Saturday, June 14, 2008

எத்தனை எத்தனை என்.ஜி.ஒ-க்கள்?

- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்)

தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஒ) தொடங்குவது குறித்த வழிமுறைகளை விளக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அங்கே கிடைத்த தகவல்கள் மிக பயனுள்ளதாக இருந்ததோடு பகிர்ந்து கொள்ள வேண்டியதாகவும் இருந்தது.

நம்புங்கள்! இன்னும் கொஞ்ச நாளில் தடுக்கி விழுந்தால் ஒரு என்.ஜி.ஒ அமைப்பின் அலுவலகத்தில்தான் விழவேண்டி வரும். நாட்டில் அத்தனை என்.ஜி.ஒ க்கள் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 1,94,00,000 என்.ஜி.ஒ க்கள் உள்ளன. சென்னை நகரில் மட்டும் 18,000 என்.ஜி.ஒ க்கள் செயல்படுகின்றன. அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் இந்தியாவில் நிகழ்ந்ததால் இத்தனை நிறுவனங்கள் தோன்றினவா? இதுவும் ஒரு காரணம்தான் என்றாலும் உண்மையான நிலையை பார்த்தால் வேறு மாதிரி இருக்கிறது. எல்லா கோயில்களும், சர்ச்சுகளும், மசூதிகளும்,குருத்வாராக்களும் என்.ஜி.ஒ வாகவே பதிவு செய்யபடுகின்றன. விளையாட்டு தொடர்பான நிறுவனங்களும் அப்படித்தான். இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு என்.ஜி.ஒ என்பது நிறைய பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஏன்? கல்வி நிறுவனங்களும் சுய உதவி குழுக்களும்தான்!

ஒத்த கருத்துடைய, தொண்டு செய்ய அக்கறை கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் இணைந்து என்.ஜி.ஒ தொடங்கலாம். ஒருவர் மட்டும் கூட ஒரு என்.ஜி.ஒ நடத்தலாம். பதிவு செய்யலாம். செய்யாமலும் விடலாம். மேற்சொன்னவை எல்லாம் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. நாட்டில் பதிவு செய்யாமல் எத்தனை இருக்கிறதோ தெரியவில்லை. வெளிநாடுகளில் இருந்து நிதி நன்கொடை பெறவேண்டுமானால் அந்த என்.ஜி.ஒ கட்டாயம் பதிவு செய்யபட்டிருக்க வேண்டும். அதோடு மத்திய அரசின் அனுமதி பெற்று மட்டுமே பெற வேண்டும். ஆண்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற்றால் இந்திய அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும். இத்தனை விதிகள் இருந்தாலும் வரும் நிதி சரியாக பயனாளிகளுக்கு போய்ச்சேர்கிறதா என சரி பார்க்கும் வழிமுறைகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன. சுனாமிக்கு மட்டும் இந்தியாவுக்கு வந்த நிதி எக்கச்சக்கம். ஆனால் நாம் நடந்தவற்றை கண்கூடாக கண்டோம்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ள மாநிலங்கள் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம். முதல் இரண்டு மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் நிறைய நிறுவனங்கள் தோன்றியிருக்கலாம்;தமிழ்நாட்டில் சுனாமிக்கு பிறகு புற்றீசல் போல் அவை முளைததை கண்ணால் கண்டதால் அதிலும் சந்தேகமில்லை; மேற்கு வங்கத்தில் எப்படி என்ற கேள்வி குடைந்து எடுக்க பயிற்சியாளரிடம் என் சந்தேகத்தை கேட்க அவர் கூறிய பதில் - "மேற்கு வங்கத்தில் சிந்திப்பவர்களும் சமூக அக்கறை கொண்டவர்களும் அதிகம்".

பொதுவாக முதியோர் நலம், விவசாயம், குழந்தைகள், உடல் ஊனம், பேரழிவு மேலாண்மை, கல்வி, சுற்றுசூழல், சுகாதாரம், எச்.ஐ. வி/எய்ட்ஸ், வீடுகட்டுதல், குறுங்கடன், மக்கள் தொகை பெருக்கம், வறுமை, கிராமப்புற மேம்பாடு, பழங்குடியினர், தண்ணீர், பெண்கள் போன்ற விஷயங்களை கையில் எடுத்து இந்நிறுவனங்கள் செயல்படுவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அரவாணிகள் மத்தியில் செயல்படும் என்.ஜி.ஒ க்கள் ஒன்றிரண்டு மட்டுமே.

