Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, July 26, 2012

அழிபடும் தடயங்கள்


நீயற்ற பொழுதுகள்
வெறுமையாய் கழிகின்றன
என் ஏக்கத்தின்
தீராத பெருமூச்சு
புயலாகிச் சீறுகிறது கடற்பரப்பில்
பெருமூச்சோ சிறுமூச்சோ
என் சுவாசக் காற்றல்லவா அது
ஆனந்தமாய் உள்ளிழுத்துக்கொள்
தெறிக்கும் நீர்த்திவலைகளில்
என் தொடுகையை உணர்வாயா அன்பே
என் கண்ணீர் கரிக்கும உப்புநீரை
சுவைத்துப் பார்
பாதம் தொடும் அலைகளில்
முத்தங்களை அனுப்புகிறேன்
பெற்றுக்கொண்டதுபோக
மிச்சமிருக்கும் முத்தங்களால்
காதலர்களின் கரையோர காலடித்தடங்களை அழிக்கிறேன்
நாம் கைகோர்த்து நடக்கும் நாள்வரை
காதலரின் தடயங்களை அழித்துக்கொண்டேயிருப்பேன்
அவர்களிடத்தில் இரக்கம் கொள்ளாதே
கவனம் அன்பே 
என்றேனும்
காதலர்கள் வந்துபோனதன்
அடையாளமாய் 
அழிபடாத காலடித்தடங்கள்
தென்படக்கூடும்
அன்றைக்கு
நான் மட்டும் எங்கோ
கரை ஒதுங்கி இருப்பேன்



Friday, October 14, 2011

முகவரியற்றவள்

எங்குமிருப்பேன்
நேற்று அங்கே
இன்று இங்கே
நாளை எங்காவது
நான்கு சுவர்களும் மேற்கூரையும்
எனக்கானதல்ல

அணை கட்ட முயல்கிறாய்
பாதாளத்தில் தள்ளுகிறாய்
மணலைத் தின்று செரிக்கும் சமுத்திரமும்
புதையல்களோடு வருபவளும் நான்

கருமையைப் பூசுகிறாய்
கடுங்குளிர் காற்றைத் திருப்புகிறாய்
இருள்
துருவப் பறவை
இரண்டும் நான்

புனைவுகளைத் தின்கிறாய்
புதைகுழிக்குள் தள்ளுகிறாய்
கனவுகளின் தொழிற்சாலை
ஈர்ப்பு விசைத் தத்துவத்திற்கு சவாலும் நான்



சுவாசத்தைத் திருடுகிறாய்
இடுகாட்டில் தள்ளுகிறாய்
சகல உயிர்களுக்குமான மூச்சுக் காற்றும்
எகிப்தியப் பிரமிடுகளில் வாழ்பவளும் நான்

அனலைக் கக்குகிறாய்
கிழிந்த என் உடுப்புகளை எள்ளி நகையாடுகிறாய்
அணைக்க முடியா நெருப்பும்
நிர்வாணசாந்தி அடைந்தவளும் நான்

எனக்கு முகவரியளிக்க முயல்கிறாய்
புவிக் கோளத்தின் கானகங்களில் வேட்டையாடி
இறைச்சியையும் காய்கனிகளையும் கொணர்ந்து
கார்முகிலில் நீரெடுத்து
சூரியனின் தகிப்பில் உணவு சமைத்து
சந்திரனின் முதுகிலமர்ந்து உண்டு களித்து
வெண் பஞ்சு மேகப் பொதிகளில் உறங்கியெழுந்து
நட்சத்திரங்களுக்கிடையே அண்டவெளியில் தாவி விளையாடி
கோள்களுக்கிடையே ஊஞ்சல் கட்டியாடுகையில்
மின்னல் விழுதைப் பிடித்து மீண்டும் பூமிக்கு வந்து
இப்பிரபஞ்சத்தை இணைப்பவள் நான்
பிரபஞ்சம் முழுவதும் என் வாழிடம்

என் காலத்தைப் பறிக்காதே
நானொரு சகாப்தம்.

