Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

Saturday, December 18, 2010

வாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கோயில்களை தரைமட்டமாக்க வேண்டும்


தலித் முரசு - காஞ்சா அய்லய்யா நேர்காணல் - பகுதி IV



நீங்கள் பல தடைகளைக் கடந்து, உலக அளவில் உங்களை நிரூபித்திருக்கிறீர்கள். இளம் ஆய்வாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் முன்மாதிரியாகவும் திகழ்கிறீர்கள். அவர்கள் அறிவுத்தளத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை என்பது, இன்னமும் உலகத்தால் விளங்கிக் கொள்ளப்படாத, அறியப்படாத ஓர் அறிவுக் களஞ்சியமாகவே இருக்கிறது. இந்திய மக்களின் மனங்களில் உலகத்திற்கான அறிவு கொட்டிக் கிடக்கிறது. நான் கிராமங்களை கூறுகிறேன். அறிவியல், தொழில்நுட்பம், உற்பத்தி, இந்து மத எதிர்ப்பு ஆகியவை நூல்களில் கொண்டுவரப் படுவதில்லை; பதிவு செய்யப்படுவதில்லை. என்னைப் பொருத்தவரை, அய்ரோப்பா, சீனா போன்றவை சோர்ந்து விட்டன. நல்லவேளையாக சுயநலமிக்க பார்ப்பனியத்தால் – படைப்பாற்றலையும், அறிவாற்றலையும் தரமுடியாமல் போனதால், இன்னும் இந்தியாவின் கிராமங்களிலுள்ள தலித் – பெரும்பான்மை சமூகங்களில் அறிவுச் சுரங்கங்கள் இருக்கின்றன. பார்ப்பனியத்தையும், இந்து மதத்தையும் வென்று விட்டால் மிஞ்சுவது எதிர்காலத்தில் அறிவியலே. உங்கள் கிராமத்தில் அமர்ந்தோ, அறிவியல் சோதனைக்கூடத்தில் அமர்ந்தோ இவ்வுலகை மாற்ற முடியும். இதைத்தான் இணையம் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும், உலக அறிவியலின் பார்வையில் படாமல் இன்னமும் மறைவாக இருக்கும் ஒரு பகுதி இருக்கிறது. அதுதான் இந்தியா. தலித் – பெரும்பான்மை இந்தியா! இதைத்தான் நான் இந்நூலில் சொல்லியிருக்கிறேன்.

நாம் நம் மக்களின் மனங்களிலிருந்து பார்ப்பனியத்தை களைந்தெறிய வேண்டி இருக்கிறது. பார்ப்பனியத்தைவிட, இந்து மதத்தையே தூக்கியெறிய வேண்டியிருக்கிறது. நம் நாட்டை இந்து மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இந்தியா ஒரு கிறித்துவ நாடாகவோ, பவுத்த நாடாகவோ, இஸ்லாமிய நாடாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குக் கவலையில்லை. ஆனால், அது ஓர் இந்து நாடாக மட்டும் இருக்கக் கூடாது என்பதே முக்கியமானது. ஏனெனில், இந்து மதம் அறிவியலுக்கெதிரானது. மனித இனத்திற்கெதிரானது. உற்பத்திக்கெதிரானது.

மதச்சார்பற்ற இந்துக்களையும் நாம் கையாள வேண்டியிருக்கிறது. வகுப்புவாத இந்துக்களிடம்கூட அத்தனை பிரச்சனையில்லை. ஆனால், மதச்சார்பற்ற இந்துக்கள்தான் இந்து மதத்தை காப்பாற்றுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத்காரர்கள் கூட இந்து மதத்தைக் காப்பாற்ற முடியாது. எடுத்துக்காட்டாக, "தேசிய இந்து மதசார்பற்ற உதவித் தொகை'யை எடுத்துக் கொள்ளுங்கள். அவை மேற்கு வங்கத்திலிருந்து, மகாராட்டிராவிலிருந்து, தமிழ் நாட்டிலிருந்து வருகின்றன. மகாராட்டிரா பவுத்தத்தோடு தொடர்புடையது. தமிழ் நாடு பெரியாரோடு தொடர்புடையது. மேற்கு வங்கம் கம்யூனிஸ்டுகளோடு தொடர்புடையது. ஆனால், வங்கம் இன்று உலகின் மிக ஏழ்மையான பகுதியாகிவிட்டது. ஆப்பிரிக்காவிலுள்ள நாடுகளை விட வங்கம் இன்று ஏழ்மையான இடமாகிவிட்டது. வங்கத்தில் தலித் அறிவுஜீவி என்று எவரும் கிடையாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்துகூட ஓர் அறிவுஜீவிகூட இல்லை. இந்த மதச்சார்பற்ற இந்துக்களை, மிதவாத இந்துக்களை கையாளாமல் விட்டால், இந்து மதத்தை ஒழிக்க முடியாது. அவர்கள் இந்து மதத்தை காப்பவர்களாக மாறிவிட்டனர். ""வகுப்புவாத இந்து மதம் நல்லதல்ல. ஆனால், இதற்கு இந்து மதத்தை குற்றம் சொல்ல முடியாது'' என்கின்றனர்.

இந்து மதத்தில் உள்ளவற்றைப் பாருங்கள். கொலை செய்யும் தெய்வங்களெல்லாம்கூட இருக்கின்றன. தெய்வீகம் என்று சொல்லப்படக்கூடிய இடத்திலிருந்து வரும் நேர்மறையான அன்பைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒழுக்கத்தை அறிவுறுத்துபவையாக அவை மாறும்போது – நான் இந்த இந்து தெய்வங்களைவிட புத்தர், ஏசு, நபிகள் ஆகியோர் அறிவுறுத்திய ஒழுக்கங்களையே பரிந்துரைப்பேன். நிச்சயமாக பிரம்மன், இந்திரன், ராமன், கிருஷ்ணன் ஆகியோர் செய்த கொலைகள், பாலியல் வன்முறைகள், திருட்டுத்தனங்கள் ஆகியவற்றை அல்ல. நான் வாத்சாயனாரின் காமசூத்திரத்தை பரிந்துரைக்க மாட்டேன். 64 வகைகளில் பாலியல் தொழிலாளியுடன் பாலுறவு கொள்வது எப்படி என்பதை விளக்கும் இவைகளை கற்றுக் கொடுத்தால், எய்ட்ஸ்தான் பரவும். ஆண் – பெண் உறவு நிலைமைகள் ஏசு கூறியதைப் போல இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். புத்தரைப் பொருத்தவரை, இந்த விஷயத்தில் அவருடைய கருத்து என்னவாக இருந்தது என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை. ஆனால், ஏசு என்ன சொல்கிறார் என்றால், ""கடவுள் கணவனையும் மனைவியையும் சரிபாதியாக ஓருடலில் படைத்தார்'' என்கிறார். இதில் ஒரு நீதி இருக்கிறது. அதனால்தான் அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையுள்ளது.
ஆனால், இந்தியாவில் உள்ள இந்து மதத்தில், சாதியை அடிப்படையாகக் கொண்டு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்தான் நடக்கின்றன. காதல் திருமணங்களும், இந்து மதமும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடியாது. என்னுடைய போர், இனி மதச்சார்பற்ற இந்துக்களிடம்தான். இந்து மதத்தை தோற்கடிக்கவில்லையெனில், அதை அழிக்க முடியாது. கிறித்துவத்தைப் பரப்புவதை சுதந்திரமான மனித உரிமையாக விரிவுபடுத்த வேண்டும். நல்ல மதங்கள் மக்களிடையே போட்டி போட வேண்டும். போட்டி என்பது அடிப்படை உரிமை. இந்த இடத்தில் மார்க்சிஸ்டுகளோடு  நான் ஒத்துப்போகவில்லை. நமக்கு இந்தியாவில் உலகளாவிய ஆன்மிகப் போட்டி ஒன்று தேவை.

உங்களுடைய இந்தக் கூற்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கொஞ்சம் விளக்குவீர்களா?

நான் ஓர் எடுத்துக்காட்டு தருகிறேன். இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியிலும் மக்களை பணம் கொடுத்து கிறித்துவத்திற்கு மதமாற்றம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. மதம் பரப்புதல் என்றாலே கிறித்துவம் மட்டும்தான் செய்கிறது என்று நினைக்கிறார்கள். முஸ்லிம்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதில்லை. சூபி இனத்தவரே தங்கள் மதத்தைப் பரப்புகிறார்கள். பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் மதத்தைப் பரப்புவதில் ஈடுபட்ட சூபியிஸத்தினால் இஸ்லாமுக்கு மாறினார்கள். அவர்கள் குரானோடு மக்களிடம் போனார்கள். அதனால்தான் மக்கள் மதம் மாறினார்கள். ஆனால் எங்கே முதலில் மதப் பரப்புரை நடந்திருக்கும்? உலகின் முதல் மதப்பரப்புரையாளர் அசோகர்தான். தன் மகனை, மகளை, தன் படைகளை புத்த மதத்திற்கு மாற்ற – அவர்களை சீனாவுக்கும், இலங்கைக்கும் அனுப்பவில்லையா? ஆகவே, கிறித்துவம் தான் முதலில் மதப் பரப்புரை செய்யப்பட்ட மதம் என்று ஏன் நினைக்க வேண்டும்? இந்தியாவில் வாழும் மதச்சார்பற்ற இந்துக்கள், இந்திய வரலாற்றை சரியாகத் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

அசோகரின் மதம் பரப்பும் நடவடிக்கைகள் குறித்து ஒரு முழுநீளப் படம் எடுக்க வேண்டும். வெகுமக்கள் ரசனைக்கேற்ற வகையில் ஒரு நல்ல படம் அசோகரைப் பற்றி எடுக்க வேண்டும். ஹாலிவுட் ஆட்களிடம் இந்த கோரிக்கையை வைக்கப் போகிறேன். ஹாலிவுட் ஆட்கள் எடுத்தால் அது ஹிட் தான். சீனா, இலங்கை, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் உள்ள மக்களை யார் புத்த மதத்திற்கு மாற்றியது? அசோகர்தான். பார்ப்பனியத்திற்கு படைப்பாற்றால் கொண்ட மூளை கிடையாது. பார்ப்பானின் மூளை பாறை போன்றது. அதிலிருந்து படைப்பாற்றல் வராது. தலித் – பெரும்பான்மை மக்களின் மூளை பச்சை மண் போன்றது. அதிலிருந்து என்ன வேண்டுமானாலும் விளையும்.

புத்த மதம், கிறித்துவ மதம், சூபியிசம் ஆகியவை போட்டியில் இருக்கட்டும். மக்கள் தேர்ந்தெடுக்கட்டும் தங்கள் மதத்தை. சந்தையில் நல்ல பொருளை வாங்குவதை மார்க்சியம் ஆதரிக்கிறது. பின் ஏன் அது மத விஷயத்திலும் நடக்கக் கூடாது? இந்து மதம் தோற்றுப் போய் நிற்கிறது. அது தலித்துகளையோ, பிற்படுத்தப்பட்டவர்களையோ கவரவில்லை. நேர்மறையான பிரதிகளே அதில் இல்லை. மனிதத் தன்மையுடைய கடவுள்களே இந்து மதத்தில் இல்லை. இருக்கும் எல்லா கடவுளர்களும் – பெண்ணை பாலியல் வன்முறை செய்பவர்களாகவும், கொலை செய்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.

ஆகவே என் மக்கள் ஏசு, புத்தர், நபிகள், மார்க்ஸ், அம்பேத்கர் ஆகியோரில் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்தத் தேர்வின் மூலம் மார்க்சிஸ்டுகளாக சிலர் மாறலாம். அவர்களுக்கு மதமில்லை. பெரியார் இருந்தார். நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பெரும்பான்மையான மக்கள் மதத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது, மதங்களின் காலம். முதலாளித்துவமும், முதலாளித்துவத்திற்குப் பிந்தைய காலகட்டமும் மதங்களை அழிக்கவில்லை. இன்னமும் இஸ்லாமும் கிறித்துவமும் தங்கள் மதத்தை விரிவாக்கம் செய்ய வும், ஜனநாயகப்படுத்தவும் போட்டியிடுகின்றன. புத்த மதமும் போட்டியில் இருக்கிறது. ஆகவே, இளம் ஆய்வாளர்களுக்கு நான் கூற விரும்புவதெல்லாம் இந்தியா மற்றும் இந்திய கிராமங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆன்மிகம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு கவனம் செலுத்துங்கள் என்பதே.

இந்திய மக்களிடையே போதுமான வாசிப்புத் திறன் இல்லை. பார்ப்பனியம் மக்களுக்கு வாசிப்பை மறைத்தும் மறுத்தும் வைத்திருந்தது. அதோடு பார்ப்பனியம் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும். ஒருபோதும் வாசிக்காது. திருமணமாக இருந்தாலும், ஏரோபிளேன் முதன்முதலில் விடும் பூஜையாக இருந்தாலும் சரி, அங்கே போய் மந்திரங்களை ஒப்பித்துவிட்டு வருவார்கள் புரோகிதர்கள். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இவர் என்ன சொல்கிறார் என்றே தெரியாது. "சமர்ப்பயாமே' என்றும் "ஸ்வாகா' என்றும் சொல்லி, அவர்களின் சொத்தை சுருட்டிக் கொள்வார்கள். அவர்களை ஒன்றாக வாழச் சொல்கிறாரா அல்லது நாளைக்கே விவாகரத்து பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளச் சொல்கிறாரா என்றுகூட நமக்குத் தெரியாது.
பவுத்தத்திலும்கூட பெரிதாக வாசிக்கும் பழக்கம் இருப்பதாக சொல்ல முடியாது. கிறித்துவமும், இஸ்லாமும் அப்படியல்ல. வாசிக்க வைப்பவை. அதனால்தான் கிறித்துவ உலகத்தில் கல்வி பரவுகிறது. அரசாங்கங்களால் அல்ல, தேவாலயங்களால் பரவுகிறது. சொல்லப் போனால், அரசைவிட தேவாலயங்கள்தான் அதிக மக்களுக்கு கல்வியறிவு அளித்திருக்கிறது. இஸ்லாமில் மதரசாக்கள் மசூதிகளால் கட்டப்பட்டன. ஆனால் நாம் இதில் கோட்டை விட்டோம். வாசிப்பதில் உள்ள முக்கியத்துவத்தை உணரத் தவறினோம். இன்றைக்கு இந்தியாவில் யாரும் வாசிப்பதேயில்லை. இது, மிகவும் வருத்தத்திற்குரியது. எனவே, வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே அதிகரிப்பதற்கான செயலில் ஈடுபட வேண்டும். பைபிள் அனுபவங்கள் வழி நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதல் அச்சு எந்திரம் உருவானதே பைபிளை அச்சிடுவதற்காகத்தான். அச்சுத் தொழில்நுட்பம் வளர்ந்ததே பைபிள்களை வெவ்வேறு முறைகளில் அச்சிடுவதற்காகத்தான். கத்தோலிக்க பெண் துறவிகளும், அருட்தந்தைகளும் மதவுணர்வினால் செய்த தியாகத்தில் விளைந்தவைதான் இவையெல்லாம். எழுதுபவர் ஒருவராக இருக்கலாம்; ஆனால் விநியோகித்தவர்கள் பலர்.

