தலையில் முண்டாசு. கையில் ஒரு கயிறு. கயிற்றின் மறுமுனையில் ஒரு மாடு. அதன்மீது சேகரிக்கப்பட்ட பழைய துணிகள். தோளில் தொங்கும் ஒரு உறுமி. மற்றொரு கையில் குச்சி. குச்சியால் உறுமியில் உரசி சத்தம் எழுப்பிக்கொண்டே வீட்டுக்கு வீடு வந்து பழைய துணிகளை கேட்டு வாங்கிச் செல்லும் பூம்பூம்மாட்டுக்காரர். சத்தத்துக்கு ஏற்ப தலையை ஆட்டும் மாடு. அவர் பின்னாலேயே செல்லும் தெரு குழந்தைகள்..
பேருந்து நிலையங்களிலும், இன்ன பிற மக்கள் கூடும் இடங்களிலும் கையில் ஊசி, பாசி, மணிகள் போன்றவற்றை விற்றுக் கொண்டிருக்கும் பெண்கள், ஆங்காங்கே இருக்கும் அவர்களின் டெண்ட்கள், எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பாஷை என நகர்புற நாகரிகத்திற்கு சற்றும் தொடர்பில்லாத நரிக்குறவர்கள்..
பூம்பூம்மாட்டுக்காரர் அல்லது நரிக்குறவர் சமுதாயத்தைச்
சேர்ந்த இவர்கள் நாடோடிகளாக இருப்பதால் பள்ளிக்கூடம் பக்கம் போவது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இப்படி பூம்பூம்மாட்டுக்காரர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு. 2004 டிசம்பர் 26 அன்று கோரத்தாண்டவமாடிய சுனாமிக்குப் பிறகு அவர்கள் வைத்திருந்த இரண்டு முன்று மாடுகளும் மாயமாகிவிட, அதன் பின் வாழ வழியின்றி தடுமாறி நின்றனர். அரசாங்கத்தின் நிவாரணப் பொருட்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அளித்த பல்வேறு உதவிகளும் இந்த சமுதாயத்தினருக்குக் கிடைக்கவில்லை.
சுனாமியில் நரிக்குறவர்கள், பூம்பூம்மாட்டுக்காரர்கள் நிறைய பேர் உயிரழந்தனர். அவர்களது குழந்தைகள் அனாதைகள் ஆயினர். இந்த குழந்தைகளின் எதிர்காலம்? பெற்றோர் இருந்தாலும் கூட வாழ்வாதாரத்தை இழந்து நின்றதால் செய்வதறியாது திகைத்து நின்றனர். தாங்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. தங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு ஆறுதலாக ஒரு அருமருந்தாக வந்தது “வானவில் பள்ளி”
நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது சிக்கல். சிக்கல் என்பது ஊர் பெயர்தான். வேறு ஏதாவது நினைத்துக் கொள்ள வேண்டாம். தில்லானா மோனாம்பாளில் வரும் சிக்கல் சண்முகசுந்தரத்தின் ஊரான அதே சிக்கல்தான். அங்கே சிக்கல் சிங்காரவேலர் கோவில் நுழைவாயிலுக்கு எதிர்புறம், சாலையின் வலதுபுறம் திரும்பினால்... 20, வடக்குத்தெரு என்ற முகவரியில் இயங்குகிறது ”வானவில் உண்டு உறைவிடப் பள்ளி”.
வாசலில் திண்ணை, நடுவில் முற்றம், நான்கு புறமும் தூண்கள், சமையலறை அதைக் கடந்து சென்றால் விசாலமான கொல்லைப்புறம். இப்படி நாகை மாவட்டத்தில் காணப்படும் பழைய வீடுகளைப் போலவே இருக்கிறது வானவில் பள்ளியும்.
