Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Saturday, February 12, 2011

பிரியம் சமைக்கிற கூடொன்று

சில ஆண்டுகளுக்கு முன் தீக்கதிர் அலுவலகத்தில் அமர்ந்து கூகிளில் எதையோ தேடிக்கொண்டிருந்தேன். எதையோ தேட எதோ சிக்கியது போல என் கண்களுக்குத் தென்பட்டது அந்தத் தலைப்பு. “வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு” (http://www.agiilan.com/?p=329). படிக்கத் தொடங்கினேன். அந்த மொழிநடையும், அனுபவமும் மனதைத் தைத்து வலியுண்டாக்கின. ஈழத்திலிருந்து அகதியாய் வந்து சென்னையில் வீடு கிடைக்காமல் அனைவராலும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்படும் துயர் வலியுடன் சித்தரிக்கப்பட்டிருந்தது. 

எதை வாசித்தாலும் பிடித்திருந்தால் அதை பிறரிடம் சொல்லி வாசிக்கச் சொல்வேன். ஆனால் எழுதியவரைத் தேடிப்பிடித்து பாராட்டுவதெல்லாம் நான் செய்ததேயில்லை. யதேச்சையாக பேச நேர்ந்தால் சொல்வதுண்டு. இதற்காக எந்த மெனக்கெடலும் செய்ததில்லை. அதிலும் முன் பின் அறியாத ஒருவர் என்றால் சொல்லவே வேண்டாம். பேசாமல் விட்டு விடுவேன். ஆனால் இந்தக் கட்டுரை என்னை அப்படி இருக்க விடவில்லை. கட்டுரை இருந்த வலைப்பூவிலேயே தொடர்பு எண் இருந்தது. அந்த எண்ணிற்கு என் கைபேசியில் அழைத்தேன்.

மறுமுனையில் ஒரு குரல்.

“நான் அகிலன் பேசுறேன். நீங்க?”

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்கினேன். பேசிமுடிக்கப் போகும் சமயத்தில் நான் சந்தேகம் கேட்டேன்..”என்ன நீங்க? எனககு இலங்கைத் தமிழ் என்றால் ரொம்பப் பிடிக்கும். நீங்க அப்படித்தான் பேசுவீங்க..காது குளிர அந்த பாஷையைக் கேட்கப் போறேன்னு நினைச்சேன். நீங்க என்ன எங்களைப் போல தமிழ் பேசுறீங்க?” என்றேன்.

“அது நானாக மாத்திக்கொண்டது..இங்கே என் பாஷையை வைத்தும் கூட சந்தேகப்படுறாங்க. ஒரு ஆட்டோ பிடிக்கணும் என்றால் கூட முடிய மாட்டேங்குது” - இது பதில்

பேசி முடித்தபின்னும் நெடுநேரம் இது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். அருகிலிருந்த நீதிராஜன், அ.குமரேசன் ஆகியோரிடம் இதைப் பகிர்ந்துகொள்ள அவர்களோடு கொஞ்ச நேரம் அகதிகள் குறித்தும் அவர்களின் மனநிலை குறித்துமாய் விவாதித்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கே அமர்ந்து அகிலனின் வலைப்பூவிலிருந்த சில கவிதைகளையும், வேறு பல கட்டுரைகளை வாசித்தேன். நண்பர்களுக்கும் கூட சுட்டிகள் அனுப்பி வைத்தேன். அகிலனின் மொழி எனக்குப் பிடித்திருந்தது. அதில் அடர்த்தி, உண்மை, நேர்மை என எல்லாமும் இருந்தன. அவற்றை என்னால் உணர முடிந்தது. போர் தந்த வேதனையையும், அதன் கொடூரத்தையும் அகிலனின் எழுத்து மூலம் மேலும் விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆயிரம் இருந்தாலும் நாம் இங்கே பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு ஈழம் குறித்து கதைபப்வர்கள் தானே. பட்டவர்கள் சொல்லும்போதுதானே அதன் வலியும் வேதனையும் புரியும்? 

அதன் பின்னர் அவ்வபோது அகிலனின் வலைப்பூ பக்கம் செல்வதுண்டு. அவ்வளவே. அதற்குப்பிறகு மீண்டுமொரு முறை பேசினேன் என்று நினைக்கிறேன். எதற்கு என்று நினைவில்லை. கிட்டத்தட்ட ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை புத்தகச்சந்தையில் கருப்புப்பிரதிகள் ஸ்டாலில் இருந்தபோது பாரதிதம்பியோடு வந்த அந்தப் பையனை எங்கோ பார்த்தது போலிருந்தது. யோசித்துக்கொண்டே விட்டுவிட்டேன்

 அவன் என்னை நெருங்கி “கவின்மலரக்கா தானே நீங்க?” என்றான். 

 நான் “ஆமாம்! நீங்க?” என்றேன்.

 “நான் அகிலன்” என்றான். 

எனக்குப் புரியவில்லை. “எந்த அகிலன்?” என்றேன். “த.அகிலன். ஒருமுறை நீங்க போன் பண்ணினீங்களேக்கா?” என்றான்.

நான் அதிர்ந்துதான் போனேன். ஏனென்றால் அகிலன் எழுதுவதை வாசித்து கொஞ்சம் பெரியவராக கற்பனை செய்து வைத்திருந்தேன். என்னைவிட வயதில் மூத்தவராய்த்தான் அகிலன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியதோ தெரியவில்லை. அப்படி நினைத்துத்தான் கைபேசியிலும் பேசினேன். ஒரு பொடியனாக என்னை அக்கா என்று அழைக்கும் அளவிற்குச் சின்னப் பையன் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. முதன் முதலில் பார்த்தபோது இப்போதுள்ளதை விட இன்னும் ஒல்லியாக இருந்தான் அகிலன்.




அன்றிலிருந்து ஏனோ அகிலனை ரொம்பப் பிடித்துப்போனது. காரணம் தெரியாமல் சிலர் மீது நமக்கு அன்பு ஊற்றெடுக்கும். ஒரு காட்டுச்செடியாய் அது பாட்டுக்கு வளரும். சில நேரம் நாம் யார் மீது அன்பு செலுத்துகிறோமோ அவர்களுக்கே தெரியாது நம் அன்பின் அளவு. அப்ப்டியானதொரு அன்பும் பாசமும் அகிலன் மீதெனக்கு ஏறபட்டதற்கு இன்று வ்ரை காரணம் தெரியவில்லை. கூடப் பிறவாத சகோதரனாய் அவன் எனக்குத் தோன்றினான். ஒரு வேளை அவனுடைய துயரங்கள் என்னை அப்படி நினைக்கவைத்தனவோ என்னவோ?

’அக்கா’ என்ற சொல் ரொம்ப இனிமையாய்த் தோன்றியது அவன் அழைத்தபோதுதான். அதன்பின்னும் கூட நாங்கள் அதிகம் சந்தித்துக்கொள்ளவில்லை. அதிகம் சாட்டிலும், கைபேசியிலும் பேசுவோம். நடுவில் இலங்கை போனபோது பனைவெல்லம் வாங்கி வந்து தந்தான். ஒரே ஒருமுறை வீட்டிற்கு வந்திருக்கிறான். அன்றைக்கு நீலகண்டன், அமுதா, பாரதிதம்பி, அகிலன், லிவிங் ஸ்மைல் வித்யா என்று நண்பர்கள் அனைவரும் வந்து வீட்டில் ஒரு பொழுதை மீன்குழம்போடு உண்டு களித்தோம். அப்போது தன் வடலி பதிப்பக வெளியீட்டு நூலொன்றை எனக்கு பரிசளித்தான். எப்போதும் தன் குறித்து ஒரு விஷயத்தை சொல்லத் தொடங்கும்போது “பாரதிதம்பி அண்ணா இதை உங்ககிட்ட சொல்லலையா?” என்று கேட்டுத்தான் ஆரம்பிக்கவேண்டும் என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறான்.

