Tuesday, June 08, 2010

பெருவெளி

காதலும் காமமுமற்ற
ஒரு பெருவெளியில் நான்.
விழிகளை அகலவிரித்தாலும்
காட்சிக்குள் விழ மறுத்து
விலகி ஓடும் ஏதோ ஒன்று.
அதரங்களின் திறப்பில்
வெளிப்படும் மொழி
அந்நியமாய்.
பரந்த வெளியின் காற்றனைத்தையும்
உள்ளிழுத்தாலும் மூச்சடைப்பு.
ஒலிக்கலவை காதுகளில் அறைய
அதனூடே இசையை தேடித் திரிகிறேன்.
ஒலிக்கவில்லை
தனிமையின் இசை கூட.
ஆதிமனுஷியாய்
கனிகிழங்கு உண்கையில்
நா கசந்து உடன் ஜீரணித்து
வெளியேற்றுகின்றேன் நரகலை.
காயசண்டிகை நான்.
சமவெளியில் என் காலடித்தடஙகள்
குழிகின்றன பள்ளத்தாக்காய்.
எதிரில் தென்படும்
உருவங்களின் இதழ்சுவையிலும்
இனிப்பில்லை.
இப்பெருவெளி வாழ்க்கையிலிருந்து
விடுபட்டு
பால்வெளியின் எல்லைக்குட்ப்ட்ட
பூமிக்குச் செல்ல எத்தனிக்கிறேன்..
இந்த பெருவெளியின் கடவுச்சீட்டை
தொலைத்து விட்ட நான்.


(ஜூன், 2010 உயிரெழுத்து இதழில் வெளியானது)10 comments:

 1. காதலும் காமமுமற்ற
  ஒரு பெருவெளியில் நான்.
  விழிகளை அகலவிரித்தாலும்
  காட்சிக்குள் விழ மறுத்து
  விலகி ஓடும் ஏதோ ஒன்று.
  அதரங்களின் திறப்பில்
  வெளிப்படும் மொழி
  அந்நியமாய்.//

  ரொம்ப அழகுங்க!!!
  இன்னும் பலர்
  காதலும் காமமும்
  கலந்த
  பெருவெளியில்!!

  ReplyDelete
 2. காதலும் காமமுமற்ற பெருவெளியின் கடவுச் சீட்டைத் தொலைத்தது வாழ்த்துதலுக்குரிய நிகழ்வு. நம் பூமியல்லால், இதனை சூல்கொண்ட பால்வெளியல்லால், அதனையும் உள்ளடக்கிய பேரண்டமல்லால் வேறொரு பெருவெளி வெறும் பசிநேர மயக்கக் கனவே.

  பூக்களும் முட்களும் நிறைந்த பூமித்தரையில் கால் ஊன்றி பேரண்டத்தோடு நம் உறவை உறுதிப்படுத்திக்கொள்வோம். காதலும் காமமும் இரண்டும் கலந்த நட்பும் உன்னை, என்னை, உலகின் ஒவ்வொரு உயிரையும் வாழவைத்திருக்கும்.

  ReplyDelete
 3. //காதலும் காமமுமற்ற பெருவெளியின் கடவுச் சீட்டைத் தொலைத்தது வாழ்த்துதலுக்குரிய நிகழ்வு.//

  கடவுச்சீட்டை தொலைத்துவிட்டால் அந்தப் பெருவெளியிலிருந்து தப்பி பால்வெளிக்குள்ளிருக்கும் பூமிக்கு வரமுடியாது. கடவுச்சீட்டென்றால் பாஸ்போர்ட் தானே? விசா அல்லவே. இது எப்படி வாழ்த்துதலுக்குரிய நிகழ்வு என்று கூறுகிறீர்கள் என்று புரியவில்லை.

  ReplyDelete
 4. அட, ஏதுமற்ற பெருவெளியில் உலாவுவதற்கான அனுமதிச்சீட்டு அல்லது நுழைவுச் சீட்டு... ஏதோ ஒண்ணு. கொஞ்சம் கவித்துவக் கற்பனையோடு பின்னூட்டம் எழுத முயன்றால் இப்படி டெக்னிகல் கேள்வியால் முளையிலேயே கிள்ளப் பார்ப்பது நியாயமா?

  ReplyDelete
 5. கவிதை புதுமையாக உள்ளது.

  தேடுதல்... கிடைத்தல்.... திகட்டல்....
  மறுபடியும் தேடுதல்.....
  இந்த சுழற்சிதான் வாழ்க்கையை
  சுவாரசியப் படுத்துகிறது.

  SS JAYAMOHAN

  ReplyDelete
 6. chola. nagarajan4:31 pm

  நீ கடவுச் சீட்டு என்று எதைக்கூறுகிறாய் கவின்? ஒன்று நாம் பெற்றிருக்கிற உயிர், மற்றது இச்சமூகம் நமக்கு உண்டாக்கித்தந்த வாழ்க்கை - நீ எதைச்சுட்டுகிறாய் தோழி?
  -சோழ. நாகராஜன்.

  ReplyDelete
 7. @சோழநாகராஜன்

  கடவுச்சீட்டு என்பது நீங்கள் கூறும் எதையும் குறிக்கவில்லை. காதலும் காமமுமற்ற பெருவெளியிலிருந்து வெளியேற முடியாத இயலாமை தான். அது எதன் காரணமாகவும் இருக்கலாம்.

  ReplyDelete
 8. @ தேவன் மாயம் & @ எஸ்.எஸ்.ஜெயமோகன்
  நன்றிகள் பல

  ReplyDelete
 9. today first visit. padithththum thonriyathai ezhuthukiren. thanks.

  ReplyDelete
 10. பொழிப்புரை போடுறப்ப மறக்காம சொல்லிவுடுங்க :))

  ReplyDelete