Monday, June 14, 2010

செங்கடல்


மீளாத்துயர்க்கடலில் 
திக்கறியாமல் தத்தளிக்கிறேன்
துயரத்தின் நீலம் சுற்றிச்சூழ
கரங்களை துயர்நீரில் தடைபடாமல்
காற்றின் குறுக்கே வீச முயன்று தோற்கிறேன்.
கரை தென்படாமல்
தொடுவானம் வரை 
துயரத்தின் உவர்ப்பு நீலநிறத்தில்
பேரலையாய் நினைவுகள் எழும்பி மோத
நினைவிழக்கிறேன்.

கண்விழிக்கையில் 
சமதளத்தில் என் உடல்
கரங்களை வீசுகிறேன்.
துயர்நீர் தட்டுப்படவில்லை.
காற்றில் அலைகின்றன கரங்கள்
கோப்பையில்
துயரக்கலப்படமில்லா
நீலநிறமற்ற நீர்
பாய்ந்து பருகுகிறேன்.
அடைத்த செவிகளில் 
இதுவரை ஒலித்த ரீங்காரம்
காணாமல் போன நொடியில்
பேரிரைச்சலொன்று செவிப்பறையைத் தாக்க
சுற்றிலும் துயரத்தின் பேரலைகள் 
நினைவுகளாய் மோதும் பெருஞ்சத்தம்
நீலநிற கண்ணீரின் ஆழத்தில்
கண்ணாடி அறையில் நான்
சுவர்களை துளைத்து துயரைக் கடந்து ஊடுருவும்
என் விழிகளுக்கு
கரை தென்படவில்லை
இம்முறை தொடுவானமும்கூட.
பேரலை பொங்கி மோத
மீண்டும் நினைவிழக்கிறேன்.

இப்போது கண்விழிக்கையில்
மண் தரையில் என் உடல்
துயரத்தின் உவர்ப்பில்லை
நினைவுகளாய்  பேரலைகள் இல்லை
கரங்களை அசைக்கிறேன்
காற்றில் சப்தமெழுப்பி அலைகின்றன அவை
மகிழ்ச்சி பொங்க 
எழுந்து கால்களை ஊன்ற எத்தனிக்கிறேன்
நிலைதடுமாறி வீழ்கிறேன்
ஒரு உயிரற்ற உடல்மீது

நாசிக்குள் மயிர் கருகிய மணம்
குருதியின் வாடை
தொடுவானம் வரை மனிதஉடல்க்ளும் சதைக்கூழமும்
தொலைவிலே துப்பாக்கிகளின் ஓசை
மனிதர்களின் பேரவலக் குரல்கள்
காலடியில் குண்டுகளின் அதிர்வு
துப்பாக்கிகள் மௌனிக்கும் ஓசையும்
துல்லியமாய் கேட்கிறது
கூடுகளிலிருந்து உயிர்பறவை சிறகடிக்கும் சப்தமும்
செவிவழி பாய்ந்து இதயத்தை தைக்கிறது
கண்ணெதிரே துயர்நீரின் கடல்
இப்போது செந்நிறத்தில்
நீலநிறத்தினதைவிடப் பெரியதாய்

கண்ணீர் நதியாயய் பெருக்கெடுத்து 
நிறபேதமின்றி செங்கடலோடு கலக்கிறது.
உள்ளிருந்தும் புறத்தேயிருந்தும்
துரோகத்தின் நாற்றம் 
காற்றில் பரவி மூச்சையடைக்க
இம்முறையும் நினைவிழக்கிறேன்

மீண்டும் கண்விழிக்கையில்
அதே பழைய நீலநிற துயர்நீர்
இப்போதும் பேரலையாய் துன்ப நினைவுகள்
இம்முறையும் திக்கறியாமலிருக்கிறேன்.
இனி
விழிகளால் ஊடுருவி
தேடப்போவதில்லை
தொடுவானத்தையோ கரையையோ.

செங்கடலைப் போலல்ல
நீலக்கடலில் ஒரு துரும்பாயினும்
கிட்டிவிடும் தப்பிக்க!

- கவின் மலர்

(’தலித் முரசு’ மே, 2010 இதழில் வெளியானது)

Tuesday, June 08, 2010

பெருவெளி

காதலும் காமமுமற்ற
ஒரு பெருவெளியில் நான்.
விழிகளை அகலவிரித்தாலும்
காட்சிக்குள் விழ மறுத்து
விலகி ஓடும் ஏதோ ஒன்று.
அதரங்களின் திறப்பில்
வெளிப்படும் மொழி
அந்நியமாய்.
பரந்த வெளியின் காற்றனைத்தையும்
உள்ளிழுத்தாலும் மூச்சடைப்பு.
ஒலிக்கலவை காதுகளில் அறைய
அதனூடே இசையை தேடித் திரிகிறேன்.
ஒலிக்கவில்லை
தனிமையின் இசை கூட.
ஆதிமனுஷியாய்
கனிகிழங்கு உண்கையில்
நா கசந்து உடன் ஜீரணித்து
வெளியேற்றுகின்றேன் நரகலை.
காயசண்டிகை நான்.
சமவெளியில் என் காலடித்தடஙகள்
குழிகின்றன பள்ளத்தாக்காய்.
எதிரில் தென்படும்
உருவங்களின் இதழ்சுவையிலும்
இனிப்பில்லை.
இப்பெருவெளி வாழ்க்கையிலிருந்து
விடுபட்டு
பால்வெளியின் எல்லைக்குட்ப்ட்ட
பூமிக்குச் செல்ல எத்தனிக்கிறேன்..
இந்த பெருவெளியின் கடவுச்சீட்டை
தொலைத்து விட்ட நான்.


(ஜூன், 2010 உயிரெழுத்து இதழில் வெளியானது)



Friday, April 16, 2010

எவரது முதுகையும் சொரிந்து கொடுக்க நகம் வளர்க்கவில்லை நான்

  • ஆதவன் தீட்சண்யா
ஏப்ரல் 15 ஆம் தேதி நடந்த “எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை” என்ற தலைப்பில் இக்‌ஷா மையத்தில் நடந்த கூட்டத்தில் வாசிக்கப்பட்ட ஆதவன் தீட்சண்யாவின் உரை:

புறக்கணிப்பு, அவமானம், அச்சுறுத்தல், வன்முறை, வறுமை ஆகியவற்றை ஒருசேர எதிர்கொள்ள நேர்ந்திடாத சாதிகளில் பிறந்து ஓரளவுக்கு பாதுகாப்பான வாழ்க்கைப் பின்புலத்தையும் கொண்டவர்களாக சமகால ஆண் கவிஞர்களில் பெரும்பாலானவர்கள் இருக்கின்றனர். குடும்பம், பணியிடம், பொதுவிடங்களில் தனிமனிதனாகிய தான் யார் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்களிலிருந்தே இவர்கள் கவிதை எழுதுவதற்கான மனவெழுச்சி அல்லது உளவியல் நெருக்கடியை எய்துகிறார்கள். நிலவும் சமூகச்சூழலோடு பொருந்திப்போக முடியாத அல்லது சமரசம் செய்துகொள்ள முடியாத தனித்துவப் பிறவியாக தம்மை கற்பனை செய்துகொள்வதன் மூலம் ஏற்படுகிற ஒருவித மயக்கநிலை இவர்களை தரையிறங்கவிடாமல் அந்தரத்தில் சுழற்றியடிக்கிறது.எனவே சமகாலத்திய சமூக அவலங்கள், அவற்றிலிருந்து விடுபடுவதற்கான எத்தனங்கள், அதன் பொருட்டு ஏவப்படும் அடக்குமுறைகள் எதுவும் இவர்களது பார்வைக்குப் படுவதில்லை. அல்லது அதைச் சொல்வது கவிஞனின் வேலையல்ல என்று நிலைபாட்டை பேசத் தொடங்குகிறார்கள். பத்திருபதாண்டுகள் கழித்து 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தை மதிப்பீடு செய்ய இவர்களது கவிதைகளை முதன்மைத் தரவுகளாகக் கொண்டு ஒருவர் ஆராயத் தொடங்குவாரெனில் கட்டற்ற காமம், மட்டில்லாத குடி, கடவுள் நிந்தனை, சாத்தானைக் கொண்டாடுதல், புனிதங்களை பகடி செய்தல் ஆகிய புள்ளிகளை மையங் கொண்டே தமிழ்ச் சமூகம் இயங்கியது போலும் என்ற முடிவுக்கே வர முடியும். கட்டற்ற காமம், மட்டற்ற குடி வழியாக வருவித்துக்கொள்ளும் மிகையான கொண்டாட்டம் இறுதியில் ஒரு பெண்ணை தன்னிஷ்டம்போல் கையாள்வதற்கான உரிமையைக் கோருவதிலேயே நிறைவு கொள்கிறது. பாலின அரசியல் சார்ந்து சமகாலத்தில் மேலெழுந்து வந்திருக்கும் விவாதங்களை உள்வாங்காமல் வெற்று ஆண்களாய் தேங்கி நின்றுவிட்ட இவர்களின் கவிதைகள் குறித்து நேர்மையானதொரு விமர்சனத்தை முன்வைப்பதற்கான தேவை அதிகரித்து வருகின்றது.






