Showing posts with label தலித். Show all posts
Showing posts with label தலித். Show all posts

Monday, March 07, 2011

நீண்ட நெடுங்காலமாய் காத்திருக்கிறோம்

தலித்துகளின் உரிமைக்குரலை கம்பீரமாய் முழங்குகிறது இந்தப் பாடல் .  இரைஞ்சும் தொனியை தவிர்த்து உலுக்கும் வரிக்ளோடிருப்பதால். இப்பாடலை பல மேடைகளில் விருப்பத்தோடு பாடியிருக்கிறேன். 

நீண்ட நெடுங்காலமாய் காத்திருக்கிறோம் - நாங்கள்
நெஞ்சுக்குகுழியில் வாழும் கனவைத் தேக்கி நிற்கிறோம்
ஏற்றத்தாழ்வின் துயரங்களை தாங்கிச் சாவதோ?- சம
நீதியென்னும் ஆயுதத்தை ஏந்திப் பிடிக்கிறோம்
                                                                                                          (நீண்ட)
சேரி மக்கள் என்னும் இழிவை தூக்கி எறிகிறோம்
மநுநீதி இழைத்த கொடுமையினை எரிக்க வருகிறோம்
சேர்ந்து வாழும் புதிய வாழ்வை முன்மொழிகிறோம் - அதை
ஏற்கும் மக்கள் யாவரோடும் கரமிணைக்கிறோம்.

ஆண்டைகளின் ஏவல்களை ஏற்க மறுக்கிறோம்- நாங்கள்
அடங்க மறுக்கும் அலையைப்போல குமுறி எழுகிறோம்
இயற்கை வளங்கள் யாவின் மீதும் உரிமை கேட்கிறோம் -அதை
எதிர்த்து மறிக்கும் யாவரோடும் போர் தொடுக்கிறோம்
                                                                                                               (நீண்ட)
பொதுக்கிணற்றில் நீரருந்த பொங்கிப் பாய்கிறோம் - எங்கள்
புழுதி படிந்த கால்களாலே ஊரை அளக்கிறோம்
புனிதம் தீட்டு யாவின் மீதும் காறி உமிழ்கிறோம் - அந்த
புரட்டுகளை எட்டி உதைத்து விரட்டி அடிக்கிறோம்.

வரலாற்றின் நெடுந்தடத்தில் தனித்தே நடந்தோம் - எங்கள்
வாழிடமாம் சேரிகளை சிறையாய் உணர்ந்தோம்
பரம்பரையாய் ஒடுக்குமிந்த சாதி அடுக்கினை
எங்கள் பாட்டாலும் ஜோட்டாலும் அடித்தே தகர்ப்போம்
                    
- ஆதவன் தீட்சண்யா


Sunday, January 30, 2011

தலித் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?