நான், "போஸ்ட் இந்து இந்தியா' (இந்து இந்தியாவுக்குப் பிறகு) அல்லது "நான் ஏன் இந்து அல்ல' போன்ற நூல்களை எழுதும்போது, அதை வாசிக்க ஆளில்லையென்றால் நான் எழுதி என்ன பயன்? மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த ஊழியர்களை நியமித்தால் மட்டும் போதாது. வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். அம்பேத்கரின் "சாதி ஒழிப்பு', புலேவின் "குலாம்கிரி', "நான் ஏன் இந்து அல்ல', "போஸ்ட் இந்து இந்தியா' போன்ற சில குறிப்பிட்ட நூல்களை எடுத்து, ஒரு பத்து லட்சம் மக்களையாவது வாசிக்க வைக்க வேண்டும். இதோடு சேர்த்து தலித் – பெரும்பான்மை மக்களில் ஒரு பகுதியினரை ஆங்கிலம் வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொடுக்க வேண்டும். பிராந்திய மொழிகளில் உள்ள அறிவு என்பது ஒரு பகுதி அறிவுதான். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள மக்களுக்கு இது பயனளிக்காது. இந்தியாவை ஆங்கிலமயப்படுத்த வேண்டும்.

பிராந்திய மொழிகளின் ஆதிக்கத்தைப் பார்த்தோ, பார்ப்பனியத்தைப் பார்த்தோ நாம் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில், அவை ஏற்கனவே சமஸ்கிருதமயமாகி இருக்கின்றன. நாம் நம்முடைய இந்திய ஆங்கிலத்தை வளர்ப்போம். அமெரிக்க ஆங்கிலமும் அய்ரோப்பிய ஆங்கிலமும் வெவ்வேறானவை. ஆங்கிலம் ஏற்கனவே நம்முடைய தேசிய மொழி. ஆகவே, ஆங்கிலத்தை நமது தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள நாம் அச்சப்படக் கூடாது. நம் பழங்குடியின மக்களின் மொழிக்கு மீண்டும் நாம் போவது என்பது சாத்தியப்படாது. நாம் முற்போக்காகவும், உலக நடப்புகளை, அறிவியல் வளர்ச்சிகளை அறிந்து கொள்ளவும் ஆங்கிலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சொற்களைக் கொண்டுள்ளது. வருங்காலத்தில் குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் ஏன் ஆங்கில வழிக் கல்வி கற்றுக் கொடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்கத் தொடங்குவார்கள்.

ஆகவே "பாம்செப்' போன்ற அமைப்புகள் பிரச்சாரம் செய்தால், 25 ஆண்டுகளில் இந்தியாவை தலித் மயமாக்கலாம். ஆங்கிலமயமாக்கலாம். எந்த மாதிரியான அறிவாளிகள் உலகில் உருவாவார்கள் என்று யாரும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஒரு குக்கிராமத்திலிருந்து ஒரு காஞ்சா அய்லைய்யா இதுபோன்றதொரு ஆங்கிலப் புலமையையும், எழுத்துத் திறனும் கொண்டு உருவாவாரென்று அம்பேத்கர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். மார்டின் லூதர் கிங், ஒபாமாவைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், அவர்கள் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். கல்வித் துறையில் பாடத் திட்டத்தில் நம்முடையவை வரவேண்டும். அதனால்தான் கல்வியில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறேன். என்னுடைய “Turning the pot Tilling the Land” என்ற நூல்தான் இலக்கியப் பின்னணியில் வந்த கல்வி தொடர்பான நூல். நம்மிடம் நிறைய நூல்கள் வேண்டும். கதை நூல்கள் வேண்டும். அதன்பிறகுதான் நாம் பாடத்திட்டத்தில் நம்மைப் பற்றிய பாடங்களை சேர்க்க முடியும். எல்.கே.ஜி. முதல் சொல்லித்தரப்படும் A for Apple கதை, A for Ant என்றாக வேண்டும். B for Buffalo, C for Cattle என்றாக வேண்டும். C for Cow நீக்கப்பட வேண்டும். நமக்கான சொற்களை அந்த கட்டத்திலிருந்தே உருவாக்க வேண்டும்.

பார்ப்பன இலக்கணங்களை ஒழிக்க வேண்டும். அவை subject, object, predication என்று தான் இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. அதை எப்படி சொல்லித் தருகிறார்கள் என்று பாருங்கள். Rama killed Raavana இதில் ராமன் Object, ராவணன் subject. செய்யும் செயல் கொல்வது இளம் வயதிலேயே கொலை செய்வதையா சொல்லித் தருவார்கள்? அதற்கு பதில், அவை இப்படி மாற்றப்பட வேண்டும். Farmer is Tilling the land அல்லது Mother is cooking the food, Father is looking after the Cattle என்பது இப்படி மாற வேண்டும் : Father should also cook the food and Mother should also look after the Cattle. நாம் இப்போது ஆண் இருக்கும் இடத்தில் பெண்ணையும், பெண் இருக்கும் இடத்தில் ஆணையும் மாற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது, மிகவும் முக்கியம். Rama killed Raavana என்று இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கும் இந்த தேசம் மாற வேண்டும். Krishna has stolen the butter. ஆக, கடவுளே திருடுகிறார் என்று தொடக்கத்திலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள். இதுவா தேவை? இல்லை. இந்தியாவிலிருந்து இந்த கடவுளர்களை முற்றாக நீக்க வேண்டும்.

வாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிலைகளைக் கொண்ட கோயில்களை தரைமட்டமாக்க வேண்டும். இது, நமது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பாடு அல்ல. பாலுறவு என்பது இயல்பானதாக இருக்க வேண்டும். இந்த பாழாய்ப்போன வாத்சாயனாருக்கு முன்பிருந்தே தலித் – பெரும்பான்மையினர் மத்தியில் மகிழ்ச்சியான பாலுறவு வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக நீடித்து இருந்து வந்தது தானே? நாம் பாலுறவை அறிவியலாகக் கற்றுக் கொள்ளலாம். அதை எதற்கு வாத்சாயனõரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்? பாலுறவு குறித்த நமது பிரதிநிதிகளை நாம் உருவாக்குவோம். அம்பேத்கரை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். காந்தி இளம் பெண்களுடன் ஆடையின்றி நிர்வாணமாக உறங்கினார். அம்பேத்கரோ இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதுதான் இயல்பான வாழ்க்கை. ஆக, ஒவ்வொரு விஷயத்திலும் நாம் சாத்தியமான மாற்று ஒன்றை உருவாக்க வேண்டி இருக்கிறது.

ஆன்மிகப் பாசிசத்தின் (இந்து மதம்) உருவாக்கம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நான் பின்னோக்கிப் பார்க்கிறேன். பாசிசம் என்றால் என்ன? ஒடுக்கும் தன்மையுடைய, அழிக்கக்கூடிய ஒன்று எனலாம், உலகளாவிய அளவில் எடுத்துக் கொண்டால், போருக்கு இட்டுச் செல்வது பாசிசம் என்று பிரதிகள் நமக்கு பாசிசம் பற்றிக் கூறுகின்றன. ஜெர்மனியிலிருந்தும், இத்தாலியிலிருந்தும் இது தோன்றியதாக நாம் அறிகிறோம். ஹிட்லரும், முசோலினியும் எடுத்துக்காட்டுகள். உற்று நோக்கினால், இந்து மதத்திற்கும் நாஜிக்களின் தத்துவத்திற்கும் "ஸ்வஸ்திக்' சின்னம் உட்பட நிறைய தொடர்பிருக்கிறது.

ஹிட்லரே நாஜிக்களை ஆரியர்கள் என்றுதான் குறிப்பிட்டார். நான் இந்திய ஆரியர்களை நாஜிக்களோடு பொருத்திப் பார்த்தேன். ஜெர்மனியில் ஆரியர்களுக்கு தொன்மையான வேர்கள் கிடையாது. ஆனால், இந்தியாவில் உள்ளது. பார்ப்பனர்கள் ஜெர்மனியிலிருந்து வந்தார்களா அல்லது ஈரானிலிருந்தா என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. பாசிசத்தின் தன்மைகளாக அடக்குவதையும் ஒடுக்குவதையும், போருக்கு இட்டுச் செல்வதையும், பாலியல் வல்லாங்கு செய்வதையும் வைத்துப் பார்க்கும்போது, இவையெல்லாம் ரிக்வேதத்திலும் இருக்கின்றன. "ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களைப் படைக்கிறார் கடவுள்' என்கிறது ரிக்வேதம். இது எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்றும் சொல்கிறது வேதம். அதுமட்டுமல்ல, சிலர் காலில் பிறந்தார்களாம். சிலர் தலையில் பிறந்தார்களாம். சிலர் பிறக்கவேயில்லையாம்! ஆகவே மதத்தின் பெயரால், ஆன்மிகத்தின் பெயரால் கடவுளே ஒரு பெரிய ஒடுக்குமுறையை கடைப்பிடிக்கிறார்.

புருஷசுத்தம் என்பது சமமற்ற தன்மை எனும்போது, அது எப்படியெல்லாம் இந்து மதத்தோடு பொருந்திப் போகிறது என்பது மிகவும் முக்கியம். ஆகவே, இந்து மதத்தின் இந்தத் தன்மையை எப்படி விளக்குவது என்று நான் யோசித்தேன். அப்போது ஒரு விஷயம் புரிந்தது. நாஜியிசமோ, பாசிசமோ அரசியலோடு தொடர்புடையது என்பது புரிந்தது. அங்கே ஆன்மிகமோ, மதமோ வரவேயில்லை. ஏனெனில், அங்கு கிறித்துவப் பின்னணி இருந்தது. இது குறித்து ஆழ்ந்து யோசிக்கையில் இங்கிருப்பது ஆன்மிகப் பாசிசம் என்று புலப்பட்டது. பாசிசத்தின் மீது ஆன்மிகத்தை கட்டியெழுப்பினால், அதற்கு வலிமை அதிகமாகி, நீண்டகாலம் நீடிக்கும். இந்த ஆன்மிக பாசிசத்தன்மையினால் தான் இந்து மதம் இத்தனை காலம் தாக்குப்பிடித்து வந்திருக்கிறது. பெரிய அளவு இழப்புகளோடு குறுகிய காலத்தில் அய்ரோப்பாவில் அரசியல் ரீதியான பாசிசத்தை ஒழித்துவிட முடியும்.

ஆனால் ஆன்மிகப் பாசிசத்தை அழித்துவிட முடியாது. அதன் முக்கியமான பரிமாணங்களை மக்கள் புரிந்து கொள்வதும் கடினம்தான். ஒரு மதத்தை அல்லது அரசை புரிந்து கொள்ள ஒரு காலகட்டம் தேவை. நமது காலத்தில்தான் இந்த ஆன்மிகப் பாசிசம் என்கிற சொல் பிடிபட்டிருக்கிறது. ஏனெனில், பாசிசத்தின் பல கோணங்களை நாம் உணர்ந்திருக்கிறோம். அன்று தேசியம், காலனித்துவம் போன்றவை முக்கியப் பங்கு வகித்தன. காலனியாதிக்கத்திற்கெதிரான போராட்ட காலத்தில் அம்பேத்கரால் கிறித்துவம் குறித்த ஒரு சாதகமான பார்வையை வைத்திருக்க முடியாது. இப்போது செய்தாலே குற்றவாளியாக்குகிறார்கள். அன்றைக்கு அப்படி அவர் செய்திருந்தால், அவரையும் குற்றவாளியாக்கி இருப்பார்கள்.

ஆனால் எந்த விருப்பு வெறுப்புமின்றி, என்னால் பவுத்தத்தை வெளியிலிருந்து ஆராய முடிகிறது. ஆனால், நான் அம்பேத்கரின் தோள்களில் நின்று கொண்டு பார்க்கிறேன் என்பதுதான் முக்கியமானது. ஒவ்வொரு காலகட்டமும் அந்த காலத்திற்கேற்ப ஒரு சிந்தனையாளரை உருவாக்குகிறது. அம்பேத்கரின் "நவயான' பவுத்தத்திற்குப் பிறகு, இந்து மதத்திற்கு சவாலாக கிறித்துவமும், இஸ்லாமும்தான் இருக்கின்றன. இஸ்லாத்தைப் பொருத்தவரை சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போல விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனால் இந்து மதத்திற்கு சவால் விட ஒரே ஒரு நூல் "நான் ஏன் இந்து அல்ல' மட்டுமே வந்திருக்கிறது. ஆனால், இஸ்லாத்திற்குள்ளேயே அதற்கு சவால் விட்டு நிறைய நூல்கள் வந்திருக்கின்றன. கிறித்துவத்திற்கும் இது பொருந்தும். இந்த நிலைமையில்தான் ஒரு கருத்தியல் ரீதியான முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. ஆன்மிக ஜனநாயகம் என்கிற புதிய சொல்லாடல் இங்கே சாத்தியமாகிறது. பவுத்தம், கிறித்துவம், இஸ்லாம் ஆகியவற்றை ஒரு செவ்வகத்திற்குள் அடைக்கலாம். இவற்றுக்கிடையே வேறுபாடுகளும் உண்டு. அது குறித்த விவாதங்களும் உண்டு. இந்த விவாதங்கள் தொடர வேண்டியது அவசியம். 

- முற்றும்

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால், ஆர்.ஆர். சீனிவாசன்
தமிழில் : கவின் மலர்


Wednesday, December 08, 2010

மக்களின் அறிவைக் கொண்டு உருவான நூல்கள் அதிகமாக வெளிவர வேண்டும்

கடந்த இரு இதழ்களில் வெளிவந்த பேராசிரியர் காஞ்சா
அய்லைய்யா அவர்களின் பேட்டி, இந்த இதழிலும் தொடர்கிறது


தலித்முரசு காஞ்சா அய்லய்யா நேர்காணல் பகுதி III

இந்தியாவின் அறிவுத்தளம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து சொல்லுங்கள்.

இந்தியாவின் அறிவுத்தளம் என்பது, மேற்கோள்களாகச் சுருங்கிவிட்டது. நாம் மக்களின் வாழ்க்கையிலிருந்து ஆய்வுகளைச் செய்யும்போது, மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமில்லை. அம்பேத்கர், புலே போன்றோரின் மேற்கோள்களை எடுத்தாளலாம். ஆனால், எப்போதும் மக்களிடமிருந்துதான் முதன்முதலில் நிரப்பப்பட வேண்டும். அதனால்தான் நான் மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்ட எழுத்துகளை நிராகரித்தேன். பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், ஏன்? மார்க்ஸ், அம்பேத்கர் இவர்களில் யாருடைய அனுபவங்களையாவது வரித்துக் கொண்டு எழுதப்படும் எழுத்துகளையும் நிராகரித்தேன். இவர்களில்யாருடைய நூல்களையாவது பாருங்கள்! மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டா எழுதியிருக்கிறார்கள்? மார்க்ஸின் "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யோ, அம்பேத்கரின் "சாதி ஒழிப்பு' நூலோ மேற்கோள் சார்ந்தவை அல்ல. எனவே, மக்களின் மனங்களுக்குள் சென்று அவற்றிலிருந்து ஒரு தத்துவார்த்த பிரதி உருவாவதையே நான் விரும்புகிறேன்.
மக்களின் வாழ்க்கை முறை, உற்பத்தி, அறிவியல், தொழில்நுட்பம், உணவுப் பண்பாடு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. மரக்கறி உணவையே இந்திய உணவு என இந்து மதம் கட்டமைத்தபோது, நாம் ஆற்றலிழந்து போனோம். நம்மிடையே கால்பந்து வீரர்கள் இல்லை. ஏன்? மரக்கறி உணவை மட்டும் உண்பவர் கால்பந்து வீரராக முடியாது; ஒலிம்பிக் சாம்பியனாக முடியாது. ஆக, உணவுப் பண்பாடு  ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தலித் – பெரும்பான்மை உணவுப் பண்பாடு, சங்கராச்சாரியின் வருகைக்குப் பிறகு இந்து மதத்தால் அழிக்கப்பட்டது. ஆகவே, மக்களின்  அனுபவங்களின் மூலம் இந்து மதம் தகர்க்கப்பட வேண்டும் என்று நினைத்தேன்.

எனவே, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உழைத்து Post Hindu India என்ற நூலை  உருவாக்கினேன். பார்ப்பன அறிவாளிகள் கூறும் தேசியம் என்கிற கருத்துருவாக்கத்தையும் அழிக்க விரும்பினேன். ஏனென்றால், பார்ப்பனியம் ஒரே வடிவத்தில் இல்லை. அது மார்க்சியம், தேசியம், பெண்ணியம் உட்பட பல்வேறு வடிவங்களில் வருகிறது. நம்மிடையே போதுமான பெண் அறிவாளிகள் இல்லை. நானேகூட கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று விட்டு வரவில்லை. மாறாக, உள்ளூர் சரக்குதான். இதுவே என் பலமும் பலவீனமுமாக இருக்கிறது. ஆனால், என் பலவீனத்தை நான் பலமாக மாற்றிக் கொள்ள வேண்டுமென விரும்பினேன்.

ஆகவே, "பாப்புலர் பிரஸ்ஸி'ல் பல மணி நேரங்களை எழுதுவதிலும், படிப்பதிலும் செலவழித்தேன். மேலும், கிராமங்களுக்குச் செல்வதன் மூலம், மக்களின் உற்பத்தி வாழ்க்கை குறித்த பெரும் தகவல்களை சேகரித்து வந்தேன். கருவிகளின் பெயர்கள், மக்களிடையே புழங்கும் பழமொழிகள், உணவுப் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுப் பின்னணி போன்ற பல தகவல்களை சேகரித்தேன். அதிலிருந்து சிந்திக்கத் தொடங்கினேன். என்னுடைய சமீபத்திய நூல் Weapon of the other இது குறித்ததே. இப்படித்தான் தலித்தியம் # பார்ப்பனியம் என்கிற கருத்தாடலுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தேன். ராஜாராம் மோகன்ராயின் தேசியத்திற்கு எதிராக புலேயின் தேசியம், கவுடில்யருக்கும் மநுவுக்கும் எதிரான புத்தரின் தேசியம் போன்றவற்றை நீங்கள் அறிவீர்கள்.
நேரு நினைவு அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் பார்வையிட்டபோது நேரு, காந்தி, ராஜாராம் மோகன்ராய் எல்லோரும் அங்கே இருக்கிறார்கள். ஆனால் அம்பேத்கர், புலே, பசவா, பெரியார் ஆகியோர் இல்லை. இந்த அறிவுஜீவி வாழ்க்கை ஒரு துன்புறுத்தலாகவும், ஓய்வற்றதாக வும் இருந்தாலும்  – நான் அதை கடின உழைப்புக்குரியதாகவும், முடிந்தவரை வெகுமக்களுக்குரியதாகவும் ஆக்கிக் கொள்ள முனைந்தேன். ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக அறிவாளிகளுக்காகவும், வெகுமக்களுக்காகவும் எழுதுவது என்பது கடினமானது. எடுத்துக்காட்டாக, என்னுடைய Buffalo Nationalism என்கிற தலைப்பை நான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ இந்து பரிஷத்தின் பசு தேசியத்தை எதிர்த்துதான் வைத்தேன். ஆனால் என்னுடைய நண்பர்களே, ""இதென்ன தலைப்பு?'' என்று சிரித்தார்கள். ""நான் ஏன் இந்து அல்ல'' எழுதியபோது அதைக் கொஞ்சம் போல ரசித்தவர்கள்கூட, இந்தத் தலைப்பைப் பிடிக்கவில்லை என்றார்கள்.

அவர்களிடம் நான் சொன்னேன் : இது என்னுடைய மூளையில் உதித்ததல்ல. எருமைøய ஒவ்வொரு வீட்டின் விலங்கு என்று சொல்லலாம். இந்தியாவில் பால் உற்பத்தி, எருமை மாடுகளிடமிருந்துதான் வருகிறது; பசுக்களிடமிருந்து அல்ல. இந்த பாழாய்ப்போன படைப்பாற்றலற்ற பார்ப்பனிய மூளையோ – ஒன்றுக்கும் உதவாத ஒரு விலங்கை தெய்வமாக்கியும், கருப்பாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக – உற்பத்திக்கு உதவும் ஒரு விலங்கை எமனுக்கு வாகனமாகவும் மாற்றி விட்டிருக்கிறது. ஆனால், அது கொடுக்கும் பாலின் நிறம் வெள்ளை என்பதால் மட்டும் பருகுகிறார்கள் என்றேன்.

ஆகவே, புதியதாய் எதையாவது செய்ய வேண்டி இருக்கிறது. சில வேளைகளில் அதற்காக எள்ளி நகையாடப்படுவதையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. என்னுடைய நண்பர்கள் சிலருக்கு இருக்கும் பார்ப்பனிய தாக்கம்; கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பயின்று விட்டுத் திரும்பியவர்களிடம் இருக்கும் மேற்கோள்களால் நிரப்பப்பட்ட ஆய்வு மனப்பான்மை மற்றும் மேலைநாட்டு சிந்தனைகள் ஆகிய எல்லாவற்றோடும் போராட வேண்டி இருக்கிறது. சிலர் நம்மை ஏற்றுக் கொள்வார்கள். சிலர் நம்மை மறுப் பார்கள். ஆனால் இறுதித் தீர்ப்பு மக்கள் கையில் உள்ளது. இயக்கங்கள்தான் இத்தகைய பணிகளை கைக்கொள்ள வேண்டும். என்னுடைய நூல்களைப் பொருத்தவரையில் வெகுமக்கள் இயக்கங்கள், அறிவுத்தளம் இரண்டிலுமே நல்ல வரவேற்பைப் பெற்றன. பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டவையெல்லாம் சூடான விவாதங்களைக் கிளப்பவில்லை.

இந்தியாவில் தற்பொழுது ஆங்கிலம் பேசக்கூடிய அறிவாளிகள் குழு ஒன்று உருவாகியுள்ளது. இத்தகைய ஓர் ஆக்கம் வெளிவரும்போது, ஆதிக்க சாதிகளிலிருந்து மிகப்பெரிய அளவில், கலவையான எதிர்வினைகள் வந்தன. சிலர் அதனை வரவேற்றாலும், பார்ப்பனர்கள் மிகவும் எரிச்சலுக்குள்ளானார்கள் என்று சொல்லலாம். "நான் ஏன் இந்த அல்ல?' நூல் வெளிவந்தபோது, நூல் குறித்து நிறைய திறனாய்வுகள் வந்தன. தற்போதைய பதிப்பில் அனைத்து திறனாய்வு களையும் இணைத்துள்ளேன்.  என்னுடைய நூலுக்கு ராஜ்தீப் சர்தேசாய், ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். அவருடைய மனைவி சகரிகா கோஷ், இந்நூலால் கவரப்பட்டு என்னை ஒரு நீண்ட நேர்காணல் எடுத்தார். குடும்பத்தில் ஒரு தத்துவப் போரே நடைபெற்றது அப்போது. இந்நூல் பல குடும்பங்களிற்குள் சண்டையை உண்டாக்கியது. எனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால், இந்நூல் ஒரு விவாதத்தை தோற்றுவித்தது.

Post Hindu India வந்தபோது ஒரு பெரிய தாவல் நடந்தது. எடுத்துக்காட்டாக, ""இந்நூலில் தீவிரத்தன்மை இல்லை. ஆய்வுத்தன்மை இல்லை. முடிவுக்கு வர உதவிய தரவுகள் குறித்த குறிப்புகள் இல்லை'' என்று "ஹிமால்' இதழில் மீரா நந்தா எழுதியிருந்தார். அதற்கு நான் ஒரு பதில் எழுதினேன் : ஆய்வுத்தன்மை, தரவுகள் என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? என்னுடைய நூலில் அடிக்குறிப்புகளும், தரவுகளும் இல்லையென்பதற்காக நீங்கள் அதன் தீவிரத்தன்மையை குறைத்து மதிப்பிடுவீர்களானால் – பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், மார்க்ஸ் போன்றவர்களுடையதையும் நீங்கள் அப்படி சொல்லிவிட முடியுமா? பார்ப்பனிய அறிவுஜீவி குண்டர்த்தனம் எதை நிராகரிக்கச் சொல்கிறதோ, அதனை நிராகரிக்க வேண்டுமாம். எதைப் புகழ வேண்டுமெனச் சொல்கிறதோ அதை மற்றவர்களும் புகழ வேண்டுமாம். இது என்ன நியாயம்? எந்தவொரு மானுடவியலாளரின் நூலிலாவது, அவர்களை ஒரு முடிவுக்கு வரவைத்த தரவுகள் குறித்த குறிப்புகள் இருக்கின்றனவா?

மானுடவியல் என்பது, ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் உணவுப் பழக்கம், கருவிகள், உற்பத்தி உறவுகள் குறித்தான ஆய்வுகள் தானே? அவற்றை எல்லாம் எங்காவது போய் இதெல்லாம் உண்மைதானா என்று கள ஆய்வு செய்து பார்த்துதான் ஒப்புக் கொள்கிறார்களா? வெறும் பார்ப்பனியத்திற்கும் தலித்தியத்திற்கும் இடையேயானதல்ல இது. இதில் அறிவியல், தொழில்நுட்பம், மதங்கள் எல்லாமே கலந்திருக்கின்றன. இந்து, முஸ்லிம், தலித் – பெரும்பான்மை மக்கள், பழங்குடியினர் ஆகியோரிடையே அறிவியலும் தொழில்நுட்பமும் உள்ளன. ஆனால், இந்து மதம் இதனை அழித்துவிட்டது. இதனாலேயே நாம் அறிவியலுக்கு உலகளவிலான எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்றாகிப் போனது.

பவுத்த உலகமான சீனா, அறிவியல் துறையில் உலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்று விட்டது. கோபர் நிக்கஸ் முதல் சிப் உருவாக்கம் வரை, கிறித்துவ உலகம் நிறையவே பங்களித்து விட்டது. இவற்றில் "சர்ச்சு'கள் பெரிய பங்கு வகித்தன. இஸ்லாமிய உலகத்தை எடுத்துக் கொண்டால், நபிகள்கூட அறிவியல் அறிவுடன் இருந்தவர். துணிகளைத் தைப்பது, ஆண் – பெண் உறவுகள் குறித்த கருத்தாக்கங்கள், மணற்பாங்கான பகுதிகளில் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்தது போன்ற பல விஷயங்களைச் சொல்லலாம். இதுபோன்ற எதையாவது இந்து உலகம் தந்திருக்கிறதா? ஆர்யபட்டாவைச் சொல்வார்கள். பூஜ்யத்தை கண்டு பிடித்ததை, இந்து மதத்தின் பங்களிப்பாகச் சொல்வார்கள். நான் என்னுடைய நூலில் இதை ஒரு "நான்சென்ஸ்' என்று நிரூபித்திருக்கிறேன். இடையர்கள்தான் பூஜ்யத்தை கண்டுபிடித்தார்கள். ஆர்யபட்டா 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். நம் இடையர்கள் ஆடுகளையும், மாடுகளையும் அதற்கு முன்னரே கணக்கு வைத்து எண்ணிக் கொண்டுதானே இருந்தார்கள், அதுவும் நூற்றுக்கணக்கில்! பூஜ்யம் இல்லாமல் எப்படி நூறு வரும், 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்னால்?

இதனைத் தவறு என்றால் ராமாயணம், மகாபாரதம் எல்லாமே தவறுதான். அதில் தலைகளின் எண்ணிக்கை, நபர்களின் எண் ணிக்கை, ஆடுகளின் எண்ணிக்கை எல்லாம் வருகிறதே? என்ன கொடுமையென்றால் இடையர்கள் இவற்றைப் பற்றி எழுதுவதற்கான அனுமதி இன்றி இருந்தனர். அவர்களுடைய விரல்கள் துண்டிக்கப்பட்டன. அறிவியல், தொழில்நுட்ப, கணித சூத்திரங்களை எல்லாம் ஒரு நூலாகப் பதிவு செய்ய முடியாமல் போனதன் விளைவு, ஆர்யபட்டா பூஜ்யத்தை கண்டுபிடித்தவராகிவிட்டார். இவர் ஒரு பார்ப்பனர் என்பதால், ""நான்தான் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தேன்'' என்று முந்திக் கொண்டார்.

நம்மிடையே இன்று மிகப்பெரிய பண்பாட்டு அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன. மக்களின் அறிவைக் கொண்டு உருவான நூல்கள் அதிகமõக வெளிவர இயக்கங்கள் முயல வேண்டும். இவற்றை சிறந்த முறையில் செய்ய வேண்டும். இல்லையெனில், ஆக்ஸ்போர்டு, ஹார்வார்ட், கேம்பிரிட்ஜிலிருந்து வரும் பார்ப்பனர்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளி விடுவார்கள். நான் இப்படிச் சொல்வதால், நம் பிள்ளைகள் இப்பல்கலைக் கழகங்களுக்குச் சென்று பயிலக்கூடாது என்பதில்லை. எனக்கெல்லாம் அந்த வாய்ப்பு நிச்சயமாக இல்லை. டெல்லிக்குச் சென்று பயில்வதைக்கூட என்னால் கற்பனை செய்து பார்க்க இயலாத நிலையில் இருந்தேன்.

அறிவு சார்ந்த விஷயங்களைப் புதிய முறையில் கூறுவது, புதிய சொற்களை உருவாக்குவது, தத்துவம் சார்ந்த கருத்துருவாக்கம். பல்கலைக்கழக கல்வியையும், மக்கள் போராட்டங்களையும் இணைப்பது போன்றவை மக்கள் போராட்டங்களிலிருந்தே சாத்தியப்படும். எடுத்துக்காட்டாக, ""இந்தியா தலித்மயமானது; சமஸ்கிருதமயமானதல்ல'' என்று சொன்னபோது, எம்.என். சீனிவாசன் போன்றவர்கள், கேம்பிரிட்ஜ் வரை சென்று பயின்றுவிட்டு இந்தியாவுக்கு வந்து இந்திய கிராமங்கள் பார்ப்பனமயமாக்கப்பட்டிருக்கின்றன என்றார். பார்ப்பனர்கள் வெளியே சொல்லாமல் தங்கள் கொல்லைப்புறத்தில் மாமிச உணவு உண்ண முயற்சி செய்து கொண் டிருப்பதை அறியாமல் அவர்கள் இப்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள். விஸ்கி, பிராந்தி மற்றும் இன்னபிற குடிவகைகள் அனைத்தையும் வெளியே தெரியாமல் குடிக்கும் பார்ப்பனர்கள் இல்லையா என்ன? பார்ப்பனப் பெண்களிடையே புகைக்கும் பழக்கமும்கூட அந்த சமயத்தில் இருந்தது. இவையெல்லாம் தலித்துகளின் பழக்கங்கள் என்று நீங்கள் சொல்வதானால், பார்ப்பன குலம் தலித்மயமாகி விட்டது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்? ஆனால் அவரோ, இந்திய கிராமங்கள் பார்ப்பன மயமாகி விட்டன என்றார். ஆகவே நான், "இந்தியா தலித்மயமாகியிருக்கிறது' என்று கூறியது உலகின் கவனத்தை ஈர்த்தது. ரவுட்லட்ஜ் பதிப்பகம், பின் – காலனிய இலக்கியங்களை தொகுத்தபோது, அதில் என்னுடைய அத்தியாயம் ஒன்று இருந்தது. அய்லைய்யா இருந்தார். மார்க்ஸ் இருந்தார். மாவோ இருந்தார். பிராங் பனான் இருந்தார் ஆனால் எம்.என். சீனிவாசன் இல்லை!
இந்திய பார்ப்பனர்கள் எங்களை ஓரங்கட்ட நினைத்தனர். ஆனால் அங்கீகாரமளிக்க உலகம் தயாராக இருக்கிறது.

ஆக, இந்த போர்க்களமே மிகுந்த மன அழுத்தத்தைத் தரக்கூடியது. அதிலும் கல்விப்புலத்தில் தேர்ந்தெடுத்தவர்களைத்தான் முன்னேற அனுமதிப்பார்கள். நம்முடைய நூல்களைப் புறக்கணிப்பார்கள். அவர்கள் நினைப்பதையெல்லாம் பாடமாக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வரலாறை எடுத்துக் கொண்டால், இப்போது இருவகை வரலாற்று நூல்கள் நம்மிடையே உள்ளன. புத்தர் முதல் இன்று வரையிலான தலித் – பெரும்பான்மை மக்களின் போராட்டங்கள் அடங்கிய வரலாறு ஒன்று; கவுடில்யர் முதல் இன்று வரையிலான அவர்களின் வரலாறு மற்றொன்று. ஆனால், நம்முடைய வரலாறை பாடமாக நடத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஆகவே, பார்ப்பனியத்திலிருந்து இந்தியாவை விடுவிக்க மிக கவனமாகவும், போட்டி மனப்பான்மையுடனும் நாம் இலக்கியங்களை உருவாக்க வேண்டும். போட்டி மனப்பான்மை மிகவும் முக்கியமானது.

– அடுத்த இதழிலும்

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால்,
ஆர்.ஆர். சீனிவாசன்
தமிழில் : கவின் மலர்

Sunday, November 21, 2010

இந்து பெரும்பான்மை மாயை தகர்ர்க்கப்படவேண்டும்

தலித் முரசு - காஞ்சா அய்லய்யா நேர்காணல் பகுதி -2



உங்களுடைய God as political Philosopher – Buddha's challenges to Brahminism நூல் உருவானதன் பின்னணி என்ன?

அம்பேத்கரைத் தொடர்ந்து புலேவை தேடி வாசித்தேன். தொன்மையான விஷயங்களையும் தேடி வாசிக்கத் தொடங்கி இருந்தேன். இதற்கிடையில் என்னுடைய ஆசிரியர் ஒருவர், "இந்திய அரசியல் கோட்பாடுகள்' குறித்துப் பாடமெடுக்கும்போது வேதங்கள் குறித்து குறிப்பிட்டுச் சொல்லி, கவுடில்யர், மநு ஆகியோரை பண்டைய சிந்தனையாளர்களாகக் குறிப்பிட்டார். நான் அவற்றை வாசிக்கத் தொடங்கியபோது, அதில் சிந்தனைகள் என்று சொல்லும்படியான எதுவும் எனக்குத் தென்படவில்லை. சிந்தனைகளாகத் தெரிபவை எல்லாமே தேவையற்றவையாக இருந்தன. எல்லாமே மனித இனத்திற்கெதிரானவை. மக்களுக்கு ஒவ்வாதவையாக இருந்தன. அதிகாரத்தின் கைவேலையாக இருந்தன. இதைவிட சிறந்த சிந்தனைகள், பண்டைய இந்தியாவில் இல்லையா என்று என் ஆசிரியரிடம் கேள்வி எழுப்பினேன். இவையே சிறந்த கருத்துகள் என்றார் அவர். "நாம் புத்தர் குறித்து நினைத்துப் பார்க்க வேண்டும். புத்தர் ஒரு மிகப்பெரிய ஞானியென்றால், அவரிடம் அரசியல் சிந்தனைகளே இல்லையா என்ன?' என்றேன். ஆனால், புத்தர் குறித்து அவர் தெரிந்து வைத்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை.

அதன் பிறகு நிலச்சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்து, என்னுடைய எம்.பில். படிப்பை முடித்தேன். பிறகு என்னுடைய பிஎச்.டி. பட்டத்திற்காக புத்தரின் அரசியல் சிந்தனைகளை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் என்னுடைய மேற்பார்வையாளர், "புத்தரை சிந்தனையாளர் என்று சொல்ல முடியாது' என்றார். அதனால் என் மேற்பார்வையாளரை நான் மாற்றிக் கொண்டேன். பிறகு ஒரு பெண் பேராசிரியர், இத்தலைப்பிற்கு ஒப்புக் கொண்டார்.

பாலி மொழியில் எழுதப்பட்ட ஆவணங்கள் படித்துப் பார்க்கப்படவேயில்லை. நான் அதைச் செய்ய விரும்பினேன். ஆனால், சில ஆசிரியர்களோ "இது முடியாத காரியம். பாலி மொழி உனக்கு தெரியாது. ஆகவே, அந்தப் பிரதிகளை விளங்கிக் கொள்ள முடியாது. அதனால் புத்தர் குறித்து நீ தெரிந்து கொள்ள முடியாது' என்றனர். ஆனால் நான் உறுதியாக அவர்களிடம் கூறினேன்: "கிரேக்க சிந்தனையாளர்கள் குறித்து ஆங்கிலத்தில் ஒருவரால் ஆய்வு செய்ய முடிகிறது. ஆங்கிலத்தில் பவுத்தம் குறித்த இலக்கியங்கள் போதுமான அளவு இருக்கும்போது, நான் ஏன் இதைச் செய்ய முடியாது?' என்றேன். பணியில் இறங்கினேன். புத்தரின் அரசியல் சிந்தனைகள் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினேன். அதன் விளைவாகத்தான் God as political philosopher - Buddha’s challenge to Brahmanism என்ற நூல் உருவானது.

பார்ப்பனியத்திற்கெதிரான புத்தரின் போராட்டங்கள் குறித்து ஆய்வு செய்தேன். புத்தரின் விவாதங்களில் புத்தர் தன் வாழ்நாளில் ஒவ்வொரு விஷயத்திலும், தன் சமகால பார்ப்பனர்களை கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார் என்பதற்கான சான்றுகள் உள்ளன. மனித இனம், உளவியல், இயற்கை அரசின் தோற்றம், ஆண்–பெண் உறவுகள் இப்படி எல்லாவற்றையும் பார்ப்பனர்களே முடிவு செய்தனர். என் ஆய்வுக்கட்டுரையில் இவற்றையெல்லாம் சொல்லியிருந்தேன். ஆய்வுக்கட்டுரை வெளியானவுடனேயே அது புத்தகமாகவும் வெளிவந்தது.

மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில், உங்களுடைய பங்கு குறித்து சொல்லுங்கள்?

வியக்கத்தக்க வகையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அறிவுஜீவிகள் எவரும் – பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும், மண்டல் குழு பரிந்துரைக்காகவும் வாதாட முன்வராத சூழல் அப்போது நிலவியது. பிற்படுத்தப்பட்ட தலைவர்களான சரத் யாதவ், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் தவிர, பெரிய அளவில் தலைவர்கள் இல்லை. அவர்களைக்கூட ஊடகங்கள் கோமாளிகளாகத்தான் சித்தரித்தன. அந்த நேரத்தில் அய்தராபாத்தைச் சேர்ந்த பெண்ணியவாதிகளான சுசிதாரு, ரமா மில்கோட்டே, லலிதா மற்றும் சிலரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்தோம். தேசிய அளவில் ஊடகங்களுக்காக கட்டுரைகள் எழுதினோம். Experience as Framework of debate என்ற புகழ்பெற்ற என்னுடைய கட்டுரை, அந்த நேரத்தில்தான் "எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி'யில் வெளிவந்தது. மண்டல் போராட்டத்தில் பார்ப்பனியத்தை வெல்ல, நம் அனுபவங்களையே முக்கியமான கருத்தியலாக முன்னிறுத்த வேண்டும் என்று அக்கட்டுரையில் கூறினேன். அது ஒரு முக்கியமான கட்டுரையாகப் பேசப்பட்டது. ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் நிறைய பேரை அக்கட்டுரை மாற்றியது.

இதற்கு சிறிது காலத்திற்கு முன்புதான் நாங்கள் "நலுப்பு' (black) என்ற இதழை நடத்தத் தொடங்கியிருந்தோம். அருண்ஷோரியை எதிர்த்தும், பார்ப்பனர்களை எதிர்த்தும், புலே, அம்பேத்கர் ஆகியோரை தெலுங்கு மக்களுக்கு அறிமுகப்படுத்தியும் கட்டுரைகளை எழுதினோம். "பேட்' என்ற புகழ்பெற்ற காவியத்தை எழுதிய கவிஞர், "பிளாக் பேட்'டை இந்து மதத்திற்கெதிரான போராட்டத்தின் குறியீடாக அதில் வைத்திருந்தார். அதிலிருந்து "நலுப்பு' என்ற பெயரை எடுத்துக் கொண்டோம். எங்கள் இதழ் மிகவும் பிரபலமடைந்தது. ஆந்திராவின் தெலுங்கு இலக்கிய வட்டத்தை உலுக்கியது எங்கள் இதழ். இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு மண்டல் ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டோம். 

இந்தப் பின்னணியில்தான் மண்டல் இயக்கம் உருப்பெற்றது. இந்துத்துவ பார்ப்பனர்கள் ஒரு புறம், பழைமைவாத காங்கிரஸ்காரர்கள் ஒருபுறம் என எதிர்ப்புகள் இரு முனைகளிலிருந்தும் மண்டல் பரிந்துரைகளுக்கு எதிராக வந்தன. முடிவில், இது மண்டல் X கமண்டலம் அரசியலானது. இதன் விளைவாக கமண்டல அரசியல், பாபர் மசூதியை இடித்தது. இந்துக்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் இருந்தபடியால், முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளைக் கோர முடியாது என்றானது. இந்து பெரும்பான்மைவாதம் என்றால் என்ன? யார் இந்த இந்துக்கள்? யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு அளிக்கக்கூடாதென வாதிடுகிறார்களோ, அந்த பிற்படுத்தப்பட்டவர்களையும் உள்ளடக்கித்தானே இந்து பெரும்பான்மையினர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்? தலித்துகள் வேறு மதத்திற்குச் செல்ல தயாராக இருக்கின்றனர். பிற்படுத்தப்பட்டவர்கள்தான் அடிப்படையில் இந்து கட்டமைப்புக்குள் வருகின்றனர். அதனால்தான், இந்த இந்து பெரும்பான்மைவாத மாயையை முதலில் தகர்க்க வேண்டுமென நினைத்தேன். இந்நிலையில்தான் "நான் ஏன் இந்து அல்ல' என்ற நூலை எழுதத் தொடங்கினேன்.

உங்கள் நூல்களை வெளியிடுவதில் எத்தகைய இடர்ப்பாடுகளை சந்திக்கிறீர்கள்?

நான் அம்பேத்கரின் இலக்கியங்கள் குறித்து திறனாய்வுகளை தேடத் தொடங்கினேன். அவருடைய நூல்களுக்கு விமர்சனங்களோ, திறனாய்வுகளோ இல்லை. அவர் தனது நூல்களை தானே பதிப்பித்துக் கொண்டார்; அல்லது நெருங்கிய தலித் நட்பு வட்டாரங்களில் அவருடைய நூல்களைப் பதிப்பித்தார்கள். 1956 இல் அம்பேத்கர் "புத்தரும் அவர் தம்மமும்' பதிப்பித்தபோது அவரிடம் பணமில்லை. அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. இதில் வருத்தத்திற்குரிய விஷயமென்னவென்றால், அம்பேத்கர் நேருவுக்கு பணம் கேட்டு கடிதம் எழுதினார். அப்போது முக்கியமான உலக பவுத்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். ஆதலால் புத்தகத்தை அச்சிடும் செலவுக்கான தொகை கிடைத்தால் உடனடியாக அச்சிட்டு, மாநாட்டுக்கு வரும் புத்தமத பெரியவர்களுக்கு அதை வழங்கலாம் என்கிற யோசனையில் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தார். ராதாகிருஷ்ணனோ அந்தத் தொகையை வழங்க மறுத்தார்.

இதை அறிந்தபோது நான் மிகவும் வருத்தமடைந்தேன். பெரும்பான்மை வாசகர்களுக்காக ஒரு நூலை பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. இந்நூலை எழுதுவதற்காக நான் கிராமங்களுக்கு செல்லத் தொடங்கினேன். குழந்தைப் பருவம் முதல் முதுமைப்பருவம் வரை, பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலும் பார்ப்பன – பனியாக்களுக்கும் மற்றவர்களுக்குமான வேறுபாட்டை ஆராயத் தொடங்கினேன். ஆய்வின் முடிவில் அந்த நூலை எழுதினேன். ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எவரும் அந்நூலை அந்தத் தலைப்பில் பதிப்பிக்க முன்வரவில்லை.

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, சுயசரிதை உள்ளிட்ட பல நூல்களை பதிப்பித்த "பாப்புலர் பிரகாஷன்' பதிப்பகம் என்னுடைய நூலை பதிப்பிக்க முன்வந்தது. ஆனாலும் அவர்களுக்கு மும்பையிலிருந்து இந்தப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் இருந்தது. ஏனெனில், மும்பையில் சிவசேனா – பா.ஜ.க. ஆட்சி நடந்தது. அப்போது மும்பை யிலிருந்த பதிப்பகத்தார் என்னை வந்து சந்தித்து ""நாங்கள் பதிப்பிக்கிறோம். ஆனால் புதியதொரு பதிப்பகப் பெயரில், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பதிப்பிக்கிறோம்'' என்றார். "சாம்யா' என்று புதிய பதிப்பகப் பெயரிடப்பட்டு கல்கத்தா முகவரியிலிருந்து அந்த நூல் பதிப்பிக்கப்பட்டது.

1996 இல் "நான் ஏன் இந்து அல்ல' வெளியானது. அதிலிருந்து ஒரு புதிய கருத்தியலை உருவாக்குவதில் நான் பங்காற்றத் தொடங்கினேன். இந்நூல் பிரான்சிஸ் பனானின் "ரெச்சர்ட் ஆப் தி எர்த்' நூலோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டது. உலகமறிந்த பெண்ணிய அறிஞர் சுசிதாருதான் அவ்வாறு என் நூலை ஒப்பிட்டவர். புதிய முறைகளில், சிந்தனை உருவாக்கங்களில் நான் நிறைய சோதனைகளை செய்து பார்க்க வேண்டியிருந்தது. நான் ஏன் இந்து அல்ல வெளியான பிறகு, நான் ஒரு நூலாசிரியராக கருத்தில் கொள்ளப்பட்டேன். ஆனால், கம்யூனிஸ்டுகள் இந்தப் புத்தகத்தோடு உடன்படவில்லை.

ஜனநாயகவாதிகளும், ஆதிக்க சாதியிலுள்ள ஜனநாயகவாதிகளும், தலித் வாசகர்களும், வெளிநாட்டவரும்தான் நூலை வாசிப்பவர்களாக இருந்தனர். "டெக்கான் கிரானிக்கிள்' ஆசிரியர் ஜெயந்தி, "தி இந்து' பத்திரிகையின் மாலினி பார்த்தசாரதி,(என். ராம் அல்லர். அவர் என் எழுத்துகளை வெளியிட விரும்புபவர் அல்லர்) ஆகியோர் என் எழுத்துகளைப் பதிவு செய்ய முன்வந்தனர். ஆகவே, ஆங்கிலத்தில் நான் பரவலாக எழுதத் தொடங்கினேன். பத்தி எழுத்துகளாக செய்தித்தாள்களில் என் கருத்துகளை எழுதினேன். அந்த நேரத்தில் வெகு சில அறிவுஜீவிகள் மட்டுமே பார்ப்பனியம் குறித்து ஆதிக்க சாதியினரோடு விவாதிக்கத் தயாராக இருந்தனர். பண்டைய காலம் முதல் நவீன காலம் வரை இதற்கு பெரிய வரலாறு உண்டு.

ஆகவே, தொன்மத்தை நாடிச்சென்று புத்தரின் அரசியல் கருத்துகளிலிருந்து என் வேர்களைத் தேடினேன். எனக்கு முன்மாதிரிகளாக அம்பேத்கரையும், புலேவை யும் மட்டும் நான் வைத்திருக்கவில்லை. மார்க்சும் என் முன்மாதிரியாய் இருந்தார். ஏனெனில், கம்யூனிச தத்துவங்களை வைத்து அவர் இலக்கிய விதிகளை வகுப்பதற்கு முன்னால், மார்க்ஸ் பண்டைய கிரேக்கத்தை முழுமையாக ஆய்வு செய்தார். அவருடைய பிஎச்.டி. ஆய்வின் தலைப்பே The Struggle between Epicurance and Democratus என்பதுதான். அதனால் அவரைப் போலவே பின்னோக்கிச் சென்று, பவுத்தர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான போராட்டத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.

புலேவும், பகுஜன் சமாஜ் கட்சியும் என் பின்புலம். புலே, சாகுமகாராஜ், பெரியார், அம்பேத்கர், சாவித்ரி பாய் ஆகியோரை உள்வாங்கிய அரசியல் அடையாளமாக கன்ஷிராம் இருந்தார். நான் என்னுடைய கருத்துகளை அறிவுத்தளத்தில், வெளிக்கொணர தலைப்பட்டேன். கோபால் குரு, தோராட் போன்ற மிகச் சில நண்பர்களே இப்பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றனர். ஆனாலும் அவர்கள் வேலை செய்வது அறிவுத்தளத்தில் மட்டுமே. அம்பேத்கர் குறித்து எழுதினால், அவரைப் பற்றி மட்டுமே எழுதுவது என்கிற நிலை தற்பொழுது இருக்கிறது. அவரை சமகாலத்தவர்களோடு பொருத்திப் பார்ப்பதில்லை. உலகில் மிகப் பெரும் தாக்கத்தை செலுத்தக்கூடிய பெண்ணியம் மற்றும் மார்க்சியத்தின் கருத்துகளை, அம்பேத்கரியலோடு இணைக்க வேண்டும். அப்படிச் செய்தால், அது ஒரு பரந்துபட்ட தளமாக இருக்கும். அம்பேத்கர் ஓர் அசாதாரணமான மனிதர். அதனால்தான் என்னுடைய அண்மைக்கால புத்தகமான கணிண்t ஏடிணஞீத ஐணஞீடிச் வில் அவரை புத்தர், ஏசு, முகமது நபிகள், மார்க்ஸ் ஆகியோரோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். அவரை அய்ந்தாவது "இறைதூதர்' என்பேன்.

ஏனெனில், ஓர் இறைதூதருக்கõன வாழ்க்கையில்லாவிடில் – அந்தளவிற்கு எழுதியிருக்கவோ, அந்தளவிற்கு அரசியல் செய்திருக்கவோ, ஒரு தீண்டாமையில் அல்லலுறும் வாழ்க்கையை ஒரு தலைமுறைக்குள்ளாகவே நவயானா பவுத்தத்திற்கு உருமாற்றவோ முடியாது. நான் அம்பேத்கரில்லை. மிகச் சிறியவன். எனவே, நான் வேறு மாதிரி முடிவு செய்தேன். சமகாலத்தில் இந்து மதம், தலித்தியம் ஆகியவை குறித்த ஒரு முழுமையான கொள்கை சார்ந்த பார்வையை உருவாக்கவும், இன்றைய காலகட்டத்தில் பழங்குடியினர் முதல் பார்ப்பனர்கள் வரை, என்னென்ன வேறுபாடுகள் உள்ளன என்பதையெல்லாம் கண்டறிவதும், எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்கவும் முனைந்தேன்.

என்னுடைய "நான் ஏன் இந்து அல்ல' நூலில், பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்குமான பண்டைய கால போராட்டங்களைப் பின்புலமாக வைத்து, இன்றைய சமகாலத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அத்தனை விஷயங்களிலும் கடவுளர்களின் பெயரால் எத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன, பார்ப்பனியம் எத்தனை கொடுமையான பங்கு வகிக்கிறது, எப்படியெல்லாம் ஆண் – பெண் உறவுகள் பாதிக்கப்படுகின்றன என்பதை பிற்படுத்தப்பட்டவர்களின் பார்வையிலிருந்து விளக்கியிருக்கிறேன். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், பண்பாட்டு ரீதியாக, ஆன்மிக ரீதியாக, உடல் ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளா தார ரீதியாக எத்தனை வேறுபாடுகள்? பின் எப்படி இதை மாறிவிட்ட ஒரு ஜனநாயக நாடு என்று நாம் சொல்ல முடியும்?

நவீன உலகம் கல்வியின் உலகமாக இருக்கிறது. அம்பேத்கரின் வாழ்க்கையிலிருந்து நான் ஒன்றை கற்றுக் கொண்டேன். தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மத்தியிலிருந்து நிறைய இலக்கியங்கள் வருகின்றன. ஆனால், இந்திய அளவில் அவை கவனத்தைப் பெறுவதில்லை. ஆகவே, ஆங்கிலத்தில் எழுத வேண்டும். ஏனெனில், கருத்துருவாக்கத்திற்கு ஆங்கிலத்தில் தத்துவச் சொல்வளம் ஏராளம். அதனாலேயே அறிவுத்தளத்தில் நம் குரல் ஓங்கி ஒலிக்கச் செய்ய சீராக ஆங்கிலத்திலேயே எழுத வேண்டுமென்று நினைத்தேன். அப்போதுதான் அறிவுத்தளம், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மக்களிடையே கருத்துகளையும் போராட்டங்களையும் கொண்டு சேர்க்க முடியும்.

பிறகு சமஸ்கிருதத்தையும் பிராந்திய மொழிகளையும் ஒழிக்க வேண்டும் என்று கூறத் தொடங்கினேன். ஏனெனில், எல்லா பிராந்திய மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் வேர்கள் இருந்தன. ஆகவேதான் நான் ஆங்கிலத்தை ஆயுதமாக பயன்படுத்தத் தொடங்கினேன். நான் இந்திய ஆங்கிலத்தைத்தான் சொல்கிறேன். என்னுடைய ஆங்கிலத்தைப் பார்த்தீர்களென்றால் – காலனியாதிக்க ஆங்கிலமாகவோ, அமெரிக்க, அய் ரோப்பிய ஆங்கிலமாகவோ இருக்காது.
"நான் ஏன் இந்த அல்ல' நூலை எழுதி முடித்து, அது உருவாக்கிய விவாதங்களுக்குப் பிறகு உற்பத்தி சமூகத்தின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகளில் கவனம் செலுத்த தொடங்கினேன். ஆனால் இந்தத் திறமைகளுக்கெல்லாம் கூட, மதங்களில்தான் வேர்கள் இருக்கின்றன. எங்கள் தலைமுறை எதிர்கொண்ட சிரமம் எதுவெனில், தலித் இயக்கங்கள் எல்லாம் நூற்றுக்கணக்கான கல்வி புலம் சார்ந்த கருத்தரங்குகளில் அம்பேத்கரை முன்னிறுத்தின. அம்பேத்கரிய கல்வி மய்யங்கள் உருவாகின. புலேவையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தலித்துகளுக்கும் ஓர் இடைவெளி இருந்து கொண்டே இருந்தது. இந்த இடைவெளி களையப்பட வேண்டுமென விரும்பினேன். தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள், பெண்கள், சிறுபான்மையினர் என்று அனைவரும் ஒற்றுமையாக இல்லையெனில், நம் போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியாது. அதுதான் நம்முடைய முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும். இல்லையெனில், அரசியல் அதிகாரத்தைப் பெற முடியாது.

எனவே, நான் பண்டைய இந்தியாவிற்குச் சென்று அசோகர் காலத்திய நடைமுறைகளைப் பற்றி ஆய்வு செய்தேன். அசோகர் ஒரு சாதாரணமான மன்னராக இருந்திருந்தால், அவரால் வெற்றி பெற்றிருக்க முடியாது. அவர் பவுத்தத்தை தேர்ந்தெடுத்தார். உலகம் முழுவதும் பவுத்தத்தை பரவச் செய்ய வேண்டுமென நினைத்தார். ஒருபுறம் கிறித்துவ மத போதகர்கள் தாக்கப்படுகிறார்கள். பெண் துறவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். பாதிரியார்கள் கொல்லப்படுகிறார்கள். மறுபுறம் தலித் இயக்கங்கள் மதங்களை கேள்வி கேட்காமல், தலித் பொருளாதாரம், தலித்துகளுக்கான அதிகாரம், தலித் அரசியல் என்று மட்டுமே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தன. ஆகவே, இந்து மதத்திற்கு எதிர்ப்பு என்பது கிட்டத்தட்ட இல்லாமலேயே போனது. பிற்படுத்தப்பட்டவர்களின் முக்கியமான பிரச்சனையே இந்து மதம்தான்.

தலித்துகள் பவுத்தத்திற்கும், கிறித்துவத்திற்கும் மாறிவிடலாம். ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் இதற்குள்ளேயே ஓர் இந்து கடவுளின் காலடியில் பார்ப்பன மேற்பார்வையிலேயே இருக்கிறார்கள். அதனால்தான் பிற்படுத்தப்பட்டவர்களின் பார்வையில் இந்து மதத்தை கேள்வி கேட்க வேண்டும் என்கிறேன். எனவேதான் "தலித் பகுஜன்' என்ற சொல்லை உருவாக்கினேன். இதற்குள் பெண்ணியத்தையும் அடக்கினேன். நீங்கள் என்னுடைய எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் சரி, பெண்ணியம் அதில் ஒரு பகுதியாக வந்து கொண்டேயிருக்கும்; அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை. நூல் முழுவதும் வரும். அதனால் தான் சாதி பண்பாட்டுப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக, அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றை இந்து மத எதிர்ப்புத் திட்டமாகப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதுதான் Post Hindu India என்கிற என்னுடைய கனவு நூலை உருவாக்க முனைந்தேன்.     

– அடுத்த இதழிலும்

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால்,
ஆர்.ஆர். சீனிவாசன்

தமிழில் : கவின் மலர்



Sunday, November 07, 2010

அந்தோணியின் கதை



(இது 2009 ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்டது. ஈழத்தில் மே 2009 நிகழ்வுகளுக்குப் பின்  ஷோபாசக்தி தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது அவருடன் நேர்காணல் செய்து எழுதிய கதை இது. கதைக்குள் வைக்க இயலாத உரையாடலை கேள்வி-பதில் வடிவத்தில் தந்திருக்கிறேன்.  நிலைமைகள் இன்றைக்கு வேறாக இருக்கின்றன. ஷோபாவிற்கே கூட அப்போது அவர் கூறிய விஷயங்கள் சில இப்போது பொருந்தாமல் இருக்கின்றன என்றார். அத்னாலேயே இதை எந்த இதழிலும் வெளியிடவும் இயலவில்லை. ஆனாலும் இந்த நேர்காணல் வீணாகப் போவதை விரும்பாமல் இப்போது என் வலைப்பூவில் பதிகிறேன். 2009 ஈழத்தின் நிகழ்வுகளுக்கு சற்றுப் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்ந்த உரையாடல் இது என்பதை நினைவில் வைத்து வாசிக்கவும்)

உங்களில் யாருடைய ஊராவது இன்று மனிதர்கள் வாழ முடியாதபடி ஆனதுண்டா? உங்கள் ஊரில் நீங்கள் பிறந்து வளர்ந்த வீதியில் மீண்டும் நுழைய முடியாத நிலை உங்களில் யாருக்கேனும் வந்ததுண்டா? உங்கள் ஊர் எல்லையில் நுழைய முற்பட்டால் ராணுவத்தால் துரத்தப்படும் அவலத்தை அனுபவித்ததுண்டா? உங்கள் ஊரின் மனிதரகள் அனைவரும் இடம் பெயர்ந்து இன்று அந்த ஊர், கடற்படைத்தளமாக மட்டும் சுருங்கிய கொடுமையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உங்கள் ஊர் அதிஉயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, நீங்கள் உங்கள் நிலத்திலிருந்து துரத்தப்பட்டிருக்கிறீர்களா?

அந்தோணி துரத்தப்பட்டிருக்கிறான்.

தன் மக்களின் சந்தோஷம், துக்கம் என எல்லாவற்றிற்கும் சாட்சியான அவனுடைய மணற்தீவு, அத்தீவிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் போலவே தனியாய் நிற்பதை வெகுதொலைவிலிருந்து பார்க்கிறான். அல்லைப்பிட்டி...ஆம் அதுதான் அவனுடைய ஊரின் பெயர். மனித மனங்களின் கனவுகளையும் சேர்த்துப் புதைத்த தீவு அது. யாழ்ப்பாணத்திற்கு வடக்கே உள்ள அந்தத்தீவுதான் பிற வடபகுதி தீவுகளுக்கு நுழைவாயில்.

அது அந்தோணி பிறந்த ஊர். ஒருவேளை அவன் அந்த ஊரில் பிறக்காது போயிருந்தால் இந்தக் கதைக்கான அவசியமே வந்திருக்காது.அந்தோணிக்கு ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. அப்பா உள்ளூரில் உள்ள ஒரு ரௌடி. அடிக்கடி சிறைக்குப் போய்விடுவார். போலீஸ் அவரைத் தேடி வரும்போது அவர் இல்லையென்றால் அவன் அம்மாவைப் பிடித்துக்கொண்டு போய்விடும்.

இந்துக்கோவில்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே மரியாதை அளிக்கப்பட்டது. கிறிஸ்துவ தேவாலயத்தில் தனித்தனியாகத்தான் வெள்ளாளர்களும் தலித்துகளும் அமர்ந்தனர். பாடசாலைகள், ரேஷன் கடைகள் போன்றவை வெள்ளாளர் வாழும் பகுதியிலேயே இருந்தன. உள்ளுக்குள் வெதும்பினாலும் அது பற்றி தலித் குடும்பங்கள் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டிருந்த அவர்கள் கல்வி குறித்தெல்லாம்  கவலைப்படும் சூழ்நிலையில் இல்லை. புகழ்பெற்ற திரைப்படப் பாடலான “அல்லா அல்லா” பாட்டு மெட்டில்

“அல்லா அல்லா
 அல்லைப்பிட்டி பள்ளா பள்ளா!”

என்று வெள்ளாளர்கள் பள்ளர்களை வக்கிரமாகக் கேலி செய்து பாடுவதை அந்தோணி பார்த்திருக்கிறான்.

ஐந்தாம் வகுப்புவரை அந்தோணி அல்லைப்பிட்டியில் படித்தான். ஆறாம் வகுப்புக்கு வேலணை சென்றான். பள்ளியில் அந்தோணிக்கு நல்ல பெயர். கெட்டிக்காரனாக வருவான் என்று வாத்தியார்மார்கள் சொல்வதைக் கேட்கும்போது, ‘அப்பாடா! படிச்சு நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் முன்னேறணும்’ என்று நினைப்பான். விடுதியில் தங்கித்தான் அவன் படித்தான். தமிழ் வெறி அவனுக்கு. பத்தாவது வரை அங்கேதான் படித்தான். படிக்கிற காலத்திலேயே அவனுக்கு எப்படியோ இயக்கத்தின் மீது பற்று வந்து விட்டது. அப்போது அவனுக்கு பற்று வராமல் இருந்திருந்தால்தான் ஆச்சர்யப்பட நேர்ந்திருக்கும்.

1983 ஆம் ஆண்டு குட்டிமணி, தங்கதுரை கொல்லப்பட்ட ஆண்டு. மிகப்பெரிய கலவரம் வெடித்து தமிழர்களை தின்றது.அப்போது அந்தோணியின் தீவையும் அயற்தீவுகளையும் சேர்ந்த நிறைய தமிழர்கள் கொழும்பு நகரத்தில் புகையிலை விற்பவர்களாக, கூலி வேலை செய்பவர்களாக, கடை வைத்திருந்தவர்களாக இருந்தார்கள். கலவரம் பற்றிக்கொள்ள, தினமும் தமிழர்கள் கைகால்கள் இழந்தும், அடிபட்டும், பிணமாகவும் வந்தவண்ணம் இருந்தனர். அல்லைப்பிட்டிதான் நிறைய தீவுகளுக்கு நுழைவாயில் என்பதால் எல்லாமே இந்த எல்லையில்தான் வந்து சேர்ந்தன. அந்தக் கொடூரக் காட்சிகளெல்லாம் இவன் கண்களில் வந்து விழுந்தன. இந்தக் காட்சிகள் இயற்கையாகவே இவனுக்குள் விடுதலை வேட்கையை உண்டுபண்ணின. அந்தோணிக்கு இயக்கத்தில் சேர்ந்தாக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.

ஆனால் இவன் நினைத்ததுபோல இயக்கத்தில் சேருவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.அவர்களுக்கென்று பரீட்சை எல்லாம் உண்டு. ஒரு இடம் சொல்லி அந்த இடத்திற்கு 5 மணிக்கு சரியாக வரவேண்டுமென்று சொல்வார்கள். போனால் யாரும் இருக்க மாட்டார்கள். நெடுநேரம் நின்று பார்த்துவிட்டு வந்துவிடுவான். ஆனால் எங்கிருந்தோ இருந்து இவன் பொறுமையாக நிற்கிறானா என்று இவன் சகிப்புத்தன்மையின் அளவை தெரிந்துகொள்ள முனைந்திருப்பது பின்னாளில்தான் இவனுக்குத் தெரிய வந்தது. திடீரென ஒரு 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்திற்கு வரச் சொல்லுவார்கள். பேருந்து வசதி கிடையாது. சைக்கிளில்தான் செல்லவேண்டும். மாங்கு மாங்கென்று இவன் மிதித்துச் செல்வான். இப்படி பலமுறை சோதனைகள் நடக்கும்.

அன்றைக்கு பல இயக்கங்கள் இருந்தாலும் புலிகள் இயக்கத்தில் சேர வேண்டுமென்று இவன் உறுதியாய் இருந்தான். அதற்கு பல காரணஙகள் உண்டு. செயல்படும் இயக்கமாக இருந்தது புலிகள் இயக்கம்தான். திருநெல்வேலியில் கண்ணிவெடி வைத்து 13 பேரைக் கொன்றிருந்தது புலிகள் இயக்கம். அப்போது மகேஷ் என்பவர்தான் இவனது இயக்கத் தொடர்பாளர். அவர் மூலமாகவே அந்தோணி இயக்கத்தை தொடர்புகொள்ள இயலும். அவருக்கு மேலே உள்ள ஒருவரையும் அவனுக்குத் தெரியாது. இயக்கத்தில் படிநிலையில் தனக்கு மேலிருக்கும் ஒரே ஒருவரைத்தவிர வேறு யாருடனும் தொடர்புகொள்ள முடியாது. இது இயக்கத் தலைவர் வரை பொருந்தும். அந்தோணி தினமும் சென்று “என்னை இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கண்ணா!” என்று கெஞ்சுவான். “என்னை எப்போ இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்புவீங்கண்ணா? எப்போ எனக்கு ஆயுதம் குடுப்பீங்கண்ணா? எப்போ எனக்கு குப்பி குடுப்பீங்கண்ணா?” என்று துளைத்தெடுப்பான். சவூதி போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல தினமும் ஏஜெண்டுகளை பார்த்து ஓயாமல் நச்சரிக்கும் இளைஞனைப் போல இவன் நச்சரிக்கத் தொடங்கினான்.

ஆறு மாதகாலம் இவனை கண்காணித்தது இயக்கம். கண்காணிப்பு காலத்திலேயே இவனுக்கு சுவரொட்டி ஒட்டும் வேலை உட்பட பல வேலைகளை இயக்கம் கொடுத்தது. இப்படியான வேலைகளை அவன் செய்துகொண்டிருக்கையில் 84இல் இவனுக்கு கொரில்லா பயிற்சி கொடுத்தது இயக்கம். 10 பேருக்கு ஒரு துப்பாக்கி இருக்கும். அதில் குழுத்தலைவருக்கு அந்த துப்பாக்கி. மற்றவர்கள் ஒரு தடி வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு ஆள் நியமிக்கப்பட்டு இயக்கத்திற்கு ஆளெடுக்கும் பணி உட்பட அனைத்து இயக்கப்பணிகளையும் அவர் செய்யவேண்டும். அவருக்கு ஏரியாக்காரர் என்று பெயர். பயிற்சி முடிந்ததும் அந்தோணி ஏரியாக்காரன் ஆனான். அந்த சமயத்தில் யாழ்ப்பாணத்தில் திலீபன் அரசியல்பிரிவுத் தலைவராகவும் கிட்டு ராணுவத் தளபதியாகவும் பொறுப்பில் இருந்தனர்.

அந்தோணியின் அண்ணன் வெளிநாட்டிலிருந்து இவனுக்கு எழுதிய கடிதத்தில் “இயக்கத்தில் சேர்வதெல்லாம் வெறும் ஏமாத்து வேலை. பொய் வேலை. அதெல்லாம் உனக்கு வேண்டாம்” என்று எழுதினார். இவன் அவருக்கு பதில் சூடாக எழுதினான். ”தட்டுகழுவப் போனா பேசாம தட்டு கழுவணும். இயக்கத்தை பத்தி உமக்கு என்ன தெரியும்?”

அந்தோணி ஆயுதக்கவர்ச்சி உடையவன். அப்போது கம்யூனிச சைனாவிலிருந்து ஒரு சஞ்சிகை  வந்து கொண்டிருந்தது. அதில் விதவிதமான வண்ணப்படங்கள் வரும். அதை பாடப்புத்தகங்களுக்கு அட்டை போடுவதற்காகவே பொடியன்கள் விரும்பி வாங்குவார்கள். அந்த புத்தகத்தில் முதுகில் துப்பாக்கியோடு வயலில் மக்கள் வேலை செய்வது போல தான் பார்த்த புகைப்படங்களில் வருவது போல தமிழீழ மக்களையும் கற்பனை செய்வான்.

ஆங்காங்கே கூட்டங்கள் ஏற்பாடு செய்து மக்களை சந்தித்து பேசும் பணி அவனுக்குத் தரப்பட்டது.. ஆயுதரீதியாக போராட்டம் நடத்தி தமிழீழம் பெற வேண்டுமென வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தினான். கவிஞர் நிலாந்தன் (தற்போது அவர் முள்கம்பிகளுக்குப் பின்னால் முகாமில் இருக்கிறார் என்று கேள்வி) தலைமையில் மக்கள் கூடும் இடங்களில் ‘விடுதலை காளி’ போன்ற நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. அந்த நாடகத்தில் அந்தோணி நடித்தான்.

தமிழீழமே எங்கள் தாகம்! - அந்தத்
தாகம் தீரும் வரை போராடிச் சாவோம்!
.
.
கொக்குளாய் காணாதோ சாமி சாமி!
கொக்காவில் காணாதோ சாமி சாமி!
காரைநகர் போதாதோ சாமி சாமி!
களப்பலிகள் போதாதோ சாமி சாமி!
கடலில் பலிகொடுத்தோம்!
களத்தில் பலிகொடுத்தோம்!
விடலைப்புலிகளெல்லாம்
விஷம்தின்று சாகிறார்கள்!

போன்ற தெருக்கூத்து வடிவப் பாடல்களோடு நாடகம் களை கட்டும்.


திம்பு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது அதை எதிர்த்து “பூட்டான் என்ன பாட்டன் வீடா?” என்ற கோஷத்தோடு நாடகம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. அப்போது புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் பல பகுதிகள் வந்து விட்டன. ஆனாலும் கூட ஆங்காங்கே ராணுவம் கண்காணிக்க வரும். மக்கள் ஆதரவு இருந்ததால் எப்படியாவது ராணுவம் வரப்போகும் செய்தி வந்து விடும். குழுவினரோடு அடுத்த ஊர் சென்று விடுவான்.

இப்படியே களமும் கலையுமாக நாட்கள் கழிந்தன. அநுராதபுரத்தில் இயக்கம் 120 சிங்களரைக் கொன்றது. அதில் 25 பள்ளிக் குழந்தைகளும் அடக்கம். அதற்கு பழிவாங்குவதற்காக 65 தமிழர்கள் பயணம் செய்த குமுதினி படகில் இருந்த அனைவரும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 65 உடல்களை சுமந்துகொண்டு அந்தப் படகு கடலில் ஆடியாடி மிதந்தது. அந்தோணியும் மற்றவர்களும் அந்த உடல்களை கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள். அநுராதபுரம் தாக்குதல் தவறானதோ? இது நமக்கு சரிப்பட்டு வராது போல் தெரிகிறதே... மனசஞசலத்திற்கு ஆளானான் அந்தோணி. ஆனால் இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்குப்பின் இலங்கை அரசு திம்புவில்  பேச்சுவார்த்தைக்கு வந்தது. இப்படி அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்தியிராவிட்டால் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்திருக்காது என இயக்கம் சொல்ல அதுவும் சரிதான் என்றிருந்துவிட்டான். ஆனால் அவனது ஒன்றரை வருட மனப்போராட்டத்திற்கு அது ஆரம்பமாக இருந்தது.

இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில் சிவில் நிர்வாகம் கிடையாது. ஆக ஒரு பதில் நிர்வாகம் அமைக்கப்பட்டது. பல்வேறு இயக்கங்கள் இருந்ததால் ஒரு குற்றத்திற்கு எல்லா இயக்கஙகளிடமிருந்தும் தண்டனை கிடைக்கும். பொலிஸ்காரனின் அதிகாரத்திற்காவது எல்லையுண்டு. நம் இயக்கஙகளுக்கோ வானளாவிய அதிகாரம். பத்தாததற்கு 37 இயக்கங்கள் இருந்தன.

பத்து ஏக்கர் நிலம் குறித்த தகராறா? இவ்வளவு உனக்கு.. இவ்வளவு அவனுக்கு, மிச்சம் இயக்கத்துக்கு என்ற ரீதியிலேயே தீர்ப்புகள் இருந்தன. பாலியல் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். கையில்லாத ஜாக்கெட் போட்ட அல்லது முடியை குட்டையாய் வெட்டிய ஒரு பெண் வெளியில் நடமாட முடியாது. உளவாளி என்றெண்ணி பிடித்துக் கொண்டு போய் கொன்று விடுவார்கள். இந்த காரியங்களை புலிகள் மட்டுமல்ல, எல்லா இயக்கங்களும் செய்தன. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனானான். மரத்தில் கட்டிவைத்து அடிப்பது போன்ற தண்டனைகள் எல்லாமே உண்டு. உழைத்து களைத்து வடிசாராயம் குடிப்பவர்களை துவைத்து எடுத்தனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இயக்கம் கட்டினான் அந்தோணி. சில சமயங்களில் வெறுப்பாய் உணர்ந்தான். என்ன செய்ய? இது ஒரு ராணுவ அமைப்பாயிற்றே? அருகிலேயே இருப்பவன் கூட இயக்கத்திற்கு உளவறிந்து சொல்பவனாய் இருக்கக்கூடும். அதனால் யாரிடமும் எதுவும் பேசவில்லை அவன்.