மறுதலையாக தம் மீதான கற்பிதங்கள், மதிப்பீடுகள், தாய்மை உள்ளிட்ட பொறுப்புகள் வழியாக நிகழ்த்தப்பெறும் பாலியல் ஒடுக்குமுறை மற்றும் உழைப்புச்சுரண்டலை அம்பலப்படுத்தியும் தமது சுயத்தை நிறுவியும் பெண் எழுத்தாளர்களின் கவிதைகள் வெளிப்பட்டு வருகின்றன. ஏற்கனவே நிறுவப்பட்டு இயல்பானதுபோல செயற்பட்டு வருகிற ஆண்மையவாத சிந்தனையிலிருந்து தன்னையும் அதன்வழியே சமூகத்தையும் விடுவித்துக் கொள்வதென்ற பாலின சமத்துவத்திற்கான நெடியப் போராட்டத்தின் விளைபொருட்கள் என்றே இந்தக் கவிதைகளை இனம் காண வேண்டியுள்ளது. கல்வியறிவு மறுக்கப்பட்டிருந்த நிலையை முறித்துக்கொண்டு ஒரு பெண் எழுதத் தொடங்குவதே ஆண்மையவாதத்திற்கு எதிரானதுதான் என்ற முடிவுக்கு வருவோமேயானால், பெண்கள் எழுதுவதெல்லாமே பெண்ணியக்கவிதைகளா என்ற கேள்வியே இடக்கானது என்பதை புரிந்துகொள்ள முடியும். பெண்ணாய் பிறந்தது குறித்து புகாரிடும் தொடக்கநிலை உணர்விலிருந்து தான் ஒரு பெண் என்று சுயமரியாதையோடு முழங்குவது வரையான வெவ்வேறு மட்டங்களில் தொழிற்படும் இவர்களது எழுத்துகள்தான், எவ்வளவு பெரிய ஆளுமையாக இருப்பினும் சமூகத்திற்கு அவரது பங்களிப்பு எத்தகையதாய் இருப்பினும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை வெற்று ஆணாகவே மிஞ்சிவிடுகிற குரூரத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே, எது அல்லது எப்படியானது பெண்ணியம் என்று ரெடிமேடாய் முன்வைக்கும் சட்டகங்களையும்கூட ஒவ்வொரு பெண்ணும் திருத்தியமைக்கிறார், தேவைப்பட்டால் உடைத்தும் எறிகிறார். இதன்பொருட்டு அவர்கள் பயன்படுத்தும் மொழி, உருவகங்கள், வெளிப்பாட்டு வடிவங்கள் உள்ளிட்ட எதுவுமே ஏற்கனவே நிலவுகின்றவையுடன் பொருந்திப்போக மறுக்கின்ற புள்ளியை மறித்து நின்றுகொண்டுதான் ஆபாசம் அருவருப்பு என்கிற கூப்பாடு கிளம்புகிறது.

எதையாவது எழுதி இடையிடையே மலம், மூத்திரம் போன்ற சில வார்த்தைகளைத் தெளித்துவிட்டால் அது தலித் கவிதை, யோனி, ஆண்குறி என்று தெளித்துவிட்டால் அது பெண்ணியக் கவிதை என்ற அபத்தமான புரிதல் வாசகர்களிடம் மட்டுமல்லாது எழுதுகிறவர்களிடமும் இருக்கிறது. சொல்ல வரும் விசயத்தை அதன் வீரியத்தோடு வெளிப்படுத்திட தேவைப்படுமாயின், மிகுந்த அரசியல் புரிதலோடு பயன்படுத்தப்படும் சொற்களை யாந்திரீகமாக ஒரு மசாலாவைப்போல தூவிவிடுகிற ஜிகினாத்தனங்கள் விரைவில் உதிர்ந்துவிடும் என்று தெரிந்தேயிருந்தாலும்கூட அப்போதைய பரபரப்புக்காக அவிழ்த்துக் கொட்டுகிற மலினமான உத்திகள் இங்கு இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அப்படியான எழுத்துகள் மீது எனது கருத்தைச் சொல்லத்தான் எனக்கு உரிமையுண்டேயொழிய தீர்ப்பெழுதும் அதிகாரத்தை எதன்பேராலும் நான் கைக்கொள்ள முடியாது.



எது அசலானது, போலச்செய்தது எது என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்று கடந்தகாலத்தில் சாசுவதம், சாகாவரம் என்று பேசி வந்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூக அடுக்கினராகிய தலித்துகள், பெண்களது எழுத்துகளுக்கு அந்த அளவுகோலை நீட்டிக்க விரும்பாமல் உடனடியாகவே தீர்ப்பெழுத விரும்புகின்றனர். அவ்வகை எழுத்துகள் தமது இருப்பையும் ஒளிவட்டத்தையும் கேள்விக்குள்ளாக்கி சமகாலத்தின் அதிகார அடுக்குகளை கலைத்துப் போட்டு விடும் என்று பதற்றமடைகிற இவர்கள், தந்திரமாய் எழுப்பும் கேள்விதான் இப்படி பச்சைபச்சையா எழுதணுமா? என்பது. ஆபாசம் என்று இவர்கள் கிளப்பிவிடுகிற செய்தி கலை இலக்கியத்திற்கு வெளியே வேறுதுறை சார்ந்து இயங்குகிறவர்களின் கவனத்தையும் ஈர்க்கிறபோது, அதன் பிறகான விவாதம் இலக்கியம் பற்றியதாக அல்லாமல் ஒழுக்கம் அறம் பற்றியதாக திசைமாற்றி எடுத்துச் செல்லப்படுகிறது. நாடகப்பிரதியை தம்மிடம் காட்டி முன்னனுமதி பெறவேண்டுமென்ற காலனீய காலத்து சட்டங்களை இன்னும் கையில் வைத்துக்கொண்டிருக்கிற காவல்துறையின் கண்காணிப்புக்கு கலை இலக்கிய ஆக்கங்களை முழுமையாக கீழ்ப்படுத்தும் ஆபத்திற்கே இப்போக்கு இட்டுச்செல்லும் என்று அஞ்சவேண்டியுள்ளது.

