Tuesday, November 12, 2013

காவல் சீர்திருத்தச் சட்டம் பலன் தருமா?

தமிழ்நாட்டில் தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் மட்டும் 36 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் 8 மரணங்களும் கடந்த 3 மாத காலத்தில் 6 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. காவல்துறை பொதுமக்களுடன் நட்பு பாராட்டுவதில்லை. ஒரு வீட்டின் காவல்காரரைப் பார்த்து வீட்டுக்காரர் பயப்படும் விநோதம் போன்றது இது. ஏன் இந்த அச்சம்? காவலர்களுக்கு உள்ள அதிகாரம்தான். அதிகாரங்கள் சரியாக பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்கிற கேள்விக்கு விடைசொல்லுவதாக காவல்நிலைய மரணங்கள் அதிகரித்துள்ளன. என்கவுண்ட்டர்கள், காவல்நிலைய மரணங்கள், விசாரனை கைதிகளை சித்திரவதை செய்தல், சிறையில் பாலியல் வன்முறை என்று எதுவுமே தமிழகத்துக்கு புதிதில்லை. இப்படியொரு சூழலில்தான் தமிழக அரசு சட்டமன்றத்தில் ஓர் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி அதன்மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய விவாதத்தை முற்றிலும் புறந்தள்ளி மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கியுள்ளது. செப்டம்பர் 2013ல் தமிழக அரசு ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியது.  சட்டமன்றக் கூட்டத்தொடர் இப்போதைக்கு இல்லை எனும் நிலையில் அதற்காக காத்திருக்க இயலாது எனும்போது அசாதாரணமான, எதிர்பாராத, அவசரமான நிலைமை ஏற்பட்டால் மாநில ஆளுநர்  அரசமைப்பு சாசனத்தின் 213வது பிரிவின் கீழ் அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம். அப்படியான அவசரம் எதுவுமே இல்லாத நிலையில் அவசரச்சட்டத்தை ஏன் இயற்றவேண்டும் என்பதே மனித உரிமை அமைப்புகளின் கேள்வியாக உள்ளது. எந்த ஒரு அவசரச் சட்டத்தையும் 6 வார காலத்துக்குள் சட்டமன்றத்தைக் கூட்டி மசோதாவாக அறிமுகம் செய்து சட்டமாக்கவேண்டும் என்பது விதி.

இந்த அவசரச் சட்டம் ஏன் இயற்றப்பட்டது? இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர காலத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்கள் நடந்ததையடுத்து ஜனதா ஆட்சிக்காலத்தில் தேசிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டு அவை பல அறிக்கைகளை அளித்தன. ஆனால் ஆட்சி மாறி மீண்டும் இந்திரா ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அறிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. ஆணையமும் முடிவுக்கு வந்தது. அந்த அறிக்கைகளின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்று கோரி 1996ல் பிரகாஷ் சிங், என்.கே.சிங் என்கிற முன்னாள் காவல்துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதன்பின் நீதிமன்றம் ரிபெய்ரோ தலைமையில் குழு அமைத்தது. 2000-ல் பத்மநாபய்யா குழு அமைக்கப்பட்டது. 2006-ல் சொலி சொராப்ஜி குழு அமைக்கப்பட்டது. இக்குழுக்கள் நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கைகள் அளித்தாலும் அவை கிடப்பில் போடப்பட்டன. அந்த வழக்கு விசாரணை முடிந்து 2006ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு மாநில அரசும் 7கட்டளைகளை நிறைவேற்றி ஒரு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் இயற்றவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழகம் உட்பட சில மாநிலங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை.

இந்நிலையில்தான் மே 2013ல் உச்ச நீதிமன்றம் தானாகவே பீகார் மற்றும் ஹரியானாவில் நிகழ்ந்த காவல்துறை அத்துமீறல்கள் குறித்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது பிரகாஷ் சிங் வழக்கில் எந்தெந்த மாநிலங்களெல்லாம் உச்ச நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்கவில்லை என்று பார்த்து அக்டோபர் 22 அன்று அடுத்தகட்ட விசாரணை நடைபெறுவதாக இருந்தது. ”அந்த நிலையில்தான் நீதிமன்ற அவமதிக்குப்புக்கு ஆளாகமல் தப்பிக்கவே அவசரம் அவசரமாக காவல்துறை சீர்திருத்தங்கள் சட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு.  ஆனால் தேதி குறிப்பிடப்படாமல் அக் 22 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. ” என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன். 

