Sunday, November 21, 2010

இந்து பெரும்பான்மை மாயை தகர்ர்க்கப்படவேண்டும்

தலித் முரசு - காஞ்சா அய்லய்யா நேர்காணல் பகுதி -2



உங்களுடைய God as political Philosopher – Buddha's challenges to Brahminism நூல் உருவானதன் பின்னணி என்ன?

அம்பேத்கரைத் தொடர்ந்து புலேவை தேடி வாசித்தேன். தொன்மையான விஷயங்களையும் தேடி வாசிக்கத் தொடங்கி இருந்தேன். இதற்கிடையில் என்னுடைய ஆசிரியர் ஒருவர், "இந்திய அரசியல் கோட்பாடுகள்' குறித்துப் பாடமெடுக்கும்போது வேதங்கள் குறித்து குறிப்பிட்டுச் சொல்லி, கவுடில்யர், மநு ஆகியோரை பண்டைய சிந்தனையாளர்களாகக் குறிப்பிட்டார். நான் அவற்றை வாசிக்கத் தொடங்கியபோது, அதில் சிந்தனைகள் என்று சொல்லும்படியான எதுவும் எனக்குத் தென்படவில்லை. சிந்தனைகளாகத் தெரிபவை எல்லாமே தேவையற்றவையாக இருந்தன. எல்லாமே மனித இனத்திற்கெதிரானவை. மக்களுக்கு ஒவ்வாதவையாக இருந்தன. அதிகாரத்தின் கைவேலையாக இருந்தன. இதைவிட சிறந்த சிந்தனைகள், பண்டைய இந்தியாவில் இல்லையா என்று என் ஆசிரியரிடம் கேள்வி எழுப்பினேன். இவையே சிறந்த கருத்துகள் என்றார் அவர். "நாம் புத்தர் குறித்து நினைத்துப் பார்க்க வேண்டும். புத்தர் ஒரு மிகப்பெரிய ஞானியென்றால், அவரிடம் அரசியல் சிந்தனைகளே இல்லையா என்ன?' என்றேன். ஆனால், புத்தர் குறித்து அவர் தெரிந்து வைத்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை.

அதன் பிறகு நிலச்சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்து, என்னுடைய எம்.பில். படிப்பை முடித்தேன். பிறகு என்னுடைய பிஎச்.டி. பட்டத்திற்காக புத்தரின் அரசியல் சிந்தனைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் என்னுடைய மேற்பார்வையாளர், "புத்தரை சிந்தனையாளர் என்று சொல்ல முடியாது' என்றார். அதனால் என் மேற்பார்வையாளரை நான் மாற்றிக் கொண்டேன். பிறகு ஒரு பெண் பேராசிரியர், இத்தலைப்பிற்கு ஒப்புக் கொண்டார்.

பாலி மொழியில் எழுதப்பட்ட ஆவணங்கள் படித்துப் பார்க்கப்படவேயில்லை. நான் அதைச் செய்ய விரும்பினேன். ஆனால், சில ஆசிரியர்களோ "இது முடியாத காரியம். பாலி மொழி உனக்கு தெரியாது. ஆகவே, அந்தப் பிரதிகளை விளங்கிக் கொள்ள முடியாது. அதனால் புத்தர் குறித்து நீ தெரிந்து கொள்ள முடியாது' என்றனர். ஆனால் நான் உறுதியாக அவர்களிடம் கூறினேன்: "கிரேக்க சிந்தனையாளர்கள் குறித்து ஆங்கிலத்தில் ஒருவரால் ஆய்வு செய்ய முடிகிறது. ஆங்கிலத்தில் பவுத்தம் குறித்த இலக்கியங்கள் போதுமான அளவு இருக்கும்போது, நான் ஏன் இதைச் செய்ய முடியாது?' என்றேன். பணியில் இறங்கினேன். புத்தரின் அரசியல் சிந்தனைகள் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினேன். அதன் விளைவாகத்தான் God as political philosopher - Buddha’s challenge to Brahmanism என்ற நூல் உருவானது.

பார்ப்பனியத்திற்கெதிரான புத்தரின் போராட்டங்கள் குறித்து ஆய்வு செய்தேன். புத்தரின் விவாதங்களில் புத்தர் தன் வாழ்நாளில் ஒவ்வொரு விஷயத்திலும், தன் சமகால பார்ப்பனர்களை கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார் என்பதற்கான சான்றுகள் உள்ளன. மனித இனம், உளவியல், இயற்கை அரசின் தோற்றம், ஆண்–பெண் உறவுகள் இப்படி எல்லாவற்றையும் பார்ப்பனர்களே முடிவு செய்தனர். என் ஆய்வுக்கட்டுரையில் இவற்றையெல்லாம் சொல்லியிருந்தேன். ஆய்வுக்கட்டுரை வெளியானவுடனேயே அது புத்தகமாகவும் வெளிவந்தது.

மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில், உங்களுடைய பங்கு குறித்து சொல்லுங்கள்?

வியக்கத்தக்க வகையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அறிவுஜீவிகள் எவரும் – பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும், மண்டல் குழு பரிந்துரைக்காகவும் வாதாட முன்வராத சூழல் அப்போது நிலவியது. பிற்படுத்தப்பட்ட தலைவர்களான சரத் யாதவ், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் தவிர, பெரிய அளவில் தலைவர்கள் இல்லை. அவர்களைக்கூட ஊடகங்கள் கோமாளிகளாகத்தான் சித்தரித்தன. அந்த நேரத்தில் அய்தராபாத்தைச் சேர்ந்த பெண்ணியவாதிகளான சுசிதாரு, ரமா மில்கோட்டே, லலிதா மற்றும் சிலரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்தோம். தேசிய அளவில் ஊடகங்களுக்காக கட்டுரைகள் எழுதினோம். Experience as Framework of debate என்ற புகழ்பெற்ற என்னுடைய கட்டுரை, அந்த நேரத்தில்தான் "எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி'யில் வெளிவந்தது. மண்டல் போராட்டத்தில் பார்ப்பனியத்தை வெல்ல, நம் அனுபவங்களையே முக்கியமான கருத்தியலாக முன்னிறுத்த வேண்டும் என்று அக்கட்டுரையில் கூறினேன். அது ஒரு முக்கியமான கட்டுரையாகப் பேசப்பட்டது. ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் நிறைய பேரை அக்கட்டுரை மாற்றியது.

இதற்கு சிறிது காலத்திற்கு முன்புதான் நாங்கள் "நலுப்பு' (black) என்ற இதழை நடத்தத் தொடங்கியிருந்தோம். அருண்ஷோரியை எதிர்த்தும், பார்ப்பனர்களை எதிர்த்தும், புலே, அம்பேத்கர் ஆகியோரை தெலுங்கு மக்களுக்கு அறிமுகப்படுத்தியும் கட்டுரைகளை எழுதினோம். "பேட்' என்ற புகழ்பெற்ற காவியத்தை எழுதிய கவிஞர், "பிளாக் பேட்'டை இந்து மதத்திற்கெதிரான போராட்டத்தின் குறியீடாக அதில் வைத்திருந்தார். அதிலிருந்து "நலுப்பு' என்ற பெயரை எடுத்துக் கொண்டோம். எங்கள் இதழ் மிகவும் பிரபலமடைந்தது. ஆந்திராவின் தெலுங்கு இலக்கிய வட்டத்தை உலுக்கியது எங்கள் இதழ். இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு மண்டல் ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டோம். 

இந்தப் பின்னணியில்தான் மண்டல் இயக்கம் உருப்பெற்றது. இந்துத்துவ பார்ப்பனர்கள் ஒரு புறம், பழைமைவாத காங்கிரஸ்காரர்கள் ஒருபுறம் என எதிர்ப்புகள் இரு முனைகளிலிருந்தும் மண்டல் பரிந்துரைகளுக்கு எதிராக வந்தன. முடிவில், இது மண்டல் X கமண்டலம் அரசியலானது. இதன் விளைவாக கமண்டல அரசியல், பாபர் மசூதியை இடித்தது. இந்துக்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் இருந்தபடியால், முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளைக் கோர முடியாது என்றானது. இந்து பெரும்பான்மைவாதம் என்றால் என்ன? யார் இந்த இந்துக்கள்? யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு அளிக்கக்கூடாதென வாதிடுகிறார்களோ, அந்த பிற்படுத்தப்பட்டவர்களையும் உள்ளடக்கித்தானே இந்து பெரும்பான்மையினர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்? தலித்துகள் வேறு மதத்திற்குச் செல்ல தயாராக இருக்கின்றனர். பிற்படுத்தப்பட்டவர்கள்தான் அடிப்படையில் இந்து கட்டமைப்புக்குள் வருகின்றனர். அதனால்தான், இந்த இந்து பெரும்பான்மைவாத மாயையை முதலில் தகர்க்க வேண்டுமென நினைத்தேன். இந்நிலையில்தான் "நான் ஏன் இந்து அல்ல' என்ற நூலை எழுதத் தொடங்கினேன்.

உங்கள் நூல்களை வெளியிடுவதில் எத்தகைய இடர்ப்பாடுகளை சந்திக்கிறீர்கள்?

நான் அம்பேத்கரின் இலக்கியங்கள் குறித்து திறனாய்வுகளை தேடத் தொடங்கினேன். அவருடைய நூல்களுக்கு விமர்சனங்களோ, திறனாய்வுகளோ இல்லை. அவர் தனது நூல்களை தானே பதிப்பித்துக் கொண்டார்; அல்லது நெருங்கிய தலித் நட்பு வட்டாரங்களில் அவருடைய நூல்களைப் பதிப்பித்தார்கள். 1956 இல் அம்பேத்கர் "புத்தரும் அவர் தம்மமும்' பதிப்பித்தபோது அவரிடம் பணமில்லை. அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. இதில் வருத்தத்திற்குரிய விஷயமென்னவென்றால், அம்பேத்கர் நேருவுக்கு பணம் கேட்டு கடிதம் எழுதினார். அப்போது முக்கியமான உலக பவுத்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். ஆதலால் புத்தகத்தை அச்சிடும் செலவுக்கான தொகை கிடைத்தால் உடனடியாக அச்சிட்டு, மாநாட்டுக்கு வரும் புத்தமத பெரியவர்களுக்கு அதை வழங்கலாம் என்கிற யோசனையில் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தார். ராதாகிருஷ்ணனோ அந்தத் தொகையை வழங்க மறுத்தார்.

இதை அறிந்தபோது நான் மிகவும் வருத்தமடைந்தேன். பெரும்பான்மை வாசகர்களுக்காக ஒரு நூலை பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. இந்நூலை எழுதுவதற்காக நான் கிராமங்களுக்கு செல்லத் தொடங்கினேன். குழந்தைப் பருவம் முதல் முதுமைப்பருவம் வரை, பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் பார்ப்பன – பனியாக்களுக்கும் மற்றவர்களுக்குமான வேறுபாட்டை ஆராயத் தொடங்கினேன். ஆய்வின் முடிவில் அந்த நூலை எழுதினேன். ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எவரும் அந்நூலை அந்தத் தலைப்பில் பதிப்பிக்க முன்வரவில்லை.

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, சுயசரிதை உள்ளிட்ட பல நூல்களை பதிப்பித்த "பாப்புலர் பிரகாஷன்' பதிப்பகம் என்னுடைய நூலை பதிப்பிக்க முன்வந்தது. ஆனாலும் அவர்களுக்கு மும்பையிலிருந்து இந்தப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் இருந்தது. ஏனெனில், மும்பையில் சிவசேனா – பா.ஜ.க. ஆட்சி நடந்தது. அப்போது மும்பை யிலிருந்த பதிப்பகத்தார் என்னை வந்து சந்தித்து ""நாங்கள் பதிப்பிக்கிறோம். ஆனால் புதியதொரு பதிப்பகப் பெயரில், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பதிப்பிக்கிறோம்'' என்றார். "சாம்யா' என்று புதிய பதிப்பகப் பெயரிடப்பட்டு கல்கத்தா முகவரியிலிருந்து அந்த நூல் பதிப்பிக்கப்பட்டது.

1996 இல் "நான் ஏன் இந்து அல்ல' வெளியானது. அதிலிருந்து ஒரு புதிய கருத்தியலை உருவாக்குவதில் நான் பங்காற்றத் தொடங்கினேன். இந்நூல் பிரான்சிஸ் பனானின் "ரெச்சர்ட் ஆப் தி எர்த்' நூலோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டது. உலகமறிந்த பெண்ணிய அறிஞர் சுசிதாருதான் அவ்வாறு என் நூலை ஒப்பிட்டவர். புதிய முறைகளில், சிந்தனை உருவாக்கங்களில் நான் நிறைய சோதனைகளை செய்து பார்க்க வேண்டியிருந்தது. நான் ஏன் இந்து அல்ல வெளியான பிறகு, நான் ஒரு நூலாசிரியராக கருத்தில் கொள்ளப்பட்டேன். ஆனால், கம்யூனிஸ்டுகள் இந்தப் புத்தகத்தோடு உடன்படவில்லை.

ஜனநாயகவாதிகளும், ஆதிக்க சாதியிலுள்ள ஜனநாயகவாதிகளும், தலித் வாசகர்களும், வெளிநாட்டவரும்தான் நூலை வாசிப்பவர்களாக இருந்தனர். "டெக்கான் கிரானிக்கிள்' ஆசிரியர் ஜெயந்தி, "தி இந்து' பத்திரிகையின் மாலினி பார்த்தசாரதி,(என். ராம் அல்லர். அவர் என் எழுத்துகளை வெளியிட விரும்புபவர் அல்லர்) ஆகியோர் என் எழுத்துகளைப் பதிவு செய்ய முன்வந்தனர். ஆகவே, ஆங்கிலத்தில் நான் பரவலாக எழுதத் தொடங்கினேன். பத்தி எழுத்துகளாக செய்தித்தாள்களில் என் கருத்துகளை எழுதினேன். அந்த நேரத்தில் வெகு சில அறிவுஜீவிகள் மட்டுமே பார்ப்பனியம் குறித்து ஆதிக்க சாதியினரோடு விவாதிக்கத் தயாராக இருந்தனர். பண்டைய காலம் முதல் நவீன காலம் வரை இதற்கு பெரிய வரலாறு உண்டு.