நான் ஒருமுறை கூட அவன் வீட்டிற்குப் போகும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவன் எனக்கு சமைத்து சாப்பாடு போடுவதாகச் சொல்லிக்கொண்டேயிருந்தான். 

“இரவில் கரையும் நிழல்கள்” -  என் முதல் கதை.  தலைப்பெல்லாம் வைககவில்லை அப்போதே எழுதி முடித்தவுடன் அவனுக்குத்தான் மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன். வாசித்துவிட்டு நெடுநேரம் பேசினான்.

 “உங்களுக்கு ஏன் என்னுடைய ‘வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு’ கட்டுரை பாதித்தது என்று இப்போது புரிகிறதக்கா.உங்கள் கதையில் உள்ளதுபோல நானும் இருந்திருக்கிறேன். உணர்ந்திருக்கிறேன்” என்றான். 

நான் அவனிடம் சொன்னேன் ”அந்த அனுபவம் உன் கட்டுரையை வாசித்ததற்கு பின்பு எனக்கு நிகழ்ந்தது அகிலன். எனவே உன் எழுத்து என்னை பாதித்ததற்கு உன் எழுத்து மட்டுமே காரணம். என் அனுபவம் அல்ல” என்றேன்.

“நம் இருவருக்கும் வீடு விஷயத்தில் ஒரே அனுபவம்” என்றான்.

நிச்சயமாக ஒன்றில்லை. ஒரு நாட்டின் குடியுரிமை பெற்று அந்த நாட்டின் ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், இன்ன்பிற இதியாதிக்கள் என்று எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு உள்நாட்டில், தெரிந்த் சூழலில் வீடில்லாமல் இருபப்தற்கும், யாருமேயில்லாமல், புதிய சூழலில், நாடு விட்டு நாடு வந்து வீடு கிடைக்காமல், இருக்க இடமின்றித் திரிவதற்கும் வேறுபாடுண்டு. அகிலன் போன்ற அகதிகளின் அவலத்தோடு ஒப்பிடுகையில் என் அனுபவம் கால்தூசு. போரில் இழந்த தன் தம்பியைக் குறித்த பதிவொன்றையும்,அம்மாவின் ஆர்மோனியப்பெட்டியும் (’நான் சங்கீத ரீச்சரிண்ட மகன்’ - இது அகிலன் அடிக்கடி சொல்லும் வாசகம்), வாசித்து கலங்கியிருக்கிறேன்.  புத்தர் பற்றிய குறிப்புகள் வாசித்தபோது அவன் எழுத்துக்கு விசிறியாகி இருந்தேன்.


மீண்டும் அகிலன் இலங்கைக்குப் போகும் நாள் வந்தது. இந்த முறை உங்களுக்கு செருப்பு வாங்கி வருகிறேன் என்று சொல்லிச் சென்றான். திரும்ப வரவில்லை. அப்ப்டியே கனடா பறந்துவிட்டான் தன் துணையைத் தேடி. 

துஷ்யந்தி - அங்கே அகிலனுக்காக காத்துக்கிடந்த அவன் காதலி.
அவளைத்.தேடி பறந்துவிட்டான். இருவரது இரவையும் பகலையும் ஒன்றாக்கிக்கொள்ள அவன் கனடா சென்றுவிட்டான்.

இன்று அவர்களுக்குத் திருமணம்.  போக இயலாது.. இங்கிருந்தே வாழ்த்திக்கொள்ள வேண்டியதுதான். புது வாழ்க்கையில் இன்றைக்கு அடியெடுத்துவைக்கும் அகிலனுக்கும் துஷிக்கும் அன்பான வாழ்த்துகளை அவர்களை இணைத்த இணையத்தின் மூலமே அனுப்பி வைக்கிறேன்.

அகிலனின் வரவுக்காக வடலி பதிப்பகத்தோடு சேர்த்து,  சில நண்பர்களும் காத்திருக்கிறோம்.

அகதியாய் வந்த அகிலன் தமிழ்நாட்டில் எத்தனை மனங்களை சம்பாதித்துவிட்டுச் சென்றிருக்கிறான்!  இனியொரு முறை “வீடெனப்படுவது பிரியம் சமைக்கிற கூடு” போன்றதொரு கட்டுரையை எழுதும் வாய்ப்பு அகிலனுக்கு இருக்காது .

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அகிலன் மீண்டும் துஷியோடு இங்கு வரக்கூடும். அப்போது அவனையும் துஷியையும் வரவேறக வீடொன்று காத்துக்கிடக்கிறது. 

அகிலன்! எப்பொது வரப்போகிறாய் உன் துணையுடன்?

பிரியம் சமைக்கிற இந்தக் கூடு உங்களிருவருக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறது அகிலன்! 



Thursday, February 10, 2011

பிம்பங்களின் பிடியில்


நேற்று யதேச்சையாய் பார்க்க நேர்ந்த ஒரு புகைப்படம் என்னை இப்போது வரை அலைக்கழித்து கலங்கடிக்கிறது. நடிகை சாவித்ரியின் இறுதிகாலத்தில் எடுக்கப்பட்ட படம் அது. அதிர்ந்து போனேன். கொஞ்சம் பருமனான உடல்வாகு கொண்டவராக மனதில் பதிந்திருந்த பிம்பதத்தை குலைத்துப்போட்டது அப்படம். கைகால்களெல்லாம் குச்சி குச்சியாக கன்னங்கள் ஒட்டிப்போய் சுயநினைவிழந்து படுக்கையில் கிடக்கிறார். அய்யோ! நெஞ்சு பதறியது. அருகில் ஜெமினி கணேசன் இன்னுமிருவர் இருக்கின்றனர் அப்படத்தில்.

இனி சாவித்ரி என்ற பெயரை நினைத்தால் எனக்கு பாசமலர் சாவித்ரியின் நினைவு வரப்போவதில்லை. இந்த சாவித்ரி தான் வருவார். அப்புகைப்படத்தை பார்க்காமலிருந்திருக்கலாம். அந்த முகம் மனக்கண்ணில் வந்து வந்து அதிர்ச்சியூட்டுகிறது.எல்லையில்லா வேதனை அடைந்தேன். நவராத்திரியில் சிவாஜியோடு நடித்த தெருக்கூத்து காட்சி முதல் பல காட்சிகள் மனக்கண்ணில் தோன்றி அலைக்கழித்தன.

மனிதர்கள் பிம்பங்களின் அடிமைகள் என்பது மீண்டும் எனக்கு நிரூபணமானது. பிம்பங்களுக்கு நேரும் ஒரு சிறு இடையூறைக் கூட மனம் தாங்கமாட்டேனென்கிறது. இந்த பிம்பங்கள் உடைபடும்போது அதனை தாங்கிக்கொள்வது அத்தனை எளிதாக இருப்பதில்லை. அதிலும் நாம் நேசிக்கும் சிலரது இயலாமையையோ அல்லது வேதனையையோ கண்கொண்டு காணச் சகியா மனநிலையில் வாழ்கிறோம். இது அநேகமாக அனைவருக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. 

இதனாலேயே இன்றைக்கு டி.எம்.சவுந்தர்ராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி போன்ற நான் மிகவும் நேசிக்கும் கலைஞர்கள் தங்கள் பாட்டையே மிகச் சிரமப்பட்டு பாடும்போது மனம் கனத்துபோகிறது. அய்யோ! இவர்கள் பாடாமல் இருக்கலாமே என்று மனம் அங்கலாய்க்கும். ஆனால் அவர்கள் ஒருபோதும் பாடாமல் இருப்பதில்லை. பாடகருக்கு பாடாமல் இருப்பது சிரமமே. இயலாவிடினும் இரண்டு வரியாவது பாடினால்தான் ஆத்ம திருப்தி அவர்களுக்கு. அது உயிரின் வாதை. இசை ரசிகர்களுக்கோ வேதனையின் உச்சம்.

