சென்றவாரம் மதுரையில் மன்னர் கல்லூரி திடலில் பெரிய கூட்டத்தின் நடுவே தோழர் எஸ்.வி.ராஜதுரை, பேராசிரியர் ராமானுஜம் இவர்களுடன் அமர்ந்து பார்த்த நாடகம் வஞ்சியர் காண்டம். பேராசிரியர் ராஜு இயக்கத்தில், பிரளயனின் பிரதியாக்கத்தில் உருவான நாடகம். பெரும்பாலும் பெண்கள் மையத்தில் நடிக்கும் நாடகம் இது. சிலம்பில் மயங்காதவரும் உண்டா என்ன? இளங்கோவடிகளின் கதைசொல்லல் பாணியும், புகார்க்காண்டம், வஞ்சிக்காண்டம், மதுரைக்காண்டம் என்று பயணிக்கும் கதையும், அதில் பொங்கும் காதலும், காமமும், ‘நடந்தாய் வாழி காவேரி’ என வாழ்த்துமாக சிலம்பு தமிழை விரும்பும் எல்லோரும் விரும்பும் ஒன்று. நானும் அவ்வாறே விரும்பியிருக்கிறேன்.பூம்புகாருக்கு முதல்முறை சென்றபோது சிலம்பு ஒரு கற்பனை காவியம் என்பதை மறந்து அது ஏதோ கண்ணகி, கோவலன், மாதவி கால்பட்ட இடம்போன்றதொரு உணர்வு தோன்றியது. அதெல்லாம் கொஞ்ச காலம்.மாய உலகம் அல்லது ஃபேண்டஸி பிடிக்கிற வயதுவரைதான்.
கண்ணகியை மக்களுக்கு அதிகாரத்தை எதிர்த்தவளாகவே காட்டின திரைப்படங்களும் நாடகங்களும்.அப்புறம் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கி, அரசியல் மண்டைக்குள் நுழைந்தவுடன் சிலம்பு முன்வைக்கும் ‘ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்’ என்கிற பகுத்தறிவுக்குஒவ்வாத கருத்தையும், கண்ணகியின் அடிமைத்தனத்தையும் எண்ணி எரிச்சல்படுவதுண்டு. அந்த எரிச்சலின் வெம்மையில் எழுதப்பட்ட நாடகமாக உள்ளது வஞ்சியர் காண்டம்.
கண்ணகி மாதவியை வியக்கும் காட்சியில் அவளுடைய அழகுகுறித்து தமக்கு தெரியாதென்றும் அவளுடைய புலமை குறித்து தான் உணர்ந்துகொண்ட தருணத்தைக் கூறும் பாங்கில் மனம் இன்னும் லயித்துக் கிடக்கிறது.
’அடிமைகள்..அடிமைகள்...’
‘ஆம் நானும் கருவுற்றேன்.. ஏன் தெரியுமா’
என்று அஜிதாவின் குரல் அடிவயிற்றிலிருந்து வெளிப்பட்ட அந்த நொடி உடல் சிலிர்த்து கண்ணீர் உருண்டோடியது. காதல் குறித்து எனக்கா தெரியாது என்று தன் கதையைச் சொல்லும் அந்த வளர்ப்புத்தாயின் காதல்கதை சொல்லொண்ணா துயரை உருவாக்கி உறையச் செய்கிறது.
‘புணர்ச்சியின் உச்சத்தில் என் சுவாசம் சீறும் பாம்பின் ஒலியை ஒத்ததாக இருக்குமென்று என் காதல்கொழுநன் சொல்லுவான்’ - இந்த ஒரு வரி அந்த காதலின் அந்நியோன்யத்தையும் நெருக்கத்தையும், அன்பையும் அவர்களிடையே பொங்கிய காதலின் அளவையும் நமக்குச் சொல்லிவிடுகிறது.
காதல்கொழுநன் கொல்லப்பட்டதை அவள் விவரிக்கும் இடத்தில் நீர்சுரக்காத விழிகள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அடிமையாய் இருக்கும் பெண்ணொருத்தியின் பார்வையில் விரியும் கண்ணகியின் அடிமைத்தனம் பார்வையாளர்களுக்கு கடத்தப்படுவது அழகான முரண்.. பெண்கள் பாலியல்ரீதியாக சுரண்டப்படுவதையும் குறிப்பாக தனக்கு ஏவல் செய்யும் பெண்களை ஆண்கள் தங்கள் இன்பத்துக்காக மட்டுமல்ல, தங்கள் வீட்டுப்பெண்கள் குழந்தைபெற்றுக்கொள்ளும்போது அக்குழந்தைக்கு பாலூட்ட அவர்களும் அதே சமயத்தில் கருவுறுவார்கள் என்கிற செய்தியையும் ஓர் உரையாடல் நமக்கு உணர்த்துகிறது.
இசை இந்நாடகத்துக்கு உயிர்போல. அந்த ஆண்குரலும் பெண்குரலும் இணையும்போது அத்தனை கம்பீரம். ஆனால் தனியாக பெண் குரல் கேட்கும்போது அதில் தெரியும் பார்ப்பனத்தன்மை நாடகத்துக்கு சற்று பொருந்தாததுபோன்று இருக்கிறது. நடிகர்களின் இருப்பு மேடையில் தனியொரு கம்பீரத்தையும் உருவாக்குகிறது. ஒளியமைப்பும் பொருத்தமாக காட்சிகளுக்கேற்ப விளையாடுகிறது.
கோவலன் கண்ணகியின் வண்ணச்சீறடி குடிசையில் படுகிறதே. பட்டுமெத்தையில் படுத்துறங்கிய பெரும் செல்வச் செழிப்புள்ள மாசாத்துவானின் மகள் இப்படி வறுமையில் வாடுகிறாளே என்று குற்றவுணர்வில் வருந்துகிறான். அய்யை கண்ணகியை நோக்கி கேள்விமேல் கேள்வி எழுப்பும் காட்சியில் அய்யையாக நடித்த பெண்ணின் முகபாவம் கண்களில் இன்னும் நிற்கிறது.
நாடகத்தின் இடையே கண்ணகிக்கூத்து நடப்பதாக ஒரு காட்சி வருகிறது. அக்காட்சியில் பெண்கள் கொதித்தெழுந்து கண்ணகியை பத்தினி தெய்வமாக்கியவர்களை சீற்றத்துடன் கேள்விகேட்பார்கள். கண்ணகியை போர்த்தெய்வம் என்று கூறியவர்களை நோக்கிய கேள்வியில் சமகாலத்தில் நாம் அறிந்த போர்கள் எல்லாம் நினைவுக்கு வந்துபோகின்றன. போரின் வலி தெரியுமா உங்களுக்கு என்கிற கேள்வி பார்வையாளர்களுக்கு ஏதுவாக இருந்தாலும் அந்த இடத்தில் நாடகம் சென்ற தோரணையில் அப்பெண்கள் கண்ணகியை போர்த்தெய்வம் என்று சொன்னதற்காக சாடுவதோடு கண்ணகியை பத்தினி தெய்வமாக்கியதையும் அவளுடைய முட்டாள்தனத்தையும், ஏமாந்ததையும் இன்னும் கூடுதலாகச் சொல்லுவார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பு இருந்தது. அந்தக் காட்சி முடிகையில் வசனங்களாக அவை இல்லாமல் கையில் ஒற்றைச் சிலம்புடன் கைநீட்டி நீதிகேட்கும் கண்ணகியின் உருவத்தை உருமாற்றும் பெண்களின் மௌன அசைவுகள் அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றிவிடுகின்றன.
-
வஞ்சியர் காண்டம் நாடகத்தை சென்றவாரம் மதுரையில் பார்த்த நாளிலிருந்து அதுகுறித்து எழுதும் எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. எழுதாமலிருந்தது ஒருவகையில் நல்லதுதான் எனும்படியாக ஒரு சந்திப்பு அமைந்தது. அந்த சந்திப்புக்குப் பின் இதை எழுதுவது இன்னும் பொருத்தம். இலங்கை மலையகத்திலிருந்து வந்திருக்கும் யாழினியை சந்தித்தேன். சென்னை பல்கலைக்கழகம் நடத்திய பெண்ணிய உரையாடலின் ஒரு பகுதியாக அவர் தன்னுடைய கட்டுரையொன்றை வாசித்தார். ‘முகாம் கூத்து’ என்கிற அக்கட்டுரை பல்வேறு கேள்விகளை எழுப்பியது. பல விஷயங்களை அறியத் தந்தது. ‘முகாம் கூத்து’ என்கிற வார்த்தையே புதியது. இலங்கையில் முகாமில் இருக்கும் தமிழர்கள் முகாம்களுக்குள்ளாக நடத்தும் கூத்து முகாம்கூத்து. இந்த முகாம் கூத்தில அதிகம் விரும்பிப் பார்க்கப்படுவது கோவலன்கூத்து என்று குறிப்பிட்டார் யாழினி. இதற்கான காரணத்தை பார்வையாளர்கள் வினவியபோது அவர் சொன்ன பதில் ”மதுரைக்காண்டத்தில், கண்ணகி அரசனிடம் நீதிகேட்டு வந்து மதுரையை எரிப்பதில் முகாம்வாழ் தமிழ்மக்களுக்கு ஒரு ஆறுதல். நம்மால் முடியாததை அரச அதிகாரத்தை எதிர்க்கிறாள் கண்ணகி என்று அதற்காகவே அந்த கோவலன்கூத்தை விரும்புகிறார்கள்” என்று அதற்குப் பின்னான உளவியலைக் கூறினார்.
ஈழம் என்கிற தங்கள் கனவை இழந்து, வீடிழந்து உற்றாரை இழந்து நிற்கும் தமிழர்கள் பலர் தங்கள் குடும்பத்தினரைக் காண்பதற்கென்றே புதிதாக கூத்து கற்றுக்கொண்டு குழுவில் தங்களை இணைத்துக்கொண்டு தாயோ தந்தையோ வாழும் வேறொரு முகாமுக்கு கூத்துகட்டச் சென்று அந்த சாக்கில் அவர்களை பார்த்துவருவதுண்டு என்றார். நெடுநேரம் கல்லாய் உறைந்து கிடந்தேன். இப்படியான ஒரு சூழலில் கோவலன்கூத்தில் வரும் கண்ணகியின் பாத்திரத்தில் அவர்கள் தங்களை வைத்துப் பார்க்கிறார்கள். எனக்கு சென்றவாரம் பார்த்த வஞ்சியர் காண்டம் நினைவுக்கு வந்தது.
நாம் ஒரு பாதுகாப்பான நிலத்தில் இருக்கிறோம். நம் பெண்ணிய தர்க்கங்கள் மிகவும் சரி. கண்ணகியின் அடிமைத்தனத்தை கேள்விகேட்கிறோம். ஆனால் அங்கே முகாம்களில் கண்ணகி விடுதலையின் குறியீடாகிறாள். இந்த விந்தை என்னை உண்மையில் சோர்வுக்குள்ளாக்குகிறது. முகாம் மக்கள் வஞ்சியர் காண்டம் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கான காலம் கனிந்துவரவில்லை. வஞ்சியர்க் காண்டம் போரையும் போர்த்தெய்வமாய் கண்ணகியை வழிபடுவதையும் எதிர்க்கிறது. கிட்டத்தட்ட கண்ணகி முகாம்களில் அப்படித்தான் பார்க்கப்படுகிறாள் என்று தோன்றுகிறது. கண்ணகியை அதிகாரத்தை மறுத்தவளாகக் காட்டும் கூத்துகளை மக்கள் ரசிக்கிறார்கள். தங்களால் முடியாத ஒன்றை கண்ணகி செய்கிறாள் என்று எண்ணுகிறார்கள். அவர்களிடம் நாம் கண்ணகியை வேறுமாதிரி பாருங்கள். அவளுடைய அடிமைத்தனத்தைப் புரிந்துகொள்ளுங்கள் என்று கேட்கும் சக்தி இப்போதைக்கு இல்லை. அவர்கள் பார்க்கட்டும். கண்ணகி இப்போதைக்கு அவர்களுக்கு அதிகாரத்தை எதிர்த்தவளாகவே இருக்கட்டும். என்றாவது ஒருநாள் முகாம்கள் கலைக்கப்பட்டு அந்த மண்ணில் தத்தமது வீடுகளுக்கு அவர்கள் திரும்பட்டும்.
வஞ்சியர்க் காண்டம் பேசும் நுண்ணரசியல்போல, அது சிலம்பை அணுகுவதுபோல ஒரு பிரதியை அல்லது ஆக்கத்தைப் பார்க்கும் போக்கை போர் எப்படியெல்லாம் தின்றிருக்கும்! போர், வேதனை, வலி தவிர வேறொன்றையும் பற்றியும் யோசிக்காத அளவுக்கு அம்மக்களை வைத்திருக்கிறது அதிகார வல்லமை பொருந்திய அரசு. இன்னும் இன்னும் எதையெல்லாம் போர் விழுங்கியிருக்கும்? தமிழ்மக்களின் கலை, அறிவு, நுண்ணரசியல், காதல், கலைகள் என எல்லாவற்றையும் தின்று செரித்து நிற்கும் அரசதிகாரத்தை எதிர்க்கும் ஏதோவொன்றை ஒவ்வொரு பிரதியிலும் தேடும் மனம் எப்போது அமைதியுற்று பெண்ணியமோ அல்லது வேறு எந்த இசமோ பேசப்போகிறது?எந்த நாளில்? எந்த நொடியில்? தெரியவில்லை. ஆனால் கண்ணகி விடுதலையின் குறியீடாகவும் அதிகார எதிர்ப்பின் சித்திரமாகவும் முகாம் மக்கள் மத்தியில் பதிந்துபோன சுவடுகூட இல்லாமல் அவளை பெண்ணிய நோக்கில் விமர்சிக்கும் மனநிலையும் காலமும் விரைவில் அவர்களுக்குக் கிட்டவேண்டும் என்று விழைகிறேன். எவர் கையிலுள்ளது அதற்கான திறவுகோல்?
No comments:
Post a Comment