகுதிகளில் சிங்களர்களின் அடையாளங்களை புகுத்துவதை செய்துவருகிறது. கண்கூடாக நடக்கும் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டவை என்பதை நிரூபிக்க இதுவரை ஆவணம் எதுவும் கிடைக்காமல் இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 28 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மே 17 இயக்கம் வெளியிட்ட முக்கியமான ஆவணம் ஒன்று, குடியேற்றங்களை இலங்கை அரசு திட்டமிட்டு செய்கிறது என்பதை நிரூபிக்கிறது.இலங்கையின் மன்னார் மாவட்டச் செயலகத்தின் சார்பில் அரசப் பிரதிநிதி எம்.ஒய்.எஸ். தேஷாப்ரியா கையெழுத்திட்டு முசலி என்கிற பகுதியின் பிரிவு செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் தெளிவாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘’இன்று (18.07.2013) பிரிகேடியர் மெர்வின் சில்வா, பிரிகேட் கமாண்டர் 542 பிரிகேட் மற்றும் சிலர் முன்னிலையில் உங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவின்படி இந்த உத்தரவுகளை நீங்கள் பின்பற்றவேண்டும்:

1. 500 குடும்பங்களை குடியமர்த்துவதற்குரிய பொருத்தமான நிலப்பரப்பை கண்டறியவேண்டும்
2. ஒரு வார காலத்திற்குள் நிலம் சர்வே செய்யப்படவேண்டும்
3. இடம்பெயர்ந்தவர்களை பதிவு செய்யும் பணியை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும்.’’

மேற்கண்டவை உள்ளிட்ட பல உத்தரவுகள் அக்கடிதத்தில் உள்ளன. அரசாங்க அலுவல்ரீதியான இக்கடிதம் இலங்கை அரசு நடத்தும் குடியேற்றங்கள் குறித்த முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது என்று மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் கூறுகிறார். 

இலங்கை அரசு தனது கடிதத்தில் உள்நாட்டில் ஏற்கனவே இடம்பெயர்ந்தவர்கள் என்கிற பெயரில் அவர்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறியே சிங்கள மக்களை தமிழர் பகுதிகளில் குடியமர்த்துகிறது. ஆனால் அவை தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள். அங்கே புதிதாக குடியேற்றம் செய்துவிட்டு அதை மீள்குடியேற்றம் என்பதாகக் கூறி தப்பிக்கிறது இலங்கை அரசு. முகாம்களில் வாழும் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டிய அரசு, அரைகுறையாக அவர்களை அனுப்பிவிட்டு, சிங்கள குடியேற்றத்தை செய்து வருகிறது.இதற்கிடையே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரான நவநீதம் பிள்ளை இலங்கையில் பயணம் மேற்கொண்டு இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை குறித்தும், போரின்போது நடந்த மனித உரிமைமீறல்கள் குறித்தும் விசாரணை செய்ய தமிழர் பகுதிகளை பார்வையிட்டு தமிழர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். உலகம் முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய நவநீதம் பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் இலங்கையில் தமிழர் பகுதிகளை ராணுவமயமாக்குவது, சிங்களர்களை குடியேற்றுவது, தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் போன்றவற்றை அவர் விசாரணை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நவநீதம் பிள்ளை இலங்கையின் காணாமல் போன உறவினர்களை தேடும் அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மக்கள் அவரிடம் கதறி அழுத காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்தன. முள்ளி வாய்க்கால் கிராமத்துக்குச் சென்ற போது அங்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ்ப் பெண்கள், தங்களுக்கு இன்னும் வீட்டு வசதிகள், வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றும், சில இடங்களில் தங்களது வயல் மற்றும் விவசாய நிலங்களை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை தங்களுக்கு பெற்றுத்தருமாறும் கேட்டுக் கொண்டனர் என்றும் இலங்கையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடங்களை சிங்கள அடையாளங்களாலும் சிங்கள மக்களை குடியேற்றம் செய்வதாலும் தமிழர் நிலங்கள் அவர்களுக்கு இல்லாமல் செய்வதும், அச்சத்தில் ஊரைவிட்டு அவர்களாகவே வெளியேறச் செய்வதுமே இலங்கை அரசின் நோக்கம்; வெளியாகியுள்ள ஆவணத்தின் மூலம் சிங்கள ராணுவத்தின் துணையுடன் அரச நிர்வாகம் சிங்கள குடியேற்றங்களை நடத்துகிறது என்பதை உணரலாம் என மே 17 இயக்கம் கூறுகிறது. 

(நன்றி: இந்தியா டுடே)