உள்ளே நுழையும்போதே குழந்தைகளின் வெவ்வேறு குரல்கள் காதுகளில் மோதுகின்றன. “இது எப்டி செய்றது?” - சந்தேகம் கேட்கும் ஒரு குரல். ”அக்கா! என்னை இவன் அடிச்சுட்டான்” – புகார் கூறும் ஒரு குரல். “நீங்க யாரு? ரேவதி அக்கா பிரெண்டா?” – கேள்வி கேட்கும் ஒரு குரல். கொஞ்சம் உற்றுக்கேட்டால் மட்டுமே அது தெலுங்கு அல்லது இந்தி என புரியும்படி பேசும் ஒரு குரல் இப்படி பல்வேறு குரல்கள் ஒலிக்கின்றன. அத்தனை குரல்களிலும் இனிமையும் மழலையும் பொங்குகின்றன.
முற்றத்திற்கு ஒருபுறம் மரப்பலகைகள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தி வகுப்பறைகள்! வானவில், நட்சத்திரம் என ரசனையாய் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு அழகான பெயர். ஒரு வகுப்பில் ஆசிரியர் வண்ண வண்ண அட்டைகளை வைத்து பாடம் சொல்லிக் கொடுக்க, அத்தனை ஆர்வத்தோடு குழந்தைகள் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
குழந்தைகள் கைப்பட வரைந்த ஒவியங்கள், ஜமுக்கிகளையும், மணிகளையும் வைத்து அவர்களே செய்த சின்ன சின்ன உருவங்கள்.. வண்ணத்துப்பூச்சி, மயில் இப்படி...கண்களுக்கு விருந்தாக எல்லா வகுப்புகளிலும் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
முற்றத்தைக் கடந்து கொல்லைப்பக்கம் சென்றால் கண்களுக்கு குளுமையாய் ஒரு குளம்.... குளத்திற்கும் பள்ளிக்கும் இடைப்பட்ட சிறிய மைதானம் போன்ற இட்த்தில் நிறைய குழந்தைகள் அங்கே அமர்ந்தும் நடந்தும், ஓடிக்கொண்டும், ’ஹோ’ என்று கத்திக்கொண்டும், கும்மாளமிட்டுக்கொண்டும் இருந்தனர். என்னைப் பார்த்ததும் ஒரு சிறுவன் வந்து “நீங்க தமிழா இங்கிலீஷா?” என்றான்.
“தமிழ்தான். ஏன்?”
“எனக்கு இங்கிலீஷ்ல பேசினா புரியாது. உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதா?”
“தெரியும். உன்கிட்ட தமிழ்லதான் பேசுவேன்.”
“வோட்டு சரணம்”
“அப்படின்னா?”
“வோட்டு சரணம்”
“புரியலையே கண்ணா!.அப்படின்னா என்ன?”
அருகில் இருந்த இன்னொரு குழந்தை சொல்லிற்று. “அக்கா! அவன் உங்க பேரை இங்கிலீஷில் கேட்கிறான்”
’வாட் இஸ் யுவர் நேம்’ தான் அவனிடம் ’வோட்டு சரணம்’ ஆனது புரிந்தது.
அத்தனை குழந்தைகளின் கைகளிலும் களிமண். வானவில் இருக்கும் அதே சாலையில் உள்ள ஒரு குளத்திற்கு அருகில் சென்று களிமண் எடுத்து வருகிறார்கள். கையிலும் பாலிதீன் கவரிலும் பெரிய பையிலும் என்று அவரவர் சைசுக்கு தகுந்தாற்போல விதவிதமாய் களிமண் சேகரிப்பு நடக்கிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் எழில் ஒரு கலைஞர். ஓவியம், களிமண் சிற்பம், கராத்தே என எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு கற்று தருகிறார். குழந்தைகளுக்கு இவர் “எலி அண்ணா”. அப்படித்தான் மழலையில் இவரை அழைக்கிறார்கள்.
