Tuesday, December 24, 2013

விதிகளுள் அடங்குமா காதல்?

"எல்லோரும் நினைப்பதுபோல என் உடல் பெண் தன்மையுடன் இல்லை. ஆண் உடல்தான். ஆனால் பெண்கள்பால் ஈர்ப்பில்லை. ஆண்களின்பால் ஈர்க்கப்படுகிறேன். அவ்வளவுதான்” என்கிறார் 38 வயதாகும் விநோத் பிலிப். 

”கல்லூரி காலத்தில் என் தோழி ஒருத்தி தன் சமபாலின ஈர்ப்பு குறித்து வெளியே சொல்ல முடியாமல் தன் கேர்ள் பிரண்ட்டுடன் தான் வெளியே சென்றதை பாய் பிரண்டுடன் சென்றதாக மாற்றி எங்களிடம் சொல்வாள்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த லெஸ்பியன் ஒருவர். இப்படித்தான் அவர்களை வைத்திருக்கிறது சமூகம். ஏற்கனவே அவர்களை வித்தியாசமானவர்களாக பார்க்கும் போக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் நிலைமையை மோசமாக்கியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை 7,000 பேருக்கு மேல் சமபாலின ஈர்ப்பு கொண்டவர்கள் உள்ளதாக அவர்கள் டிசம்பர் 15 அன்று சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பு அவர்களை வெகுண்டெழச் செய்திருக்கிறது. சமபாலின ஈர்ப்பு என்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

இவை ஒரு பக்கமிருந்தாலும் இத்தீர்ப்பு சென்னை மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளில் வாழும் சமபாலின ஈர்ப்பு கொண்டவர்களை அச்சம்கொள்ள வைத்திருக்கிறது. “முன்பெல்லாம் வாரத்துக்கு ஐம்பது அழைப்புகள்வரை கவுன்சிலிங் மையத்துக்கு வரும். தீர்ப்புக்குப் பின் இரண்டு மூன்று அழைப்புகளாக குறைந்திருக்கின்றன. நிலவும் அச்சத்தையே இது காட்டுகிறது” என்கிறார் சமபாலின ஈர்ப்புடைய ஆண்களுக்கான சென்னை தோஸ்த் அமைப்பைச் சேர்ந்த விக்ராந்த் பிரசன்னா. சென்ற ஆண்டு சமூக ஊடகங்களில் பலரை தொடர்புகொண்டு அவர்களை தனியே வரச்செய்து படங்கள் எடுத்து அதை வைத்து அவர்களை மிரட்டுவது தொடர்பான புகார்கள் பல வந்ததாகவும் இப்படிப்பட்ட பிளாக் மெயில்கள் இனி அதிகரிக்கும் என்கிறார் விக்ராந்த். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தங்களின் பாலியல் ஈர்ப்பை அறிந்துகொண்ட சக மாணவர்கள் தங்களை தவறாக பயன்படுத்துவதை புகாராக சொல்பவர்கள் உண்டு. இனி அப்படிப்பட்ட புகார்களை வெளிப்படையாக தர யாரும் முன்வரமாட்டார்கள்என்று பல விளைவுகளை அடுக்குகிறார் விக்ராந்த்.

இத்தீர்ப்பு மூலம் விவாகரத்துகள் பெருக வாய்ப்புண்டு. ஏனெனில் தண்டனைக்குரிய குற்றத்தில் ஈடுபட விரும்பாமல் தங்கள் இயற்கைக்கு மாறாக ஒருவரை மணந்துகொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக விவாகரத்துகள் அதிகமாகக்கூடும். அத்துடன் தங்கள் பிள்ளை சமபாலின ஈர்ப்புடைய பிள்ளை தனக்கிருக்கிறது என்பதையே அவமானமான நினைக்கும் பெற்றோர் இப்போது அவர்களை சட்டப்படியான குற்றவாளியாகப் பார்க்கத் தொடங்குவதால் அவர்கள் மீதான வன்முறை அதிகரிக்கும். குறிப்பாக லெஸ்பியன் பெண்களுக்கு இதில் பிரச்சனைகள் அதிகம். “திருமண வாழ்வில் பெண்மீது வன்முறை செலுத்தும் ஆணுக்கு எதிராக குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் புகார் அளித்தால், கணவன் மிக எளிதாக அவளை லெஸ்பியன் என்று சொல்லி குற்றவாளியாக்கி தான் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இது பெற்றோருக்கும் பொருந்தும். எஸ்.சி/எஸ்.டி. சட்டம், சிறுபான்மையினருக்கான சட்டங்கள் இப்படி எல்லா சட்டத்தின்படியும் புகார் தந்தால் எளிதாக இப்படியொரு குற்றச்சாட்டைச் சொல்லி எதிர்புகார் தரலாம். மேலும் காவல்துறை இதைவைத்து எப்படிவேண்டுமானாலும் பணம் பார்க்கும்” என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளரான அனுஷா. 

சென்னையில் இச்சமூகத்தின் நிகழ்வுகளுக்கு பெரிதாக கார்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரதாரராக இருப்பதில்லை. ஏனெனில் இங்குள்ள இச்சமூகத்தினர் அதை விரும்பவில்லை என்கிறார் அனுஷா. ஆனால் பல பன்னாட்டு நிறுவனங்களில் ஏராளமான சமபாலீர்ப்பு கொண்டவர்கள் பணியாற்றுகிறார்கள். அத்தகைய நிறுவனங்களுக்கு உலகளாவிய கொள்கைகள் இருப்பதால், அவர்களுடைய வேலைக்கு நிறுவனத்தால் ஆபத்து ஏதும் ஏற்படாது. ஆனால், சக பணியாளர்கள் இந்தியர்களே எனும்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் இவர்களை அசூயையாக பார்க்ககூடும். இது அவர்களுக்கு பணியாற்றும் இடத்தில் பெரும் உளவியல் நெருக்கடியைத் தரக்கூடும். ”இந்த நெருக்கடி தற்கொலைகளுக்கும் கூட இட்டுச்செல்லும் ஆபத்துள்ளது” என்கிறார் அனுஷா. அத்துடன் வருங்கால வைப்பு நிதிக்கான நியமனதாரராக சமபாலின துணை ஒருவரை ரத்த சம்பந்தம் இல்லாத உறவாக இருந்தாலும் கொடுக்க முடிந்தது. ஆனால் இத்தீர்ப்புக்குப் பின் நிறுவனங்கள் அதையும் ஏற்காது.

தமிழகம் முழுவதுமிருந்து வீடுகளைவிட்டு வெளியேறி வருபவர்கள் தங்க என்று பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை. நண்பர்களின் வீடுகளில்தான் இவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். இனி அப்படித் தங்கவைக்கவும் பலர் யோசிக்கக்கூடும். சட்டப்படி இவர்களுக்கான ஒரு தங்குமிடத்தை ஏற்படுத்துவதும் முடியாது எனும்போது அவர்கள் போக்கிடம் இன்றி தவிக்க நேரிடும் என்று இச்சமூகத்தினர் அச்சப்படுகின்றனர். இந்தத் தீர்ப்புக்கு முன்னர், சட்டத்தில் கூட ஆண்களைப் பற்றிய குறிப்புகள் இருக்குமே தவிர லெஸ்பியன் பெண்கள் பற்றிய குறிப்புகள் இல்லாமலிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் பெண்களையும் இணைத்தே சொல்லப்பட்டிருக்கிறது என்பதால் லெஸ்பியன் பெண்களுக்கான கட்டாயத் திருமணங்கள் அதிகரிக்கும். அவர்களின் மணவாழ்க்கையும் பாழாகும் என்பது இவர்களின் வாதம். பல ஜோடிகள் பிரிந்துவிடும் அபாயமும் உண்டு. குறிப்பாக தன் ஈர்ப்பைச் சொல்லவும் அஞ்சும் தன்மை இனி வந்துவிடும். இருபாலின ஈர்ப்பாளர்களுக்கும் (Bi-sexual) சமபாலின ஈர்ப்ப்பாளர்களுக்குமான உறவு முற்றிலும் உடைந்துபோகும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் இருபாலின ஈர்ப்பாளர்களுக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. வசதியுடையவர்கள் சமபாலின ஈர்ப்பு அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் சென்று குடியேறக்கூடும். ஆனால் வாய்ப்பற்றவர்களின் நிலைமைதான் கேள்விக்குறி.

ஓரினம்.நெட் என்கிற இணையதளத்தின் ஒரு தன்னார்வலராகவும் பயோமெடிக்கல் அறிவியல் மருத்துவரான டாக்டர் ராமகிருஷ்ணனிடம் பேசியபோது ”. எச்.ஐ.வி தடுப்புக்கான ஆணுறைகளை வழங்குவது, பாதுகாப்பு வழிமுறைகள் தருவது என்று சமூகத்தினர் மத்தியில் வந்து சொல்லித் தந்த சுகாதார பணியாளர்களுக்கு இனி வேலை இல்லை.சர்வதேச எய்ட்ஸ் சொசைட்டி இந்திய குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றத்தீர்ப்புமீதான தன் அதிருப்தியை கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறது” என்கிறார். 

பிறப்பால் உடலால் ஆணாகவும், உணர்வால் பெண்ணாகவும் உள்ளவர்கள் திருநங்கைகள். அதுபோலவே பிறப்பால் உடலால் பெண்ணாகவும் உணர்வால் ஆணாகவும் உள்ளவர்கள் திருநம்பிகள். ,அத்தகைய ஒரு திருநம்பியான ஜோவின், "என் வீட்டிலுள்ளவர்கள் நான் பிறப்பால் பெண் ஆனால் எண்ணத்தால் ஓர் ஆண். பெண் மீதுதான் எனக்கு விருப்பம் வருகிறது. அதனால் நான் திருநம்பி என்று புரிந்துகொண்டனர். ஆனால் இனி என்னைப் போல வீட்டில் தன்னைக் குறித்து வெளிப்படுத்தும் ஒருவரை சமபாலின ஈர்ப்பாளர் என்று புரிந்துகொள்ளக்கூடும்  ஒருவேளை சட்டத்துக்கு பயந்துதான் திருநம்பி என்று பொய் சொல்வதாக சந்தேகம் வரக்கூடும். இது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கப்போகிறது. திருநங்கைகளையும் இப்படித்தான் சந்தேகப்படுவார்கள்” என்கிறார் ஜோவின். 

நிறங்கள் அமைப்பைச் சேர்ந்த சங்கரி. “பொதுச்சமூகத்தை நோக்கி நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். எங்கள் எல்.ஜி.பி.டி.(LGBT - Lesbian Gay Bi-sexual and Transgenders) சமூகம் வெளியே வந்து வெளிப்படையாக போராடுகிறது. பொதுச்சமூகம் என்கிற பெயருக்குள் எத்தனை சமபாலின ஈர்ப்புகொண்டவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். வெளியில் வந்து போராட தைரியம் இல்லாதவர்கள். ஆசனவாய் புணர்ச்சி, வாய்வழி புணர்ச்சி என்பதெல்லாம் கணவன் - மனைவிக்கு இடையில் கூட தவறு என்று சொல்கிறது இத்தீர்ப்பு. இதை எதிர்த்து போராட நீங்கள் யாரும் முன்வரமாட்டீர்களா? ” என்று கொதிப்புடன் கேட்கிறார். தமிழகத்து சம்பாலின ஈர்ப்பாளர்களை வைகோவின் அறிக்கை புண்படுத்தியிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. “அவர்களை ஈனப்பிறவிகள் என்று சொல்லும் வைகோ அவர்களின் வாக்குகள் வேண்டாம் என்று சொல்லட்டும் பார்க்கலாம். சுயமரியாதை, பெரியார் என்று சொல்லும் அவர் மீதிருந்த மதிப்பு  குறைந்துவிட்டது” என்கிறார் செயற்பாட்டாளர் ஸ்ரீஜித்.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? “இது பொதுப்பட்டியலில் இருப்பதால், மத்திய அரசோ மாநில அரசு இதில் திருத்தங்கள் செய்யலாம்.எப்படி இந்து திருமணச் சட்டத்தில் தமிழகத்தில் மட்டும் சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடி ஆகுமென திருத்தம் கொண்டுவரமுடிந்ததோ அதே முன்னுதாரணத்தைக்கொண்டு தமிழகத்தில் மட்டும் திருத்தம் கொண்டுவரலாம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பினால் அவர் அனுமதி தரலாம். தரவில்லையென்றாலும் மீண்டும் தீர்மானம் இயற்றி அனுப்பினால் அவர் ஒப்புதல் தந்துதான் ஆகவேண்டும். இந்த ஒரு வழி இருக்கிறது” என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம். இப்போதைக்கு தமிழகத்தில் இந்தத் திருத்தம் வரவேண்டுமென எல்.ஜி.பி.டி. சமூகத்தினர் முதல்வரிடம் கோரிக்கை வைத்துக் காத்திருக்கிறார்கள். 

(நன்றி : இந்தியா டுடே)

யார் வகுத்த விதியில் 
எங்கள் காதல் அடங்கும்
எந்த மேகலையின் சுரபியில்
மனத்தீ அடங்கும்

- இன்குலாப்

Tuesday, December 10, 2013

பேரறிவாளன் : தூக்கிலடப்படவேண்டுமா?

மரணத்தின் அறைக்குள் தள்ளி அவரை தூக்குக் கயிற்றுக்காக காத்திருக்கச் செய்தது சட்டம்.   பட்டயப்படிப்பு முடித்திருந்த அந்த இளைஞருக்கு ஒருபோதும் சட்டம் பழிவாங்கும் என்று அதற்கு முன் அறிந்தவரில்லை. சட்டத்தைக் காப்பவர்களே தங்கள் பேனாவை தவறாக பயன்படுத்தி, வாழ்வுக்கும் மரணத்துக்குமிடையே ஊசலாடச் செய்வார்கள் என்று அறிந்திருக்கவில்லை. அந்த இளைஞர் பேரறிவாளன் என்கிற அறிவு.
தூக்குதண்டனை பெற்றபின் கடந்த 14 ஆண்டுகளாக, தூக்குக் கொட்டடிக்கு அழைத்துப் போகும் கால்கள் தன் சிறைக் கம்பிகளுக்கு வெளியே ஒருவேளை வந்துநிற்கக்கூடுமோ என்கிற எண்ணத்துடனேயே ஒவ்வொரு காலையும் விடிகிறது. 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜீவ் காந்தியை வெடிகுண்டு மூலம் கொன்ற சிவராசனுக்கு பேட்டரி வாங்கித் தந்ததற்காக கைது செய்யப்பட்டவர்.


ராஜிவ் காந்தியும் இன்னும் 18 பேரும் தனு என்கின்ற மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட அதே நேரம் அறிவும் அவருடைய நண்பர்களும் திரையரங்கம் ஒன்றில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.  அப்போது விடுதலைப் புலிகளால் கவரப்பட்டிருந்த பல தமிழ் இளைஞர்களில் அறிவும் ஒருவர். ராஜிவ்காந்தியை கொல்ல திட்டமிட்டு சென்னையில் தங்கியிருந்த சிவராசனுடன் அறிவுக்கு பழக்கம் இருந்தது.  ஆனால் அந்த பேட்டரிகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பது அறிவுக்கு தெரியாது. 

ஆறு மாதங்களுக்கு முன்னால், சிறைக் காவலர்கள் பேரறிவாளனிடம் ஒரு கடிதத்தை அளித்தனர்.  ”என்னை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க தன்னாலான சட்டரீதியான உதவிகளைச் செய்வதாகவும் தன்னை வழக்கறிஞர்கள் மூலம் தொடர்புகொள்ளும்படியும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது. கீழே தியாகராஜன், ஐபிஎஸ். என்று கையொப்பம் இருந்தது.. என் வாக்குமூலத்தை பதிவு செய்த அதே தியாகராஜன் தான் இவர் என்பது உறைக்கவில்லை. ஒரு வாரம் கழித்து நன்றி கடிதம் எழுத அமர்ந்தபோது இந்தக் கையொப்பம் மிகவும் பழக்கமானதாய் இருக்கிறதே என்று யோசித்தபோது சட்டென்று நினைவுக்கு வந்தது. உடனடியாக வழக்கறிஞர்களை அனுப்பினேன்” என்று வேலூர் சிறையில் அவரைக் காணச் சென்றபோது இந்தியா டுடேயிடம் கூறினார்.

அப்போது சிபிஐ அதிகாரியாய் இருந்த அவர் அறிவுடைய வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்து சமர்ப்பித்துவிட்டதாக வழக்கறிஞரக்ளிடம் தெரிவித்தார் தியாகராஜன். பனி ஓய்வு பெற்றபின் பின்னாளில் மன உறுத்தல் ஏற்பட்டு செய்த தவறுக்கு பரிகாரம் தேட விரும்புவதாகவும் கூறினார்.

அதே சமயம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் நிறுவிய மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம் மரண தண்டனை எதிர்ப்புக்கான ஓர் ஆவணப்படத்தை எடுத்துக்கொண்டிருந்தது.  அந்தப்படத்துக்காக தியாகராஜ கேமிராவின் முன் நின்று உண்மையைச் சொல்ல தயாராய் இருந்தார். பேரறிவாளன் வாக்குமூலத்தை நான் தான் பதிவு செய்தேன். சட்டப்படி வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பதிவு செய்யவேண்டும். ஆனால் பொதுவாக நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை. ’9 வால்ட் பேட்டரியை நான் தான் வாங்கித்தந்தேன். ஆனால் அது என்ன காரணத்துக்கு பயன்படப்போகிறது என்று எனக்குத் தெரியாது’ என அறிவு கூறினார். எதற்காக பயன்படப்போகிறது என்பது தெரியாது என்கிற பகுதியை மட்டும் நீக்கிவிட்டு வாக்குமூலத்தை பதிவு செய்தேன். நான் அதை பதிவு செய்திருந்தால் வழக்கின் போக்கு திசை மாறியிருக்கும்” என்கிறார் தற்போது ஒடிஷாவில் பிஜூ பட்நாயக் காவல்துறை அகாடமியில் பணியாற்றும் தியாகராஜன்.



இந்தியா டுடே தொடர்புகொண்டு அன்றைக்கு அப்படி செய்வதற்கான நிர்பந்தங்கள் இருந்தனவா என்று கேட்டபோது மறுத்தார். ‘’எனக்கு அழுத்தங்கள் எதுவும் இல்லை. ஆனால் ஒரு வழக்கு அதன்போக்கில் போய்க்கொண்டிருக்கும்போது அதற்கு எதிர்மறையான ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என்று எண்ணும் காவல்துறை அதிகாரியாக அன்றைக்கு இருந்தேன். சரியாகச் சொல்வதானால் எனக்கு அன்றைக்கு தர்ம சங்கடமான நிலைமை. ஒப்புதல் வாக்குமூலம் என்பதே குற்றத்தை ஒப்புக்கொள்வதுதான். ஆக, எதற்கு பேட்டரி என்று எனக்குத் தெரியாது என்று அறிவு கூறியதை எழுதினால், அதில் குற்றமில்லை என்றாகும். ஆகவே இந்த விஷயத்தை நான் விட்டுவிட நினைத்தேன். அறிவுக்கு சாதகமாகவும் இல்லாமல் பாதகமாகவும் இல்லாமல் இப்படி பதிவு செய்தேன். ‘பேட்டரியை நான் தான் வாங்கித்தந்தேன்’ என்பதோடு நிறுத்திக்கொண்டேன். காரணம் தெரியும் என்றோ தெரியாது என்றோ நான் எழுதவில்லை.” என்றவர் மேலும் தொடர்கிறார்.” ஒரு வித மொழிமயக்கம் வரும் வகையில்தான் அதை நான் எழுதியிருந்தேன். அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும்போது, எப்படி வேண்டுமானலும் பொருள் கொள்ளலாம். இது புலன்விசாரணையின் முக்கிய சான்றாக மாறிவிட்டது அதன் அடிப்படையில்தான் தண்டனைகள் வழங்கப்பட்டன.. காவல்துறை விசாரணைக்கு உண்மையாக இருக்கவேண்டுமா அல்லது சட்டப்படி வரிக்கு வரி எழுதவேண்டுமா என்கிற தொழில் சார்ந்த தடுமாற்றம் வந்தபோது இந்தத் தவறு நேர்ந்தது.” என்கிறார்.

இன்னொரு விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் தன் புத்தகம் ஒன்றில் விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று கூறியிருந்தார். இப்போது ரகோத்தமனிடம் தியாகராஜனின் கருத்து குறித்து கேட்டபோது ‘’தியாகராஜன் கூறுவது சரியல்ல. பல்வெறு விஷயங்களை வைத்துத்தான் நாங்கள் பேரறிவாளன் குறித்து ஒரு முடிவுக்கு செய்தோம். குறுக்கு விசாரணையின்போதோ அல்லது வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ இதை தெரிவிக்காமல் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படி கூறுவதற்கு எந்த சட்ட மதிப்பும் கிடையாது.. வழக்கு என்பது முடிந்து போன விஷயம்” என்கிறார் ரகோத்தமன். 

சிபிஐ விசாரணைக்கு தலைமை தாங்கிய டி.ஆர். கார்த்திகேயன் “இது மிகவும் அபத்தமானது. மறுவிசாரணை என்பதற்கு வழி கிடையாது. அப்படி ஒன்று நடக்குமானால் சிறிய விஷயங்களில் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் இந்திராகாந்தி, மகாத்மா காந்தி படுகொலை வழக்குகளையும் மீண்டும் விசாரிக்கச் சொல்லி கேட்பார்கள். தியாகராஜனுக்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டது. பெறப்பட்ட வாக்குமூலங்கள் பல முறை சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 3 திறமையான நீதிபதிகள் நியாயமான தீர்ப்பு வழங்கியுள்ளனர். அரசியல் செய்ய நினைக்கிறார்கள்” என்கிறார். 

குறுக்கு விசாரணையின்போது யாருமே அறிவின் வாக்குமூலம் குறித்த குறிப்பான கேள்வியை தன்னிடம் கேட்கவில்லை என்கிறார் தியாகராஜன். “இக்கேள்வி என்னிடம் கேட்கப்படவே இல்லை. உண்மையில் வாக்குமூலத்தில் அறிவு சொன்னதை எழுதாமல் விட்டது குறித்த கேள்வி என்னிடம் கேட்கப்படும் என்று நான் எதிர்ப்பார்த்திருந்தேன்.” என்கிறார்.

பேரறிவாளனின் வழக்கறிஞர் பிரபுவிடம் இந்தியா டுடே கேட்டபோது “தடா சட்டத்தின் கோளாறு இதுதான். தடா சட்டத்தின்கீழ் இந்த வழக்கு நடந்தது. 313 பிரிவின்படி எழுப்பப்படும் கேள்விகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவர் ஆம்/இல்லை என்றுதான் பதில் அளிக்க அனுமதிக்கப்படுவார். ஆகவே வேறு எதுகுறித்தும் நீதிமன்றத்தில் பேச வாய்ப்பே இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு அதன் அடிப்படையிலேயே வழக்கு நகர்ந்தது. அப்போது அந்த வாக்குமூலத்தையே யாரும் கேள்வி கேட்க தடாவில் இடமே இல்லை.” என்கிறார்.



சரி. வழக்கு முடிந்துவிட்ட நிலையில் தியாகராஜனின் இப்போதைய கருத்து எப்படி எடுத்துக்கொள்ளப்படும்? “Dead man walking theory என்று ஒரு தியரி உண்டு. அதாவது ஒரு மனிதன் இறந்துவிட்டான் எனக்கருதி இவன் தான் கொன்றான் என்று இன்னொருவனையும் சிறைக்கு அனுப்பிவிட்டபின் பத்தாண்டுகள் கழித்து இவ்வளவுநாள் நான் வெளிநாட்டில் இருந்தேன் என்று கொல்லப்பட்டதாக கருதப்பட்டவன் வந்து நிற்பான். அப்போது உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருந்தாலும் அதை மறுபரீசலனை செய்யவேண்டுமில்லையா? உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது என்பதற்காக சிறைவாசம் அனுபவிக்க முடியுமா? இப்படியான மறுவிசாரணை முறைகள் ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் உண்டு. அப்படி ஒன்றை இங்கும் ஏற்படுத்தவேண்டும்.” என்கிறார். 

“அது மட்டுமல்லாமல். ராஜீவ் கொலைச் சதி குறித்து விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட Disciplinary Monitoring Agency (MDMA) இன்னமும் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. மே 7ம் தேதி சிவராசனுக்கும் பொட்டுஅம்மானுக்குமான உரையாடலில் சிவராசன், தனு, சுபா தவிர வேறு யாருக்கும் விஷயம் தெரியாது என்று கூறியபின், மறுநாளிலிருந்து சம்பவம் நடந்த 21ம் தேதி வரை வேறு யாருக்கெல்லாம் விஷயம் தெரியவந்தது என்பது குறித்த விசாரணை ஏன் நடத்தப்படவில்லை என்று சிபிஐயிடம் கேட்கிறது MDMA.. சிபிஐ இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. இப்படி விடுபட்ட பகுதிகளை விசாரிக்கவேண்டுமென கோருகிறோம். இந்த MDMA விசாரணையில் தியாகராஜனை சேர்க்கவேண்டும்.” என்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள் குழுவுக்கு தலைமை தாங்கிய கே.டி.தாமஸை இந்தியா டுடே தொடர்புகொண்டபோது சட்டம் தவறு செய்துவிட்டது என ஒப்புக்கொண்டார். “ நானும் மற்ற நீதிபதிகளும் ராஜீவ் காந்தி கொஅலை வழக்கின் இறுதித்தீர்ப்பை அளிப்பதற்கு முன்னால் எங்கள் கையிலிருந்த அத்தனை விவரங்களையும் சரிபார்த்துவிட்டுத்தான் அளித்தோம். ஆனால் விசாரணை அதிகாரி ஒருவர் முன்பு நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு மாறாக இப்போது கூறியதாகச் சொல்கிறீர்கள். விசாரணை அதிகாரியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டவர் என்பதை நினைவில் வையுங்கள். பல முறை குறுக்கு விசாரணை செய்யப்பட்டிருக்கிறார். அப்போதெல்லாம் தன்னுடைய கருத்தில் உறுதியாய இருந்துவிட்டு பின்னாளில் அவர் எப்படி மாற்றிச் சொல்ல முடியும்?. ஆனால் சட்டப்படி சாத்தியமில்லை என்பதால் எந்த நீதிமன்றமும் இதை அனுமதிக்காகது. இப்போது நான் சொல்ல விரும்புவது பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கிலிடப்படக்கூடாது. ஆனால் 14 ஆண்டுகள் அவர்கள் ஆயுள் தண்டனைக்கு ஈடான சிறை தண்டனை அனுபவித்துவிட்டனர். தினம் மரணத்தை எதிர்ப்பார்த்திருக்கின்றனர். இப்போது எப்படி அவர்களை தூக்கிட முடியும்? சட்டப்படி ஒருவருக்கு ஒரு குற்றத்துக்கு இரு தண்டனை கூடாது என்பது என் கருத்து. அரசியல் சட்டப் பிரிவு 21 படி இது தவறு. அவர்கள் மூவரும் விடுதலை செய்யப்படவேண்டும்” என்கிறார்.

கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே மூவர் தூக்கை நிறுத்த நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 2011 ஆகஸ்டில் இவர்களின் கருணை மனு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தபின் செப் 9 2011 என்று தூக்குக்கு நாள் குறிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதற்கு தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் இவர்களின் மனு நிலுவையில் உள்ளது. 

கருணை மனுவை பைசல் செய்ய 11 ஆண்டுகள் ஆனதால் தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்று மூவரும் கோரினர். ஒருவேளை தேர்தலுக்கு முன்னால் மூவரின் மனுக்களும் தள்ளுபடியானால் என்ன நடக்கும்? புல்லரின் கருணை மனுவை இந்த ஆண்டு ஏப்ரலில் தள்ளுபடி செய்தது.  8 ஆண்டுகள் கழித்து அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ”இது நடந்து 7 மாதங்கள் ஆனபின்னும் புல்லர் தூக்கிலிடப்படவில்லை. இது சட்ட விவகாரம் மட்டுமல்ல. நடைமுறை அரசியலும் உள்ளது. ஆகவே தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மூவரின் மனுக்களும் இதேபோல தள்ளுபடி செய்யப்பட்டால் இவர்களின் கதி என்ன என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை” என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே. ராஜேஷ் குப்தா.

இவ்வளவும் நடக்கும்போது தியாகராஜனுக்கு தன் மனசாட்சி உறுத்தியதையும் நெருடலையும் தாங்க முடியவில்லை என்கிறார். ”அறிவுக்கு மரண தண்டனை கிடைக்கும் என நான் நினைத்தே பார்க்கவில்லை. நெருடலாகவும் மனம் அமைதியில்லாமலும் இத்தனை ஆண்டுகள் இருந்தது. அவருக்கு நாள் குறிக்கப்பட்டதும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களை உற்று கவனித்து வந்தேன். ஏதாவது ஒரு வகையில் இந்த மரண தண்டனை இல்லாமல் போய்விடாதா என்று பார்த்தேன். புல்லரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டப்பட்டு, இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததாலேயே தூக்கிலிடக்கூடாது என்று கூற முடியாது என்று மனு தள்ளுபடி ஆனவுடன் நான் இப்போதாவது பேசியே ஆகவேண்டும் என்று நினைத்தேன்.  ஒருவேளை தானாகவே அறிவுக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருந்தால் கூட நான் வாயைத் திறந்திருக்கமாட்டேன். பணி ஓய்வுக்குப் பிறகு எனக்கு பேச்சு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்கிறேன். நான் பேசுவதால் என்னுடைய நேர்மை, சிபிஐ, நீதித்துறை, காவல்துறை என்று அனைத்தும் களங்கப்படும் என்று தெரியும். அதன் விளைவுகளும் தெரியும். அதனால்தான் மௌனம் காத்தேன். ஆனால் இனியும் முடியாது என்பதால் பேசினேன்” என்கிறார் தியாகராஜன்.

*

சட்டப்படி இனி என்ன நடக்கும் என்றெல்லாம் விவாதங்கள் எங்கெங்கும் நடந்துகொண்டிருக்க, சென்னையில் குடியிருக்கும் 66 வயதான அந்தத் தாய் மட்டும் வாராவாரம் சென்னையிலிருந்து வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு தன் மகனுடன் சில மணித்துளிகளாவது பேசுவதற்காக வந்து போகிறார். ஏதாவது அதிசயம் நிச்சயம் நிகழும் என்று நம்புகிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள். ”22 ஆண்டுகளாக சிறைக்கும் வீட்டுக்குமாய் பயணம் செய்திருக்கிறேன். வாராவாரம் என் மகனை போய் பார்த்துவிடுவேன். இத்தனை ஆண்டுகளில் பத்து முறைதான் அறிவை பார்க்காமல் இருந்திருக்கிறேன். எனக்கு சட்டம் தெரியாது. ஆனால் என் கண்ணீருக்கு இன்றைக்கு தியாகராஜன் மூலம் ஒரு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. அவன் விடுதலை ஆவான். அவனுக்காக காத்திருக்கும் எங்கள் வீட்டுக்குள் அவன் நுழைவான் என்று நாங்கள் காத்திருக்கிறோம்.” என்கிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள்.

வேலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்துக்குள் நுழைந்து வாயிலை நெருங்க நெருங்க. சிறைவாசிகள் தங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் உரையாடும் சத்தம் பலமாகக் கேட்டது. சிறைக்கதவுகள் மெல்ல திறக்க உள்ளே நுழைந்தவுடன் கையிலிருக்கும் பணம் மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் காவலர்களிடம் ஒப்படைத்தவுடன் அந்த அறைக்குள் சென்றேன். ஒரு நீண்ட மேஜையின் ஒரு முனையில் ஒரு காவலர் வயர்லெஸ் கருவியுடன் அமர்ந்திருக்கிறார். மறுமுனையில் சிறைவாசிகளுக்கான வெள்ளை உடையில் அமர்ந்திருந்தார் பேரறிவாளன். புன்னகையுடனும் நம்பிக்கையுடனும் காணப்பட்டார் அறிவு.

“என்னை பூஸ்டர் என்றுதான் அழைப்பார்கள். நான் வாலிபால் ப்ளேயர். உங்களுக்குத் தெரியுமா? வைகோவை கைது செய்து இங்கே வைத்திருந்தபோது அவர் பூஸ்டராக என் எதிரணியில் இருப்பார்” என்று சிரிக்கிறார். 

”சக சிறைவாசிகள் எல்லோரும்..அண்ணே! விடுதலை ஆகப்போறீங்க என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். என்னைப் பார்க்கவரும் நண்பர்கள் ‘உன் சுதந்திரம் போய்விட்டது. நீ நினைத்த இடத்துக்குச் செல்ல முடியவில்லை. உன் இளமைக்காலத்தை சிறை தின்றுவிட்ட்து. அடைபட்டுக் கிடக்கிறாய்’ என்றெல்லாம் வருந்துவார்கள். ஆனால் எனக்கு அதிலெல்லாம் வருத்தமில்லை. பேரறிவாளன் எதையாவது சொன்னால் மக்கள் நம்பவேண்டும். ‘அவனா? அவன் ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்றவனாச்சே?’ என்று சொல்வது மாதிரி கொடுமை எதுவுமில்லை. என் நம்பகத்தன்மையும் ஒரு குடிமகனாக என்னுடைய சிவில் உரிமைகள் பறிபோவதும்தான் என்னுடைய வருத்தம்” என்கிறார். இதையும்கூட புன்னகையுடன் தான் கூறுகிறார் அறிவு.

“கவிதைகள் எழுதுவதுண்டு. இலக்கியவாதி ஆகவேண்டும் என்பதற்காக கவிதை எழுதும் நிலையில் நான் இல்லை. மனப்போராட்டங்களை, கோபத்தையெல்லாம் கவிதையில் கொட்டிவைப்பேன். தவறு செய்தவன் தண்டனையை குறைக்கச் சொல்லலாம். தவறு செய்யாதவன் என்னை விடுதலை செய்யுங்கள் என்றுதான் கேட்கவேண்டும். ஆனால் எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால், தண்டனையை குறையுங்கள் என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு. கருணை மனு நீட்ட வைத்ததுதான் எனக்கு நேர்ந்த கொடூரமாக நினைக்கிறேன்.” என்றார்.

’’அறிவு..! நேரமாச்சு” என்கிறார் சிறைக்காவலர் ‘இதோ முடிச்சுக்குறேன் சார்” என்று சொல்லிவிட்டு மீண்டும் திரும்பி தொடர்கிறார். சிறைக்குள்ளிருந்தே இக்னோ பல்கலைக்கழகத்திலிருந்து பி.சி.ஏ. பட்டம் பெற்றிருக்கிறார் அறிவு. “கலையும் கல்வியும் இல்லையென்றால் நான் சிறைக்குள் எப்படி இருந்திருப்பேன் என்றே தெரியவில்லை. பாட்டு, நடனம், கீபோர்ட் என்று எல்லாவற்றிலும் ஆர்வம் உண்டு. எல்லாமும் சிறைக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளிலேயே செய்தாகிவிட்டது. இப்படி ஏதாவது சிறைக்குள்ளும் செய்துகொண்டிருப்பதுதான் என்னை துடிப்புடன் இருக்க வைக்கிறது.” என்று கூறிவிட்டு அறிவு மீண்டும் இருள் நிரம்பிய சிறைக்கூடத்தை நோக்கி திரும்பி நடக்கத் தொடங்கினார் .

(நன்றி : இந்தியா டுடே)