Saturday, December 05, 2009
வீரபாண்டியன்..
சமீபத்தில் வந்த “பூ” திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி. அது ஒரு கிராமத்துப் பள்ளி. வகுப்பறையில் மாணவர்கள் அனைவரிடமும் “நீங்க வருங்காலத்தில் என்னவாக ஆகப்போறீங்க?” என்று ஆசிரியர் கேட்க ஒவ்வொருவராக எழுந்து கூறும் பதில்கள்...
“ஐஸ் கம்பெனி வைப்பேன் சார்!”
“தீப்பெட்டி கம்பெனி வைப்பேன் சார்!”
“பெட்டிக்கடை வைப்பேன் சார்!”
“டிராக்டர் ஓட்டுவேன் சார்!”
“கண்டக்டர் ஆவேன் சார்!”
பிள்ளைகளின் பதில்கள் அவர்கள் கிராமத்தைத் தாண்டாது. அதிலும் பெண்பிள்ளைகள் தாங்கள் என்னவாகப்போகிறோம் என்று தெரியாமல் பதில் சொல்லாமல் முழிக்கும். அரசுப் பள்ளிகளிலும், மாநகராட்சிப் பள்ளிகளிலும் பெரும்பாலும் நிலைமை இது. இப்படி ஒரு பள்ளியில் படித்து இன்று ஐஏஎஸ் ஆகியிருக்கிறார் 27 வயதேயான வீரபாண்டியன்.
டாக்டர், இஞ்சினியர் ஆகவேண்டுமே என ராப்பகலாக கண்விழித்து டியூசன் வைத்து பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். அரசுப்பணியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு, மக்களுக்கு சேவை செய்யும் நிலையை இன்று அடைந்திருக்கும் வீரபாண்டியன் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும்போது மாலை 6 மணி முதல் இரவு ஒரு மணி வரை ஒரு பரோட்டா கடையில் வேலை பார்த்திருக்கிறார். எப்படி உங்களால் முடிந்த்து என்றால் “பரீட்சை சமயத்தில் நான் நைட் 11 மணிக்குப் மேலே வேலை பார்க்காமல் வந்து படிப்பேன்” என்று சாதாரணமாகச் சொல்கிறார்.
மதுரை அண்ணாநகர் அருந்தமிழர் குடியிருப்பு - இதுதான் வீரபாண்டியன் பிறந்து வளர்ந்த பகுதி. தலித் குடும்பங்கள் மட்டுமே இந்தப் பகுதியில் வாழ்கின்றன. அப்பா கணேசன் தெருத் தெருவாகச் சென்று கூவி பாத்திரம் விற்பவர். அம்மா பெருமாளக்கா மதுரை அரவிந்தர் கண் மருத்துவமனையில் துப்புரவுப்பணியாளராய் இருந்து ஓய்வு பெற்றவர்.
லயோலா கல்லூரியில் பயின்று சமூகவியலில் பட்டம் பெற்றிருக்கும் வீரபாண்டியன் படித்ததெல்லாம் மாநகராட்சிப் பள்ளிகளில்தான். ஐந்தாம் வகுப்பு வரை சாத்தமங்கலம் மாநகராட்சி துவக்கப் பள்ளி. ஆறிலிருந்து பதினொன்றாம் வகுப்பு வரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி. பன்னிரண்டாம் வகுப்பு மட்டும் மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளி. பன்னிரண்டாம் வகுப்பில் புவியியல் பாடத்தில் 200க்கு 197 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாவதாக வந்திருக்கிறார். “நான் இத்தனை மதிப்பெண்கள் பெறுவதற்கு என்னுடைய ஆசிரியர் அன்புச்செல்வன் தான் காரணம்” என்று நன்றியோடு நினைவு கூர்கிறார் வீரபாண்டியன். அப்போதே ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்ற கனவோடு இருந்த வீரபாண்டியனுக்கு அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஒரு லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார். “ஒரே ஒரு பாடத்தில் ஸ்டேட் ராங்க் வாங்கிய எந்த மாணவனுக்கும் இதற்கு முன் இப்படி வழங்கியதில்லை” என்கிறார் வீரபாண்டியன்.
வீரபாண்டியன் குடும்பத்தில் வறிய சூழல் நிலவியது. “வறுமையைக் காரணம் காட்டி என் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகச் சொல்லி என் பெற்றோர் என்னை வற்புறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் நான் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள். மாறாக என் தம்பியும், தங்கையும் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வைக்க முடிந்த்து. என் தம்பி நன்றாக ஓவியம் வரைவான். அந்தத் திறமையை வளர்த்துக் கொண்டு அவன் சென்னை சென்று இன்றைக்கு சினிமாவில் உதவி ஆர்ட் டைரக்டராக இருக்கிறான். அண்ணன் ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்று, தான் உழைத்து எனக்கு பணம் அனுப்பியவன்” என்று தன் சகோதரரையும், பெற்றோரையும் நெகிழ்வோடு அறிமுகப்படுத்தினார் வீரபாண்டியன்.
சென்னை லயோலா கல்லூரி முதல்வர் பாதர் இன்னாசிமுத்துவின் உதவியால் லயோலா கல்லூரி நிர்வாகம் கட்டணம் பெற்றுக் கொள்ளாமல் தங்குமிடம், உணவு ஆகியவற்றை அளித்து வீரபாண்டியனின் ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு உதவியிருக்கிறது. “2003இல் பட்டம் பெற்றேன். 14ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணும் பணி லயோலா கல்லூரியில் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோது நான் ஒரு மூலையில் அமர்ந்து தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் செயலாளர் டாக்டர் வின்சென்ட் எனக்கு பல உதவிகள் செய்திருக்கிறார்” என்கிறார் வீரபாண்டியன். அதன்பின் சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு அரசு குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றிருக்கிறார். முதன் முறை தேர்வு எழுதி நேர்முகத் தேர்வு வரை சென்றும் வெல்ல முடியவில்லை. அதன்பின் இரண்டாம் முறை எழுதி நேர்முகத் தேர்வுக்குச் சென்று ஒரே ஒரு மதிப்பெண்ணில் வெற்றியை இழந்திருக்கிறார். இப்படி விடாது முயன்று 5ஆவது முறை தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். ஆகியிருக்கிறார் வீரபாண்டியன்.
“தமிழ் மீடியத்தில் படித்தேன். ஆனால் தேர்வுகளை ஆங்கிலத்தில்தான் எழுதினேன். நேர்முகத் தேர்வும் ஆங்கிலத்தில்தான். அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஆங்கிலம் வராது என்று நம்மவர்களுக்கு ஒரு பயம் இருக்கிறது. அது தவறு. இறையன்பு, பிரகாஷ் போல எனக்கு நிறைய முன்னோடிகள் இருக்கிறார்கள். நான் சமூகவியலையும், தமிழையும் விருப்பப் பாடங்களாக எடுத்தேன். பொது அறிவிலும், சமூகவியலிலும் இந்திய அளவில் முதலிடம் பெற்றிருக்கிறேன்.
ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றிருக்கும் கஜினி, நந்தகுமார், சக்தி, வெங்கடேஸ்வரன் போன்றவர்கள் அரசு பள்ளிகளில் பயின்றவர்களே. இதில் சக்தி பஸ் வசதி கூட இல்லாத ஒரு குக்கிராமத்தில் படித்தவர். மிகப் பெரிய நிலையை அடைந்த அப்துல்கலாம், அமர்த்தியாசென், சி. ரங்கராஜன் போன்ற மேதைகள் எல்லாம் அரசுப் பள்ளியில் படித்தவர்கள்தான். தாய்மொழியில் கல்வி கற்றால் உதவாது என்ற தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிய வேண்டும். அதுபோலவே சயன்ஸ் குரூப் படித்தால்தான் உசத்தி. ஆர்ட்ஸ் குரூப் படித்தால் கௌரவக் குறைச்சல் என்ற எண்ணமும் இருக்கிறது. நாட்டை ஆளக்கூடியவர்களைப் பாருங்க. ஆர்ட்ஸ் படித்தவர்களாகத்தான் இருப்பாங்க. சயன்ஸ் குரூப் படித்தவர்கள் டாக்டர், இன்ஜினியர் என்று போயிடுவாங்க. ஆர்ட்ஸ் குரூப் படிக்கும் மாணவர்கள் வேலை கிடைக்காது என்றெண்ணி உளவியல்ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அது தேவையில்லை” என்று நம்பிக்கையூட்டுகிறார்.
சரி, ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வீரபாண்டியனுக்குள் வேரூன்றியது? இந்தக் கேள்விக்கு அவரே பதில் கூறுகிறார்.
“அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கவில்லை என்றால் நான் ஐ.ஏ.எஸ். படித்திருக்க மாட்டேன். அதுதான் என்னை தூண்டியது. நான் ஒரு தலித். சேரியில் தான் நான் பிறந்து வளர்ந்தேன். இயல்பாகவே எங்கள் பகுதியில் தலித் இயக்கங்கள் காலூன்றி உள்ளன. அம்பேத்கர் என்ற மாபெரும் தலைவரின் எழுத்துக்கள்தான் என்னை மக்கள் சேவைக்குத் தூண்டின. அதுபோலவே காமராஜரும் எனக்கு மிகப் பிடித்த ஒரு தலைவர். என்னோடு ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு எத்தனையோ வி.ஐ.பி.க்களின் பிள்ளைகள் வந்தார்கள். சிலர் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக வந்தார்கள். அவர்களால் வெல்ல முடியவில்லை.
