Monday, July 19, 2010

கேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந்த புதிதில் அந்தப் பேட்டி வெளியானது. அதில் அவர் கூறியிருந்தது -  “என் கணவரும் நானும் டிவி பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் சிவாஜியும், பாலாஜியும் நடித்த ‘பொன்னொன்று கண்டேன் பாடல் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த்து. ஒருவரை ஒருவர் கைகளைப் பிடித்துக்கொண்டும், அணைத்துக்கொண்டும் பாடியாடும் காட்சியைப் பார்த்த என் கணவர் என்னிடம் “அவர்கள் இருவரும் ஹோமோக்களா? என்று கேட்டார். நான் “இல்லை. அவர்கள் நண்பர்கள் என்றேன். “பின் ஏன் அணைத்துக்கொண்டு பாடியாடுகிறார்கள்? என்றார். 

ஓரினப்புணர்ச்சியாளர்களை, அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் சமூகம் பார்க்கும் பார்வை வேறாக இருக்கிறது. ஒரு வெள்ளைகாரரால் மிக இயல்பாக அவர்கள் ஓரினப்புணர்ச்சியாளர்களா? என்று கேட்க முடிகிறது. இது ஒரு சாமான்ய இந்தியருக்கு சாத்தியமா? அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்குக் கூட சாத்தியமா? நம் திரைப்படங்கள் ‘அவனா நீ? என்ற அளவில் அதை நகைச்சுவைக்குப் பயன்படுத்துகின்றன.
-          ராதிகாவின் அந்தப் பேட்டி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போதெனக்கு பள்ளிப்பருவம். ஹோமோசெக்ஸ் என்றால் என்னவென்று சரியாகப் புரியாத ஒரு வயது. இரு ஆண்கள் சம்பந்தப்பட்டது என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. கொஞ்ச காலம் கழித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜான் டேவிட் என்ற கொலையாளி நாவரசு என்ற மாணவரை ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததனால் கொலை செய்ததாக ஊடகங்கள் தெரிவிக்க அது குறித்த ஒரு வித அசூயை உண்டாகி இருந்தது.

காலம் உருண்டோடியபின், 2008 இல் டெல்லியில் காலக்கனவு நாடகத்திற்காகச் சென்ற போது ஓரினச்சேர்க்கையாளர்களின் ஒன்றுகூடல் விழாவிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கலை நிகழ்வுகளால் மனதை கொள்ளை கொண்ட அவர்களின் உலகத்தை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ராதிகாவின் பேட்டியைப் பார்த்தததற்கும், டெல்லி நிகழ்விற்கும் இடையே பல ஆண்டுகள் இடைவெளி. இந்த இடைவெளியில் காலமும், நண்பர்களும், இயக்கங்களும், கொஞ்சம் போன்ற வாசிப்பும், சில ஓரினச்சேர்க்கையாளர்களின்  தோழமையும் என் பார்வையை மாற்றியிருந்தன. டெல்லியில் நடக்கும் அந்த நிகழ்வு ஜெர்மன் தூதரகத்தில் உள்ள ஒரு அரங்கில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. என்.டி.டி.வி. போன்ற சானல்களில் அந்நிகழ்வுகளை காண்பிக்கிறார்கள்.
காதல் – சாதி, மொழி, மதம், நாடு அனைத்தையும் கடந்தது. பாலினம் கடந்ததா? ஆண் – பெண் உறவும் ஈர்ப்பும் கலவியும் இயற்கை. ஓரினச்சேர்க்கையோ, இருபாலினச் சேர்க்கையோ இயற்கைக்கு மாறானதா?

அவர்கள் சமீபத்தில் திருநங்கைகளும், திருநம்பிகளும் நடத்திய கோரிக்கை பேரணிக்கான நோட்டீஸ் ஒன்றில் இவ்வாறிருக்கிறது.

2011 ஆம் ஆண்டு தேசிய அளவில் மேற்கொள்ளப்படவிருக்கும் மக்கள்
கணக்கெடுப்பில் திருநங்கைகளும், திருநம்பிகளும் , அவர்கள் தேர்வு
செய்யும் பால்/ பாலின பிரிவினையைத் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
இப்பொழுதுள்ள "ஆண்/ பெண்" என்ற குறுகிய வரையறைக்குள் திணிப்பதைத்
தவிர்க்கவேண்டும்.