சட்டமன்றத்தில் இதுகுறித்து அக்டோபர் 30 அன்று விவாதம் நடந்தபோது எதிர்க்கட்சிகளான சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்றவை கடுமையாக எதிர்த்தன. ”உச்ச நீதிமன்றத்தின் 7 கட்டளைகளில் 6 கட்டளைகள் உச்ச நீதிமன்றம் கூறியதற்கு நேரெதிராக உள்ளன. ஒரேயொரு கட்டளை மட்டுமே சரியாக பின்பற்றப்பட்டிருக்கிறது’’ என்கிறார்  ஹெச்.ஆர்.எஃப். அமைப்பின் நிறுவனர் ஆஸி  ஃபெர்னாண்டஸ்.

அதென்ன 7 கட்டளைகள்? 
1. மாநில பாதுகாப்பு ஆணையம் ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த ஆணையம் மாநில அரசு காவல்துறை மீது அரசு நிர்வாகம் தேவையற்ற செல்வாக்கு செலுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது இந்த ஆணையத்தின் நோக்கம். துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், வல்லுநர்கள் போன்றோர் இந்த ஆணையத்தில் இருக்கவேண்டும் என்பது விதி.  “பாதுகாப்பு ஆணையத்தின் இந்த நோக்கம் குறித்து குறிப்பிடப்படவில்லை. மாநில ஆணையங்களின் தலைவர்களை உறுப்பினரகளாகப் போட்டிருப்பதும் ஏற்கத்தக்கதல்ல” என்று சட்டமன்றத்தில் பேசினார் மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா. 

2. காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தகுதி அடிப்படையில் வெளிப்படையான முறையில் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும், அவரது பதவிக்காலம் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாகவே இருக்க வேண்டும் என்கிறது கட்டளை.

3.அதுபோலவே மாவட்ட அளவில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளின் பதவிக்காலமும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாக இருக்கவேண்டும் என்கிறது கட்டளை. “ஆனால் எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்படவவேண்டிய பிற நிர்வாக அடிப்படைகளின்பேரில் அவரை பணியிலிருந்து விடுவிக்கலாம் என்று கட்டளை 2 மற்றும் 3 இரண்டிலும் சட்டம் சொல்கிறது. இது தவறான முறையில் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது” என்கிறார் ஜவாஹிருல்லா.

4. காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு பணிகளையும் பிரிக்கவேண்டும் என்பது கட்டளை. இப்போது இவை இரண்டும் ஒன்றாக உள்ளன. ஒரு காவல்நிலையத்தில் இரண்டுக்கும் தனித்தனி காவலர்கள் இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். ‘’இதை மட்டும்தான் தமிழக அரசு முறையாகப் பின்பற்றி இருக்கிறது’’ என்கிறார் ஆஸி ஃபெர்னாண்டஸ்

5. காவல்துறை கண்காணிப்பாளர் நிலைக்குக் கீழ் உள்ள காவல்துறையினரின் இடமாறுதல்,, பணி நியமனம், பதவி உயர்வு மற்றும் பணிகள் தொடர்பான மற்ற விஷயங்களை முடிவு செய்யவும், காவல்துறை கண்காணிப்பாளர் நிலைக்கு மேல் உள்ளவர்கள் குறித்த இதே விஷயங்களில் பரிந்துரை செய்யவும், காவல்துறை நிர்வாக வாரியம் அமைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் கட்டளை. ‘’ஆனால் இந்த அதிகாரத்தை புதிய சட்டத்தின் மூலம் மாநில அரசே எடுத்துக்கொண்டுவிட்டது. இது உச்ச நீதிமன்றத்தின் கட்டளையை மீறுவதாகும்’’ என்கிறார் ஹென்றி திபேன்.

