Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Monday, April 23, 2012

மீனுக்குட்டி

என்னால் நம்ப முடியல. பாட்டி சொல்றது நெசந்தானா? அப்பாவா அப்புடி சொன்னாரு? அப்படி அழுதாரு? எம் மனசுக்குள்ள அப்ப்டியெல்லாமிருக்காதுன்னு தோணிக்கிட்டேயிருந்துச்சு.
”நெசமாவா சொல்றே?” – பாட்டிகிட்ட திரும்ப கேட்டேன்..
”அட! ஆமா! பின்ன பொய்யா சொல்றேன்?”
“நம்ப முடியலயே?”
”நெசந்தான். நீ வேணுமுன்னா ஒங்கம்மாகிட்ட போய்க்கேளு”
அதுக்கு மேல் எனக்கு இருப்பு கொள்ளலை. அம்மா சாயங்காலம் வரட்டும். கேட்டுற வேண்டியதுதான். ஆனா அதுவர எப்படி பொறுக்க? யோசிச்சுக்கிட்டே குடிசைக்கு வெளிய வந்துட்டேன். ரோட்டுல சர் சர்ருன்னு பஸ், காருன்னு போய்க்கிட்டேயிருந்துச்சு. பக்கத்து வீட்டு பிரேமா அக்கா நின்னுக்கிட்டிருந்துச்சு  அதுகிட்ட கேட்டா என்ன?
பிரேமா அக்கா பக்கத்து வீட்டில் நான் பொறக்குறதுக்கு முன்னாடிருந்தே இருக்காங்க. நான் பொறந்தப்போ அக்காவுக்கு பத்து வயசுன்னு அடிக்கடி அக்கா சொல்லும். ஒருவேளை அதுக்குத் தெரிஞ்சிருக்குமோ? மெதுவா அக்கா கிட்ட போனேன்.
”யக்கா! யக்கோவ்!”
”என்னடி பொண்ணே!”
“மணி என்ன?”
“கொஞ்ச முன்னால லட்சுமி – சரஸ்வதி போச்சு. பின்னாலேயே மாரியப்பாவும் போச்சு. அதனால ரெண்டேகால் இருக்கும் மீனுக்குட்டி”
அக்காவுக்கு எந்த பஸ் ரோட்டில் எத்தனை மணிக்குப் போகும்ங்கிற வெவரமெல்லாம் சரியா தெரியும். பஸ் போறதை வச்சு நேரம் சரியா சொல்லும். தஞ்சாவூர்லேர்ந்து பட்டுக்கோட்டை ரூட்டுல போற அத்தனை பஸ்ஸும் அத்துப்படி. குடிசைக்குள்ள இருந்துக்கிட்டே பஸ் ஹாரன் சத்த்த்த வச்சே ஒரு நாளு அக்கா குருவி பஸ் சர்வீஸ்காரன் போறான்னு கரெக்டா சொன்னுச்சு. அப்படி ஆளு அக்கா.
”எனக்கொரு சந்தேகம். ஓங்கிட்டத்தான் கேக்கணும்.”
“கேளு மீனுக்குட்டி”
“நான் பொறந்தப்போ நீ இந்த வீட்டுல தானே இருந்தே?”
“ஆமா. இந்த வீட்டுக்கு குடிவந்தாச்சு. ஆனா நா நீ பொறந்தன்னிக்கு ஊருக்குப் போயிருந்தேன். ரெண்டு நாளு கழிச்சுத்தான் வந்து பாத்தேன் ஒன்னை. சும்மா கருகருன்னு இருந்தே..! ஒங்க சித்தி, மாமா, மாமி, எல்லாரும் ஒன்னப்பாக்க வந்திருந்தாங்க. எல்லாருமே பொண்ணு கருப்பா பொறந்திருக்கு. ஆனா களையா இருக்குன்னு பேசிக்கிட்டாங்க.. அப்பவே நீ என்னப் பாத்தோன்ன சிரிச்சே. ம்.. அப்பவே ஆரம்பிச்சிருச்சு போ நம்ம பளக்கம்”
நான் அக்காவையே பார்த்துக்கிட்டிருந்தேன்.
“என்ன எப்பவும் பளக்கம்னு சொல்லப்புடாது.. உனக்கு தமிள் சரியா பேச வரலேன்னு திருத்துவ.. இன்னைக்கு கம்முன்னு நிக்கிற?”
”மூடு இல்லக்கா”
”ஏம்மீனு? என்ன விசயம்?”
அக்கா பக்கத்தில் வந்தது. என் தலையைக் கோதிவிட்டது.
“என்ன சொல்லு?. ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”
எனக்கு அக்கா தலையை கோதிவிட்டது பிடிச்சிருந்த்து. அக்காவின் விரல்லேர்ந்து ஏதோ ஒண்ணு உடம்புக்குள்ள இறங்குற மாதிரி இருந்துச்சு. கண்ணில் தண்ணி வந்தது. அக்கா பார்த்துடுச்சு.
”ஏய்! என்னாச்சு .ஏன் அழுவுறே”
பிரேமா அக்கா பதறிடுச்சு. அதுக்குமேல எனக்குத் தாங்கலை. அழுகை வெடிச்சு மாலை மாலையாய் கண்ணுதண்ணி கொட்டுச்சு.
“நான் பொறந்தப்போ அப்பா என்னைப்பாத்து.. என்னப்பாத்து....பொண்ணு பொறந்துடுச்சேன்னும், நான் கருப்பா இருக்கேன்னும் அழுதாராமேக்கா?  நெசமாவா?” -  அழுதுக்கிட்டே நான் கேட்டது அக்காவுக்கு சரியா புரிஞ்சுதோ புரியலையோன்னு சந்தேகமா இருந்துச்சு.
ஆனா புரிஞ்சிடுச்சு போல. “சீ.. லூஸூ.. இதுக்கா அழுவுற?”  ன்னுச்சு. நான் அழுதுக்கிட்டேயிருந்தேன்.
“அதெல்லாமொண்ணுமில்ல..அப்புடியெ
ல்லாம் அவரு அழுவல...! ஒனக்கு யாரு சொன்னா?”
“பாட்டி..!”
“கெழவி கட்டையில போக.. இப்படியா சின்னபுள்ள கிட்ட சொல்றது!”  பாட்டி இருந்த பக்கம் பார்த்து அக்கா கத்துச்சு.
”அதெல்லாம் ஒண்ணுமில்ல மீனுக்குட்டி! நீ அழுவாத.. அப்படியெல்லாம் அப்பா சொல்லலை. அழுவலை. கெழவி ஏதாவது சொல்லிருக்கும். அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு...சீ.. சீ. அழுவாத மீனு!” – அக்கா என்னை சமாதானப்படுத்துச்சு. ஆனா எனக்கு அழுகை நிக்காம கொட்டிச்சு.
“பொய் சொல்லாதேக்கா! நீதான் ஊருக்குப் போயிருந்தீல்ல.. நான் பொறந்தப்போ... ஒனக்கெப்படி தெரியும்..? போ..!” – நான் அழுதுக்கிட்டே இருந்தேன். அக்கா கைய பிசைஞ்சுது. என்ன செய்யுறதுன்னு அதுக்குப் புரியலை. “உங்கம்மா வரட்டும் மீனுக்குட்டி.  கேட்டுருவோம். “ என்றது.
“நானும் அது வரட்டும்னுதான் பாக்குறேன்.”
அக்கா என் கண்ணைத் தொடச்சு விட்டுச்சு..கொஞ்சம் அழுகை நின்னுச்சு எனக்கு.
அப்பா எப்டி அந்த மாதிரி சொல்லலாம்? இந்த கேள்வியே மண்டைக்குள்ள சுத்திக்கிட்டு இருந்துச்சு. அப்பா இதுவர என்கிட்ட கோவப்பட்டதேயில்ல. அத்தனை பாசம் எம்மேல. ரொம்ப பெருமை என்னப்பத்தி..
கிளாஸ்ல நாந்தான் முதல் ரேங்க். கார்டு கொண்டு வந்து குடுக்கையில அப்பா மூஞ்சில அத்தன சந்தோசம் தெரியும். “பாருடி! எம்புள்ள மொத ரேங்க் எடுத்திருக்கு” ன்னு அம்மாகிட்ட சொல்வார். “என் சாமர்த்தியம் என் பொண்ணுக்கும் அப்புடியே.. நான் தான் படிக்கலை. ஒன்ன படிக்கவச்சு பெரிய டாக்டராக்கணும். இதே மாரி நல்லா படிக்கணும் மீனுக்குட்டி.. என் ராசாத்தி...என்ன வேணும் ஒனக்கு.. சொல்லு.. அப்பா நாளைக்கி வாங்கிட்டு வாரேன். சொல்லு சொல்லு”  ம்பார்.
பேனா, பென்சில், நோட்டு இப்புடி அப்பா வாங்கிக்கொடுக்க ஏதுவா ஏதாச்சும் கேப்பேன். அடுத்த நாளு வாங்கிட்டு வருவாரு. இது ஒவ்வொரு பரீட்சைக்கும் நடக்கும்.
இதில்லாம, ஸ்கூல்ல நடக்குற பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டின்னு எல்லாத்துலயும் பரிசு வாங்கும்போதெல்லாம் அப்பாவுக்கு பெருமை தாங்காது. ஒரு தடவை தஞசாவூர் மாவட்ட லெவல்ல நடந்த ஒரு கட்டுரைப்போட்டியில கப் ஒண்ணு பரிசா வாங்கிட்டு வந்தப்ப அப்பாவோட சந்தோசமான மொகம் அந்த கப்போட பளபளப்புல இன்னும் பளீர்னு தெரிஞ்சது அப்படியே எனக்கு ஞாபகம் இருக்கு. அக்கம் பக்கத்துல இருக்குற ஒவ்வொரு குடிசைக்கும் போயி கப்பை காமிச்சிட்டு வந்தார். அடுத்த நாள் காலையில வேலைக்கு போகையில அந்தக் கப்பை எடுத்துக்கிட்டு போனார். அம்மா அதைப் பாத்துட்டு பதறிச்சி..”எங்கே கொண்டு போறீங்க?” ன்னு சத்தம் போட அப்பா நின்னு மொறைச்சார்
“சும்மா கிட.! எங்க மீனுக்குட்டி கப் வாங்கிருக்குன்னு மொதலாளி கிட்ட காமிக்கறதுக்குத்தான். அவருக்கும்தான் ஒரு புள்ள இருக்கான். ஒண்ணுத்துக்கும் ஒதவாத பயல். படிப்பே ஏறாது. தெனம் அவன் படிக்கலன்னு திட்டு வாங்குறத பாக்குறேன்ல.. நம்ம புள்ள குடிசையில கெடந்தாலும் எத்தனை தெறமை.! பெருமையா கொண்டு போயி காமிச்சுட்டு வரப்போறேன்.”  - சொல்லிட்டு அப்பா போயிட்டார்.
ராத்திரி அப்பா திரும்பி வரும்போது சீட்டியடிச்சுக்கிட்டே வந்தார்.
அம்மா “என்ன சீட்டியெல்லாம் பலமா இருக்கு?” ன்னு அப்பாகிட்ட கேட்டுச்சு.
“மொதலாளி கிட்ட போய் நான் கப்ப காமிச்சேன். அவரு என்கிட்ட மூஞ்சிய காமிச்சார்” ன்னு சொல்லிட்டு சிரிச்சாரு அப்பா. எனக்கு அப்பா அப்புடிப் பேசினதப் பாக்க சிரிப்பு வந்துச்சு
வந்து என்னை அப்படியே அலாக்கா தூக்கி ஒரு சுத்து சுத்தி கீழ விட்டார். “அந்தாளு மூஞ்சியில ஈயாடல. மனசுக்குள்ள நம்மகிட்ட வேலை பாக்குற நாயி... புள்ள கப்பு வாங்குனதை பெருமையா காமிக்குதுன்னு நெனச்சிருப்பாரு. எனக்கா தெரியாது இவரப் பத்தி.. அதுவரைக்கும் நல்லா பேசிக்கிட்டிருந்தவரு அதுக்குப்பின்னாடி நான் கெளம்புற வரையும் சிடுசிடுன்னு மூஞ்சியக் காமிச்சாரு. நான் மனசுக்குள்ள போடா இவனேன்னு நெனச்சுக்கிட்டேன்.. என்ன இருந்தாலும் இன்னைக்கு வீட்டுக்குப் போனோன அந்தப் பயலுக்கு டோஸ் வுளுந்திருக்கும். பாவம்! அவனும் சின்ன புள்ள.”  ன்னு அப்பா உச்சுக்கொட்டி பரிதாப்பட்டார்.
அன்னைக்கு ராத்திரி நெலா வெளிச்சத்துல சோறு திங்கையில அப்பா எனக்கு கதை சொன்னாரு. மூக்கறுத்தான் கதை. எனக்குப் பிடிச்ச கதை. நெறைய தடவை அப்பாவ அந்தக் கதைய சொல்லச்சொல்லி கேப்பேன். அப்பா கத சொலற அழகே தனிதான். கண்ண விரிச்சு வச்சுக்கிட்டு கையையும் காலையும் ஆட்டி அவரு கத சொல்றதப் பாக்க நல்லாருக்கும். அம்மா மட்டும் ”எப்பப்பாரு மூக்கறுத்தான் கதை தானாக்கும்”னு நொடிச்சிக்கிட்டு போவும்.
”ஒனக்கா சொல்றேன் நான். மீனுக்குட்டிக்குத்தான் சொல்றேன். எத்தினி தடவ சொன்னாலும் மீனுக்குட்டி கேக்கும். இல்ல மீனுக்குட்டி?”
“ஆமாம். நீ சொல்லுப்பா”  ன்னு சொன்னவொடனே வுட்ட எடத்திலேர்ந்து கரெக்டா ஆரம்பிச்சார் “அப்புறம் மூக்கறுத்தான் என்ன பண்ணாந்தெரியுமா? நமக்கு மட்டும் மூக்கில்லயே இந்த் ஊருல. மத்தவனுக்கெல்லாம் மூக்கு இருக்கே.. இவனுங்க நம்மள மட்டும் எப்பப்பரு இதச் சொல்லியே எடக்கு பண்ணிக்கிட்டுத் திரியுறானுங்களே.. இவனுங்களை ஏதாச்சும் பண்ணனும்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டான்.  என்ன மீனுக்குட்டி.. ம் கொட்ட மாட்டேங்குற? நா எப்படி கத சொல்றதாம்?”
“கொட்டுறேன்...கொட்டுறேன். ம்..ம்.. சொல்லு சொல்லு,”
அப்பா இன்னும் வேகமா கையையும் காலையும் ஆட்டி ஆட்டி கதை சொன்னார்.