சாதி இரண்டொழிய வேறில்லைஎன்பதே நம் சமூகத்தில் முற்போக்கென அறியப்பட்ட நிலையில் இதோ நாங்களும் இருக்கிறோம் என்று உரிமையோடும் வலியோடும் வந்து போராடுகிறது ஒரு மூன்றாம் பாலினம். மூன்றாம் பாலினம் என்பதா பெண்ணினத்தில் சேர்ப்பதா என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள மட்டுமே முடியும். கூடு விட்டு கூடு பாய்ந்தால் மட்டுமே உணர முடியும். அவர்களுக்கு இயற்கையிலேயே தன் பாலினத்தின் மீது மட்டுமே ஈர்ப்பு வருகிறது என்பது எப்படி செயற்கையானதாக இருக்க முடியும்? இயற்கைக்கு முரணானதாக இருக்க முடியும்?

ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம் நாஸ் பவுண்டேஷன் ஐ.பி.சி 377
ஐ எதிர்த்து தொடுத்திருந்த வழக்கில் வயதுவந்த இருவரின் விருப்பத்துடன்
தனிமையில் நடக்கும் பால் சம்பந்தப்பட்ட உறவு குற்றமல்லஎன்று தீர்ப்பு
வழங்கியது. தலைமை நீதிபதிகள் ஏ. பி. ஷா மற்றும் எஸ் முரளீதர் அவர்கள்
வழங்கிய இத்தீர்ப்பு ஓரினக்காதல் குற்றமற்றது என்று அறிவித்தது.

இதோ இன்னுமொரு கோரிக்கை..

“எல்லோருக்கும் தேவையான முறையான மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெற
வேண்டும். ஒருவருடைய பாலியல் வெளிப்பாட்டை மாற்றுவது என்னும் பேரில்
மருந்துகள் மூலமும், மின் அதிர்ச்சி சிகிச்சை வழங்குவது மூலமும்
செய்யப்படும் கொடூர முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும்.
அறிவியல்பூர்வமற்ற, ஆதாரபூர்வமற்ற இந்த முயற்சிகள், மருத்துவப் பணியின்
நன்னெறிகளை அவமதிக்கும் செயல்பாடு என்பது தவிர மனித உரிமை மீறலும் கூட

-          மேற்கண்ட கோரிக்கை ஒரு கணம் இதயத்தை நிறுத்தி பின்னர் மீண்டும் துடிக்க வைத்த்து.

எங்களுடைய விழைவுகளை இயற்கையானவை என்று ஏற்றுக்கொள்ளும்படியும், எங்களது உடை , காதல், வாழ்க்கைத் துணை ஆகியவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை எங்களுக்கு அனுமதிக்குமாறு எங்களது குடும்பங்களைக் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் விருப்பத்திற்கு மாறாக ஆண்-பெண் திருமண உறவிற்குள் எங்களை திணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

-          இது குடும்பங்களுக்கான கோரிக்கை. எங்கள் விருப்பத்திற்கு மாறாக எங்களை ஆண்-பெண் திருமண உறவிற்குள் எங்களை திணிக்க வேண்டாம் என்று கேட்கும் குரலின் வேதனையை உணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் புரிந்துகொள்ளமுடிகிறது.

எங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்பொழுது நியாயமாகவும்,
பொறுப்புணர்ச்சியுடனும் செயல்படும்படி பத்திரிகைகளை கேட்டுக்கொள்கிறோம். எங்களைப் பற்றிய கற்பிதங்களையும் தவறான தகவல்களையும் தொடர்ந்து
வெளியிடுவதையும் தவிர்க்கவும். எங்களையும் எங்களது பிரச்சனைகளையும்
கொச்சைப்படுத்தும் விதங்களில் சித்தரிப்பதைத் தவிர்க்கவும்

 இது ஊடகங்களுக்கான கோரிக்கை. இக்கோரிக்கைகள் எல்லாவற்றிலுமே ஒருவித இரைஞ்சும் தொனி இருப்பதானது மிகவும் தொந்தரவு செய்வதாயிருக்கிறது. ஆனால் அப்படி இரைந்து கேட்க வேண்டிய நிலை தான் இன்று இருக்கிறது.

கேரள மாநிலம்  கோட்டயம் மாவட்டம் சங்களச்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் நான்கு மாணவர்களை தற்காலிகமாக நீக்கியது. ஓரினச்சேர்க்கை சமூகத்தில் நடப்பதை பிரதிபலிக்கும் ‘Secret minds’ என்ற 5 நிமிட குறும்படத்தை அவர்கள் உருவாக்கியதை தவறென்று கூறி அந்த மாணவர்களை நீக்கியது நிர்வாகம்.  இயக்குநர் ஜோ பேபி, எம்.ஏ. (சினிமா மற்றும் தொலைக்காட்சி) இறுதியாண்டு மாணவர். நான் என்ன இங்கே நடக்காததையா சொல்லி விட்டேன்?” என ஆதங்கப்பட்டார். பூனை கண்ணை மூடிக்கொண்டால் இருட்டாகி விடுமா என்ன?

இதேபோன்றதொரு நிலைமை நண்பன் ஸ்ரீஜித்திற்கும் ஒருமுறை ஏற்பட்டது. அவன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இதே போல ஒரு ஐந்து நிமிட குறும்படம் எடுத்ததற்காக அவனை கல்லூரி நிர்வாகம் 20 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து வைத்திருந்தது.

இப்படி ஒரு புரிதலில் நம் சமூகம் இருக்கையில், ஸ்ரீஜித் தான் இயக்கிய கேட்பதும்.. கேட்பதும்..நாடகத்திற்கு அழைத்திருந்தான். அவன் எங்களுக்குச் சின்னப்பிள்ளை. செல்லப்பிள்ளை. எங்கள் நாடகக்குழுவினருக்கு அவன் ஒரு ஆண் என்பது மறந்துபோகும் எங்கள் ‘காலக்கனவுநாடகத்தில் அவன் நடிப்பிட வடிவமைப்பாளர். எங்கள் நாடகத்தில் ஒரு வசனம் வரும் “ஆண்களை பொறுப்புள்ளவர்களாக்குவது எப்படி?என்று. அவனிடம் நாங்கள். “நீயாச்சும் ஆகித்தொலையேன்என்போம்.

எங்கள் இனிய நண்பன் ஸ்ரீஜித் இயக்கிய நாடகமாயிற்றே என்று ஆவலுடன் நாடகத்தைப் பார்க்கச் சென்றேன். அதில் வசுமித்ர- ஆதிரன் எழுதிய ‘கள்ளக்காதல்கவிதைத்தொகுதியிலிருந்து கவிதைகள் எடுத்தாளப்பட்டிருப்பதை ஏற்கனவே சொல்லியிருந்ததால் வசுமித்ரவும் வந்திருந்தார். நாடகத்திற்கு முன்னால் வேறு பல நிகழ்வுகள் இருந்ததால் நாடகம் தொடங்க தாமதமானது. வசுமித்ர அவசரமாகச் செல்ல வேண்டி இருந்ததால் மனதில்லாமல் புறப்பட்டுச் சென்றார்.
வசுமித்ர! நீங்கள் இருந்திருக்க வேண்டும் என்று நாடகம் பார்த்து முடிக்கையில் தோன்றியது.



செய்தித்தாள்களில் வரும் பாலியல் கிளுகிளுப்புச் செய்திகளோடு நாடகம் தொடங்குகிறது. சிறிது நேரத்தில் ஸ்ரீஜித்தும் அநிருத் வாசுதேவனும் மாறிமாறி

உண்மையில் கேட்க நினைப்பது
 ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர் என்று
 இனி எவ்வாறு நடந்துகொள்வீர் என்று

என்று பார்வையாளர்களை நோக்கிக கூறும்போது நிற்க வைத்து கன்னத்தில் அறைவிட்டது போலிருக்கிறது

நிறைய கவிதைகளை நாடகத்தினூடாக எடுத்தாண்டிருக்கிறார்கள். இதை ஒரு கவிதை நாடகம் என்று கொள்ளலாம்.  இன்குலாப்பின்

“யார் வகுத்த விதியில்
எங்கள் காதல் அடங்கும்
எந்த மேகலையின் சுரபியில்
மனத்தீ அடங்கும்

இரண்டு கேள்வியுடனான இவ்வரிகள் மனசுக்குள் ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்புகின்றன.

“நம்மிருவருக்குமிடையே  ஓர் ஒப்பந்தம். கொஞ்ச காலம் நீ நானாகவும் நான் நீயாகவும் வாழ வேண்டுமென.ஒப்பந்தக் காலம் முடிவடைந்த பொழுதொன்றில் சந்தித்துக் கொண்டோம்,நீ நீயாகவும் நான் நானாகவும்

சுகிர்தராணியின் இவ்வரிகளிற்கான காட்சிகளுக்குப் பின் ஒலிக்கின்றன கீழ்கண்ட வரிகள்

“நாங்கள் சிந்திய கண்ணீர் 
நீங்கள் சிந்திராத வரையிலும்
எங்களை உணர்வது அரிது 

 -                  புரிந்துகொள்ளப்படாத அவலம் குரலில் வேதனையாய் ஒலிக்கிறது. அற்புதமான உடல் மொழி, அளவான வசனங்கள், அநிருத் வாசுதேவனின் உச்சரிப்பு அவ்வசனங்களுக்கும் கவிதைகளுக்கும் உயிர் கொடுக்கின்றன.

சங்கரி, சக்தி நடராஜ் ஆகியோரின் உடல் பேசுகிறது.  
சுந்தரராமசாமியின்

“நீ யார்?
மனிதன் தானா?
அப்படியென்றால் என்ன ஊர்

எனத்தொடங்கும் கவிதை வரும் காட்சியில் நாடகமாந்தர்களோடு ஒரு முகமூடியும் கதாபாத்திரமாகவே வருகிறது. நாடகத்தின் மிக அழகான காட்சி அது.  சுமதியின் “பாயுமொளி நீ எனக்குபாடல் செவிகளில் தேனாகப் பாய்கிறது.



“நண்ப
ஆணாகிய என்னிடம் ஆணாகிய நீ
முத்தங்கள் கேட்டு நச்சரிக்கிறாய்
முரட்டுத்தனமாக மறுதலிக்கிறேன்.
முத்தங்களுக்கேது பால்பேதம் என்கிறாய்
அருவருப்பின் உச்சமென்கிறேன்
புன்னகை புரிகிறாய்
உடல் கூசுகிறது நினைத்தாலேவென்கிறேன்
பூத்த புன்னகை சிரிப்பாகிறது
உன் உறுதி கண்டு பயந்து
விலகியோடுகிறேன் சிரிப்பொலி
அடைத்த பாதைகள் விலக்கி

நண்ப
கனவில் நான் உனக்கு இட்ட
நீண்ட முத்த்த்திற்கு பின் நான் பெண்ணானேன்
நீயும் பெண்ணானாய்

நண்ப
பெண்ணாகிய நீ பெண்ணாகிய என்னிடம்
முத்தங்கள் கேட்டு நச்சரிக்கிறாய்
நாணத்துடன் மறுதலிக்கிறேன்
பால் பேதங்கள் அற்ற்வை முத்தங்கள்

வசுமிதர – ஆதிரனின் இந்தக் கவிதை நாடக மாந்தர்களிடையே உச்சரிக்கப்பட்டபோது ஒரு புதிய பொருள் கொள்ளத்தக்கதாயிருந்தது. ஆணாகிய அவன் ஆணாகிய அவனிடம் முத்தம் கேட்பதை நூதனமாக்கியுள்ள நிலையில் பால் பேதங்கள் அற்றவை முத்தங்கள் என்கிற தீர்ப்பெழுதும் கவிதையும் நாடகமும் பரவசப்படுத்துகின்றன. முத்தம்-எத்தனை இனிமையானது? மனதிலுள்ள அன்பையெல்லாம் கூட்டி உமிழ்நீரின் தித்திப்பைக் கலந்து அளிக்கும் முத்தத்தின் சத்தமோ, நிசப்தமோ அதற்கு ஈடேது? ஆனால் அதற்கும் பால்பேதம் பார்க்கும் உலகினை நாடகம் சாடிச் செல்கிறது.

ஆண்-பெண் உறவுகள் என்கிற ஏற்றுக்கொள்ளப்பட்ட விழைவுகளுக்கும், பாலின அடையாளங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே நிற்பவை எங்களுடைய அன்பும், காதலும், அடையாளமும். இவை இயற்கைக்குப் புறம்பானவை என்றும் வெளிநாட்டு இறக்குமதி என்றும் சமுதாயத்தால் தூற்றப்பட்டாலும் எங்களுக்கு இயற்கையானவை, நம்முடைய பண்பாட்டில் தொன்றுதொட்டு இருந்து வருபவை. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் பாலியல் மற்றும் பாலின வரையறைகளுக்குள் அடங்காதவர்கள் என்ற காரணத்தால் எங்களது மனித உரிமைகள் மறுக்கப்படுவது அநீதி என்று முழங்கும் குரலோடு முடிகிறது நாடகம்.

ஒரு குறுங்கனவினை கண்டுகளித்த திருப்தியும் மகிழ்வும் உடலைத் தொற்றிக்கொள்கிறது நாடகம் முடிகையில் உடல்மொழிகளாலான ஒரு நாடகத்திற்கு சொற்களின்றி மௌனமாக உடல்மொழியால் மட்டுமே பாராட்ட முடிந்தது என்னால். விடைபெற்றுக் கிளம்புகையில் ஸ்ரீஜித்  கேட்ட கேள்வி இன்னமும் செவிகளில் ஒலிக்கிறது

பொறுப்புள்ள ஆணாக நான் மாறிட்டேனா?



சென்ற ஆண்டு மே மாதம் ஈழத்தில் நடந்த நிகழ்வுகளுக்குப்பிறகு ஈழப்போராட்டத்திற்கான இயக்கங்களில் மிகத் தீவிரமாக செயல்பட்டான் ஸ்ரீஜித். பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தான். ஈழம் தொடர்பான உண்மையான அக்கறை அவனுக்கிருப்பதை நானறிவேன். அதோடு கூட திருநங்கைகளுக்காக, ஓரினச்சேர்க்கையாளர்களுக்காகவென்று அவர்களோடு இணைந்து பல போராட்டங்களிலும், நிகழ்வுகளிலும் பங்கெடுத்திருக்கிறான். அதற்காகவே  அவனை அவமானப்படுத்தவென்றே பொது சபையில்  அவனுக்கு சிக்னல் கொடுத்து அழைத்த பெரிய மனிதர்களெல்லாம் கூட இருக்கிறார்கள்.  இந்நிலையில் ஒரு பொது நிகழ்விற்குச் சென்ற ஸ்ரீஜித்தை அவனுடைய நண்பர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு கேள்விகள் எழுப்பியுள்ளனர். தி வீக் பத்திரிகையில் பணிபுரியும் கவிதா முரளிதரன் இலங்கைக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை தான் பணியாற்றும் இதழுக்காக தொகுத்தளித்திருந்தார். அந்த தொகுப்பு இலங்கை அரசிற்கு ஆதரவாக இருந்ததாகவும் அப்படிப்பட்டவரிடம் நீ எப்படி நட்பாய்  இருக்கலாமென்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கவிதா முரளிதரன் எழுதியதில் மாற்றுக்கருத்து இருந்தால் அதை நியாயமாக அவரிடம்தான் கேட்க வேண்டும். அத்தோடு இதைத்தான் எழுதவேண்டும் என்று யாருக்கும் யாரும் கட்டளை போட முடியாது. மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவிக்கலாம். அவ்வளவுதான். ஆனால் அன்று ஸ்ரீஜித்திடம் சண்டையிட்ட அவர்கள்  பிரச்சினைக்கு சிறிதும் சம்பந்தமேயில்லாமல் நக்கல் தொனியில் உதிர்த்த வார்த்தைகள் இவை “நீங்க ஈழப்போராட்டத்திற்கு மட்டுமில்லை. ஒரு மாதிரியானவங்களுக்கும் கூட நீங்க போராடுவீங்க இல்லையா?

