- ஆதவன் தீட்சண்யா
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியர். இலங்கை தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட கட்சியின் முன்னெடுப்பில் உருவான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். மார்க்சீய அறிதல்முறை மற்றும் தலித் உள்ளுணர்வின் வழியே சமூகத்தின் அடிப்படையையும் நிகழ்வுப் போக்குகளையும் விளங்கிக் கொண்டவர். தமிழர் என்ற பொது அடையாளத்திற்கு வெளியே தாழ்த்தப்பட்ட மக்களை நிறுத்திவைப்பதற்கு சாதியம் வழங்கிக் கொண்டிருந்த உளுத்துப்போன நியாயங்களையும் நடைமுறைகளையும் தனது எழுத்தாக்கங்கள் வழியே அம்பலப்படுத்தியவர். அவரது எழுத்துகள் அவரை தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி என்ற பெருமைக்கு உயர்த்தி நிறுத்தியுள்ளன. விழுங்க முடியாத முள் அல்லது மறக்க முடியாத சொல்லாக அவரது பெயர் மேலெழுந்து வந்தது. அ.மார்க்ஸ், தஞ்சை பிரகாஷ் போன்ற தமிழக எழுத்தாளர்கள் பலருடனும் தோழமை கொண்டிருந்தவர்.
... இப்படி சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு புரட்சிகரமான வாழ்வைக் கொண்டிருந்த தோழர் கே.டானியல், மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்து 1986 மார்ச் 23 அன்று தஞ்சையில் காலமானார்.வெண்மணிக்குப் போய் அந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு வரவேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறாமலே போய்விட்டதென்கிறார் அவரது உற்றத்தோழர் வி.ரி.இளங்கோவன். பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளும் டானியல் நினைவுநாளும் ஒன்றுதான். டானியலின் கல்லறையை மக்கள் கலை இலக்கியக் கழகம் கட்டியெழுப்பியிருந்ததாக தோழர்கள் சிலர் கூறினார்கள். அ.மார்க்ஸுக்கும், பொ.வேலுச்சாமிக்கும் இதில் கூடுதல் பங்களிப்பு இருந்திருக்கிறது. கடந்த சிலவருடங்களில் மாதம் ஒருமுறையாவது ஏதேனுமொரு வேலையாக தஞ்சாவூருக்குப் போய்வந்து கொண்டுதானிருக்கிறேன். டானியலின் கல்லறையை இம்முறையாவது பார்த்துவிட்டு வரவேண்டும் என்று ஒவ்வொருமுறை போகும்போதும் நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் நிகழ்ச்சிகள், அதற்குப் பிறகு தோழர்களுடனான சந்திப்புகள் என்று இருந்துவிட்டு கிளம்பி வந்து வண்டி பிடிப்பதே வழமையாய் இருந்தது. இம்முறையும் அப்படி வந்துவிட்டிருந்தால் மனம் தொந்திரவு அடைந்திருக்காது என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்.
2010 ஜனவரி 22 அன்று தஞ்சை மாவட்ட தமுஎகச செயலாளர் களப்பிரனின் தங்கை திருமணம். மண்டபத்திலிருந்து அறைக்குத் திரும்பி தோழர்கள் தஞ்சை சாம்பான், சோமலிங்கம் ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். கொஞ்சநேரத்தில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவும் திரைத்துறையில் பணியாற்றி வரும் தோழர் சசிகுமாரும் வந்து சேர்ந்தார்கள். உரையாடல் எனது இலங்கைப் பயணம் குறித்து திரும்பியது. ( ஆதவன் எப்படி போய்வந்தார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று விஷமத்தனமாக பாவ.செயப்பிரகாசம் பழிபோட்டுக் கொண்டிருக்கிறாரே அந்த பயணம் பற்றியதுதான். அவருக்கு பதில் சொல்ல இதுவல்ல இடம். வேறு இடம் கிடைத்தாலும் அவரது ஊத்தை உளறல்களுக்கு பதில் சொல்லி ஆகப்போவதென்ன?) மலையகத்திலாகட்டும் கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்திலாகட்டும் அங்குள்ள எழுத்தாளர்கள் மறைந்த தோழர் டானியல் மீது வைத்திருக்கும் ஈடுபாடு அளவற்றதாய் இருப்பதையும், ஹரிகிருஷ்ணனின் மணல்வீடு டானியல் சிறப்பிதழாக வெளியானதை அவர்களில் பலர் நினைவு கூர்ந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தேன். டானியலின் நாவல்கள் குறித்து புதுவிசையில் லெனின் மதிவானம் எழுதிய கட்டுரை, டென்மார்க்கிலிருக்கும் தோழர் கரவைதாசன் கொண்டு வரவிருக்கும் இனி இதழில் வி.ரி.இளங்கோவன், சிவசேகரம், சி.கா.செந்திவேல், எஸ்.சந்திரபோஸ் ஆகியோர் டானியல் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் என்று அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருந்த போதுதான், டானியல் கல்லறைக்குப் போவமா தோழர் என்று கேட்டேன். பிறகென்ன, ஐந்துபேரும் கிளம்பினோம்.
தஞ்சையின் ராஜகோரியும் அதையடுத்துள்ள இடுகாடும் திறந்தவெளி பீக்காடாக நாறிக் கொண்டிருக்கின்றன. உயிருள்ள மனிதர்கள் வாயில் மலத்தை திணிக்கிற கேடுகெட்ட நாட்டில் செத்தவர்கள் மேல் கழிந்துவைப்பதில் யாருக்கு என்ன வருத்தமிருக்கப் போகிறது? பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறைக்கு அருகில்தான் டானியலின் கல்லறை என்று உறுதியாக தெரிவித்த சாம்பான் அவ்விடத்திற்கு அழைத்துப்போனார். (பாவம் திமுக. யாராவது ஒரு அழகிரியை மட்டும் பார்த்துக்கொள்கிற வலுவும் மனமும்தான் அதற்கிருக்கிறது போலும். பட்டுக்கோட்டை அழகிரியெல்லாம் இனி எதற்கு? சீந்துவாரற்று கிடக்கிறது அந்த கல்லறை).
தஞ்சை சாம்பானும், சசிகுமாரும் அங்குமிங்குமாக தேடிச் சலித்துவிட்டு கடைசியில் உதட்டைப் பிதுக்கி நின்றனர். இத்தனைக்கும் அவர்கள் ஏற்கனவே டானியல் கல்லறைக்கு வந்துபோனவர்கள்தான். ஆனால் அப்படியெதுவும் அங்கு தென்படவில்லை. சந்தேகம் வந்துவிட்டால் பானையைத் திறந்து யானையைத் தேடுகிற மாதிரி அவரும் சசியும் அங்குமிங்குமாக அலைந்தார்கள். ராவணன் என்கிற தோழரை செல்போனில் அழைத்து சரியான இடம் குறித்த விவரங்களைத் கேட்டுக்கொண்டு மீண்டும் தேடினோம். ஒருவேளை இவர்கள் சரியான இடத்தை மறந்திருக்கக்கூடும் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
தோழர்.அ.மார்க்ஸ் சரியான இடத்தை சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையில் அவரை அலைபேசியில் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. ஒருவேளை யாராவது இடித்துத் தள்ளியிருப்பார்களோ என்று யோசிக்கக்கூட எனக்கு தைரியம் வரவில்லை. சோர்வும் ஏமாற்றமும் பீடித்த மனநிலையோடு அறைக்குத் திரும்பிய கொஞ்நேரத்தில் தோழர் மார்க்ஸ் லைனில் வந்தார். விசயத்தை சொன்னதும் அவரும் பதறிவிட்டார். அவருக்கும் டானியலுக்குமான நெருக்கமும் தோழமையும் அப்படியானது. அழகிரியின் கல்லறைக்குப் பக்கத்தில் அதேவரிசையில்தான் டானியல் கல்லறை என்று உறுதியாக தெரிவித்தார். பிப்ரவரி 2ம் தேதி தஞ்சை வரவிருப்பதாகவும் அப்போது நேரில் சென்று பார்ப்பதாகவும் அவர் கூறியது சற்றே ஆறுதலாயிருந்தது. இடுகாடு முழுவதும் மண்டிக் கிடக்கும் முட்புதருக்குள் டானியலின் கல்லறை சேதமின்றி இருக்கிறது தோழரே, நீங்கள்தான் சரியாய் தேடிப் பார்த்திருக்க தவறிவிட்டீர்கள் என்று மார்க்ஸ் சொல்ல வேண்டுமென விரும்புகிறேன்.
தோழர்கள் சசியும் கீரனூர் ஜாகீர் ராஜாவும் அலைபேசியில் தெரிவித்த அண்மைச்செய்திகள்:
மொழிப்போர் தியாகிகள் கூட்டத்திற்காக தஞ்சை வந்திருந்த தமிழச்சி தங்கபாண்டியனிடமும், எஸ்.தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்காக வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடமும் டானியலின் கல்லறைக்கு நேர்ந்துள்ள கதியை சசி எடுத்துரைத்திருக்கிறார். இதனிடையே தஞ்சை மாநகராட்சி உறுப்பினராயிருக்கும் சசியின் நண்பர் குமார், “உலகம் போற்றும் ஒரு எழுத்தாளரின் கல்லறையைக்கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லையே” என்கிற அவமானமும் ஆதங்கமும் கொண்டு இப்பிரச்னையை 25.01.2010 அன்று அவைக்கூட்டத்தில் எழுப்பியிருக்கிறார். டானியலின் கல்லறைக்கு நேர்ந்த கதியை தஞ்சை நாளிதழ்களும் கவனப்படுத்தி வெளியிட்டுள்ளன. டானியல் இப்போது ஒரு பேசுபொருளாகியிருக்கிறார் தஞ்சையில். “சரியான இடத்தை கண்டுபிடித்து சொல்லுங்கள், அவருக்கு நேர்ந்த அவமானத்தைப் போக்கும் வகையில் மிகச்சிறப்பாக கல்லறையை எங்கள் செலவில் எழுப்பித் தருகிறோம் என்று பலர் முன்வந்திருப்பதாக சசி கூறிய தகவல் நெகிழ்ச்சியளிக்கிறது. புனரமைப்புக்கு உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள் தோழரே என்று உயிர்மெய் தமயந்தியும் (நார்வே) கூறியிருக்கிறார்.
தோழர் டானியலின் நினைவுநாளான மார்ச் 23 நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு கம்யூனிஸ்டாக இருந்து போராடி ஈட்டிய வெற்றிகள், அவரது நூல்கள், அவர் உருவாக்கிய அறிவுப் பாரம்பரியம், முன்னெடுத்த தலித் இலக்கியம் ஆகியவற்றின் வழியாக நம்முடனேயே இருக்கும் தோழர் டானியலுக்கு அவரது கல்லறையையாவது மீட்டுத்தர என்ன செய்யப்போகிறோம்? அந்த பீக்காட்டில் அவரது கல்லறையை மறுபடியும் தேடப்போகிறோமா அல்லது அவருக்குரிய மரியாதையுடன் புனரமைக்கப்பட்ட ஒரு கல்லறையின் முன் அஞ்சலி செலுத்தப்போகிறோமா என்பதை அரசாங்கமும், தஞ்சை மாநகராட்சியும்தான் இனி சொல்லியாக வேண்டும்.
