நான் சென்னை வந்த புதிது. ஹாஸ்டலில் தங்கி இருந்தேன். சென்னைக்கு வந்த மூன்றாம் மாதத்தில் என் பிறந்தநாள் வந்தது. அப்போது ஈ-காமர்ஸ் கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு வகுப்பு இருந்ததால் நான் ஊருக்குச் செல்லவில்லை. நினைவு தெரிந்த நாள் முதலாய் அம்மா அப்பாவோடு தான் என் பிறந்தநாளைக் கழித்திருக்கிறேன்.
என் முதல் பிறந்தநாளை அப்பாவும் அம்மாவும் மிக விமரிசையாகக் கொண்டாடியதாகச் சொல்வார்கள். எனக்கும் என் தம்பிக்கும் ஆண்டுதோறும் வரும் பிறந்தநாள் மட்டுமே எங்கள் வீட்டின் பண்டிகை. அப்பா இசுலாமியக் குடும்பத்திலும் அம்மா இந்துக் குடும்பத்திலும் பிறந்தவர்கள். அதனால் எங்கள் வீட்டில் பண்டிகைகள் கொண்டாடுவது என்பதில் பல சிக்கல்கள் உண்டு. அப்பா தனது மாணவப்பருவத்தில் இருந்தே திராவிடர் கழகத்தில் இருந்ததால் மதம் தொடர்பான விஷயங்களுக்கு கடும் எதிரியாக இருந்தார். அதனால் அம்மாவின் தீபாவளி கொண்டாடும் ஆசைக்கு அப்பாவால் நீரூற்றி வள்ர்க்க முடியவில்லை. அம்மா தீபாவளியைக் கொண்டாட முனைவார்கள். அப்பா அதற்கு ஒத்துழைக்க மாட்டார். அதனால் எங்களுக்கு பண்டிகை நாட்களின் சந்தோஷம் என்பது பிறந்தநாளில் கிடைப்பதுதான்.ஆனால் தீபாவளிக்கு எல்லோரும் வெடி வெடிக்கும்போது நாங்களும் சிறுவயதில் வாங்கித்தரக் கேட்டு அடம்பிடித்து வாங்கி வெடித்ததுண்டு. இப்படி ஒரு சூழலில் இருந்ததாலோ என்னவோ அம்மாவும் அப்பாவும் எங்கள் பிறந்தநாளை சந்தோஷமாகக் கொண்டாடுவார்கள்.
எல்லோர் வீட்டிலும் பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்வார்கள் என்றால், எங்கள் வீட்டில் மட்டும் என் பிறந்தநாளுக்கு முன்பும், தம்பியின் பிறந்த நாளுக்கு முன்பும் தான் அம்மாவும் அப்பாவும் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டை சுத்தம் செய்வார்கள். தஞ்சாவூர் சிலோன் தாசன் பேக்கரியில் முன்பே ஆர்டர் செய்யப்பட்ட கேக்கை முதல் நாள் அன்று சென்று வாங்கிக்கொண்டு வருவோம். மறுநாள் காலையில் கேக் வெட்டி கொண்டாடிவிட்டு அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டு, பள்ளிக்குக் கிளம்பிச் சென்று அங்கே எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்துவிட்டு அப்படியே திரும்பி விடுவேன். அன்றைக்கு பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொள்வோம் நானும் தம்பியும். இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும்!
எனக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது கேக் எல்லாம் வெட்டி கொண்டாடுவதற்கு ஏனோ விருப்பமில்லாமல் போனது. அடம்பிடித்து கேக் வெட்டமாட்டேன் என்று சொல்லி கேக்- ஐத் தவிர்த்தேன். ஆனாலும் அந்த நாளின் விசேஷத்தன்மை எங்கள் வீட்டில் அதன்பிறகும் கூட குறையவில்லை. நிச்சயமாக புதுடிரஸ் எடுத்து விடுவோம். இப்படியே பழக்கப்பட்ட நான் சென்னைக்கு வந்து புதிய ஊரில் அம்மா அப்பாவை விட்டுக் கொண்டாடும் முதல் பிறந்தநாள். அன்றைக்கு அப்பா தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லத் தொடங்கி முடியாமல் அழுதார். ’’இத்தனை வருஷத்தில் உன்னைப்பிரிந்து இருந்ததில்லையே....ஊருக்கு இன்னைக்கு வந்திருக்கலாம்ல..’’ என்று விசும்பலுக்கிடையே சொல்ல, எனக்கும் அழுகை வந்தது. அம்மாவும் போனில் அழுதார். நான் போனில் அழுவதைப் பார்த்த என் அறைத் தோழிகள் காரணம் கேட்டபோது சொன்னேன். ‘இவ்வளவு ஃபீல் பண்ணுவாங்கன்னு தெரியும்ல உனக்கு. ஊருக்குப் போயிருக்கலாம்ல..?’’ என்றனர் கோரஸாக. ’கிளாஸ் இருக்கு. அதான் போகல’ என்று அவர்களிடம் சொன்னாலும், உள்ளுக்குள் இந்தக் கொண்டாட்டங்களை நான் வெறுக்கத் தொடங்கி இருந்தேன் என்பது தான் முக்கியக் காரணம். ஆனாலும் நான் அம்மாவும் அப்பாவும் கண்கலங்கியதை எண்ணிக் கலங்கினேன். உடனே அம்மாவையும் அப்பாவையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கஷ்டப்பட்டு அந்த நினைப்பைப் புறந்தள்ளினேன். அப்போது என் அறைத்தோழி அகிலா கேட்டாள் ‘உங்க வீட்டில் ரொம்பப் பெரிசா பிறந்தநாளைக் கொண்டாடுவீங்களா?’’ என்று கேட்க, எங்கள் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய கதைகளை அறைத்தோழிகளுக்கும் சொல்லி விட்டு வகுப்புக்குப் புறப்பட்டேன்.
அன்றைக்குப் பூராவுமே வகுப்பில் அரைகுறையாகவே கவனித்தேன். அப்பா - அம்மாவும் காலையில் அழுதது அன்றைய நாளை என்னால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாத நாளாக மாற்றி விட்டது. மாலை வரை அப்பாவின் விழும்பலும், அப்பாவின் தொண்டையிலிருந்து வெடித்துக் கிளம்பிய அழுகையும் மனதைப் பிசைந்தவாறே இருந்தன.நேரே ஹாஸ்டலுக்கு வரப் பிடிக்காமல் எங்கெங்கோ சுற்றிவிட்டு ஏழரை மணியளவில் ஹாஸ்டலுக்கு வந்தேன். மிகவும் சோர்ந்து போய் வந்தபோது பூட்டியிருந்த அறைக்கதவைத் திறக்க, சாவியைத் தேடும் சக்தி கூட அற்றவளாய் இருந்தேன். ஒரு வழியாய சாவியைத் தேடி எடுத்து கதவைத் திறந்தபோது, அறையெங்கும் பரவியிருந்த இருட்டை மேலும் அழகாக்க, கட்டிலின் மேல் வைக்கப்பட்டிருந்த கேக்-ம் அதில் எரிந்து கொண்டிருந்த ஒற்றை மெழுகுவர்த்தியும் என்னை வரவேற்றன. நான் ஸ்தம்பித்து நின்றேன். ‘ஹேப்பி பர்த்டே கவின்’ என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட அந்த கேக் என்னைப் பார்த்து சிரிக்க அறையில் ஒவ்வொரு இருட்டு மூலையிலிருந்தும் ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’என்று பாடியபடியே தேவதைகளாய் வெளிவந்த என் தோழிகளைப் பார்த்தபோது எதுவும் புரியாமல் நின்றேன். என் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொத்தியபடி மதுரிமா குழந்தைக்குச் செய்வது போல் என் கைகளைப் பிடித்து கேக்கை வெட்டச் செய்தாள். அவர்கள் எனக்கு ஊட்டி விட, பொங்கி வந்த கண்ணீரோடு சிரித்துக் கொண்டே நானும் அவர்களுக்கு ஊட்ட, வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை உணரச் செய்த தருணங்கள் அவை.
சென்ற ஆண்டு 2010, பிறந்தநாளான டிசம்பர் 3 அன்று முழுவதும் நாள் முடிந்து மறுநாள் விடிந்த பின் அப்பாவிடமிருந்து போன்...’’கவின்! எப்படி மறந்தேன் என்றே தெரியவில்லை. நேத்து வாழ்த்து சொல்லவே இல்லை. எப்படி மறந்தேன்னே தெரியலை..அம்மாவும் கூட மறந்துடுச்சு....வயசாயிடுச்சுப்பா எங்க ரெண்டு பேருக்கும்...இல்லையா?’’ என்றார் வேதனை கலந்த ஆற்றாமையோடு. எனக்கு அப்போதும் கண்ணீர் முட்டியது!
இந்த ஆண்டு சரியாய் 12 மணிக்கு அம்மாவும் அப்பாவும் அழைத்தார்கள். ‘போன வருஷம் மாதிரி மறந்துடக் கூடாதுல்ல.. அத்னால நினைச்சுக்கிட்டே இருந்து போன் பண்றோம்”” என்றார்கள்.
அன்றைக்கு நான் சென்னைக்கு வந்த புதிதில் எனக்கு பர்த்டே கேக் வெட்டிய தோழிகள் இன்றைக்கு கல்யாணமாகி, குடும்பம், குழந்தைகள் என்று செட்டிலாகி விட்டார்கள். அவர்களில் ஒருவருடைய வாழ்த்தும் இன்று எனக்குக் கிட்டவில்லை. அவர்களில் சிலர் இப்போது தொடர்பறுந்து எங்கே இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. அதற்கு அவர்கள் பெண்ணாய்ப் பிறந்ததைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? பெண்களுக்கு மட்டும்தான் இப்படியான தற்காலிகத் தோழமைகள் அதிகமாக இருக்கின்றன. நிரந்தரமாக்கிக் கொள்ள அவர்களை ஃபேஸ்புக்கில் தேடிக்கொண்டே இருக்கிறேன்.இன்னும் தேடுகிறேன்! தேடுவேன்!