அதென்ன ஒருமாதிரியானவர்கள்? யார் அவர்கள்? யார் அந்த ஒரு மாதிரியானவர்கள்? அந்த ஒருமாதிரியானவர்களோடு ஸ்ரீஜித்தை ஒரு உணவகத்தில் பார்த்த ஒரு நாளில் “நீங்க ஏன் அவங்க கூடவெல்லாம் இருக்கீங்க. கேவலமா இருக்கு?” என்றிருக்கிறார்கள். தோழர்களே! ஈழ மக்களின் வலியும் வேதனையும் தாங்கமுடியாதது. அவர்களுக்காக போராடும் அதே வேளையில் இங்கு தமிழ்நாட்டில் நடக்கும் எத்தனை பிரச்சனைகளில் நீங்கள் பங்கெடுத்தீர்? இங்குள்ளவர்களுக்கு நேரும் துன்பங்களில் எத்தனை துன்பங்களுக்காக போராடினீர். இன்றளவும் ரெட்டைக்குவளை உள்ள கடைகளை பெரியார் திராவிடர் கழகம் பட்டியலிட்டுக் காண்பிக்கிறதே. உத்தபுரத்தில் இன்னும் எரிகிறதே? சிதம்பரத்தில் நந்தன் நடந்த பாதையை மூடி வைத்திருக்கிறார்களே? சாதி விட்டு சாதி கல்யாணம் செய்து கொண்ட காரணத்திற்காக ஜோடிகளை கொன்று தீர்க்கிறார்களே? திண்ணியத்தில் மலம் தின்னக் கொடுக்கிறார்களே? பெண்களை அன்றாடம் இழிவுபடுத்துகிறார்களே எல்லா இடத்திலும்? சாதியக் கொடுமை தலைவிரித்தாடுகிறதே? என்ன நடவடிக்கை? எதற்காகவாவது நீங்கள் வந்திருக்கிறீர்களா? ஓரினச்சேர்க்கையாளர்களுக்காகவும், திருநங்கைகளுக்காகவும் போராடுவது என்பது உங்களுக்கெல்லாம் அத்தனை கேவலமாகி விட்டதா? அவர்கள் மனிதர்கள் இல்லையா? இச்சமூகத்தில் ஒரு அங்கமில்லையா? அவர்களுக்காக நடக்கும் போராட்டங்களையெல்லாம் நக்கல் செய்வீர்களென்றால் உங்கள் போராட்டங்களை அவர்கள் நக்கல் செய்யலாமா? ஆனால் அவர்கள் செய்யவில்லை தோழர்களே! அவர்கள் அவர்களால் முடிந்த வரை சென்ற ஆண்டு ஒரு உண்ணாநிலை போராட்டத்தை அறிவித்து நடத்திக்காட்டினார்கள். எந்தப் போராட்டமும் ஈழம் என்கிற விஷ்யத்தில் அடையாளப் போராட்டமாக மட்டுமே இருக்க முடியும். எந்தப் போராட்டமும் எதையும் செய்துவிடாது என்ற போதிலும் உங்கள் உணர்வுகளை எங்களால் மதிக்க முடிகிறது. ஆனால் ஈழத்தைத் தவிர மற்றெதற்காகவாவது போராடினால் உடனே “ஈழத்திற்கு என்ன செய்தாய்?என்று கேட்டு அதை மிதிக்கும் உங்களை மதிக்க முடியவில்லை. ஒடுக்கப்பட்டவர்களிலேயே மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ள திருநங்கைகளில் சாதி, மதம், தமிழ், சிங்களம் என்ற பாகுபாடு இல்லை. அவர்களை மனிதர்களாக ஏற்றுக்கொள்வதற்கே படாத பாடு பட வேண்டி இருக்கிறது. இதற்காக போராடாத ஒரு நபர் ஈழத்திற்காக போராடுவதை நான் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனால் ஈழத்திற்கும் போராடி விட்டு, திருநங்கைகளுக்காகவும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்காகவும் போராடும் ஒருவரை நீங்கள் குற்றம் சொல்கிறீர்கள். ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். இவ்வளவுதானா உங்கள் புரிதல்?

திருநங்கைகளும், ஓரினச்சேர்க்கையாளர்களும் ஈழத்திலும் உண்டு நண்பர்களே!

10 comments:

  1. Anonymous9:48 am

    The social construct of male/female is so pervasive that we forget that even among humans there are more than two sexes – neuter (including biological hermaphrodites). In fact the cultural construct of male/ female binary constrains us to view, say neuter gendered or differently sex-oriented people as ‘deviant’ and deem such acts to be ‘un-natural’ which further leads to criminalisation of such acts. If we look the animal world, more than six sex class has been recorded; with diverse sexuality and sexual orientation. In fact the simplistic notion of a Noah’s Ark, with one male and one female specimen sustaining all species, is a far cry from scientific reality. In truth, biological sustenance and reproduction are dependent upon an incredibly complex web of co-dependent factors, including a third sex. Not only is nature more complex than we imagine, it is more complex than we can imagine!