எழில் மட்டுமல்ல, இங்கு பணிபுரியும் அனைவருமே இளைய தலைமுறையினர்தான். யார் எக்கேடு கெட்டால் என்ன நம் கதை நடந்தால் போதும் என்றுதான் இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுபவர்கள் ஒரு முறை வானவில் பள்ளிக்கு வந்தால் தங்கள் கருத்தை கட்டாயம் மாற்றிக் கொள்வார்கள். பள்ளிக்கு அருகிலேயே உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் அத்தனை பேரும் அங்கேயே தங்கி அர்ப்பணிப்போடு சமுதாய மாற்றமுடியும் என்ற நம்பிக்கையோடு இப்பள்ளியை நடத்துகிறார்கள். இளைய சமுதாயம் சமூக அக்கறையோடு இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது வானவில்.
செல்லூர், வாஞ்சூர் ஆகிய கிராமங்களிலிருந்து பள்ளி வேன் சென்று குழந்தைகளை அழைத்து வருகிறது. அங்கேதான் அரசு இவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறது. இந்த பள்ளியை நடத்தும் ரேவதிக்கு இந்த வீடுகளை பெற்றுத் தந்ததில் பங்கு உண்டு.
ரேவதி - சென்னையைச் சேர்ந்த இவர் சுனாமிக்குப் பிறகு நாகைக்கு வந்து இந்த பள்ளியை தொடங்கினார்.பத்திரிகையாளரான இவருக்கு குறும்பட இயக்குனர், களப்பணியாளர் என பல முகங்கள் உண்டு. நவீன நாடகங்களிலும் நடித்திருக்கிறார். வானவில் பள்ளிக் குழந்தைகளின் தேவதை. ”ரேவதி அக்கா! ரேவதி அக்கா!” என்று குழந்தைகள் அவர் தோளின் மீதும் மடியின்மீதும் உரிமையோடு மேலேறிக்கொள்கிறார்கள்.
"நாகப்பட்டினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து சுனாமி நிவாரணப்பணிகள் செய்துகொண்டிருந்தேன். அப்போது கிராமம் கிராமமாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் ஒரு முறை நாகை பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது ஒரு சிறுமி கையில் ஒரு குழந்தையோடு வந்து கையேந்தினாள். எனக்கு அது அதிர்ச்சியாகவே இருந்தது. ஏனென்றால் அப்போது ஏகப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வந்து குவிந்திருந்தன. முதல் இரண்டு நாட்கள் மக்களுக்கு சாப்பாட்டுக்கு சிரமங்கள் இருந்தாலும் அதன்பின் அப்படியான சூழல் இல்லை. அவளை அழைத்து விசாரித்தபோதுதான் அவள் பெயர் முருகம்மா என்றாள். அவள் நரிக்குறவர் இனச்சிறுமி என்பதும் அவர்கள் அனைவரும் சாப்பாட்டுக்குக் கூட கஷடப்படுகிறார்கள் என்பதும் புரிந்தது. அப்போதுதான் இந்த குழந்தைகளுக்காக ஒரு பள்ளி தொடங்கினால் என்ன என்று எண்ணம் தோன்றியது. அதன்பின்னர் நாங்கள் எடுத்த சர்வேபடி எந்தெந்த ஊர்களில் எத்தனை பேர் இப்படி எந்த நிவாரணமும் கிடைக்காமல் இருக்கி
றார்கள் என்று ஆராய்ந்தபோது பூம்பூம்மாட்டுக்காரர் மற்றும் நரிக்குறவர் சமுதாய மக்கள்தான் அதிக சிரமத்தில் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து அவர்களிடம் போய்ப் பேசி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச் செய்தோம்.””” என்று வானவில் உருவான கதையை பகிர்ந்து கொண்டார் ரேவதி.
ஒரு குழந்தையை அழைத்து ரேவதி பாட்டுப்பாட சொல்ல, “சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் கல்யாணமாம்” என்று அழகாகப் பாடியது. தினமும் காலையில் அசெம்பிளி உண்டு. திருக்குறள் சொல்வது, பாட்டுக்கள் பாடுவது என்று வித்தியாசமான அசெம்பிளி. ”குருவி தலையில் பனங்காயா?” என்று குருவிகளே பாடுவதைக் கேட்கையில் மனம் கனத்துத்தான் போகிறது.
“மனுசங்கடா! நாங்க மனுசங்கடா!
உன்னைப்போல அவனைப்போல
எட்டு சாண் உயரமுள்ள மனுசஙகடா!
டேய்....
நாங்க மனுசங்கடா!”
என்று கவிஞர் இன்குலாபின் பாடலை கூட்டாக குரலெடுத்து பாடுகிறார்கள் குழந்தைகள். அந்த “டேய்...” மட்டும் அடிக்க வருவது போல் உச்சத்தில் வருகிறது.
”ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்... அம்மாவை வாங்க முடியுமா?” - பரிணாமனின் பாடல் மழலைகளின் குரலில் தேனாய் பாய்கிறது. இது போன்ற விதம் விதமான பாடல்கள்... குழந்தைகள் சளைக்காமல் பாடுகிறார்கள். பள்ளிக்கு வர அழும் குழந்தைகள் இருக்கும் நம் நாட்டில் இப்படி பாட்டு, ஓவியம், சிற்பம் என வித்தியாசமான பள்ளி.
இந்த குழந்தைகள் இங்கே விளையாட்டு முறையில் கல்வி கற்கிறார்கள். ஆனால் ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு ஆறாம் வகுப்புக்குச் செல்லும்போது சிரமப்பட நேருமே என்ற சந்தேகத்தைக் கேட்டபோது, “பள்ளி தொடங்கிய காலத்தில் மூன்று பேர்தான் ஆசிரியர்கள் இருந்தார்கள். அப்போது விளையாட்டுமுறையிலான கல்வி மட்டும்தான் அளித்தோம். இந்த சிக்கல் இருப்பதால் இப்போதெல்லாம் அதோடு சேர்த்து வழக்கமான முறையிலும் கற்றுக் கொடுக்கிறோம். அதுமட்டுமில்லாமல் இப்போதுதான் அரசாங்கக் கல்வியே செயல்வழிகற்றல் முறையில்தானே இருக்கிறது?” என்கிறார் ரேவதி.
“குழந்தைகள் ஆர்வமாகத்தான் வருகிறார்கள். ஒரு சில பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பதில் பிச்சையெடுக்க அனுப்பினால் தினமும் நூறு ரூபாய் கிடைக்கும் என்று வயிற்றுப்பாட்டுக்கு அவ்வபோது திடீரென பத்து நாள் இருபது நாள் என குழந்தைகளை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்றுவிடுவதுண்டு. நாங்கள் போய் பார்த்து திரும்ப கூட்டிக்கொண்டு வருவோம். நானே சென்னை மெரீனா பீச்சில் பலமுறை எங்கள் பள்ளிக் குழந்தை பெற்றோரோடு பிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறேன். அப்படி சென்ற குழந்தையை சக குழந்தைகள் பிச்சை எடுக்கப் போயிட்டு வந்தியா என்று கேலி செய்யும்போது அந்த குழந்தையின் மனம் பாதிக்கப்படுகிறது. அதனால் அப்படி பிச்சை எடுக்கப் போவது சரியில்லை என்ற மனோபாவத்தை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டியிருக்கிறது. 106 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையுமே பள்ளியிலேயே தங்கச் செய்தால் இதைத் தடுக்கலாம். ஆனால் பெற்றோரிடமிருந்து ஒரேயடியாக பிரிப்பதாக நினைத்துவிடக்கூடாது என்பதற்காக ஹாஸ்டல் கட்டாயமாக்கப்படவில்லை. 36 குழந்தைகள் மட்டும் ஹாஸ்டலில் இருக்கிறார்கள்.
இவர்களிடம் மிக சிறிய வயதிலேயே பெண்களை கல்யாணம் செய்து கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. 12 வயதில் திருமணம் செய்து 20 வயதில் நான்கைந்து குழந்தைகள் பெற்று உடல் சோர்ந்து போகிறார்கள். எங்களிடம் படித்த ஒரு பெண்குழந்தைக்கு இன்று திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது” என்கிறார் ரேவதி.
ஐந்தாம் வகுப்பு வரை இங்கே தங்கி கல்வி கற்கும் குழந்தைகள் ஆறாம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு சென்றபின் என்ன செய்வார்கள்?