எனக்கு வீதி நாடகப் பயிற்சி உண்டு. நானே சில நாடகங்களை இயக்கியும் இருக்கிறேன். கல்வி, சுகாதாரம், எயிட்ஸ் விழிப்புணர்வு, ராகிங், பெண்ணியம் போன்ற பல விஷயங்களை நாடகம் மூலம் மக்களுக்குச் சொன்ன அனுபவமுண்டு. வீதி நாடக அனுபவம் சமூக நடவடிக்கைகளை புரிந்து கொள்ள உதவியது. தெளிவான பார்வையையும், ஆழ்ந்த சிந்தனையையும் அளித்து தேர்வுக்கான தயாரிப்பில் உதவியது.
நேர்முகத் தேர்வில் வீதி நாடகக் கலைஞர் சப்தர்ஹஸ்மி, பாப்பாப்ட்டி-கீரிப்பட்டி, உத்தபுரம், போபால் விஷவாயு பற்றி எல்லாம் கேள்விகள் வந்தன. லயோலா கல்லூரியின் AICUF அமைப்பு மூலம் கிராமங்களில் களப்பணிக்குச் சென்ற அனுபவம் உண்டு. நான் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் கூட படித்திருக்கிறேன்.
ஒரு முறை படிப்பைச் சுவைத்து அந்தச் சுவை பிடித்துவிட்டால் பின் உங்களால் அதை விட முடியாது. படித்துப் பாருங்கள்!” என்று சொல்லும் வீரபாண்டியனுக்கு ஆண்டாளுடன் திருமணம் நடந்து சில மாதங்களே ஆகின்றது.
பயிற்சி மைய நிர்வாகி பிரபாகரன், பேராசிரியர் அல்போன்ஸ்ராஜ், பேராசிரியர் இளங்கோ, பேராசிரியர் அமிர்தலெனின், ஓ.பி. சித்தார்த், தொல்.திருமாவளவன், வி.கே.டி. பாலன், நடிகர் சிவகுமார் என்று பலரையும் தான் இன்று அடைந்திருக்கும் நிலைக்குக் காரணமானவர்களாக நன்றியோடு நினைவுகூரும் வீரபாண்டியன் இளைய சமுதாயத்தின் தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் ஓர் எடுத்துக்காட்டு.
வீரபாண்டியன் தந்தை கணேசன் டீக்கடையில் அமர்ந்திருக்கும்போது பிறர் பேசுவதையும், செய்தித்தாள்களில் வரும் செய்திகளையும் வைத்து அதுபற்றி வீரபாண்டியனுடன் கேள்வி கேட்டு மாதிரி நேர்முகத் தேர்வே அவ்வப்போது நடத்தி வந்திருக்கிறார். அப்படி அவர் கேட்ட கேள்விகளில் உதாரணத்திற்கு ஒன்று
“ஒரு மாவட்டத்தை நீ நிர்வாகம் செய்கிறாய். ஓரிடத்தில் தீ விபத்து. மற்றோரிடத்தில் மழை வெள்ளம். இன்னோரிடத்தில் மக்கள் தங்களுக்கு பட்டா கேட்டு போராட்டம் நடத்துகிறாக்ள். நீ எதற்கு முக்கியத்துவம் கொடுப்பாய்?”
டெல்லியில் நடந்த நேர்முகத்தேர்வில் இதுபோலவே பேரழிவு மேலாண்மை குறித்த கேள்விகள் தன்னிடம் கேட்கப்பட்டன என்கிறார் வீரபாண்டியன்.
வீரபாண்டியனைப் பொறுத்தவரை ஐ.எ.எஸ். படிக்க கிராமப்புற மாணவர்களுக்கு 5 மனத் தடைகள் உள்ளன அவை
1) அரசுப் பள்ளியில் கல்வி
2) தமிழ் வழியில் கல்வி கற்றல்
3) ஆர்ட்ஸ் குரூப்பில் பட்டம்
4) பொருளாதார ரீதியாக கீழ்நிலை
5) ஊழல் நிறைந்த இந்நாட்டில் நமக்கெங்கே கிடைக்கப் போகிறது என்ற விரக்தி.
இந்த 5 மனத் தடைகளும் தேவையற்றது. இவற்றை உடைத்த பலர் உள்ளனர். அதனால் கவலை கொள்ளத் தேவையில்லை என்கிறார் வீரபாண்டியன்..
நன்றி - புதிய தலைமுறை
Subscribe to:
Posts (Atom)