இப்படியான பின்புலத்துடனேயே லீனா மணிமேகலையின் கவிதைகளையும் அவற்றை பற்றிய விமர்சனங்களையும் விமர்சனம் என்ற பெயரிலான அருவருப்பான வசவுகளையும் புரிந்துகொள்கிறேன். அவரது கவிதைத் தொகுப்பை தடைசெய்ய வேண்டும் என்று கோரும் இந்து மக்கள் கட்சியின் நடவடிக்கையை எதிர்த்த இந்த ஒன்றுகூடலுடன் எனது ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதற்கும் இந்தப் புரிதலே காரணமாய் இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதியார் இல்லத்தில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிகழ்வொன்றில் பெரியாரின் பெயர் உச்சரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவாவினர் ரகளை செய்தனர். போரூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறுக்கே பாய்ந்து ரகளை செய்த அதேகும்பல் சென்னை கலைக்குழுவினரின் நாடகத்தை தடுத்து நிறுத்தியது. அவற்றின் தொடர்ச்சி என்று சொல்லமுடியாவிட்டாலும் அச்சுறுத்தல் என்ற வகையில் லீனாவின் கவிதைகள் மீதான புகாரை கண்டிக்க வேண்டியுள்ளது. லீனாவின் கவிதைகள் மீதான விமர்சன உரிமையை தக்கவைத்துக் கொள்வதும் அவரது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கண்டிப்பதும் ஒன்றுக்கொன்றுக்கு முரணானதல்ல.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதானது லீனாவின் கவிதைகள் மீதான மதிப்பீட்டின் அடிப்படையிலானது அல்ல. அல்லது அவரது செயல்பாடுகள் கருத்துகள் எல்லாவற்றுடனும் இணக்கம் தெரிவிப்பதற்குமானதும் அல்ல. அவரல்லாமல் பிறிதொருவராய் இருப்பினும் அவர் மற்றும் அவரை விமர்சிக்கிற யாவருடைய கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்குமான வெளியை தக்கவைத்துக் கொள்வதென்ற அக்கறையிலிருந்தே இந்த ஒன்றுகூடலில் பங்கெடுக்கிறேன். தவிரவும், நாலாந்தரமான மொழியில் சில கட்டுரைகளையும் பின்னூட்டங்களையும் தமது இணையதளங்களில் வெளியிட்டு தமிழ்நாட்டில் யாருக்காக யார் கூட்டம் நடத்தவேண்டும், அதில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் அல்லது கூடாது என்று தம்மால் தீர்மானித்துவிட முடியும் என்று நம்புகிற சிலர் தமது அகங்காரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்காகவும் கூட இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது சரியானது என்று நம்புகிறேன்.

Wednesday, April 14, 2010

தூற்று.காம்

ஊர்கூடி பார்த்திருக்க நடுத்தெருவில் வீழ்த்தி
எம் பெண்களை வல்லாண்ட உம்மைக் கண்டு
மறைவிடம் ஓடியொளிந்த நாய்கள்
பிறிதொருபோதும் உம்முன்னே வருவதற்கஞ்சிய குற்றத்திற்காக
கைகால்கள் கட்டப்பட்டு
பனிப்பாளத்தின் மீது கிடத்தப்பட்டிருக்கிறேன்
பிணமென விரைக்கும் உடலுக்குள் கடுத்தேறுகிறது சில்லிப்பு
நடுங்கிச் சரிகிறது உயிர்

தண்ணீர் கேட்டால் மூத்திரம் பெய்வதும்
வாயைத் திறந்தால் மலம் திணிப்பதுமே
நாகரீகக் கனவான்களாகிய உமது வாடிக்கையென்பதால்
பசிதாகம் குறித்து புகாரிடாமல் மயக்கத்தில் வீழ்கிறேன்

சித்திரவதைகளை உணராமலே செத்துவிடக்கூடாதென்ற பயத்தில்
பந்தம் கொளுத்தி என்தலையைத் தீய்த்து
பிரக்ஞையின் எல்லைக்குள் இழுத்துப் போடுகிறீர்கள் என்னை

விசேஷமாய் பயிற்சி எடுத்தக் காவலரைப் போன்ற ஒருவன்
என் கால்களில் லாடமடித்துக் கொண்டிருக்கிறான்
நகங்களைப் பிடுங்கி எடுத்துவிட்டு
என் பற்களையும் பிடுங்கும் அவசரத்தில்
குறடு ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது இன்னொருவன் கையில்
வன்மங்களை நவீனமாய் தணிக்கத் தெரிந்த மற்றையவன்
வயர்களை என்குறியில் சுற்றி மின்னதிர்ச்சிக் கொடுக்கிறான்

அடுக்களையிலிருந்து டப்பர்வேருடன் வந்த
உங்கள் மனைவி/மகள்/ சகோதரி/ யாரோ ஒருத்தி
இந்தக் கண்களா எம்மை ஏறெடுத்துப் பார்த்தவையென
பலவந்தமாய் இமைபிரித்துத் தூவுகிறாள் மிளகாய்ப்பொடியை

கொத்தியெறிந்தது போக நினைவில் எஞ்சியிருக்கும் என்னைத்தாளாது
புதிய கொலையாயுதங்களை தேடிக்களைத்த உமது வாரீசுகள்
கணினியின் விசைப்பலகை அதிர்ந்திடாத வண்ணம்
மென்மையாக பதிவேற்றத் தொடங்குகின்றனர்
என்மீதான அவதூறுகளை.