“எனக்கு மட்டும் வானத்துல பார்வதியும் பரமசிவனும் தெரியுறாங்கன்னு மூக்கறுத்தான் மத்தவங்க கிட்ட சொன்னானாம்.  ஊர்க்காரனெல்லாம் அதெப்படி ஒனக்கு மட்டும் தெரியுறாங்கன்னு கேட்டாங்களாம். அதுக்கு அவன் என்னை மாதிரியே மூக்கறுத்துக்கிட்டு பாத்தாத்தான் தெரியும்னு சொன்னானாம். உடனே இந்த முட்டாப்பசங்க எல்லாரும் ஆளுக்கொரு கத்தியை எடுத்துக்கிட்டு ரெடியாய்ட்டாங்களாம். முதல்ல ஒருத்தன் மூக்கறுத்த உடனே இன்னொருத்தன் பார்வதியும் பரமசிவனும் தெரியுறாங்களான்னு கேட்டானாம். அவனுக்கு நெசமாவே தெரியல. ஆனா இந்தப் பயலுக நம்மள மதிக்க மாட்டானுங்களேன்னு நெனச்சு தெரியுதுன்னானாம். அவ்வளவுதான் ஒவ்வொருத்தனும் மூக்க அறுத்துக்கிட்டு வானத்தப் பார்த்தானாம். ஆனா யாருக்கும் எதுவுமே தெரியலியாம்.”
”ம்.. அப்பறம்ப்பா”
”ஆமாம். ஒனக்கும் இந்தக் கதை தெரியாத மாதிரியே தான் ஒவ்வொரு தடவையும் புதுசா அப்புறம் போடுவே. என்ன புள்ளயோ என்ன அப்பனோ” ன்னு மொறச்சுது அம்மா.
”சும்மாரு நீ.. அப்புறம் மீனுக்குட்டி....என்ன ஆச்சுன்னா.... ஊரே மூக்கறுந்து போச்சு. சொல்லிவச்ச மாதிரி எல்லா பயலும் வானத்துல பார்வதியும் பரமசிவனும் தெரியுறாங்கன்னு சொன்னானுங்களாம். மூக்கறுத்தானுக்கு இப்பத்தான் சந்தோசம். அப்பாடா...! ஊருல ஒரு பய இனிமே நம்மள மூக்கறுத்தான்னு கூப்புட முடியாதுன்னு நெனச்சி இடி கணக்கா சிரிச்சானாம. எப்புடி இருக்கு அப்பா சொன்ன கத...”
”நல்லாருக்குப்பா...நாளைக்கு வேற கத சொல்லு. இப்பவே யோசிச்சு வைப்பா” – சொல்லி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்து தூங்கிட்டேன் நான்.
அப்படியெல்லாம் கதை சொன்ன அப்பா.. கூலி வாங்குன ஒடனே எனக்கு முட்டாயி, பன்னு, ரொட்டி எல்லாம் வாங்கிட்டு வர்ற அப்பா அதெப்படி நான் பொறந்தப்போ அழுதிருப்பார். எனக்கு மனசு ஆறலை. ஏன் அழுதாரு? எதுக்கு அழுதாரு. அம்மா வரட்டும். கேக்கணும்.
அம்மா ஆறு மணிக்கு வந்தது. அம்மா கிட்ட போய் நின்னு கேட்டேன். அம்மா என்னை ஏற இறங்க பாத்துச்சு.
“போடீ.. ஒனக்கு வேற வேல இல்ல..”
“எனக்குத் தெரிஞ்சாகணும்..சொல்லு.. அப்பா அழுதாரா..”
“தே... சும்மா போ...அதெல்லாம் அழுவல...என்னத்துக்கு அழுவணும்? அதெல்லாம் அழுவல. ஒனக்கு யார் சொன்னா?  ..கெழவியா? அது சும்மா இருக்காதா வாய வச்சுக்கிட்டு...”
பாட்டிகிட்ட போய கத்திச்சு அம்மா. பாட்டி பதிலுக்கு ஏதோ சொன்னுச்சு. ஆனா காதுல விழலை. பாட்டி கிட்ட போனேன். அம்மா பாட்டியை மொறைச்சுக்கிட்டே திட்டிக்கிட்டு இருந்துச்சு. நான் போனோன நிப்பாட்டிட்டு வேகமா குடிசைக்கு வெளில போச்சு. நான் பாட்டி கிட்ட போய்க் கேட்டேன்.
“அப்பா ஏன் அழுதாருன்னு ஒனக்குத் தெரியுமா?”
“ஆங்....பொட்டப்புள்ளய பெத்துட்டா வாழ்க்க பூரா கஷ்டந்தான். அத வளத்து ஆளாக்கி சடங்கானா காரியம் செஞ்சு, அப்புறம் ஒருத்தன் கையில புடிச்சு கொடுக்குற வரை கஷ்டம் தான். ஒங்கப்பன் என்ன கலெக்டர் உத்தியோகமா பார்க்குறான்? ஒன்னய கஷ்டப்படாம கட்டிக்கொடுக்க. இப்பவே சேக்க ஆரம்பிச்சத்தான் உண்டு. இது புரியாம அவன் ஒங்கூட செல்லங்கொஞ்சிக்கிட்டுத் திரியுறான்.. ம்ஹும்...ஆம்பளப்புள்ள வேணும்னு நெனச்சான் ஒங்கப்பன். அதாச்சும் கடைசி காலத்துல க்ஞ்சி ஊத்தும். நீ கட்டிக்கிட்டு ஓடிருவ நாயி... அதுக்குத்தான் அழுதான் ஒங்கப்பன். வேணும்னா அவன் வந்தோன்ன கேளு. போ..” ன்னுச்சு பாட்டி
எனக்கு கோவம் வந்துச்சு
“ஏன் எங்கப்பாவுக்கு நான் கஞ்சி ஊத்த மாட்டேனா?.. நீ என்ன பாட்டி பேசுற?” ன்னேன் ரோஷமா..
”பொட்டச்சி பேசுறா பாரு. பாப்பமே ஒங்கப்பனுக்கு க்ஞ்சி ஊத்துறத..” – சிரித்தது பாட்டி.
பத்திக்கிட்டு வந்துச்சு எனக்கு. “நீ எப்படிப் பார்ப்பே. கெழவி.. ஒன்ன பொதச்ச எடத்துல புல்லு மொளச்சுருக்கும் அப்போ. பேசாம போ.. எங்கப்பாவைப் பாத்துக்க எனக்குத் தெரியும்”- நான் திட்டி வுட்டுட்டு வெளியே வந்துட்டேன்.
கெழவி சும்மானாச்சுக்கும் சொல்லாது. ஆனா கெழவி சொல்றதை நம்பவும் முடியல. நம்பாம இருக்கவும் முடியல. பாப்போம். அப்பா கிட்டயே கேட்டுற வேண்டியதுதான். இன்னைக்கு அப்பாவுக்கு கூலி வர்ற நாளுங்கறது நெனப்புல வந்து போச்சு. செல சமயம் பரோட்டா வாங்கிட்டு வருவார் அப்பா. பாப்போம் இன்னைக்கு. என்ன வாங்கிட்டு வந்தாலும் எதையும் தொடக்கூடாது. வந்தோன்ன கேக்கணும். எனக்கு இது சாவுற வரைக்கும் மறக்காது போலருக்கே. அய்யோ..! ஏன் இப்படி ஆவுது எனக்கு.. அப்பா ! சீக்கிரம் வாயேன்..
நேரம் தான் போச்சு. அப்பா வரலை. நான் குடிசைக்குள்ள போகாம வெளில ஒக்காந்துருந்தேன். கூடப்படிக்கிற பாலு சைக்கிள்ள போனான். என்னைப் பாத்த்தும் படக்குன்னு நின்னான்.
“என்ன மீனு? படிக்கலயா? வெளில ஒக்காந்துருக்கே!”
“படிக்கணும்...ஆமாம்.. படிச்சு என்ன பண்ணப்போறேன்..யாரையாது கட்டிக்கிட்டு எங்கேயோ போகப்போறேன்.. எங்கப்பாவையா கடைசி காலத்துல காப்பாத்தப் போறேன்? எல்லாம் படிக்கிறேன். நீ போ அந்தண்டை..” – அவனிடம் எரிஞ்சு விழுந்தேன்.
அவன் விநோதமாய் பாத்துக்கிட்டே சைக்கிளை மிதிச்சான்.
சே! நான் ஏன் பாலுகிட்ட அப்புடி சொன்னேன்.. எவனைக் கட்டிக்கிட்டாத்தான் என்ன?. கட்டிக்கிடாட்டாத்தான் என்ன..? அப்பாவுக்கு நாந்தான் க்ஞ்சி ஊத்துவேன்.  இந்தக் கெழவி கண்டபடி பேசி.. என்னை கெடுத்துடுச்சு. படிச்சு பெரியாளாகணும். அப்பா சொன்ன மாதிரி டாக்டராகணும்..
பாட புஸ்தகத்தை எடுத்து வச்சுட்டு ஒக்காந்தேன். ரெண்டு பாரா படிக்கிறதுக்குள்ள திரும்ப அப்பா அழுவது மனசுக்குள்ள ரத்னா டாக்கீஸ்ல படம் பார்க்குறது கணக்கா ஓடுது. படிக்க முடியல..எவ்ளோ கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாரு அப்பா. ஆனால் நான் பொறந்தப்ப ஏன் என்னப் புடிக்கல அவருக்கு..? ஏன் அழுதாரு? நெனக்க நெனக்க கண்ணுதண்ணி வந்துக்கிட்டேயிருந்துச்சு.
அம்மா சாப்பிடக் கூப்பிட்டுச்சு.. வேணாம்னுட்டேன். “ஏன் மீனுக்குட்டி”  ன்னுச்சு பாசமா. அதுக்கு கண்ணு க்லங்கியிருந்துச்சு..
“தோ பாரு மீனு! அப்பா அளுவலை அன்னிக்கு ஒன் மேல சத்தியமா அளுவல.. நீ இப்போ சாப்பிடு வா!”
அம்மா என் மேல் சத்தியம் செய்யுதே. நெசமா இருக்குமோ? அப்பா அழுவலையோ அன்னிக்கு? இந்தக் கெழவி பொய் சொல்லிருக்குமோ? மனசு கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு. ஆனாலும் அப்பா வாயால சொன்னாத்தான். அப்புறந்தான் சாப்புடணும். தீர்மானமா அம்மாகிட்ட சொல்லிட்டேன். அம்மா தலையில் கைவச்சு ஒக்காந்துது.
வெளியே சத்தம் கேட்ட்து. அப்பா தான் வர்றார்.
“மீனு.. மீனுக்குட்டி.. செல்லத்துக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு... கொத்து பரோட்டா..ஒனக்குப் புடிக்கும்ல...உடியா உடியா” – அப்பா பாசமா பக்கத்துல வந்தார்.
”வாசலுக்கு வா மீனுக்குட்டி.. அப்பா கத சொல்லுவனாம். நீ சாப்பிடுவியாம். ஓடியா” அப்பா சட்டையை கழட்டி வச்சுட்டு பனியனையும் கழட்டி வச்சுட்டு....லுங்கியோட வெளில வாசல்ல போய் ஒக்காந்தார். நான் பின்னாடியே போனேன். கேட்டுரலாமான்னு யோசிச்சுக்கிட்டே போனேன். பயமா இருந்தது. அப்பா என்ன பதில் சொல்லுவாரு? கெழவி சொன்ன மாதிரி சொல்லுவாரோ? இல்லை அம்மா சொன்ன மாதிரி அழுவலைன்னு சொல்வாரா? ம்....யோசிச்சுக்கிட்டே போய் அவர் முன்னாடி நின்னேன். அவரு கண்ணையே நல்லா உத்துப்பாத்துக் கேட்டேன்.
“நான் பொறந்தப்போ அழுதியாப்பா?”
அப்பா என்னையே பாத்தார். “யார் சொன்னா ஒனக்கு?”
“யாரோ..நீ பதில் சொல்லுப்பா!” பெரிய மனுஷி மாதிரி நான் அதட்டினேன். நான் அதட்டுன மாதிரி பேசினாலும் என் குரல் பதட்டமா இருந்துச்சு. கை நடுங்குச்சு.
அம்மா வந்து பக்கத்தில் நின்னுச்சு..”இந்தக் கெழவிதான் சும்மா இல்லாம புள்ள கிட்ட கண்டதையும் சொல்லி வச்சு மதியானத்துலேர்ந்து மாலை மாலையா அழுவுது புள்ள. பிரேமா சொல்லி, நாஞ்சொல்லி நம்பல..” – குறுக்க மறிச்சு “நீ பேசாதேம்மா.. நான் அப்பா கிட்ட பேசிக்கிறேன்” ன்னேன்.
அப்பா கிட்ட திரும்பி...கேட்டேன்.. “நான் பொறந்தப்ப அழுதியாப்பா?”
அப்பாவோட பதிலை காதால மட்டும் கேட்டாப்போதும்னு தோணுச்சு. கண்ணை இறுக்கி மூடிக்கிட்டேன். அப்பாகிட்டேர்ந்து பதிலே இல்ல. கண்ணத் தொறந்து திருப்பியும். “அழுதியா” ன்னு கேட்டுட்டு கண்ண மறுபடியும் இறுக்கி மூடிக்கிட்டேன்.
அப்பாவோட குரல் எனக்குக் கேட்டுச்சு..
“ஆமாம் மீனுக்குட்டி” ன்னார்.
என் கண்ணு தன்னால தொறந்துச்சு. கண்ணு அங்கெ இங்கே போகலை. மூடலை. அப்படியே அப்பாவப் பாத்துக்கிட்டே அழுதேன். வேகமா கத்தி அழுதேன். அழுதுக்கிட்டே கேட்டேன்
“பொட்டப்புள்ளயா பொறந்துட்டேனேன்னு அழுதியாப்பா? கருப்பா இருந்தேன்னு அழுதியாப்பா?”
ஒடனே அப்பா யோசிக்காம சிரிச்சுக்கிட்டே சொன்னார்
“ஆமாம். அளுதேன்.. பொறந்தது மீனுக்குட்டின்னு அப்போ எனக்கு தெரியாதே ராசாத்தி.. தெரிஞ்சிருந்தா அளுதிருக்க மாட்டேன்.”
சட்டுன்னு என் அழுகை நின்னுடுச்சு. ஓடிப்போய் அப்பாவ கட்டிப்பிடிச்சு முத்தமா கொடுத்தேன். கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டிருந்த அம்மாவும் கெழவியும் கண்ணத் தொடச்சுக்கிட்டதையும் ஓரக்கண்ணால பாத்தேன்.

