சங்கம் அமைப்பது என்பது தொழிலாளர்களின் உரிமை. ஆனால் வீடுகளில் வேலை செய்பவர்களும் தொழிலாளர்களே என்று பலர் உணர்வதில்லை. ஆனால் சென்னையை அடிப்படையாகக் கொண்டு வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களைக் கொண்ட சங்கங்கள் அவர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றன. வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பிற தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் போன்று அல்ல. பணியிடம் என்பது இவர்களுக்கு வீடுதான். வீட்டு எஜமானர்களே ஊதியம் அளிப்பவர்களாக உள்ளனர். தொழிற்சாலைகளிலோ நிறுவனங்களிலோ பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் உருவாகும் சிக்கல்களை கையாள சட்டங்களும் விதிமுறைகளும் உண்டு. ஆனால் இவர்களின் பணியிடம் இன்னொருவரின் வீடாக இருப்பதால் அங்கே ஒரு தொழிலாளர் சந்திக்கும் பிரச்சனை வெளியில் தெரியாது. எடுத்துக்காட்டாக ஒரு பெண் தொழிலாளி, அவர் வேலை செய்யும் வீட்டு எஜமானரால் பாலியல் வன்முறைக்கு ஆளானால் அது வெளியே தெரியாமல் போய்விட வாய்ப்புண்டு. ‘’நான் முன்பு வேலை செய்த வீட்டிலுள்ளவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதை அவருடைய மனைவியிடம் நான் புகார் சொன்னபோது அவர் அதை நம்பவே இலலை. நான் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். இப்படி பல இடங்களில் நடந்திருக்கிறது’’ என்கிறார் பெயர் கூற விரும்பாத ஒரு பெண் தொழிலாளி.
உடல்நலம் சரியில்லை என்றாலோ, ஏதாவது அவசரம் என்றாலோகூட விடுப்பு எடுக்கமுடியாத சூழலில் இருக்கிறார்கள் வீட்டுவேலை செய்பவர்கள். ’’நாங்களும் மனிதர்கள்தானே? எங்களுக்கும் ஏதாவது அவசர வேலை இருக்காதா என்ன? விடுப்பு எடுத்தால் மறுநாள் கன்னாபின்னாவென்று திட்டு வாங்கவேண்டி வரும்’’ என்கிறார்.
வேலைக்குச் சேர்க்கும்போது ஒரு பேச்சு, சேர்ந்தபின்பு ஒரு பேச்சு என்றிருக்கும் எஜமானர்கள் அதிகம். அதாவது வேலைக்கு சேரும்போது, பாத்திரம் துலக்குவது, வீடுகூட்டுவது, துணி துவைப்பது ஆகிய வேலைகளை செய்தால் போதும் என்று கூறிவிட்டு, வேலைக்கு வரத் தொடங்கியதும் குளியறையை சுத்தம் செய்வது போன்ற கூடுதல் வேலைகளைக் கொடுப்பது போன்றவை நடக்கின்றன. வெறும் வாய்மொழி ஒப்பந்தத்தை மட்டும் செய்துகொண்டு வேலைக்கு ஒப்புக்கொண்டு வருபவர்களை கூடுமானவரை பிழிந்தெடுத்து அவர்கள் உழைப்பைச் சுரண்டும் வேலையை பலர் செய்துகொண்டிருக்கின்றனர்.
வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களை உள்ளடக்கிய அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் நிறுவனர் கீதாவிடம் இந்தியா டுடே தொடர்புகொண்டபோது ‘’வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான கையெழுத்து இயக்கம் ஒன்றை தமிழகத்தில் நடத்துகிறோம். தேசிய அளவில் ஜூலை 31 அன்று ஒரு பேரணி நடத்தவிருக்கிறோம். வீட்டு வேலை தொழிலாளர்கள் குறித்த கொள்கையை மத்திய அரசு சட்டமாக விரைவில் மாற்றவேண்டும் என்று கோருகிறோம். தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சட்டத்தின்கீழ் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களை 1999ல் கொண்டுவந்தது தமிழக அரசு. 2006ல் அவர்களுக்கென்று தனி நலவாரியமும் அமைக்கப்பட்டது’’ என்றார்.
நலவாரியத்தின்மூலம் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருக்கவேண்டும் . ஆனால் அதுகூட இன்னமும் செய்யப்படவில்லை என்கிறார் கீதா. மகப்பேறு காலத்தில் 6,000 ரூபாய் வழங்குவது, விபத்து நிவாரணம், இயற்கை மரண நிவாரணம் என்று ஒரு சில விஷயங்களுக்கு நலவாரியம் பயன்படுகிறது. விழுப்புரம் மாட்டத்தில் இந்த நலவாரியத்தில் பதிவு செய்யப் போனால் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் கீதா. மூன்று விதமான வீட்டுவேலை தொழிலாளர்கள் இருக்கிறார்கள். பகுதிநேரமாக ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் செய்பவரக்ள். முழுநேரமாக 8 மணி நேரம் வரை வீட்டுவேலை செய்பவர்கள். லிவ் இன் என்று சொல்லக்கூடிய வகையில் வீடுகளில் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்பவர்கள் ஆகிய மூன்று பிரிவுகள் உண்டு. இதில் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்பவர்கள் அதிகமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். ‘’ஏஜென்சி மூலமாக வேலைக்குச் சென்றவர்களிடம் பொருளாதாரரீதியாக அந்த ஏஜென்சிக்கள் அவர்களின் சம்பளத்தில் செய்யும் சுரண்டல்கள் அதிகம். அப்படி சென்னை சைதாப்பேட்டையில் ரகுபதி என்பவர் நடத்திய ஏஜென்சியில் இப்படி முறைகேடுகள் நடந்து அதற்கெதிராக போராட்டங்கள் நடத்தினோம்’’ என்கிறார் கீதா.
குழந்தைகளை வீட்டுகளுக்கு வைத்துக்கொள்ளும் கொடுமையும் நடக்கிறது. குழந்தைத்தனம் மாறாத முகத்துடன் எஜமானரின் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு பாதுகாக்கும் அவர்களையும் காப்பாற்ற சரியான நடவடிக்கை இல்லை. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து வீடுகளில் தங்கியிருந்து பணிபுரிபவர்கள் பதிவு செய்யப்படுவதில்லை.வீடுகளில் அவர்கள் துன்புறுத்தப்படுவது, கொத்தடிமைகளாக நடத்தப்படுவது போன்ற மனித உரிமை மீறல்களும் நடைபெறுகின்றன.
வீட்டுவேலை தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்தியிடம் பேசியபோது ‘’நான் சி.பி.எம். கட்சியின் தென் சென்னை மாவட்ட அலுவலகத்திலும் வேறு சில வீடுகளிலும் வேலை செய்கிறேன். சில வீடுகளில் அவ்வபோது சாப்பாடு, டீ போன்றவை கொடுப்பார்கள். பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த சாப்பாடு கொடுப்பார்கள். ஆனால் இவற்றையெல்லாம் சம்பளத்தில் கழித்துக்கொள்வார்கள். வீடுகூட்டும்போது அப்படியே ஒட்டடையும் அடிக்கக் கூடாதா என்று கேட்பார்கள். அதற்கு தனியாக கூலி தரவேண்டும் என்கிற உண்மை உறைக்கவே உறைக்காது. எங்கள் சங்கத்தின் உதவிகேட்டு ஒரு பெண் வந்தார். அவர் மீது திருட்டுப் பட்டம் கட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் அவர் வேலை செய்த வீட்டு உரிமையாளர். உண்மை என்னவெனில் அவருடைய பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்ததால் இப்படிச் செய்திருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்தது. இப்படி பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்கிறார்.
வீட்டுவேலை என்பது பல நாடுகளில் தொழிலாளர் நலத்துறையின் கீழ் வருகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு வீட்டுவேலையை ஒரு வேலையாக அங்கீகரித்திருக்கிறது. 2002ல் வீட்டுவேலை செய்பவர்கள் அருகில் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று அரசு கூறியபோது ’நாங்கள் என்ன கிரிமினல்களா?’ என்று கேட்டு அதை கடுமையாக எதிர்த்தன் காரணமாக அந்த நிலை தமிழ்நாட்டில் ஏற்படவில்லை என்கிறார் தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கிளாரா. வீட்டு வேலை செய்பவர்களுக்கு தனித்தட்டு, டம்ளர், தண்ணீர் அதிகம் கலந்த பாலில் காபி கொடுப்பது என்று தீண்டத்தகாதவர்கள் போலவே முதலாளிகள் நடத்துவதுண்டு.கிராக் க்ரீமின் விளம்பரமொன்றில் ‘’முகத்தைப் பார்த்தா ராணி, காலைப் பார்த்தால் வேலைக்காரி’ என்று ஒரு விளமபரம் வந்தது. இந்த விளம்பரத்தை எதிர்த்து போராட்டங்கள் பல நடந்தன. பத்தாயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதை அந்த நிறுவனத்துக்கு அனுப்பியபின் அந்த விளம்பரம் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது என்கிறார் கிளாரா.
முதலில் சங்கம் வைக்கும் அனுமதியை அரசிடம் கோரியபோது ‘’நீங்கள் உற்பத்தி தொழிலாளர்கள் அல்ல; தொழிற்சங்கம் வைக்க முடியாது’ என்றது அரசு. ஆனால் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் ஏற்கனவே இருந்தது. அவர்களும் எதையும் உற்பத்தி செய்பவர்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு இருக்கிறதே என்று வாதாடியபின் சங்கம் வைக்கும் அனுமதி கிடைத்தது. ’’நாங்கள் உற்பத்தி தொழிலாளர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உற்பத்தி செய்பவர்கள் தங்கள் வேலைகளைப் பார்க்க முதுகெலும்பாய் இருந்து உதவுவது நாங்கள்தான்’’ என்கிறார் கிளாரா. குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் தொடர்பாக பல போராட்டங்கள் இதுவரை நடந்துவிட்டன. மாவட்டங்களில் ஒரு மணிநேரத்துக்கு 35 ரூபாயும் சென்னை நகரில் 50 ரூபாயும் நிர்ணயிக்கவேண்டும் என்று இந்த சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது. ’’இது குறித்துப் பேச அப்போதைய அமைச்சர் செல்லபாண்டியை சந்திக்கச் சென்ற எங்களிடம் ‘பழைய சோத்துக்கும், பழைய துணிக்கும் கூட, போராட்டமெல்லாம் பண்ணி வேட்டு வைக்கிறீங்க’ என்று அவர் சொன்னதை மறக்க முடியுமா? அமைச்சரே இப்படி பேசினால், சாமானிய மக்கள் எங்களை எப்படியெல்லாம் பேசுவார்கள்? இப்போது நிலைமை மாறி இருக்கிறது. வீட்டு வேலை செய்பவர்களும் தேவையில்லாமல் முதலாளிகளின் குடும்ப விஷயங்களில் தலையிடுவதில்லை. எங்கள் மூலம் செல்பவர்கள் முதலாளிகளிடம் ஒப்பந்தம் போட்டுத்தான் செல்கிறார்கள். ஒரு மாத தீபாவளி போனஸ், விடுப்பு எடுக்கும் உரிமை என்று மரியாதையாக நடத்தும் போக்கு அதிகரித்திருக்கிறது. சங்கம் வந்தபின்புதான் இந்த மாற்றங்கள் எலலாம்’’ என்கிறார் கிளாரா.
(இந்தியா டுடே இதழில் வெளிவந்தது)
சங்கம் எந்தளவு உதவும் என்று தோன்றவில்லை...
ReplyDelete