- ஆதவன் தீட்சண்யா
14.04.2010


****************

பறவைகளை அண்டாத வாழ்வில்..






அவளுக்கு தொலைவிலிருந்து காணும்போது மட்டுமே
பறவைகள் அழகு!
அருகில் நெருங்கிவிட்டாலோ
மேனியெங்கும் மின்னலாய் அச்சம் பரவி
நகக்கண்ணின் ஊடாக வழிந்தோடும்.

அவளின் நினைவடுக்குகளில் ஒரு காட்சி..
பால்குடி மாறா பருவத்தில் ஒரு நாள்..
உண்ண மறுத்து கண்ணயர்ந்த ஒரு தருணத்தில்
நாசியிலும் நெற்றியிலும் வலியுணர்ந்து
கழுத்தில் பிறாண்டும் நகமுணர்ந்து
திடுமென விழிக்கையில்..
மிக அருகில்... மிக மிக அருகில்...அண்மைக்காட்சியாய்...
தாதிப்பெண் ஏவிய
ஒரு கோழியின் தலை.
அதிர்ந்தலறிய அவளின்  மழலைக் குரலோடு
சுருதிபேதமாய் கோழியின் கூக்குரலும் கலந்தது.
அன்று தொடங்கி...
அவள் உண்ண மறுக்கும்போதேல்லாம்
காது குடையும் கோழி இறகு
தாதிப்பெண்ணின் மிரட்டல் ஆயுதமானது.
உணவுக்கு பதில் அச்சத்தை ஊட்டினாள் தாதி.
கையகல கோழிக்குஞ்சும் சிட்டுக்குருவியும் மைனாவும் கூட
அவளுக்கு மரணபயத்தை அளிக்க..
ஒரு காகம் தலைக்கருகில் பறந்த நாள்
அவள் சுரத்தில் விழுந்தாள்.
அண்டை வீட்டின் கோழிக்குஞ்சுகளை
இரைக்கு தூக்கிச்சென்ற கழுகினத்தால்
அவள் அடைந்தது அருவருப்பின் உச்சம்!
இறந்த காகத்தின்  உடலை மிதித்த நாளில்
உண்ணவில்லை அவள்...
கருமைநிறம் கண்டபோதெல்லாம்
காகம் மிதித்ததாய் பீதி கொண்டாள்.
பறவை பொம்மைகள்  அவளிடம் என்றைக்குமிருந்ததில்லை.
கோழி இறைச்சியை தொட்டதே இல்லை.
ஆட்டிறைச்சி என்றெண்ணி உண்ட ஒரு நாளில்
உண்மை தெரிந்தபின்
உள்ளே சென்றதெல்லாம் வெளியே வந்தது
இவளின் அச்சத்தை பிறர் எள்ளிநகையாட..
இவளோ..அச்சப்படுவதற்கு அச்சப்படவேயில்லை.
பறவைகளை அண்டாத வாழ்வு அவளுடையது..

அவளுக்கு திருமணம்..
இத்தனை நாள் சேர்த்து வைத்த
மொத்த குடும்பத்தின் சேமிப்பனைத்தும்
அவளுக்கு சீருமாகவும் மணமகனுக்கு தங்கச்சங்கிலியாகவும் மின்ன..
ஊர்கூடி உறவினர் புடைசூழ மணமுடித்தபின்..
கடைக்கண்ணால் தன் வாழ்கைத்துணையை பார்க்க..
மிக அருகில்...  மிக மிக  அருகில்... அண்மைக்காட்சியாய்..
ஆறடி உயரத்தில்
பெயர் தெரியாத பறவை!

- கவின் மலர்

நன்றி -உயிர்மெய் சிறப்பிதழ் (2009-2010)