“எங்கள் பள்ளி விடுதியிலேயெ தங்கிக் கொண்டு வேறு பள்ளிகளுக்குச் செல்லலாம். அது போல எங்களிடம் பயின்று இன்று சிக்கல் உயர்நிலைப்பள்ளியிலும், பொரவச்சேரி நடுநிலைப்பள்ளியிலும் மேலே படிக்கும் பிள்ளைகள் பள்ளி விடுதியில் தங்கிப் பயில்கிறார்கள். பூம்பூம்மாட்டுக்காரர், நரிக்குறவர் சமூகங்களில் இதுவரை ஒரு பட்டதாரிகூட இல்லை. யாரும் பள்ளி இறுதி வகுப்புவரை வந்ததில்லை. இந்த பிள்ளைகள் அந்த குறையை போக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் ரேவதி.
பள்ளிக் கட்டிடம் இப்போதைக்கு வாடகைக்குத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. விப்ரோ நிறுவனம் வானவில்லுக்கு ஒரு சொந்தக்கட்டிடம் கட்டித் தர முன்வந்து கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. இப்போதிருக்கும் பள்ளியிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது புதுக் கட்டிடம். அங்கேயே குழந்தைகள் தங்குவதற்கு வசதியாக ஒரு விடுதியும் வளாகத்திற்குள்ளேயே கட்டிக்கொண்டிருக்கிறார்கள். வகுப்பறைகள் பாதி கட்டப்பட்ட நிலையில் நிதிவசதியின்றி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
குழந்தைகளுக்கு காலை உணவு, மதிய உணவு ஆகியவை கட்டாயம் பள்ளியில்தான். பள்ளியிலேயே இரவு தங்கும் பிள்ளைகளுக்கு இரவு உணவு வழங்கப்படுகிறது. குழந்தைகளை அவரவர் வீடுகளில் விடச் செல்லும்போது மளிகை பொருட்களை வேன் ஓட்டுனர் சாரதி (பெயரே சாரதிதான்) வாங்கி வந்து விடுகிறார். சிறிய அளவில் நிலம் வாங்கி அதில் காய்கறிகள், நெல் போன்றவற்றை பயிரிட்டிருக்கிறார்கள். மாடு ஒன்று சொந்தமாக உள்ளது. அதனால் குழந்தைகளின் உணவுக்குத் தேவையான பொருட்கள், பால் போன்றவற்றை கூடுமானவரை இவர்களே உற்பத்தி செய்துகொள்கிறார்கள். ஆனாலும் கூட அன்றாட தேவைகளுக்கான நிதி பற்றாக்குறையாகவே உள்ளது. அதுமட்டுமில்லாது வயல்களில் வேலை செய்பவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சம்பளம், தற்போதைய பள்ளிக் கட்டிட வாடகை, சமையல் செய்பவர்களுக்கான சம்பளம், குழந்தைகளுக்கான சீருடைச் செலவு இப்படி கணக்கெடுத்தால் செலவு எங்கேயோ போகிறது. சமாளிப்பது கஷ்டமாக இருந்தாலும் தொடர்ந்து பள்ளியை நம்பிக்கையோடு நடத்திக்கொண்டிருக்கிறார் ரேவதி.
பள்ளியை விட்டுக் கிளம்பும்போது ”இங்கேயே இருங்க! இங்கேயே இருங்க” என்று குழந்தைகள் சுற்றி சுற்றி வந்தது இன்னமும் நிழலாடுகின்றது. அவர்களின் சிரிக்கும் கண்களும் தயங்காத பேச்சும் இன்னும் கண்களை விட்டு அகல மறுக்கின்றன. நரிக்குறவர் மற்றும் பூம்பூம்மாட்டுக்காரர் சமுதாயத்தின் முதல் பட்டதாரியை பிற்காலத்தில் உருவானால் அதற்குக் காரணமாகவும், அந்த பட்டதாரியை பட்டை தீட்டிய இடமாகவும் இருக்கும் வானவில்.
நன்றி : புதிய தலைமுறை