Tuesday, June 28, 2011

"குழந்தைகளுக்காக எழுதுவது ஒரு சவால்!"

படம்: ஜெ.முருகன்

இரா.நடராசன் - தனக்கு அடையாளமாகவே ஆகிவிட்ட 'ஆயிஷா’ குறுநாவலின் ஆசிரியர். ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது 'ஆயிஷா’. நிறைய பேருக்கு 'ஆயிஷா நடராசன்’ என்று சொன்னால்தான் தெரியும். கவிஞர், சிறுகதைஆசிரியர், புதிய புத்தகங்களின் வரவையும் தரத்தையும் சொல்லும் 'புதிய புத்தகம் பேசுது’ இதழின் ஆசிரியர் என்று பல முகங்கள் இருந்தாலும், அவருடைய பணி ஆசிரியப் பணி! பள்ளித் தலைமை ஆசிரியரான நடராசன், குழந்தைகளின் மீதும் குழந்தைகளுக்கான கல்வியின் மீதும் தீராக் காதல்கொண்டவர். அவருடன் உரையாடியதில் இருந்து...

''எழுத்து ஆர்வம் எப்படி ஏற்பட்டது?'

''கரூர் என்னுடைய சொந்த ஊர். என் தந்தை ஒரு நேர்மையான அரசு அதிகாரி. அப்படிப்பட்ட ஒருவரை எப்படி ஒரே இடத்தில் நிரந்தரமாக வைத்திருக்கும் அரசு? அடிக்கடி மாற்றல் செய்வார்கள். அதனால், வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பள்ளிகளில்தான் படித்தேன். தமிழ் வழி, ஆங்கில வழி என்று நகரங்களிலும் கிராமங்களிலும் மாறி மாறிப் படித்தேன். அதனால், நிறைய மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிறு வயதிலேயே 'அம்புலிமாமா’, 'கோகுலம்’ என்றுதான் என் வாசிப்பு தொடங்கியது. பாடப் புத்தகங்களைவிட இவற்றைப் படிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. இப்படித் தொடங்கிய என் வாசிப்பு, பின்னர் படிப்படியாக விரிவடைந்தது. அவ்வப்போது கவிதைகள் எழுதத் தொடங்கினேன். என் முதல் கவிதை 1976-ல் ஆனந்த விகடனில் வெளிவந்தது. பிறகு, கவிதைகளாக எழுதிக்கொண்டு இருந்தேன். அதன் பின் சிறுகதைகள் எழுதினேன். நான் பி.யூ.சி. பயிலும்போது, இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்தேன். வெங்கடேஷ் ஆத்ரேயா போன்றவர்களின் தொடர்பு கிடைத்தது. மார்க்சியம் என்னை ஆட்கொண்டது. நான் முதலில் தீவிர இலக்கியத் தளத்தில்தான் இயங்கத் தொடங்கினேன். 'பாலிதீன் பைகள்’ என்ற என்னுடைய படைப்பு திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் விருது பெற்றது!''



''குழந்தை இலக்கியத்தில் எப்படி உங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டது?''  



''25 ஆண்டுகளாக லட்சக் கணக்கான குழந்தைகளைச் சந்தித்து இருக்கிறேன். சினிமா பார்க்கும் பழக்கத்தை ஒரு பெரிய குற்றச்சாட்டாகக் கூறும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கான நூல்களும்கூட நீதிநெறிக் கதைகள், நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது எப்படி, தீய பழக்கவழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது எப்படி என்பதோடு நிறுத்திக்கொள்கின்றன. இந்தச் சூழலில் குழந்தைகளுக்காகப் புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுவது ஒரு சவால்தான்! 'ஆயிஷா’வை 'ஸ்நேகா பதிப்பகம்’ 40,000 பிரதிகள் அச்சடித்து விற்றது. நிறைய ஆசிரியர் அமைப்புகள், குழந்தை உரிமைகள் தொடர்பான அமைப்புகள் எல்லாம் வரவேற்றன. அப்போதுதான் குழந்தை இலக்கியத்தில் இருக்கக்கூடிய வெற்றிடத்தை உணர்ந்தேன். அதனால், தீவிர இலக்கியத்தில் என்னுடைய பணியாக மொழியாக்கம் மட்டுமே செய்வது என்றும் குழந்தை இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபடுவது என்றும் முடிவு செய்தேன்!''

