Tuesday, June 25, 2013

திருமணம், பாலியல் உறவு, சடங்குகள் - உயர் நீதிமன்றத் தீர்ப்பு

1967, அண்ணா முதல்வராக இருந்தபோது, சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் மசோதாவை தந்தை பெரியாரிடம் காண்பித்தபோது, ‘மாலை மாற்றி தாலி கட்டவேண்டும் ‘’ என்றிருந்த பகுதியைப் பார்த்து ’’தாலி கட்டுவதை அவசியமாக்கத் தேவையில்லை’’ என்று திருத்தம் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட அண்ணாவும் அந்தப் பகுதியை நீக்கினார். அதன்பின்னரே இந்தியாவிலேயே முதன்முதலாக சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டன.

அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் நீதிபதி கர்ணன் வழங்கிய தீர்ப்பு சமூகத்த்திலும் ஊடகங்களிலும் ஒரு சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. கோவையைச் சேர்ந்த ஆயிஷா என்கிற இஸ்லாமிய பெண் ஓஸிர் ஹசன் என்கிற இஸ்லாமியரை இஸ்லாமிய சடங்குகளின்படி திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தபின்னர், ஹசன் ஆயிஷாவைப் பிரிந்துவிட்டார். ஆயிஷா குழநதைகளைப் பேணுவதற்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஹசன் தரவேண்டும் என்று கோரி கோவை குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மருத்துவமனை ஆவணங்களில் பிரசவ சமயத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தபோதும் கணவன் என்கிற இடத்தில் ஹசன் தான் கையெழுத்திட்டிருக்கிறார். ஆகவே குழந்தைகள் சட்டரீதியாக இவர்களுக்குப் பிறந்தவர்களே என்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், ஆயிஷாவை ஹசனின் சட்டபூர்வ மனைவி என்று கூற முடியாது என்று தீர்ப்பளித்தது. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் ஆயிஷா. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில்தான் நீதிபதி ‘’மாலைமாற்றிக்கொள்வதோ, தாலி கட்டிக்கொள்வதோ, மோதிரம் மாற்றுவதோ, அக்னி குண்டத்தைச் சுற்றி வருவதோ, பதிவு அலுவலகத்தில் சென்று பதிந்துகொள்வதோ திருமணம் அல்ல. இந்த மதச் சடங்குகள் எல்லாமே சமூகத்தை திருப்திப்படுத்தத்தான். சட்டபூர்வமான அங்கீகாரத்துக்கு அவர்களுக்கிடையே பாலியல் உறவு இருந்தால் போதும்’’ என்கிறார். அதாவது இருவ்ருக்கும் பாலியல் உறவிருந்தாலே அவரக்ள் கணவன் - மனைவி என்று அறியப்படுவர் என்கிறது தீர்ப்பு.

ஆனால் பாலியல் உறவுக்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் கொடுக்க முடியாமல் போகும்போது, அந்த உறவை சட்டபூர்வம்தான் என்று வாதாட முடியாத நிலையும் உள்ளது. ஆயிஷாவைப் பொருத்தவரை அவர்களுடைய குழந்தைகள் உறவுக்கு சாட்சியாக உள்ளன. , ஒருவேளை குழந்தைகள் இல்லையெனில் பாலியல் உறவு இருந்ததற்கான என்ன ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்? இந்தத் தீர்ப்புக்கு சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் எதிர்வினைகள் அதிகமாக இருந்தனர். ஆனால் பெரும்பாலானவை பொழுதுபோக்காக சிரிப்பதற்கானவை. உண்மையான சமூக அக்க்றையுடன் எழுதியவர்கள் வெகு சிலரே. இந்தத் தீர்ப்பு சம அளவில் வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இருபுறம் கூர்தீட்டிய வாளைப் போன்றது இந்தச் சட்டம். ஒருபுறம் லிவிங்க் டூகெதர் முறையில் மணம் புரியாமல் வாழ்பவர்களுக்கு இத்தீர்ப்பு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்குகிறது.

லிவிங் டூகெதர் முறையில் வாழ்பவர்களுக்கிடையேயும் மணமான தம்பதிகளுக்கிடையே இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் உண்டு. சென்னையில் தன் துணையுடன் வாழும் பெண் கூறுகையில் ‘’கடந்த 5 ஆண்டுகளாக நான் அவருடன் வாழ்கிறேன். முறைப்படி திருமணம் செய்துகொண்ட ஒரு மனைவி போலவேதான் சமைப்பது, துவைப்பது என்று எல்லாமே செய்கிறேன். அவரை நன்றாக பார்த்துக்கொள்கிறேன். அவரும் என்மீது அன்பாகவே இருக்கிறார். ஆனால் சண்டை போடும்போது மட்டும், ‘’நீ என்ன என் மனைவியா? உனக்கு என்ன உரிமை இருக்கிறது? போ’ என்று கத்துவார். தீர்ப்புதான் வந்துவிட்டதே. இன்னொரு முறை அப்படிச் சொல்லட்டும். ஒரு கை பார்த்துவிடுவேன்’’ என்று சிரிக்கிறார்.

திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி இந்தியா டுடேவிடம் ‘’தமிழர்களிடையே சங்ககாலம்தொட்டு இருந்த களவு மணம் தான் இது. இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். தேவையற்ர மதச்சடங்குகள் திருமணத்துக்கு தேவையில்லை என்கிற தீர்ப்பு முற்போக்கானது’’ என்கிறார்.

நம் சமூகத்தில் பெரும்பாலும் பெண்களே பாலியல்ரீதியான சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். ஆகவே இயல்பாகவே இந்தத் தீர்ப்பு ஆண்களுக்கு ஒருவித பயத்தை அளித்திருக்கிறது. பாலியல்ரீதியான சுரண்டலை ஒரு பெண் ஆணுக்கு செய்தாலும் இது பொருந்தும். ஆனால் இங்கே ஒரு கேள்வி எழுகிறது. வெறும் பாலியல் உறவை மட்டும் திருமணம் என்று கூறிவிட முடியுமா? ‘’ஆயிஷாவுக்கு இந்தத் தீர்ப்பு நியாயம் வழங்கியுள்ளது என்கிற அளவில் இந்தத் தீர்ப்பு முற்போக்கானது என்று கூறலாம். சில சமயங்களில் காதலிக்கும் ஜோடிகள் பெற்றோர் எதிர்ப்பதால், அவர்களாகவே எந்த ஆவணமும் இல்லாமல் திருமணம் செய்துகொள்கின்றனர். இப்படிப்பட்ட சமயங்களில் இந்தத் தீர்ப்பு உதவலாம். ஆனால் ஒரு திருமணத்துக்கு பாலியல் உறவை மட்டுமே அளவுகோலாகக் கொள்ள முடியுமா? அப்படியெனில், கல்லூரி மாணவர்கள் இப்போதெல்லாம் டேட்டிங் செல்கிறார்கள். பாலியல் உறவுக்கான சாத்தியங்களும் உள்ளன. அப்படியிருக்கையில் அதையும் திருமணம் என்று நாம் கணக்கிலெடுக்க முடியுமா?’’ என்கிறார் பெண்னிய செய்ற்பாட்டாளரும் வழக்கறிஞருமான கீதா ராமசேஷன். ‘’ இந்த வழக்கில் குறிப்பிட்ட இருவரின் பெயர்களும் ரேஷன் அட்டையில் உள்ளன. வேறு பல ஆவணங்களும் உள்ளன. ஆனால் இப்படி ஒரு சூழலை யோசியுங்களேன்..அதாவது பாலியல் உறவுக்கான எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால்? எனக்குத் தெரிந்து பெண் தங்களுடன் இருந்ததாக ஜோடிக்கபப்ட்ட புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் போட்டு ‘இவள் என் மனைவி’ என்று அபாண்டமாகக் கூறிய ஆண்களும் உண்டு. இப்படியான வழக்குகளை நான் நடத்தியிருக்கிறேன். அத்துடன் புகைப்படங்களையும் ஆவணங்களையும் வைத்து ஒரு பாலியல் உறவை நிரூபிக்கச் சொல்வது சிக்கலானது’’ என்கிறார்

பெண்ணுக்கு 18 வயதாகவும் ஆணுக்கு 21 வயதாகவும் இருக்கவேண்டும் என்கிறது இந்தத் தீர்பு. ஆனால் தேசிய அளவில் பாலியல் உறவுக்கான குறைந்தபட்ச வயதை 16 ஆகக் குறைப்பது குறித்த தீவிரமான விவாதங்கள் நடந்துவருகின்றன. ஒரு நீடித்த உறவுக்கான விருப்பத்தில், ஆணும் பெண்ணும் திருமணம் என்கிற பெயரில் எந்த மதச் சடங்குகளும் இல்லாமல் சேர்ந்திருப்பார்களேயானால், இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு ஒரு பரிசு. ஆனால், அவர்களே பிரிந்துவிட எண்ணினால், சட்டப்படி அவர்கள் விவாகரத்து கோரித்தான் பெறவேண்டும். ஒருவேளை அவர்கள்க்கு நீடித்த உறவுக்கான விழைவு இல்லாமல் இருந்தால் அங்கேதான் சிக்கல். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் துணை இருக்க சாத்தியமுண்டு. எத்தனை துணைகளோ அத்தனை முறை திருமணம் செய்துகொண்டார்கள் என்று கூறமுடியுமா?

கிராமங்களில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு பெண்ணை ஓர் ஆண் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டால், அந்தப் பெண் அந்த ஆணையே திருமணம் செய்துகொள்ள நிர்பந்திக்கப்படுவது சகஜம். இந்த பார்வையே கலாசார காவலர்களின் பார்வை. அதாவது ஒரு பெண்ணின் உடல் கணவனால் மட்டுமே தீண்டப்படவேண்டுமென்கிற பொதுப்புத்தியில் உறைந்த கலாசாரம் என்கிற போர்வையிலான பழமைத்தனம்தான் இது. ‘’இந்த தீர்ப்பும் இத்தகைய பழமைத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாக நான் உணர்கிறேன். இருவர் பாலியல்ரீதியாக உறவுகொண்டால் அவர்கள் நிச்சயம் கணவன் - மனைவியாகத்தான் இருக்கவேண்டும் என்கிற பார்வை முற்போக்கானதா?’’ எனக் கேட்கிறார் ஒரு சமூக ஆர்வலர்.

‘’மதரீதியாக மணம் செய்துகொண்ட இருவருக்குள் உடல்ரீதியான உறவு இல்லையென்றால், அந்தத் திருமணமே செல்லாது’’ என்கிறது தீர்ப்பு. ‘’தீர்ப்பின் இந்தப் பகுதி சிக்கலானது’’ என்கிறார் கீதா ராமசேஷன். ‘’ஆண்மையற்றவராக ஆண் இருந்தால், அந்தத் திருமணம் செல்லாது என்கிறது இந்து சட்டம். ஆனால் உறவுக்கு மறுத்தல் என்பது வேறு’’ என்கிறார். பாலியல்ரீதியான உறவில் இல்லாத தம்பதியிரிடையே பிரச்சனை வந்து ஒருவேளை கணவன் மனைவியை அடித்தால்? குடுமப் வன்முறை தடுப்புச் சட்டத்தின்படி கணவன் மனைவியின் விருப்பமில்லாமல் அவளைத் தொடுவது குற்றமாகிறது. தொட்டால் குற்றம். தொடாவிட்டால் கணவன் இல்லை என்கிற நிலை சிக்கல்தான். இப்படியான உறவில் பிரச்சனைவ் வந்து ஒருவேளை கணவன் மனைவியை அடித்தால் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின்படி புகார் அளித்தால், அந்தப் புகார் செல்லுமா? திருமணமே செல்லாது என்றானபின் அது குடும்ப வன்முறைக்குள் வருமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

இந்தத் தீர்ப்பு மணமாகாத ஜோடிகளுக்கும் மணமான தம்பதியருக்கு உண்டான உரிமைகளை வழங்குகிறதா? அல்லது சட்டத்தின் முன் நிற்க விரும்பாதவர்களையும் சட்டத்தின் பெயர் சொல்லி சிறைபடுத்துகிறதா? எப்படி இருந்தாலும் திருமணத்துக்கு முந்தைய உறவு என்கிற விஷயம் பொதுத்தளத்தில் ஒருபோதும் விவாதப் பொருளாகவில்லை. இந்தத் தீர்ப்பு அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. ஆரோக்கியமான விவாதங்கள், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களுலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இது மாறிவரும் மக்கள் மனநிலையைக் குறிக்கிறது. கலாசாரப் போர்வையின் கீழ் தங்களை முடக்கிக்கொண்டுவிட்ட ஒரு சமூகத்தை இது குறித்துப் பேச வைத்ததே இந்தத் தீர்ப்பின் வெற்றி. சமபாலின ஈர்ப்பை சட்டபூர்வமாக்கியதன் மூலம் இந்தியாவின் முகம் சற்றே மாறியது. இப்போது நீதிமன்றம் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு தவறில்லை என்று கூறியிருக்கிறது. பழம்பெருமை பேசும் இந்தியாவில் இது நிச்சயமாக ஒரு முற்போக்கான திருப்புமுனைதான். மக்களின் மனங்களை அசைத்துப் பார்த்ததன் மூலம் இந்தத் தீர்ப்பு எல்லா கேள்விகள், விமர்சனங்களையும் மீறி முற்போக்கானதாகவே இருக்கிறது.

(இந்தியா டுடே இதழில் எழுதிய கட்டுரை)

Wednesday, June 12, 2013

அணையாத காதல் தீ

’சாகணும்னு நினைக்கலைங்க. அம்மா அப்பா பயந்துட்டாங்க. அவங்களுக்கு பயம். எனக்கு வேதனை. எப்படி தீர்த்துக்குறதுன்னு தெரியலை. அதான்’’ என்கிறார் இளவரசன்.

காதலிக்கும்போதோ திருமணம் செய்துகொள்ளும்போதோ இப்படி தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியாவோம் என்று நினைத்தீர்களா?

இல்லை. நிச்சயமாக இல்லை. எத்தனையோ பேர் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். அப்படித்தான் எங்க கல்யாணமும்னு நினைச்சேன். திவ்யாவும் அப்படித்தான் நினைச்சாங்க. முதல்ல கோபமாக இருப்பாங்க. அப்புறம் சமாதானமாகிடுவாங்கன்னு நினைச்சோம். இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுக்கூட பார்க்கவில்லை.  சாதி எவ்வளவு கொடூரமானது; அது என்னவெல்லாம் செய்யும்னு காதலிச்சபின்னால்தான் நல்லா புரியுது.

திவ்யா திடீரென்று தாயுடன் செல்லவேண்டும் என்று கூறியது ஏன்?

திவ்யாவின் அம்மாவை பின்னணியில் இருந்து இயக்குகிறாங்க. அம்மாவின் உயிருக்கும் என் உயிருக்கும் ஆபத்து என்று மிரட்டியிருக்கிறாங்க. அதனால்தான் திவ்யா இப்படியொரு முடிவு எடுத்திருப்பாங்க. என்னைப் பிரிந்து அவங்களால் இருக்க முடியாது. இந்த மூன்றுவார பிரிவை திவ்யாவால் தாங்கிக்கொள்ள முடியாது. ஒரு மணிநேரம்கூட என்னைப் பிரிந்திருக்க முடியலைனு அடிக்கடி சொல்வாங்க. எங்களைப் பிரிக்கும் திட்டத்தை பா.ம.க.வின் ஹெட் ஆஃபீஸ்லதான் போட்டிருக்காங்க. அதை செயல்படுத்திட்டாங்க.

திவ்யாவுக்கும் உங்களுக்கும் திருமணத்துக்குப் பின் பிரச்சனைகள் ஏதேனும் உண்டா?

இல்லை. நாங்க ரொம்ப சந்தோஷமா இருந்தோம். ஊர் ஊரா பயந்து பயந்து வாழ்ந்தாலும் ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குறதே சந்தோஷமா இருந்துச்சு.

திருமணம் எங்கே நடந்தது?

ஃபுட்பால் மேட்ச்சுக்காக திருச்சி போயிட்டிருந்தேன். ஓமலூர் போகும்போது அவங்க வீட்ல வேற இடத்துல கல்யாணம் பண்ணிக்குடுக்கப் பார்க்கிறாங்கன்னு திவ்யா போன் பண்ணினாங்க. என்னை அழைச்சுட்டுப் போன்னு சொன்னாங்க. ஆந்திராவில் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். 

திவ்யாவின் வீட்டினருக்கும் உங்களுக்குமான உறவு எப்படி?

திவ்யாவின் அப்பா நல்லவர். சாதி வித்தியாசம் பார்க்கமாட்டார். எங்க கல்யாணம் பிடிக்காம அவர் தற்கொலை பண்ணிக்கிட்டாருன்னு நானும் திவ்யாவும் இப்பவும் நம்பலை. அவங்க அம்மாவுக்கும்கூட பெரிசா எதிர்ப்பு இல்லை. எங்க கல்யாணத்துக்குப் பிறகு அவங்க அண்ணன் தம்பி எல்லோரும் அவங்ககிட்ட பேசுறதில்லை. ஆனால் சுற்றி உள்ளவங்கதான் அவங்களை தூண்டிவிடுறாங்க. எனக்கு கிடைக்க இருந்த போலீஸ் வேலையை சரியாய் ஆர்டர் வரப்போகுதுன்னு தெரிஞ்சே என் மேல் கேஸ் போட்டு அந்த வேலையை கிடைக்கவிடாமல் செய்தாங்க. இது எல்லாமே அம்மா செய்யலை. அவங்களை நிர்பந்தம் பண்ணி சுத்தி உள்ள சாதிக்காரங்க பண்றாங்க.

தர்மபுரியில் மூன்று தலித் கிராமங்கள் எரிந்தபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?

குற்ற உணர்ச்சியாக இருந்தது. நானும் திவ்யாவும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூட நினைத்தோம். அவங்க அப்பா இறந்துபோவார் என்று நாங்க கனவிலும் நினைக்கலை. அப்பாவின் மரணம் திவ்யாவை ரொம்பவே பாதித்தது. ரொம்ப அழுதாங்க. அந்த நவம்பர் 7ம் தேதியை மறக்க முடியாது. திவ்யாவைப் பார்க்கணும்; திரும்ப கூட்டிட்டுப் போகணும்னு அவங்க தரப்புல கேட்டாங்க. ‘நீங்க வாங்க..வந்து திவ்யா வந்தா தாராளமா கூட்டிட்டுப்போங்கன்னு சொன்னேன்’ நவம்பர் 7ம் தேதி எங்களைப் பார்க்க தொப்பூருக்கு திவ்யா தரப்பில் கொஞ்சம் பேர் எங்க ஊர் தரப்பில் கொஞ்சம் பேர் வந்தாங்க. திவ்யாவோட அப்பா அப்போ வரலை. அம்மா திவ்யாவை வரச் சொல்லி கேட்டாங்க. ஆனா திவ்யா திட்டவட்டமா வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. அவங்க திரும்பிப் போய் அரைமணி நேரத்துல திவ்யா அப்பா இறந்துபோன செய்தி வருது. ஊரை எரிக்கிறாங்கன்னு தகவல் வருது. டிவியிலயும் பார்த்தோம். இந்தளவுக்கு ஆகும்னு யாருக்குத் தெரியும். நான் பிறந்த சாதிதான் இவங்களுக்குப் பிரச்சனையா போச்சு. இவ்வளவு செய்றவங்க எதையும் செய்வாங்க.

