Monday, July 18, 2011

கிராமப்புற மாணவர்கள் என்றால் இளக்காரமா?

மச்சீர்க் கல்வி நூல்களை ஆராய உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு உருவாக்கிய குழு, தனது அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டது. விசாரணையின்போது தலைமை நீதிபதி இக்பால் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது, நீதிமன்ற உத்தரவை மீறி பாடப் புத்தகங்களைத் தமிழக அரசு அச்சடித்து வருவது குறித்து விளக்கம் கேட்டார். இதற்குப் பதில் அளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.பி.ராவ், ''சமச்சீர்க் கல்வி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விட்டன. மாணவர்களின் நலன் கருதி ஒரு மாற்று ஏற்பாடாகத்தான் பழைய பாடத் திட்டத்தின்படி புத்தகங்கள் அச்சிடப் படுகின்றன. அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால், இந்தப் புத்தகங்களைப் பயன் படுத்திக்கொள்வோம். இல்லாவிட்டால், சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்களைப் பயன்படுத்திக்கொள்வோம்!'' என்று 'பொறுப்பாக’ப் பதில் சொல்லி இருக்கிறார். இவர்கள் இங்கி-பிங்கி-பாங்கி போட்டு விளையாடுவதற்கு, மக்களின் வரிப் பணம் கோடி கோடியாகச் செலவாகிறது.

500-க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட இந்தக் குழுவின் அறிக்கை என்ன சொல்கிறது? 'மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் வகையில் சமச்சீர்க் கல்வி இல்லை!’ என்கிறது. முன்பு தரம் இல்லை என்றவர்கள் இப்போது, 'பாடச் சுமை அதிகம். சில பாடங்கள் மெட்ரிக் பாடத் திட்ட அளவுக்குச் சுமையுடன் இருக்கின்றன. ஆகவே, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது!’ என்கிறது அறிக்கை. கிராமப்புற மாணவர்களை இளக்காரமாகப் பார்க்கும் போக்கையே, இது எதிரொலிக்கிறது. இந்தியாவின் உச்ச பதவிகளை வகித்த, வகிக்கும் பலர் கிராமப்புறங்களில் படித்து வந்தவர்களே என்கிற உண்மையை உரக்கச் சொல்ல வேண்டி இருக்கிறது!
மின்னல் வேகத்தில் தயாராகி இருக்கும் 

இந்த அறிக்கைக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திராவிடர் கழகத்தின் மாணவர் அணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் அறிக்கையை எரிக்கும் போராட்டம் நடத்தினர். இத்தனைக் களேபரங்களுக்கு நடுவில் சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்த தி.மு.க. தலைமை மௌனம் காக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி இது குறித்து அறிக்கை வெளியிட்டதோடு சரி. முந்தைய தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்து சமச்சீர்க் கல்விக்கு வழிசெய்து கொடுத்த தங்கம் தென்னரசுவிடம் இது குறித்துப் பேசியபோது...

''முதலில் இந்த அறிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். தமிழ் நாட்டில் 85 சதவிகித மாணவர்கள் தமிழ் வழியில் அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயில்பவர் கள். இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர்கூட அரசு நியமித்த குழுவில் இல்லை. தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர்கூட குழுவில் இல்லை. உண்மையான கல்வியாளர்களும் இல்லை. தமிழே தெரியாதவர்கள் எப்படித் தமிழ் வழிப் புத்தகங்களைப் படித்து, அதன் தரம் குறித்து கருத்து சொல்ல முடியும்? ழிசிணிஸிஜி யில் இருந்துகூட தமிழ் அறிந்த ஒருவரைக் குழுவில் சேர்க்கவில்லை அரசு. இந்த அறிக்கை எப்படி நியாயமானதாக இருக்கும்? நான்கு நாட்கள் மட்டுமே கூடி, இரண்டு நாட்கள் மட்டுமே விவாதித்து, இவ்வளவு குறுகிய காலத்துக்குள் எப்படி இவர்களால் அத்தனை புத்தகங்களையும் படித்து அதன் தரம் பற்றி கருத்து கூற இயலும்?
இது ஒரு பக்கம் என்றால், உச்ச நீதிமன்றம் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு இப்போது இருக்கும் சமச்சீர்க் கல்வி நூல்கள் அப்படியே தொடர வேண்டும் என்றது. ஆனால், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அந்த நூலில் சில பகுதிகளைக் கிழிக்கிறார்கள். மறைக்கிறார்கள். இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?'' என்று கேட்கிறார்.

''தி.மு.க. தலைவரின் துதி பாடும் பகுதிகள் இருப்பதாகவும், அதைத்தான் கிழிப்பதாகவும் அரசு கூறுகிறதே?''

''கலைஞரின் செம்மொழிப் பாடல் இருக்கிறது. அதில் அவர் குறித்த துதியா இருக்கிறது? அப்படியே அது இருக்கக் கூடாது என்றாலும் கலைஞர் சொன்னதுபோல், அதை எடுத்துவிட்டுப் பயன்படுத்த வேண்டியதுதானே?

இதே அ.தி.மு.க. அரசு ஆளுநர் உரையில், திருக்குறளை அரபு, சீன, ஆங்கில மொழி யில் மொழியாக்கம் செய்யப்போவதாகச் சொன்னது. ஆனால், வள்ளுவரின் படத்தைப் பாட நூல்களிலேயே மறைக்கிறார்கள். லாட காந்தம், சட்ட காந்தம் பற்றி ஒரு பாடம். இதில் சட்ட காந்தத்துக்குக் காலங்காலமாக சிவப்பு வண்ணம் தான் பூசப்பட்டு வந்தது. இது அறிவியல் உண்மை. இதில் கறுப்பு-சிவப்பு நிறம் என்பது தி.மு.க. என்று முத்திரை குத்தி, அதைக் கிழிக்கச் சொல்லி இருக்கிறார்கள். இந்த அரசுக்கு அடிப்படை அறிவியல் அறிவு கூட இல்லைபோல! சூரிய கிரகணம் குறித்த பாடத்தில் சூரியன் படம்தானே வரும்? அதையும் மறைத்தாயிற்று!

இது இப்படி என்றால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 10-ம் வகுப்பில் திராவிட இயக்க வரலாறு, நீதிக் கட்சியின் தோற்றம், பெரியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் போன்றவர்கள் குறித்து வரும் பாடம் ஆட்சேபகரமான பகுதி என்கிறார்கள். இதில் இருந்து சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்யும் சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதோடு, அதைக் கொண்டுவந்த நல்ல பெயரையும் கலைஞர் பெற்றுவிடக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்!'' என்று பொங்கிப் பொருமுகிறார் தங்கம் தென்னரசு.

அரசு நியமித்த குழுவின் அறிக்கை குறித்து கல்வியாளர்களின் கருத்தறிய பேராசிரியர் கல்யாணியிடம் (பிரபா கல்விமணி) பேசினேன். ''இத்தனை அவசரமாக, குறுகிய காலத்தில் 40 நூல்களை வாசித்து அறிக்கை தருவது எல்லாம் சாத்தியமா என்று உச்ச நீதிமன்றம் யோசித்திருக்க வேண்டும். தமிழக அரசுக்கு இந்த வாய்ப்பு ஏதுவாக அமைந்துவிட்டது. அதன் விருப்பப்படி தனக்கு வேண்டியவர்களை நியமித்துக்கொண்டது. அந்தக் குழுதான் இப்போது நூல்கள் சரி இல்லை என்கிறது. ஒவ்வொரு நூலும் ஒரு குழுவால் எழுதப்பட்டது. ஒரு வாதத்துக்காக நூல்கள் சரியில்லை என்று வைத்துக்கொண்டாலுமே, 40 குழுக்களுமே சரி இல்லாமலா பாடம் எழுதி இருக்கும்?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

இதற்கிடையில், அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 'சமச்சீர்க் கல்வி குறித்து பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மாணவர்களிடையே பேசக் கூடாது!’ என்று ஆணையிட்டு, அதில் ஆசிரியர்கள் கையெழுத்திடப் பணிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் கையெழுத்திட மறுத்துள்ளனர். சென்னையிலேயே இன்னொரு பள்ளியில் திரு வள்ளுவர் படத்தின் மேல் ஸ்டிக்கர் ஒட்ட மாட்டோம் என்று ஆசிரியர்கள் மறுத்து விட்டதாகவும் தகவல். இப்படி ஆங்காங்கே எதிர்ப்புகள் இருந்தாலும், ஆசிரியர் சங்கங்கள் வாய் திறக்காமல் இருப்பது வியப்பூட்டுவதாக இருக்கிறது.

தமிழக அரசைக் கண்டித்து சென்னை யில் கல்வியாளர்கள் நடத்திய கூட்டத்தில், ''ஊதிய உயர்வுக்காக மட்டும்தான் போராட் டம் நடத்த வேண்டுமா? இது கல்வியின் உயிர் நாடிப் பிரச்னை இல்லையா? இதற்கு தெருவில் இறங்கிப் போராடாவிட்டால், வரலாறு மன்னிக்காது!'' என்றார்கள்.  
ஆனால், பேராசிரியர் கல்யாணியோ இந்த மௌனத்துக்கு இப்படி விளக்கம் கொடுக்கிறார்...

''ஏற்கெனவே, எஸ்மா, டெஸ்மா சட்டம் பாய்ச்சி, ஒரு லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. அதனால், இயல்பாக ஆசிரியர்களுக்கு அச்சம் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதே ஆசிரியர்கள் தி.மு.க. ஆட்சியில் செயல் வழிக் கற்றல் முறை கொண்டுவந்தபோது, அதை எதிர்த்துப் போராடினார்கள். பிறகு, கல்வியாளர்கள் அந்தத் திட்டத்தின் நன்மைகளை எடுத்துரைத்த பின் புரிந்துªகாண்டனர். அப்போது, அவர்களுக்கு அரசின் முடிவை எதிர்ப்பதற்கு உரிய ஜனநாயக உரிமை இருந்தது!'' என்கிறார்.
எது எப்படியோ, அறிக்கை, கண்டனம், போராட்டம், வழக்கு என அனைத்துக்கும் நடுவே தமிழ்நாட்டு மாணவர்கள் திசை அறியாது தடுமாறுவதுதான் வேதனை!

***************

எனக்கு இல்லையா கல்வி?

'கல்விக் களத்தில் தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?’ என்ற தலைப்பில் மனித உரிமைக் கல்வி நிறுவனம் சென்னையில் ஜூலை 9 அன்று ஒரு கலந்தாய்வரங்கம் நடத்தியது. தமிழக அரசின் மீதான கண்டனம் வலுவாக கூட்டத்தில் வெளிப்பட்டது. கல்வியாளர்கள் வசந்திதேவி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், பிரின்ஸ் கஜேந்திரபாபு, பிரபா.கல்விமணி, பேரா.ச.மாடசாமி, புனித பாண்டியன், பேரா.சரஸ்வதி, பெ.மணியரசன், ஹென்றி டிபேன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், பாரதி கிருஷ்ணகுமார் உட்பட பலர் உரையாற்றினர். கூட்டத்தில் வெளியிடப்பட்ட பிரகடனம் இப்படிச் சொல்கிறது - 'குழு அறிக்கையில் உள்ள குறைபாடு களைச் சுட்டிக்காட்ட மற்றொரு அறிக்கை தயாரிக்க வேண்டியிருக்கும். குழுவுக்கு விதிக்கப்பட்ட முக்கிய ஆணை - முந்தைய பாடத்திட்டத்தைவிட சமச்சீர்த் திட்டம் சிறந்ததா எனபதைக் கண்டறிவதுதான். ஆனால், அதைப்பற்றிய கருத்துக்கள் எவையும் சொல்லப்படவில்லை. கிராமப்புறக் குழந்தைகளின் கற்கும் திறன் குறித்தும் கேள்வி எழுப்புகிறது அறிக்கை. அவர்களை இழிவுபடுத்தும் இந்த வர்க்க கண்ணோட்டம் ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படை களையே தாக்குவதாகும். மெட்ரிக் பள்ளிகளின் கோரிக்கைகளை மட்டுமே ஏற்று, சமச்சீர்க் கல்வியை ஆதரித்த பல குரல்கள் அறிக்கையுடன் இணைக்கப் படவில்லை. நூல்கள் குறித்து ஆராய்வதுதான் குழுவுக்கு இடப்பட்ட பணி. ஆனால், அதையும் தாண்டி சமச்சீர்க் கல்விக்கு, பொதுப் பாடத்திட்டமே தேவை இல்லை என்று குழு பரிந்துரைப்பது கண்டனதுக்கு உரியது!’ என்கிறது அந்தப் பிரகடனம்.

பெ.மணியரசன், ''இது வல்லுநர் குழு அல்ல... கொல்லுநர் குழு. ஆம்! இத்தனை மாணவர்களை வாட்டி வதைத்துக் கொல்லும் குழுவை இப்படித்தான் அழைக்க வேண்டும்!'' என்றார்.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால் பேசுகையில், ''இந்துத்வா கொள்கைதான் பழைய பாடத்திட்டத்தில் திணிக்கப்பட்டது. அதைத்தான் மீண்டும் கொண்டுவரத் துடிக்கிறது அரசு!'' என்றார். பேராசிரியர் மாடசாமி ''விவரம் அறியாத வயதில் குலக் கல்விக்கு எதிரான கோபத்தைப் பலரது முகங்களில் பார்த்திருக்கிறேன். அது போன்றதொரு கோபம் இன்றைக்கு ஆசிரியர்கள் - மாணவர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாக இருப்பதைப் பார்க்கிறேன். இந்தக் கோபம் ஆட்சியாளர்களைச் சும்மா விடாது!'' என்றார்.

'தலித் முரசு’ ஆசிரியர் புனிதபாண்டியன் பேசும்போது, ''எதற்காக மறைத்து மறைத்துப் பேச வேண்டும்? பார்ப்பனீயம்தான் சமச்சீர்க் கல்வியைத் தடை செய்யக் காரணம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாமே?'' என்றபோது, கூட்டத்தில் இருந்து ஒருவர் வெளிநடப்பு செய்தார்.

கூட்டத்தில் பாரதி கிருஷ்ணகுமாரின் 'எனக்கு இல்லையா கல்வி?’ ஆவணப் படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. சரியான நேரத்தில் வெளிவந்திருக்கும் சரியான படம் என்று கல்வியாளர்கள் பாராட்டினர்.

ஏற்புரை நிகழ்த்திய பாரதி கிருஷ்ணகுமார், ''தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும். தனியார் பள்ளிக்கூடங்கள் பெருகிய பின்னர்தான் நாட்டில் முதியோர் இல்லங்களும் அநாதை இல்லங்களும் பெருகின. திண்ணைப் பள்ளிக் கூடங்கள் என்கிற பெயரில் முன்பு தனியார் பள்ளிகளுக்கு அடிகோலியவர்கள்தான் இன்றைக்கு கல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். நான் எடுத்த படங்களிலேயே துயரமான படம் 'எனக்கு இல்லையா கல்வி?’ படம்தான். இதற்கு முன் 44 உயிர்கள் கொல்லப்பட்ட கீழ்வெண்மணி கொடூரத்தை வைத்து 'ராமையாவின் குடிசை’ படமும் 94 பிஞ்சு உயிர்கள் கொல்லப்பட்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்தை வைத்து 'என்று தணியும்’ படமும் எடுத்து இருக்கிறேன். ஆனால், தமிழ்நாட்டில் வாழ்வா சாவா என்று தெரியாமல், கல்வி கிடைக்காமல் தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கும் கோடிக் கணக்கான குழந்தைகளின் துயரம் இந்தப் படம்!'' என்று நெக்குருகினார்.

நன்றி : ஆனந்த விகடன்
படங்கள் : வின்செண்ட்பால், சொ.பாலசுப்பிரமணியன்

1 comment:

  1. நல்ல கட்டுரை கவின். இதில் உச்சநீதிமன்றத்தின் சிறுபிள்ளைத் தனமான வழிகாட்டுதல்தான் உச்சபட்ச சனநாயக கேலிகூத்து. யார் சமச்சீர் கல்வியை எதிர்கிறார்களோ அவர்களே அதை ஆராய வல்லுநர் (கொல்லுநர்) குழு அமைக்க வேண்டுமாம். இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்று. உயர்நீதிமன்றம் தமிழக மக்களின் கொதிநிலையை உணர்ந்து கறாராக தீர்பளிப்பதும் உச்ச நீதிமன்றம் வழவழ கொழகொழ வென்று தீர்பளிப்பதும் தான்.
    பெ.மணியரசன் அடிக்கடி சொல்லுவார் “ பார்பனியமும், இந்தியதேசியமும்,முதலாளித்துவமும் ஒன்றுக்கொன்று இணக்கமானவை ” என்று. சமச்சீர் கல்வி பிரச்சனையில் அது துள்ளியமாக தெரிகிறது.

    ReplyDelete