ஆகவே, தொன்மத்தை நாடிச்சென்று புத்தரின் அரசியல் கருத்துகளிலிருந்து என் வேர்களைத் தேடினேன். எனக்கு முன்மாதிரிகளாக அம்பேத்கரையும், புலேவை யும் மட்டும் நான் வைத்திருக்கவில்லை. மார்க்சும் என் முன்மாதிரியாய் இருந்தார். ஏனெனில், கம்யூனிச தத்துவங்களை வைத்து அவர் இலக்கிய விதிகளை வகுப்பதற்கு முன்னால், மார்க்ஸ் பண்டைய கிரேக்கத்தை முழுமையாக ஆய்வு செய்தார். அவருடைய பிஎச்.டி. ஆய்வின் தலைப்பே The Struggle between Epicurance and Democratus என்பதுதான். அதனால் அவரைப் போலவே பின்னோக்கிச் சென்று, பவுத்தர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான போராட்டத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.

புலேவும், பகுஜன் சமாஜ் கட்சியும் என் பின்புலம். புலே, சாகுமகாராஜ், பெரியார், அம்பேத்கர், சாவித்ரி பாய் ஆகியோரை உள்வாங்கிய அரசியல் அடையாளமாக கன்ஷிராம் இருந்தார். நான் என்னுடைய கருத்துகளை அறிவுத்தளத்தில், வெளிக்கொணர தலைப்பட்டேன். கோபால் குரு, தோராட் போன்ற மிகச் சில நண்பர்களே இப்பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றனர். ஆனாலும் அவர்கள் வேலை செய்வது அறிவுத்தளத்தில் மட்டுமே. அம்பேத்கர் குறித்து எழுதினால், அவரைப் பற்றி மட்டுமே எழுதுவது என்கிற நிலை தற்பொழுது இருக்கிறது. அவரை சமகாலத்தவர்களோடு பொருத்திப் பார்ப்பதில்லை. உலகில் மிகப் பெரும் தாக்கத்தை செலுத்தக்கூடிய பெண்ணியம் மற்றும் மார்க்சியத்தின் கருத்துகளை, அம்பேத்கரியலோடு இணைக்க வேண்டும். அப்படிச் செய்தால், அது ஒரு பரந்துபட்ட தளமாக இருக்கும். அம்பேத்கர் ஓர் அசாதாரணமான மனிதர். அதனால்தான் என்னுடைய அண்மைக்கால புத்தகமான கணிண்t ஏடிணஞீத ஐணஞீடிச் வில் அவரை புத்தர், ஏசு, முகமது நபிகள், மார்க்ஸ் ஆகியோரோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். அவரை அய்ந்தாவது "இறைதூதர்' என்பேன்.

ஏனெனில், ஓர் இறைதூதருக்கõன வாழ்க்கையில்லாவிடில் – அந்தளவிற்கு எழுதியிருக்கவோ, அந்தளவிற்கு அரசியல் செய்திருக்கவோ, ஒரு தீண்டாமையில் அல்லலுறும் வாழ்க்கையை ஒரு தலைமுறைக்குள்ளாகவே நவயானா பவுத்தத்திற்கு உருமாற்றவோ முடியாது. நான் அம்பேத்கரில்லை. மிகச் சிறியவன். எனவே, நான் வேறு மாதிரி முடிவு செய்தேன். சமகாலத்தில் இந்து மதம், தலித்தியம் ஆகியவை குறித்த ஒரு முழுமையான கொள்கை சார்ந்த பார்வையை உருவாக்கவும், இன்றைய காலகட்டத்தில் பழங்குடியினர் முதல் பார்ப்பனர்கள் வரை, என்னென்ன வேறுபாடுகள் உள்ளன என்பதையெல்லாம் கண்டறிவதும், எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்கவும் முனைந்தேன்.

என்னுடைய "நான் ஏன் இந்து அல்ல' நூலில், பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்குமான பண்டைய கால போராட்டங்களைப் பின்புலமாக வைத்து, இன்றைய சமகாலத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அத்தனை விஷயங்களிலும் கடவுளர்களின் பெயரால் எத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன, பார்ப்பனியம் எத்தனை கொடுமையான பங்கு வகிக்கிறது, எப்படியெல்லாம் ஆண் – பெண் உறவுகள் பாதிக்கப்படுகின்றன என்பதை பிற்படுத்தப்பட்டவர்களின் பார்வையிலிருந்து விளக்கியிருக்கிறேன். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், பண்பாட்டு ரீதியாக, ஆன்மிக ரீதியாக, உடல் ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளா தார ரீதியாக எத்தனை வேறுபாடுகள்? பின் எப்படி இதை மாறிவிட்ட ஒரு ஜனநாயக நாடு என்று நாம் சொல்ல முடியும்?

நவீன உலகம் கல்வியின் உலகமாக இருக்கிறது. அம்பேத்கரின் வாழ்க்கையிலிருந்து நான் ஒன்றை கற்றுக் கொண்டேன். தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மத்தியிலிருந்து நிறைய இலக்கியங்கள் வருகின்றன. ஆனால், இந்திய அளவில் அவை கவனத்தைப் பெறுவதில்லை. ஆகவே, ஆங்கிலத்தில் எழுத வேண்டும். ஏனெனில், கருத்துருவாக்கத்திற்கு ஆங்கிலத்தில் தத்துவச் சொல்வளம் ஏராளம். அதனாலேயே அறிவுத்தளத்தில் நம் குரல் ஓங்கி ஒலிக்கச் செய்ய சீராக ஆங்கிலத்திலேயே எழுத வேண்டுமென்று நினைத்தேன். அப்போதுதான் அறிவுத்தளம், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மக்களிடையே கருத்துகளையும் போராட்டங்களையும் கொண்டு சேர்க்க முடியும்.

பிறகு சமஸ்கிருதத்தையும் பிராந்திய மொழிகளையும் ஒழிக்க வேண்டும் என்று கூறத் தொடங்கினேன். ஏனெனில், எல்லா பிராந்திய மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் வேர்கள் இருந்தன. ஆகவேதான் நான் ஆங்கிலத்தை ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கினேன். நான் இந்திய ஆங்கிலத்தைத்தான் சொல்கிறேன். என்னுடைய ஆங்கிலத்தைப் பார்த்தீர்களென்றால் – காலனியாதிக்க ஆங்கிலமாகவோ, அமெரிக்க, அய் ரோப்பிய ஆங்கிலமாகவோ இருக்காது.
"நான் ஏன் இந்த அல்ல' நூலை எழுதி முடித்து, அது உருவாக்கிய விவாதங்களுக்குப் பிறகு உற்பத்தி சமூகத்தின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் கவனம் செலுத்த தொடங்கினேன். ஆனால் இந்தத் திறமைகளுக்கெல்லாம் கூட, மதங்களில்தான் வேர்கள் இருக்கின்றன. எங்கள் தலைமுறை எதிர்கொண்ட சிரமம் எதுவெனில், தலித் இயக்கங்கள் எல்லாம் நூற்றுக்கணக்கான கல்வி புலம் சார்ந்த கருத்தரங்குகளில் அம்பேத்கரை முன்னிறுத்தின. அம்பேத்கரிய கல்வி மய்யங்கள் உருவாகின. புலேவையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தலித்துகளுக்கும் ஓர் இடைவெளி இருந்து கொண்டே இருந்தது. இந்த இடைவெளி களையப்பட வேண்டுமென விரும்பினேன். தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள், பெண்கள், சிறுபான்மையினர் என்று அனைவரும் ஒற்றுமையாக இல்லையெனில், நம் போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியாது. அதுதான் நம்முடைய முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும். இல்லையெனில், அரசியல் அதிகாரத்தைப் பெற முடியாது.

எனவே, நான் பண்டைய இந்தியாவிற்குச் சென்று அசோகர் காலத்திய நடைமுறைகளைப் பற்றி ஆய்வு செய்தேன். அசோகர் ஒரு சாதாரணமான மன்னராக இருந்திருந்தால், அவரால் வெற்றி பெற்றிருக்க முடியாது. அவர் பவுத்தத்தை தேர்ந்தெடுத்தார். உலகம் முழுவதும் பவுத்தத்தை பரவச் செய்ய வேண்டுமென நினைத்தார். ஒருபுறம் கிறித்துவ மத போதகர்கள் தாக்கப்படுகிறார்கள். பெண் துறவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். பாதிரியார்கள் கொல்லப்படுகிறார்கள். மறுபுறம் தலித் இயக்கங்கள் மதங்களை கேள்வி கேட்காமல், தலித் பொருளாதாரம், தலித்துகளுக்கான அதிகாரம், தலித் அரசியல் என்று மட்டுமே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தன. ஆகவே, இந்து மதத்திற்கு எதிர்ப்பு என்பது கிட்டத்தட்ட இல்லாமலேயே போனது. பிற்படுத்தப்பட்டவர்களின் முக்கியமான பிரச்சனையே இந்து மதம்தான்.

தலித்துகள் பவுத்தத்திற்கும், கிறித்துவத்திற்கும் மாறிவிடலாம். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் இதற்குள்ளேயே ஓர் இந்து கடவுளின் காலடியில் பார்ப்பன மேற்பார்வையிலேயே இருக்கிறார்கள். அதனால்தான் பிற்படுத்தப்பட்டவர்களின் பார்வையில் இந்து மதத்தை கேள்வி கேட்க வேண்டும் என்கிறேன். எனவேதான் "தலித் பகுஜன்' என்ற சொல்லை உருவாக்கினேன். இதற்குள் பெண்ணியத்தையும் அடக்கினேன். நீங்கள் என்னுடைய எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் சரி, பெண்ணியம் அதில் ஒரு பகுதியாக வந்து கொண்டேயிருக்கும்; அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை. நூல் முழுவதும் வரும். அதனால் தான் சாதி பண்பாட்டுப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக, அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றை இந்து மத எதிர்ப்புத் திட்டமாகப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதுதான் Post Hindu India என்கிற என்னுடைய கனவு நூலை உருவாக்க முனைந்தேன்.     

– அடுத்த இதழிலும்

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால்,
ஆர்.ஆர். சீனிவாசன்

தமிழில் : கவின் மலர்



Tuesday, November 16, 2010

இரவில் கரையும் நிழல்கள்

இப்போதெல்லாம் கயல்விழி நினைவு ஓயாமல் வருகிறது. பள்ளிக்கு ஒன்றாகப் போகும் சிறுமிகளைப் பார்க்கும்போதும் சைக்கிளில் செல்லும் மாணவிகளைப் பார்க்கும்போதும் அவள் நினைவு தவறாமல் வந்து போகிறது. அப்போதுகூட அவள் இப்போதிருக்கும் உருவத்தில் எனக்கு நினைவுக்கு வர மறுக்கிறாள். கருநீல பாவாடை தாவணியுடனும் வெள்ளை ஜாக்கெட்டுடனும் மட்டுமே நினைவுக்கு வருகிறாள். அந்தப் பள்ளிச் சீருடையில் நாங்கள் ஊரை சைக்கிளிலேயே வலம் வந்த நாட்கள் நெஞ்சில் இன்னும் பசுமையாய் நினைவிருக்கின்றன

அவள் வீட்டிலிருந்து என் வீடுவரை வந்து என்னை அழைத்துக்கொண்டு இருவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்குப் புறப்படுவோம். அவள் கொஞ்சம் சிவப்பாகவும் நான் கருப்பாகவும் இருப்பதால் பையன்கள் எங்களுக்கு பிளாக் அண்ட் வொய்ட் என்று பெயர் வைத்து அழைத்தார்கள். ரெட்டைப்புறா, நீலக்குயில்கள், அதிசயப் பிறவிகள், ஏசியன் புரொடக்ஷன்ஸ் - இப்படி எத்தனையோ பெயர்கள் எங்களுக்கு. இதில் இந்த ’ஏசியன் புரொடக்ஷன்ஸ்’ என்ற பட்டப்பெயருக்கு மட்டும் இந்த நொடிவரை எனக்கு காரணம் விளங்கவில்லை. நாங்கள் போகும்போது பின்னால் வரும் பையன்கள் இந்தப் பெயரிட்டு சத்தமாக அழைத்து கலாட்டா செய்வதும் நாங்கள் சாலையில் செல்லும்போதே சிரித்துக்கொண்டு சைக்கிளோட்டிச் செல்வதும் நேற்று நடந்ததுபோலிருக்கிறது.

கயல் எப்போதிருந்து எனக்கு தோழியானாள் என்று யோசித்துப் பார்க்கிறேன். சரியாய் நினைவு வரவில்லை. ஆறாவது படிக்க பள்ளியில் சேர்ந்தபோது இரட்டை சடை மடித்துக்கட்டி ஸ்கர்ட் சட்டையில் கயலைப் பார்த்த நினைவு. ஒன்பதாம் வகுப்பில்தான் நெருங்கிப் பேசி தோழிகளானோம் என்று நினைக்கிறேன். அதன் பின் வேறு யாரையும் நாங்கள் சட்டை செய்யவில்லை. வகுப்பில் நாங்கள் சிரித்து திட்டு வாங்காத நாளே இல்லை என்றானது
எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும்வரை நடந்தது அத்தனையும் என்னிடம் ஒப்பிப்பாள். நானோ தூங்கியபிறகானவற்றையும் அவளிடம் சொல்லுவேன்.