உயிர்மையில் மலேசியா வாசுதேவன் குறித்து ஷாஜி எழுதிய கட்டுரையை( http://musicshaji.blogspot.com/2010/08/blog-post_16.html) வாசித்துமுடித்தபோது தாரைதாரையாய் கண்ணில் நீர் வழிந்து கொண்டிருந்தது எனக்கு. இனி மலேசியா வாசுதேவனால் ஒரு வரி கூட பாட முடியாது என்கிற உண்மையை மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. அவரும் மனிதர் தான். அவருக்கும் நோய் வரும். இப்படியான சிக்க்லகள் வரலாம் என்றெல்லாம் ஒப்புக்கொள்ள மறுக்கும் அறிவை எந்தக் குப்பைக்கூடையில் தூக்கியெறிய? இந்தக் கட்டுரையை வாசித்தவர்களெல்லோரும் ஒரு சொட்டு கண்ணீராவது விட்டதைக் கண்டேன்.

விஜய், ரஜினி போன்றவர்கள் மசாலா தவிர வேறு படங்களில் தங்களுக்கிருக்கும் இமேஜை மீறி வித்தியாசமாக நடித்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கும் சராசரி ரசிக மனநிலையில் இருக்கிறோமோ என்கிற சந்தேகம் வந்ததெனக்கு. ஆனால் யோசித்ததில் அப்படி ஒப்பிடுவது தவறென்று படுகிறது.

பிம்பங்களுக்கு மனிதர்கள் ஆட்பட்டிருந்தாலும், சாவித்ரி விஷயத்திலோ, மலேசியா வாசுதேவன் விஷயத்திலோ ஒப்புக்கொள்ள மறுத்து வேதனைப்படுகிறோம் என்பது அக்கலைஞர்களின் கலையை நாம் எந்தளவு நேசித்தோம் என்பதன் வெளிப்பாடு.  தான் நேசிக்கும் கலைஞர்களுக்கு ஒன்று என்றால் துடித்துப்போவது வெறும் ரசிக மனநிலை என்று புறந்தள்ள முடியவில்லை. அதன் பின்னால அடிநாதமாய் இயங்கிக்கொண்டிருப்பது மனிதநேயம். ஆம்! மனிதநேயம்தான். அது நமக்குப் பிடித்த கலைஞர்களாகவோ அல்லது வேறு யாராகவோ இருக்கையில் இன்னும் கூடுதலாய் வேதனைப்படுகிறோம்.

பிம்பங்களின் பிடியிலிருந்தாலும் மனிதநேயத்தில் தானே இயங்குகிறது இவ்வுலகம்!

Wednesday, February 02, 2011

பத்திரிகைத்துறைக்கு வருவதற்கு முன்னும் பின்னும்


நான் சாஃப்ட்வேர் துறையில் இருந்தபோது என்னோடு கூட பணியாற்றிய ஒருவருடன் இன்று இணையம் மூலம் பேசினேன். அவரோடு உரையாடுகையில் தான் உணர்ந்தேன். நான் முன்பு வாழ்ந்த வாழ்க்கைக்கும், இப்போது வாழும் வாழ்க்கைக்குமான வேறுபாடு.

அப்போது எனக்கு ஊதியம் அதிகம். இப்போது பெறுவதை விட சரியாய் இரண்டு மடங்கு. அதையும் கூட சேமித்ததில்லை. குறுந்தகடு வெளியிடுவது, பதிப்பகம் வைத்து நூல்கள் வெளியிடுவது என்று செலவு செய்து வாழ்ந்த வாழ்க்கை அது.  ”வியர்வையின் குரல்” என்கிற புதுகை பூபாளம் கலைக்குழுவின் இசைப்பேழைக்காக மட்டும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவானது. இப்போது அப்படியான வெளியீட்டு முயற்சிகளையோ, பதிப்பக முயற்சிகளையோ நினைத்துக்கூட பார்க்க முடியாது. அப்போது இரண்டு அறைகள, ஒரு கூடம், சமையலறை கொண்ட இப்போதுள்ளதை விட கொஞ்சம் பெரிய வீடு..நண்பர்கள் புடைசூழ எப்போதும் நிறைந்திருக்கும் வீடு. வெளியூர்களிலிருந்து வரும் இயக்கத்தோழர்கள் பலர் எங்கள் வீட்டில் தான் தங்குவார்கள். எல்லோரும் எந்த விகல்பமுமின்றி ஒன்றாக வாழ்ந்த வீடு அது. ஆதம்பாக்கத்தில் இருந்தோம் அப்போது. நான் அப்போது Web programmer ஆக இருந்ததால் உருப்படியாக இரண்டு விஷயங்கள் செய்தேன். தமுஎகசவிற்கென்றும் தீக்கதிர் நாளிதழுக்கென்றும் தனியாக இரண்டு இணையதளங்கள் வேண்டுமென்பது என் நெடுநாளைய கனவாய் இருந்தது.

சண்முகராஜ் வேண்டிய இமேஜ்கள் எல்லாவற்றையும் செய்து தர நான் இணையதளத்தை டிசைன் செய்தேன். தமுஎகச இணையதளம் எப்படி அமையவேண்டும் என்பதை ஒரு நாள் இரவு
ச. தமிழ்ச்செல்வன், நண்பர் ரமேஷ் (கீற்று) , நான், சண்முகராஜ் நால்வரும் அமர்ந்து எங்கள் வீட்டில் இரவு முழுவதும் பேசிப் பேசி.. பேச்சு பின்னர் பொதுவான அரசியல், பண்பாட்டுத்தளத்திற்குச் சென்று....மூன்றரை மணிக்கே தூங்கினோம்.  மென்பொருள்துறையில் இருந்துகொண்டு சமூகம் பற்றி சிந்திப்பவர்கள் மிகக்குறைவு. அது முடிஞ்சவன் பொழைச்சுக்கோ என்கிற கொள்கை உள்ள ஒரு துறை. அதில் ரமேஷ் வித்தியாமானவராய் நின்றார். சிற்றிதழ்களை வாங்கி கீற்று.காமில் இலவசமாக வெளியிட்டார். அப்போது நான் என்னைப் போல் ஒருவரைப் பார்த்தேனென்றால் அது ரமேஷ் ஒருவராகவே இருந்தார். இன்றைக்கு நிறைய இளைஞர்கள் ஐ.டி. துறையிலிருந்து பல்வேறு இயக்கங்களில் செயல்படுவதைப் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது.

சரி. அதிருக்கட்டும். விஷ்யத்திற்கு வருகிறேன். தமுஎகசவின் இணையதளத்தை உருவாக்கி முடித்துவிட்டு திருவண்ணாமலை தமுஎகச மாநாட்டில் அறிவித்தோம். மிக சந்தோஷமான தருணமது. தோழர் தமிழ்ச்செல்வன் என்னையும் சண்முகராஜையும் மேடைக்கு அழைத்து இணையதளம் உருவாகியிருப்பதை அறிவித்தார்.  முதன்முதலில் “மகளே” என்று அப்போது என்னை அழைத்தார் தமிழ்ச்செல்வன். இன்றளவும் என்னை கலவையான உணர்வுகளுக்குள் ஆழ்த்தும் ஒற்றைச்சொல்லாக அந்த “மகளே” உள்ளது.  அப்போது ரமேஷும் மாநாட்டுக்கு வந்திருந்தார். அவருக்குத் திருமணமாகவில்லை அப்போது. அதன்பின்னர் ரமேஷின் திருமணம் நடந்தது. அவருடைய திருமணத்தில் திருவுடையானும் நானும் இயக்கப்பாடல்கள் கொண்ட கச்சேரி பாடினோம். இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது ரமேஷ் - பிரியா தம்பி திருமணம். சீமான், சுபவீ, ஜெயபாஸ்கரன், ஞானி உள்ளிட்ட பலரும் வந்து வாழ்த்தினார்கள். .

அதன்பின்னர் தீக்கதிருக்கான இணையதளத்தை உருவாக்குவதில் மும்முரமானேன். இன்றைக்கு தீக்கதிர் இணையதளம் ஒரு நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டாலும், அதன் முதல் முயற்சியும், முதல் இணையதளம் நான் தான் உருவாக்கினேன் என்பதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியும் திருப்தியும். இதிலும் சண்முகராஜின் உழைப்பு பெரும் பங்கு வகித்தது. எனக்கு போட்டோஷாப், பிளாஷ் வகையறாவெல்லாம் எதுவும் தெரியாது. சண்முகராஜ் தான் இதையெல்லாம் செய்து கொடுத்தது. இருவரும் இணைந்து செய்த முயற்சியால் தீக்கதிர் இணையதளம் உருவானது. அன்றைய சி.பி.எம். மாநிலச் செய்லாளர் என்.வரதராஜன் இணையதளத்தை துவங்கி வைத்தார். அது மற்றொரு சந்தோஷமான தருணம்.

இந்த வேலையெல்லாம் செய்துகொண்டிருந்தாலும் இடையிடையே தீக்கதிர் நாளிதழுக்காக தோழர் குமரேசனும் தோழர் மயிலைபாலுவும் அவ்வபோது அளிக்கும் அசைன்மெண்டுகளை என் விடுமுறை நாட்களில் செய்வேன். எனக்கு இந்த வேலை பிடித்திருந்தது. ரொம்பப் பிடித்திருந்தது. பேசாமல் வேலையை விட்டுவிட்டு பத்திரிகைத்துறைக்குச் சென்றாலென்ன என்று தோன்றியது. அதற்கு முக்கிய காரணம் தோழர் அ.குமரேசன் கொடுத்த ஊக்கம்தான். மனம் ஒரு குரங்குதானே. இடையில் ஒரு முறை தமுஎகசவின் பயிற்சி முகாம் ஒன்று காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் நடந்தது. அம்முகாமிற்கு வந்த பேராசிரியர் ச. மாடசாமியின் பேச்சில் லயித்துப்போன நான் அன்று பூராவும் டீச்சராக வேண்டும் என்று..அதிலும் குழந்தைகளுக்கு டீச்சராக வேண்டுமென்றும் கனவு காண ஆரம்பித்தேன்.

அப்போதுதான் தோன்றியது ...நான் ஏன் அந்த வேலை செய்யவேண்டும்..இந்த வேலை செய்ய வேண்டுமென்று குரங்கு போல தாவித்தாவி யோசிக்கிறேன் என்று சிந்தித்தேன். என் இயல்புக்கு கொஞ்சம் கூட பொருந்தாத ஒரு மென்பொருள் வல்லுனராய நான் வேலை பார்ப்பதைவிட கலையோடு தொடர்புடையை, இலக்கியத்தோடு தொடர்புடைய், மக்களோடு தொடர்புடைய ஏதாவதொரு பணியை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாமே என்று நினைத்தேன். ஆனால் பெரும் ஊதியம் வாங்கும் நான் அதை விட்டுவிட்டு வந்தால் என்னை உலகம் என்னை பைத்தியம் என்று தான் சொல்லும். அதனால் சமயம் பார்த்துப் பொறுத்திருந்தேன்.

அந்தச் சமயமும் வந்தது உலகப் பொருளாதார நெருக்கடி (Recession).எங்கள் கம்பெனியில் சேர்ந்து 6 மாதத்தில் கன்பர்ம் பண்னுவார்கள். கன்பர்ம் பண்ணியவர்களை வேலையை விட்டுத்தூக்குவதில் நடைமுறை சிக்கலிருந்ததால், சேர்ந்து ஆறுமாதங்கள் ஆகாதவர்களை முதலில் வேலையை விட்டு அனுப்பினாரக்ள். அதில் நம்ம வேலையும் காலி. துயரமும் கவலையும் வருவதற்கு பதில் சந்தோஷமும் நிம்மதியும் வந்தது. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்கிற கேள்வி இருந்தாலும் கூட எனக்குப் பிடித்தமான மீடியா துறையில் செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு என்று தோன்றியது. வந்துவிட்டேன்.

அதைவிட இதில் சம்பளம் குறைவுதான். ஆனால் ஒரு கேபினுக்குள் அமர்ந்துகொண்டு யாருக்காகவோ டாட் நெட்டையும், ஏ.எஸ்.பி.யையும், ஜாவாஸ்கிரிப்டையும் படிக்க வேண்டியதில்லை. கூகுள் சர்ச் போக வேண்டியதில்லை. மூளையை யாருக்கோ வாடகைக்கு விடவேண்டியதில்லை என்று குதூகலித்தது மனம். பெரும் விடுதலை கிட்டிய உணர்வெனக்கு.

இதோ.. இன்று நான் ஒரு பத்திரிகையாளர். அதே சிஸ்டம், அதே கேபின், அதே கூகுள்.. ஆனால் தேடுபொருள் வேறு. Product வேறு. என் product ஐ பயன்படுத்தப்போவது யாரென்றே தெரியாத நிலையில்லை. என் சாஃப்ட்வேர் துறையில் மக்களுக்காக, இயக்கத்துக்காக என்று செய்ய நினைத்ததை செய்ய எனக்கு பெரும்பொருள் தேவைப்பட்டது. அது இணையதள உருவாக்கமாக இருந்தாலும் சரி..பதிப்பகம் வைத்து நூல்கள், சி.டி.க்கள் போடுவதாக இருந்தாலும் சரி. இப்போது என்னிடம் அத்தனை பணமில்லை. ஆனால் அப்போதிருந்ததை விட இப்போது இன்னும் அதிகமான மக்களைச் சென்று சேர்வதாய் உணர்கிறேன்.

சாஃப்ட்வேரில் ஒவ்வொரு பாராட்டும் பணமாக உருமாறும். ஒவ்வொரு இடித்துரைப்பும் பணிமீதான மிரட்டலாக ஒலிக்கும். ஆனால் பத்திரிகைத்துறையில் ஒவ்வொரு பாராட்டும் என் முடிவு சரிதானென்று எனக்குக் கூறிக்கொண்டேயிருக்கின்றது. ஒவ்வொரு இடித்துரைப்பும் என்னை மென்மேலும் வளர்த்துக்கொள்ள உதவுகின்றது. 

முகம் தெரியாத வாசகர்கள் நம் எழுத்தைப் பார்த்து எழுதும் கடிதங்க்ளிலும், தொலைபேசியிலும் மின்னஞ்சல்களிலும் கூறும் வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது எனக்கான தேடலும் வெளியும்.

என் வேலையைப் பறித்த உலகப் பொருளாதார நெருக்கடிக்கு நன்றி!
Thank you Recession! 

Saturday, January 08, 2011

இரவைக் கொண்டாடுவோம்

(புத்தகச்சந்தையை ஒட்டி 7.1.2011 அன்று மாலை வெளியிடப்பட்ட “இரவு” நூலிற்காக எழுதப்பட்ட கட்டுரை இது. கவிஞர் மதுமிதா தொகுத்த இந்நூலில் 36 எழுத்தாளர்கள் தங்களுடைய இரவு குறித்த கருத்துகள், மனப்பதிவுகள், அனுபவங்கள், கதை, கவிதை ஆகியவற்றை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்கள். சந்தியா பதிப்பம் இதனை வெளியிட்டுள்ளது)



இரவு 10 மணியானால் என் தந்தை இப்படி சொல்வார்

“என் சாம்ராஜ்ய நேரம் தொடங்கிசிடுச்சு”

உண்மைதான். எனக்கும் அப்படியே. ஊரெல்லாம் உறங்கத் தயாராய் இருக்கும் பொழுதில் நாம் மட்டும் ஏதோ ஒரு வேலைக்காக தயாராவது ஒரு வித கர்வத்தையளிக்கும். படிக்கிற காலத்தில் நான் படிக்க அமருகிற நேரம் இரவு 10 மணியாய் இருக்கும். விடிய விடிய என்னால் அதிகாலை 4 மணி வரை கூட படிக்க முடியும். ஆனால் 10 மணிக்குத் தூங்கி காலை 4 மணிக்கு எழ மட்டும் என்னால் முடியாது.