Wednesday, February 22, 2012

மின்மினி வெளிச்சம்

ராசுவுக்கு அன்றைக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. பையை எடுத்துக் கொண்டு, போகலாமா... வேண்டாமா என்கிற யோசனையோடு ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்தான். ஒரு குச்சி ஐஸ் வண்டி போனது. நிறுத்தி ஐஸ் வாங்கித் தின்றான். சப்பிச் சப்பி வெறும் குச்சியை நக்கிக்கொண்டே பள்ளிக்கூடத்தைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டான். காம்பவுண்ட் சுவர் அருகே வந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தவாறே உள்ளே நுழைந்தான்.

 வகுப்பில் வாத்தியார் பாடத்தைத் தொடங்கி இருந்தார். வாசல் அருகே நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தார்.

''வாங்க சார்... நீங்க மட்டும் ஏன் லேட்டு?' - அவர் குரலில் கேலி தொனித்தது.

இவன் மௌனமாக நின்றான். 'கேக்குறேன்ல... சொல்லு!' என்று அதட்டினார். பள்ளிக்கூடம் போகப் பிடிக்காமல் அன்ன நடை போட்டு, யோசித்து நின்று நின்று வந்ததை எப்படி அவரிடம் சொல்ல முடியும்? விழித்தான் ராசு.

''என்ன திருட்டு முழி முழிக்குற? பதில் சொல்லு... படிக்கிறதைத் தவிர, மத்தது எல்லாம் செய்யப் புடிக்கும் உனக்கு. பாட்டுப் பாடுறது, ஆட்டம் போடுறதுன்னா போதும்... மொதப் பரிசு. படிக்க மட்டும் வலிக்குதோ? பள்ளிக்கூடத்துக்கு நேரத்துக்கு வரணும்னு தெரியாதா?'' - வாத்தியார் அதட்ட, தன் சின்னக் கண்களை உருட்டி உருட்டி அவரையே பார்த்தான் ராசு.

கையில் இருந்த பிரம்பால் அவனை முழங்காலுக்குக் கீழே ஒரு அடி அடிக்க... சுளீரென்று வலித்தது. இரண்டு கால்களையும் தரையில் பதிக்காமல் வெயிலின் சூடு தாங்காமல் தார் சாலையில் நடப்பவன்போலத் துடித்துக் குதித்தான். பிரம்பு பட்ட இடத்தில் எல்லாம் சிவந்து தடித்துவிட்டது. வலியில் துடித்தவனுக்கு வாத்தியார் மேல் கோபம் வந்தது.

கூடப் படிக்கும் அத்தனை பேரையும் பார்த்தான் ராசு. எல்லோரும் பேன்ட் அணிந்து இருந்தார்கள். இவன் மட்டும்தான் அரை டவுசர். அவர்களைப் போல பேன்ட் சட்டை போட்டு இருந்தாலாவது பரவாயில்லை. நேரடியாகக் காலில் அடிபடாது. இவனும் அப்பனிடம் பல முறை பேன்ட் போட வேண்டும் என்று கேட்டுவிட்டான்.

'ஒன் ஒசரத்துக்கு இப்ப அந்த பேன்ட்டை மாட்டிக்கிட்டுத் திரியணுமாக்கும்? எல்லாம் வளந்த பின்னாடி பார்த்துக்கலாம்'' என்று அவன் கேட்கும்போது எல்லாம் தட்டிக் கழித்துவிடுவான் அப்பன். காசு பணத்துக்குப் பயந்துதான் அவ்வாறு பொய் சொல்கிறான் என்பது ராசுவுக்குத் தெரியாது. நிஜமாகவே தான் வளராததால்தான் அப்பன் பேன்ட் எடுத்துக்கொடுக்கவில்லை என்று நம்பினான். வளராத தன் கால்களின் மீது அவனுக்குக் கடுமையான அதிருப்தி இருந்தது. வளராததற்கு முழு உடம்பின் மீதுகூட அவனுக்குக் கோபம் இல்லை. தன் கால்களின் மீதுதான் முழுக் கோபமும். அது மட்டும்தான் மனிதர்களை உயரமாகக் காண்பிக்கிறது என்பது அவனுடைய திடமான எண்ணம். இடுப்புக்கு மேலே இருக்கும் உடல் பகுதிக்கும் உயரத்துக்கும் சம்பந்தம் இருக்கும் என்று அவன் கற்பனை கூடச் செய்யவில்லை.

ஒருமுறை ஊரில் கூத்துக் கட்டுவதற்குப் பக்கத்து ஊரில் இருந்து வந்திருந்த மாரியின் கட்டைக் காலை எடுத்து ஒளித்துவைத்து விட்டான். அதைக் கட்டிக்கொண்டு நடந்தால் தான் உயரமாகிவிடலாம் என்பது ராசுவின் எண்ணம். ஆனால், இவன் கெட்ட நேரம், கட்டைக் காலை எடுத்துக்கொண்டு வரும்போது மாரியின் ஆட்டக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண் பார்த்துவிட்டாள். அவள் மாரியிடம் சொல்லிவிட, அவன் தேடி வந்தபோது, இவன் மட்டும் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அதைக் கட்டிக்கொண்டு நடந்து பார்த்து, தடுக்கித் தடுக்கி விழுந்துகொண்டு இருந்தான். மாரியைப் பார்த்ததும் ராசுவுக்குக் கட்டைக் காலை நிஜக் காலோடு வைத்து கயிறுகொண்டு கட்டி, அந்த நொடி வரை ஆதரவு தந்த சின்னத்தம்பி ஓடிவிட்டான். இவன் தனியே ஓட முடியா மல், காலும் களவுமாகப் பிடிபட்டான். சின்னப் பையன் என்பதால், எதுவும் பிரச்னை பண்ணாமல் அவனை அனுப்பி வைத்தான் மாரி. ஆனால், ராசுவுக்கு எண்ணம் நிறைவேறாமல் போனதில் ஏமாற்றமாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து மாரி வந்திருந்தால், கட்டைக் காலோடு குளத்துக்கு அருகில் நின்று தெளிந்த நீர்ப்பரப்பில் தன் உயரமான உருவத்தைப் பார்த்து மகிழத் திட்டம் போட்டு இருந்தான் ராசு. எல்லாம் கெட்டுப்போனது.

அன்று இரவு தூக்கம் வரவில்லை. உயரமாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே அவனுடைய யோசனையாக இருந்தது. வேறு எதுவும் மண்டைக்குள் ஏறவில்லை. அதையே முப்பொழுதும் யோசித்தவண்ணம் இருந்தான். உயரமான வர்களைப் பார்த்தால் கோபம் வந்தது. பொறாமையாகவும் இருந்தது. வகுப்பில் பெண் பிள்ளைகள் ஏதாவது பேசிச் சிரிக்கும்போது தன் உயரத்தைத்தான் கிண்டல் செய்கிறார்களோ என்று பதற்றப்பட்டான். என்றைக்காவது சினிமாவுக்குப் போனால், தனக்கு முன்னால் உயரமாக யாராவது அமர்ந்து திரையை மறைப்பார் கள். இரண்டு தலைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில்தான் இவன் பார்த்த அத்தனை சினிமாக்களும் இருந்தன. படத்தை நினைக்கும்போதே இரண்டு தலைகளுக்கு இடையேதான் காட்சியே மனக்கண்ணில் தோன்றும்.

உயரம் குறைவாக இருப்பதால், வகுப்பில் இவன்தான் முதல் வரிசையில் இருப்பான். வாத்தியார் பாடம் நடத்தும்போது, தூக்கம் வந்தால் கொட்டாவிகூட விட முடியாது. பிரம்பால் விளாசுவார் வாத்தியார். ஆனால், உயரம் காரணமாகவே மாப்பிள்ளை பெஞ்சுக் குப் போய், பின்னால் அமர்ந்திருக்கும் இவன் நண்பர்கள் பண்ணும் லூட்டிகளுக்கு அளவே இல்லாமல் இருந்தது. அடுத்தவர் டிபன் பாக்ஸில் இருந்து சாப்பாடு எடுத்துத் தின்னும் அளவுக்கு அவர்களுக்குச் சுதந்திரம் இருந்தது. இவனுக்கோ கண்களைச் சிமிட்டக்கூட முடியாது. அதோடு, வாத்தியார் இவனைப் பார்த்தேதான் பாடம் நடத்துவார். ச்சே! இந்த உயரம் இப்படியா பழிவாங்கும்?

கூடப் படிக்கும் பெண்கள் இவன் உயரம் காரணமாகவே இவனைத் தம்பிபோலப் பாவித்துப் பேசும்போது, உச்சக்கட்ட எரிச்சலில் பொங்குவான். ஆனாலும், எதையும் வெளிக்காட்டாமல் பேசுவான். பள்ளியில் சுற்றுச்சுவர் ஓரத்தில் உள்ள மாமரத்தில் மாங்காய் பறித்துக் கொடுத்தே பெண் பிள்ளைகளின் நட்பைப் பெற்று இருந்தனர் பல மாணவர்கள். இவன் உயரம் குறைவு என்பதால், அந்த வாய்ப்பும் பறிபோனது.

பள்ளியில் ஆண்டு விழா நாடகத்தில் எப்போதும் வேலைக்காரன் பாத்திரம்தான் கொடுத்தார்கள். ''ஏண்டா, வேலைக்காரங்க உயரமா இருக்க மாட்டாங்களா?' என்று இவன் புலம்புவது ஒவ்வோர் ஆண்டும் வாடிக்கை. நாடகத்தில் வேலைக்காரன் வேடம் இல்லை என்றால், அவனுக்கு அந்த ஆண்டு நடிக்கும் வாய்ப்பு பறிபோகும்.

வாத்தியாரிடம் அடிவாங்கும்போது, உடம்பில் படாமல் இருப்பதற்காகவாவது பேன்ட் போடும் அளவு வளர ஏதாவது செய்தாக வேண்டும். இவன் உயரம் காரணமாக வகுப்பறை வன் முறைகள் எல்லாம் இவனுக்கே நடப்பது போன்றதொரு உணர்வில் நொந்துபோனான்.

கனவுகள்கூட இவன் உயரமாகி பேன்ட் போடுவதுபோலவே வந்தன. விழித்துப் பார்த்து ஏமாற்றத்தில் முகம் சுண்டிப்போகும் ராசுவுக்கு. பத்தாததுக்கு தெருப் பையன்கள் இவனை அவ்வபோது 'கட்டையா’ என்று அழைத்துக் கடுப்பேற்றினார்கள்.

இவனுக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்கப் பிடிக்கும். சுருளி வீட்டுக்குப் போய்ப் பார்ப்பான். ஒரு நாள் சுருளி வீட்டுக்குப் போனபோது, ஏதோ ஒரு சேனலில் 'அபூர்வ சகோதரர்கள்’ படம் ஓடிக்கொண்டு இருந்தது. குள்ள அப்புவைப் பார்க்க இவனுக்குப் பிடித்து இருந்தது. ''கமல் குள்ளமா... அழகா... சூப்பரால்ல?'' என்றான்.

சுருளியோ, ''டேய்... அப்புவைவிட ராஜாவைப் பாருடா அழகு... ராஜா கைய வச்சா... அது ராங்காப் போனதில்ல'' என்று சீட்டியடித்தான். ராசுவுக்கு முகம் தொங்கிப்போனது. இடையிடையே வரும் விளம்பரங்களை ரசித்துப் பார்த்தான். காம்ப்ளான் விளம்பரம் வந்தது. இந்த காம்ப்ளான் விளம்பரத்தை மட்டும் எப்போதும் ஆசையாகப் பார்ப்பான். ஒரு மரத்தைப் பிடித்து ஒரு பையன் தொங்கிக்கொண்டு இருப்பான். இப்படி எல்லாம் தொங்கினால் உயரமாக முடியாது என்று சொல்லி, ஒரு பணக்கார அம்மா பிள்ளைகளுக்கு காம்ப்ளானைப் பாலில் கலக்கிக் கொடுப்பாள். பிள்ளைகள் அதனால் கிடுகிடுவென்று வளருவதாக வரும் விளம்பரம் அது.

ஒருவேளை மரத்தைப் பிடித்துத் தொங்கினால் உயரமாகலாமோ? ராசு சிந்தித்து இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக யாரும் பார்க்காத நேரத்தில் மரத்தில் கிளையைப் பிடித்துத் தொங்கினான். மூன்றாவது நாள் தொங்கும்போது, கூடப் படிக்கும் பையன்கள் பார்த்துவிட்டுச் சிரிக்க, ''விளம்பரத்துல போட்டாங்க... அதான்' என்றான்.

''என்ன விளம்பரம்?''

''காம்ப்ளான் விளம்பரம்.''

''அதான்... விளம்பரத்துலயே வருதே... தொங்கினா ஒயரமாக முடியாது. அதனால காம்ப்ளான் குடிங்கனு. அப்புறமும் தொங்கிக்கிட்டு இருக்கே. லூஸாடா நீ' - மற்றவர்கள் சிரிக்க... ராசுவின் முகம் சுண்டிப்போனது.

''பள்ளிக்கூடத்துக்குப் போனவுடன் பெரிய கிளாஸ் அண்ணனுங்ககிட்ட கேக்கணும்.'

மறு நாள் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தவுடன் பன்னிரண்டாம் வகுப்புக்கு ஓடினான்.

''அண்ணே! காம்ப்ளான் குடிச்சா ஒயரமாகலாமா? விளம்பரத்துல காட்டுறாங்க.''

''அடேய்... விளம்பரத்துக்காக ஏதாச்சும் போடுவான். அதைப் பார்த்து ஏமாந்துடாதே!'- அண்ணன்கள் எச்சரித்தார்கள். இவனுக்கு என்னவோ உலகமே இவன் உயரமாகிவிடக் கூடாது என்று சதி செய்வதாகத் தோன்றியது. 'சும்மாவா டி.வி-ல காட்டுவான்? ஏன் இந்த அண்ணனுங்க இப்படிச் சொல்றாங்க? யாருக்கும் நான் வளர்றது புடிக்கலையா?’- மனதுக்குள் கேள்விகளைத் தேக்கியவாறே குழம்பினான்.

எப்படியாவது உயரமாகிவிட வேண்டும் என்பது அவன் லட்சியமாக இருந்தது. சினிமாவில் வரும் பெண்கள் போடுவது போல் ஹைஹீல்ஸ் செருப்புகள் வாங்கிக்கொள்ளலாமா? வேண்டாம். ஹவாய் செருப்புக்கே இங்கே கஷ்டம்தான். மனதை மாற்றிக்கொண்டான். இவன் போடும் செருப்பை இவன் வகுப்பில் படிக்கும் ரமேஷ், ''என்னடா... பாத்ரூம் செப்பலைப் போட்டுட்டு வந்திருக்கே?'' என்று கேட்டான். வீட்டில் பாத்ரூமோ, பாத் ரூமுக்கு என்று தனியாகச் செருப்போ இல்லாத ராசுவுக்கு அவன் கேள்வி ஒன்றும் புரியவில்லை.

அம்மாவிடம் ஒரு நாள் கேட்டான், 'நான் ஏன் குள்ளமா இருக்கேன்?'

அம்மா இவனைப் பார்த்துச் சொன்னாள் 'யார்றா சொன்னது? நீ ஒசரம்தான்'' என்றாள். அம்மா தன்னைச் சமாதானப்படுத்தத்தான் இப்படிச் சொல்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டான். அரை மணி நேரத்தில் மேலே உள்ள அடுக்கில் இருந்து எதையோ எடுப்பதற்கு அம்மா இவனைவிட உயரமான இவன் தங்கையைக் கூப்பிடும்போது இவன் கேட்டான்.

'நான் ஒசரம்னா என்னைக் கூப்பிட வேண்டியதுதானே? ஏன் அவளக் கூப்பிடுறே? சும்மா பேச்சுக்கு எதையாவது சொல்றதே ஒனக்கு வேலையாப்போச்சு!' - இவன் கோபத்தில் கூவினான். அம்மா எதுவும் பேசாமல் வெளியே சென்றாள்.

எரிச்சல் வந்தது. சுருளி வீட்டுக்குப் போனான். அங்கே தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. போன இரண்டாவது நிமிடத்தில் அந்த மரத்தைப் பிடித்துத் தொங்கும் விளம்பரம் வந்தது. முகத்தைத் திருப்பிக்கொண்டான். இரண்டு பாடல்கள் போன பின்னால், குள்ள அப்பு வந்து 'ஒன்ன நெனச்சே பாட்டுப் படிச்சேன்' என்று சோகமாகப் பாட, இவன் கிளம்பி வந்துவிட்டான். ஓவென்று அழ வேண்டும் போல் இருந்தது. கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டு வீட்டுக்கு வந்து படுத்துவிட்டான்.

காலையில் பள்ளி அசெம்ப்ளியில் வந்து நின்றான். வழக்கமாக வாசிக்கப்படும் திருக்குறள் எல்லாம் வாசித்து முடித்த பின் தலைமையாசிரியர் ஒரு அட்டையோடு வந்து மைக் முன்னால் நின்றார். ஒரு மாதத்துக்கு முன் ஒரு அமைப்பு நடத்திய கட்டுரைப் போட்டிக்கான முடிவை இன்றைக்கு அசெம்ப்ளியில் அறிவிப்பார்கள் என்பது அப்போதுதான் அவன் நினைவுக்கு வந்தது. தலைமை ஆசிரியர் முதல் பரிசுக்கு இவன் பெயரை வாசித்தபோது இவனுக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. மேடை ஏறி தலைமை ஆசிரியருக்கு அருகில் சென்றான். துணி போட்டுச் சுற்றி வைத்திருந்த கோப்பையை எடுத்து அவனிடம் அளித்தார். வாங்கிக்கொண்டு திரும்பிக் கீழே இறங்க எத்தனித்தவனை நிறுத்திய தலைமை ஆசிரியர், ஓர் உறையை எடுத்துப் பிரித்து அவனிடம் நீட்டினார். அவர் கைகளில் இரண்டு 500 ரூபாய்த் தாள்கள். இவனுக்கு நம்ப முடியவில்லை. வெறும் சான்றிதழ், கோப்பை, தட்டு, டம்ளர் என்று மட்டுமே பரிசுகள் பெற்றிருக்கும் அவனுக்கு, இந்த 1,000 ரூபாயை நம்ப முடியவில்லை.

'எனக்கா சார்?' என்றான்.

'உனக்குத்தான். நீதானே கட்டுரை எழுதினே. இல்ல... மண்டபத்துல யாராச்சும் எழுதிக்குடுத்ததை எடுத்துட்டு வந்து குடுத்தியா?' என்றார் சிரிப்புடன்.

'இல்ல சார்... நான்தான் எழுதினேன்' என அவசரமாகக் கை நீட்டினான். கூட்டம் சிரித்தது. அவனது முதுகில் தட்டிக்கொடுத்தவாறே அவனை லேசாக அணைத்துக் கொண்டார் அவர். இவனுக்குப் பெருமை தாளவில்லை. அந்த இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களையும் பத்திரமாக சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான். மேடையை விட்டு இறங்கப்போனவனை மீண்டும் அழைத்து, தலைமை ஆசிரியர் கோப்பையை நான்கு புறமும் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும்படி உயர்த்திக் காட்டச் சொன்னார். இவன் தன் தலைக்கு மேலே கோப்பையைத் தூக்கிக் காட்டினான். நிறைய மாணவர்கள் சரியாகத் தெரியா மல் எக்கி எக்கிப் பார்த்தனர். இவனை நெருங்கி வந்த தலைமை ஆசிரியர் கோப்பையை வாங்கித் தனது தலைக்கு மேல் தூக்கிக் காண்பித்தார். இவனுக்கு முகம் சுண்டிப்போனது. பரிசு வாங்கிய சந்தோஷத்தைவிட, தனது உயரக் குறைவு அத்தனை பேர் முன்னிலையில் வெளிப்பட்டதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வகுப்பில் அனைவரும் வந்து இவனைப் பாராட்டிக் கை குலுக்கினாலும், இவன் முகம் மட்டும் வாடியே இருந்தது.

அன்று மாலை அவன் வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மாவிடம் சென்று புத்தகப் பைக்குள் இருந்து அதை எடுத்து அம்மாவிடம் கொடுத்தான்.

'இதை என்னடா ராசு பண்ணணும்?' என்றாள் அம்மா, கையில் வாங்கிய அந்தப் புத்தம் புதிய காம்ப்ளான் பாட்டிலைப் புரியாமல் பார்த்தவாறே!

Tuesday, January 31, 2012

விட்டு விடுதலையாகி..

கடிகாரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் கவிதா. நொடி முள் நகர்வதையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. சுதா இன்னும் வரவில்லை. பசி வேறு தாங்கவில்லை. வயிற்றை ஒரு கையால் தடவிக்கொண்டே கொஞ்சம் பொறுத்துக்கோ! சுதா வந்துரட்டும் என்று வயிறோடு பேசினாள். வயிறோ பலவித சப்தங்களை எழுப்பி தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.

ஏதாவது நொறுக்குத்தீனி அல்லது வாழைப்பழம் இருக்கிறதா என்று அறைக்குப்போய் பார்த்தாள். அறைக்குள்ளே  காலையில் ஐம்பது பைசா சில்லறையில்லாமல் இல்லாததால் பக்கத்துக் கடைப்பையன் கொடுத்த ஒரே ஒரு ஹால்ஸ் மிட்டாய் மட்டுமே தேடியதில் தட்டுப்பட்டது.

மஞ்சு கட்டிலில் அமர்ந்து ஷிட்னி ஷெல்டன் நாவலை வாசித்துக்கொண்டிருந்தாள்.

மஞ்சு! பழம் வச்சிருக்கியா?

ஒண்ணுதாண்டி வச்சிருந்தேன். இப்போதான் அதையும் சாப்பிட்டேன். முன்னமே கேட்டிருக்கலாமே. ஷேர் பண்ணியிருக்கலாமே

சரி விடு! இந்த சுதா பாரேன்..தினமும் நைட் லேட்டா வர்றா. எனக்கு பசி தாங்க மாட்டேங்குது.

நீ எதுக்கு அவளுக்காக வெயிட் பண்றே? நீ பாட்டுக்கு சாப்பிடவேண்டியதுதானே? 8 மணிக்கு வாங்கி வைக்கிற சாப்பாட்டை தினமும் பத்தரை பதினோரு மணிக்கு சாப்பிட்டா ஆறி அவலா போயிடாதா? நீ வெயிட் பண்ணுவேன்னு அவளுக்குக் கொஞ்சமாவது பொறுப்பிருக்கா?. தினமும் லேட்டாத்தான் வர்றா. ஹாஸ்டல்ல பத்துமணிக்கு கேட் மூடிடுவாங்கன்னு தெரிஞ்சும் ஆடி அசைஞ்சு வர்றா. தினம் வார்டன் ஆண்ட்டி கிட்ட திட்டும் வாங்குறா. அப்படி எங்கத்தான் போயிட்டு வர்றா?

மஞ்சுவுக்கு சொல்லும்போதே கோபம் கொப்பளித்தது. சிவந்த அவளது கன்னங்கள் மேலும் சிவந்துபோயின. அவ சரியில்ல கவிதா. நீ கேட்க மாட்டேங்குற! என்றாள்

அவ ராஜ் கூட ஆன்லைன்ல சாட் பண்ணிட்டு வர்றா. நம்ம என்ன சொல்ல? அவளும்தான் என்ன செய்வா? அவன் எங்கேயோ இருக்கான். இவ இங்கே இருக்கா? எப்படித்தான் பேசிப்பாங்க பின்னே. அதனால்தான் நான் ஒண்ணும் சொல்றதில்ல.- கவிதா பெருமூச்சு விட்டாள்.

அப்போ காத்துக்கிட...! என்கிட்ட வந்து பசிக்குதுன்னு புலம்புனே...மகளே கொன்னுடுவேன்..

கவிதா அறையை விட்டு வெளியே வந்து ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சி சேனலை மாற்றிக்கொண்டே வந்தவள் பிடித்த பாட்டு வர கொஞ்சம் ஒலியளவைக் கூட்டினாள்.

கேன் யூ ப்ளீஸ் ரெட்யூஸ் வால்யூம் ப்ளீஸ்?
- ஏதோ ஒரு அறைக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்க, இவளுக்கு எரிச்சல் வந்தது. பட்டென்று டிவியை அணைத்தாள்.

இதே எழவு எப்பப்பார்த்தாலும் இவளுகளோட.. இவளுகளுக்கு தூக்கம் வந்துரும் 9 மணிக்கெல்லாம். இழுத்துப்போர்த்திட்டு படுத்துருவாளுக. அதுக்கு மத்தவங்களும் ஒண்ணும் பண்ணக்கூடாது..சே..! என்ன ஜென்மங்களோ? ஒரு பிடிச்ச பாட்டை நிம்மதியா கேட்க முடியுதா? இந்த டிவில பத்து மணிக்கு மேலதான் பிடிச்ச பாட்டா வேற போட்டுத்தொலைப்பானுங்க. - மனசுக்குள் திட்டியவாறே மணியையும் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள். பக்கத்து அறை நிர்மலா எட்டிப்பார்த்தாள்.

நல்ல பாட்டு பாடுச்சே! ஏன் நிப்பாட்டுனே கவிதா?

நானெங்கே நிப்பாட்டுனேன். எவளோ நிப்பாட்டச் சொன்னா. நிப்பாட்டுனேன். நீ வேற கடுப்பைக் கிளப்பாதே! போய்த் தூங்கு போ- எரிந்து விழுந்தாள் கவிதா..

லூஸாடி நீ? எவ நிப்பாட்ட சொன்னது?

தேவி குரல் மாதிரி இருந்துச்சு

இங்க கொண்டாங்குறேன்..ரிமோட்டைக் குடு.. பாய்ந்து வந்து கவிதாவின் கையிலிருந்த ரிமோட்டைப் பிடுங்கி டிவியை ஆன் செய்தாள் நிர்மலா. என்ன சத்தம் இந்த நேரம்? பாடிக்கொண்டிருந்தது.

என்ன அருமையான பாட்டு! ரசனை கெட்ட முண்டங்க.. - நிர்மலா திட்டிக்கொண்டே ரிமோட்டை முடுக்க, எஸ்.பி.பியின் குரல் பெரிதாக ஒலிக்கத் தொடங்கியது.

மீண்டும் கேன் யூ ப்ளீஸ் ரெட்யூஸ் தெ வால்யூம்? என்று அசரீரி ஒலித்தது.

முடியாது. ஐயம் ஸாரி. எனக்கு இந்தப் பாட்டு பிடிக்கும். பார்க்கணும். நிர்மலா விடைத்துக்கொண்டு சொன்னாள். தேவி அறையிலிருந்து வெளியே வந்தாள். ப்ளீஸ். திஸ் ஈஸ் டூ மச். வால்யூம் ரெட்யூஸ் பண்ணுங்க ரெண்டுபேரும் என்றாள்.

முடியாது! இந்தப் பாட்டு முடிஞ்சாத்தான் என்றாள் நிர்மலா. மஞ்சு அமைதியாய் உள்ளிருந்து ஷிட்னி ஷெல்டனிலிருந்து தலையை எடுக்காமல் காதுகளை மட்டும் தீட்டி வைத்துக்கொண்டாள். கவிதா கலவரமாய் பார்த்தாள். நிம்மி! சண்டை போடாதே! விட்டுரு. எத்தனை தடவை ‘என்ன சத்தம் இந்த நேரம்’ கேட்டிருப்போம். இன்னிக்கு விட்டுக்குடு. என்றாள் கவிதா

போடீ இவளே! என்று அழிச்சாட்டியமாய் நின்ற நிர்மலா பாட்டு முடிந்தவுடன் தான் ஒலியளவைக் குறைத்தாள். கவிதா மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தேமுக்கால். சுதா வரவில்லை இன்னும். என்னதாள் பேசுவாள் ராஜூவிடம்?. இப்படி பேசுகிறாளே? பிரவுஸிங் செண்டரே கதியென்று கிடக்கிறாள். இப்படி  நினைத்துக்கொண்டிருந்தபோதே அழைப்பு மணி ஒலிக்க சென்று கதவைத் திறந்தாள். சுதாதான். சாப்டியாடி? என்றாள் நுழைந்தவுடன்.

இல்லை. உனக்காகத்தான் வெயிட்டிங்

அச்சச்சோ..! சரி வா! சாப்பிடுவோம்

சாப்பாட்டை எடுத்து வந்து அமர்ந்தாள் கவிதா. மஞ்சு உள்ளிருந்து கேட்டாள்.. என்ன பிரிட்ஜ்ல வச்சது மாதிரி ஜில்லுன்னு ஆயிடுச்சா?

இருவரும் பதில் சொல்லாமல் சாப்பிட்டார்கள். மஞ்சு உள்ளிருந்து கேட்டாள். சுதா! தினமும் உன்னால இவ சாப்பிடாம பட்டினி கிடக்கிறா? கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா? சுதா பதிலேதும் சொல்லவில்லை. அறைக்குள் நுழைந்து மின்விளக்கை அணைத்து உடை மாற்றத்தொடங்கினாள்.

படிக்கிறேன்ல..நீ பாட்டுக்கு லைட் ஆஃப் பண்ணினா என்ன அர்த்தம்

டிரஸ் மாத்துறது தெரியலையா?

கவிதாவுக்கு இதற்கொரு சண்டை வந்துவிடுமோ என்று பயமாய் இருந்தது. இந்த ஹாஸ்டலில் எடுத்ததற்கெல்லாம் சண்டையாய்த்தான் கிடக்கிறது. காலையில் எழுந்து குளிக்கப் போகையில் நான் தான் முன்னாடியே பக்கெட் வைத்தேன் என்று சண்டை. டாய்லெட் போய்விட்டு சரியாய் பிளஷ் பண்ணவில்லை என்று ஒரு சண்டை. தலையை சீவி முடியை அறைக்குள்ளேயே போட்டுவிடுவதற்கு, சாப்பாட்டுக்கு கியூவில் நிற்கையில், டிவி பார்க்கையில் சேனலுக்கு, தூக்கம் வந்தால் லைட்டை ஆஃப் பண்ணச்சொல்வதற்கு, கும்பலாக அமர்ந்து பேசினால் வரும் ஹோவென்ற சிரிப்புக்கூச்சலுக்கு என்று எல்லாவற்றுக்கும் சண்டைதான்.

தொலைபேசி மணி ஒலிக்க, எடுத்தாள் கவிதா. வார்டனின் குரல். கவிதா! சுதாவுக்கு கால். மணி பத்தேமுக்கால். பத்து மணிக்கு மேல கால் வரக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? சுதா கிட்ட சொல்லு. சரியா? என்றாள் வார்டன் அதட்டலாக.

சுதா வந்து ரிசீவரை வாங்கினாள். ம்..சாப்பிட்டுட்டேன் ராஜூ. நீ...?.....ம்....சரி...சரி...டேக் கேர்...

கவிதா அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். இப்பத்தானே சாட்ல பேசிட்டு வர்றே? அப்புறமென்ன திரும்ப கால்? ஆண்ட்டி வேற கன்னாப்பின்னான்னு திட்டுது. மொபைல்ல கூப்பிட்டாத்தன் என்ன?

இல்ல கவிதா! பிரான்ஸ்லேர்ந்து இங்கே லேண்ட்லைனுக்குப் பேசினா ஃப்ரீ. மொபைலுக்குப் பேசினால் பைசா அதிகம். அதான் ராஜூ லேண்ட்லைனுக்கு பண்றான். சரி விடு! எல்லாம் இன்னும் நாலு நாள் தானே? நான் தான் பிரான்ஸ் போயிடுவேன்ல என்றாள்.

கவிதாவுக்கு சட்டென்று முகம் வாடியது. சுதா போகப்போகிறாள். ராஜூ இருக்கும் பிரான்ஸுக்கே போகப்போகிறாள். எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன. ராஜூ பிரான்ஸ்  போவதற்கு முன் சுதாவை பதிவுத் திருமணம் செய்துவிட்டுத்தான் போனான். ஹாஸ்டலில் கவிதாவைத்தவிர யாருக்கும் தெரியாது. இவள் தான் சுதா தரப்பில் சாட்சிக்கையெழுத்து போட்டாள். பரம ரகசியமாய் இருவரும் இதை வைத்திருந்தனர். ஒருத்திக்குத் தெரிந்தாலும் அவ்வளவுதான். ஏனோ திடீரென மனம் கனத்துப்போனது கவிதாவுக்கு.

நீ போயிட்டா நான் என்ன பண்ணுவேன் சுதா?

சுதா சிரித்தாள். கொஞ்ச நாள் கஷ்டப்படுவே..அப்புறம் போகப்போக வேற எவளாவது ஹாஸ்டலுக்கு புதுசா வருவா. அவ பிரண்டானவுடன் என்னை மறந்துடுவே! என்றாள். சுதா கவிதாவிடம் ஏன் அப்படி ஒட்டிக்கொண்டாள்? இருவருக்குமே தெரியாது. அவள் ஹாஸ்டலில் சேர்ந்து ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. ஆனால் நெடுநாள் பழகியவள் போல் கவிதாவிடம் எல்லா விஷயஙக்ளையும் சொன்னாள். ராஜுவை காதலிக்கும் விவரம் தெரிந்து அப்பா அடித்தது முதல், அம்மா அவளை இரண்டு செட் துணிகளோடு எங்காவது அவனோடு போய் பிழைத்துக்கொள் என்றதையும், அண்ணன் - அண்ணி அவளை கரித்துக்கொட்டியதையும், அண்ணனின் குழந்தையை பிரிய முடியாமல் பிரிந்து வந்த்தையும் அழுதுகொண்டே கதைகதையாய் ஒரு நாள் அவள் கூறியபோது கவிதா அவள் கைகளைப் பிடித்து ஆறுதல் சொன்னாள். அன்று பிடித்த கையை இன்று வரை விடவில்லை அவள்.

ராஜூதான் அவளை இந்த ஹாஸ்டலில் வந்து சேர்த்துவிட்டான். அவன் தான் அட்வான்ஸ் கொடுத்து, துணிமணிகள், வாளி, சோப்பு, சீப்பு, கண்ணாடி, எல்லாவற்றையும் வாங்கிக்கொடுத்தான். சுதா  ஹாஸ்டலில் சேர்ந்து ஒரே மாதத்தில் ராஜூவை அவன் வேலை பார்த்த கம்பெனி பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு  அனுப்பியது. அவனுக்கு அவளை விட்டுவிட்டுப் போக மனசில்லை. இருவருமே ரகசியமாய்  மணமுடிக்க முடிவெடுத்தார்கள். திருமணத்தை பதிவு செய்யக்  கிளம்புகையில் அறைக்குள் அமர்ந்து அழுதாள் சுதா. அவளைத் தேற்றி அழைத்துக்கொண்டு போனாள் கவிதா. பதிந்து முடிந்ததும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றார்கள்.

சுதாவை பார்த்துக்கோங்க..அவளுக்கு யாருமில்லை. என்னை மட்டும் நம்பி வந்தா இவ. நானும் அவளை விட்டுட்டு நாளைக்குக் கிளம்புறேன். எவ்வளவு சீக்கிரம் அவளை அங்கே அழைச்சுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அழைச்சுப்பேன். ஆனாலும் எனக்கு கஷ்டமா இருக்கு. நீங்கதான் அவளைப்பார்த்துக்கணும் ராஜூ கவிதாவிடம் கெஞ்சுவது போல் தழுதழுத்த குரலில் சொன்னான்.

அவனை வழியனுப்ப விமானநிலையத்திற்கு கவிதாவும் போயிருந்தாள். அவன் மீண்டும் மீண்டும் சுதாவை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். அன்றிலிருந்து சுதாவுக்கு கவிதாதான் எல்லாம். ஒரு நாள் இரவு கவிதா யதேச்சையாய் கண்விழித்தபோது தன் கட்டிலில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்  சுதா. அருகில் சென்று அவள் தலையைக் கோதி விட்டாள். வெடித்து அழுதாள் சுதா. என் அண்ணன் குழந்தை மகி...என் மேல் எத்தனை பாசமா இருப்பான் தெரியுமா? அவளைக்கூட விட்டுட்டு வந்துட்டேன் கவிதா! அவன் பிறந்த நாள் இன்னிக்கு. எனக்கு மகி ஞாபகமாவே இருக்கு என்று அக்குழந்தையின் படத்தை வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள். இப்படி அடிக்கடி மகியின் படத்தை எடுத்துப்பார்த்து கண்ணீர் விடுவது சுதாவின் வழக்கமாகி இருந்தது.

குடும்பத்தைப் பிரிந்தது அவளை ரொம்பவே வாட்டியதாக கவிதாவுக்குப் பட்டது. எவ்வளவு பாசமிருக்கிறதோ அதேபோல குடும்பத்தினர் மிது பயமும் அவளுக்கிருப்பதாக கவிதா நம்பினாள். அதற்கேற்றவாறு ஒரு நாள் சுதாவும் கவிதாவும் தி.நகருக்கு சுடிதார் வாங்கச் சென்றபோது நன்றாகப் பேசிக்கொண்டே வந்த சுதா திடீரென முகம் இருண்டாள். கவிதாவின் கைகளை அவசரமாகப் பற்றினாள். அருகிலிருந்த கடை ஒன்றினுள் நுழைந்தாள். அது பெர்ஃப்யூம்கள் விற்கும் கடை. கவிதா விழித்தாள். அண்ணன்...அண்ணன்.. ரகசியமாய் கிசுகிசுத்தாள் சுதா. எங்கடி.? .எங்கே? பரபரத்தாள் கவிதா. வெளிய ரோட்டில் பார்த்தேன். அதான் இங்க இந்தக் கடைக்குள்ள நுழைஞ்சிட்டேன்.. - சுதாவின் குரல் நடுங்கியது. பயத்தில் நா குழறியது. வியர்வை ஆறாய் ஓடியது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. என்னை மறைச்ச மாதிரி நின்னுக்கோ ப்ளீஸ்..! பயமா இருக்கு..! - இந்த வார்த்தைகளைத்தான் அவள் சொல்லியிருப்பாள் என்று கவிதா யூகித்தாள். அந்தளவிற்கு நாக்கு குழறியது அவளுக்கு. அவளை மறைத்தமாதிரி நின்றுகொண்டு பெர்ஃப்யூம் பயன்படுத்தும் பழக்கமேயில்லாத கவிதா அடைக்கலம் தந்த கடைக்கு நன்றிக்கடனாக ஒரு பெர்ஃப்யூம் வாங்கினாள். சுதாவின் கைகள் கவிதாவின் தோள்களை இறுகபற்றியிருந்தது. மிகவும் அசாதாரணமாக அச்சம் அந்த ஸ்பரிசத்தில் இருந்ததை உணர்ந்தாள் கவிதா.

அவள் கண்கள் அலைபாய்ந்துகொண்டிருந்தன. கால்கள் தள்ளாடின. அதோ போறார்...! பதறினாள் சுதா. அவள் காட்டிய திசையில் நீலநிற சட்டை அணிந்த இளைஞனொருவன் போய்க்கொண்டிருந்தான். ஒண்ணுமில்ல....பதட்டப்படாதே.! அவர் உன்னைப் பார்க்கலை.. என்று அவளை ஆசுவாசப்படுத்தினாள் கவிதா. கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு புள்ளியாய் நீலநிற சட்டை மறையும் வரை காத்திருந்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர். வந்த வேகத்தில் ஒரு ஆட்டோவைப் பிடித்து ஆட்டோவுக்குள் பாய்ந்தாள் சுதா. ஆட்டோ ஹாஸ்டலுக்குப் பறந்தது. அன்று முழுவதும் படபடப்பு அடங்கவில்லை சுதாவிற்கு. அப்போதிலிருந்து வெளியே வருவதை அறவே தவிர்த்தாள். அருகில் உள்ள கடைக்கு வரவே கூட பயந்தாள். அவள் இப்படி பயப்படுவது தேவையற்றது என்றே தோன்றியது. ஏதோ ஒரு நாள் அவளுடைய அண்ணனை சாலையில் பார்க்க நேர்ந்ததால் தினமுமா அப்படியாகுமென்று சில சமயம் சுதா மீது கவிதாவுக்கு கோபம் கூட வந்தது. எத்தனை சொன்னாலும் கேட்காமல் சுதா ஹாஸ்டலுக்குள் ஹவுஸ் அரெஸ்ட் ஆனவள் போல் கிடந்தாள். வெளியே வர மறுத்தாள். பிரான்ஸ் போவத்ற்குள் தன் வீட்டார் கண்ணில் பட்டுவிட்டால் தன் கதி என்னாவது என்று அரற்றிக்கொண்டே இருந்தாள். ஆனால் மாலையானதும் பக்கத்திலுள்ள பிரவுஸிங் செண்டருக்கு போவதற்கு மட்டும் தவறுவதேயில்லை அவள்.

ஒரு நாள் கோடம்பாக்கம் பகுதி முழுவதும் மின்சாரமில்லை. அன்றைக்கு அவள் தவித்த தவிப்பைக் கண்டு கவிதாவுக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும் மறுபுறம் பாவமாய் இருந்தது.

ஒருநாள் தானே சுதா? ராஜூவோடு ஒருநாள் பேசாம இருக்க முடியாதா?

உனக்குப் புரியாது கவிதா. ஒரு நாள் பேசலைன்னாலும் ரொம்ப கஷ்டம். ஹூம். என்னை காப்பாத்தி கொண்டு வந்து வச்சிருக்கான் அவன் இல்லேன்னா நான் என்னிக்கோ தற்கொலை பண்ணிக்கொண்டு செத்துருப்பேன் தெரியுமா? - சொல்லும்போதே கண்களின் பயமும் மிரட்சியும் தெரிந்தன அவளுக்குள்.

ஏன் இவள் இப்படி சொல்கிறாள். அவள் வீட்டில் அப்படியென்ன கொடுமை அவளுக்கு? அன்றைக்கு அண்ணனைக்கண்டு அப்படி பயந்து நடுங்கினாள். இன்றைக்கு இப்படிச் சொல்கிறாள். பெற்ற பெண்ணை அப்படி யாராவது கொடுமைப்படுத்துவார்களா? கவிதா அவள் முகத்தையே பார்த்தாள். பால்வடியும் இந்த முகத்தைப் பார்த்தால் எப்படி கொடுமைப்படுத்தத் தோன்றும்? என்ன மனிதர்கள்?

என்னதான் ஆச்சு உன் வீட்டுல? சொல்லேன்!

இப்போ வேணாம். அப்புறமா சொல்றேன்

அந்த அப்புறமா அவள் பிரான்ஸ் புறப்படும்வரை வரவேயில்லை. ஆனால் தினமும் ஏதோ சொல்ல எத்தனிப்பதுமாய் சொல்ல இயலாமல் உள்ளுக்குள் விழுங்குவதுமாய் அவள் தவிப்பதாய்ப் பட்டது கவிதாவுக்கு. ஆனாலும் புறப்படும் நாள் வரை அவள் எதுவும் சொல்லவேயில்லை. விமானநிலையத்தில் நிற்கையில் அடக்கவியலாமல் கண்ணீர் விட்டனர் இருவரும். சுதாவை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தபின்னர் கவிதாவிற்கு அறை வெறுமையாய்த் தெரிந்தது. சாப்பிடப்பிடிக்கவில்லை.

மறுநாள் அருகிலிருந்த எஸ்.டி.டி.பூத்திற்கு சில்லறை மாற்றச் சென்றபோது அங்கிருந்த பையன் கேட்டான் உங்களத்தேடி ரெண்டுபேர் ஹாஸ்டலுக்கு வந்திருப்பாங்களே? அவங்களைப் பார்க்காம நீங்க இங்கே வந்துட்டீங்களேக்கா?

யாரு? என்னை யாரு பாக்க வந்தாங்க?

சுதாக்கா போட்டோவைக் காமிச்சு கடையாண்ட வந்து ஒரு அம்மாவும் இன்னொருத்தரும் கேட்டங்கக்கா. அவங்க எங்கேயோ வெளிநாடு போயிட்டாங்க. கூட ஒரு அக்கா எப்பவுமிருக்கும். அத்தப் போயிப் பாருன்னு உங்க பேரு சொல்லி அனுப்பிச்சேன். இந்த ஹாஸ்டல்தான்னு சொல்லியனுப்பினேன். வரலயா?

கவிதாவிற்கு ஒரு நொடி உலகமே ஸ்தம்பித்தது. ஹாஸ்டல் நோக்கி ஏறத்தாழ  ஓடினாள். அவள் உள்ளே நுழைந்தபோது விசிட்டர்ஸ் ரூமில் ஓர் அம்மாளும், இன்னுமொரு பெரியவரும் நின்றிருந்தனர். சுதாவின் அதே சாயல். பார்த்தவுடன் சொல்லிவிடலாம் அது சுதாவின் தாயென்று.

இதோ.. இவதான் கவிதா” -  மஞ்சு அடையாளம் காண்பித்துவிட்டு அலுவலகம் கிளம்பினாள்.

அந்த அம்மாள் மெல்ல இவளை நெருங்கினாள். அம்மாடி! நீதான் சுதாவோட ஃபிரண்டாம்மா?

ஆமாம்..நீங்க..?

நான் சுதாவோட அம்மா. அவ இப்போ எங்கேம்மா? சொல்லு!அதட்டலாய் கேட்டாள் அந்த அம்மாள்.

கவிதாவுக்கு எரிச்சல் வந்த்து. அமைதியாய் “தெரியாதுஎன்றாள்.

“இங்கே யார்கிட்ட கேட்டாலும் எனக்குத்தெரியாதுங்குறாங்க.. பேசி வச்சிருக்கீங்களா சொல்லக்கூடாதுன்னு  அந்தம்மாள் கத்தினாள்.

“இங்க பாருங்கம்மா! இது ஹாஸ்டல். இங்க கத்தி கூப்பாடு போடாதீங்க

நான் திருநெல்வேலிலேர்ந்து கெளம்பி வந்துருக்கேன்மா. அவ எங்கே? எங்கேயோ வெளிநாடு போயிட்டதா அந்த எஸ்.டி.டி.பூத் பையன் சொன்னான். கட்டையில போறவ.. நாறச்சிறுக்கி. இப்படி பண்ணிட்டுப் போயிட்டாளே..எங்க போனா அவ? சொல்லும்மா சொல்லு! எங்க குடும்ப மானத்தையே வாங்கிட்டு அவ எங்க போனா? அவ பண்ணின காரியத்துக்கு அவ கையில் கிடைச்சா கண்டந்துண்டமா வெட்டிப்போட்ருப்பான் அவ அண்ணங்காரன்" - சொல்லும்போதே அழுதுகொண்டே சொன்னாலும் குரலில் வன்மம் தெரித்தது.

அந்த ஓடுகாலி சிறுக்கி ஓடுனாளே..பெத்த புள்ளையை விட்டுட்டுல்ல ஓடிட்டா. அதெப்புடி ஒரு தாய்க்கு இப்புடி செய்ய மனசு வரும்?

அதிர்ந்து நின்றாள் கவிதா. அவளுக்கு அந்த வாக்கியத்தின் அர்த்த்த்தை தான் சரியாகப் புரிந்து கொண்டோமா அல்லது அந்த அம்மாள் வேறு ஏதாவது சொல்லி தன் காதில் வேறு மாதிரி விழுந்துவிட்டதோ என்று குழப்பமாய் இருந்தது. என்ன சொல்கிறாள் இந்த அம்மாள்?

“அம்மா! என்ன சொல்றீங்கம்மா? யாரு குழந்தை? குழந்தை இருக்கா? சுதாவுக்கா?

அந்தம்மாள் ஒரு புகைப்படத்தை எடுத்து வீசினாள். கழுத்தில் தாலி. கையில் குழந்தை. சுதாவேதான். குழந்தை...இது..இது..அவள் அண்ணன் குழந்தை சுகி என்றல்லவா சொன்னாள்? இந்தக் குழந்தையின் படத்தைத்தானே அவள் எடுத்து வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பாள். அருகில் யார்? இந்த முகம் கவிதாவுக்குத் தெரிந்த முகமாகத்தோன்றியது...யாரிது?

“அம்மா! இது யாரு?” என்றாள் சன்னமான குரலில்.

“அவ புருஷன்” என்றாள் அம்மாள். சட்டென்று நினைவுக்கு வந்தது.  இந்த முகத்தைத்தான் தி.நகரில் பார்த்து அன்றைக்கு மிரண்டாள் சுதா. அவளால் நம்ப முடியவில்லை. ஆனால் அவர்கள் நிச்சயமாக கணவன் - மனைவி தான் என்பதை படத்தில் தெரிந்த அவர்களின் நெருக்கம் சொல்லியது. அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். சில நொடி மௌனத்திற்குப் பிறகு அந்தம்மாள் கேட்டாள். “அவ எங்கேம்மா போயிருக்கா? அட்ரஸ் தர்றியா? போன் நம்பர்” ஏதாச்சும் இருக்கா?

“அம்மா! அவ ஏன் வீட்டை விட்டு வந்தா?

அந்தம்மாள் அழ ஆரம்பித்தாள். “கிளி மாதிரி வளர்த்தேன் எம்பொண்ணை. ஒரு குரங்கு கையில புடிச்சுக் குடுத்தேன். அவ அப்பவே இந்த மாப்பிள்ளை வேணாம்னா. ஆனால் நல்ல வசதியான எடம்னு சொல்லி கட்டி வச்சோம். அந்த படுபாவி அவளை படாதபாடு படுத்தினான். சிகிரெட்டால மார்ல சுட்டுருக்கான். அவ மேல எப்பவும் சந்தேகம் தான். யார்கிட்ட பேசினாலும் சந்தேகந்தான். தினமும் குடிதான். கண்ணுமண்ணு தெரியாம அடிப்பான். எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டா குழந்தைக்காக. ஒரு தடவ அவளை அடிச்சதுல கை ஒடஞ்சு பிராக்சர் ஆயிடுச்சும்மா.. நான் எதச் சொல்வேன்...எத விடுவேன்..என்புள்ளய சின்னாபின்னாப்படுத்திட்டான்மா. அடிச்சு அவள வீட்டை விட்டுத்தள்ளி கதவ சாத்திட்டான். அப்போ அந்த வழியா போன ஒருத்தன் தான் அவளை கூட்டிட்டுப் போயி ஆஸ்பத்திரில சேத்தான்.” அப்படித்தான் அந்தப் பையனோட பழக்கம் அவளுக்கு. ஒரு நா திடீர்னு மாப்பிள்ளை குடிச்சிட்டு வந்து அவளை அடிச்சப்போ அடிவயித்துல பட்டு மயங்கிட்டா. அன்னைக்கு அவளுக்கு உயிர்ப்பயம் வந்துடுச்சு. செத்துப்போயிட்டா என்ன செய்றதுன்னு நெனச்சு கெளம்பிட்டா. குழந்தை அவ மாமியார் ரூம்ல இருந்துச்சு போலருக்கு  அன்னைக்கு. போய் எடுத்துட்டு போறதுக்கு அவளுக்கு பயம் மாட்டிப்போமோன்னு. அப்படியே கிளம்பிட்டா.. கிளம்பினவ இங்கே எங்க வீட்டுக்கு வரவேண்டியதுதானே?.. நேரா அவனைப் பார்க்கப் போயிட்டா

கண்ணீர் வழிய பேசிக்கொண்டிருந்த அந்தம்மாள் திடீரென ஆவேசமானாள். ”ஆனா இந்த முண்டை நாயி.. அதுக்காக அவன் பின்னாடி போயிரலாமா?..அந்த நாறநாயை  இந்த மூதேவிக்குப் பிடிச்சிருச்சி.  கல்யாணம் ஆயிடுச்சே;. புள்ளை வேற இருக்கேன்னு யோசிக்க வேணாமா? அந்தப் பயதான் ஆம்பள பல்ல இளிச்சுக்கிட்டு வருவான். இவளுக்கு எங்க போச்சு புத்தி.? களவாணி சிறுக்கி!..” வாயில் வரக்கூடாத கெட்டவார்த்தை சொல்லி திட்டினாள் அந்தம்மாள்.

அதுவரை அமைதியாய் இருந்த கூட வந்திருந்த அந்த மனிதர் கோபம் கொப்பளிக்கப் பேசினார். “சாதிசனம் முன்னாடி தல குனிய வச்சுட்டாம்மா! அவளை ஒனக்கு இப்பத்தானே தெரியும். இந்தக் கதையெல்லாம் சொன்னாளா உங்கிட்ட?

இல்லை..! கல்யாணம் ஆனதெல்லாம் எனக்குத் தெரியாது. சொல்லலை. ரொம்ப ஷாக்கா இருக்கு”

“எப்புடி சொல்வா? இதெல்லாம் தெரிஞ்சா மூஞ்சி குடுத்து பேசுவீங்களா யாராச்சும். அதான் களவாணி முண்டை.. சொல்லியிருக்கமாட்டா.”

“அவள எந்த ஊர்ல கட்டிக்குடுத்தீங்க? குழந்தை எங்க இருக்கு?

“இந்த மெட்ராஸ்ல தான். ஆவடியில தான் வீடு. ஓடுகாலி பெத்ததா இருந்தாலும் நம்ம குடும்ப வாரிசாச்சேன்னு...இவ போனபிறகு நான் போய்க் கேட்டேன். குடுக்கலை. இவளும் போன் பண்ணி புள்ளயைக் கேட்டிருக்கா...குடுக்க மாட்டேன்னுட்டாங்க. அந்தாள் மறுகல்யாணம் ஒடனே பண்ணிக்கிட்டான். இவள தேடாத எடமில்ல. அவ அண்ணங்காரன் ஆத்திரத்துல குதிக்கிறான். எங்க இருக்கான்னே தெரியல. எங்க சொந்தக்காரரு ஒருத்தர் இந்த ரோட்டுல அவள ஆட்டோவுலப் பாத்ததா நேத்து சொல்லி அட்ரஸ் சொன்னாரு. சனியன அடிச்சு இழுத்துக்கிட்டுப் போயிருவோம்னு நெனச்சு வந்தோம். ஆனா நாட்டை விட்டே அவன்கூட ஓடிட்டா!.... ........ ..........” மறுபடி கெட்ட வார்த்தை.

“அம்மா! நீங்க பாத்து கல்யாணம் பண்ணிவச்ச ஆளுதான் அத்தனை கொடுமக்காரனாயிருக்கானே..அதான் இப்ப அவளா பாத்துக்கிட்டா...நீங்க அதுக்கு ஏன் அவளத் திட்டுறீங்க?

“அவனோட வாழப்புடிக்கலைன்னு ரத்து பண்ணிட்டு வந்தா எங்க சாதியில நாங்க கல்யாணம் பண்ணி வச்சிருப்போம்ல.”

கவிதா அவர்கள் இருவரையும் எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

எங்கத்தான் போயிருக்கா அவ! சொல்லும்மா!”

“தெரியாது! எனக்குத் தெரியாது அழுத்தமாகச் சொன்னாள்.

அந்த அம்மாள் பட்டென்று அவள் காலில் விழுந்தாள். பதறி பின்வாங்கினாள் கவிதா.  

“என்னதிது! இவ்வளவு பெரியவங்க...என் காலில் விழுந்துக்கிட்டு.. எழுந்திருங்கம்மா!

“அட்ரஸ் போன் நம்பர் ஏதாச்சும் குடும்மா...இந்த காரியம் பண்ணிட்டுப் போயிருக்காளே...அவள....” கவிதாவின் காலைப் பிடித்துக் கண்ணீர் விட்டுக் கெஞ்சினாள் அந்தம்மாள். கண்களிலிருந்து மாலை மாலையாய் நீர் வழிந்தோட கெஞ்சிக்கொண்டே இருந்தாள் அவள். அந்த அம்மாள் பேசியது எதுவுமே அவள் காதில் விழவில்லை. அழுத முகம் மட்டுமே தெரிந்தது.

ஒருகட்டத்தில் தாங்க முடியாமல் “அம்மா! ப்ளீஸ்என்றாள் சத்தமாக. “இவ்வளவு பெரியவங்க நீஙக. உங்கள யாருன்னே தெரியாத என் கால்ல விழ வச்சுட்டாளே அவ. நீங்க உங்க நம்பர் குடுங்க.. ஊருக்குப் போங்க இப்போ. அவ எனக்கு நிச்சயமா போன் பண்ணுவா. பண்ணினா அவளோட நம்பர் வாங்கி உங்களுக்குத்தர்றேன். சரியா?

அந்த அம்மாளின் முகம் பிரகாசமாகியது. கவிதா தன் கைப்பையைத் திறந்து ஒரு சின்ன டைரியைப் எடுத்துக் கொடுக்க அந்த அம்மாள் தன் கைபேசி எண்ணை எழுதிக்கொடுத்தாள்.

உன் நம்பர் சொல்லும்மா! அந்த மனிதர் கேட்டார். அவள் சொல்ல தன்னுடைய கைபேசியை எடுத்து அதிலிருந்து இவள் எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் செய்தார்.

“என்னை நம்புங்கம்மா! அவ கண்டிப்பா கூப்பிடுவா. கூப்பிட்டா நான் பேசி அவள் அட்ரஸும் போன் நம்பரும் வாங்கித்தரேன்

“அவ எந்த ஊருக்குப் போயிருக்கா?

“சிங்கப்பூர்”

“சிங்கப்பூரா! சொந்தக்காரங்கள்ளாம் இருக்காங்க. பாத்துருவோம். கண்டுபிடிச்சுருவோம். போன் நம்பர் இருந்தாக்கூட போதும். ஒன்ன நம்பிப் போறேம்மா அவ போன் பண்ணினா நாங்க வந்துட்டுப்போனதை சொல்லாதே. உஷாராயிடுவா..”

அந்தம்மாள் கையெடுத்துக்கும்பிட்டாள்.

“சரிம்மா! நீங்க போயிட்டு வாங்க......”!

அந்தம்மாளும், அவரும் புறப்படடனர். அறைக்குள்ளிருந்து நிர்மலா வந்து  கேட்டாள்.  “யார் கவிதா அவங்க?” ஏதோ சத்தமா பேசினமாதிரி இருந்துது. காதுல சரியா விழலை. என்ன விஷயம்?
“எனக்கு தூரத்து சொந்தம். சும்மா என்னப் பார்க்க வந்தாங்க”. சொந்தக்காரங்க சண்டைதான். வேறேன்ன. இவங்களுக்கு வேற வேலையில்ல.நகர்ந்தவள் நின்றாள். “அப்புறம் நிம்மி! என் ஆபீஸ்மேட்ஸ் 3 பேரு வீடு எடுத்து தங்கியிருக்காங்க. ஹாஸ்டலை காலி பண்ணிட்டு அங்க வரச்சொல்லிக்கிட்டு இருந்தாங்க ரொம்ப நாளா. கவிதாவும் போயிட்டா இல்லையா? அதனால நான் நாளைக்கு காலைல ஹாஸ்டலை வெகேட் பண்றேன். சொல்லிக்கொண்டே வெளியேறிய கவிதா தன் செல்போனிலிருந்த சிம்கார்டை கழற்றி குப்பைத்தொட்டியில் எறிந்தாள். செல்போனை கைப்பைக்குள் வைக்கையில் கண்ணில் தட்டுப்பட்டது அந்த புகைப்படம்

கவிதாவும் சுதாவும் ஒரு மாலைப் பொழுதில் ஹாஸ்டல் மொட்டைமாடியில் எடுத்துக்கொண்டது. கலைந்த தலையுடனும்,  வியர்வை வழிந்த முகத்துடனும் இருக்கும் அந்தப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் “இந்தப் படத்தில் நான் நல்லாவே இல்ல. வேற போட்டோ ஒண்ணு எடுப்போம் கவிதா” என்று சொல்லிக்கொண்டேயிருப்பாள் சுதா. ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது.

அப்படத்தை இப்போது உற்றுப்பார்த்தாள் கவிதா. சுதா இப்பொழுது எப்போதையும் விட அழகாக இருப்பது போல் தோன்றியது

ன்று இரவு.. கவிதாவுக்கு லேண்ட்லைனில் அழைப்பு வந்தது. மறுமுனையில் சுதா.

“சுதா! நல்லபடியா போய்ச் சேர்ந்தியா? ஒண்ணும் பிரச்சனையில்லையே”?

“இல்ல கவி! இந்த ஊர் பிடிச்சிருக்கு. ராஜூ மட்டும்தான் இங்க எனக்குத் தெரியும். ஆனாலும் பிடிச்சிருக்கு. இவன் கூட இருக்குறதே எனக்கு சந்தோஷமா இருக்கு. நீ எப்பிடி இருக்கே”?

“இருக்கேன். உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..”

“என்ன?

“உங்கம்மாவும் அப்பாவும் ஹாஸ்டலுக்கு வந்தாங்க
இரண்டி விநாடிகள் மௌனத்திற்குப் பிறகு துண்டிக்கப்பட்டது இணைப்பு.

அதன்பின் சுதாவிடமிருந்து ஒருபோதும் கவிதாவுக்கு தொலைபேசி அழைப்பு வரவேயில்லை.