“3 மணிலேர்ந்து 4 மணிவரை படிச்சேண்டி, ஒரு உப்பு பெறாத விஷயத்துக்கு 4 மணிக்கு அம்மா வந்து என்னைத் திட்டினாங்க, 4 டூ 5 அழுதேன். அப்புறம் 5 மணிக்கு அப்பா வந்திட்டாங்க. அவங்ககிட்ட பேசிட்டு திரும்பவும் படிக்க 6 மணிக்கு உட்கார்ந்தேன். 10 மணிவரை சயின்ஸ் படிச்சேன். தூக்கம் சொக்குச்சு. அப்படியே தூங்கிட்டேன்”.

இப்படி அவள் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்பிப்பாள். பள்ளியிலும் வெளியிலும் எங்களைப் பற்றிப் பேசாதவர்களே கிடையாது.
ஒரு பையனால் எனக்கு ரொம்பத் தொல்லை. வகுப்பறையின் டெஸ்கில் வந்து என்னிடத்திற்கு நேரே “ஐ லவ் யூ” என்று எழுதி வைப்பான். யாராவது பார்த்துவிட்டால் என்னாவது என்று நான் பயந்து நடுங்குவேன். எரிச்சலாய் இருக்கும். என்னை எங்காவது சாலையில் பார்த்தால்கூட அவனுடைய நண்பர்கள் அவன் பெயரைச் சொல்லி அவனுடைய ஆள் என்பார்கள். ஒரு குரங்குக் கூட்டம்போல பின்னாலேயே சைக்கிளில் வந்து தொல்லை கொடுப்பார்கள். அதேபோல அவளுக்கும் ஒருத்தன் வாய்த்தான். எங்கள் பின்னால் இரு கூட்டங்கள் வரத் தொடங்கின. முதலில் பயந்த நாங்கள் அதற்குப் பின் அவர்களைப் பற்றி எங்களுக்குள் கிண்டலடித்து சிரிக்கத் தொடங்கினோம். எங்கள் ஊரின் சாலைகளின் பள்ளங்களை எங்கள் சைக்கிள்கள் கடக்கும்போதெல்லாம் எங்கள் சிரிப்பால் அவற்றை நிரப்பினோம்.

எங்கள் சிரிப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாயிற்று. வீட்டில், வெளியில், சாலையில், டியூஷனில், வகுப்பில், கடைத்தெருவில், சைக்கிள் கடையில் என்று நாங்கள் சிரிக்காத இடமேயில்லை. “போங்கடி! சிரிப்பா சிரிக்கப்போறீங்க” என்று வேறு ஸ்கூல் பையன்கள் சாபம் விடுவார்கள். “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு” என்று எங்களை கைகாட்டி பையன்கள் பாடுவார்கள். எங்கள் சிரிப்பு எல்லோரையும் உறுத்தியது என்பது மிகத் தாமதமாகத்தான் உணர்ந்துகொண்டோம்.

நாங்கள் சாலையில் ஒருவர் பின் ஒருவராக ஒருபோதும் சென்றதில்லை. இருவரின் சைக்கிள் சக்கரங்களும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி போவோம். போகிறவர்கள் வருகிறவர்களெல்லாம் பல நேரங்களில் திட்டிவிட்டுப் போவார்கள். ஆனாலும் அதிலொரு சந்தோஷம். அப்போதுதானே பேச முடியும். வகுப்பறையில் நடந்தது, முருகன் சார் சொன்ன ஜோக், வீட்டில் நடந்தது, வெளியில் நடந்தது என்று எதையாவது பேசி ஓயாமல் சிரித்துக்கொண்டேயிருந்தோம். நாங்கள் எங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டாலும் சாலையைப் பார்த்து சைக்கிள் ஓட்ட வேண்டிய கட்டாயமிருந்ததால் நேரே பார்த்துக்கொண்டே வாய் மட்டும் பேசிக்கொண்டும் ஜோக் அடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டுமிருக்கும். அப்போது எதிர்ப்படும் வேறு ஸ்கூல் பையன்களெல்லாம் நாங்கள் ஏதோ அவர்களைப் பார்த்து சிரிக்கிறோம் என்று தப்பாக நினைத்துக்கொண்டு பின்னால் வரத் தொடங்கினார்கள். எங்களுக்குக் குழப்பமாக இருக்கும். ”இவன் யாருக்காக வர்றான்” என்று புரியாமல் விழிப்போம் முதலில். அப்புறம் அவன் பார்வை யார் மேல் இருக்கிறதென்பதை வைத்து கண்டுபிடிப்போம். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம். அவளுக்காக எவனாவது வந்தால் அவனைத் திட்டும் வேலையை நானெடுத்துக்கொள்வேன். எனக்காக எவனாவது வந்தால் அவள் திட்டுவாள். ஆனால் மறந்தும் வாயெடுத்து மற்றவர் ஏதும் பேசிவிட மாட்டோம். இதை நாங்கள் சொல்லியெல்லாம் வைத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் எப்படியோ கடைபிடித்தோம்.

ஒருமுறை ஆளா பையனா என்று தெளிவாக சொல்ல முடியாத வயதுடைய ஒருவன் வந்தான். வழக்கமான முதல் குழப்பத்திற்குப் பின் அவன் கயலுக்காக வருகிறான் என்பதை கண்டுபிடித்தோம். வழக்கம்போல நான் திட்டத் தொடங்கினேன். "அறிவேயில்லையா? ஏனிப்படி தொல்லை செய்றீங்க” என்று. "நான் உங்க பிரண்டை லவ் பண்றேன்” என்றான்.

ஒரு வாரம் இப்படியே போனபின் கயல் அவனைத் திட்டத் தொடங்கினாள். நான் மவுனமாகி விட்டேன். அவன் திடீரென்று என்னைப் பார்க்க ஆரம்பித்தான். எனக்காக வருவதுபோல் தெரிந்தது. எது அவனை அப்படி மாற்றியது என்று தெரியவில்லை. இரண்டாவது வாரமே எப்படி ஒருவன் இப்படி மாறுவான் என்று எனக்கு விளங்கவில்லை.

“இவன் என்ன லூஸாடி?” என்றேன்.

“நீ திட்டிய அழகு அவனுக்குப் பிடிச்சிருக்குபோல” என்றாள்.

மறுநாள் ஒரு கடிதத்தை எடுத்து வந்து என்னிடம் நீட்டினான். நான் அதைத் தொடக்கூட இல்லை. நாங்கள் இருவருமே சுயமரியாதை பாதிக்கப்பட்டதுபோல் உணர்ந்தோம். “திருட்டுப்பய! என்கிட்டயே வந்து உன்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு இன்னைக்கு வந்து என்னை லவ் பண்றேன்னு சொன்னா என்ன திமிர்; ஆணவம். ஆம்பிளைங்கிற கொழுப்பு” - நான் அவனைத் திட்டிக்கொண்டேயிருந்தேன் கயலிடம்.
இப்போதும் ஊருக்குப் போகும்போது அவனைப் பார்ப்பேன். தன் மனைவியோடு குழந்தையோடு கடைவீதிகளில் பார்ப்பதுண்டு. ஏனோ அவனைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது இப்போதெல்லாம்.

கயலுடைய அப்பாவும் என்னுடைய அப்பாவும் தமிழாசிரியர்கள் என்பதால் எங்களுக்கு தமிழ்ப் பெயர் வாய்த்தது. “சுடர்மொழி - கயல்விழி” என்று நாங்கள் இரட்டைப் பிறவிகள் போலவேதான் அறியப்பட்டோம். நாங்கள் இருவருமே நன்றாகப் பாடுவோம். அதனால் பள்ளி அசெம்பிளியில் பாடுவோம். அந்த இரண்டொரு நிமிடங்களிலும் கூட்டத்தில் யாரோ ஒரு பையன் அல்லது பெண் முகத்தில் ஏதாவதொரு ஜோக்கைத் தேடி சிரித்து வைப்போம். ஒருமுறை இருவருமே சிரிப்பை அடக்க முடியாமல் பாடமுடியாமல் தவித்து நிறுத்தி விட, கூடப் பாடிய மாணவி ஒற்றை ஆளாய் பாடி முடித்தாள். அன்று ராபர்ட் சாரிடம் திட்டு வாங்கினோம். அப்போதும் சிரித்தோம். சிரிப்புத்தான். எப்போதும் சிரிப்புத்தான்.

எங்கள் படிப்பும், சிரிப்புமாக நாங்கள் விளையாட்டுத்தனமாக இருக்கையிலேயே பிளஸ் டூ பரிட்சை வந்தது. ரிசல்ட் வந்தபோது நான் மட்டும் பாஸாகியிருந்தேன். இடிந்து போனேன். அவளுக்கு கணக்குப் பாடத்தில் போய்விட்டது. அழுதாள். அழுதாள். அழுதுகொண்டேயிருந்தாள். எனக்கு அவள் பெயிலான சோகத்தைவிட அவள் என்னுடன் இனி படிக்க முடியாது என்பதே உறுத்தியது. நான் கல்லூரியில் கணிதம் சேர்ந்தேன். அவள் அக்டோபர் தேர்விற்குப் படிக்கலானாள். தனியாக டியூஷன் சென்று படித்தாள்.

அப்போதுதான் எங்கள் இருவர் வீடுகளிலும் தொலைபேசி வந்த புதிது. தினமும் பார்த்துக்கொள்ள இயலாத சூழலில் மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசுவோம். நான் பேசும் விதத்தை வைத்தே அப்பா “கயலா?” என்பார். போனை கையிலெடுத்ததும் ஆரம்பிக்கும் சிரிப்பு ஒரு மணிநேரத்திற்குக் குறையாது. “என்னதான் பேசுவீங்களோ? இப்படி சிரிக்க” என்று அம்மா அலுத்துக்கொள்வது பெரிதாக அவளுக்கு கேட்கும். “என்னடி சொல்றாங்க?” என்பாள். “நீ பேசு! கண்டுக்காதே!” என்று சொல்லி மீண்டும் தொடங்குவோம். எங்களுக்கு சிரிக்க நிறைய விஷயங்கள் இருந்தன. நான் கல்லூரியில் நடப்பவற்றையெல்லாம் சொல்ல, அவள் டியூஷனில் நடப்பவற்றையெல்லாம் சொல்ல சிரிப்போம்.

அக்டோபர் தேர்வெழுதி பாஸ் செய்தாள் கயல். அடுத்த ஆண்டு எனக்கு ஜூனியராக வந்து எங்கள் கல்லூரியில் சேர்ந்தாள். எனக்கு காலை எட்டரையிலிருந்து ஒன்றரை வரை. அவளுக்கு ஒன்றரையிலிருந்து மாலை ஐந்தரை வரை. அதனால் பார்த்துக்கொள்ளும் நேரம் குறைந்தாலும் தினமும் மாலையில் வீட்டுக்கு வந்து என்னைப் பார்க்காமல் போக மாட்டாள். அப்போதும் நாங்கள் சிரித்தோம். சிரிப்பதற்கு எங்களுக்கு விஷயங்களிருந்தன.

எனக்கு கல்லூரியில் புதிதாக சில தோழிகள் கிடைத்தார்கள். என் தோழிகளெல்லோரும் வெவ்வேறு வகுப்புகளில் இருந்தோம். பாட்டு, பேச்சு, கட்டுரை என்று போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் நிறைய வாங்குவேன். என் பாட்டுக்கு கல்லூரியில் மாணவர்கள் முதல் பிரின்சிபால் வரை ரசிகர்கள். கூட்டம் அடங்காமல் கத்திக்கொண்டிருந்தால் என்னைக் கொண்டுபோய் ஒலிவாங்கி முன்னால் நிறுத்திவிடுவார்கள். நான் பாட ஆரம்பித்தவுடன் அமைதியாகிவிடும் கூட்டம். கல்சுரல்ஸில் நான் பாட, என்னோடு வந்த மற்றவர்கள் நடனம் அது இது என்று பரிசுகளை அள்ளிக்கொண்டு வருவோம். இப்படி கல்சுரல்ஸூக்குப் போய்ப் போயே ஒரு தோழிகள் வட்டம் சேர்ந்தது எனக்கு. நாங்கள் 7 பேர் அதிலுண்டு. 7 ஸ்டார் குரூப் என்று கல்லூரியில் எங்களை செல்லமாய் அழைத்தார்கள். ஓரளவிற்கு எனக்கு அவர்களோடு பழக்கமாகி நட்பாகி விட்டேன். கயல் கொஞ்சம் என்னை அவர்களோடு பார்த்தால் எரிச்சலாவாள். அதுபோலவே அவளுடைய வகுப்பில் உள்ளவர்களோடு அவளைப் பார்த்தால் நான் எரிச்சலாவேன். சின்னச் சின்னதாய் சண்டைகள் எங்களுக்குள் வந்தன. ஆனாலும் நாங்கள் எங்கள் சிரிப்பைத் தொடர்ந்தபடி நட்பு மேலும் இறுகிப்போயிருந்தது. 