மனைவியை மீட்க என்ன செய்யப் போகிறீர்கள்?

தொடர்ந்து போராடுவேன். மூணு ஊரைக் கொளுத்தினவங்க யாருன்னு அதிகாரிங்களுக்குத் தெரியும். ஆனா நடவடிக்கை எடுக்கலை. அவங்க மேல நடவடிக்கை எடுக்கணும். திவ்யா எங்க இருக்காங்கன்னு பப்ளிக்கா அறிவிக்கணும். எங்களைப் பிரிக்க நினைக்கிறவங்க யாரு..இதுக்குப் பின்னணி என்ன இப்படி எல்லாத்தையும் விசாரிச்சு அறிவிக்கணும். அவங்களால மனசறிஞ்சு என்னை வேண்டாம்னு சொல்ல முடியாது. சொல்ல மாட்டாங்க. திவ்யாகூட நான் பேசணும் முதல்ல. அப்புறம் பாருங்க. எல்லாமே சரியாகிடும். 

****


சாதி என்னவெல்லாம் செய்யும்? ஊரைக் கொளுத்தும்; கௌரவக் கொலை செய்யும்; காதலித்து மணந்தவர்களைப் பிரிக்கும். சினிமாவில் மட்டுமே பார்த்த இதுபோன்ற காட்சிகளெல்லாம் அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் அரங்கேறுவதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் தமிழக மக்கள். 

தர்மபுரி நத்தம் தலித் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனை திவ்யா என்கிற வன்னிய சாதியைச் சேர்ந்த பெ
ண் காதலித்து மணந்ததைப் பொறுக்காமல் மூன்று தலித் கிராமங்கள் எரிக்கப்பட்ட அந்த நவம்பர் 7ம் தேதிக்குப் பின் நிகழ்ந்தவை ஊரறியும். அதன் பின்னர் தொடர்ச்சியாக நிகழ்ந்த கௌரவக் கொலைகள், தலித் பெண்கள் மீதான தாக்குதல்கள், சாதியின் பெயரால் நிகழும் தாக்குதல்கள், குடியிருப்புகள் மீதான தாக்குதல்கள் என்று மரக்காணம் வரை நீண்டது பிரச்சனை. மாமல்லபுரம் வன்னியர் விழாவில் பேசியதற்காக ராமதாஸ், காடுவெட்டி குரு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வளவு நடந்தபோதும் திவ்யாவும் இளவரசனும் எங்கிருக்கிறார்கள் என்கிற விவரம் மட்டும் யாருக்கும் தெரியவில்லை.

திவ்யாவின் தாய் தேன்மொழி தன் கணவரின் மரணத்துக்கு இளவரசன் தான் காரணம் என்றும் தன் மகளை கடத்திவிட்டதாகவும்  தொடுத்த வழக்கில் ஆஜரான திவ்யா ’’என்னை யாரும் கடத்தவில்லை; நானாக விரும்பித்தான் இளவரசனை திருமணம் செய்துகொண்டேன்’’ என்று சாட்சியமளித்துவிட்டுச் சென்றார்.  அதன்பின் திவ்யாவும் இளவரசனும் எங்கிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நாடகக் காதல் திருமணங்கள் இவை என்று பா.ம.க. தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதன் தலைவர் தொல். திருமாவளவனும் இத்தகைய திருமணங்களை ஊக்குவிக்கிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டியது பா.ம.க. காதலை ஆதரிப்பவர்கள் ஒரு பக்கமும், காதலுக்கு எதிரான சாதிய அமைப்புகள் ஒரு பக்கமும் நின்று தமிழகக் களம் இரண்டாகப் பிரிந்ததும், பெரும் விவாதங்கள் நிகழந்ததும் வரலாறு. இத்தனை நடக்கையிலும் திவ்யாவும் இளவரசனும் எங்கிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்தார். திவ்யாவும் இளவரசனும் ஊர் ஊராக சாதிவெறிக்கு பயந்து வாழ்ந்துகொண்டிருந்தனர். சென்னையில், பெங்களூரில் என்று ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்துவந்தாலும் பெரிதாக வருமானம் இல்லாத நிலையில் ஒருகட்டத்துக்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை. இளவரசனுக்காகவும் திவ்யாவுக்காகவும் காதல் திருமணங்களுக்காகவும் ஆதரித்துப் பேசிய இயக்கங்கள் எதுவும் கூட இவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இவர்களும் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆகவே பொருளாதாரரீதியில் யாரும் இவர்களுக்கு உதவமுடியமல் போயிற்று. இளவரசனின் தந்தை இளங்கோ தர்மபுரி அரசு மருத்துவமனையில் ரெக்கார்ட் கிளர்க்காக பணிபுரிகிறார். ஒரு கட்டத்தில் பொருளாதார சுமை அழுத்த வேறு ஊர்களில் குடிவைக்க முடியாமல் மகனையும் மருமகளையும் தர்மபுரி டவுனில் உள்ள அரசு மருத்துவமனி குவார்ட்டஸுக்கு அழைத்து தன் வீட்டிலேயே வைத்துக்கொண்டார். வீட்டைவிட்டு ஜோடியை வெளியே அனுப்பவில்லை. யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர் பெற்றோர். ’’ இதற்கிடையே திவ்யா கர்ப்பமானார். ஊர் ஊராக அலைந்ததில் திவ்யாவுக்கு கர்ப்பம் தங்கவில்லை.’’ என்கிறார் இளவரசன். சென்னைக்கு உயர் நீதிமன்றத்தில் திவ்யாவின் அம்மா தொடர்ந்த வழக்கில் ஆஜரானார் திவ்யா. 

’’திவ்யாவின் அப்பா திவ்யாவைத்தான் வாரிசாக நியமித்திருந்தார். அதனால் அவர் இறந்தவுடன் அவருடைய வேலை திவ்யாவுக்குத்தான் வரும். திவ்யா அதை வேண்டாம் என்று எழுதிக்கொடுத்தால்தான் அது அவங்க அம்மாவுக்குக் கிடைக்கும். ஆகவே எங்களிடம் போனில் பேசினார் திவ்யாவின் அம்மா. வீட்டுக்கு வந்து கையெழுத்து வாங்கினார். நான் தான் அவரை வீட்டுக்கு அழைத்துவந்து மீண்டும் கொண்டுபோய் விட்டேன். நன்றாகப் பேசினார். பாசமாக இருந்தார். அதனால் ந்மபினோம். அம்மாவிடம் அவ்வபோது பேசுவார் திவ்யா. நானோ என் வீட்டாரோ திவ்யாவை தடுக்கவில்லை. இந்தச் சூழலில்தான் நான் வீட்டில் இல்லாதபோது திவ்யாவுக்கு போன்செய்து உடல்நலம் சரியில்லை என்றும் கவிதா மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் சொல்லி வரவைத்திருக்கிறார்கள். நான் வரும்வரை பொறுக்கச் சொன்னேன். அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்திகேட்டவுடன் திவ்யாவால் தாங்க முடியவில்லை. உடனே கிளம்பிச் சென்றுவிட, அப்புறம் நடந்ததுதான் ஊருக்கே தெரியுமே?’’ என்கிறார் இளவரசன்.’’நாங்கள் கவிதா மருத்துவமனையில் விசாரித்துவிட்டோம். உள்நோயாளியாக அவர் அங்கே அட்மிட் ஆகவில்லை.’’ என்கிறார் இளவரசனின் தந்தை இளங்கோ.