''இன்றைய பதிப்பு உலகில் குழந்தை இலக்கியத்துக்கு எந்த அளவுக்கு இடம் தரப்படுகிறது?''

''பஞ்ச தந்திரக் கதைகள், அரபிக் கதைகள், அறிவியல் - தொழில்நுட்பம், பொது அறிவு சார்ந்த புத்தகங்கள் நிறைய விற்பனை ஆகின்றன. ஒரு ஐஸ்க்ரீம் அல்லது கோக் கேட்டால் உடனே வாங்கித் தரும் பெற்றோரின் உள்ளம் குழந்தைக்குப் புத்தகம் வாங்கித் தர வேண்டும் என்றால் மட்டும் கொஞ்சம் யோசிக்கிறது. இதன் காரணமாகவே குழந்தைகளுக்கான நூல்களின் விற்பனையில் மந்தநிலை இருக்கிறது. அதனால், குழந்தை எழுத்தாளர்களுக்கு அங்கீகாரமும் கிடைப்பதில்லை. ஒரு சோதனை முயற்சியாகவே குழந்தை இலக்கிய எழுத்தாளர்கள் எழுத வேண்டி இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு, தான் ஒரு குழந்தை என்கிற நினைப்பு ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும்போதே மாறிவிடுவதால் மிகக் குறுகிய காலமே ஒரு குழந்தை தனக்கான நூல்களை வாசிக்கிறது. அதன் பின் மனநிலை மாறிவிடும். ஆகவே, குழந்தை இலக்கியத்துக்கான சந்தை என்பது மிகக் குறுகியதாக இருக்கிறது. இந்தச் சூழலிலும் யூமா வாசுகி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் பாராட்டத் தக்க வகையில் குழந்தை இலக்கியம் படைக்கிறார்கள்!''



''ஆயிஷா உருவான கதையைச் சொல்கிறீர்களா?''

''என்னிடம் பயின்ற முஸ்லிம் மாணவன் ஒருவன்தான் 'ஆயிஷா’வுக்கான உந்துதலாக இருந்தான். மாணவனைக் கதையில் மாணவி என்று மட்டும் மாற்றிக்கொண்டேன். வகுப்பறை என்பது குழந்தைகளுக்கு ஒரு வெறுக்கத்தக்க இடமாக இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். ஒரு கடையில் ஒரு பொருள் வாங்கும் நுகர்வோருக்கு அந்தப் பொருளில் திருப்தி இல்லை எனில் நீதிமன்றத்துக்குப் போகலாம். ஆனால், நம் சட்டமும் சமூகமும் கல்வி பயிலும் மாணவர்களை நுகர்வோராகப் பார்ப்பது இல்லை. அவர்களுக்கு உகந்த கல்வி இல்லை எனில், அவர்கள் ஆட்சேபிக்கும் உரிமைகூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஆசிரியர் நினைப்பதுபோல் எல்லாம் மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டும் இங்கே! கேள்வி கேட்கக் கூடாது. குழந்தைகள் ஆசிரியர்களிடம் வாதாடக் கூடாது. இந்தக் கொடுமைகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்கும் இதே சமூகத்தில்தான் திண்டிவனம் அருகே ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச் சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தைத் தழுவினான். இதை வைத்து 'ஆயிஷா’வை எழுதினேன். 1985-ம் ஆண்டே 'ஆயிஷா’ எழுதப்பட்டுவிட்டது என்றால் நம்புவீர்களா? அனுப்பிய இடங்களில் எல்லாம் கதை திரும்பி வந்தது. 'ஆயிஷா’ சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது நம் சமூகத்தில் இல்லை. குழந்தைகளுக்கு நம் கல்விமுறையில் அளிக்கப்படும் தண்டனைகளில் ஒரு தவறும் இல்லை என்றேதான் நினைத்துஇருந்தது சமூகம். 10 ஆண்டுகள் விடாமல் முயன்றேன். பின்னர், 1995-ல் 'கணையாழி’ குறுநாவல் போட்டியில் இரா.முருகன், சுஜாதா இருவரும் நடுவராக இருந்து 'ஆயிஷா’வைத் தேர்ந்தெடுத்தார்கள்.''

''நீங்கள் நிறைய அறிவியல் புனைகதைகள் எழுதுகிறீர்கள். தமிழில் இந்த வகையான நூல்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது?''

''தமிழில் ஓரளவு நன்றாகவே இருக்கிறது. 'பூஜ்யமாம் ஆண்டு’, 'சர்க்கஸ்.காம்’, 'மலர் அல்ஜீப்ரா’ போன்ற என்னுடைய நூல்கள் நல்ல விற்பனையில் இருக்கின்றன. என்னுடைய 'பூஜ்யமாம் ஆண்டு’  என்கிற புத்தகம் பார்வை இழந்த குழந்தைகளும் படிக்கும் வண்ணம் ப்ரெயில் முறையிலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. சுஜாதாதான் அறிவியல் புனைகதைகளின் முன்னோடி என்று சொல்லலாம். தமிழில் 'எந்திரன்’ போன்றதொரு சினிமா வருவதற்குக்கூட அறிவியல் புனைகதைகளுக்குக் கிடைத்த வெற்றியைக் காரணமாகச் சொல்லலாம்!''

''தமிழ்ப் பதிப்புலகத்தின் தற்போதைய நிலை குறித்து?''

''தமிழ்ப் பதிப்புலகின் பொற்காலம் இது என்று சொல்லலாம். தொலைக்காட்சி, சினிமா என்று மற்ற ஊடகங்களின் தாக்கத்தை எல்லாம் கடந்து, ஒரு மாதத்துக்கு சராசரியாக 1,000 புத்தகங்கள் வெளிவருகின்றன.  நல்வழிப்படுத்துவது எப்படி, பணம் சம்பாதிப்பது எப்படி போன்ற மத்தியத்தர வர்க்கத்துக்குரிய புத்தகங்கள், பெண்களுக்கான சமையல், சாமியார்களின் ஆன்மிகம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய எண்ணிக்கை இது. ஆனாலும், அற்புதமான முயற்சிகள் பல நடக்கின்றன. உலக இலக்கியங்கள் பல மொழியாக்க நூல்களாக வருகின்றன. உலக சினிமா குறித்த நூல்கள், நோபல் பரிசு பெற்ற நூல்கள் என்று பல முக்கிய நூல்கள் வருகின்றன!''

''இன்றைய கல்வி முறை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?''

''இன்றைய ஆசிரியர்கள் நிறைய பேருக்கு பாடப் புத்தகத்தை அவர்கள் கையில் இருந்து பிடுங்கிவிட்டால், எப்படிப் பாடம் நடத்துவது என்று புரியாத சூழலே நிலவுகிறது. ஆசிரியர்களுக்கு வாசிப்புப் பழக்கம் கட்டாயம் தேவை. பானிபட் போர் குறித்து ஒரு வரலாற்று ஆசிரியர் நடத்துகிறார் என்றால், அந்தப் போரின் முக்கியத்துவம், அதில் பீரங்கி பயன்படுத்தப்பட்டது என்பதை மாணவர்களுக்குச் சொல்வதோடு, பீரங்கி எப்படிச் செயல்படுகிறது என்பதையும் சொல்ல வேண்டும். ஆனால், அது அறிவியல் ஆசிரியரின் வேலை என்று இவர் விட்டுவிடுவார். அதுபோலவே, பீரங்கியின் செயல்முறை குறித்து ஒரு அறிவியல் ஆசிரியர் சொன்னால், கூடவே பானிபட் போர் பற்றியும் சொல்ல வேண்டும். பாடங்களை இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தும் கலை(lnerlinkng of Subjects) நிறைய ஆசிரியர்களுக்குத் தெரிவது இல்லை!''

''உங்களிடம் பயிலும் குழந்தைகளுக்கு நீங்கள் எவ்விதமான பயிற்சி அளிக்கிறீர்கள்?''

''எனக்கு அறிவியல் ஆர்வம் மிகவும் அதிகம். அறிவியல் உலகம் ஓர் அற்பு தமான உலகம். குழந்தைகள் அறிவியல் உணர்வுடன் வளர வேண்டும் என்று விரும்புகிறேன். விண்வெளி காட்சிகளைக் குழந்தைகளுக்குக் காட்டுவதற்காகவே வீட்டில் ஒரு டெலஸ்கோப் வைத்து இருக்கிறேன். அதை ஒரு பெட்டியில் எடுத்துக்கொண்டு ஒரு மாய மந்திரவாதிபோலத்தான் எப்போதும் திரிகிறேன். எப்போது வேண்டுமானாலும் குழந்தைகள் என் வீட்டுக்கு வந்து மொட்டை மாடியில் நட்சத்திரங்களையும் கோள்களையும் விண்வெளியில் தெரியும் அத்தனை விஷயங்களையும் பார்க்கலாம். மதிப்பெண்கள் வாங்குவது முக்கியம் இல்லை. உலகத்தையும் வாழ்க்கையையும் நம்மைச் சுற்றி நடப்பவற்றையும் கூர்ந்து நோக்கி அதன் மூலம் கற்றுக்கொள்வது முக்கியம் இல்லையா?''

''சமச்சீர் கல்வி இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டு இருக்கிறதே?''

''சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் ஓர் ஆசிரியருக்கான அடித்தளம் மிக நன்றாக இருக்கிறது. ஆசிரியர் தனது திறமையை வெளிப்படுத்த, குழந்தைகளுடனான உறவை நெறிப்படுத்த நல்ல வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்குமான இடைவெளி பெருமளவு குறைக்கப்படும். மெட்ரிக் பாடத்திட்டத்தின் சுமைகளைச் சுமந்து திரியும் குழந்தைகளுக்கு விடுதலை கிடைக்கும். 'இந்தியாவில் பள்ளிக்கு வர விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பள்ளிக்கு வர விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையைவிடக் குறைவு’ என்கிறார் அமர்த்தியா சென். எளிமையான பாடப் புத்தகங்கள் குழந்தைகளைப் பள்ளியின் பால் ஈர்க்கும். ஆனாலும், திரும்பத் திரும்ப பாடப் புத்தகங்களை ஒட்டியதாகவே நம் கல்விமுறை இருப்பதை நாம் மாற்றியாக வேண்டும். இந்த ஆண்டு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் தந்திரமாகவே புதிய அரசு செயல்பட்டு இருக்கிறது. ஆனால், இப்படி நிறுத்தப்பட்டு இருப்பது சமச்சீர் கல்வியை மேலும் மேம்படுத்துவதற்கு என்றால் நாம் தாராளமாக வரவேற்கலாம். அதை விட்டுவிட்டு மீண்டும் பாடப் புத்தகங்கள் சார்ந்துதான் கல்விமுறை இருக்கப் போகிறது, பாடப் புத்தகத்தின் சாராம்சத்தை மட்டுமே மாற்றுவேன் என்றால் அதை வரவேற்க முடியாது. சமச்சீர் கல்விப் புத்தகங்களை எழுதியவர்களில் நானும் ஒருவன். இங்கே கல்வித் துறை அதிகாரிகளின் விருப்பப்படியான கல்விதான் வழங்கப்படுகிறதே ஒழிய குழந்தைகள் விரும்பும் கல்வி வழங்கப்படுவது இல்லை. நமக்கு என்று தனியாக ஒரு பாடத்திட்டத்தை வடிவமைக்காமல், அகில இந்திய அளவில் உள்ள சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தையே நாமும் பின்பற்றலாம் என்பது என்னுடைய கருத்து!''

''ஆசிரியப் பணி, எழுத்துப் பணி - இவற்றில் நீங்கள் விரும்புவது எதை?''

''இடது கண், வலது கண் - இரண்டில் எது பிடிக்கும் என்று கேட்பது மாதிரி இருக்கிறது. ஆசிரியப் பணியிலும் நான் குழந்தைகளோடுதான் வேலை செய்கிறேன். எழுத்தின் மூலமும் குழந்தைகளைத்தான் சென்றடைகிறேன். அதனால் இரண்டுமே எனக்குப் பிடித்தவைதான்!''

நன்றி: ஆனந்த விகடன்

No comments:

Post a Comment