இப்படியே இறுதியாண்டு வந்துவிட்டது எனக்கு. கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு விடை கொடுக்கும் ஃபேர்வெல்டே வந்தது. அதற்கு பச்சை நிறத்தில் ஒரே போல 7 ஸ்டார் குரூப்பில் புடவை எடுத்துக் கட்டினோம். அதற்கு பிரண்ட்ஸ் ஸாரி என்று பெயர். எங்களை கும்பலாய் பச்சை நிறச் பிரண்ட்ஸ் ஸாரியில் பார்த்த கயல் பொங்கி வரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு மறைவிடம் நோக்கி ஓடினாள். நான் விக்கித்துப் போனேன். பின்னாலேயே ஓடி அவளை சமாதானப்படுத்தினேன். 
“இது ஒரு நாளைக்குத்தானே.. எல்லோரும் ஆசைப்பட்டாங்க. அதான்” 
“எதுக்கு எல்லோரும் ஒரே கலர்ல ஸாரி எடுத்துருக்கீங்க?”
“இது பிரண்ட்ஸ் ஸாரி கயல்”
அவ்வளவுதான். பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். நான் விழித்தேன். இந்த அன்பிற்கு நான் என்ன செய்யப் போகிறேன்? 
கல்லூரியை விட்டு வெளியேறும் நாளில் எல்லோரிடத்திலும் ஆட்டோகிராப் வாங்கினேன். அவளிடமும் போய் நீட்ட முறைத்தாள். 
“நானும் போடணுமா?”
“ஆமாம்! போடு” - எனக்குள் ஒரு ஆவல் இருந்தது என்னதான் எழுதுகிறது இந்தப் பிசாசு. பார்ப்போம் என்று. 
நெடுநேரம் எழுதிக்கொடுத்து "வீட்டுக்குப்போய் வாசி” என்றாள்.
வரும் வழியிலேயே வாசித்துக்கொண்டே வந்தேன். “நாம் ஒருவருக்குள் ஒருவர் வாழ்கிறோம். இந்த ஆட்டோகிராப் கூடத் தேவையில்லை” என்று தொடங்கி பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாள். “பிரண்ட்ஸ் ஸாரி” என்கிற வார்த்தை அவளை எப்படி துடிதுடிக்க வைத்தது என்றெழுதியிருந்தாள். வாசிக்கையில் கண்ணில் எனக்கு நீர் முட்டியது.
வீட்டுக்குள் நுழைந்தேன் தொலைபேசி மணி அடிக்க..மறுமுனையில் கயல். “என்ன? படிச்சிட்டியா? நீ எவ கூட வேணும்னாலும் பிரண்ட்ஸ் ஸாரி எடுத்துக்கோ. கட்டிக்கோ. நான்தான் உனக்கு பிரண்ட். தெரியுதா?” என்றாள். நான் சிரித்தேன். சிரித்தோம். சிரித்துக்கொண்டேயிருந்தோம். அப்பா வழக்கம்போல வந்து “கயலா?” என்று கேட்டு விட்டுப் போனார்.

*********************************
சுடரு! சாப்பிடவா! - அழைத்தாள் கயல். 

டைனிங் டேபிளில் அமர்ந்தேன். சூடான இட்லி வைத்தாள். காலடியில் அவள் மகன் வந்து என் காலை சுரண்டினான். “சாப்பிடும்போது இப்படியெல்லாம் டிஸ்டர்ப் பண்ணாதே!  ஓடு! போய் டிவி பாரு போ!” - துரத்தினாள் மகனை. 

இப்போது நான் அவள் வீட்டில்தானிருக்கிறேன்.

“டெல்லியில் இருந்தப்போ நீ நடிச்ச நாடகம் பத்தி உன் பேட்டி ஏதோ ஒரு சேனல்ல பார்த்தேன். பயங்கர மெச்சூரிட்டியா பேசுற. ரொம்ப பெருமையா இருந்துச்சு. அவர்கிட்ட சொல்லிக்கிட்டேயிருந்தேன்” என்றாள்.

வளசரவாக்கத்தில் சொந்த வீடு. கணவர் வெளிநாட்டில் இருந்தார். அவளுக்குத் துணைக்கு அவளுடைய மாமியார் இருந்தார். இடையில் மணமான புதிதில் டெல்லி சென்று விட, அவளோடு பேசாமலிருக்கப் பழகிக்கொண்டேன். அவள் வாரமொரு முறையாவது என்னை அழைத்து பேசுவாள். அதன்பின் அவள் கணவர் திடீரென்று வெளிநாட்டுக்குச் செல்ல நேர்ந்தபோது அவளையும் கூட்டிக்கொண்டு போய்விட அதன்பின் என்றைக்காவது பேசுவது, ஈமெயில், சாட்டிங் என்றானது. நாடு திரும்பி அவளும் குழந்தையும் இங்கிருக்க, அவள் கணவர் மட்டும் வெளிநாட்டிலிருந்தார். நானோ பல வேலைகள் செய்து மாறி மாறி இறுதியில் எனக்குப் பிடித்த ஒரு வேலையில் சேர்ந்து விட்டேன்.

அவ்வப்போது கைபேசியில் அழைப்பாள். எனக்கும் வேலைப்பளு அதிகமாக இருந்ததால் அடிக்கடி பேசிக்கொள்ள இயலாமல் போனது. ஆனால் தினமும் அவளை நினைத்துக்கொள்வேன்.  வீட்டு உரிமையாளர் திடீரென்று இரண்டு மடங்காக வாடகை கேட்க உடனே காலி செய்ய வேண்டிய நிலையில் அவளிடம் பேச, “இங்கே வர வேண்டியதுதானே? என்ன யோசனை உனக்கு” என்று கடிந்துகொள்ள பெட்டி படுக்கையோடு அவள் வீட்டுக்குச் வந்துவிட்டேன்.. உடனே ஒரு வீடோ, ஹாஸ்டலோ பார்க்கவேண்டும். பார்க்கும்வரை இங்கிருக்கலாம்.

வீடு தேடும் படலம் ஆரம்பமானது. என் ஏழாயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்தான் ஒதுக்க முடியும். ஒரு லோன் வேறு கட்ட வேண்டி இருந்ததால் விழி பிதுங்கியது எனக்கு. தினமும் வீடு பார்க்கையில் அட்வான்ஸ் ஒத்துவராது அல்லது வாடகை இடிக்கும் அல்லது வீடு பிடிக்காமல் போகும். இப்படியே பதினைந்து நாட்கள் போனது. 

அலுவலகத்தில் வேலை முடிய இரவு பத்துக்கு மேலானது அன்று. அவசரமாக ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். மணி 11. அழைப்பு மணியை அழுத்தினேன். உள்ளே குழந்தை வீறிட்டுக் கத்தும் சப்தம் கேட்டது.

“இன்னைக்கு வேல முடிய நேரமாயிடுச்சு கயல்”

“சரி வா! சாப்பிடு!” - அவள் அன்பை கரைத்து தோசை வார்த்துத் தந்தாள். சாப்பிடும்போது தூக்கக்கலக்கத்துடன் கயலின் அத்தை படுக்கையறையின் வாசலில் நின்று கேட்டார்

”வீடு பாத்தியாம்மா? 

“பார்த்துக்கிட்டுத்தானிருக்கேன். ஒண்ணும் செட்டாகலைம்மா”

"மெட்ராஸில் ரெண்டாயிரம் மூவாயிரத்துக்கு வீடு கிடைக்கிறது கஷ்டமாச்சே. கொஞ்சம் பட்ஜெட்டை கூட்டி வீடு தேடு. அப்பத்தான் சட்னு கிடைக்கும்”

“இல்லம்மா.. இதுக்கு மேலே வச்சா லோன் கட்ட முடியாம போயிடும்”

“அப்படியா? சரி.”

அன்றைக்கு எனக்கு உறக்கம் வரவில்லை. அத்தை என் அப்படி கேட்கவேணும்? நினைவை உதறி மாடியறையில் புரண்டு படுத்தேன். கீழே குழந்தை அழும் சத்தம். சின்னச் சின்ன சத்தத்திற்குக்கூட விழித்துக்கொள்கிறது குழந்தை. இரவெல்லாம் தூங்காமல் கஷ்டப்படுகிறாள் கயல்

மறு நாள் ஒரு கூட்டத்திற்காக மறைமலைநகர் வரை போக வேண்டி இருந்தது. போய்விட்டேன். கூட்டம் முடிய அங்கேயே ஒன்பதேமுக்காலானது. அதற்கு மேல் கிளம்பி வளசரவாக்கம் வந்தால் கண்டிப்பாக 11 மணிக்கும் மேலாகிவிடும். குழந்தை அழும் சத்தம் எனக்கு இப்போதே கேட்பது போலிருந்தது. என்ன செய்யலாம்? மறைமலை நகரில் கூடப் படித்த விஜி இருப்பது நினைவுக்கு வர அவள் கைபேசியை எடுத்து எண்களை அழுத்த, அவள் ”நான் ஊரில் இருக்கேன்” என்றாள். இப்போதென்ன செய்ய? கைகளைப் பிசைந்தேன். நடு ராத்திரியில் போய் தொந்தரவு செய்ய வேண்டுமா? பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. ஒரு சாலையோரக் கடையில் 4 இட்லிகளை தின்றவாறே யோசித்தேன். எப்.எம்.ரேடியோவில் பாட்டு பாடிக்கொண்டிருந்த்து. “உனக்கென இருப்பேன்... உயிரையும் கொடுப்பேன்..” காதல் படப்பாட்டு. பளீரென மின்னல் அடித்தது. திருவண்ணாமலை பேருந்தை கைகாட்டி ஏறினேன். குளிரான அந்த மழை இரவில் பயணம் ஒரு நிராதரவான மனநிலையை எனக்கு அடையாளம் காட்டியது. திருவண்ணாமலைக்கு ஒரு டிக்கெட் எடுத்துவிட்டு ஆயாசமாய் அமர்ந்தேன். பேருந்து முடிவற்றுப் போய்க்கொண்டே இருந்தது. கண்களை மூடி தூங்க முயற்சித்தேன். முடியவில்லை. பையில் இருந்த புத்தகத்தை படிப்பதற்காக எடுத்தேன். பிரித்த அடுத்த இரண்டாவது நிமிடம் விளக்குகள் அணைக்கப்பட்டன. விழித்தபடியே இருளுக்குள் வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்தேன். முடிவற்ற அந்தப் பயணம் என்னை பயமுறுத்தியது. எங்கு போகிறேன்? எதற்குப் போகிறேன்? இலக்கில்லாத பாதையில் அந்தப் பேருந்து என்னை இட்டுச் சென்றது.

சுற்றிலும் கவனித்தேன். ஒரு பெண் தன் கணவனின் தோளில் சாய்ந்து தூங்கிக்கொண்டு வந்தாள். அவள் கயல் சாயலில் இருப்பது போலிருந்தது. இடையில் கயல் குண்டாகி இருக்கிறாள். இரண்டு குழந்தைகளானவுடன் நன்றாய்த்தான் பெருத்திருக்கிறாள். எப்படி இவ்வளவு சதை வைத்தது அவளுக்கு? எத்தனை ஒல்லியாய் இருப்பாள் முன்பு! ஒட்டடைக்குச்சி என்று எங்கள் பள்ளித்தோழனொருவன் அவளுக்கு பட்டப்பெயர் வைத்திருந்தது நினைவுக்கு வந்தது.

கயலுக்கு அழகான குரல். பாடினால் நன்றாக இருக்கும். பிள்ளைகளுக்கு தாலாட்டு கூட சினிமா பாட்டுதான் பாடுகிறாள். தூங்க வைக்க பாடுவது எனக்கு மாடிக்கு சன்னமாய் கேட்கும். ரசித்துக்கொண்டே நானும் தூங்கிப் போவதுண்டு. அப்படி ஒரு நாள் தூங்கிப்போய்விட, திடீரென வந்து எழுப்பினாள். 

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நீ ஏன் இப்படி இருக்கே?”

“எப்படி இருக்கேன்?”

“ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை?”

”ஏன் பண்ணனும்?”

என்னை மவுனமாய்ப் பார்த்தாள். ”சரிதான் நீ சொல்றது. நான்கூட ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நினைச்சுருக்கேன்”

“நீ படிச்ச படிப்பென்ன? உன் திறமை என்ன. நீ ஏன் இப்படி வீட்டில் அடைஞ்சு கிடக்கணும்?”

“இருந்தாலும் அப்பா அம்மாவுக்குப் பிறகு யார் உன்னைப் பார்த்துப்பாங்க. அதுக்காவது புருஷன் புள்ளை வேணுமில்லையா?”

"இப்போதைக்கு எனக்கு அது தேவையில்லைன்னு தோணுது. விட்டுடு ப்ளீஸ்!”

அவள் என்னையே பார்த்தாள். கண்கள் கலங்கி கொட்டத் தயாராய் நின்றன. 

“உன்னை நினைச்சா பயமா இருக்கு!” - பொல பொலவென உதிர்ந்தது கண்ணீர்.

“ஒண்ணும் ஆகாது. செத்தா போயிடுவேன்? தனியா வாழ்ந்துடுவேன். பின்னாடி கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணினா பண்ணிக்குவேன். சரியா? போய்த்தூங்கு கயல்”

எனக்காக கண்ணீர் விட்ட ஜீவன் அவள். கயல்! என் பிரியமான சிநேகிதியே!  மனம் குழைந்து அவளுக்காய் பொங்கி விழிகளில் வழிந்தது.

“திருவண்ணாமலை இறங்கு” - நடத்துனரின் குரல் கலைத்தது என்னை. இறங்கிக்கொண்டேன். ஒரு தேநீர் குடித்தால் நன்றாயிருக்குமென்று தோன்றியது. தேநீர்க்கடையில் தேநீர் வாங்கி பருகினேன். “மெட்ராஸ்.. மெட்ராஸ்..” கூவி அழைத்தார் நடத்துனர். ஓடிப்போய் ஏறிக்கொண்டேன். இந்தப் பேருந்தில் மூட்டைப் பூச்சி உயிரை எடுத்தது. உடலெல்லாம் அரிக்க எரிச்சல் மண்டியது. வண்டி என் மனத்தைப் போலவே எதையோ அசை போட்டுக்கொண்டு மெதுவாக பயணித்துக்கொண்டிருந்தது. மீளா இரவா இது? விடியாதா? இத்தனை நீண்ட நெடியதா இரவு? எத்தனையோ நாள் புத்தகம் வாசிக்க விடிய விடிய விழித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நீளாத இரவு மலைப்பாம்பைப் போல நீண்டு நெளிந்து என்னை விழுங்கி ஏப்பம் விட்டது. கிண்டி நெருங்கியபோது விடிந்திருந்தது. 
வீட்டு வாசலில் அழைப்பு மணியை அழுத்தினேன். கயல் வந்து கதவைத் திறந்தாள். “என்னாச்சு?” என்றாள். 

