- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்)
அவமானப்படுத்தப்பட்டவள்
உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்என்னைக் கண்டெடுத்துள்ளேன்
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக் கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்உறுதி பெற்றது.
நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
என்னைஅவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்
ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.
என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.
-சிவரமணி, (1990)
வயது 22
சிவரமணி - ஈழத்து பெண் கவிஞர். ஈழத்து இலக்கியங்களில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும் பெயர். நம்பிக்கை தெறிக்கும் அவளது வரிகள் எத்தனையோ உள்ளங்களுக்கு உத்வேகம் அளித்தன . மிக குறுகிய காலத்திலேயே ஈழச்சூழலில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவள். இலங்கையின் பெண்ணிய இயக்கங்களோடு தொடர்ந்து தன்னை இணைத்துக்கொண்டு பம்பரமாய் செயல்பட்டவள்.
தன் ஆக்டோபஸ் கரங்களால் பொதுத்தளம், தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுமே அவளை நெருக்கியது. அவளை நினைக்கும்போது மனம் கனத்துதான் போகிறது. 23 வயதே ஆன அந்த இளம் பெண் அத்தனை சின்ன வயதிலேயே புகழ்க்கொடி நாட்டினாள். ஈழத்து பெண்ணாகிய அவளின் ஆரம்பகால கவிதைகளில் தெறித்த நம்பிக்கை சிறிது சிறிதாக தேய்ந்து போர் பற்றிய சலிப்பும் சமூகம் பற்றிய கோபமும் விரக்தியாய் மாறி கவிதைகளின் முகவரியை மாற்றவே செய்தன. ஆனாலும் சிவரமணி தன் மனதிற்கு உண்மையாய் இருந்தாள். அவள் அடி மனதின் எண்ணங்கள் அவள் கவிதைகளில் வார்த்தை வடிவம் பெற்று வந்து விழுந்தன. ஆகவே அவளின் கவிதைகள் அவளை காட்டும் கண்ணாடியை இருந்தன. அதுவே அவளுக்கு சுமையாகவும் போயிற்று. அத்தனை சீக்கிரம் ஒரு பெண்ணை ஏற்றுக்கொண்டு விடுமா இந்த ஆண்களின் சமூகம்? அவள் நிர்பந்தங்களால் சுழற்றி அடிக்கப்பட்டாள். சமூகத்தோடு விடாது போராடினாள். மனதோடு பெரும் போராட்டம் நடத்தினாள்.
எத்தனையோ கவியரங்களில் இன்னும் கவிதை வாசித்து கொண்டிருக்க வேண்டிய அந்த இளம் குயில் ஒரு கட்டத்தில் கவிதை எழுதுவதை நிறுத்தியது. தன் கவிதைகள் யாரிடம் இருந்தாலும் அதை அழித்து விடுமாறு வேண்டி கேட்டுக்கொண்டது. ஆம்! சிவரமணி அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தன் வாழ்வை தானே முடித்துக்கொண்டாள். 23 வயது வரை மட்டுமே வாழ்ந்து முடித்த அவள் வாழ்ந்தது போதும் என எண்ணி 1991 மே 19ம் தேதி யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டாள். அவளின் இறப்பைப்போல் அதிர்ச்சி தருகிறது இறக்கும்முன் அவள் செய்த செயல். தன் கைவசமிருந்த தன்னுடைய அத்தனை கவிதைகளையும் நெருப்பில் இட்டு எரித்து விட்டுச் சென்றிருக்கிறாள். அந்த நெருப்போடு அவள் கவிதைகளும் உணர்வுகளும் சேர்ந்து அழிந்து போயின. தன் இறுதிக்கடிதத்தில் தன் நண்பர்கள் யாரிடமாவது அவளுடைய கவிதைகள் மிச்சமிருந்தால் அவற்றையெல்லாம் அழித்து விடும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தாள். அத்தனை போரையும் உறைய வைத்து விட்டு உலகத்தை விட்டு சென்ற சிவரமணியின் கவிதைகளில் இலங்கையின் மட்டகளப்பு பல்கலைக்கழத்தின் பேராசிரியை சித்ரலேகா மௌனகுருவிடம் எஞ்சியிருந்த அவளுடைய 22 கவிதைகள் அவரால் நூலாக பதிக்கப்பட்டு இன்று அவை மட்டுமே சிவரமணி என்ற பெண் கவிஞரின் பதிவாக நம்மிடையே கிடைத்திருக்கின்றன. ஏன் பெண்ணே? ஏன் உன் கவிதைகளையும் சேர்த்து அழித்துவிட்டு சென்றாய்? சித்ரலேகா மௌனகுரு நூல் முன்னுரையில் குறிப்பிட்டது போல் "ஆண்கள் தங்கள் கவிதைகளை தங்களின் வெற்றியாக பார்க்கிறார்கள். பெண்களோ தங்களின் வடிகாலாக பார்க்கிறார்கள்".- எத்தனை உண்மையான வார்த்தைகள்.! அதனால்தானே தன்னை அழிக்கும்முன் தன் சுவடுகளை அழித்துக் கொண்டாள் சிவரமணி?
சிவரமணி இறந்து 16 வருடங்கள் கடந்து விட்டன. அவளுக்கு பின்னும் அவள் கவிதைகள் வாழ்கின்றன. அவள் கவிதைகள் பல கடுமையான சமூக அரசியல் விமர்சனமாக இருந்தன. இன்று அவை ஈழத்தமிழர் வாழ்வில் உண்மையாகவே உள்ளது.
"ஓரு சிறிய குருவினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய் வீசப்படும்
ஓவ்வொரு குருதி தோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்."
நம்மிடம் வாசிக்க கிடைத்த இது போன்ற சில கவிதைகளைத்தவிர அத்தனையும் அழித்து விட்டு செல்ல முடிந்த அவளால் தன் நினைவுகளை அவளுடைய அன்பர்களிடமிருந்து அழிக்க முடியவில்லை
கிடைத்தவற்றில் சில:
"எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களை கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில்
இலகுவான காரியமில்லை…
தெருவில் அவலமும் பதற்றமுமாய்
நாய்கள் குலைக்கும் போது
பூட்டப்பட்ட கதவுகளை
மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு
எல்லோரும் தூங்கப்போகும் நேரத்தில்
நான்
நாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி
எண்ண முடியாது
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது."
எமது விடுதலை
நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?
விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்
தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?
நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை."
இலங்கையின் போர்ச்சூழலில் அவள் எழுதிய கவிதைகள் இவை.
முனைப்பு
பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.
என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர்.
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.
எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும்.
ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரக் கொட்ட
என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்
தலைகுனிந்து போனதாய்க்
கனவு கண்டனர்.
ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்.
--சி. சிவரமணி.