Wednesday, September 15, 2010

உடையும் கண்ணாடிக் கூரைகள்

பெண்களுக்கென்று தனியாக ஓர் அமைப்பை சில தினங்களுக்கு முன் உருவாக்கியிருக்கிறது ஐ.நா. பெண்களின் உரிமைக்கு ஆதரவாகவும், அவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் செயல்படவிருக்கிறது இந்த அமைப்பு. எப்படி இருக்கிறது நம் நாட்டில் பெண்களின் நிலைமை?

இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஒரு பெண். ஆளும்கட்சியின் தலைவர் ஒரு பெண், மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவர் ஒரு பெண், மக்களவை சபாநாயகர் ஒரு பெண். இப்படி அரசியலில் உள்ள எல்லா முக்கியப் பதவிகளிலும் பெண்கள். இது போன்ற ஒரு நிலை இந்திய வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை. மக்களவையில் உள்ள பெண் எம்.பி.க்கள் 58 பேர். சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளில்இப்போதுதான் முதல்முறையாக மக்களவையில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை 50ஐத் தாண்டுகிறது.

இதனால், பெண்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் கிடைத்துவிட்டது என்று சோல்ல முடியுமா?
"அப்படிச் சோல்லமுடியாது. சட்ட மன்றத்திலேயே கூட பாலினப் பாகுபாடு பார்க்கப்படுகிறது. ஸீரோ அவர், கேள்வி நேரத்தின்போது எழுப்பவேண்டிய துணைக் கேள்விகள், பாயிண்ட் ஆஃப் ஆர்டர் போன்றவற்றிற்காகப் பெண் எம்.எல்.ஏ.க்கள் கை உயர்த்தினால்அவர்களைப் பேச அழைப்பதேஇல்லை. ஆண்கள்தான் பேச அழைக்கப்படுகிறார்கள். இதுகுறித்து சட்டமன்றத்திலேயே நான் புகார் எழுப்பினேன்" என்கிறார் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி.

இந்த ஆண்டு ஜனவரியில் முதன்முறையாகப் பெண் ஒருவர் தமிழகக் காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியாவில் காவல்துறையில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரிகள் மிகக் குறைவு (இந்தியாவில் தமிழகத்தைத் தவிர, அருணாச்சலப் பிரதேசத்தில்தான் பெண் அதிகாரி ஒருவர் காவல்துறைத் தலைவராக இருக்கிறார்). இது நிச்சயம் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயம்தான். ஆனால், காவல் நிலையங்களில் நம் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?

"நம் பெண்களுக்கு காவல் நிலையத்திற்குச் செல்வது என்பதே ஒரு கௌரவப் பிரச்சினையா இருக்கிறது.அதையும் மீறி அவர்கள் புகார் கொடுக்கச் செல்லும்போது அவர்கள் நடத்தப்படும் விதம் சரியானதாக இல்லை. வழக்கைப் பதிவு செய்ய வைக்கவே போராட வேண்டி இருக்கிறது. எப்.ஐ.ஆர். போடாமலேயே கட்டப் பஞ்சாயத்து சேவது போன்றவைதான் காவல் நிலையங்களில் நடக்கின்றன. விசாரணைக்காக காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்படும் பெண்கள் வசைச் சொற்களுக்கும் வன்முறைக்கும், ஏன் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் கூட உள்ளாகிறார்கள். அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்ட புதிதில் பெண்களுக்குப் புகார் கொடுப்பது என்பது எளிதாக இருந்தது. ஆனால், அவற்றிலும் இப்போது கட்டப்பஞ்சாயத்து செய்வது அதிகமாகி விட்டது" என்கிறார் எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான வ.கீதா.