“ஆபீஸிலேயே தங்கிட்டேன்”

என்னைப் பார்த்தாள். “ஆபீசிலா? பயமாயில்லையா உனக்கு?” 

“என்ன பயம்? எல்லாரும் மனுசங்கதானே?” - கூறியவாறு மாடிப்படியேறினேன்.

அன்று அலுவலகம் கிளம்புகையில் அத்தை என்னைப் பார்த்த பார்வை ஏனோ தொந்தரவு செய்தது.. 

அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது திடீரென பொறி தட்டியது. நேற்றிரவு கயல் எனக்கு போன் பண்ணவில்லை என்பது உறைத்தது. இரவு முழுதும் வரவில்லை. நான் என்ன ஆனேனென்று அவள் ஏன் என் என்னை அழைத்துக் கேட்கவில்லை? மனது தவித்தது. கேள்விக்கு விடை தெரியாத வரை வேலை செய்ய முடியாது போலிருந்தது. பர்மிஷன் போட்டுவிட்டு மெரினாவிற்குச் சென்றேன். கடல் அலைகள் படாத தூரத்தில் அமர்ந்துகொண்டு கடலை வெறித்துப் பார்த்தேன். திடீரென சுனாமி நினைவு வந்தது. விருட்டென எழுந்தேன். விடுவிடுவென சாலைக்கு வந்து கிடைத்த பேருந்தில் ஏறினேன். ராணிமேரிகல்லூரிக்கு அருகே பேருந்து வந்தபோது செல்வத்தின் அறைக்குச் சென்று அவரைப் பார்த்தாலென்ன என்று தோன்றியது. செல்வம் நல்ல நண்பர். அவருடைய அறைக்கு வந்தேன். தூங்க வேண்டும் போலிருந்தது. படுத்துவிட்டு எழுந்தவுடன் மணி பார்த்தேன். எட்டாகி இருந்தது. சீக்கிரம் போகவேண்டும். கிளம்பினேன். வீட்டிற்குப் போனபோது பத்து மணியாகியிருக்கவில்லை. அப்பாடா என்றிருந்தது. கயல் தூங்கிப் போயிருந்தாள். நானாகச் சென்று சாப்பாடு எடுத்துச் சாப்பிட ஏனோ தயக்கமாக இருந்தது. அத்தை டிவி பார்த்தவாறிருக்க, நான் படியேறி வந்து படுக்கையில் விழுந்தேன்.

எழுகையில் வெயில் சுள்ளென அடித்தது. இரண்டு மணிக்குப் போனால் போதும் அலுவலகத்திற்கு. ஆனாலும் சீக்கிரம் கிளம்பினேன். கயல் சமையலைறையில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். 

”இன்னிக்கு சீக்கிரம் போகணும் கயல். வர்றேன்.”

”சாப்பாடு சுடர்!” 

“பசியில்லை. வேணாம். மொத்தமா சேத்து மதியம் சாப்பிட்டுக்குறேன்”

சாலையில் இறங்கி நடந்தேன். கொலை பசி. ஆனால் எதுவும் சாப்பிடப்பிடிக்கவில்லை. அலுவலகத்தை அடைந்தேன். அலுவலகத்திலேயே தங்கியிருக்கும் மோகன் அப்போதுதான் விழித்து உட்கார்ந்திருக்க.. “என்னங்க அதுக்குள்ள வந்துட்டீங்க. இத்தனை சீக்கிரமா?” - ஆச்சரியப்பட்டான்.

”சும்மாத்தான்..”

கைபேசியில் கயல் குரல் ஒலித்தது.

“சொல்லு”

“அடுத்த வாரம் நாத்தனார் வீட்லேர்ந்து வர்றாங்க”

“ஓ! எப்படி இருக்காங்க அவங்க எல்லாம்?”

“அவங்களுக்கென்ன? நல்லாத்தானிருக்காங்க. அவங்க கொஞ்சம் பழைய ஆளுங்க சுடரு. அதனால தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்பாங்க. நீ ஏன் இங்கே இருக்கேன்னு கேட்பாங்க. ஹாஸ்டலோ வீடோ ஒரு வாரத்துக்குள்ள பாத்துற முடியுமா?”

கையில் காசில்லாமல் எங்கே போவதென்ற இயலாமை ஒரு புறமும் அவளிடமிருந்து நான் எதிர்பார்க்காத வார்த்தைகள் ஒருபுறமும் வந்து தாக்க நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. மயக்கம் வருவது போலிருந்தது.

“பார்த்துடலாம் கயல்”

கைபேசியை அணைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தேன். உடல் பலகீனமாய் உணர்ந்தேன். 

“மோகன் கொஞ்சம் தண்ணி..”

தண்ணிரைக் குடித்துவிட்டு கவிழ்ந்து மேஜையில் படுத்தேன். காகிதங்களை கண்ணீர் நனைக்க மோகன் என்னை விநோதமாய்ப் பார்த்தான்.

“என்னாச்சு? யார் போன்ல?”

“ஒண்ணுமில்லை”

”இல்லை. சொல்லுங்க.” அருகில் வந்து கைகளைப் பற்றிக்கொண்டு கேட்டான். 


பற்றிய அவன் கைகள் நனைந்தன. இன்றிரவிலிருந்து கயல் வீட்டுக்குப் போக முடியாது. என்ன செய்யலாம்? செல்வத்திடம் கேட்கலாமா ”செல்வம்! 
இன்றிரவு உங்கள் அறைக்கு வருகிறேன். கயல் அவசரமாய் ஒரு சாவுக்காக ஊருக்குப்போயிருக்கிறாள். அவசரத்தில் சாவி வைக்க மறந்துவிட்டாள்” 
என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பி பதிலுக்காகக் காத்திருந்தேன்.

“தாராளமா வாருங்கள்” என்று பதில் வந்தது.

இரவு பத்தரை மணிக்கு செல்வத்தின் அறையிலிருந்தபோது கைபேசி ஒலித்தது. 

“எங்கே இருக்கே? இன்னும் காணலை?” - கயலின் குரலில் மெலிதான தடுமாற்றமும் நடுக்கமும்.

“இங்கே ஆபிஸிலேயே தங்கிக்கிறேன். இன்னும் வேலை முடியலை.”  செல்வம்  என்னை விநோதமாய்ப் பார்த்தார்.

“சுடர், காலையில நான் சொன்னதுக்கு வருத்தப்படுறியோன்னு எனக்கு பயமாயிருக்கு. அதனால் நீ வரலையோன்னு கஷ்டமாயிடுச்சு எனக்கு”

“இல்லை கயல். நிஜமாவே எனக்கு வேலையிருக்கு. அதான்”

பேசிமுடித்த அடுத்த நிமிடத்தில் கயலிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது 

“என் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. நான் உன்னை கஷ்டப்படுத்திட்டேன். ஆனால், எனக்கு வேற வழியில்லாமல்தான் அப்படிச் சொல்ல நேர்ந்தது. எனக்கு ஏனோ மனசஞ்சலமாய் இருக்கிறது. என்னைப் புரிந்துகொள். ப்ளீஸ். நான் ஒரு சூழ்நிலைக்கைதி. நாத்தனார் வீட்டில் ஒரு வாரம் கழித்துதான் வருகிறார்கள். நீ நாளைக்கு வீட்டுக்கு வா. நான் காத்திருப்பேன்”

எனக்குத் தெரியும் நான் இனி அங்கு போகப்போவதில்லையென.

நான் அவளுக்கு பதில் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

“எனக்கு உன்னைத் தெரியும். உன்னைப் புரியும்.”

திடீரென உறைத்தது. .அவள் வீட்டில் இருந்த இத்தனை நாட்களிலும் ஒருமுறைகூட நாங்கள் இருவரும் சிரிக்கவேயில்லை என்பது.

(நவம்பர் மாத 'உயிர் எழுத்து' இதழில் வெளியான என் சிறுகதை)

Sunday, November 07, 2010

அந்தோணியின் கதை



(இது 2009 ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்டது. ஈழத்தில் மே 2009 நிகழ்வுகளுக்குப் பின்  ஷோபாசக்தி தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது அவருடன் நேர்காணல் செய்து எழுதிய கதை இது. கதைக்குள் வைக்க இயலாத உரையாடலை கேள்வி-பதில் வடிவத்தில் தந்திருக்கிறேன்.  நிலைமைகள் இன்றைக்கு வேறாக இருக்கின்றன. ஷோபாவிற்கே கூட அப்போது அவர் கூறிய விஷயங்கள் சில இப்போது பொருந்தாமல் இருக்கின்றன என்றார். அத்னாலேயே இதை எந்த இதழிலும் வெளியிடவும் இயலவில்லை. ஆனாலும் இந்த நேர்காணல் வீணாகப் போவதை விரும்பாமல் இப்போது என் வலைப்பூவில் பதிகிறேன். 2009 ஈழத்தின் நிகழ்வுகளுக்கு சற்றுப் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்ந்த உரையாடல் இது என்பதை நினைவில் வைத்து வாசிக்கவும்)

ங்களில் யாருடைய ஊராவது இன்று மனிதர்கள் வாழ முடியாதபடி ஆனதுண்டா? உங்கள் ஊரில் நீங்கள் பிறந்து வளர்ந்த வீதியில் மீண்டும் நுழைய முடியாத நிலை உங்களில் யாருக்கேனும் வந்ததுண்டா? உங்கள் ஊர் எல்லையில் நுழைய முற்பட்டால் ராணுவத்தால் துரத்தப்படும் அவலத்தை அனுபவித்ததுண்டா? உங்கள் ஊரின் மனிதரகள் அனைவரும் இடம் பெயர்ந்து இன்று அந்த ஊர், கடற்படைத்தளமாக மட்டும் சுருங்கிய கொடுமையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் ஊர் அதிஉயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, நீங்கள் உங்கள் நிலத்திலிருந்து துரத்தப்பட்டிருக்கிறீர்களா?

அந்தோணி துரத்தப்பட்டிருக்கிறான்.

தன் மக்களின் சந்தோஷம், துக்கம் என எல்லாவற்றிற்கும் சாட்சியான அவனுடைய மணற்தீவு, அத்தீவிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் போலவே தனியாய் நிற்பதை வெகுதொலைவிலிருந்து பார்க்கிறான். அல்லைப்பிட்டி...ஆம் அதுதான் அவனுடைய ஊரின் பெயர். மனித மனங்களின் கனவுகளையும் சேர்த்துப் புதைத்த தீவு அது. யாழ்ப்பாணத்திற்கு வடக்கே உள்ள அந்தத்தீவுதான் பிற வடபகுதி தீவுகளுக்கு நுழைவாயில்.

அது அந்தோணி பிறந்த ஊர். ஒருவேளை அவன் அந்த ஊரில் பிறக்காது போயிருந்தால் இந்தக் கதைக்கான அவசியமே வந்திருக்காது.அந்தோணிக்கு ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. அப்பா உள்ளூரில் உள்ள ஒரு ரௌடி. அடிக்கடி சிறைக்குப் போய்விடுவார். போலீஸ் அவரைத் தேடி வரும்போது அவர் இல்லையென்றால் அவன் அம்மாவைப் பிடித்துக்கொண்டு போய்விடும்.

இந்துக்கோவில்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே மரியாதை அளிக்கப்பட்டது. கிறிஸ்துவ தேவாலயத்தில் தனித்தனியாகத்தான் வெள்ளாளர்களும் தலித்துகளும் அமர்ந்தனர். பாடசாலைகள், ரேஷன் கடைகள் போன்றவை வெள்ளாளர் வாழும் பகுதியிலேயே இருந்தன. உள்ளுக்குள் வெதும்பினாலும் அது பற்றி தலித் குடும்பங்கள் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டிருந்த அவர்கள் கல்வி குறித்தெல்லாம்  கவலைப்படும் சூழ்நிலையில் இல்லை. புகழ்பெற்ற திரைப்படப் பாடலான “அல்லா அல்லாபாட்டு மெட்டில்

“அல்லா அல்லா
 அல்லைப்பிட்டி பள்ளா பள்ளா!

என்று வெள்ளாளர்கள் பள்ளர்களை வக்கிரமாகக் கேலி செய்து பாடுவதை அந்தோணி பார்த்திருக்கிறான்.

ஐந்தாம் வகுப்புவரை அந்தோணி அல்லைப்பிட்டியில் படித்தான். ஆறாம் வகுப்புக்கு வேலணை சென்றான். பள்ளியில் அந்தோணிக்கு நல்ல பெயர். கெட்டிக்காரனாக வருவான் என்று வாத்தியார்மார்கள் சொல்வதைக் கேட்கும்போது, ‘அப்பாடா! படிச்சு நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் முன்னேறணும்என்று நினைப்பான். விடுதியில் தங்கித்தான் அவன் படித்தான். தமிழ் வெறி அவனுக்கு. பத்தாவது வரை அங்கேதான் படித்தான். படிக்கிற காலத்திலேயே அவனுக்கு எப்படியோ இயக்கத்தின் மீது பற்று வந்து விட்டது. அப்போது அவனுக்கு பற்று வராமல் இருந்திருந்தால்தான் ஆச்சர்யப்பட நேர்ந்திருக்கும்.

1983 ஆம் ஆண்டு குட்டிமணி, தங்கதுரை கொல்லப்பட்ட ஆண்டு. மிகப்பெரிய கலவரம் வெடித்து தமிழர்களை தின்றது.அப்போது அந்தோணியின் தீவையும் அயற்தீவுகளையும் சேர்ந்த நிறைய தமிழர்கள் கொழும்பு நகரத்தில் புகையிலை விற்பவர்களாக, கூலி வேலை செய்பவர்களாக, கடை வைத்திருந்தவர்களாக இருந்தார்கள். கலவரம் பற்றிக்கொள்ள, தினமும் தமிழர்கள் கைகால்கள் இழந்தும், அடிபட்டும், பிணமாகவும் வந்தவண்ணம் இருந்தனர். அல்லைப்பிட்டிதான் நிறைய தீவுகளுக்கு நுழைவாயில் என்பதால் எல்லாமே இந்த எல்லையில்தான் வந்து சேர்ந்தன. அந்தக் கொடூரக் காட்சிகளெல்லாம் இவன் கண்களில் வந்து விழுந்தன. இந்தக் காட்சிகள் இயற்கையாகவே இவனுக்குள் விடுதலை வேட்கையை உண்டுபண்ணின. அந்தோணிக்கு இயக்கத்தில் சேர்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.

ஆனால் இவன் நினைத்ததுபோல இயக்கத்தில் சேருவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.அவர்களுக்கென்று பரீட்சை எல்லாம் உண்டு. ஒரு இடம் சொல்லி அந்த இடத்திற்கு 5 மணிக்கு சரியாக வரவேண்டுமென்று சொல்வார்கள். போனால் யாரும் இருக்க மாட்டார்கள். நெடுநேரம் நின்று பார்த்துவிட்டு வந்துவிடுவான். ஆனால் எங்கிருந்தோ இருந்து இவன் பொறுமையாக நிற்கிறானா என்று இவன் சகிப்புத்தன்மையின் அளவை தெரிந்துகொள்ள முனைந்திருப்பது பின்னாளில்தான் இவனுக்குத் தெரிய வந்தது. திடீரென ஒரு 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்திற்கு வரச் சொல்லுவார்கள். பேருந்து வசதி கிடையாது. சைக்கிளில்தான் செல்லவேண்டும். மாங்கு மாங்கென்று இவன் மிதித்துச் செல்வான். இப்படி பலமுறை சோதனைகள் நடக்கும்.

அன்றைக்கு பல இயக்கங்கள் இருந்தாலும் புலிகள் இயக்கத்தில் சேர வேண்டுமென்று இவன் உறுதியாய் இருந்தான். அதற்கு பல காரணஙகள் உண்டு. செயல்படும் இயக்கமாக இருந்தது புலிகள் இயக்கம்தான். திருநெல்வேலியில் கண்ணிவெடி வைத்து 13 பேரைக் கொன்றிருந்தது புலிகள் இயக்கம். அப்போது மகேஷ் என்பவர்தான் இவனது இயக்கத் தொடர்பாளர். அவர் மூலமாகவே அந்தோணி இயக்கத்தை தொடர்புகொள்ள இயலும். அவருக்கு மேலே உள்ள ஒருவரையும் அவனுக்குத் தெரியாது. இயக்கத்தில் படிநிலையில் தனக்கு மேலிருக்கும் ஒரே ஒருவரைத்தவிர வேறு யாருடனும் தொடர்புகொள்ள முடியாது. இது இயக்கத் தலைவர் வரை பொருந்தும். அந்தோணி தினமும் சென்று என்னை இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கண்ணா!என்று கெஞ்சுவான். என்னை எப்போ இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்புவீங்கண்ணா? எப்போ எனக்கு ஆயுதம் குடுப்பீங்கண்ணா? எப்போ எனக்கு குப்பி குடுப்பீங்கண்ணா?” என்று துளைத்தெடுப்பான். சவூதி போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல தினமும் ஏஜெண்டுகளை பார்த்து ஓயாமல் நச்சரிக்கும் இளைஞனைப் போல இவன் நச்சரிக்கத் தொடங்கினான்.

ஆறு மாதகாலம் இவனை கண்காணித்தது இயக்கம். கண்காணிப்பு காலத்திலேயே இவனுக்கு சுவரொட்டி ஒட்டும் வேலை உட்பட பல வேலைகளை இயக்கம் கொடுத்தது. இப்படியான வேலைகளை அவன் செய்துகொண்டிருக்கையில் 84இல் இவனுக்கு கொரில்லா பயிற்சி கொடுத்தது இயக்கம். 10 பேருக்கு ஒரு துப்பாக்கி இருக்கும். அதில் குழுத்தலைவருக்கு அந்த துப்பாக்கி. மற்றவர்கள் ஒரு தடி வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு ஆள் நியமிக்கப்பட்டு இயக்கத்திற்கு ஆளெடுக்கும் பணி உட்பட அனைத்து இயக்கப்பணிகளையும் அவர் செய்யவேண்டும். அவருக்கு ஏரியாக்காரர் என்று பெயர். பயிற்சி முடிந்ததும் அந்தோணி ஏரியாக்காரன் ஆனான். அந்த சமயத்தில் யாழ்ப்பாணத்தில் திலீபன் அரசியல்பிரிவுத் தலைவராகவும் கிட்டு ராணுவத் தளபதியாகவும் பொறுப்பில் இருந்தனர்.

அந்தோணியின் அண்ணன் வெளிநாட்டிலிருந்து இவனுக்கு எழுதிய கடிதத்தில் இயக்கத்தில் சேர்வதெல்லாம் வெறும் ஏமாத்து வேலை. பொய் வேலை. அதெல்லாம் உனக்கு வேண்டாம்என்று எழுதினார். இவன் அவருக்கு பதில் சூடாக எழுதினான். தட்டுகழுவப் போனா பேசாம தட்டு கழுவணும். இயக்கத்தை பத்தி உமக்கு என்ன தெரியும்?

அந்தோணி ஆயுதக்கவர்ச்சி உடையவன். அப்போது கம்யூனிச சைனாவிலிருந்து ஒரு சஞ்சிகை  வந்து கொண்டிருந்தது. அதில் விதவிதமான வண்ணப்படங்கள் வரும். அதை பாடப்புத்தகங்களுக்கு அட்டை போடுவதற்காகவே பொடியன்கள் விரும்பி வாங்குவார்கள். அந்த புத்தகத்தில் முதுகில் துப்பாக்கியோடு வயலில் மக்கள் வேலை செய்வது போல தான் பார்த்த புகைப்படங்களில் வருவது போல தமிழீழ மக்களையும் கற்பனை செய்வான்.

ஆங்காங்கே கூட்டங்கள் ஏற்பாடு செய்து மக்களை சந்தித்து பேசும் பணி அவனுக்குத் தரப்பட்டது.. ஆயுதரீதியாக போராட்டம் நடத்தி தமிழீழம் பெற வேண்டுமென வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தினான். கவிஞர் நிலாந்தன் (தற்போது அவர் முள்கம்பிகளுக்குப் பின்னால் முகாமில் இருக்கிறார் என்று கேள்வி) தலைமையில் மக்கள் கூடும் இடங்களில் விடுதலை காளிபோன்ற நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. அந்த நாடகத்தில் அந்தோணி நடித்தான்.

தமிழீழமே எங்கள் தாகம்! - அந்தத்
தாகம் தீரும் வரை போராடிச் சாவோம்!
.
.
கொக்குளாய் காணாதோ சாமி சாமி!
கொக்காவில் காணாதோ சாமி சாமி!
காரைநகர் போதாதோ சாமி சாமி!
களப்பலிகள் போதாதோ சாமி சாமி!
கடலில் பலிகொடுத்தோம்!
களத்தில் பலிகொடுத்தோம்!
விடலைப்புலிகளெல்லாம்
விஷம்தின்று சாகிறார்கள்!

போன்ற தெருக்கூத்து வடிவப் பாடல்களோடு நாடகம் களை கட்டும்.


திம்பு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது அதை எதிர்த்து பூட்டான் என்ன பாட்டன் வீடா?” என்ற கோஷத்தோடு நாடகம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. அப்போது புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் பல பகுதிகள் வந்து விட்டன. ஆனாலும் கூட ஆங்காங்கே ராணுவம் கண்காணிக்க வரும். மக்கள் ஆதரவு இருந்ததால் எப்படியாவது ராணுவம் வரப்போகும் செய்தி வந்து விடும். குழுவினரோடு அடுத்த ஊர் சென்று விடுவான்.

இப்படியே களமும் கலையுமாக நாட்கள் கழிந்தன. அநுராதபுரத்தில் இயக்கம் 120 சிங்களரைக் கொன்றது. அதில் 25 பள்ளிக் குழந்தைகளும் அடக்கம். அதற்கு பழிவாங்குவதற்காக 65 தமிழர்கள் பயணம் செய்த குமுதினி படகில் இருந்த அனைவரும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 65 உடல்களை சுமந்துகொண்டு அந்தப் படகு கடலில் ஆடியாடி மிதந்தது. அந்தோணியும் மற்றவர்களும் அந்த உடல்களை கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள். அநுராதபுரம் தாக்குதல் தவறானதோ? இது நமக்கு சரிப்பட்டு வராது போல் தெரிகிறதே... மனசஞசலத்திற்கு ஆளானான் அந்தோணி. ஆனால் இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்குப்பின் இலங்கை அரசு திம்புவில்  பேச்சுவார்த்தைக்கு வந்தது. இப்படி அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்தியிராவிட்டால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்திருக்காது என இயக்கம் சொல்ல அதுவும் சரிதான் என்றிருந்துவிட்டான். ஆனால் அவனது ஒன்றரை வருட மனப்போராட்டத்திற்கு அது ஆரம்பமாக இருந்தது.

இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில் சிவில் நிர்வாகம் கிடையாது. ஆக ஒரு பதில் நிர்வாகம் அமைக்கப்பட்டது. பல்வேறு இயக்கங்கள் இருந்ததால் ஒரு குற்றத்திற்கு எல்லா இயக்கஙகளிடமிருந்தும் தண்டனை கிடைக்கும். பொலிஸ்காரனின் அதிகாரத்திற்காவது எல்லையுண்டு. நம் இயக்கஙகளுக்கோ வானளாவிய அதிகாரம். பத்தாததற்கு 37 இயக்கங்கள் இருந்தன.

பத்து ஏக்கர் நிலம் குறித்த தகராறா? இவ்வளவு உனக்கு.. இவ்வளவு அவனுக்கு, மிச்சம் இயக்கத்துக்கு என்ற ரீதியிலேயே தீர்ப்புகள் இருந்தன. பாலியல் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். கையில்லாத ஜாக்கெட் போட்ட அல்லது முடியை குட்டையாய் வெட்டிய ஒரு பெண் வெளியில் நடமாட முடியாது. உளவாளி என்றெண்ணி பிடித்துக் கொண்டு போய் கொன்று விடுவார்கள். இந்த காரியங்களை புலிகள் மட்டுமல்ல, எல்லா இயக்கங்களும் செய்தன. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனானான். மரத்தில் கட்டிவைத்து அடிப்பது போன்ற தண்டனைகள் எல்லாமே உண்டு. உழைத்து களைத்து வடிசாராயம் குடிப்பவர்களை துவைத்து எடுத்தனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இயக்கம் கட்டினான் அந்தோணி. சில சமயங்களில் வெறுப்பாய் உணர்ந்தான். என்ன செய்ய? இது ஒரு ராணுவ அமைப்பாயிற்றே? அருகிலேயே இருப்பவன் கூட இயக்கத்திற்கு உளவறிந்து சொல்பவனாய் இருக்கக்கூடும். அதனால் யாரிடமும் எதுவும் பேசவில்லை அவன்.

85இல் இலங்கை அரசோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடாகி போர்நிறுத்தம் ஏற்படுகிறது. தமிழீழத்திற்கு பதில் மாநில சுயாட்சி என்றெல்லாம் பேச்சு வந்தபோது அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இயக்க உறுப்பினர்களுக்கு அரசியல்ரீதியான கல்வி எதையும் இயக்கம் அளிக்கவில்லை. 1986 ஏப்ரலில் புலிகள் டெலோ இயக்கத்திற்கு தடை விதித்தனர். ஸ்ரீசபாரத்தினம் உட்பட 300 டெலோ போராளிகள் கொல்லப்பட்டனர். அந்த ஆண்டு இறுதியிக்குள் புளோட், ஈபிஆர்எல்எப், TEA, TELA போன்ற இயக்கங்கள் தடை செய்யப்பட்டன.

இயக்கத்திலிருந்து வெளியேறுவது என்ற முடிவு அப்போது தற்கொலைக்கு சமம். வெளியேறினால் கைது செய்யப்படுவோம், நிறைய தொல்லைகள் வரும் என்று தெரிந்தே அந்தோணி வெளியேற முடிவெடுத்தான். வெளியேறிய பிறகு போய் சேர வேறு முற்போக்கு அரசியல் இயக்கம் இல்லை. ஆனாலும் தனது அடையாள அட்டை, குண்டுகள் ஆகியவற்றை ஒப்படைத்துவிட்டு வெளியேறினான். இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டால் மரணதண்டனை என்ற நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டுதான் அவன் இயக்கத்தில் சேர்ந்தான். சயனைடு குப்பியை மட்டும் அவன் வைத்துக் கொண்டான்.

இயக்கத்திலிருந்து வெளியேறிய ஞானம் அம்மான் சுற்றிவளைக்கப்பட்டபோது குப்பி கடித்து தற்கொலை செய்துகொண்டார். இயக்கத்திலிருத்து வெளியேறியவர்களும், மற்ற இயக்கங்களை தடை செய்திருந்ததால் இயங்கமுடியாமல் இருந்த மற்ற இயக்கக்காரர்களும் ஒன்றாகவே அலைந்தனர். கும்பலாகவே சுற்றினர். இயக்கத்தில் இருந்த ஆள் என்று இறுமாப்பில் எங்களுக்கே முதல் பங்கு என்ற ரீதியில் விடுதலைரௌடிகளாக வலம் வந்தனர். எந்த இயக்கமாவது வந்து கடையடைப்பு செய்யச் சொல்லிவிட்டுச் சென்றால் பின்னாடியே போய் கடையைத் திறக்கச் சொல்லி மிரட்டுவது என எல்லாமே நடந்தேறின.

மீனவர்கள் கடலுக்குள் வெடி வீசி மீன்கள் செத்து மிதக்கும்போது அப்படியே மீன்களை அள்ளிக் கொண்டுவருவார்கள். அதற்காக சில பேர் இயக்கத்தின் கண்ணிவெடிகளை திருடிவிட, இயக்கம் இவர்கள்தான் திருடினார்கள் என முடிவு செய்து இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இவன் குப்பி கடிக்காமல் விட்டுவிட, கைது செய்ததும் குப்பி பறிபோனது. பத்து நாட்கள் சிறையில் இருந்தான்.

வெளியே வந்தபின் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது அவனுக்கு எப்படியோ இருந்தது. அந்தோணியின் அண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இங்கிலீஷ் படிக்கப்போகிறேன். அதனால் பணம் அனுப்பி வைக்கவேண்டும்என்று கடிதம் எழுதினான். அண்ணன் 8000 ரூபாய் அனுப்பி வைக்க, இவனுக்கு தலை கால் புரியவில்லை. கையில் வாட்ச், கூலிங்கிளாஸ், சைக்கிள், புதுப்புது உடுப்புகள் என அந்த பணத்தில் செலவு செய்து சுற்றித் திரிந்தான்.

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதே. மீண்டும் நாடகம் போடத்துவங்கினான். இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டானேயொழிய பிரபாகரனே தனது தலைவர், தமிழீழமே தனது லட்சியம் என்பதில் உறுதியாய் இருந்தான் அந்தோணி. பிரபாகரனுக்குத் தெரியாமலேயே வேண்டத்தகாதவை சில நடக்கின்றன என்று உறுதியாய் நம்பினான். கண்ணன் வருவானா?” என்று ஒரு நாடகம். இந்தியா வருமா? வந்து தமிழீழம் பெற்றுத்தருமா?” என்ற பொருளில் அந்த நாடகம் போட்டான்.

87இல் கண்ணன் வந்தேவிட்டான். இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இயக்கம் தொட்டதெல்லாம் வெற்றிதான் அப்போது. மிகக்குறைந்த நபர்களையே இயக்கம் இழந்திருந்தது. திலீபன்தான் இயக்கம் இழந்த 650ஆவது நபர். இயக்கத்தின் பெரும்பாலான தாக்குதல்களில் உச்சபட்ச வெற்றி கிட்டியது. மக்களின் ஆதரவு, சர்வதேச ஆதரவு எல்லாமும் இருந்தன.

வடமராட்சியில் லிபரேஷன் ஆபரேஷன்என்ற பெயரில் ராணுவம் முழுவீச்சில் தாக்குதலைத் தொடங்கியது. வல்வெட்டித்துறை, பருத்தித்துறை என வரிசையாய் பகுதிகள் கையைவிட்டுப் போயின. இந்திய விமானங்கள் ஈழத்தில் உணவுப் பொட்டலங்களை வீசின. தொடர்ந்து இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அந்தோணியின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்திய விமானத்தில் ஈழத்துக்கு அழைத்து வரப்பட்டார். முதலும் கடைசியுமாக பொதுமக்கள் மத்தியில் அவர் சுதுமலையில் தோன்றியபோது சில அழுத்தங்கள் காரணமாகவே ஆயுதத்தை ஒப்படைக்கிறோம்என்றார். அதன் பின் இலங்கை அரசும், இந்திய அமைதிப்படையும் புலிகளை தாக்கத் துவங்கின. இந்திய அமைதிப்படைக்கும் இயக்கத்துக்கும் போர் மூண்டது.

பிரபாகரனே தனது தலைவன், தமிழீழமே தனது லட்சியம் என்றிருந்தவன்தானே? அந்தோணி மறுபடியும் ஊர்வலங்கள், ஆள்சேர்த்தல் என மீண்டும் எல்லாவற்றையும் செய்தான். வடகிழக்கில் ராணுவத்தை வெளியேற்றவேண்டும், சிங்கள குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற அந்தோணியின் கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. இந்திய அமைதிப்படை அந்தோணியைத் தேடியது. இவன் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள அப்பா அம்மா தங்கை என எல்லோரையும் மிரட்டத் தொடங்கினார்கள். அந்தோணி தலைமறைவானான்.

தனது இருபதாவது வயதில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு தன் தந்தையுடன் எந்த சோதனைச் சாவடியிலும் சிக்காமல் வந்து சேர்ந்தான்.

கொழும்பில் தங்கியவுடன். அண்ணா! நான் திருந்திவிட்டேன். நான் ஜெர்மனி போகப் போறேன். எனக்கு பணம் அனுப்புங்க”  என்று அண்ணனுக்கு கடிதம் எழுதினான் ஏஜெண்டுக்கு அறுபதாயிரம் ரூபாய் கட்டவேண்டும். அவன் அண்ணன் ஒரு தவறு செய்தார். அறுபதாயிரம் மட்டும் அனுப்பாமல் ஒரு பதினைந்தாயிரம் அதிகமாக அனுப்பி விட்டார்.

இவனுடன் கூட இருந்த ஒரு நண்பன் இந்தியாவுக்கு பயணமாக ஆய்த்தமாகிக் கொண்டிருந்தான். இந்தியா போனால் என்ன? ஆனால் பாஸ்போர்ட் ஏஜெண்ட் கையில். அவசரத்திற்கு எமர்ஜென்ஸி பாஸ்போர்ட் ஒன்றை எடுத்துக் கொண்டு பதினைந்தாயிரத்தோடு மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு விமானம் ஏறினான்..

சென்னை - இவன் பார்க்க ஆசைப்பட்ட நகரம். பெரிய சாலைகள், கட்டிடங்கள் என அவனுக்கு சென்னை பற்றி ஒரு பிரமிப்பு இருந்தது. ஒரு லாட்ஜில் தங்கினான். அந்தோணி ஒரு சினிமா ரசிகன். பத்மம் திரையரங்கிற்குச் சென்று செந்தூரப்பூவே’, பிரபுவிற்கு தொடர்ந்து வெற்றிகரமான 13ஆவது படம் என்ற விளம்பரத்தோடு ஓடிக்கொண்டிருந்த ரத்ததானம்போன்ற படங்களை கண்டுகளித்து சுற்றித் திரிந்தான்.

அப்போது இலங்கையிலிருந்து லக்ஸ் சோப், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை இந்தியாவிற்குக் கொண்டுவந்து விற்பது, இந்தியாவிலிருந்து கைலி, பட்டுச்சேலைகள் போன்றவற்றை இலங்கைக்கு எடுத்துச் சென்று விற்பது சர்வசாதாரணம். இந்த சாக்கில் ஹெராயின் கடத்துவதும் நடந்தது. அப்படி ஒருவன்தான் அந்தோணியோடு கூட வந்தவன். தனது வியாபார விஷயமாக பம்பாய்க்கு சென்றுவிட்டான். அவன் போனகையோடு அந்தோணிக்கு அம்மை வார்த்தது.. 20 நாட்கள் அவஸ்தைப்பட்டு லாட்ஜ் அறையை விட்டு வெளியே வரவேயில்லை அந்தோணி. அதற்குள் கொழும்பில் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. இவனுக்கு விசா எப்போதோ வந்துவிட்டிருந்தது. இவன் போக வேண்டிய கப்பல் புறப்பட்டுச் சென்றிருந்தது.

இவன் கொழும்புக்கு திரும்பியபோது இவன் கையில் ஒற்றை பைசா கிடையாது. அதற்குள் ஏஜெண்ட் அந்தோணியில் அப்பாவுக்கு கடித்ம் எழுதிவிட்டார் இவன் ஊருக்குத் திரும்ப மறுத்தான்.

எப்படியாவது என்னை ஜெர்மனிக்கு அனுப்பிவிடுங்கள்

ஏஜெண்ட்டிடம் மன்றாடினான். அவர் தினமும் 100 ரூபாய் செலவுக்குக் கொடுப்பார். அதை வைத்துதான் நாட்களை ஓட்டிவந்தான்.

சாய்பான் நாட்டிற்குப் போனால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று அந்தோணிக்கு ஏஜெண்ட் ஆசை காட்ட, அவனுக்கோ குழப்பம். உலக வரைபடத்தில் இதுவரை இந்த பேரில் ஒரு நாட்டை பார்த்ததில்லையே என்று தயங்கினான். விசாரித்த பின் ஒத்துக்கொண்டு கிளம்பினான். ஹாங்காங் சென்று அதன்பின் சாய்பான் நாட்டிற்கு அழைத்துப் போவதாக ஏஜெண்ட் சொன்னதை நம்பி அந்தோணியும் டெலோ கணேஷும் வேறு சிலரும் ஹாங்காங் புறப்பட்டனர். அங்கே சென்றவுடன் ஏஜெண்ட் அத்தனை பேரின் பணத்தோடும் மாயமாகி விட்டார். விசா இன்றி பத்து பேரும் மொத்தமாய் ஹாங்காங் பொலீஸிடம் சரணடைந்தனர். கிட்டத்தட்ட ஆறு மாதம் விசாரணை நடந்தது. அந்த ஆறுமாதமும் ரெஸ்டாரண்ட் போன்ற இடங்களில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தான். விசாரணை முடிந்து ஒருவழியாய் கொழும்பு திரும்பினான்.

கொழும்பு திரும்பியவுடன் அந்த ஏஜெண்ட்டின் அலுவலகத்திற்குச் சென்று கண்ணாடியை எல்லாம் அடித்து நொறுக்கி ரகளை செய்தான் அந்தோணி. அதன் விளைவாக பணத்தை திருப்பிக் கொடுத்தார் ஏஜெண்ட்.

1990 ஜுன் மாதம் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான தேன்நிலவு முடிவுக்கு வந்தது. அரசின் தேடுதல் வேட்டையில் பிடிபட்டு அந்தோணி சிறை சென்றான். அவனுடைய சிங்களத்தோழி ஒருத்தியின் முயற்சியினால் பிணையில் வெளிவந்தான்.

தாய்லாந்தில் அகதிகளுக்கு மாதாமாதம் 3000 பாத்கள் தொகை கொடுத்து பராமரிப்பதாகக் கேள்விப்பட்டபோது அங்கு போய்விடலாம் என்று தோன்றியது அந்தோணிக்கு. பாங்காங் நகருக்கு டிக்கெட் எடுக்க காசுக்கு என்ன செய்ய? மீண்டும் அண்ணா! நான் மறுபடி திருந்திவிட்டேன். எனக்கு பணம் அனுப்புங்கஎன்று கடிதம் போனது அண்ணனுக்கு. இந்த முறையும் அண்ணன் போனமுறை செய்த அதே தவறை செய்திருந்தார். டிக்கெட்டுக்குப் போக அதிக பணம் அனுப்பியிருந்தார்.

பாங்காக் நகரில் இறங்கியவுடன், ஒரு விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கினான். கையிலிருந்த பணமும் வயதும் சேர்ந்து மது, சிகெரெட் என எல்லா பழக்கமும் வந்தது. இப்படி ஒரு ஏழெட்டு நாட்கள் கழிந்தவுடன் கையிருப்பு தீர்ந்தது. இனி என்ன? இருக்கவே இருக்கிறது அகதிகள் தங்குமிடம். அந்தோணி அங்கே கிளம்பினான். கிளம்புவதற்குமுன் அவன் நிலையை எழுதி, தன்னை அகதியாகக் கருதும்படி ஒரு மனு தயார் செய்து கொண்டான். அதனடியில் ரத்தத்தால் கையெழுத்திட்டான்.

யுஎன்எச்சிஆர் (United Nations High Commission for Refugees) கட்டிடத்தின் முன்னால் வந்து அவன் நின்றபோது அவனை உள்ளே விடக்கூட இல்லை. அப்போதுதான் சமீபமாக இரான் அகதி ஒருவர் அங்கே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாராம். எனவே பாதுகாப்பு மிகக் கடுமையாக இருந்தது. ஆகவே கட்டிடத்துக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தார்கள். இந்த செய்தி அந்தோணிக்கு பேரிடியாய் இருந்தது. கையில் ஒரு பைசா இல்லை. மொழி தெரியாத ஊரில், யாருமில்லாமல் என்ன செய்வது? கையில் பெட்டியோடு நிராதரவாக நின்றான்.

சீலோம் வீதியில் ஒரு மாரியம்மன் கோவில் இருந்தது. அங்கே மதியச் சாப்பாடு கிடைக்கும் என்று யாரோ சொல்ல அங்கே சென்று உண்டான். அதன்பின் எதிரில் இருந்த ஒரு பூங்காவில் குழம்பிய மனநிலையிலேயெ மதியம் உறங்கிப்போனான். அந்த பூங்காவும் மாரியம்மன் கோவிலும் அவனுக்கு தினமும் கைகொடுத்தன. பல வேளைகள் பட்டினிதான். வறிய சூழலில் வளர்ந்தவனுக்கு தனது வறுமையை பிறர் அறியக்கூடாதென்ற எச்சரிக்கை உணர்வு அதிகமாக இருந்தது. சாப்பிடாதது போல் காண்பித்துக் கொள்ளவில்லை அவன். எங்கேயாவது ஒரு துண்டு சிகரெட் கிடைத்தால் அதை ஒரு இழுப்பு இழுத்துக் கொள்வான். இவன் பூங்காவில் தங்கியதை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த காவலாளி அவனை அழைத்து ஒரு நாள் சாப்பாட்டுக்காக இருபது ரூபாய் கொடுத்தார். அவன் அதை சாப்பிட வைத்துக் கொள்ளாமல் நேரே கடைக்குச் சென்று சவரம் செய்யவேண்டுமென்று கூறி இரண்டு சின்ன கத்திகளை வாங்கினான். ஒன்றை சட்டைப் பையிலும் ஒன்றை ஷூவிலும் வைத்துக் கொண்டான்.