திவ்யாவின் புகைப்படமாவது நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. இளவரசன் எப்படி இருப்பார் என்பதே பலருக்குத் தெரியாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 6ம் தேதி தான் பலர் அவரைப் பார்த்தனர். இவர்களின் திருமணத்துக்குப் பின்னான சம்பவங்கள் நாடறியும் என்கிறபோது நீதிமன்றம் இந்த வழக்கை நடத்திய விதம் குறித்து பலர் புருவம் உயர்த்துகின்றனர். அன்றைக்கு விசாரணையில் திவ்யா தான் மனக்குழப்பத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். இவ்வளவு பலவீனமான மனநிலையில் உள்ளவரை இருதரப்பிலும் அனுப்பாமல் காப்பகத்தில் சேர்த்து சில நாட்கள் இருக்கவைத்து அதன்பின் அவர் சமச்சீர் மனநிலைக்கு வந்தபின்பு அவரை விசாரித்து எங்கே செல்ல விரும்புகிறார் என்று கேட்டறிந்து அனுப்பியிருக்கலாம். திவ்யாவை அன்றைக்கு வேறு யாரிடமும் பேச விடாமல் பாதுகாப்பு வளையம் ஒன்றை அமைத்து அப்படியே அழைத்துச் சென்றுவிட்டனர். 

இருவர் விரும்பி மணம் புரிந்துகொண்டபின்னர் அதைப் பிரிப்பது எந்தவகை அறம்? அப்படியென்ன குற்றம் புரிந்தார்கள் இவர்கள்? நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திவ்யா தன் கணவருடன் தான் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாக கூறியிருக்கிறார். அப்படியென்றால் இந்த முடிவு நிர்பந்தத்தத்தின் பேரில் எடுத்த முடிவு என்பதும் விளங்குகிறது. மேலும் நீதிபதிகளிடம் அவர் ‘’என் அம்மாவின் மனநிலை மிகவும்மோசமாக இருக்கிறது. உடல்நலமும் சரியில்லை. ஆகவே 3 வாரங்கள் நான் அம்மாவுடன் இருக்கிறேன்’’ என்று கூற நீதிபதிகள் அதற்கு ‘’அப்படியெனில் இளவரசனை பிரிகிறீர்களா?’’ என்று கேட்க ‘’அப்படி நான் முடிவெடுக்கவில்லை. இப்போதைக்கு அம்மாவுடன் செல்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார். ஆனால் முந்தைய நாளே திவ்யாவும் அவருடைய அம்மாவும் விவாகரத்து கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்றைக்கு மனு அளிக்கவிருப்பதாக செய்திகள் உலவவிடப்பட்டன. ஊடகங்களும் இவர்கள் இருவரும் பிரிந்ததாகவே செய்திகள் வெளியிட்டன. இதை கடுமையாக மறுக்கிறார் இளவரசன். ‘’திவ்யா அப்படிச் சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால் அன்றைக்கே வழக்கு முடிந்திருக்கும். ஏன் மீண்டும் ஜூலை 1ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்கள்?’’ என்கிறார் இளவரசன்.

நம்பிக்கையோடு இருக்கிறார் இளவரசன். இருவருக்குள் பிரச்சனை; வாழப்பிடிக்கவில்லை என்பதால் விலகுகிறார்கள் என்பது வேறு. அரசியல் காரணங்களால் காதலர்களை, தம்பதிகளை பிரிப்பது சகித்துக்கொள்ள முடியாதது. மனம் விரும்பிப் புரிந்த திருமணங்களை சாதிய சக்திகள் பிரித்துவிடும் என்றால் அந்தளவுக்கு பலவீனமான சமூகமாக இச்சமூகம் இருக்கிறது என்று பொருள். நீதியைவிட, சட்டத்தைவிட  சக்திவாய்ந்தது சாதி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது

*****

நன்றி : இந்தியா டுடே