”ஊரே விழிக்கும் வேளையில் தூங்குகிறாய். ” என்று அதிகாலையில் விழித்து விடும் என்னுடைய நண்பர்கள் கேட்பார்கள். இந்த தலைகீழ்த்தன்மை எனக்குப் பிடித்திருக்கிறது. இரவு எப்போதும் என்னை தாலாட்டியதில்லை. மாறாக உற்சாகம் கொள்ள வைக்கிறது.

இசை கேட்கும் இரவு, இலக்கியம் வாசிக்கும் இரவு, நண்பர்களுடன் பொழுதுபோக்கும் இரவு, மேடையில் கழியும் இரவு, தனிமை கனத்திருக்கும் இரவு, உற்சாகம் பொங்கும் இரவு, எழுதத் தூண்டும் இரவு என்று பல இரவுகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் பொதுவாகவே எழுத்துக்களில் இரவு என்பதை இருளாகவும், இருளை கருப்பாகவும், கருப்பை துக்கத்தின் அல்லது ஒரு நெகடிவ் தன்மைக்கான குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.  பகல் ஒளி மிகுந்தது. வெளிச்சமானது; அதில் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை; எல்லோருடைய கண்களும் பார்க்கும் வண்ணம் பகலில் தவறுகள் நிகழாது என்கிற மாயத்தோற்றம் உண்டு. உண்மையில் தவறு செய்ய நினைப்பவருக்கு பகலென்ன இரவென்ன? சொல்லப்போனால் இரவுகளில் வீட்டில் காத்திருக்கும் துணையோ, உறவோ ஏதோ ஒன்றிற்காக வீட்டிற்குத் திரும்பும் நெருக்கடி நிறைய பேருக்குண்டு. ஆகவே தவறுகள் அல்லது தவறுகள் என்று கருதப்படுபவையெல்லாம்  அதிகமாக பகலில் நிகழவே வாய்ப்பு அதிகம்.

மனிதன் தூங்கும்போதுதான் தப்பு செய்யாமலிருக்கிறான் என்று யாரோ சொன்ன பொன்மொழி உண்டு. ஆகவே ஊர் உறங்கும் இரவில் நிகழும் தவறுகளை விட பகலில் நிகழும் தவறுகள் அதிகமாக இருக்கக் கூடும். இரவு என்பதை துக்கத்தின் குறியீடாகவும், தவறுகளின் குறியீடாகவும் திரைப்படங்களிலும், கதைகளிலும், கவிதைகளிலும் காண்கிறோம். என்னைப் பொறுத்தவரை இரவு கொண்டாட்டத்திற்குரியது. இரவை நான் கொண்டாடுகிறேன்.

ஊர் அடங்கிய பின்னர் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வரும் சன்னமான இசை ஆளை மயக்கும். என் சிறுவயதில் பள்ளிப் பிராயத்தில் இசையில்லாத இரவுகளே இல்லை எனலாம். ஒரு வானொலிப்பெட்டி வீட்டில் இருந்தது. நான் படித்தாலும், எழுதினாலும், அந்த வானொலியில் திரைப்படப்பாடல் ஒலித்துகொண்டேயிருக்கும். பகல் பூராவும் துள்ளல் இசைப்பாடல்களை ஒலிபரப்பினாலும், இரவுகளில் மட்டும் வானொலியில் எனக்கு மிகவும் விருப்பமான மெலடி பாடல்கள் ஒலிபரப்பாகும்போது அதை விட மனசிருக்காது. வானொலியைக் கேட்டுக்கொண்டே எல்லாவற்றையும் செய்வேன். ”ரேடியோ கேட்டுக்கிட்டே படிக்கிறியே? எப்படி மனசில் பதியும்” என்று அம்மா திட்டிக்கொண்டே இருப்பது இன்னமும் காதில் ரீங்காரமிடுகிறது. ஆனாலும் விடமாட்டேன். இரவுகளிலும் இது தொடரும்.  அதிகாலையில் எழுந்து படித்தால் நன்றாக மனதில் பதியும் என்று பிறர் சொன்னதைக் கேட்டு நான் சிலநாட்கள் அதையும் முயன்றிருக்கிறேன். ஆனால் அதிகாலை கண்விழிப்பு எனக்கு தூக்கத்தையே கொடுத்தது. என் உடல் அப்படி பழகியிருந்தது எனக்கு மிகப்பெரும் பிரச்சனையிருந்த்து. அதனால் வழக்கம் போலவே இரவுகளையே தேர்ந்தெடுத்தேன் படிப்பதற்கு. உறங்கச் செல்லும் வேளையில் இளையராஜாவின் இசை எனக்கு கைகொடுத்திருக்கின்றது.

என் நண்பர்கள் என்னை ‘ராப்பிசாசு’ என்றும் ‘ராக்கோழி’ என்றும் செல்லமாய் அழைப்பார்கள். இரவில் படிக்கும் பழக்கமே பின்னாளில் என் பணிகளையும் இரவுகளில் செய்ய வைத்தது. பணிநிமித்தம் முக்கியமான கட்டுரை எழுதவேண்டுமென்றால் அவ்வபோது அதை இரவுக்குத் தள்ளிப்போட்டு எழுதுவேன். என்னுடைய பயணங்கள் அனைத்துமே இரவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். இரவுப்பயணம் அலாதியானது. அதிலும் ரயிலில் இரவுப் பயணம் அற்புதம்.

ஒரு நொடி கூட உறங்காமல் விழித்திருந்த இரவுகள் நிறைய உண்டு. அவை பெரும்பாலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய கலை இரவுகள் தான். “சிவராத்திரிக்கு கண்விழிக்கும் நீங்கள் ஒரே ஒரு நாள் இந்த கலை இரவுக்காக கண்விழியுங்கள்” என்று பிரசாரம் நடக்கும்.  நாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கூட கலை இரவுகள் களைகட்டும். நான் கலை இரவுகளில் இயக்கப் பாடல்களைப் பாடுவேன். விடிய விடிய கண்விழித்து கலை நிகழ்வுகளைக் காண வரும் மக்கள் கூட்டத்தைப் பார்க்க வியப்பாகவே இருக்கும். அதிலும் நாகப்பட்டினம் நகரில் நடக்கும் கலை இரவு ஊர்த்திருவிழா போல. சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தெல்லாம் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் டிராக்டர்களிலும், வேன்களிலும் மாலை 6 மணியிலிருந்தே வந்து அவுரித்திடலை நிரப்பி விடுவார்கள். வங்கக்கடலே திடலில் வந்து சங்கமமானதைப் போல பார்க்க அத்தனை ஆனந்தமாயிருக்கும். அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் இந்த கலை இரவில் பாடுவது அதிலும் மக்கள் பாடல்களை அவர்களுக்காக பாடுவது என்பது மிகுந்த மனநிறைவையும் உற்சாகத்தையும் கொடுக்கும். நான் முதலில் ஒரு பார்வையாளராகத்தான் கலை இரவிற்குச் செல்லத் தொடங்கினேன்.  என்னை மாற்றிய பெருமையும் இந்த கலை இரவிற்கு உண்டு.