    ReplyDelete
  2. ஸ்ரீஜித்திற்கு என்னால் இப்படியொரு பிரச்னை ஏற்பட்டது எனக்கு தெரியாது. ஆனால் குறிப்பிட்ட அந்தக் கட்டுரைக்கு முன்பு நான் எழுதிய கட்டுரைகளையோ அதற்கு பின்பும் எனது ஊடகத்திலேயே நான் எழுதிய கட்டுரைகளையோ கணக்கிலெடுக்காமல் ஒரே ஒரு கட்டுரையை வைத்து என்னைப் பற்றி முடிவுக்கு வந்து எனது நண்பர்களிடம் பிரச்சாரம் செய்பவர்களை என்னவென்று சொல்ல? அவர்களுக்கு எந்த விளக்கமும் தர வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன் :) கவின், நீங்கள் எழுப்பியிருப்பது முக்கியமான கேள்விகள். ஆனால் எந்த விஷயத்திலும் சரியான புரிதல் இல்லாத அவர்களுக்கு இதில் மட்டும் புரிதல் இருக்குமா என்ன? பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கவிதா!
    ஸ்ரீஜித் இந்த விஷ்யம் குறித்து நெடுநேரம் விவாதித்தான். அவனை அவர்களின் கேள்விகளும் சண்டையிட்ட விதமும் கடுமையாக பாதித்திருந்தது தெரிந்தது. அதன்பிறகே இப்படி ஒன்று எழுதவேண்டும் என தோன்றியது. ஊதுகிற சங்கை ஊதி வைப்போமே.

    ReplyDelete
  4. Anonymous11:38 am

    This suren SRI ANNA's Asst!
    b4 a year i invited sri anna for a Theater workshop.. In college i dono abt 3rd gender nd Iizam....
    Even i use to scold 3rd genders for ther works! and after knowng sri anna he use to tell me and show d life of 3rd genders and abt iizam.... i started to play nd put st plays abt 3rd gender nd Iizam in al colleges... in inter collegiate my plays(sri anna) reached wel... nd only me my frnds too support for 3rd gender nd Iizam nd nw am working with him....

    nd i dosent got a chance to c d KALLA KANAVU! bt sure v will become a reponsible persons...
    nd kavin akka this posting may b kiddish bt dats d fact!
    thanq!

    Suren.M B.Com (corp.Sec) Patrician College....

    ReplyDelete
  5. Sri is my younger bro as well my elder bro. These days i'm sure he is a responsible man.

    But somedays I wonder why he always keep bother himself for the silly comments. I understood he is bit sensitive.

    Its true I had good theater experience working with him and learned good qualities of human being. thanks sri.

    thank kavin for witting this.

    ReplyDelete
  6. your articles looks good and very useful.

    Shall i use some important portion of your blog for my articles about "Homosexual" ?

    Please visit my blog and read my articles about "Homosex"..

    http://guhankatturai.blogspot.com/search/label/Homosexual

    regards,
    Guhan

    ReplyDelete
  7. குகன்!

    நன்றி! you can use. thank you for your comments.

    ReplyDelete
  8. Anonymous3:42 am

    தங்களுக்கு என் நன்றிகள் பல. நீண்ட என் அலுவலக வேலை நேரத்துக்குப் பின், எனதான நண்பனின் பிரிவும் அதன் தொடர்பான என் வாழ்க்கை மீதான குழப்பங்களும் மிகவும் அலைக்கழித்த நாளின் இறுதியில், கட்டற்று அலைபாயும் மனதை மாற்ற வலையில் உலவிய பொழுதில் இந்த பதிவை வாசிக்க நேர்ந்தது. மனம் கனத்து, கண்ணீர் வழிய, துடைக்கவும் தோன்றாது, மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பின், நிம்மதியாய் எனை உறங்கச் செய்வதற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் பல.
    -Tony

    ReplyDelete
  9. Tony!

    ஏதோ ஒரு வகையில் இந்த எழுத்து உஙக்ளை நிம்மதியாய் உறங்கச் செய்தது என்றறிவதே மிகுந்த நிம்மதியைத் தருகிறது. உங்கள் நிம்மதி தொடர வேண்டும்.

    ReplyDelete
  10. very good your articles

    ReplyDelete