Thursday, July 11, 2013

கொல்லும் சாதிளவரசனின் மரணம் தமிழக மக்களின் மனங்களை உலுக்கிவிட்டிருக்கிறது. காதல் திருமணம் புரிந்த ஒரே ஒரு காரணத்துக்காக இளமையிலேயே அகால மரணம் அடைந்த இளவரசனுக்காக ஜூலை 4 மதியம் செய்தி கேட்டவுடன் பதறிய நெஞ்சங்கள் அதிகம்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக ஜூலை 1 அன்று திவ்யாவும் இளவரசனும் திவ்யாவும் ஆஜரானபோதுதான் திவ்யா இப்படிச் சொன்னார் ‘’அம்மா எப்போது விரும்புகிறாரோ அப்போது நான் இளவரசனுடன் வாழ்கிறேன்’’. இளவரசனுக்கு இந்த வார்த்தைகளில் ஓரளவு திருப்தி ‘’திவ்யா யாரையும் காயப்படுத்தவில்லை. திவ்யா கூறிய வார்த்தைகள் எனக்கும் சாதகமானவை. அவங்க அம்மாவுக்கும் சாதகமானவை. இருக்கட்டும். அம்மா கூட ஒரு வருஷம் இருக்கட்டும். நான் விட்டுப்போன படிப்பை முடிக்கிறேன். வேலைக்குப் போறேன். அப்புறம் எத்தனை நாள்தான் அடஞ்சு கிடக்க முடியும்? நிச்சயமா மீண்டும் நாங்க சேர்வோம். அவங்க அம்மாவுக்கும் மனசாட்சி இருக்குமில்லையா? நம்ம பொண்ணு வாழ்க்கை நம்மால வீணாயிடுச்சேன்னு நினைச்சு அனுமதி கொடுப்பாங்க’’  - இளவரசன் இந்தியா டுடேயிடம் தெரிவித்த வார்த்தைகள் இவை. 

ஜூலை 2 அன்று திவ்யாவும் இளவரசனும் நீதிமன்றத்துக்கு வரவேண்டியதில்லை என்பதால் இளவரசன் கிளம்பி ஊருக்குச் சென்றுவிட, திவ்யா நீதிமன்றத்துக்கு வந்து ஊடகங்களின் முன் ஆஜராகி ‘நேற்று நான் அப்படி சொல்லவில்லை. இளவரசனின் வழக்கறிஞர் தவறாகக் கூறிவிட்டார். நான் அம்மாவோடுதான் இருக்கப் போகிறேன். இளவரசனுடன் வாழப்போவதில்லை’’ என்றார். இதை எப்படி எதிர்கொண்டார் இளவரசன்? ‘’இப்படி சொன்னப்புறம் என்ன செய்றது. படிக்கிறேன். வேலைக்குப் போறேன். இப்போதைக்கு திவ்யாவை தொந்தரவு செய்யவேண்டாம். அங்கேயே இருக்கட்டும். வேலைக்குப் போனபின் நாங்க மீண்டும் சேர்வோம்’’ என்று கூறியதாக இளவரசனின் தந்தை இளங்கோ கூறுகிறார். ‘’எங்களுக்கு தைரியம் சொன்னான். அவன் தற்கொலை செய்துக்குற ஆளில்லை. இது கொலைதான்..அடிச்சு சொல்றேன்.’’ என்கிறார். ‘’எம்.பி.சி. பையன் இவனோட ஃபிரண்ட் ஒருத்தன் கூப்பிட்ட்டான்னு சொல்லிட்டுத்தான் என் அக்கா வீட்டில் தகவல் சொல்லிட்டு பல்சர் பைக்கை எடுத்துக்கிட்டுப் போனான். 11 மணிக்குப் போனான். ஒன்றரை மணிக்கெல்லாம் அவன் உடம்பு ரயில்வே டிராக் கிட்ட கிடப்பதைப் பார்த்திருக்காங்க. அந்தப் பக்கமா போன டிரெயின் டிரைவர் ரயில்வே போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கார். டிரெயின்ல அடிபட்டதா தகவல் கொடுக்கல. ஒரு பாடி டிராக் ஓரமா கிடக்குதுன்னு தகவல் கொடுத்திருக்கார். எனக்கும் தகவல் வந்துச்சு.’’ என்கிறார் இளங்கோ.

போஸ்ட்மார்ட்டம் செய்வதில் பெரும் குழப்படியே நடந்திருக்கிறது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச் செல்வன். ‘’போஸ்ட் மார்ட்டம் செய்கையில் நாங்கள் சொல்லும் டாக்டர்களையும் இணைத்துச் செய்யவேண்டும் என்று கேட்டோம். எஸ்.பி. ஆஸ்ரா. கர்க்கும் ஒப்புக்கொண்டார். ஆனால் பெற்றோரிடம் கையெழுத்து பெறாமலேயே அவசரம் அவசரமாக போஸ்ட் மார்ட்டம் நடந்தது. வழக்கறிஞர் சங்கர சுப்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு 11 மணிக்கு வரவிருக்கும் நிலையில் காலையிலேயே எதற்காக போஸ்ட் மார்ட்டம் செய்யவேண்டும்?’’ என்கிறார் இதனால் இளவரசனின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இளவரசனின் வழக்கை விசாரிப்பது ரயில்வே காவல்துறை. கட்டமைப்பு வசதிகள் இல்லாத இந்தத் துறை புலனாய்வு செய்வதில் அனுபவம் இல்லாதது. எனவே வழக்கை அவர்கள் விசாரிக்கக் கூடாது என்பது அவர்களின் வாதமாக இருந்தது. ரயில்வே டி.எஸ்.பி ராஜேந்திரனை புலனாய்வு அதிகாரியாகக் கொண்டு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரிலேயே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டது. இளவரசன் தரப்பு கேட்டுக்கொண்ட மருத்துவர்கள் வந்து சேர, அதற்குள்ளாகவே போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டது அறிந்து உறவினர்கள் கொதித்தனர்.  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கர சுப்பு அளித்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இளவரசனின் உடலை பதப்படுத்தி வைககவேண்டுமென்றும், போஸ்ட் மார்ட்டத்தின்போது எடுக்கப்பட்ட விடியோ பதிவை பார்த்து அதில் திருப்தி இல்லாவிட்டால் மீண்டும் போஸ்ட் மார்ட்டம் நடத்தலாம் என்றும் கூறியது.

ஐந்து கோரிக்கைகளை இளவரசன் தரப்பு வைத்தது.
 1. ரயில்வே காவல்துறை வழக்கை விசாரிக்கக் கூடாது. பயிற்சி பெற்ற ஒரு குழு இதை விசாரிக்கவேண்டும்.
 2. இளவரசனுக்கும் திவ்யாவுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறிய சூழலில் காவல்துறை அவர்களுக்கு பாதுகாப்பு அளித்திருந்தால் அவர்களை திவ்யாவும் இளவரசனும் பிரிந்திருக்கவே வாய்ப்பில்லை. எனவே கடமை தவறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 3. ஆட்கொணர்வு மனு ஒன்றி வரம்பை மீறி நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் அவர்கள் இருவரையும் பாதித்தது. சம்பந்தப்பட்ட நீதிபதிகள் மீது தலைமை நீதிபதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 4.  144 தடை உத்தரவு என்கிற பெயரில் அஞ்சலி செலுத்த வருபவர்களையும், கட்சித்தலைவர்களையும் அனுமதிக்காமல் தடுக்கக்கூடாது. 
5. இளவரசனின் குடும்பம் உடைமைகளை இழந்து, மகனை இழந்து தவிக்கிறது. இவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த கோரிக்கைகளை உறவினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் முன்வைத்தனர். 

இதனிடையே ராணுவத்தில் பணிபுரியும் இளவரசனின் சகோதரர் திரும்பி வரும் வரை காத்திருப்பது என்றும், விடியோவை போட்டுப்பார்த்து திருப்தியானால் உடல் அடக்கம் நடக்கும் என்றும் இல்லையெனில் மீண்டும் போஸ்ட் மார்ட்டம் செய்வது என்றும் முடிவானது. 

இளவரசனின் மரணம் ஒரு தற்கொலை என்றே முதலில் செய்திகள் பரப்பப்பட்டன. பல ஊடகங்களிலும் அவ்வாறே செய்திகள் வந்தன. திவ்யாவின் முடிவால் மனமுடைந்து இளவரசன் சாவை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றே அவை கூறின. ஆனால், ரயில்வே தண்டவாளத்துக்கு அருகே கிடந்த இளவரசனின் உடலைப் பார்க்கையில் எழும் கேள்விகளும் பதில் இல்லை. ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட உடல் போல இல்லை அந்த உடல். மடிப்பு கலையாத உடையுடன், தலையில் மட்டும் அடிபட்டு, மூளை சிதறி அருகில் பையுடன், சிகரெட், மதுப்புட்டியுடன் கிடந்தது இளவரசனின் உடல். இளவரசனின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் அது தற்கொலை அல்ல என்றும் கொந்தளிக்கிறார்கள் இளவரசனின் உறவினர்கள். 

அது கொலையோ தற்கொலையோ, எதுவாக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். ஏனெனில் தற்கொலைக்குத் தூண்டுதலும் குற்றமே. சென்ற ஆண்டு மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க சித்திரைத் திருவிழாவில் காடுவெட்டி குரு பேசியதும், அதன் தொடர்ச்சியாக தர்மபுரி பகுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் பேசிய சாதிவெறிப்பேச்சுகளே தர்மபுரி வன்முறைகளுக்குக் காரணம் என்பது ஊரறிந்த ரகசியம். இப்போது இளவரசன் – திவ்யா பிரிவு, இளவரசன் மரணம் என்று எல்லாவற்றிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கு உள்ளது. ஆனால் அன்புமணி ராமதாஸ் ‘இளவரசனின் மரணம் வருந்தத்தக்கது. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கூறுகிறோம். அவர்கள் இருவருக்கும் இடையில் யாரும் தலையிட வேண்டாம். நாங்கள் ஒருபோதும் அவர்கள் விவகாரத்தில் தலையிட்டதில்லை’’ என்றார். ஆனால் இளவரசன் – திவ்யா வழக்கில் ஆஜரானது பா.ம.க. வழக்கறிஞர் பாலுவும் மற்ற பா.ம.க. வழகறிஞர்களும்தான். 

இதற்கிடையே வழக்கறிஞர் வைகை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் இளவரசன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். 

வழக்கறிஞர் சங்கரசுப்பு, ‘‘இளவரசன் நண்பர் பெயரில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இளவரசன் மரணத்தில் சந்தேகம் உள்ளது. கோவை அல்லது சேலம் மருத்துவமனையில் நாங்கள் விரும்பும் டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும். தர்மபுரி எஸ்.பி.யுடன் இன்று காலை போனில் தொடர்பு கொண்டு பிரேத பரிசோதனை நடத்த வேண்டாம் என கோரிக்கை வைத்தோம். அவர் அதை நிராகரித்துவிட்டு அவசரம் அவசரமாக பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது. இளவரசன் மரணத்தை பற்றி அது கவலைபடவில்லை’’ என்று தெரிவித்திருக்கிறார். இதே கருத்தையே முன்வைக்கிறார் சிந்தனைச் செல்வன். 144 தடையுத்தரவு மாவட்டத்தில் போடப்பட்டுள்ளதால் அஞ்சலி செலுத்த வருபவர்கள் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வந்த புரட்சி பாரதம் தலைவர் பூவை. ஜெகன்மூர்த்தியை கைது செய்தது காவல்துறை. அவரை கைது செய்த சிறிது நேரத்தில் கைதை எதிர்த்து சென்னை உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஜூலை 4 அன்று மாலை வேளச்சேரியில் பத்திரிகையாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ‘’ரயிலில் அடிபட்டு இறந்ததாகச் சொல்லப்படுவதில் பலத்த சந்தேகம் நிலவுகிறது. அந்த சமயத்தில் ரயில் எதுவும் அந்தப் பக்கத்தில் வந்ததாகத் தெரியவில்லை. குர்லா எக்ஸ்பிரஸ் கோவையிலிருந்து 12 மணிக்குப் புறப்படுகிறது. இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரமும் இந்த ரயில் வந்த நேரமும் ஒப்பிட்டுப்பார்க்கையில் சந்தேகம் வருகிறது. அவரை அடித்துத்தான் கொன்றிருக்கவேண்டும்’’ என்று தன் சந்தேகத்தை தெரிவித்தார். திவ்யாவின் தாய் தேன்மொழி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் திவ்யா – இளவரசன் தரப்பில் ஆஜரானவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த். ஆனால் இன்றைக்கு திவ்யா அம்மாவுடன் இணைந்ததால், அவர் இளவரசன் தரப்பு வழக்கறிஞராகிவிட்ட விநோதம் நிகழ்ந்தது. ஆட்கொணர்வு மனு என்பது ஆளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டபின் வேண்டாத வேலைகளுக் கெல்லாம் பயன்படக்கூடாது என்கிறார் ரஜினிகாந்த்.

 ‘’ஆட்கொணர்வு மனுதான் திவ்யாவின் தாய் தாக்கல் செய்தார். திவ்யாவை
ஆஜர்படுத்தியாயிற்று. ஆனால் மீண்டும் மீண்டும் அந்த மனுவை வைத்தே
திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரிக்கும் வேலையைச் செய்தார்கள். சாதிவெறியர்களுக்கு நீதிமன்றம் துணை போனது என்றுதான் சொல்லவேண்டும். நீதிபதிகள் தனி அறையில் திவ்யாவிடம் பேசினார்கள் ஜூலை 1 அன்று. திவ்யா கண்ணீருடன் ‘அம்மா விரும்பினால் இளவரசனுடன் வாழ்வேன்’ என்று கூறினார். இது நீதிமன்றக் குறிப்புகளில் பதிவாகி உள்ளது. யார் வேண்டுமானாலும் அதை சரிபார்த்துக்கொள்ளலாம். ஆனால் மறுநாள் திவ்யாவோ இளவரசனோ ஆஜராகத் தேவையே இல்லை. அதனால் இளவரசன் தர்மபுரிக்குச் சென்றுவிட்ட நிலையில்,தேவையில்லாமல் திவ்யாவை நீதிமன்றத்துக்கு அழைத்துவந்தார் பா.ம.க. வழக்கறிஞர்கள் அழுத்தம் கொடுத்து நிர்பந்தித்து திவ்யாவை ஊடகங்களிடம் வேறு மாதிரி பேசவைத்தனர். ‘இளவரசனுடன் இனி வாழப் போவதில்லை’ என்று அவர் தெரிவித்தார். அப்போது நான் தான் ஊடகங்களுக்கு தவறாக தகவல் கொடுத்ததாகவும் கூறினார். எல்லாமே நிர்பந்தத்தினால் வந்த வார்த்தைகள். நீதிமன்றக் குறிப்புகளில் பதிவான ஒரு விஷயத்தை கொஞ்சமும் தயக்கமில்லாமல் பொய்யாகப் பேச வைத்தார்கள் பா.ம.க.வினர். இதற்கு மறுநாள் இளவரசனின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. இளவரசனின் மரணம் கொலைதான். தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. தலையில் மட்டும் காயம். இடது கையில் சிறிதளவு காயம். அவ்வளவுதான். ரயிலில் அடிபட்டால் இப்படி இருக்காது. அருகிலேயே மது பாட்டில் இருப்பதெல்லாம் பார்த்தால் கொண்டுவந்து வைத்தது போலவே உள்ளது. மிகவும் தைரியமான தன்னம்பிக்கை உடைய இளவரசன் தற்கொலை செய்துகொள்வார் என்பதை நம்ப முடியாது. அவருடைய உடலைப் பார்க்கையில் யாருக்குமே நடந்தது என்ன என்பதை யூகிக்க முடியும். ஆட்கொணர்வு மனுவை விவகாரத்து மனுபோல பாவிக்கக் கூடாது. இது நீதிமன்றமும் சாதியவாதிகளும் சேர்ந்து செய்த கொலை.’’என்கிறார் ரஜினிகாந்த்.

இளவரசனின் மரணத்தை அடுத்து தொலைக்காட்சிகளில் விவாதங்களும், இருவர் சந்தித்துக்கொண்டால் அதுகுறித்தே பேசுவதுமாக இந்த மரணம் பாதிப்புகளை உண்டாக்கி உள்ளது. இளவரசனின் மரணத்துக்கு எது காரணம்? அப்பட்டமான சாதிவெறி. தர்மபுரி மாவட்டத்தில் காதல் சாதிமறுப்பு திருமணங்கள் ஒன்றும் புதிதல்ல. இப்போதுகூட திவ்யா – இளவரசன் திருமணத்துக்குப் பின்பு கூட சில காதல் திருமணங்கள் நடந்தேறி இருக்கின்றன. கொண்டம்பட்டியைச் சேர்ந்த நேதாஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வன்னிய சாதி பெண்ணை மணம் புரிந்ததால் ஊருக்குள் நுழைய முடியாமல் வெளியூரில் மனைவியுடன் வசிக்கிறார். இன்று வரை அவர் எந்த ஊரில் இருக்கிறார் என்று அவருடைய குடும்பத்துக்கே தெரியாது. தர்மபுரி வன்முறையின்போது அவருடைய வீடு குறிவைத்து தாக்கப்பட்டது. அப்போது ஒரு பத்திரிகையில் வெளியான தாயின் புகைப்படத்தைப் பார்த்து அவரைத் தொடர்புகொண்டு கதறினார் நேதாஜி. இவரைப் போல இளவரசனும் திவ்யாவும் எங்காவது வெளியூரில் சென்று வாழ்ந்திருந்தால், தர்மபுரிக்கு வராமலேயே இருந்திருந்தால் எந்தச் சிக்கலும் இல்லாமல் வாழ்ந்திருப்பார்கள். சென்னையிலும் பெங்களூரிலும் வாழ்ந்த இவர்கள் பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் வெளியூரில் தங்கும் வசதி இன்றி இளவரசனின் பெற்றோருடன் வந்து தங்கியுள்ளனர். உள்ளூரிலேயே இருந்தது சாதியவாதிகளுக்கு வசதியாகிவிட்டது. 

கையில் பணமில்லாமல், இளவரசனும் திவ்யாவும் வழக்குக்காக சென்னை வரை இருசக்கர வாகனத்திலேயே வந்தார்கள் என்று இளவரசனின் பெற்றோர் தெரிவித்தனர். அந்தளவுக்கு பொருளாதார வசதியின்றி இருந்தவர்களுக்கு பணம் மட்டும் இருந்திருந்தால் எங்கோ கண்காணாத இடத்தில் வசித்து உயிருடனாவது இருந்திருப்பார்கள். ஆனால் இன்றைக்கு இளவரசன் உயிருடன் இல்லை. திவ்யாவுக்கு நிம்மதி இல்லை. தந்தையை ஏறகனவே இழந்து மன அழுத்தத்திலிருக்கும் திவ்யாவுக்கு இளவரசனின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் அவருக்கு இந்தச் செய்தி போய்ச் சேர்ந்ததா என்பதே கேள்விக்குறி. சாதியவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் திவ்யா என்கிற இளம்பெண்ணை மீட்பது என்கிற நோக்கிலேயே வழக்கறிஞர் வைகை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். இளவரசன் தன் இறுதி முயற்சியாக திவ்யா, அவருடைய தாய் தேன்மொழி, அவருடைய சகோதரன் என்று அனைவருக்குமாக சேர்த்து அவர்களை மீட்க வேண்டும், உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இளவரசனிடம் இந்தியா டுடே எடுத்த முந்தைய பேட்டியிலும் கூட திவ்யாவின் தாய் தேன்மொழி நிர்பந்திக்கப்படுகிறாரென்றும், பா.ம.க.வைச் சேர்ந்த சாதியவாதிகளின் பிடியில் சிக்கியே அவர் தனக்கு கிடைக்கவேண்டிய காவல்துறை வேலையைக் கூட கிடைக்கவிடாமல் செய்தார் என்றும் தெரிவித்திருந்தார். ‘’’ இந்தளவுக்கு ஆகும்னு யாருக்குத் தெரியும். நான் பிறந்த சாதிதான் இவங்களுக்குப் பிரச்சனையா போச்சு. இவ்வளவு செய்றவங்க எதையும் செய்வாங்க.’’ என்று இளவரசன் முந்தைய பேட்டியில் கூறியிருந்ததே ஒரு வாக்குமூலமாகி நிற்கிறது. இளவரசனின் மரணம் தற்கொலையா கொலையா என்கிற விவாதங்களையெல்லாம் மீறி அவரைக் கொன்றது சாதியே.

படங்கள்: ராஜசேகர்

(இந்தியா டுடே இதழுக்காக எழுதியது)


2 comments:

 1. தங்களது கட்டுரையில், // இதற்கிடையே வழக்கறிஞர் வைகை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் இளவரசன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்.// என்றும்
  //சாதியவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் திவ்யா என்கிற இளம்பெண்ணை மீட்பது என்கிற நோக்கிலேயே வழக்கறிஞர் வைகை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.// என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

  மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்ட்டன் என்பவர் தொடுத்த வழக்கில் மூத்த வழக்குரைஞர் வைகை அவர்கள் ஆஜராகி வாதாடினார் என்று ஜூலை-6 அன்று வெளியான தினசரிகள் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றன.
  (http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=56685
  http://www.vinavu.com/2013/07/05/ilvarasan-death-hrpc-demands-cbi-probe/)
  கவனக்குறைவினால் ஏற்பட்டுவிட்ட விவரப்பிழை என்று இதனை பார்க்க முடியாது எனக்கருதுகிறேன்.
  வழக்குரைஞர் வைகையின் பெயரைக் குறிப்பிடக்கூடாது என்ற அர்த்தத்தில் அல்ல, ஜிம்ராஜ் மில்ட்டன் என்பவர் தொடுத்த வழக்கில் வழக்குரைஞர் வைகை ஆஜரானார் என்று குறிப்பிடுவதில் தங்களுக்கு என்ன சிக்கல் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டே இம்மறுமொழியிடுகிறேன்.
  மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் அதனை சார்ந்த புரட்சிகர அமைப்புகளின் பால் "கவின்மலர் கடைபிடிக்கும் தீண்டாமை"யாகவே எனக்குப் படுகிறது.

  ReplyDelete
 2. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_16.html சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete