உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதியின் காலணிகளை அவருடைய பாதுகாப்பு அதிகாரி பதம்சிங் தனது கைக்குட்டையால் துடைத்த படங்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருக்கின்றன.
மாயாவதி உத்தரப்பிரதேசத்தின் நௌனிப்பூர் என்கிற கிராமத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கியவுடன் அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் உரையாடுகிறார். அப்போது அவருடைய பாதுகாப்பு அதிகாரி தனது கைக்குட்டையால் துடைக்கிறார். மாயாவதியோ இதை அறியாதவர் போல அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து உரையாடுகிறார். இந்தக்காட்சியை அங்கிருந்த ஒரு உள்ளூர் தொலைக்காட்சி சேனலின் செய்தியாளர் படம்பிடித்தார். அன்றிரவு அத்தொலைக்காட்சியில் இக்காட்சிகள் ஒளிபரப்பாக, அதன்பின் இக்காட்சிகளைப் கடன் வாங்கி மற்ற அகில இந்திய ஆங்கில சேனல்கள் தொடர்ந்து இக்காட்சியை காண்பித்தவண்ணமிருந்தன.
ஒரு பாதுகாப்பு அதிகாரி தனது மேலதிகாரிக்கு இப்படியான பணிவிடைகளை செய்வது சரியா? இது அவரது சுயமரியாதைக்கு இழுக்கு இல்லையா? என்பது பலரும் முன்வைக்கும் கேள்வியாக இருக்கிறது.
பதம்சிங் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமோடு நெருங்கிய தொடர்பிலிருந்தவர். அவரைத்தொடர்ந்து மாயாவதியிடமும் நெடுங்காலமாக பணியாற்றுகிறார். இச்சம்பவம் குறித்துக் கூறுகையில் பதம்சிங் “மனிதாபிமான அடிப்படையில் தான் செய்தேன்.” என்றார்.
உத்தரப்பிரதேசத்தின் எதிர்க்கட்சிகளோ “இச்சம்பவம் துரதிஷ்டவசமானது. இது மாயாவதியின் நிலபிரபுத்துவ மனநிலையைக் காட்டுகிறது. அவர் தன் சிலைகளை தானே நிறுவினார். அதன் தொடர்ச்சியாக இப்படியொரு சம்பவம்” என்று குற்றம் சாட்டுகின்றன. காங்கிரஸ் கட்சி மாயாவதியின் பதவி விலகலைக் கோருகிறது.
மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் அ.மார்க்ஸ் இது குறித்து என்ன கூறுகிறார்?
“யாரும் யாருடைய காலிலும் விழுவதையோ ஷுக்களை சுத்தம் செய்வதையோ ஏற்றுக்கொள்ள முடியாது. அது இழிவான செயல். அதிகாரத்தில் உள்ளவர்கள் இதனை தடுத்திருக்க வேண்டும். ஒரு முறை நேரு சென்னைக்கு வந்தார். அப்போது காங்கிரஸில் இணைந்திருந்த கண்ணதாசன் அவருடைய காலில் விழுந்தார். அதைக் கண்டு பதறிய பின்னே துள்ளி நகர்ந்த நேரு “வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்” என்று கத்தினார். இயல்பாக அவர் இதற்கு எதிர்வினை செய்தார். இப்படியான ஒரு கலாசாரம் அப்போது இருந்த்து. ஆனால் இப்போதோ காலில் விழுவது, பணிவிடை செய்வது என்ற கலாசாரமாகி விட்டது. இது தமிழ்நாட்டிலிருந்து வளர்கிறது என்று சொல்ல்லாம். ஜெயலலிதாவின் காலில் அவரது கட்சியினர் விழுகிறார்கள். ஆனால் அது இந்தளவுக்கான சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. மாயாவதி ஒரு தலித் என்பதும் இந்த சர்ச்சை பெரிதாக்கப்படுவதற்கொரு காரணம். ஆனால் அவர் தலித் என்பதற்காகவோ அவர் ஒரு பெண் என்பதற்காகவோ அவருடைய இந்த செயலை நாம் நியாயப்படுத்த முடியாது. இயல்பாக அவர் அதை தடுத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. மனிதன் இன்னொரு மனிதனுக்கு செருப்புத் துடைப்பது என்பது இழிவான செயல் தான். அதை ஆண்டாண்டு காலமாக பலர் செய்து வருகிறார்களே என்று கேட்கலாம். ஆனால் அதற்காக பதிலுக்கு பழிவாங்குவது போல இவர் செருப்பை இவர் துடைக்கலாம் என்கிற வாதம் லாஜிக் இல்லாத ஒன்று.” என்கிறார் அ.மார்க்ஸ்.
உத்தரப்பிரதேச அமைச்சரவைச் செயலாளர் ஷஷங்க் சேகர் சிங் இது குறித்து கூறுகையில் ”வழக்கத்திற்கு மாறாக இதிலொன்றுமில்லை. ஒரு பாதுகாப்பு அதிகாரியின் கடமையாகவும் மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் தான் அவர் இதைச் செய்தார். ஒரு முறை காங்கிரஸ் எம்.பியான பி.எல்.புனியா கன்ஷிராம் ஷூ அணிய சிரமப்பட்டபோது அவருக்கு உதவினார். அப்போது புனியா மாயாவதியின் தனிச்செயலராக பதவியில் இருந்தார். இதையெல்லாம் ஒரு தவறு என்று கூறமுடியுமா? மாயாவதியின் காலணிகளின் ஏதோ ஒன்று ஒட்டிக்கொண்டிருந்த்து. அது ஒருவேளை அவரை இடறச்செய்யலாம் அல்லது காயம்படச்செய்யலாம் என்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே பதம் சிங் இதனைச் செய்தார்” என்கிறார்.
பதம்சிங் 2007ல் ஒரு கொள்ளைக்குமபலை எதிர்த்து சண்டையிட்டதற்காக ஜனாதிபதி பதக்கம் வாங்கியவர். பணிஓய்வு பெற வேண்டிய அவரது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ரீடா பக்குணா ஜோஷி ”தலித்துகளின் முன்னேற்றம் குறித்துப் பேசும் மாயாவதி ஒரு தலித் அதிகாரியை இவ்வாறு கேவலப்படுத்தலாமா?” என்று காட்டமாகக் கேட்கிறார்.
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டரில் இவ்வாறு எழுதியுள்ளார். “என் சூட்கேஸை என் பாதுகாப்பு அதிகாரிகள் எடுத்து வர நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று மறைமுகமாக மாயாவதியை சாடுகிறார்.
”மாயாவதி தன் காலணிகளை சுத்தம் செய்யச்சொல்லிக் கேட்கவில்லை. அவர் பாட்டுக்கும் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதற்கு மாயாவதியை குற்றம் சாட்டுவது சரியல்ல. ஒரு கைக்குட்டை கீழே விழுந்தால் குனிந்து எடுப்பதுபோன்ற ஒரு இயல்பான சம்பவத்தை இத்தனை பெரிதுபடுத்தத் தேவையில்லை” என்கிறார் மாயாவதி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சையது காசிம் அலி.
இச்சம்பவம் குறித்து ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவர் ஷரத் யாதவிடம் கருத்து கேட்கப்பட்டபோது நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க இப்போது இது பெரிய பிரச்சனையில்லை என்பதே அவரின் பதிலாக இருந்தது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரோ இதுகுறித்து சொல்ல ஒன்றுமில்லையென்று கூறி கருத்துக் கூற மறுத்துவிட்டார்.
இதே சம்பவம் நான்கு சுவர்களுக்குள் நடந்திருந்தாலோ அல்லது காமிரா கண்களுக்குப் படாமல் நடந்திருந்தாலோ இவ்வளவு பெரிய சர்ச்சையை உண்டாக்கியிருக்காது. இன்னமும் பலர் அதிகாரத்தின் ஆணைக்கு அடிபணிந்தோ அல்லது பதவி உயர்வுக்காகவோ இப்படிச் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தனக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் தங்களுக்கு பணிவிடை செய்தாகவேண்டும் என்று மமதோயோடும் அதிகார போதையோடும் அதை சலுகையாக அல்ல, உரிமையாகவே எதிர்பார்க்கும் தலைவர்கள் உண்டு. அவர்களின் கதையெல்லாம் வெளிச்சத்துக்கு வரவில்லை. இந்த ஒரு சம்பவம் வெளியே தெரிந்துவிட்டது. அவ்வளவே வித்தியாசம்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரஹாம் லிங்கனின் குடும்பம் பரம்பரையாக ஷூக்களை பாலிஷ் செய்யும் வேலையைச் செய்து வந்த குடும்பம். அவர் பதவியிலிருந்த போது அவரை கேலி செய்வதற்கு இவ்விஷயம் ஓர் ஆயுதமாக பயன்பட்டது. ஒரு விருந்தின் போது பலர் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தும் நோக்கில் “உங்கள் ஷுக்களுக்கு நீங்களே தான் பாலிஷ் செய்வீர்கள். அப்படித்தானே லிங்கன்?” என்று ஒருவர் கேள்வி எழுப்ப, லிங்கன் கூறிய பதில் இது.
“என் ஷூக்களை நான் தான் பாலிஷ் செய்து கொள்கிறேன். ஏன்? நீங்கள் யாருடைய ஷூக்களை பாலிஷ் செய்கிறீர்கள்?”
காலணிகளை பாலிஷ் செய்யும் தொழில் எப்போதும் வர்க்கத்தோடு தொடர்புடையது. இந்தியாவில் வர்க்கத்தோடு சேர்த்து சாதியுடனும் தொடர்புடையது. மற்றவரின் காலணியைத் துடைப்பது கேவலமும் அவமானமும் நிரம்பிய ஒரு இழிவான செயலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் சுயவிருப்பத்தின் பேரில்லாலாமல் கல்வியும் உரிமையும் மறுக்கப்பட்டு காலங்காலமாக சமூகத்தின் ஒரு பிரிவினர் செருப்புத் தைக்கும், செருப்புத் துடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்கிற உண்மையையும் நாம் மறந்துவிட முடியாது.. இன்று நாம் தெருக்களிலும், பேருந்து நிலையங்களிலும் பார்க்கும் செருப்புத்தைக்கும் தொழிலாளி தினமும் தினமும் அடுத்தவரின் காலணிகளைத் தொட்டு தூய்மைப்படுத்தும் வேலையை செய்துகொண்டுதானிருக்கிறார். ஒரு அதிகாரி இதைச் செய்கையில் சுயமரியாதயற்ற செயல் என்றும், மாயாவதி மமதையோடு இருக்கிறார் என்றும் குற்றம் சொல்லும் நாம், அதே வேலையைச் செய்யும் ஒரு தொழிலாளியிடம், எந்த குற்றவுணர்வுமின்றி நம் காலணிகளை கழற்றிக்கொடுத்து அந்த வேலையை செய்யச் சொல்கிறோம். குற்றம் சொல்லும் கட்சிகளும் கூட இழிவென கருதப்படும் ஒரு தொழிலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்காக எதுவும் செய்வதில்லை.
பதம்சிங் மட்டுமல்ல, நாட்டில் எவரொருவரும் அப்படியானதொரு செயலில் ஈடுபடாதிருக்கும் நிலையை நாடு அடையும் நாள் என்று?
நன்றி : புதிய தலைமுறை