விவாகரத்து வழக்குகளைக் கவனிக்கும் குடும்ப நீதிமன்றங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பணிக்குச் சேல்லும் பெண்கள் வார நாட்களில் நீதிமன்றங்களுக்கு வருவதில் சிரமங்கள் உள்ளதால் வழக்கு இழுத்துக்கொண்டேயிருப்பதை கருத்தில்கொண்டு இந்த முடிவு என்று சொல்லப்பட்டாலும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதும் இதற்கு ஒரு காரணம். கல்வியறிவு பெருகியிருப்பதாலும், பணிக்குச் சேல்லும் பெண்கள் பொருளாதாரச் சுயசார்போடு இருப்பதாலும், பொருத்தமற்ற மணவாழ்வில் பிரச்சினைகளைச் சகித்துக்கொண்டு மன உளைச்சலோடு போலியாக வாழ்வதைக் காட்டிலும் அதிலிருந்து விடுபடவே விரும்புகின்றனர். இது, சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் முக்கியமானதொரு மாற்றம்.

இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் நீதித்துறையில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?
வழக்கறிஞராக இருக்கும் கீதாராமசேஷன், "இந்தியச் சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகவே இருக்கின்றன. அவை கண்டிப்பாக நீதிமன்றத்திலும்,காவல் நிலையத்திலும் பிரதிபலிக்கும். இங்கெல்லாம் ஒரு பெண், ஒரு புகாரோடு நுழையும்போது முதலில் எந்தச் சிக்கலும் வராது. ஆனால், போகப்போக அந்தப் பெண் சார்ந்திருக்கும் சாதி, அவளின் பொருளாதார நிலை, திருமண உறவுகள் போன்றவை அவள் நடத்தப்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கும். ஆணுக்கு இருப்பதைவிட பெண் இன்னும் அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்" என்கிறார்.

சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் எனப் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஊடகங்களிலும் நிறைய மாற்றங்கள் நேர்ந்திருக்கின்றன. இருபதாண்டுகளுக்கு முன்பு, தமிழ்ப் பத்திரிகை உலகில் முழுநேரப் பத்திரிகையாளர்களாக இருந்த பெண்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெண்கள் பத்திரிகைகளுக்குக் கூட ஆண்களே ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். ஆண்களே பெண்கள் பெயரில் எழுதினார்கள். கதைகள் எழுதும் பெண்களை, பெண் எழுத்தாளர்கள் எனப் பாலினத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தும் நிலை இருந்தது. திரைப்படத் துறையில் முழுநேரமாகப் பங்கேற்ற பெண் கவிஞர்களோ, வசனகர்த்தாக்களோ, தொழில்நுட்பக் கலைஞர்களோ அநேகமாக இல்லை. ஆனால், இன்று எல்லாம் மாறியிருக்கிறது. நிறைய இளம் பெண்கள் பத்திரிகை, தொலைக்காட்சி, திரைப்படம் என ஊடகங்களில் பணியாற்றுகிறார்கள்.

கௌதம் மேனனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றும் ரேவதி, "ஒரு பத்தாண்டுகளுக்குமுன்பிருந்ததைவிட இப்போது நிறைய பெண்கள் டெக்னீஷியன்களாகஇருக்கிறார்கள். ஆனாலும் கூட ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அது பத்து சதவிகிதத்திற்கும் குறைவானதே. எங்கள் யூனிட்டில் பெண்களுக்கென்று சலுகைகளும் இல்லை. பாரபட்சமும் இல்லை. அனைவரும் சமமாகவே நடத்தப்படுகிறோம்" என்கிறார். இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம்.

ஊடக உலகில் பெரும்பாலும் பணிரீதியாகப் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. ஆனால், அங்கும் மற்ற பல இடங்களில் இருப்பதைப் போன்றே பெண்கள் பாலியல் பிரச்சினைகளைச் சந்திக்க நேர்வதுண்டு. அண்மையில் ஒரு பிரபல தமிழ்ப் பத்திரிகைக் குழுமத்தில் பணியாற்றிய பெண் பத்திரிகையாளர், சக ஊழியர் மீது காவல்துறை ஆணையரிடம் நேரில் சேன்று புகார் அளித்த சேதியை தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களிலும் பார்த்தோம். திரை உலகில் வெளியே சோல்லப்படாத சேதிகள் நிறைய உண்டு. "பொதுவாக சினிமாத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கு வரும் பிரச்சினைகளை யாரும் வெளியே சோல்வதில்லை" என்கிறார் ரேவதி.