எத்தனையோ கற்றுக்கொண்டேன் அந்த கலை இரவுகளில். வாழ்க்கையை, மக்கள் பிரச்சனைகளை, நம்மை மீறிய ஒரு உலகமிருப்பதை எனக்கு என் பள்ளிப்பருவத்திலேயே அடையாளம் காட்டியது கலை இரவுகள் தான். கலை இரவுகளை நான் அதிகம் நேசிக்கிறேன். இந்த இருபதாண்டுகளில் கலை இரவு என்னும் வடிவம் பழகிப்போய் அது பழையதாகி இருக்கலாம். மக்களிடம் பேச ஒரு புது வடிவத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமிருக்கலாம். ஆனால் என் வயதையொத்தவர்களிடம் கலை இரவுகள் ஏற்படுத்திய தாக்கத்தை நேரடியாக நான் கண்டிருக்கிறேன். கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், தேவராட்டம் என்று எல்லாவிதமான ஆட்டக்கலைகளையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது கலை இரவு. மண்ணின் கலைகளை ரசிக்கக் கற்றுக்கொடுத்தது. மக்கள் பாடல்களை கரிசல் குயில் கிருஷ்ணசாமி அண்ணனின் குரலில் இரவெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பாரதி கிருஷ்ணகுமார் போன்ற எத்தனையோ சிறந்த உரை வீச்சாளர்களின் பேச்சுக்களைக் கேட்டு என் பள்ளிப்பருவத்தில் கண்ணீர் விட்டிருக்கிறேன். இந்த இரவுகள் தான் என்னை ஆளாக்கின. சமூகத்தை நேசிக்க வைத்தன. என் சுயநலத்தைப் பொசுக்கின. என் வாசிப்பை அதிகப்படுத்தின. அரசியலில் ஆர்வம் கொள்ள வைத்தன. மக்களுக்காய் யோசிக்க, ஒரு சொட்டாவது விழிநீரை வெளியேற்ற வைத்தன, என் கலையை வளர்த்தன. நானும் ஓரிரவில் இரவு 11 மணி வாக்கில் முதன் முதலில் நாகை அருகே திருக்குவளையில் நடந்த கலைஇரவில் மேடையேறிப் பாடினேன். அன்றைக்குக் கிடைத்த மகிழ்ச்சி என் வாழ்நாளில் இனி கிட்டுமா என்று தெரியவில்லை. அன்றையிலிருந்து நிறைய மேடைகள், எத்தனையோ நகரங்களில் கிராமங்களில் என்று இயக்கப்பாடல்களைப் பாடியாகி விட்ட்து.

இன்று ஒரு பத்திரிகையாளராய் நானிருக்கிறேன். எழுதுகையில் இரவுகளில் எழுதினாலும் அது என்றைக்கு யாரை எப்போது எப்படி சென்றடைகிறது என்பது நமக்குத் தெரியாது. இதைவிடவும் எனக்கு ஒரு கலைஞராய் கலை இரவில் மக்களிடையே பாடுவது அதிக மனநிறைவையும், மகிழ்வையும் அளித்தது. இந்த இரவு வீணாகவில்லை. உருப்படியாய் எதோ செய்கிறோம் என்கிற நிறைவை அளித்தது.

ஒவ்வொரு கலை இரவை முடித்துவிட்டு வந்தபின்னும், பல இரவுகள் நானும் என் பெற்றோரும் அதுகுறித்து சிலாகித்துப் பேசியவண்ணம் இருப்பதெல்லாம் இப்போதும் மனக்கண்ணில் நிழலாடுகின்றன. என் தந்தை தமுஎகசவின் மாவட்டச் செயலாளராய் இருந்தார். அதனால் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார். அவரும் ஒரு ராக்கோழி என்பதால் எல்லா வேலைகளையும் இரவுகளில் தான் செய்வார். அம்மா “அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு” என்று என்னை கேலி பேசுவார்.

என் படிப்பை முடித்துவிட்டு பணிநிமித்தம் நான் செனைக்கு வந்தபோது சென்னை சட்டென்று இரவு 10 மணிக்கெல்லாம் உறங்கும் நகரமாகிவிடுவதைப் பார்க்க வியப்பாய் இருந்தது. எங்கள் ஊரில் திரைப்படத்திற்குச் செல்வதென்றால் பெரும்பாலும் இரண்டாவது காட்சிக்குத்தான் செல்வோம் இங்கே 10 மணிக்கு நகரம் உறங்கிவிடுவதைப் பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது. ’தூங்கா நகரம்’ என்ற பெயருக்காகவே மதுரையை மிகவும் பிடிக்கும்.

ஒரு நேரத்தில் என் வேலை போய், வீட்டிற்கு வாடகை கொடுக்க இயலாத சூழலில் வீட்டை காலி செய்து பொருட்களையெல்லாம் நாகையில் உள்ள பெற்றோர் வீட்டில் கொண்டு வைத்துவிட்டு நான் மட்டும் தோழர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் ஒரு வீடு. ஏராளமான நண்பர்களைப் பெற்றிருக்கும் நான் ஓரிடத்தில் தங்க இயலாமல் போகும்போது இன்னொரு தோழியோ தோழனோ கைகொடுத்த நிலைமை இருந்தது. தோழர்கள் ஓவியா, நீலகண்டன், அமுதா, ரேவதி, நீதிராஜன், ஜாஃபர், நா.வே.அருள், அ.குமரேசன், லட்சுமி, கலைமுகில், ராஜன்குறை, மோனிகா, மலர்விழி, மல்லிகா, கல்பனா, பாரதி புத்தகாலயம் சிராஜுதீன், அ.மங்கை போன்ற பலருடைய வீடுகளிலும், தமுஎகசவின் மாநிலக்குழு அலுவலகத்திலும் குறைந்தபட்சம் ஒரு இரவாவது தங்கியிருக்கிறேன்.

மாலை அரை அலுவலகம், அதன்பின்னர் கூட்டங்கள் அல்லது தோழர்களை சந்தித்தல் என்று இரவு வரை தாக்குபிடித்தாலும் இரவு 9 மணிக்கு எங்கு போவது என்ற கேள்வி எழும். யார் அந்த நேரத்தில் ஊரில் அல்லது வீட்டில் இருக்கிறார்கள் என்று கைபேசியில் பேசிவிட்டு அங்கே போய்விடுவது வழக்கம். எனக்கென்று ஒரு டி.வி.எஸ். சாம்ப் இருக்கிறது. அதனால் எத்தனை மணியானாலும் இரவில் எங்கு வேண்டுமானாலும் போய்விடும் வசதி இருந்த்து. “டான் குயிக்ஸாட்டின் குதிரை போன்றது உங்கள் வாகனம். டான் குயிக்ஸாட் தனது குதிரை இரவு எங்கே களைத்து நிற்கிறதோ அங்கே தங்கி விடுவான். அது போல்வே இரவு இறுதியாக உங்கள் வண்டி நிற்கிறதோ அங்கே தங்கி விடுகிறீர்கள்” என்று ஒரு முறை கவிஞர் லீனா மணிமேகலை என்னிடம் கூறியதை அவ்வபோது நினைத்துக்கொள்வேன்..

தோழர்கள் நீலகண்டன், அமுதா, மலர்விழி – இவர்களோடுதான் அதிக இரவுகளை கழித்திருக்கிறேன் அந்த காலகட்டத்தில். அப்போது மலர்விழிக்கு சொந்தமான அச்சகம் ஒன்றில் நீண்டநாள் தங்கியிருந்தேன். மறக்க முடியாத இரவுகள் அவை.