இந்நிறுவனங்கள் அனைத்திலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் ஆண்களே இருக்கின்றனர் என்றது புள்ளி விவரம். ஆனால் என்.ஜி.ஒ க்களில் கீழ்மட்டத்தில் பணிபுரிபவர்களில் பெண்களே அதிகமாக ஏன் இருக்கின்றனர் என்ற என் கேள்விக்கு "பெண்கள்தான் குறைந்த ஊதியத்தில் கூட மனநிறைவோடு பணிபுரிய முடியும்." என்ற பதில் கிடைத்தது. ஊதியமே பெறாமல் வீட்டில் அத்தனை வேலைகளையும் ஒரு வேலைக்காரியை போல் செய்யும் பெண்களுக்கு எதோ கொஞ்சம் கொடுத்தால் கூட அந்த பணம் அவர்களுக்கு பெரிதாக தெரிகிறது. பொது துறையோ, தனியார்த்துறையோ, மூன்றாம் துறை என்றழைக்கப்படும் இந்த துறையோ எதுவாக இருந்தாலும் அங்கே அவர்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்பட முடியுமோ அப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது. கீழ்மட்டத்தில் மட்டும் ஏன் பெண்கள் அதிகமிருக்கின்றனர் என்ற என் கேள்வியை நான் கேட்டதும் அங்கே பட்டறைக்கு வந்திருந்த ஒருவர் எனக்கு பெண்ணியவாதி என்று பெயரிட்டார். ஏன் என்று கேள்வி கேட்டாலே அவர்களுக்கு பெண்ணியவாதி என்று பெயரிடும் ஒரு சமூக கட்டமைப்பில் வாழ்கிறோம் என்ற உண்மை கசப்பாக கண் முன் நிற்கிறது. ஆக ஒரு சராசரி பெண் இவ்வகை கேள்வி கேட்க விழைய மாட்டாள், கேட்க கூடாது என்ற பொது புத்தியில் இருந்து அந்த ஆண்மகன் எனக்கு பெண்ணியவாதி என பெயரிட்டார்.

இன்னும் ஒருவர் "முதியோர், பெண்கள், குழந்தைகள் என அத்தனை பேர் மத்தியிலும் செயல்படும் என்.ஜி.ஒ க்கள் இருக்கையில் ஆண்களுக்கான என்.ஜி.ஒ எதாவது இருக்கிறதா?" என்றார். "ஆண்களுக்கு பொதுவாக என்ன பிரச்சனை இருக்கிறது? அவர்களுக்காக என்.ஜி.ஒ செயல்பட?" என்று நான் கேட்க, "நான் சொல்லலை? அவங்க பெண்ணியவாதின்னு" என்றார் முதலாமவர் மீண்டும். ஆண்களுக்கான சுய உதவி குழுக்கள் மட்டும் இருக்கின்றன என்றார் பயிற்சியாளர்.

சட்டப்படி என்.ஜி.ஒ க்கள் தொடங்கப்படும்போதே அதன் குறிக்கோள்களும், செயல்பட போகும் தளத்தையும் நிர்ணயிக்க வேண்டும். ஆனால்,சில என்.ஜி.ஒ க்கள் சீசனுக்கு தகுந்த மாதிரி குறிக்கோள்களை மாற்றி கொள்வது எப்படி? உதாரணமாக பெண்களுக்காக என ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் காலப்போக்கில் திடீரென மீனவர்களுக்கான நிறுவனமாக செயல்பட்டது. பின் சேது சமுத்திர திட்ட எதிர்ப்பு இயக்கம் நடத்தியது. இது எப்படி என்ற என் கேள்விக்கு கிடைத்த பதில் இது. - "'குறிக்கோள்களை குறிப்பிடும்போது பிரச்சனையில் உள்ளவர்களுக்காக இந்நிறுவனம் தொடங்கப்படுகிறது' என ஒரு வரியை சேர்த்து விட்டால் பிரச்சனை தீர்ந்தது. அந்த நேரத்தில் அந்த பிரச்சனை இருந்தது. அதனால் நாங்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்தோம் என்று சொல்லிக்கொள்ளலாம்."

இன்னொரு நபர், தான் ஒரு என்.ஜி.ஒ நடத்துவதாகவும் அதில் அரசாங்க அலுவலகங்களிலும் இன்ன பிற இடங்களிலும் லஞ்சம் வாங்குபவர்களை கையோடு பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பதாகவும், வடசென்னையில் செயல்படுவதாகவும், விருப்பபட்டால் தென்சென்னை ஏரியாவுக்கும் தன் சேவையை விரிவுப்படுத்துவதாகவும் கூறி எல்லோருக்கும் தன் விசிடிங் கார்டை கொடுத்தார். பார்த்தும் சிரிப்பு தாங்கவில்லை. அவர் காங்கிரஸ்காரர் என்று காட்டி கொடுத்தது அது.

சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் செயல்பட இந்தியாவில் உள்ள என்.ஜி.ஒ க்கள், தங்கள் மாதிரியாக கொண்டிருப்பது அறிவியல் இயக்கத்தை தான் என்றார் பயிற்சியாளர். இதுவரை செயல்பட்ட, செயல்பட்டுக்கொண்டிருக்கும் என்.ஜி.ஒ க்களுக்கு புரியாத புதிராக இருப்பது ஒரே ஒரு விஷயம் தான். ஊதியம் கூட இல்லாமல் தன்னார்வ தொண்டர்களை கொண்டு மட்டுமே அறிவொளி இயக்கத்தால் எப்படி இத்தனை சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற முடிந்தது என்பதே அது என்றார் பயிற்சியாளர். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் அவ்வளவு பெரிய அளவிலும், சிறப்பாகவும் வெற்றி பெற எந்த என்.ஜி.ஒ வாலும் முடியவில்லை என்றார்.

"நமக்கு நன்கொடை அனுப்புவதால் வெளிநாடுகளுக்கு என்ன லாபம்?" என்று ஒருவர் எழுப்பிய கேள்விக்கான பதில் மிக முக்கியமானது. "எந்த நாட்டிலிருந்து பணம் வந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. சந்தேகப்பட வேண்டியதில்லை. அமெரிக்காவிலிருந்து வந்தால் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தனக்கு லாபம் இல்லாமல் அமெரிக்கா ஒரு டாலர் கூட வீணாக்காது. இந்தியாவை அவர்களின் சந்தையாக மாற்றுவதற்காகவே, அவர்களின் பொருட்களை இங்கே கொண்டு வந்து விற்கும் நோக்கத்தில் தான் அமெரிக்கா இங்கே உள்ள என்.ஜி.ஒ க்களுக்கு நன்கொடை அனுப்புகிறது. உதாரணமாக திருநெல்வேலி பகுதியில் கோகோகோலா நிறுவனம் அங்கே உள்ள மக்களுக்கு தொண்டு செய்கிறேன் என்று கூறிக்கொண்டு வந்தது. இதற்குப் பின்னே அந்நிறுவனத்தின் தண்ணீர் தேவை இருந்தது. அங்கே தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க பொதுமக்களை தாஜா செய்து நல்ல பெயர் எடுத்து நைசாக தண்ணீர் எடுக்க முயற்சி செய்தது. இது ஒரு உதாரணம் தான். இன்னும் நிறைய இருக்கின்றன. அமெரிக்கா நிறுவனங்களிடம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நாம் ஏமாந்து போவோம். "

நான் பயிற்சி பட்டறையில் எழுப்பிய இரண்டு கேள்விகளுள் ஒரு கேள்விக்கு சரியான பதில் வரவில்லை. ஒரு கேள்விக்கு மிக சரியான பதில் வந்தது.

பதில் வராத கேள்வி : "அரசாங்கம் செய்ய வேண்டிய விஷயங்களை என்.ஜி.ஒ க்கள் செய்வதன் மூலம் அரசாங்கம் அதன் கடமையை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எனக்கு என்.ஜி.ஒ செய்யும். எனக்கு தேவையானது கிடைத்தால் போதும் என்ற மனநிலையை மக்களிடையே என்.ஜி.ஒ க்கள் வளர்க்கின்றன.அவனது போராட்ட உணர்வை மங்க செய்து, அதன் மூலம் அரசாங்கத்தை கேள்வி கேட்க விடாமல் செய்வது எந்த வகை நியாயம்?"

பதில் வந்த கேள்வி: "இத்தனை பிரச்சனைகளை கையில் எடுத்து கொண்டு செயல்படும் என்.ஜி.ஒ க்கள் இருக்கின்றன. தலித்கள் பிரச்னையை கையில் எடுத்துக்கொண்டு செயல்படும் என்.ஜி.ஒ எதாவது ஒன்று சொல்லுங்கள்!!"