தேர்தல் நெருக்கத்தில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த வேளையில் புதிதாய் எழுந்துள்ள ஒரு சர்ச்சை கவனத்திற்குள்ளாகி இருக்கிறது. தலித் மக்களின் திட்டங்களுக்கான நிதியை வேறு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு திருப்பி விட்ட்து என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் சென்னை நகரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வாழும் 31 பகுதிகளில் கள ஆய்வு நடத்தியது. “சென்னை நகரின் விரிவாக்கங்கள் எந்த வகையிலும் தலித் மக்களை எட்டவில்லை. தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 19 சதவீதம் தலித் மக்கள் ஆனால், சென்னையில் தலித்மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மக்கள்த்தொகை கணக்கெடுப்பிலும் குறைந்துகொண்டேயிருக்கிறது. சென்னைநகரின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக சென்னையிலிருந்து தலித் மக்கள் வெளியேற்றப்படுவதைத்தான் இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மீதமுள்ளவர்கள் கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு போன்றவற்றின் கரைகளில்தான் பெரும்பாலான தலித் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்கென்று குடிநீர், கழிப்பறை, சாக்க்டை போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது. தலித் மக்களுக்கென்று கடந்த 38 ஆண்டுகளில் 72000 வீடுகள் மட்டுமே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டித்தரப்பட்டுள்ளன. 2003ல் “குடிசையில்லா சென்னை” என்கிற இலக்கை தமிழ்நாடு அரசு அறிவித்த்து. ஆனால் தலித் மக்களுக்கு வீடுகள் கட்டித்தராமல் அவர்களை மாநகர எல்லையிலிருந்து வெளியேற்றுவதே நோக்கமாக இருக்கிறது. இவர்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தில் ரூ.3,821 கோடி நிதி செலவிடப்பட்டதாக முதலமைச்சர் கூறுகிறார். அந்த நிதியிலிருந்து இவர்களது வீடுகள் ஏன் புதுப்பிக்கப்படவில்லை?  அந்த நிதி வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.” என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றம்சாட்டுகிறது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின்படி ஒவ்வொரு நூறு ரூபாயிலும் 19 ரூபாய் தலித் மக்களுக்கென செலவிடப்படுவதாக கணக்கிருக்கிறது. இதுவும் கூட 31 ஆண்டு கால தலித் மக்களின் போராட்டத்திற்குப் பிறகே சாத்தியமானது.  ஆனால் நடைமுறையில் இவை இல்லை.
நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்ப்டும் நிதி தலித் மக்களுக்குச் சென்று சேர்வதை உத்தரவாதம் செய்யும் வகையில் 1979ல் ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் மத்திய அரசின் சிறப்புக்கூறு திட்டம் (ஸ்பெஷல் காம்பொன்ண்ட் ப்ளான்) உருவாக்கப்பட்டது. பின்னர் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதன் பெயர் ஷெடியூல்டு சாதியினருக்கான சப்-பிளான் (Scheduled Caste Sub-plan) என்று மாற்றப்பட்டது. இத்திட்டம் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கமே, ஒரு நூறு பேர் கொண்ட கிராமத்தில் இருபது தலித் மக்கள் இருந்தால் அக்கிராமத்திற்கு செலவிடப்படும் தொகையில் ஒவ்வொரு நூறு ரூபாயிலும் இருபது ரூபாய் தலித் மக்களுக்குச் சென்று சேரவேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்துவதே. ஆகவே தமிழ்நாட்டில் 19% சதவிகித தலித் மக்கள் இருப்பதால் செலவு செய்யப்படும் ஒவ்வொரு நூறு ரூபாயிலும் பத்தொன்பது ரூபாய் தலித் மக்களுக்குச் சென்று சேர வேண்டும்.

மத்திய அரசில் 55 செக்டார்களும், 105 துறைகளும் உள்ளன. அதுபோலவே தமிழ்நாடு அரசின்கீழ் 18 செக்டார்களும், 48 துறைகளும் உள்ளன. ஒட்டுமொத்த நிதிநிலை அறிக்கையில் மத்திய மனித வள மேம்பாட்டு, மின்சாரம், போக்குவரத்து, பெட்ரோலியம், கிராமப்புற மேம்பாடு போன்ற துறைகள் பாதிக்கும் மேற்பட்ட நிதியை எடுத்துக்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, 2010-11 பட்ஜெட்டின் மொத்த்த் தொகை 5.25 லட்சம் கோடி ரூபாய் இதில் 2.75 லட்சம் கோடி ரூபாயை மேற்சொன்ன துறைகளே எடுத்துக்கொண்டன.

தமிழ்நாட்டிலும் மின்சாரம், குடிநீர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை ஆகிய ஐந்து அமைச்சகங்களே ஐம்பது சதவிகித நிதியைப் பெறுகின்றன. இருபதாயிரம் கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் 11000 கோடி ரூபாயை இத்துறைகளே எடுத்துக்கொண்டன. மத்தியிலும், தமிழ்நாட்டிலும் இந்த்த் துறைகளே தலித் மக்கள் வாழும் பகுதிகளுக்கான வளர்ச்சித்திட்டங்களுக்குப் பொறுப்பேற்பவை.  தலித் மக்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்படும் தொகை (divisible expenditure), பொது நிதியிலிருந்தும் பயன் பெறும் தலித்மக்களுக்கான தொகை (Indivisible expenditure) என்று தொகையை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்.

தமிழ்நாட்டிலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறையே தலித் மக்களுக்கான நலத்திட்டஙக்ளை செயல்படுத்தும் பொறுப்பிலிருக்கிறது. ஆகவே மற்ற துறைகள் எடுத்துக்கொள்ளும் நிதி தலித் மக்கள் பகுதிகளுக்கும் சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு இத்துறைக்கு உண்டு. ஆனால் அப்படிப்பட்ட கண்காணிப்பு எதுவும் நடைபெறுவதில்லை.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீட்டு வசதித்திட்டம் ஆகியவை பொது நிதியிலிருந்துதான் நடைமுறைப்ப்டுத்தப்படுகின்றன. இதுபோன்ற பொதுநிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டங்களையெல்லம் தலித் மக்களுக்கான நிதியான ஷெடியூல்டு சாதியினருக்கான சப்-பிளானின் கீழ் வருவதாக்க் காட்டப்படவிருக்கின்றன. ஆனால் இந்த்த் திட்ட்த்தால் பயன்பெறுவது தலித் மக்கள் மட்டுமல்ல. எனவே தலித் மக்களுக்கான நிதியை மற்றவர் பயன்படுத்த அனுமதிப்பது சரியல்ல. விதவை பென்ஷன், வேலையற்றோருக்கான உதவித்தொகை,மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் திருமண உதவித்திட்டம் போன்றவையும்  ஷெடியூல்டு சாதியினருக்கான சப்-பிளானின் கீழ் கணக்கு காட்டப்ப்டுகின்றது. இத்திட்டங்களின் கீழ் பயன்பெறுபவர் அனைவரும் தலித் மக்கள் அல்ல. தலித் அல்லாதோரும் இத்திட்டங்களினால் பயன்பெறும்போது இப்படி செய்வது சரியா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.

தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசியோ  ”மற்ற அரசாங்கங்களை விட தி.மு.க. அரசு தலித் மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துகிறது. அவர்களுடைய நிதி வேறெதற்கும் பயன்படுத்தப்படவில்லை” என்று நாளிதழ்களுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
கரகாட்டக்காரன் பட்த்தில் வரும் வாழைப்பழ காமெடி போல, தலித் மக்களுக்கான திட்டங்கள் எங்கே என்று கேட்டாலும் இவைதான் என்றும், பொதுத்திட்டங்களும் இவைதானென்று தமிழ்நாடு அரசு சொல்கிறது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி. சம்பத் தலித்துகளுக்கான நிதியை பயன்படுத்த அரசுக்கு சில ஆலோசனைகளை சொல்கிறார்:

"அரசு கட்டிக்கொடுத்த ஆதிதிராவிடர் குடியிருப்புகளெல்லாம் மிக மிகப் பழசாகி எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பழுது பார்க்கலாம் அரசு. அல்லது புது வீடுகள் கட்டிக்கொடுக்கலாம். புதுச்சேரியில் தலித் மாணவர்க்ளின் மேற்படிப்பிற்கான செலவுகளை அம்மாநில அரசே ஏற்றுக்கொள்கிறது. அத்திட்டத்தை இங்கும் நடைமுறைப்படுத்தலாம். இதன்மூலம் முதல் தலைமுறை மாணவர்க்ளுக்கு பயன்பெறும் வித்த்தில் அத்தொகையை செலவு செய்யலாம்.

ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதிகள் எல்லாம் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. சென்னையில் உள்ள எம்.சி.ராஜா விடுதிக்குச் சென்று பார்த்தபோது அங்கு கண்ட காட்சிகள் மிக்க்கொடுமையானதாக இருந்த்து. ஒரு அரசு மருத்துவமனையின் பிணக்கிடங்கு போலிருக்கிறது. இதை நான் மிகையாகச் சொல்லவில்லை. யார் வேண்டுமானாலும் போய்ப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். மாணவர்களுக்கு குளியலறை கூட இல்லை. வெளியே பொதுஇட்த்தில் ஆளுக்கொரு புறத்தில் நின்று குளிக்கிறார்கள். 8 பேர் மட்டுமே தங்க முடிந்த அறையில் பதினெட்டு பேர் இருபது பேர் என்று தங்குகிறார்கள். இந்த அடிப்படை வசதிகளை எல்லாம் உருவாக்கலாம்.

தலித் குடியிருப்புகளுக்கு வேண்டிய சாக்கடைக் குழாய்கள் அமைத்தல், சாலைகள் அமைத்தல் என்று அடிப்படை வ்சதிகளை அமைக்கலாம். தலித் பகுதிகளில் இரவு பாடசாலைகள் அமைக்கலாம்.
மலம் அள்ளும் தொழிலில் இன்னும் மனிதர்கள் ஈடுப்ட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். ஒரு தொண்டு நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி ஐம்பதாயிரம் பேர் தமிழ்நாட்டில் இன்னும் இந்த பணியைச் செய்கின்றனர். ரயில்வே டிராக்குகளில், பொதுக்கழிப்பிடங்களில், நிறைய மக்கள் கூடும் ஊர்த்திருவிழாக்களில்  என்று எத்தனையோ இடங்களில் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம் தொடர்கிறது. இதனை ஒழிப்பதற்கு திட்டங்கள் தீட்டலாம். அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கலாம். கைரிக்‌ஷா ஒழிக்கப்பட்ட்து போல இதையும் ஒழிக்கலாம்.

அரசு வேலையில் துப்புரவு பணியாளர்களாக தலித்தல்லாதவர்களும் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இந்த வேலை செய்வதில்லை. அதிகாரிகளும் இவர்களுக்கு ஆபீஸ் அட்டெண்டர், எல்க்ட்ரிஷியன், ஓட்டுனர் என்று அவர்களுக்குத் தெரிந்த வேறு வேலைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவுட் சோர்ஸிங் செய்வது போல இவர்களிடத்தில் ஒரு தலித்தை அழைத்து வந்து கொஞ்சம் பணம் கொடுத்து துப்புரவு பணியை செய்ய வைத்து ஊதியத்தை மட்டும் இவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். இப்படியான அநியாயங்களை களைய நடவடிக்கை எடுக்கலாம்." என்றார் பி.சம்பத்

 சமூக சமத்துவ மக்கள் படையின் நிறுவன தலைவர் சிவகாமியிடம் பேசியபோது
”அரசு 3800 கோடி ரூபாய் தலித் மக்களுக்கென்று செலவிட்டிருப்பதாக்க் கூறுகிறது. ஆனால் எந்தெந்த வகையில் அவற்றை செலவு செய்தது என்கிற விவரம் தெரிவிக்கப்படவில்லை. மின்சார இணைப்புகள், சாலைகள் அமைப்பது போன்ற உள்கட்டுமானப் பணிகள் தலித் மக்களின் நலனையும் உள்ளிட்டவைதான் என்றால் மின்சாரத்தை பயன்படுத்தும்படியான வீடுகள் முதலில் தலித்துகளுக்கு இருக்கிறதா என்பது ஒரு கேள்வி. அடுத்து இவர்கள் போடும் நால்வழிச்சாலை போன்றவற்றால் தலித் மக்கள பயன்படுத்தும் நிலையில் இருக்கிறார்களா என்பது இன்னொரு கேள்வி. விவசாயத்திற்கு தேவைப்படும் நீர்ப்பாசனத்திற்கு செலவு செய்த்தாக எடுத்துக்கொண்டால், எத்தனை தலித்துகள் விவசாய நிலம் வைத்திருக்கிறார்கள்? அதற்காக செலவிடப்படும் நிதி எப்படி தலித் மக்களை சென்றடைந்த்தாகச் சொல்ல முடியும்? அப்படியிருக்கையில் அரசின் இந்த அறிவிப்பு ஒரு மோசடி என்றே கருதவேண்டியிருக்கிறது. எந்தெந்த திட்டங்களுக்கு நிதி போனது, அந்த்த் திட்டங்கள் தலித்துகளுக்கு எந்த வகையில் நன்மை செய்த்து, இந்த விஷயங்கள் ஒழுங்காக நடக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க என்ன வழிமுறை – இந்த மூன்று கேள்விகளுக்கும் விடையில்லாதபோது தலித் மக்களின் நிதி மடைமாற்றப்பட்டதாகவே அர்த்தம்” என்றார்.

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தலித் மக்களுக்கான நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே அதிகமிருக்கின்றன. இந்தப் பெருமையைப் பெற்றிருக்கும் தமிழ்நாடு அரசு இந்தக் களங்கத்தைப் போக்கி தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுக்க வேண்டும் என்பதே இப்போதைய கோரிக்கையாக இருக்கிறது.

நன்றி: புதிய தலைமுறை

Saturday, December 05, 2009

வீரபாண்டியன்..


சமீபத்தில் வந்த “பூ” திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி. அது ஒரு கிராமத்துப் பள்ளி. வகுப்பறையில் மாணவர்கள் அனைவரிடமும் “நீங்க வருங்காலத்தில் என்னவாக ஆகப்போறீங்க?” என்று ஆசிரியர் கேட்க ஒவ்வொருவராக எழுந்து கூறும் பதில்கள்...

“ஐஸ் கம்பெனி வைப்பேன் சார்!”
“தீப்பெட்டி கம்பெனி வைப்பேன் சார்!”
“பெட்டிக்கடை வைப்பேன் சார்!”
“டிராக்டர் ஓட்டுவேன் சார்!”
“கண்டக்டர் ஆவேன் சார்!”

பிள்ளைகளின் பதில்கள் அவர்கள் கிராமத்தைத் தாண்டாது. அதிலும் பெண்பிள்ளைகள் தாங்கள் என்னவாகப்போகிறோம் என்று தெரியாமல் பதில் சொல்லாமல் முழிக்கும். அரசுப் பள்ளிகளிலும், மாநகராட்சிப் பள்ளிகளிலும் பெரும்பாலும் நிலைமை இது. இப்படி ஒரு பள்ளியில் படித்து இன்று ஐஏஎஸ் ஆகியிருக்கிறார் 27 வயதேயான வீரபாண்டியன்.

டாக்டர், இஞ்சினியர் ஆகவேண்டுமே என ராப்பகலாக கண்விழித்து டியூசன் வைத்து பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். அரசுப்பணியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு, மக்களுக்கு சேவை செய்யும் நிலையை இன்று அடைந்திருக்கும் வீரபாண்டியன் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும்போது மாலை 6 மணி முதல் இரவு ஒரு மணி வரை ஒரு பரோட்டா கடையில் வேலை பார்த்திருக்கிறார். எப்படி உங்களால் முடிந்த்து என்றால் “பரீட்சை சமயத்தில் நான் நைட் 11 மணிக்குப் மேலே வேலை பார்க்காமல் வந்து படிப்பேன்” என்று சாதாரணமாகச் சொல்கிறார்.

மதுரை அண்ணாநகர் அருந்தமிழர் குடியிருப்பு - இதுதான் வீரபாண்டியன் பிறந்து வளர்ந்த பகுதி. தலித் குடும்பங்கள் மட்டுமே இந்தப் பகுதியில் வாழ்கின்றன. அப்பா கணேசன் தெருத் தெருவாகச் சென்று கூவி பாத்திரம் விற்பவர். அம்மா பெருமாளக்கா மதுரை அரவிந்தர் கண் மருத்துவமனையில் துப்புரவுப்பணியாளராய் இருந்து ஓய்வு பெற்றவர்.

லயோலா கல்லூரியில் பயின்று சமூகவியலில் பட்டம் பெற்றிருக்கும் வீரபாண்டியன் படித்ததெல்லாம் மாநகராட்சிப் பள்ளிகளில்தான். ஐந்தாம் வகுப்பு வரை சாத்தமங்கலம் மாநகராட்சி துவக்கப் பள்ளி. ஆறிலிருந்து பதினொன்றாம் வகுப்பு வரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி. பன்னிரண்டாம் வகுப்பு மட்டும் மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளி. பன்னிரண்டாம் வகுப்பில் புவியியல் பாடத்தில் 200க்கு 197 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாவதாக வந்திருக்கிறார். “நான் இத்தனை மதிப்பெண்கள் பெறுவதற்கு என்னுடைய ஆசிரியர் அன்புச்செல்வன் தான் காரணம்” என்று நன்றியோடு நினைவு கூர்கிறார் வீரபாண்டியன். அப்போதே ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்ற கனவோடு இருந்த வீரபாண்டியனுக்கு அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஒரு லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார். “ஒரே ஒரு பாடத்தில் ஸ்டேட் ராங்க் வாங்கிய எந்த மாணவனுக்கும் இதற்கு முன் இப்படி வழங்கியதில்லை” என்கிறார் வீரபாண்டியன்.

வீரபாண்டியன் குடும்பத்தில் வறிய சூழல் நிலவியது. “வறுமையைக் காரணம் காட்டி என் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகச் சொல்லி என் பெற்றோர் என்னை வற்புறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் நான் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள். மாறாக என் தம்பியும், தங்கையும் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வைக்க முடிந்த்து. என் தம்பி நன்றாக ஓவியம் வரைவான். அந்தத் திறமையை வளர்த்துக் கொண்டு அவன் சென்னை சென்று இன்றைக்கு சினிமாவில் உதவி ஆர்ட் டைரக்டராக இருக்கிறான். அண்ணன் ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்று, தான் உழைத்து எனக்கு பணம் அனுப்பியவன்” என்று தன் சகோதரரையும், பெற்றோரையும் நெகிழ்வோடு அறிமுகப்படுத்தினார் வீரபாண்டியன்.

சென்னை லயோலா கல்லூரி முதல்வர் பாதர் இன்னாசிமுத்துவின் உதவியால் லயோலா கல்லூரி நிர்வாகம் கட்டணம் பெற்றுக் கொள்ளாமல் தங்குமிடம், உணவு ஆகியவற்றை அளித்து வீரபாண்டியனின் ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு உதவியிருக்கிறது. “2003இல் பட்டம் பெற்றேன். 14ஆவது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணும் பணி லயோலா கல்லூரியில் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோது நான் ஒரு மூலையில் அமர்ந்து தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் செயலாளர் டாக்டர் வின்சென்ட் எனக்கு பல உதவிகள் செய்திருக்கிறார்” என்கிறார் வீரபாண்டியன். அதன்பின் சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு அரசு குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றிருக்கிறார். முதன் முறை தேர்வு எழுதி நேர்முகத் தேர்வு வரை சென்றும் வெல்ல முடியவில்லை. அதன்பின் இரண்டாம் முறை எழுதி நேர்முகத் தேர்வுக்குச் சென்று ஒரே ஒரு மதிப்பெண்ணில் வெற்றியை இழந்திருக்கிறார். இப்படி விடாது முயன்று 5ஆவது முறை தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். ஆகியிருக்கிறார் வீரபாண்டியன்.

“தமிழ் மீடியத்தில் படித்தேன். ஆனால் தேர்வுகளை ஆங்கிலத்தில்தான் எழுதினேன். நேர்முகத் தேர்வும் ஆங்கிலத்தில்தான். அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஆங்கிலம் வராது என்று நம்மவர்களுக்கு ஒரு பயம் இருக்கிறது. அது தவறு. இறையன்பு, பிரகாஷ் போல எனக்கு நிறைய முன்னோடிகள் இருக்கிறார்கள். நான் சமூகவியலையும், தமிழையும் விருப்பப் பாடங்களாக எடுத்தேன். பொது அறிவிலும், சமூகவியலிலும் இந்திய அளவில் முதலிடம் பெற்றிருக்கிறேன்.

ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றிருக்கும் கஜினி, நந்தகுமார், சக்தி, வெங்கடேஸ்வரன் போன்றவர்கள் அரசு பள்ளிகளில் பயின்றவர்களே. இதில் சக்தி பஸ் வசதி கூட இல்லாத ஒரு குக்கிராமத்தில் படித்தவர். மிகப் பெரிய நிலையை அடைந்த அப்துல்கலாம், அமர்த்தியாசென், சி. ரங்கராஜன் போன்ற மேதைகள் எல்லாம் அரசுப் பள்ளியில் படித்தவர்கள்தான். தாய்மொழியில் கல்வி கற்றால் உதவாது என்ற தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிய வேண்டும். அதுபோலவே சயன்ஸ் குரூப் படித்தால்தான் உசத்தி. ஆர்ட்ஸ் குரூப் படித்தால் கௌரவக் குறைச்சல் என்ற எண்ணமும் இருக்கிறது. நாட்டை ஆளக்கூடியவர்களைப் பாருங்க. ஆர்ட்ஸ் படித்தவர்களாகத்தான் இருப்பாங்க. சயன்ஸ் குரூப் படித்தவர்கள் டாக்டர், இன்ஜினியர் என்று போயிடுவாங்க. ஆர்ட்ஸ் குரூப் படிக்கும் மாணவர்கள் வேலை கிடைக்காது என்றெண்ணி உளவியல்ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அது தேவையில்லை” என்று நம்பிக்கையூட்டுகிறார்.

சரி, ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வீரபாண்டியனுக்குள் வேரூன்றியது? இந்தக் கேள்விக்கு அவரே பதில் கூறுகிறார்.

“அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கவில்லை என்றால் நான் ஐ.ஏ.எஸ். படித்திருக்க மாட்டேன். அதுதான் என்னை தூண்டியது. நான் ஒரு தலித். சேரியில் தான் நான் பிறந்து வளர்ந்தேன். இயல்பாகவே எங்கள் பகுதியில் தலித் இயக்கங்கள் காலூன்றி உள்ளன. அம்பேத்கர் என்ற மாபெரும் தலைவரின் எழுத்துக்கள்தான் என்னை மக்கள் சேவைக்குத் தூண்டின. அதுபோலவே காமராஜரும் எனக்கு மிகப் பிடித்த ஒரு தலைவர். என்னோடு ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு எத்தனையோ வி.ஐ.பி.க்களின் பிள்ளைகள் வந்தார்கள். சிலர் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக வந்தார்கள். அவர்களால் வெல்ல முடியவில்லை.
எனக்கு வீதி நாடகப் பயிற்சி உண்டு. நானே சில நாடகங்களை இயக்கியும் இருக்கிறேன். கல்வி, சுகாதாரம், எயிட்ஸ் விழிப்புணர்வு, ராகிங், பெண்ணியம் போன்ற பல விஷயங்களை நாடகம் மூலம் மக்களுக்குச் சொன்ன அனுபவமுண்டு. வீதி நாடக அனுபவம் சமூக நடவடிக்கைகளை புரிந்து கொள்ள உதவியது. தெளிவான பார்வையையும், ஆழ்ந்த சிந்தனையையும் அளித்து தேர்வுக்கான தயாரிப்பில் உதவியது.

நேர்முகத் தேர்வில் வீதி நாடகக் கலைஞர் சப்தர்ஹஸ்மி, பாப்பாப்ட்டி-கீரிப்பட்டி, உத்தபுரம், போபால் விஷவாயு பற்றி எல்லாம் கேள்விகள் வந்தன. லயோலா கல்லூரியின் AICUF அமைப்பு மூலம் கிராமங்களில் களப்பணிக்குச் சென்ற அனுபவம் உண்டு. நான் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் கூட படித்திருக்கிறேன்.
ஒரு முறை படிப்பைச் சுவைத்து அந்தச் சுவை பிடித்துவிட்டால் பின் உங்களால் அதை விட முடியாது. படித்துப் பாருங்கள்!” என்று சொல்லும் வீரபாண்டியனுக்கு ஆண்டாளுடன் திருமணம் நடந்து சில மாதங்களே ஆகின்றது.

பயிற்சி மைய நிர்வாகி பிரபாகரன், பேராசிரியர் அல்போன்ஸ்ராஜ், பேராசிரியர் இளங்கோ, பேராசிரியர் அமிர்தலெனின், ஓ.பி. சித்தார்த், தொல்.திருமாவளவன், வி.கே.டி. பாலன், நடிகர் சிவகுமார் என்று பலரையும் தான் இன்று அடைந்திருக்கும் நிலைக்குக் காரணமானவர்களாக நன்றியோடு நினைவுகூரும் வீரபாண்டியன் இளைய சமுதாயத்தின் தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் ஓர் எடுத்துக்காட்டு.


வீரபாண்டியன் தந்தை கணேசன் டீக்கடையில் அமர்ந்திருக்கும்போது பிறர் பேசுவதையும், செய்தித்தாள்களில் வரும் செய்திகளையும் வைத்து அதுபற்றி வீரபாண்டியனுடன் கேள்வி கேட்டு மாதிரி நேர்முகத் தேர்வே அவ்வப்போது நடத்தி வந்திருக்கிறார். அப்படி அவர் கேட்ட கேள்விகளில் உதாரணத்திற்கு ஒன்று
“ஒரு மாவட்டத்தை நீ நிர்வாகம் செய்கிறாய். ஓரிடத்தில் தீ விபத்து. மற்றோரிடத்தில் மழை வெள்ளம். இன்னோரிடத்தில் மக்கள் தங்களுக்கு பட்டா கேட்டு போராட்டம் நடத்துகிறாக்ள். நீ எதற்கு முக்கியத்துவம் கொடுப்பாய்?”
டெல்லியில் நடந்த நேர்முகத்தேர்வில் இதுபோலவே பேரழிவு மேலாண்மை குறித்த கேள்விகள் தன்னிடம் கேட்கப்பட்டன என்கிறார் வீரபாண்டியன்.

வீரபாண்டியனைப் பொறுத்தவரை ஐ.எ.எஸ். படிக்க கிராமப்புற மாணவர்களுக்கு 5 மனத் தடைகள் உள்ளன அவை
1) அரசுப் பள்ளியில் கல்வி
2) தமிழ் வழியில் கல்வி கற்றல்
3) ஆர்ட்ஸ் குரூப்பில் பட்டம்
4) பொருளாதார ரீதியாக கீழ்நிலை
5) ஊழல் நிறைந்த இந்நாட்டில் நமக்கெங்கே கிடைக்கப் போகிறது என்ற விரக்தி.
இந்த 5 மனத் தடைகளும் தேவையற்றது. இவற்றை உடைத்த பலர் உள்ளனர். அதனால் கவலை கொள்ளத் தேவையில்லை என்கிறார் வீரபாண்டியன்..

நன்றி - புதிய தலைமுறை