6. காவல் நிலைய மரணம், பலத்த காயம் அல்லது காவலின்போது வன்புணர்ச்சி போன்ற கடுமையான தவறுகள் தொடர்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் நிலைக்கு மேல் உள்ள அதிகாரிகள் அல்லது மாநில அளவிலான அதிகாரிகள் மீதான பொது மக்களின் புகார்கள் குறித்து விசாரிக்க முறையே மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் ஒரு காவல்துறை புகார்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றம். ‘’ஆனால் இந்த ஆணையத்தின் உறுப்பினராக காவல்துறை அதிகாரியான டி.ஜி.பி.யையே நியமித்திருக்கிறது மாநில அரசு. பின் எப்படி பொதுமக்கள் புகார் அளிக்க முன்வருவார்கள். அத்துடன் அங்கீகாரம் பெற்ற நோட்டரி பப்ளிக் ஒருவரிடம் பிரமாண பத்திரம் பெற்றுவந்து புகார் செலுத்தவேண்டும் என்பது சாமான்ய மக்களை சோர்வடையச் செய்யும் நடைமுறை. இப்படியான நடைமுறைகளை பின்பற்றச் சொன்னால் காவல்துறையினரின் மீது புகார் கொடுக்க ஒருவரும் முன்வர மாட்டார்கள்” என்கிறார் ஆஸி ஃபெர்னாண்டஸ்.

7வது கட்டளை மத்திய அரசுக்கு என்பதால் மாநில அரசு அதில் ஒன்றும் தலையிடுவதற்கில்லை. சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தில் இந்த விதிமீறல்களையெல்லாம் பட்டியலிட்டு, அதில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்பது உட்பட எல்லாவற்றையும் எழுத்துப்பூர்வமாக அளித்தேன். ஆனால் முதல்வர் அவை எதையும் கணக்கில் கொள்ளாமல் நிராகரித்துவிட்டார். அவர்கள் பெரும்பான்மை என்பதால் சட்டமும் நிறைவேறிவிட்டது’’ என்கிறார் ஜவாஹிருல்லா. 

காவல்துறையினர் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரியை தொடர்புகொண்டபோது அவர் ‘’இது குறித்து விவரங்கள் ஏதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆகவே கருத்து சொல்லமுடியாது’’ என்று ஒதுங்கிக்கொண்டார். முன்னாள் காவல்துறை அதிகாரியான நாஞ்சில் குமரன் ஐ.பி.எஸ். “இத்தகைய முக்கியமான சீர்திருத்த சட்டத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து விவாதித்து மாவட்டந்தோறும் கூட்டங்கள் நடத்தி மக்களின் கருத்தை அறிந்தபிறகே சட்டமாக்க வேண்டும்.” என்கிறார். பொதுமக்களின் கருத்துகேட்கப்பட்டிருக்கவேண்டும் என்று அழுத்தமாகச் சொல்கிறார் முன்னாள் டி.ஜி.பி. கே.ஆர்.ஷியாம் சுந்தர். அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றால் சட்ட மசோதாவை ஒரு அனைத்துக்கட்சிக் குழுவுக்கு அனுப்பியிருக்கவேண்டும். அதில் உள்ள ஓட்டைகள் சரிசெய்யப்பட்டிருக்கும். ஒருவேளை அது நடந்திருந்தால் மனித உரிமை மீறல்கள் நடக்காமல் இனி தடுக்கப்பட்டிருக்கும்.’’ என்கிறார். மாநில உள்துறை செயலாளரை தொடர்புகொள்ள முயன்றும் இறுதி வரை முடியவில்லை.

‘’இச்சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம். உச்ச நீதிமன்ற விசாரணையில் தமிழக அரசு இச்சட்டத்திற்கு பதில் சொல்லியே தீரவேண்டும்’’ என்கிறார் ஹென்றி திபேன்.

(நன்றி : இந்தியா டுடே)


1 comment:

  1. nice article , you have aptly included hendri , ossie fernandez and jawahirullah. good

    ReplyDelete