இப்போது அந்தோணி யுஎன்எச்சிஆர் கட்டிடத்தின் காவலாளிமுன் நின்றான்.

நான் கமிஷனரைப் பார்க்க வேணும்

முடியாது

சட்டைப்பையிலிருந்து கத்தி வெளியே வந்தது. அடுத்த நொடி அந்தோணியின் இடது கையின் கீறல்களிலிருந்து ரத்தம் கொட்டியது. அந்த இடமே கலவரமானது. அவன் உள்ளே அனுமதிக்கப்பட்டான். கமிஷனர் வந்தார்.

என்ன வேண்டும்? ஏன் இப்படி செய்தாய்?”

அகதியாய் என்னை ஒத்துக்கொள்ள வேணும்

முடியாது!!!

ஷூவிலிருந்து அடுத்த கத்தி வெளியே வந்த்து.

அக்செப்டட்

அலறினார் கமிஷனர். அன்றிலிருந்து அகதி அந்தஸ்தோடு தாய்லாந்தில் தங்கத் தொடங்கினான்.

இங்கு பிரச்சனை வேறு வடிவில் வந்த்து. அகதிகளை பராமரிப்பது யுஎன்எச்சிஆர் அமைப்பு. இதற்கும் தாய்லாந்து அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் விசா வழங்கவேண்டியது அரசாங்கம்தான். விசா காலாவதியாகிவிட்டால் அருகிலுள்ள லாவோஸ் நாட்டிற்குச் சென்று தங்கிவிட்டு மீண்டும் விசா வாங்கி தாய்லாந்து வந்தான். அங்கே அகதிகளுக்கு வழங்கப்படும் 3000 பாத்களில் 1000 பாத்களே ஒரு மாதத்தை ஓட்ட போதுமானதாக இருந்த்து. தாய்லாந்தில் இருந்தவரை தெருச்சண்டைகள், அடிதடி என எல்லாவற்றிலும் அந்தோணியின் பெயர் இருந்தது. சண்டையில் ஒரு சிறுநீரகத்தை இழந்தான். சிறைவாசம் பழகிப்போனது. இப்படியே நான்கு ஆண்டுகள் போயின.

93இல் பிரான்ஸிலிருந்து அல்லைப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் வந்தார். அவர் மூலமாக பிரான்ஸ் செல்ல தீர்மானித்தான். அண்ணா! நான் மறுபடி திருந்தி விட்டேன். பிரான்ஸ் போக பணம் அனுப்புங்க!என்று கடிதம் மறுபடி அண்ணனுக்கு போனது. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத அவரும் சளைக்காமல் பணம் அனுப்பினார்.

பிரான்ஸ் வந்து சேர்ந்தான் அந்தோணி. இத்தனை ஆண்டுகால இடைவெளியில் அந்தோணியின் குடும்பம் 1990இல் அகதியாய் ஊரைவிட்டு இடம்பெயர்ந்திருந்தது. 1993 மேதினம் - பிரேமதாசா கொல்லப்பட்ட சமயம் அந்தோணி பிரான்ஸில் இருந்தான். பாரிஸில் புலிகள் இயக்கத்தின் அலுவலகம் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தன் தலைவர் பிரபாகரன், தன் தாகம் தமிழீழம் என்பதில் அந்தோணி உறுதியாய் இருந்தான். மீண்டும் இயக்கத் தோழர்களின் நட்பு. அவர்கள் இவனை இயக்கத்திறகாகப் பணியாற்ற அழைத்தார்கள். அந்தோணியும் மீண்டும் இயக்கத்திற்காக வேலை செய்ய மனதை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.

ஒரு நாள்.. மது போதையில் சாலையில் அலம்பல் பண்ணிக்கொண்டே அந்தோணி வந்து கொண்டிருந்த்போது, நான்கைந்து பேர் சாலையோரத்தில் தொழிலாளர் பாதைஎன்ற பத்திரிகையை கையில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.

நம்ம ஊர் பசங்க மாதிரி தெரியுதே..

அருகில் சென்று விசாரித்தான். புரட்சி கம்யூனிஸ கழகத்தின் பிரெஞ்சுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றார்கள். இவனும் ஒரு பத்திரிகை வாங்கினான். அவர்கள் இவனிடம் முகவரியும் தொலைபேசி எண்ணும் கேட்க போதையில் கொடுத்து வைத்தான்.

அடுத்த நாள், தொலைபேசி மணி ஒலிக்க ஆரம்பித்தது. அவன் அவர்களை மீண்டும் சந்திக்கும் வரை தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. தொல்லை தாங்காமல்தான் அவர்களை சந்த்திக்க ஒத்துக்கொண்டான். ஒரு சிறிய மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள்.

நீங்கள் எந்த இயக்கம்?”

எல்டிடிஈ

நீஙகள் எல்லோரும் ரொம்ப பாவம்!!!!!!

அந்தோணிக்கு அந்த வார்த்தைகள் அலை அலையாய் அதிர்வலைகளை உண்டாக்கின. வாழ்நாளில் முதன்முறையாக இந்த வார்த்தைகளைக் கேட்கிறான். பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை பாவம் என்று முதன்முதலாக பிறர் கூறக் கேட்கிறான்.

ஏன் பாவம்?” - அந்தோணி கேட்டான்.

இந்த கேள்விக்கு விடையாக ஏசுவின் மலைப்பிரசங்கத்தைப் போல மூன்று மணி நேர பிரசங்கம் கிடைத்தது. பிரசங்கத்தின் முடிவில் அந்தோணி ஷோபாசக்தியாக உருமாறத் தொடங்கினான்..

- எழுத்தாளர் ஷோபாசக்தியுடனான நீண்ட உரையாடலின்வழி பின்னப்பட்ட அந்தோணியின் கதை



ஷோபாசக்தியின் குரல் இதோ...

93இல் இருந்து 97 வரை மிகத் தீவிரமாக கட்சிப்பணி செய்தேன். நிறைய புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கினேன். கட்சிக்கவிதைகள் எழுதினேன். எனது முதல் சிறுகதை அம்மாஎன்ற சிறுபத்திரிகையில் வெளிவந்தது. ஆனால் கட்சியில் என்னை எழுத விடமாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கட்சிக்காரர்களிடமிருந்து விலகத் தொடங்கினேன். எனது அறையில்தான் பெரும்பாலும் கட்சிக்கூட்டங்கள் நடக்கும். பின் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்திற்கு தோழர்கள் வந்தபின் அவர்களை அறையில் விட்டுவிட்டு நான் தப்பித்து வெளியேறத் தொடங்கினேன். நான் இப்போது லூத் ஊவிரிர் என்ற ட்ராட்ஸ்கியக் கட்சியின் ஆதரவாளர்.

95இல் என் பெற்றோர் சென்னையில் அகதிகளாகக் குடியேறினர். எனக்கு 98இல் இந்தியா வர விசா கிடைத்தது. அப்போது எனக்கு தமிழக இலக்கியவாதிகள் யாரிடமும் அறிமுகம் இல்லை. பிரான்ஸிலிருந்து கிளம்புகையில் தஞ்சாவூரில் இரண்டு முகவரிகளை நண்பர்கள் கொடுத்தார்கள். ஒருவர் கே.ஏ.குணசேகரனின் சகோதரி ஜோதிராணி. மற்றொருவர் அ.மார்க்ஸ். இந்த முகவரிகளுடன் தஞ்சாவூர் போனேன். ஜோதிராணியை சந்திக்க இயலவில்லை. அ. மார்க்ஸை சந்தித்தேன். சென்னையில் வளர்மதி, ராஜன்குறை போன்ற நண்பர்களை அறிமுகப்படுத்தினார். 2004இல் என் தங்கை பிரான்ஸ் வந்ததிலிருந்து தங்கையின் வீட்டிலே தங்கியிருக்கிறேன். அவ்வபோது பிரான்ஸிலிருந்து வந்து நண்பர்களை சந்திக்கிறேன்.

ஒரு பேட்டியில் நீங்கள் பயனற்ற வாழ்வு வாழ்வதாகச் சொல்லியிருக்கீங்களே! ஏன் அப்படி?

என்னால் இயங்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு இயங்குவதற்கு அமைப்பு வேணும். அமைப்பில்லாமல் இயங்க முடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஈழத்திலும் சரி அதற்கு வெளியேயும் சரி நான் தேடும் அமைப்பு இல்லை. நானே உருவாக்கலாமென்றால் எனக்கு அதற்கு சக்தி இல்லை. எனக்கு தலைமைப்பண்பு கிடையாது. யாராவது அமைப்பு தொடங்கினால் நான் அதற்கு விசுவாசமான தொண்டனாக இருப்பேன். வேலை பார்ப்பேன். அது முடியாததால் என் ஆற்றாமையை போக்கிக்கொள்ள எழுதுகிறேன். என்னுடைய கதைகள் ஒவ்வொன்றும் ஒரு அரசியல் துண்டு பிரசுரம்.

எனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாததை ஒரு இழப்பாகத்தான் நான் பார்க்கிறேன். எத்தனையோ பிற மொழி இலக்கியங்களை வாசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. குற்றமும் தண்டனையும்தமிழில் வந்தபின்தானே என்னால் வாசிக்க முடிந்தது?


மரபுரீதியான ராணுவமாக புலிகள் இயக்கம் மாறியதால்தான் ராணுவப்பின்னடைவு ஏற்பட்டதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் சேகுவேரா ஒரு கொரில்லா ராணுவம் கட்டாயம் மரபான ராணுவமாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?

சே காலத்தில் இன்றிருப்பது போல் நவீன ஆயுதங்கள் இல்லை. ஷெல்லிங் இல்லை. கொத்துகுண்டுகள் இல்லை. அதனால் அவருடைய காலத்துக்கு அது பொருந்தும். இப்போது நிலைமை வேறு மாதிரி இருக்கிறது.

இலங்கை இந்தியாவின் ஒரு மாகாணமாக ஆகிவிட்டது. அதிலும் சிறைபிடிக்கப்பட்ட மாகாணமாக ஆகிவிட்டது. இன்று எம் மக்களுக்கு வேண்டியது நிம்மதியான ஒரு வாழ்க்கை, அவர்களுக்கு அன்றாடம் சாப்பாடும், மருந்தும் வேணும். முகாம்களில் இருந்து அவர்கள் வெளியேறணும். ஆனால் ராஜபக்சே அரசாங்கம் இதைச் செய்யாது. உலகமே சேர்ந்து அழுத்தம் கொடுத்தாலும் முகாம்களை அவவளவு சீக்கிரம் கலைக்க மாட்டார் ராஜபக்சே. ஏனென்றால் வழக்கறிஞரான அவருக்கு மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய அனைத்து சட்டங்களும், சட்டங்களை ஏமாற்றுவதும் அத்துப்படி.

புலிகள் அவர்களுக்கு மாற்று கருத்துடையவர்களை விட்டுவைக்க மாட்டார்கள் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். உஙகளை எப்படி விட்டு வைத்தார்கள்?

ஒருமுறை குமுதத்தில் பேட்டி வந்தபிறகு பிரான்ஸில் உள்ள இயக்க ஆதரவாளர்களால் பாரிஸில் வைத்து ஒரே மாதத்தில் மூன்று முறை நான் தாக்கப்பட்டேன். என்னை இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளன் என்று சிலர் பொறுப்பில்லாமல்  எழுதி வெறுப்பேற்றுகிறார்கள். புலிகள் இயக்கத்தில் இருந்தபோதும் சரி, வெளியே வந்தபோதும் சரி, நான் அரசாங்கத்தை எதிர்த்தே வந்திருக்கிறேன். புலிகளை நூறு சதவிகிதம் எதிர்க்கிறேன் என்றால் அரசை இருநூறு சதவிகிதம் எதிர்க்கிறேன் என்றெல்லாம் பிரகடனப்படுத்தி இருக்கிறேன். 160 பக்கங்களைக் கொண்ட என்னுடைய ம்நாவலில்  155 பக்கங்கள் அரசாங்க எதிர்ப்புதான். கடைசி 5 பக்கம்தான் புலிகள் குறித்த விமர்சனம் வரும். வெறும் ஐந்து பக்கம் எழுதியதற்காக என்னை புலி எதிர்ப்பாளன் என்று சொல்பவர்கள் 155 பக்கங்களூக்காக என்னை அரசு எதிர்ப்பாளன் என்று சொல்வதில்லை. என் அரச எதிர்ப்பு என்பது சரியான ஒரு இடதுசாரி பார்வையுடனான் நிலைப்பாடு.

ஈழத்திற்கு செல்ல ஆசைப்படுகிறீர்களா?

டால்ஸ்டாய் கதைகளில் வரும் கதாநாயகனுக்கு உள்ள குற்றவுணர்ச்சியின் அளவு இல்லாவிட்டாலும்கூட, எனக்கு சிறிதளவாவது குற்றவுணர்வு இருக்கிறது. அங்கையற்கண்ணியின் அப்பாவும் அம்மாவும் நிலக்கடலை விற்பவர்கள். குழந்தையாய் இருந்தபோது நான் என் கையால் தூக்கி விளையாடிய அங்கையற்கண்ணி இயக்கத்தின்  தற்கொலைப்படையில் பலியான முதல் பெண். அவள் இயக்கத்தில் சேரும் சூழல் என்னால்தான் எங்கள் ஊரில் உண்டானது. எம் மக்களில் சிலரை நானே இயக்கத்தில் சேர்த்துவிட்டேன். இப்படி நான் சேர்த்த என் மக்கள், எம் இளைஞ்ர்கள் எத்தனையோ பேர் இன்று பலியாகிவிட்டார்கள். அவர்களது அம்மா அப்பா, சொந்தபந்தங்கள் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்? ஈழத்திற்குப் போக ஆசைதான். எப்படி ஆசை இல்லாமலிருக்கும்? ஆனால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் அங்கே இனி போவேன்?