ஷோ கேசில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருக்கும் அலங்காரப் பொம்மைகளைப் போல பெண்கள் சமூகத்தில் நடத்தப்படுகிறார்கள் எனப் பெண்ணியவாதிகள் குறைப்பட்டுக் கொள்வதுண்டு. ஆனால், அந்தக் கண்ணாடிப் பெட்டியின் கூரையை உடைத்துக்கொண்டு நிறைய பெண்கள் வெளியே வந்து ஜீவனோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அப்படி உடைத்துக்கொண்டு வரும்போது அவர்கள் அடைந்த காயங்களிலிருந்து இன்னமும் ரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. அதற்கு நம் சமூகம், பெண்களைப் பார்க்கும் பார்வையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடவில்லை என்பதும் ஒரு காரணம்.
******************
பிறந்தது ஐ.நா. மகளிர் அமைப்பு


ஐ.நா. சபையில் சுகாதாரத்திற்கு, குழந்தைகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று ஒவ்வொரு துறை சார்ந்து தனித்தனியாக அமைப்புகள் உண்டு. பெண்களுக்கு? இது வரை இல்லை. அந்தக் குறை நீங்கிவிட்டது. பாலினச் சமத்துவத்தை நோக்கமாகக் கொண்டு ஐ.நா.விற்கான பெண்கள் அமைப்பு தொடங்கப்படுகிறது இந்த அமைப்பை உருவாக்க ஆதரவு தெரிவித்து 192 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. எந்தவித எதிர்ப்புமின்றி இத்தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. ‘ஐக்கிய நாடுகள் சபை மகளிர் அமைப்பு’ என்ற பெயரில் இவ்வமைப்பு செயல்படவிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘UN Women’ என்றழைக்கப்படும். இதற்கான தீர்மானம் ஜூன் 30 அன்று நிறைவேற்றப்பட்டது.

ஏற்கெனவே ஐ.நா.வில் பெண்களின் பிரச்சினைகளுக்காகச் செயல்பட்டு வரும் 4 அமைப்புகள் இப்போது ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. உலகளவில் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் பாரபட்சமின்றி அனைத்து நாடுகளிலும் உள்ளன. இந்நிலையில் அவர்களின் பிரச்சினைகளைச் செவிமடுப்பதற்கான ஒரு களமாக, அமைப்பாக இந்த அமைப்பு சேயல்படும்.

இந்த அமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்புதல் பெற நான்காண்டுகள் தேவைப்பட்டன. இதற்காக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மகளிர் அமைப்புகளோடு ஐ.நா. சபையில் உள்ள பிற மகளிர் அமைப்புகள் ஒன்றிணைந்து இப்பணியை மேற்கொண்டன. பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, பெண்களின் முன்னேற்றத்திற்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துப் பாடுபடும் என துணைப் பொதுச் செயலர் ஆஷா ரோஸ்மிகிரோ தெரிவித்தார். அவரே இந்த மகளிர் அமைப்பின் தலைமைப் பொறுப்பையும் ஏற்கிறார். வரும் 2011ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இப்புதிய அமைப்பு செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் மீதான வன்முறை, ஒடுக்குமுறைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகளின் மீதான வன்முறை, பாலியல் வன்முறைகள் போன்ற குற்றங்களை ஆய்வு சேது அவற்றைக் குறைப்பதற்கும், அறவே நீக்குவதற்குமான தருணம் வந்து விட்டது என்று மகிழ்கின்றனர் பெண்ணியவாதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும். இந்த அமைப்பு பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே, மனித உரிமைகளுக்காகவும், பெண்கள் நலனில் அக்கறை கொண்டும் இயங்கி வரும் அமைப்புகளோடு கைகோர்த்து தனது பணிகளைச் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- கவின் மலர்
(நன்றி: புதிய தலைமுறை)

1 comment:

  1. பெண்களுக்கு முக்கியத்துவம் , சுதந்திரம் ஆகியவற்றில் ச்மீபமாக சாதகமான வரவேற்க்க தக்க சூழல் தான் நிலவுகிறது . இருப்பினும் எதோ ஒன்று குறைவதாக ஒரு எண்ணம் தோன்றுவதால் தான் இது போன்ற அமைப்புகள் ஏற்படுகின்றன். அது ஒட்டு மொத்த சமூக மாற்றமாக இருந்தால், அனைத்தும் சாத்தியம். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete