Wednesday, September 05, 2012

மேரிகோம் - இந்தியாவின் இரும்பு மனுஷி


'மணிப்பூரின் இளவரசி’ மேரிகோம்... இப்போது இந்தியாவின் 'இரும்பு மனுஷி’! புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இருந்து வந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கும் பெண். லண்டன் ஒலிம்பிக்ஸில் குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலம் வென்ற தன்னம்பிக்கை நட்சத்திரம்.
 ''எனது பாக்ஸிங் வாழ்க்கை அத்தனை எளிமையானதாக இல்லை. பாக்ஸிங் விளையாட்டில் ஈடுபட ஒரு பெண்ணுக்கு ஆண்களைவிட அசாதாரண முயற்சியும் கடின உழைப்பும் மனதளவில் அபார தெம்பும் இருக்க வேண்டும். எப்போதோ எங்கேயோ கிடைத்த ஒவ்வொரு சின்ன ஆதரவும் எனக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக இருந்தது. அதற்காக நான் நிறைய விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. பாக்ஸிங் இஸ் மை லைஃப். அதனால் நான் விட்டுக்கொடுத்தேன்!''- சிநேகமாக எதிரொலிக்கிறது மேரிகோமின் குரல். ஒலிம்பிக்ஸின் வெண்கல வெற்றிக்கு இன்னமும் பாராட்டு மழையில் நனைந்துகொண்டு இருந்தவரைத் தொட்டுத் தொடர்ந்து எடுத்த பேட்டியில் இருந்து...  