நான் நேசிக்கும் இரவுகள் எனக்கு பெரும் சோதனையாய் அமைந்த காலமும் வந்தது. அப்போதுதான் ஈழத்தின் பேரவலமும், நெஞ்சில் நீங்காத காயத்தை உண்டாக்கிய இறுதிப் போரின் நேரம். அந்த செய்திகளும் காட்சிகளும் கண்டு விம்மி வெடிக்கும் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அந்த அச்சகத்தில் தான் நான் பல இரவுகளை மலர்விழியோடு கழித்தேன். பிரபாகரனின் உடல் என்ற ஒன்றை தொலைக்காட்சியில் கண்டபோது என் சிறுவயதிலிருந்து நேசித்த ஒரு பிம்பம் இப்போதில்லை என்கிற உண்மையை நம்ப மறுத்தது மனம். இரவுகளில் இணையத்தில் மூழ்கி பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்று குழம்பித் தவித்து ஒவ்வொரு புகைப்படமும் வெளியாக வெளியாக உறைந்து போனேன். புலிகள் மேலிருந்த விமர்சனமெல்லாம் மறந்து போய் பித்து மனநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன் அந்த சமயத்தில்.

அன்றாடம் இரவுகளில் இரண்டு மூன்று மணி வரை நானும் மலர்விழியும் அமர்ந்து இணையத்தில் ஈழம் குறித்த செய்திகளை வாசிப்பது படங்களை சேகரிப்பது என்பதை வாடிக்கையாக வைத்திருந்தோம். கோடரிகொண்டு பிளக்கப்பட்ட பிரபாகரனின் கபாலமும், எண்ணற்ற மக்கள கொத்து கொத்தாய் மடிந்த அவலமும் உறங்கவிடாமல் என் இரவுகளை இம்சித்தன. நான் இரவுகளில் வேலை செய்பவளாதலால் என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் போனது. இணையத்தில் கிடைக்கப்பெறும் அத்தனை காணொளிகளையும் படங்களையும் பார்த்துப் பார்த்து குழம்பி பித்து நிலையில் இருந்தேன் எனலாம். இரவுகள் எல்லாமே இணையத்தில் வீணாகின. ஒரு கட்டத்தில் இவற்றில் எந்த புகைப்படத்தையோ காணொளியையோ இனி பார்க்கக்கூடாது என்று முடிவு செய்து தவிர்க்கத் தொடங்கினேன். இது என் இரவுகளை மீண்டும் எனதாக்கிக் கொள்ளும் ஒரு யுக்தி. மீளாத் துயரிலிருந்து என்னை நானே மீட்டெடுக்க நிர்பந்தித்துக்கொண்டேன். இன்று வரை ஈழம் என்ற பெயரில் வரும் எந்த காணொளியையும் படத்தையும் பார்ப்பதேயில்லை நான். இந்த முயற்சி ஓரளவிற்கு கைகொடுத்தது. மீண்டும் என் இரவுகள் எனக்குச் சொந்தமாயின. மீண்டும் இரவுகளில் வேலை செய்யத் தொடங்கினேன். அதன்பின் தான் அதிகமாக எழுத்த் தொடங்கினேன் என்று நினைக்கிறேன்.

ஐஸ்ஹவுஸ் மசூதி போகும் வழியில் ராயப்பேட்டையில் இருந்தது நாங்கள் இருந்த அச்சகத்தின் அலுவலகம். ஒரு கட்டிடத்தின் சின்ன சந்திற்குள் நுழைந்து உள்ளே வந்தால் அச்சகம். அந்த சின்ன சந்தில் இரவில் மட்டும் படுக்க வரும் இரண்டு வயதான் பாட்டிகள் இருந்தார்கள். நான் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தாண்டித்தான் அச்சகத்திற்குள் வருவேன். ஒவ்வொரு முறையும் இருட்டில் அவர்களை மிதித்து விடக்கூடாதே என்று ஜாக்கிரதையாக வருவேன். சிலசமயம் மிதித்துவிடுவதும் உண்டு. அந்த பாட்டிகள் எங்களுக்கு காவல் போலிருந்தார்கள். அவர்களைத் தாண்டித்தான் யாராயிருந்தாலும் உள்ளே வரவேண்டும். ஒரு நாள் விசாரித்தபோது ஒரு பாட்டி சொன்னார் “பகலில் எங்காவது போயிடுவேன். நாலு காசு வேணும்ல சாப்பிட.. நைட்டு எங்கே போறது. தூங்கணுமே. அதான் இந்த சந்துக்கு வந்து படுத்துடுவேன்.” என்றது பாட்டி. அவருடைய மகனும் மகளும் இதே ஊரில் இருப்பதாகவும் ஆனால் இவரை கைவிட்டுவிட்டதாகவும் சொன்னபோது வேதனை அதிகமானது. இன்னொரு பாட்டிக்கும் கிட்டத்தட்ட இதே கதைதான். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருந்தார்கள். இந்த தள்ளாத வயதில் அந்தப் பாட்டிகளின் நடைபாதை வாழ்க்கை துயரமானது.

ஒரு இரவு நான் அலுவலகத்திலிருந்து என் வண்டியில் வந்துகொண்டிருந்தேன். பீட்டர்ஸ் சாலையோர நடைபாதையில் புதிதாய் பளீர் விளக்கொளியில் ஒரு ஷாமியானா பந்தல் போடப்பட்டு கூட்டமாக இருந்தது. சரியாய் கவனிக்காமல் வந்து அச்சகத்தில் புகுந்தேன். திடீரென்று உறைத்தது. இரண்டு நாளைக்கு முன்புதான் நான் வழக்கம்போல இரவு வரும்போது பாட்டி முனகிக்கொண்டிருந்தது. ”வயிறை வலிக்குது” என்றது. மறுநாள் காலையில் பாட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இரண்டு நாளாயிற்று..அவசரமாய் வெளியே வந்தேன். விளக்கு வெளிச்சத்தை நோக்கி நடந்தேன். நடைபாதையிலேயே ஷாமியானா போடப்பட்டு, பளீர் விளக்கொளியில் பாட்டி சவப்பெட்டிக்குள் கிடந்ததைப் பார்த்தேன். இன்னொரு பாட்டி என்னைக் கணடதும் ஓடி வந்து கண்ணீர் விட்டது. நான் ஒரு வார்த்தையும் பேசாமல் அச்சகத்தில் நுழைந்தேன். நடைபாதையில் வாழ்ந்து நடைபாதையிலேயே மறுநாள்  பாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட இருக்கிறது. தாங்க இயலாமல் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினேன். மலர்விழிக்கு கைபேசியில் அழைத்து தகவல் சொல்ல முடியாமல் விம்ம, அவள் உடனே கிளம்பி வந்தாள். அதற்கு முன் நீலகண்டனும், அமுதாவும் வந்து நின்றார்கள். பாட்டியின் உடல் இருக்கும் இட்த்திற்குப் போவோம் என்றார்கள். எனக்கென்னவோ அங்கு போகவேண்டுமென்று தோன்றவில்லை. போகவும் இல்லை. பாட்டியின் சடலம் நடைபாதையில் அன்று இன்னொரு பாட்டி இன்னும் சிலரின் துணையுடனும் இரவு முழுதும் இருந்த்து. அந்த இரவு முழுதும் சவப்பெட்டிக்குள் கிடந்த பாட்டியைப் போலவே நானும் கிடந்தேன் அச்சகத்தினுள்.

நமக்காவது அச்சகம் இருக்கிறது. நண்பர்கள் இருக்கிறார்கள். நடைபாதைவாசிகளுக்கு யாரிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ளும் எனக்கு பாட்டியின் உடலோடு இரவைக் கழித்து இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய இன்னொரு பாட்டியின் உருவம் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறது.

நட்சத்திரங்கள் பகலில் விழிகளுக்குப் புலப்படுவதில்லை. அவை மனிதர்களுக்குக் காட்சி தர தேவைப்படுவதும் ஒரு இரவுதானே?

இரவைக் கொண்டாடுவோம்!


Wednesday, October 20, 2010

வன்மம் உருவாகும் காலம்

அலுவலக வேலையாக தி.நகரில் உள்ள ஜவுளிக்க்டைகளுக்குச் செல்ல வேண்டி இருந்தது. அன்றைக்கு காலையில் வந்து பனகல் பார்க் அருகில் உள்ள புது சரவணாஸ் கடைக்கு எதிரே பாலத்தின் கீழ் உள்ள பார்க்கிங் பகுதியில் என் டிவிஎஸ் சாம்பை நிறுத்தச் சென்றபோது எங்குமே இடமில்லை. தீபாவளி கூட்டம் களை கட்டியிருந்தது. இரண்டு கார்கள் நின்று கொண்டிருந்தன. அவற்றிற்கு இடையே சிறிய இடைவெளி இருந்தது. அதில் கொண்டு சென்று என் வண்டியை நிறுத்தினேன். 


ஒரு காருக்குள்ளிருந்த ஓட்டுனர் இருக்கையிலிருந்தவர் அதட்டலாக “இப்படி வண்டியை போட்டால் நான் எப்படி இறங்குவது?” என்றார். நான் “அந்தப்பக்கமாக இறங்குங்கள். எனக்கு வேறு இடமில்லை வைக்க” என்றேன். அவரோ “இப்படி ஈஸியாக இறங்குறதுக்கு பதிலா அந்தப்பக்கம் போய் இறங்கணுமா?” எனறார். “இதெல்லாம் சின்ன அட்ஜஸ்ட்மென்ட் தானே. எனக்கு வைக்க இடமில்லை. கொஞ்ச நேரத்தில் வந்து எடுத்து விடுவேன்” என்றேன். “எடுக்க முடியுமா முடியாதா?” என்று மிரட்டினார். எனக்கு கோபம் தலைக்கேறியது. “எடுக்க முடியாது. இங்கேதான் வைப்பேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். பின்னால் சன்னமாக “வரும்போது பாரு உன் வண்டியை” என்று முணுமுணுத்தது காதில் விழுந்தது. நான் பாட்டுக்கு நடந்து சென்று மக்கள் திரளோடு கலந்து என் வேலையில் கரைந்து போனேன். 

எல்லாம் முடிந்து வந்து பார்த்தபோது என் வண்டி வைத்த இடத்தில் இல்லை. இரண்டு கார்களையும் காணவில்லை. பகீரென்றது. “இதென்ன கொடுமை? அந்த வண்டியை திருடிச் சென்றவன் என்ன பாடு படுவானோ” என்று நினைத்தவாறே தேடினேன். சற்று தூரத்தில் தென்பட்டது என் வண்டி. அப்பாடா என்றிருந்தது. ஆனால் என் வண்டிக்கு இருபுறமும் நிறைய வண்டிகள். யாராவது வந்து ஒரு வண்டியையாவது எடுத்தாலொழிய என் வண்டி வெளியேற இடம் கிடையாது. எரிச்சலோடு காத்திருந்தேன். 

யாரோ வந்து ஒரு வண்டியை எடுத்து வழி உண்டாக்க, வண்டியை தள்ளினேன். முன் சக்கரத்தில் சுத்தமாக காற்றுஇல்லை. பிடுங்கிவிடப்பட்டிருந்தது. பஞ்சரா என்றும் சந்தேகம் வந்தது. நொந்துகொண்டே வெளியே எடுத்து ஸ்டாண்ட் போட்டு ஸ்டார்ட் செய்தபோது ஸ்டார்ட் ஆகவில்லை.” பெட்ரோலை திற்ந்து விட்டு காலி செய்திருக்கிறார் அந்த பழிவாங்கும் புலி என்று புரிந்தது. நல்லவேளை எதிரிலேயே பங்க் இருந்ததால் தள்ளிக்கொண்டே சென்று பெட்ரோல் போட்டுவிட்டு காற்றடித்தேன். ஸ்டார்ட் செய்ய.. மீண்டும் ஸ்டார்ட் ஆகவில்லை. என்னவென்று காற்று அடித்தவரிடம் கேட்டபோது குனிந்து பார்த்துவிட்டு சொன்னார் “பிளக்கை கழட்டியிருக்காங்க யாரோ” என்றார். இப்போது என்ன செய்வது? கையைப் பிசைந்தேன்.

அவரே வெட்டப்பட்டிருந்த கேபிளை இழுத்து சொருகி ஏதேதோ செய்து ஸ்டார்ட் செய்து கொடுத்தார். “எவன் செஞ்சானோ அவன் நல்லாயிருக்க மாட்டான்” என்று சபித்தார். நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வண்டியில் அலுவல்கம் சென்றேன். ஏதோ வித்தியாசமாய் உணர்ந்தேன் வண்டி ஓட்டுகையில். என்னவென்று பிடிபடவில்லை.  அதன் பின் அலுவலகம் சென்று வேலையில் மூழ்கிப்போனேன்.

மாலையில் வந்து மீண்டும் வண்டியை எடுத்து வீடு வந்து சேர்ந்ததும் மீண்டும் வண்டியை மறந்துபோனேன். மறுநால் காலை வண்டியை எடுத்தபோது கிளெட்ச் கையோடு உடைந்து விழுந்தது. உடனே வெளியே போயாக வேண்டும். அப்படியே போட்டுவிட்டு மூக்கால் அழுதுகொண்டே 80 ரூபாயைக் கொடுத்து ஆட்டோவில் வந்தேன். அன்றைக்கு பூராவும் மனதே சரியில்லை. ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை விடுமுறையாதலால் ஒரு மெக்கானிக் க்டையும் இல்லை. இரண்டு நாள் வரை பேருந்திலும் ஆட்டோவிலும் பயணம் தொடர்ந்தது. திட்டமிட்ட வாழ்க்கையில் கையிலிருந்த காசு போவது அலுப்பையும் சோர்வையும் ஒருசேர ஊட்டின.  திங்களன்று காத்திருந்து காலையில் 9 மணிக்கெல்லாம் சென்று கடையில் கொடுத்த போது சாயங்காலம் தான் கிடைக்கும் என்றார் கடைக்காரர். அன்றும் பஸ், ஆட்டோ, யுவகிருஷ்ணா - பாரதிதம்பி வண்டியின் ஓசி பில்லியன் என்று பயணித்தேன். கையிருப்பாய் இருந்த காசு போகும் எரிச்சலைவிட அந்த காரில் அமர்ந்திருந்தவரின் எரிச்சல் என்னை மிகவும் சோர்வூட்டியது. இன்றுதான் வண்டியை மீண்டும் காலையில் எடுத்தேன். வேறு ஏதாவது கழன்று விழுமோ என்கிற பயத்திலேயே ஓட்டினேன். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை.

மனிதர்களில் இத்தனை வன்மம் நிறைந்தவர்களும் உண்டா? அதிர்ச்சியாகவும் ஆயாசமாகவும், கோபமாகவும், எர்ச்சலாகவும், வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. என் பணம் தீர்ந்ததைவிட இத்தனை வன்மம் கொண்டு தண்டிக்கும் அளவிலான எந்தத் தவறையும் நான் செய்யவில்லை என்கிற் நினைவு என்னைத் துரத்துகிறது. சகிப்புத்தன்மையும், சகமனிதரிடம் காட்டும் அன்பும் குறைந்து வன்மம்,குரோதம்,விரோதம் எல்லாம் எவ்வளவு பெரியதாய் இருக்கின்றன?

இதனால் எனக்கு தண்டனை காலம் மூன்று நாட்கள்.

என் வண்டியை சேதப்படுத்த எடுத்துக்கொண்ட காலம் சில நிமிடங்களே இருக்கும்.

எங்களுக்குள்ளான வாக்குவாதம் நடந்த நேரம் சில நொடிகளே!.

ஆனால் அவருக்கு இந்த வன்மத்தை தூண்டியதற்கான உந்துதல் ஒரு நொடிக்கும் குறைவானதாய்த்தனே இருந்திருக்கும்!

ஒரு கேள்வி மண்டையைக் குடைகிற்து.

”இதுவும் கடந்துபோகும்” என்று அந்த நொடியை அவரால் ஏன் கடக்க முடியவில்லை?