Wednesday, October 20, 2010

வன்மம் உருவாகும் காலம்

அலுவலக வேலையாக தி.நகரில் உள்ள ஜவுளிக்க்டைகளுக்குச் செல்ல வேண்டி இருந்தது. அன்றைக்கு காலையில் வந்து பனகல் பார்க் அருகில் உள்ள புது சரவணாஸ் கடைக்கு எதிரே பாலத்தின் கீழ் உள்ள பார்க்கிங் பகுதியில் என் டிவிஎஸ் சாம்பை நிறுத்தச் சென்றபோது எங்குமே இடமில்லை. தீபாவளி கூட்டம் களை கட்டியிருந்தது. இரண்டு கார்கள் நின்று கொண்டிருந்தன. அவற்றிற்கு இடையே சிறிய இடைவெளி இருந்தது. அதில் கொண்டு சென்று என் வண்டியை நிறுத்தினேன். 


ஒரு காருக்குள்ளிருந்த ஓட்டுனர் இருக்கையிலிருந்தவர் அதட்டலாக “இப்படி வண்டியை போட்டால் நான் எப்படி இறங்குவது?” என்றார். நான் “அந்தப்பக்கமாக இறங்குங்கள். எனக்கு வேறு இடமில்லை வைக்க” என்றேன். அவரோ “இப்படி ஈஸியாக இறங்குறதுக்கு பதிலா அந்தப்பக்கம் போய் இறங்கணுமா?” எனறார். “இதெல்லாம் சின்ன அட்ஜஸ்ட்மென்ட் தானே. எனக்கு வைக்க இடமில்லை. கொஞ்ச நேரத்தில் வந்து எடுத்து விடுவேன்” என்றேன். “எடுக்க முடியுமா முடியாதா?” என்று மிரட்டினார். எனக்கு கோபம் தலைக்கேறியது. “எடுக்க முடியாது. இங்கேதான் வைப்பேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். பின்னால் சன்னமாக “வரும்போது பாரு உன் வண்டியை” என்று முணுமுணுத்தது காதில் விழுந்தது. நான் பாட்டுக்கு நடந்து சென்று மக்கள் திரளோடு கலந்து என் வேலையில் கரைந்து போனேன். 

எல்லாம் முடிந்து வந்து பார்த்தபோது என் வண்டி வைத்த இடத்தில் இல்லை. இரண்டு கார்களையும் காணவில்லை. பகீரென்றது. “இதென்ன கொடுமை? அந்த வண்டியை திருடிச் சென்றவன் என்ன பாடு படுவானோ” என்று நினைத்தவாறே தேடினேன். சற்று தூரத்தில் தென்பட்டது என் வண்டி. அப்பாடா என்றிருந்தது. ஆனால் என் வண்டிக்கு இருபுறமும் நிறைய வண்டிகள். யாராவது வந்து ஒரு வண்டியையாவது எடுத்தாலொழிய என் வண்டி வெளியேற இடம் கிடையாது. எரிச்சலோடு காத்திருந்தேன். 

யாரோ வந்து ஒரு வண்டியை எடுத்து வழி உண்டாக்க, வண்டியை தள்ளினேன். முன் சக்கரத்தில் சுத்தமாக காற்றுஇல்லை. பிடுங்கிவிடப்பட்டிருந்தது. பஞ்சரா என்றும் சந்தேகம் வந்தது. நொந்துகொண்டே வெளியே எடுத்து ஸ்டாண்ட் போட்டு ஸ்டார்ட் செய்தபோது ஸ்டார்ட் ஆகவில்லை.” பெட்ரோலை திற்ந்து விட்டு காலி செய்திருக்கிறார் அந்த பழிவாங்கும் புலி என்று புரிந்தது. நல்லவேளை எதிரிலேயே பங்க் இருந்ததால் தள்ளிக்கொண்டே சென்று பெட்ரோல் போட்டுவிட்டு காற்றடித்தேன். ஸ்டார்ட் செய்ய.. மீண்டும் ஸ்டார்ட் ஆகவில்லை. என்னவென்று காற்று அடித்தவரிடம் கேட்டபோது குனிந்து பார்த்துவிட்டு சொன்னார் “பிளக்கை கழட்டியிருக்காங்க யாரோ” என்றார். இப்போது என்ன செய்வது? கையைப் பிசைந்தேன்.

அவரே வெட்டப்பட்டிருந்த கேபிளை இழுத்து சொருகி ஏதேதோ செய்து ஸ்டார்ட் செய்து கொடுத்தார். “எவன் செஞ்சானோ அவன் நல்லாயிருக்க மாட்டான்” என்று சபித்தார். நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வண்டியில் அலுவல்கம் சென்றேன். ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தேன் வண்டி ஓட்டுகையில். என்னவென்று பிடிபடவில்லை.  அதன் பின் அலுவலகம் சென்று வேலையில் மூழ்கிப்போனேன்.

மாலையில் வந்து மீண்டும் வண்டியை எடுத்து வீடு வந்து சேர்ந்ததும் மீண்டும் வண்டியை மறந்துபோனேன். மறுநால் காலை வண்டியை எடுத்தபோது கிளெட்ச் கையோடு உடைந்து விழுந்தது. உடனே வெளியே போயாக வேண்டும். அப்படியே போட்டுவிட்டு மூக்கால் அழுதுகொண்டே 80 ரூபாயைக் கொடுத்து ஆட்டோவில் வந்தேன். அன்றைக்கு பூராவும் மனதே சரியில்லை. ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை விடுமுறையாதலால் ஒரு மெக்கானிக் க்டையும் இல்லை. இரண்டு நாள் வரை பேருந்திலும் ஆட்டோவிலும் பயணம் தொடர்ந்தது. திட்டமிட்ட வாழ்க்கையில் கையிலிருந்த காசு போவது அலுப்பையும் சோர்வையும் ஒருசேர ஊட்டின.  திங்களன்று காத்திருந்து காலையில் 9 மணிக்கெல்லாம் சென்று கடையில் கொடுத்த போது சாயங்காலம் தான் கிடைக்கும் என்றார் கடைக்காரர். அன்றும் பஸ், ஆட்டோ, யுவகிருஷ்ணா - பாரதிதம்பி வண்டியின் ஓசி பில்லியன் என்று பயணித்தேன். கையிருப்பாய் இருந்த காசு போகும் எரிச்சலைவிட அந்த காரில் அமர்ந்திருந்தவரின் எரிச்சல் என்னை மிகவும் சோர்வூட்டியது. இன்றுதான் வண்டியை மீண்டும் காலையில் எடுத்தேன். வேறு ஏதாவது கழன்று விழுமோ என்கிற பயத்திலேயே ஓட்டினேன். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை.

மனிதர்களில் இத்தனை வன்மம் நிறைந்தவர்களும் உண்டா? அதிர்ச்சியாகவும் ஆயாசமாகவும், கோபமாகவும், எர்ச்சலாகவும், வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. என் பணம் தீர்ந்ததைவிட இத்தனை வன்மம் கொண்டு தண்டிக்கும் அளவிலான எந்தத் தவறையும் நான் செய்யவில்லை என்கிற் நினைவு என்னைத் துரத்துகிறது. சகிப்புத்தன்மையும், சகமனிதரிடம் காட்டும் அன்பும் குறைந்து வன்மம்,குரோதம்,விரோதம் எல்லாம் எவ்வளவு பெரியதாய் இருக்கின்றன?

இதனால் எனக்கு தண்டனை காலம் மூன்று நாட்கள்.

என் வண்டியை சேதப்படுத்த எடுத்துக்கொண்ட காலம் சில நிமிடங்களே இருக்கும்.

எங்களுக்குள்ளான வாக்குவாதம் நடந்த நேரம் சில நொடிகளே!.

ஆனால் அவருக்கு இந்த வன்மத்தை தூண்டியதற்கான உந்துதல் ஒரு நொடிக்கும் குறைவானதாய்த்தனே இருந்திருக்கும்!

ஒரு கேள்வி மண்டையைக் குடைகிற்து.

”இதுவும் கடந்துபோகும்” என்று அந்த நொடியை அவரால் ஏன் கடக்க முடியவில்லை?

10 comments:

 1. அட ராமா............... இதுக்குன்னு மெனெக்கிட்டு இப்படிச் செஞ்சுருக்காரா!!!!
  என்னவோ போங்க. மனுசங்க வரவர....... **** ஆகிக்கிட்டு இருக்காங்க:(

  ReplyDelete
 2. வெளி உலகின் தொடர்புகள் அதிகமின்றி நத்தைக்கூட்டு வாழ்க்கை நடத்தும் மனிதர்கள்தான் இப்படியான வன்மம் நிறைந்த மனத்தினோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் :(((((((

  ReplyDelete
 3. thangal kadai ethire nirththiyatharkaaka motor bike cushion seat pala murai kizhikkappattirukkirathu.ungalukkavathu echcharikkai seythaan.neengal athai perithaaka eduththukkollavillai.neengal seithathum avan seithathum irandume sariyillai.

  ReplyDelete
 4. மனித பண்புகள் மெல்ல மெல்ல மாறிவரும் காலமிது!
  மனித நேயம் மாண்டுவிட்ட கோரமிது! நேருக்கு நேர் மோதிட தைரியமின்றி
  பின்னாலிலிருந்து தாக்கும் இந்த கோழைகளை நினைக்க நினைக்க கோபம் தான் வரும் !காலில் ஒட்டிய சகதிஎன கழுவி மறந்திடுங்கள்!

  ReplyDelete
 5. உங்களுக்கு நேர்ந்த இந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது. உங்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்திய மனிதர் இன்னும் அறிவிலியாகத்தான் இருக்கிறார் என்பது புரிகிறது. மனிதர்களில் பலர் படித்திருந்தும், அனுபவமிருந்தும் அவர்களின் குரங்கு புத்தி கொண்ட மிருக குணம் மாறவில்லை என்பதை இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

  ReplyDelete
 6. மிகவும் வருத்தமான நிகழ்வு.

  நான் பொதுவாக தியாகராய நகரை தவிர்த்து விடுவேன்

  ReplyDelete
 7. This is very discouraging!

  BTW, why am I unable to vote? Plz check the 'karuvi pattai'!

  ReplyDelete
 8. மலருக்கே இந்த சோதனையா !
  படித்ததும் மனசு கசக்கிறது.

  சில நேரங்களில் இப்படியும் சில
  மனிதர்கள் என்று எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் !

  எஸ். எஸ் ஜெயமோகன்

  ReplyDelete
 9. இந்த மாதிரி வண்டியை நிறுத்தும் போது பக்கத்தில் நிற்கும் வண்டியின் எண்களைக் அவர்கள் பார்க்கும் வண்ணம் குறித்துக் கொண்டோம் என்றால் அவர்களுக்கும் ஒரு பயம் இருக்கும். காவல்துறையில் ஒரு புகார் அளித்து எச்சரிக்கவும் முடியும் அல்லது இதுமாதிரி இணையத்தில் எழுதினால் அந்த வண்டியைப் பார்க்கும்போது அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் கைம்மாறு செய்யலாம்.

  ReplyDelete
 10. Anonymous11:58 pm

  Ada eswara.
  Neega Autha pooja podaliya unga vandikku.
  Athan. epadi.
  Enna ponnu neenga...

  ReplyDelete