''ஓய்வு எடுக்கக்கூட நேரம் இல்லை இப்போது. நான் பிறந்த மணிப்பூர் மண்ணின் மக்கள் என் மீது பொழியும் அன்பில் நெகிழ்ந்துகொண்டு இருக்கிறேன். நான் இந்தத் துறைக்கு வந்தபோது 'இது பெண்களுக்கான துறை இல்லை. ஆகவே, உன்னால் சாதிக்க முடியாது’ என்றனர். நான் திருமணம் செய்துகொண்டபோது, 'இனி இவள் அவ்வளவுதான்’ என்றனர். நான் இரட்டைக் குழந்தைகள் பெற்ற பின்னர், 'இனி உடல்நிலை அனுமதிக்காது’ என்றனர். ஆனால், நான் என்னை நிரூபிக்க விரும்பினேன். இந்தியாவில் ஒரு வரலாற்றை உருவாக்க விரும்பினேன். இதோ தமிழ்நாட்டில் இருந்து என்னைப் பேட்டி எடுக்கிறீர்கள். நினைத்ததைச் சாதித்த திருப்தி!''
''அது என்ன... வெண்கலப் பதக்கம் வென்ற பிறகும் தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல்போனதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறீர்கள்?''
''பழங்குடி விவசாயக் கூலிக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். கடமை உணர்வு எங்கள் வளர்ப்பில் ஊட்டப்பட்டது. 'தங்கம் வென்று வா’ என்றுதான் இந்த தேசம் என்னை ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அனுப்பியது. ஆனால், என்னால் வெண்கலம்தானே வெல்ல முடிந்தது. அதனால், அந்த மன்னிப்பு.''  
''ஒரு பெண்ணாக இந்த உயரத்தை எட்ட உங்கள் போராட்டம் எங்கு தொடங்கியது?''  
''என் வீட்டில் இருந்து. நான் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்க என் தந்தையின் எதிர்ப்பு ஆரம்பத்தில் தீவிரமாக இருந்தது.  ஆனால், என் அம்மா எனக்கு தொடக்கத்தில் இருந்தே உறுதுணையாக இருந்து ஊக்கம் அளித்தார். குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறவே ஒரு ஒலிம்பிக்ஸ் அளவுக்குப் போராடி னேன். 14,000 ரூபாய்க்கு வீட்டில் இருந்த பசுவை விற்றும் கடன் வாங்கியும் பயிற்சி பெற்றேன்.
2005-ம் வருடம் திருமணம். 'இனி, குடும்பத்தைக் கவனித்துக்கொண்டால் போதும். விளையாட்டு வேண்டாம்’ என்று முன்னைக் காட்டிலும் அதிக நெருக்கடி கொடுத்தார்கள். அப்போது என் மாமனார் கொடுத்த ஊக்கம்தான் என்னைத் தொடர்ந்து பயணிக்கச் செய்தது. ஆனால், அடையாளம் தெரியாத சிலரால் அவர் கொல்லப்பட்டார். நான் தொடர்ந்து போட்டிகளில் பங்கெடுத்துப் பட்டம் வெல்வதைத் தடுக்க முடியாததாலேயே அவரைக் கொன்றார்கள் என்று அறிந்தபோது, நான் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றேன். அந்தச் சமயம் நான் கர்ப்பமாக இருந்தேன். இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானேன். என் மாமனார் கொலையானதால் இனி விளையாடப்போவது இல்லை என்று முடிவுஎடுத்து இருந்தேன். ஆனால், என் கணவரின் ஆறுதலும் ஆதரவும் என்னை மீண்டும் மனம் மாற்றி குத்துச்சண்டை மேடை ஏற்றியது. 15 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயிற்சியில் ஈடு பட்டேன். பல சமயங்களில் குழந்தைகளைக்கூட கவனிக்க முடியவில்லை. இத்தனை சிரமங்களுக்குப் பிறகு 2008-ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்றேன். நான்காவது உலக சாம்பியன் பட்டம் அது. 'இது ஒரு ஆரம்பம்தான்’ என்று அப்போது முடிவெடுத்தேன். நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.''  
''முதல்முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பின் மணிப்பூர் அரசு உங்களுக்குக் காவல் துறையில் கான்ஸ்டபிள் பணி வழங்கியது. அதை ஏற்க மறுத்தீர்கள். பின்னர் 8,500 ரூபாய் சம்பளத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணி அளித்தது. இப்போது என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்? அந்தச் சம்பளம் உங்கள் பயிற்சிகளுக்குப் போதுமானதாக இருக்கிறதா?''
''இரண்டு பதவி உயர்வுகளுக்குப் பிறகு, இப்போது 31,000 ரூபாய் சம்பளம். ஒரு வாரப் பயிற்சிக்குக்கூட இது போதாது!''
''ஆனால், கிரிக்கெட் விளையாட்டுக்கு கோடிகளைக் கொட்டுகிறார்களே?''
''கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதுவும் ஒரு விளையாட்டுதானே? ஆனால், மற்ற போட்டிகளுக்கும் அதே அளவு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்!''
''உங்கள் ரோல் மாடல் யார்?''  
''ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி. அதோடு அபிநவ் பிந்த்ரா, சாய்னா, யோகேஸ்வர் தத், சுஷில் குமார், விஜய்குமார், ககன் நரங் என்று ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற ஒவ்வொருவருமே எனக்கு ரோல் மாடல்கள்தான். இவர்கள் ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது!''
''மேரிகோமுக்கு வேறு என்னவெல்லாம் பிடிக்கும்?''
''என் குழந்தைகள் ரெங்பா, நைன்நாவை ரொம்பவும் பிடிக்கும். கடவுள் நம்பிக்கை அதிகம். மணிப்பூர் மாநில உணவுகள் அனைத்தும் பிடிக்கும். சாம்பியாங் என்று ஒரு உணவு. இஞ்சி, பச்சை மிளகாய், பட்டாணி எல்லாம் போட்டு... நினைத்தாலே நாவூறும்! அப்புறம் மணிப்பூர் மக்களுக்காகப் போராடும் இரோம் ஷர்மிளாவை மிகவும் பிடிக்கும். அவரது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்!''
''இந்த வெற்றிகளுக்கு நீங்கள் யாருக்கு நன்றி கூற விரும்புகிறீர்கள்?''
''என் கணவருக்கு! அவருடைய ஆதரவு இல்லாமல் என்னால் இதைச் சாதித்திருக்க முடியாது. அவர் மட்டும் 'எதற்கு இதெல்லாம்? குடும்பத்தைப் பார்’ என்று சொல்லியிருந்தால், நான் என்னவாகி இருப்பேன் என்று என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி!''

2 comments:

  1. போற்றப்பட வேண்டியவர்... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. தொடர்ந்து பதக்கங்களை குவிக்க எனது வாழ்த்துகள்.

    ReplyDelete