85இல் இலங்கை அரசோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடாகி போர்நிறுத்தம் ஏற்படுகிறது. தமிழீழத்திற்கு பதில் மாநில சுயாட்சி என்றெல்லாம் பேச்சு வந்தபோது அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இயக்க உறுப்பினர்களுக்கு அரசியல்ரீதியான கல்வி எதையும் இயக்கம் அளிக்கவில்லை. 1986 ஏப்ரலில் புலிகள் டெலோ இயக்கத்திற்கு தடை விதித்தனர். ஸ்ரீசபாரத்தினம் உட்பட 300 டெலோ போராளிகள் கொல்லப்பட்டனர். அந்த ஆண்டு இறுதியிக்குள் புளோட், ஈபிஆர்எல்எப், TEA, TELA போன்ற இயக்கங்கள் தடை செய்யப்பட்டன.

இயக்கத்திலிருந்து வெளியேறுவது என்ற முடிவு அப்போது தற்கொலைக்கு சமம். வெளியேறினால் கைது செய்யப்படுவோம், நிறைய தொல்லைகள் வரும் என்று தெரிந்தே அந்தோணி வெளியேற முடிவெடுத்தான். வெளியேறிய பிறகு போய் சேர வேறு முற்போக்கு அரசியல் இயக்கம் இல்லை. ஆனாலும் தனது அடையாள அட்டை, குண்டுகள் ஆகியவற்றை ஒப்படைத்துவிட்டு வெளியேறினான். இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டால் மரணதண்டனை என்ற நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டுதான் அவன் இயக்கத்தில் சேர்ந்தான். சயனைடு குப்பியை மட்டும் அவன் வைத்துக் கொண்டான்.

இயக்கத்திலிருந்து வெளியேறிய ஞானம் அம்மான் சுற்றிவளைக்கப்பட்டபோது குப்பி கடித்து தற்கொலை செய்துகொண்டார். இயக்கத்திலிருத்து வெளியேறியவர்களும், மற்ற இயக்கங்களை தடை செய்திருந்ததால் இயங்கமுடியாமல் இருந்த மற்ற இயக்கக்காரர்களும் ஒன்றாகவே அலைந்தனர். கும்பலாகவே சுற்றினர். இயக்கத்தில் இருந்த ஆள் என்று இறுமாப்பில் எங்களுக்கே முதல் பங்கு என்ற ரீதியில் ’விடுதலை’ ரௌடிகளாக வலம் வந்தனர். எந்த இயக்கமாவது வந்து கடையடைப்பு செய்யச் சொல்லிவிட்டுச் சென்றால் பின்னாடியே போய் கடையைத் திறக்கச் சொல்லி மிரட்டுவது என எல்லாமே நடந்தேறின.

மீனவர்கள் கடலுக்குள் வெடி வீசி மீன்கள் செத்து மிதக்கும்போது அப்படியே மீன்களை அள்ளிக் கொண்டுவருவார்கள். அதற்காக சில பேர் இயக்கத்தின் கண்ணிவெடிகளை திருடிவிட, இயக்கம் இவர்கள்தான் திருடினார்கள் என முடிவு செய்து இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இவன் குப்பி கடிக்காமல் விட்டுவிட, கைது செய்ததும் குப்பி பறிபோனது. பத்து நாட்கள் சிறையில் இருந்தான்.

வெளியே வந்தபின் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பது அவனுக்கு எப்படியோ இருந்தது. அந்தோணியின் அண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். ”இங்கிலீஷ் படிக்கப்போகிறேன். அதனால் பணம் அனுப்பி வைக்கவேண்டும்” என்று கடிதம் எழுதினான். அண்ணன் 8000 ரூபாய் அனுப்பி வைக்க, இவனுக்கு தலை கால் புரியவில்லை. கையில் வாட்ச், கூலிங்கிளாஸ், சைக்கிள், புதுப்புது உடுப்புகள் என அந்த பணத்தில் செலவு செய்து சுற்றித் திரிந்தான்.

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதே. மீண்டும் நாடகம் போடத்துவங்கினான். இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டானேயொழிய பிரபாகரனே தனது தலைவர், தமிழீழமே தனது லட்சியம் என்பதில் உறுதியாய் இருந்தான் அந்தோணி. பிரபாகரனுக்குத் தெரியாமலேயே வேண்டத்தகாதவை சில நடக்கின்றன என்று உறுதியாய் நம்பினான். ”கண்ணன் வருவானா?” என்று ஒரு நாடகம். “இந்தியா வருமா? வந்து தமிழீழம் பெற்றுத்தருமா?” என்ற பொருளில் அந்த நாடகம் போட்டான்.

87இல் கண்ணன் வந்தேவிட்டான். இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இயக்கம் தொட்டதெல்லாம் வெற்றிதான் அப்போது. மிகக்குறைந்த நபர்களையே இயக்கம் இழந்திருந்தது. திலீபன்தான் இயக்கம் இழந்த 650ஆவது நபர். இயக்கத்தின் பெரும்பாலான தாக்குதல்களில் உச்சபட்ச வெற்றி கிட்டியது. மக்களின் ஆதரவு, சர்வதேச ஆதரவு எல்லாமும் இருந்தன.

வடமராட்சியில் ’லிபரேஷன் ஆபரேஷன்’ என்ற பெயரில் ராணுவம் முழுவீச்சில் தாக்குதலைத் தொடங்கியது. வல்வெட்டித்துறை, பருத்தித்துறை என வரிசையாய் பகுதிகள் கையைவிட்டுப் போயின. இந்திய விமானங்கள் ஈழத்தில் உணவுப் பொட்டலங்களை வீசின. தொடர்ந்து இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அந்தோணியின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்திய விமானத்தில் ஈழத்துக்கு அழைத்து வரப்பட்டார். முதலும் கடைசியுமாக பொதுமக்கள் மத்தியில் அவர் சுதுமலையில் தோன்றியபோது ”சில அழுத்தங்கள் காரணமாகவே ஆயுதத்தை ஒப்படைக்கிறோம்” என்றார். அதன் பின் இலங்கை அரசும், இந்திய அமைதிப்படையும் புலிகளை தாக்கத் துவங்கின. இந்திய அமைதிப்படைக்கும் இயக்கத்துக்கும் போர் மூண்டது.

பிரபாகரனே தனது தலைவன், தமிழீழமே தனது லட்சியம் என்றிருந்தவன்தானே? அந்தோணி மறுபடியும் ஊர்வலங்கள், ஆள்சேர்த்தல் என மீண்டும் எல்லாவற்றையும் செய்தான். வடகிழக்கில் ராணுவத்தை வெளியேற்றவேண்டும், சிங்கள குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற அந்தோணியின் கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. இந்திய அமைதிப்படை அந்தோணியைத் தேடியது. இவன் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள அப்பா அம்மா தங்கை என எல்லோரையும் மிரட்டத் தொடங்கினார்கள். அந்தோணி தலைமறைவானான்.

தனது இருபதாவது வயதில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு தன் தந்தையுடன் எந்த சோதனைச் சாவடியிலும் சிக்காமல் வந்து சேர்ந்தான்.

கொழும்பில் தங்கியவுடன். ”அண்ணா! நான் திருந்திவிட்டேன். நான் ஜெர்மனி போகப் போறேன். எனக்கு பணம் அனுப்புங்க”  என்று அண்ணனுக்கு கடிதம் எழுதினான் ஏஜெண்டுக்கு அறுபதாயிரம் ரூபாய் கட்டவேண்டும். அவன் அண்ணன் ஒரு தவறு செய்தார். அறுபதாயிரம் மட்டும் அனுப்பாமல் ஒரு பதினைந்தாயிரம் அதிகமாக அனுப்பி விட்டார்.

இவனுடன் கூட இருந்த ஒரு நண்பன் இந்தியாவுக்கு பயணமாக ஆய்த்தமாகிக் கொண்டிருந்தான். இந்தியா போனால் என்ன? ஆனால் பாஸ்போர்ட் ஏஜெண்ட் கையில். அவசரத்திற்கு எமர்ஜென்ஸி பாஸ்போர்ட் ஒன்றை எடுத்துக் கொண்டு பதினைந்தாயிரத்தோடு மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு விமானம் ஏறினான்..

சென்னை - இவன் பார்க்க ஆசைப்பட்ட நகரம். பெரிய சாலைகள், கட்டிடங்கள் என அவனுக்கு சென்னை பற்றி ஒரு பிரமிப்பு இருந்தது. ஒரு லாட்ஜில் தங்கினான். அந்தோணி ஒரு சினிமா ரசிகன். பத்மம் திரையரங்கிற்குச் சென்று ‘செந்தூரப்பூவே’, பிரபுவிற்கு தொடர்ந்து வெற்றிகரமான 13ஆவது படம் என்ற விளம்பரத்தோடு ஓடிக்கொண்டிருந்த ‘ரத்ததானம்’ போன்ற படங்களை கண்டுகளித்து சுற்றித் திரிந்தான்.

அப்போது இலங்கையிலிருந்து லக்ஸ் சோப், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை இந்தியாவிற்குக் கொண்டுவந்து விற்பது, இந்தியாவிலிருந்து கைலி, பட்டுச்சேலைகள் போன்றவற்றை இலங்கைக்கு எடுத்துச் சென்று விற்பது சர்வசாதாரணம். இந்த சாக்கில் ஹெராயின் கடத்துவதும் நடந்தது. அப்படி ஒருவன்தான் அந்தோணியோடு கூட வந்தவன். தனது வியாபார விஷயமாக பம்பாய்க்கு சென்றுவிட்டான். அவன் போனகையோடு அந்தோணிக்கு அம்மை வார்த்தது.. 20 நாட்கள் அவஸ்தைப்பட்டு லாட்ஜ் அறையை விட்டு வெளியே வரவேயில்லை அந்தோணி. அதற்குள் கொழும்பில் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. இவனுக்கு விசா எப்போதோ வந்துவிட்டிருந்தது. இவன் போக வேண்டிய கப்பல் புறப்பட்டுச் சென்றிருந்தது.

இவன் கொழும்புக்கு திரும்பியபோது இவன் கையில் ஒற்றை பைசா கிடையாது. அதற்குள் ஏஜெண்ட் அந்தோணியில் அப்பாவுக்கு கடித்ம் எழுதிவிட்டார் இவன் ஊருக்குத் திரும்ப மறுத்தான்.

”எப்படியாவது என்னை ஜெர்மனிக்கு அனுப்பிவிடுங்கள்”

ஏஜெண்ட்டிடம் மன்றாடினான். அவர் தினமும் 100 ரூபாய் செலவுக்குக் கொடுப்பார். அதை வைத்துதான் நாட்களை ஓட்டிவந்தான்.

சாய்பான் நாட்டிற்குப் போனால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று அந்தோணிக்கு ஏஜெண்ட் ஆசை காட்ட, அவனுக்கோ குழப்பம். உலக வரைபடத்தில் இதுவரை இந்த பேரில் ஒரு நாட்டை பார்த்ததில்லையே என்று தயங்கினான். விசாரித்த பின் ஒத்துக்கொண்டு கிளம்பினான். ஹாங்காங் சென்று அதன்பின் சாய்பான் நாட்டிற்கு அழைத்துப் போவதாக ஏஜெண்ட் சொன்னதை நம்பி அந்தோணியும் டெலோ கணேஷும் வேறு சிலரும் ஹாங்காங் புறப்பட்டனர். அங்கே சென்றவுடன் ஏஜெண்ட் அத்தனை பேரின் பணத்தோடும் மாயமாகி விட்டார். விசா இன்றி பத்து பேரும் மொத்தமாய் ஹாங்காங் பொலீஸிடம் சரணடைந்தனர். கிட்டத்தட்ட ஆறு மாதம் விசாரணை நடந்தது. அந்த ஆறுமாதமும் ரெஸ்டாரண்ட் போன்ற இடங்களில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தான். விசாரணை முடிந்து ஒருவழியாய் கொழும்பு திரும்பினான்.

கொழும்பு திரும்பியவுடன் அந்த ஏஜெண்ட்டின் அலுவலகத்திற்குச் சென்று கண்ணாடியை எல்லாம் அடித்து நொறுக்கி ரகளை செய்தான் அந்தோணி. அதன் விளைவாக பணத்தை திருப்பிக் கொடுத்தார் ஏஜெண்ட்.

1990 ஜுன் மாதம் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான தேன்நிலவு முடிவுக்கு வந்தது. அரசின் தேடுதல் வேட்டையில் பிடிபட்டு அந்தோணி சிறை சென்றான். அவனுடைய சிங்களத்தோழி ஒருத்தியின் முயற்சியினால் பிணையில் வெளிவந்தான்.

தாய்லாந்தில் அகதிகளுக்கு மாதாமாதம் 3000 பாத்கள் தொகை கொடுத்து பராமரிப்பதாகக் கேள்விப்பட்டபோது அங்கு போய்விடலாம் என்று தோன்றியது அந்தோணிக்கு. பாங்காங் நகருக்கு டிக்கெட் எடுக்க காசுக்கு என்ன செய்ய? மீண்டும் “அண்ணா! நான் மறுபடி திருந்திவிட்டேன். எனக்கு பணம் அனுப்புங்க” என்று கடிதம் போனது அண்ணனுக்கு. இந்த முறையும் அண்ணன் போனமுறை செய்த அதே தவறை செய்திருந்தார். டிக்கெட்டுக்குப் போக அதிக பணம் அனுப்பியிருந்தார்.

பாங்காக் நகரில் இறங்கியவுடன், ஒரு விடுதியில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கினான். கையிலிருந்த பணமும் வயதும் சேர்ந்து மது, சிகெரெட் என எல்லா பழக்கமும் வந்தது. இப்படி ஒரு ஏழெட்டு நாட்கள் கழிந்தவுடன் கையிருப்பு தீர்ந்தது. இனி என்ன? இருக்கவே இருக்கிறது அகதிகள் தங்குமிடம். அந்தோணி அங்கே கிளம்பினான். கிளம்புவதற்குமுன் அவன் நிலையை எழுதி, தன்னை அகதியாகக் கருதும்படி ஒரு மனு தயார் செய்து கொண்டான். அதனடியில் ரத்தத்தால் கையெழுத்திட்டான்.

யுஎன்எச்சிஆர் (United Nations High Commission for Refugees) கட்டிடத்தின் முன்னால் வந்து அவன் நின்றபோது அவனை உள்ளே விடக்கூட இல்லை. அப்போதுதான் சமீபமாக இரான் அகதி ஒருவர் அங்கே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாராம். எனவே பாதுகாப்பு மிகக் கடுமையாக இருந்தது. ஆகவே கட்டிடத்துக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தார்கள். இந்த செய்தி அந்தோணிக்கு பேரிடியாய் இருந்தது. கையில் ஒரு பைசா இல்லை. மொழி தெரியாத ஊரில், யாருமில்லாமல் என்ன செய்வது? கையில் பெட்டியோடு நிராதரவாக நின்றான்.

சீலோம் வீதியில் ஒரு மாரியம்மன் கோவில் இருந்தது. அங்கே மதியச் சாப்பாடு கிடைக்கும் என்று யாரோ சொல்ல அங்கே சென்று உண்டான். அதன்பின் எதிரில் இருந்த ஒரு பூங்காவில் குழம்பிய மனநிலையிலேயெ மதியம் உறங்கிப்போனான். அந்த பூங்காவும் மாரியம்மன் கோவிலும் அவனுக்கு தினமும் கைகொடுத்தன. பல வேளைகள் பட்டினிதான். வறிய சூழலில் வளர்ந்தவனுக்கு தனது வறுமையை பிறர் அறியக்கூடாதென்ற எச்சரிக்கை உணர்வு அதிகமாக இருந்தது. சாப்பிடாதது போல் காண்பித்துக் கொள்ளவில்லை அவன். எங்கேயாவது ஒரு துண்டு சிகரெட் கிடைத்தால் அதை ஒரு இழுப்பு இழுத்துக் கொள்வான். இவன் பூங்காவில் தங்கியதை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த காவலாளி அவனை அழைத்து ஒரு நாள் சாப்பாட்டுக்காக இருபது ரூபாய் கொடுத்தார். அவன் அதை சாப்பிட வைத்துக் கொள்ளாமல் நேரே கடைக்குச் சென்று சவரம் செய்யவேண்டுமென்று கூறி இரண்டு சின்ன கத்திகளை வாங்கினான். ஒன்றை சட்டைப் பையிலும் ஒன்றை ஷூவிலும் வைத்துக் கொண்டான்.

இப்போது அந்தோணி யுஎன்எச்சிஆர் கட்டிடத்தின் காவலாளிமுன் நின்றான்.

“நான் கமிஷனரைப் பார்க்க வேணும்”

“முடியாது”

சட்டைப்பையிலிருந்து கத்தி வெளியே வந்தது. அடுத்த நொடி அந்தோணியின் இடது கையின் கீறல்களிலிருந்து ரத்தம் கொட்டியது. அந்த இடமே கலவரமானது. அவன் உள்ளே அனுமதிக்கப்பட்டான். கமிஷனர் வந்தார்.

“என்ன வேண்டும்? ஏன் இப்படி செய்தாய்?”

“அகதியாய் என்னை ஒத்துக்கொள்ள வேணும்”

“முடியாது!!!”

ஷூவிலிருந்து அடுத்த கத்தி வெளியே வந்த்து.

“அக்செப்டட்”

அலறினார் கமிஷனர். அன்றிலிருந்து அகதி அந்தஸ்தோடு தாய்லாந்தில் தங்கத் தொடங்கினான்.

இங்கு பிரச்சனை வேறு வடிவில் வந்த்து. அகதிகளை பராமரிப்பது யுஎன்எச்சிஆர் அமைப்பு. இதற்கும் தாய்லாந்து அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் விசா வழங்கவேண்டியது அரசாங்கம்தான். விசா காலாவதியாகிவிட்டால் அருகிலுள்ள லாவோஸ் நாட்டிற்குச் சென்று தங்கிவிட்டு மீண்டும் விசா வாங்கி தாய்லாந்து வந்தான். அங்கே அகதிகளுக்கு வழங்கப்படும் 3000 பாத்களில் 1000 பாத்களே ஒரு மாதத்தை ஓட்ட போதுமானதாக இருந்த்து. தாய்லாந்தில் இருந்தவரை தெருச்சண்டைகள், அடிதடி என எல்லாவற்றிலும் அந்தோணியின் பெயர் இருந்தது. சண்டையில் ஒரு சிறுநீரகத்தை இழந்தான். சிறைவாசம் பழகிப்போனது. இப்படியே நான்கு ஆண்டுகள் போயின.

93இல் பிரான்ஸிலிருந்து அல்லைப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் வந்தார். அவர் மூலமாக பிரான்ஸ் செல்ல தீர்மானித்தான். “அண்ணா! நான் மறுபடி திருந்தி விட்டேன். பிரான்ஸ் போக பணம் அனுப்புங்க!” என்று கடிதம் மறுபடி அண்ணனுக்கு போனது. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத அவரும் சளைக்காமல் பணம் அனுப்பினார்.

பிரான்ஸ் வந்து சேர்ந்தான் அந்தோணி. இத்தனை ஆண்டுகால இடைவெளியில் அந்தோணியின் குடும்பம் 1990இல் அகதியாய் ஊரைவிட்டு இடம்பெயர்ந்திருந்தது. 1993 மேதினம் - பிரேமதாசா கொல்லப்பட்ட சமயம் அந்தோணி பிரான்ஸில் இருந்தான். பாரிஸில் புலிகள் இயக்கத்தின் அலுவலகம் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தன் தலைவர் பிரபாகரன், தன் தாகம் தமிழீழம் என்பதில் அந்தோணி உறுதியாய் இருந்தான். மீண்டும் இயக்கத் தோழர்களின் நட்பு. அவர்கள் இவனை இயக்கத்திறகாகப் பணியாற்ற அழைத்தார்கள். அந்தோணியும் மீண்டும் இயக்கத்திற்காக வேலை செய்ய மனதை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.

ஒரு நாள்.. மது போதையில் சாலையில் அலம்பல் பண்ணிக்கொண்டே அந்தோணி வந்து கொண்டிருந்த்போது, நான்கைந்து பேர் சாலையோரத்தில் “தொழிலாளர் பாதை” என்ற பத்திரிகையை கையில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.

”நம்ம ஊர் பசங்க மாதிரி தெரியுதே..”

அருகில் சென்று விசாரித்தான். புரட்சி கம்யூனிஸ கழகத்தின் பிரெஞ்சுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றார்கள். இவனும் ஒரு பத்திரிகை வாங்கினான். அவர்கள் இவனிடம் முகவரியும் தொலைபேசி எண்ணும் கேட்க போதையில் கொடுத்து வைத்தான்.

அடுத்த நாள், தொலைபேசி மணி ஒலிக்க ஆரம்பித்தது. அவன் அவர்களை மீண்டும் சந்திக்கும் வரை தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. தொல்லை தாங்காமல்தான் அவர்களை சந்த்திக்க ஒத்துக்கொண்டான். ஒரு சிறிய மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள்.

“நீங்கள் எந்த இயக்கம்?”

“எல்டிடிஈ”

“நீஙகள் எல்லோரும் ரொம்ப பாவம்!!!!!!”

அந்தோணிக்கு அந்த வார்த்தைகள் அலை அலையாய் அதிர்வலைகளை உண்டாக்கின. வாழ்நாளில் முதன்முறையாக இந்த வார்த்தைகளைக் கேட்கிறான். பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை பாவம் என்று முதன்முதலாக பிறர் கூறக் கேட்கிறான்.

“ஏன் பாவம்?” - அந்தோணி கேட்டான்.

இந்த கேள்விக்கு விடையாக ஏசுவின் மலைப்பிரசங்கத்தைப் போல மூன்று மணி நேர பிரசங்கம் கிடைத்தது. பிரசங்கத்தின் முடிவில் அந்தோணி ஷோபாசக்தியாக உருமாறத் தொடங்கினான்..

- எழுத்தாளர் ஷோபாசக்தியுடனான நீண்ட உரையாடலின்வழி பின்னப்பட்ட அந்தோணியின் கதை



ஷோபாசக்தியின் குரல் இதோ...

93இல் இருந்து 97 வரை மிகத் தீவிரமாக கட்சிப்பணி செய்தேன். நிறைய புத்தகங்கள் வாசிக்கத் தொடங்கினேன். கட்சிக்கவிதைகள் எழுதினேன். எனது முதல் சிறுகதை “அம்மா” என்ற சிறுபத்திரிகையில் வெளிவந்தது. ஆனால் கட்சியில் என்னை எழுத விடமாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கட்சிக்காரர்களிடமிருந்து விலகத் தொடங்கினேன். எனது அறையில்தான் பெரும்பாலும் கட்சிக்கூட்டங்கள் நடக்கும். பின் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டத்திற்கு தோழர்கள் வந்தபின் அவர்களை அறையில் விட்டுவிட்டு நான் தப்பித்து வெளியேறத் தொடங்கினேன். நான் இப்போது லூத் ஊவிரிர் என்ற ட்ராட்ஸ்கியக் கட்சியின் ஆதரவாளர்.

95இல் என் பெற்றோர் சென்னையில் அகதிகளாகக் குடியேறினர். எனக்கு 98இல் இந்தியா வர விசா கிடைத்தது. அப்போது எனக்கு தமிழக இலக்கியவாதிகள் யாரிடமும் அறிமுகம் இல்லை. பிரான்ஸிலிருந்து கிளம்புகையில் தஞ்சாவூரில் இரண்டு முகவரிகளை நண்பர்கள் கொடுத்தார்கள். ஒருவர் கே.ஏ.குணசேகரனின் சகோதரி ஜோதிராணி. மற்றொருவர் அ.மார்க்ஸ். இந்த முகவரிகளுடன் தஞ்சாவூர் போனேன். ஜோதிராணியை சந்திக்க இயலவில்லை. அ. மார்க்ஸை சந்தித்தேன். சென்னையில் வளர்மதி, ராஜன்குறை போன்ற நண்பர்களை அறிமுகப்படுத்தினார். 2004இல் என் தங்கை பிரான்ஸ் வந்ததிலிருந்து தங்கையின் வீட்டிலே தங்கியிருக்கிறேன். அவ்வபோது பிரான்ஸிலிருந்து வந்து நண்பர்களை சந்திக்கிறேன்.

ஒரு பேட்டியில் நீங்கள் பயனற்ற வாழ்வு வாழ்வதாகச் சொல்லியிருக்கீங்களே! ஏன் அப்படி?

“என்னால் இயங்காமல் இருக்க முடியவில்லை. எனக்கு இயங்குவதற்கு அமைப்பு வேணும். அமைப்பில்லாமல் இயங்க முடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஈழத்திலும் சரி அதற்கு வெளியேயும் சரி நான் தேடும் அமைப்பு இல்லை. நானே உருவாக்கலாமென்றால் எனக்கு அதற்கு சக்தி இல்லை. எனக்கு தலைமைப்பண்பு கிடையாது. யாராவது அமைப்பு தொடங்கினால் நான் அதற்கு விசுவாசமான தொண்டனாக இருப்பேன். வேலை பார்ப்பேன். அது முடியாததால் என் ஆற்றாமையை போக்கிக்கொள்ள எழுதுகிறேன். என்னுடைய கதைகள் ஒவ்வொன்றும் ஒரு அரசியல் துண்டு பிரசுரம்.

எனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாததை ஒரு இழப்பாகத்தான் நான் பார்க்கிறேன். எத்தனையோ பிற மொழி இலக்கியங்களை வாசிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. “குற்றமும் தண்டனையும்” தமிழில் வந்தபின்தானே என்னால் வாசிக்க முடிந்தது?


மரபுரீதியான ராணுவமாக புலிகள் இயக்கம் மாறியதால்தான் ராணுவப்பின்னடைவு ஏற்பட்டதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் சேகுவேரா ஒரு கொரில்லா ராணுவம் கட்டாயம் மரபான ராணுவமாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?

சே காலத்தில் இன்றிருப்பது போல் நவீன ஆயுதங்கள் இல்லை. ஷெல்லிங் இல்லை. கொத்துகுண்டுகள் இல்லை. அதனால் அவருடைய காலத்துக்கு அது பொருந்தும். இப்போது நிலைமை வேறு மாதிரி இருக்கிறது.

இலங்கை இந்தியாவின் ஒரு மாகாணமாக ஆகிவிட்டது. அதிலும் சிறைபிடிக்கப்பட்ட மாகாணமாக ஆகிவிட்டது. இன்று எம் மக்களுக்கு வேண்டியது நிம்மதியான ஒரு வாழ்க்கை, அவர்களுக்கு அன்றாடம் சாப்பாடும், மருந்தும் வேணும். முகாம்களில் இருந்து அவர்கள் வெளியேறணும். ஆனால் ராஜபக்சே அரசாங்கம் இதைச் செய்யாது. உலகமே சேர்ந்து அழுத்தம் கொடுத்தாலும் முகாம்களை அவவளவு சீக்கிரம் கலைக்க மாட்டார் ராஜபக்சே. ஏனென்றால் வழக்கறிஞரான அவருக்கு மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய அனைத்து சட்டங்களும், சட்டங்களை ஏமாற்றுவதும் அத்துப்படி.

புலிகள் அவர்களுக்கு மாற்று கருத்துடையவர்களை விட்டுவைக்க மாட்டார்கள் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். உஙகளை எப்படி விட்டு வைத்தார்கள்?

ஒருமுறை குமுதத்தில் பேட்டி வந்தபிறகு பிரான்ஸில் உள்ள இயக்க ஆதரவாளர்களால் பாரிஸில் வைத்து ஒரே மாதத்தில் மூன்று முறை நான் தாக்கப்பட்டேன். என்னை இலங்கை அரசாங்கத்தின் ஆதரவாளன் என்று சிலர் பொறுப்பில்லாமல்  எழுதி வெறுப்பேற்றுகிறார்கள். புலிகள் இயக்கத்தில் இருந்தபோதும் சரி, வெளியே வந்தபோதும் சரி, நான் அரசாங்கத்தை எதிர்த்தே வந்திருக்கிறேன். புலிகளை நூறு சதவிகிதம் எதிர்க்கிறேன் என்றால் அரசை இருநூறு சதவிகிதம் எதிர்க்கிறேன் என்றெல்லாம் பிரகடனப்படுத்தி இருக்கிறேன். 160 பக்கங்களைக் கொண்ட என்னுடைய “ம்” நாவலில்  155 பக்கங்கள் அரசாங்க எதிர்ப்புதான். கடைசி 5 பக்கம்தான் புலிகள் குறித்த விமர்சனம் வரும். வெறும் ஐந்து பக்கம் எழுதியதற்காக என்னை புலி எதிர்ப்பாளன் என்று சொல்பவர்கள் 155 பக்கங்களூக்காக என்னை அரசு எதிர்ப்பாளன் என்று சொல்வதில்லை. என் அரச எதிர்ப்பு என்பது சரியான ஒரு இடதுசாரி பார்வையுடனான் நிலைப்பாடு.

ஈழத்திற்கு செல்ல ஆசைப்படுகிறீர்களா?

டால்ஸ்டாய் கதைகளில் வரும் கதாநாயகனுக்கு உள்ள குற்றவுணர்ச்சியின் அளவு இல்லாவிட்டாலும்கூட, எனக்கு சிறிதளவாவது குற்றவுணர்வு இருக்கிறது. அங்கையற்கண்ணியின் அப்பாவும் அம்மாவும் நிலக்கடலை விற்பவர்கள். குழந்தையாய் இருந்தபோது நான் என் கையால் தூக்கி விளையாடிய அங்கையற்கண்ணி இயக்கத்தின்  தற்கொலைப்படையில் பலியான முதல் பெண். அவள் இயக்கத்தில் சேரும் சூழல் என்னால்தான் எங்கள் ஊரில் உண்டானது. எம் மக்களில் சிலரை நானே இயக்கத்தில் சேர்த்துவிட்டேன். இப்படி நான் சேர்த்த என் மக்கள், எம் இளைஞ்ர்கள் எத்தனையோ பேர் இன்று பலியாகிவிட்டார்கள். அவர்களது அம்மா அப்பா, சொந்தபந்தங்கள் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்? ஈழத்திற்குப் போக ஆசைதான். எப்படி ஆசை இல்லாமலிருக்கும்? ஆனால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் அங்கே இனி போவேன்?