2. கல்லறைகளைப் பற்றிய பிற நினைவுகள்
அ) லண்டன் ஹைகேட் இடுகாட்டில் இருக்கும் காரல் மார்க்சின் கல்லறையைப் பார்க்க இப்படித்தான் நானும் ஷோபாசக்தியும் கீரனுடன் கிளம்பிப்போனோம் ஒரு சாயங்காலப் பொழுதில். சுடுகாட்டை பூட்டிவைப்பார்கள் என்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கடுங்குளிர் காலமானதால் மாலையில் 4.30 மணிக்கே கதவடைத்துவிட்டார்கள். எதெதற்கோ சுவர் தாண்டுகிறவர்கள் இருக்க, மார்க்ஸ் கல்லறையைப் பார்க்க சுவரேறி குதித்தால் என்ன என்றுகூட யோசித்தோம். கீரன்தான் நாளைக்கு வருவோம் என்று சமாதானம் சொன்னார். பிறிதொருநாள் நானும் காண்டீபனும் போய் பார்த்தோம். யாரோவொரு தனிநபர்தான் தன் சொந்த செலவில் மார்க்சின் கல்லறையைக் கட்டியதாக சொன்னார்கள். அந்த கல்லறைத் தோட்டத்தில் 300 வருடங்களுக்கு முந்திய பல கல்லறைகளைக்கூட காணமுடிந்தது.
ஆ) கலை இலக்கிய ஆளுமைகளின் கல்லறைகள் ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும் அழகுணர்ச்சியுடனும் பிரான்சில் பராமரிக்கப்படுவதை நேரில் கண்டு நெகிழ்ந்த அனுபவத்தை ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இ) இலங்கை மலையகப்பகுதியில் வீறுடன் செயல்பட்ட செங்கொடி சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர் சுந்தரம் அவர்களின் கல்லறையைப் பார்த்ததும்கூட இப்படியான ஒரு அனுபவம்தான். கடும் மழையில் சிக்கிக் கொண்டு வெகுவாக தாமதமாகி இருட்டும் நேரத்திற்குதான் அங்குபோய் சேர முடிந்தது. ஒரு தேயிலைத் தோட்டத்தினூடே நீளும் சாலையொன்றின் ஓரத்தில் சுந்தரத்தின் கல்லறை இருந்தது. தொழிலாளி வர்க்கத்திற்காக தோழர் சுந்தரம் ஆற்றிய பணிகள் குறித்து மரியாதை கொண்டிருந்த சிங்களவரான ஒரு கம்யூனிஸ்ட் தன் சொந்த செலவில் அந்த கல்லறையை கட்டியதாக தோழர்கள் ஜேம்சும் மகேந்திரனும் தெரிவித்தார்கள். தொழிலாளர்களை ஒடுக்கி தனக்கு ஆதாயம் தேடித் தந்த பெரிய கங்காணிகளின் கல்லறைகளை எஸ்டேட் நிர்வாகங்களே கட்டி வருடந்தோறும் நினைவுதினத்தை அனுஷ்டித்து வருவதும், தமக்காக உழைத்து மாண்ட ஒரு தலைவரின் கல்லறையை தொழிலாளிவர்க்கம் கண்டுகொள்ளாதிருப்பதும் ஏனோ இவ்விடத்தில் நினைவில் தோன்றி உறுத்துகிறது.
ஈ) சேகுவேராவை கொன்றவர்கள் அவரை எங்கே புதைத்தார்கள் என்பது 30 வருடங்கள் கழித்தே வெளியுலகுக்கு தெரியவந்தது. கொன்றபிறகும் ஆத்திரமடங்காமல் சேவின் கரங்களை மணிக்கட்டுடன் வெட்டியெடுத்துவிட்டு புதைத்தார்கள் என்கிற குறிப்புதான் கண்டுபிடிக்க உதவியாய் இருந்தது. தோண்டியெடுக்கப்பட்ட அவரது எலும்புக்கூடு வழியே உலகம் மீண்டும் சேகுவேராவை கண்டது.
உ)டானியலின் கல்லறையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கு வருந்திய தோழர்.அழகிய பெரியவன், பெருநகரத்தின் கழிவுகளால் திணறி அழுக்கேறிப் போன கடலின் ஓரத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சமாதி முறையான பராமரிப்பின்றி இருந்ததைக் காணநேர்ந்ததாக கவலை தோயக்கூறினார்.
No comments:
Post a Comment