பதில் : "எல்லா என்.ஜி.ஒ. க்களும் பெரும்பாலும் தலித்கள் மத்தியில்தான் செயல்படுகின்றன. அவர்கள்தான் திறந்த மனதுடன் இருக்கிறார்கள். "

நான் எழுப்பிய துணை கேள்வி: "தலித்கள் மத்தியில் செயல்படுவது,. என்.ஜி.ஒ க்கள் தலித் பகுதிக்கு சென்று அவர்களுக்கு தேவையானதை செய்வது வேறு. ஆதிக்க சாதியினரால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக செயல்படுவது வேறு. அப்படி செயல்படும் என்.ஜி.ஒ இருக்கிறதா?"

பதில்: "இல்லை. அப்படி ஒரு என்.ஜி.ஒ இருந்தால், நன்கொடை தர யாரும் முன்வர மாட்டார்கள்."

8 comments:

 1. /////"மேற்கு வங்கத்தில் சிந்திப்பவர்களும் சமூக அக்கறை கொண்டவர்களும் அதிகம்".////

  இருபதாம் நூற்றாண்டின் 'சூப்ப‌ர் காமெடி' இதுவாகத்தான் இருக்கவேண்டும். அப்படியான 'சிந்திப்பவர்களும், சமூக அக்கறை கொண்டவர்களும்' சிபிஎம் கட்சியில் தான் ஒட்டுமொத்தமாக இருக்கின்றனர் என்று சொல்லியிருக்கலாமே ஏன் விட்டுவிட்டீர்கள்?!

  நந்திகிராமத்தில், உங்களது தோழர்களுக்கு சமூக அக்கறை அள‌வுக்கு மிஞ்சியிருந்த‌தால்தான், அங்குள்ள அப்பாவி/உழைக்கும் பெண்க‌ளை பாலிய‌ல் ப‌லாத்கார‌ம் செய்திருக்கிறார்களோ???. இது குஜ‌ராத்தில் மோடியின் 'ச‌மூக‌ அக்க‌றை'யுள்ள‌ குண்ட‌ர் ப‌டைக்கு ச‌ற்றும் குறைந்த‌தில்லை என்றுதான் ம‌க்க‌ளால் பார்க்க‌ப்ப‌டுகிற‌து. (ஆதாரம் 'நந்திகிராமம் நடந்தது என்ன?' 'மக்கள் தீர்ப்பாய அறிக்கை' ‍ தமிழ்பதிப்பு, விடியல் பதிப்பகம்)

  மேற்க‌ண்ட‌ செய்தியின் அடிப்ப‌டையில் பார்த்தால் மே.வ. 'காம'ரேடுக‌ளின் சிந்திக்கும் ஆற்ற‌லும், ச‌மூக‌ அக்க‌றையினையும் கேவ‌ல‌மாக‌ ப‌ல்லிளிக்கிற‌து க‌வின்ம‌ல‌ர்.

  ReplyDelete
 2. என்.ஜி.ஓ.க்களைப் பற்றி விமர்சிப்பது மிகவும் சரியானது. அப்படி நீங்கள் விமர்சிக்கப் புகுந்தால், நீங்கள் சிண்டைப்பிடித்துக் கேள்வியெழுப்பியே ஆகவேண்டிய ஒரு சூப்பர் என்.ஜி.ஓ. இருக்கிறது. அதுதான் 'தமிழ்நாடு அறிவியல் இயக்கம்'. அதை முதலில் விமர்சித்துவிட்டு பிறகு பேசலாமே.

  T.N.S.F. (Tamil Nadu Science Forem)
  பற்றி நீங்கள் நிச்சயமாக‌ விமர்சிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதனுடைய செயல்பாடுகள் குறித்து விமர்சிக்க அல்லது விவாதிக்க நீங்கள் தயாரா என்று மட்டும் சொல்லுங்களேன். விவாதத்தை இன்றே தொடங்குவோம்.

  இரணியன்.

  ReplyDelete
 3. ///"இத்தனை பிரச்சனைகளை கையில் எடுத்து கொண்டு செயல்படும் என்.ஜி.ஒ க்கள் இருக்கின்றன. தலித்கள் பிரச்னையை கையில் எடுத்துக்கொண்டு செயல்படும் என்.ஜி.ஒ எதாவது ஒன்று சொல்லுங்கள்!!"///

  'Peace in Process'
  என்கிற‌ பெயரில் ஒரு என்.ஜி.ஓ. சென்னையை அடுத்த‌ சிரீப்பெரும்புதூர் சுற்றியுள்ள‌ கிராம‌ங்க‌ளில் த‌லித் ம‌க்க‌ள் ம‌த்தியில் வேலை செய்கிற‌து. இது ஒரு அமெரிக்க‌ என்.ஜி.ஓ.

  உல‌க‌ம் முழுவ‌தும் உள்ள‌ கோடானுகோடி உழைக்கும் ம‌க்க‌ளின் இர‌த்த‌த்தை 'ஸ்டிரா' இல்லாம‌ல் உறிந்துக் கொழுத்த‌ அமெரிக்காவுக்கு, உழைப்பைத்த‌விர‌ வேறெதுவும் அறிந்திராத‌ த‌லித்துக்க‌ளின் ந‌ல‌ன் குறித்துப் பேச‌ எந்த‌ அக்க‌றையும் இருக்க‌ முடியாது. அந்த‌ உழைக்கும் ம‌க்க‌ளின் இன்றைய‌ இழிநிலைக்குக் கார‌ண‌மான‌வ‌ன், அவ‌ர்க‌ளின் வாழ்க்கை அமைதிக்காக‌ சில‌ ரொட்டித் துண்டுக‌ளை நீட்டுவ‌து எவ்வளவு கேவ‌ல‌மானதோ, அதனினும் கேவலமானது அவற்றை பெற்றுக் கொள்வது. சென்னையில் 18000 என்.ஜி.ஓ.க்க‌ள் இருப்ப‌தாக‌ நீங்க‌ள் இங்கே தெரிவித்திருக்கும் செய்தி மிக‌வும் அச்ச‌மூட்டுகிற‌து. ஏதோ 18000 பீர‌ங்கிக‌ள் சென்னையைச் சூழ்ந்துள்ள‌தாக‌ நினைக்க‌த் தோன்றுகிற‌து.

  ஆகவே தலித்துக்களை இந்த என்.ஜி.ஓக்கள் கண்டுகொள்ள வில்லை என்று கவலைப்படாதீர்கள். தலித்துக்கள் மத்தியிலிருந்து இந்த ஈனர்களை எப்படி வேரோடு பிடுங்கி எறிவது என்பது குறித்து கவலைப்படவேண்டும்.

  இரணியன்.

  ReplyDelete
 4. hellow,
  Mr. eranian,
  Your comments are apolitical. what do you want to say on West bengal govt. You have aself contradiction in your concept. One you critisise BJP at the same time you want to expose CPI(M), means that you also selected nutral path is their any thing like that. If so it will be helping to right wing forces.

  ReplyDelete
 5. அய்யா கண்ணன் அவர்களே!

  எனக்கு ஆங்கிலம் சும்மா எழுத்துக் கூட்டி படிக்கத் தெரியும். யாராவது நண்பர்களின் உதவியுடன் ஆங்கில செய்திகளைப் படித்து புரிந்து கொண்டு, அவர்களின் உதவியுடனேயே பதிலும் செல்லியிருக்கிறேன். இப்போது எனக்கு உதவும் வகையில் இந்த இணைய மையத்தில் யாரும் இல்லாததனால், இதனை உங்களிடத்திலேயே திருப்பி விடுகிறேன்.

  முடிந்தால் தமிழில் செய்தியனுப்பினால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

  நன்றி!

  இரணியன்.

  ReplyDelete
 6. //நீங்கள் சிண்டைப்பிடித்துக் கேள்வியெழுப்பியே ஆகவேண்டிய ஒரு சூப்பர் என்.ஜி.ஓ. இருக்கிறது. அதுதான் 'தமிழ்நாடு அறிவியல் இயக்கம்'. அதை முதலில் விமர்சித்துவிட்டு பிறகு பேசலாமே.//

  மொன்னத்தனமா புரியாத தெரியாதத பத்தி எழுதியே நீயே பெருமை பட்டுகிற ஆள்தான நீ
  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்.ஜி.ஓ. அல்ல அது இயக்கம் அது எந்த வெளிநாட்டு நிதி பெறுவது இல்ல ( உங்களமாதிரி) முழுவதும் மக்கள் பணத்தில் இயக்க ஆதர்வாளர்களின் பணத்தில் மக்களிடை பணியாற்றி வரும் அமைப்பு.

  ReplyDelete
 7. The article explains your experience with the NGO's. What do you think about the kanchipuram 'makkal mandram' who fight for the rights of irular community. They even go to jail for standing behind the oppressed. Is NGO good or bad. Are all NGO's same?. You have left the readers to make their own decision from this article. It would be nice if you added some points regarding what you infer from this and what is the politics behind the NGO's?

  ReplyDelete
 8. நீங்கள் சிண்டைப்பிடித்துக் கேள்வியெழுப்பியே ஆகவேண்டிய ஒரு சூப்பர் என்.ஜி.ஓ. இருக்கிறது. அதுதான்?????????? Oferr Adra

  ReplyDelete