Wednesday, September 15, 2010

உடையும் கண்ணாடிக் கூரைகள்

பெண்களுக்கென்று தனியாக ஓர் அமைப்பை சில தினங்களுக்கு முன் உருவாக்கியிருக்கிறது ஐ.நா. பெண்களின் உரிமைக்கு ஆதரவாகவும், அவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் செயல்படவிருக்கிறது இந்த அமைப்பு. எப்படி இருக்கிறது நம் நாட்டில் பெண்களின் நிலைமை?

இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஒரு பெண். ஆளும்கட்சியின் தலைவர் ஒரு பெண், மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவர் ஒரு பெண், மக்களவை சபாநாயகர் ஒரு பெண். இப்படி அரசியலில் உள்ள எல்லா முக்கியப் பதவிகளிலும் பெண்கள். இது போன்ற ஒரு நிலை இந்திய வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை. மக்களவையில் உள்ள பெண் எம்.பி.க்கள் 58 பேர். சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளில்இப்போதுதான் முதல்முறையாக மக்களவையில் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை 50ஐத் தாண்டுகிறது.

இதனால், பெண்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் கிடைத்துவிட்டது என்று சோல்ல முடியுமா?
"அப்படிச் சோல்லமுடியாது. சட்ட மன்றத்திலேயே கூட பாலினப் பாகுபாடு பார்க்கப்படுகிறது. ஸீரோ அவர், கேள்வி நேரத்தின்போது எழுப்பவேண்டிய துணைக் கேள்விகள், பாயிண்ட் ஆஃப் ஆர்டர் போன்றவற்றிற்காகப் பெண் எம்.எல்.ஏ.க்கள் கை உயர்த்தினால்அவர்களைப் பேச அழைப்பதேஇல்லை. ஆண்கள்தான் பேச அழைக்கப்படுகிறார்கள். இதுகுறித்து சட்டமன்றத்திலேயே நான் புகார் எழுப்பினேன்" என்கிறார் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி.

இந்த ஆண்டு ஜனவரியில் முதன்முறையாகப் பெண் ஒருவர் தமிழகக் காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியாவில் காவல்துறையில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரிகள் மிகக் குறைவு (இந்தியாவில் தமிழகத்தைத் தவிர, அருணாச்சலப் பிரதேசத்தில்தான் பெண் அதிகாரி ஒருவர் காவல்துறைத் தலைவராக இருக்கிறார்). இது நிச்சயம் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயம்தான். ஆனால், காவல் நிலையங்களில் நம் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?

"நம் பெண்களுக்கு காவல் நிலையத்திற்குச் செல்வது என்பதே ஒரு கௌரவப் பிரச்சினையா இருக்கிறது.அதையும் மீறி அவர்கள் புகார் கொடுக்கச் செல்லும்போது அவர்கள் நடத்தப்படும் விதம் சரியானதாக இல்லை. வழக்கைப் பதிவு செய்ய வைக்கவே போராட வேண்டி இருக்கிறது. எப்.ஐ.ஆர். போடாமலேயே கட்டப் பஞ்சாயத்து சேவது போன்றவைதான் காவல் நிலையங்களில் நடக்கின்றன. விசாரணைக்காக காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்படும் பெண்கள் வசைச் சொற்களுக்கும் வன்முறைக்கும், ஏன் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் கூட உள்ளாகிறார்கள். அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்ட புதிதில் பெண்களுக்குப் புகார் கொடுப்பது என்பது எளிதாக இருந்தது. ஆனால், அவற்றிலும் இப்போது கட்டப்பஞ்சாயத்து செய்வது அதிகமாகி விட்டது" என்கிறார் எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான வ.கீதா.

விவாகரத்து வழக்குகளைக் கவனிக்கும் குடும்ப நீதிமன்றங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பணிக்குச் சேல்லும் பெண்கள் வார நாட்களில் நீதிமன்றங்களுக்கு வருவதில் சிரமங்கள் உள்ளதால் வழக்கு இழுத்துக்கொண்டேயிருப்பதை கருத்தில்கொண்டு இந்த முடிவு என்று சொல்லப்பட்டாலும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதும் இதற்கு ஒரு காரணம். கல்வியறிவு பெருகியிருப்பதாலும், பணிக்குச் சேல்லும் பெண்கள் பொருளாதாரச் சுயசார்போடு இருப்பதாலும், பொருத்தமற்ற மணவாழ்வில் பிரச்சினைகளைச் சகித்துக்கொண்டு மன உளைச்சலோடு போலியாக வாழ்வதைக் காட்டிலும் அதிலிருந்து விடுபடவே விரும்புகின்றனர். இது, சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் முக்கியமானதொரு மாற்றம்.

இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் நீதித்துறையில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?
வழக்கறிஞராக இருக்கும் கீதாராமசேஷன், "இந்தியச் சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகவே இருக்கின்றன. அவை கண்டிப்பாக நீதிமன்றத்திலும்,காவல் நிலையத்திலும் பிரதிபலிக்கும். இங்கெல்லாம் ஒரு பெண், ஒரு புகாரோடு நுழையும்போது முதலில் எந்தச் சிக்கலும் வராது. ஆனால், போகப்போக அந்தப் பெண் சார்ந்திருக்கும் சாதி, அவளின் பொருளாதார நிலை, திருமண உறவுகள் போன்றவை அவள் நடத்தப்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கும். ஆணுக்கு இருப்பதைவிட பெண் இன்னும் அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்" என்கிறார்.

சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் எனப் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஊடகங்களிலும் நிறைய மாற்றங்கள் நேர்ந்திருக்கின்றன. இருபதாண்டுகளுக்கு முன்பு, தமிழ்ப் பத்திரிகை உலகில் முழுநேரப் பத்திரிகையாளர்களாக இருந்த பெண்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். பெண்கள் பத்திரிகைகளுக்குக் கூட ஆண்களே ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். ஆண்களே பெண்கள் பெயரில் எழுதினார்கள். கதைகள் எழுதும் பெண்களை, பெண் எழுத்தாளர்கள் எனப் பாலினத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தும் நிலை இருந்தது. திரைப்படத் துறையில் முழுநேரமாகப் பங்கேற்ற பெண் கவிஞர்களோ, வசனகர்த்தாக்களோ, தொழில்நுட்பக் கலைஞர்களோ அநேகமாக இல்லை. ஆனால், இன்று எல்லாம் மாறியிருக்கிறது. நிறைய இளம் பெண்கள் பத்திரிகை, தொலைக்காட்சி, திரைப்படம் என ஊடகங்களில் பணியாற்றுகிறார்கள்.

கௌதம் மேனனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றும் ரேவதி, "ஒரு பத்தாண்டுகளுக்குமுன்பிருந்ததைவிட இப்போது நிறைய பெண்கள் டெக்னீஷியன்களாகஇருக்கிறார்கள். ஆனாலும் கூட ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அது பத்து சதவிகிதத்திற்கும் குறைவானதே. எங்கள் யூனிட்டில் பெண்களுக்கென்று சலுகைகளும் இல்லை. பாரபட்சமும் இல்லை. அனைவரும் சமமாகவே நடத்தப்படுகிறோம்" என்கிறார். இது வரவேற்கத்தக்க ஒரு மாற்றம்.

ஊடக உலகில் பெரும்பாலும் பணிரீதியாகப் பாரபட்சம் காட்டப்படுவதில்லை. ஆனால், அங்கும் மற்ற பல இடங்களில் இருப்பதைப் போன்றே பெண்கள் பாலியல் பிரச்சினைகளைச் சந்திக்க நேர்வதுண்டு. அண்மையில் ஒரு பிரபல தமிழ்ப் பத்திரிகைக் குழுமத்தில் பணியாற்றிய பெண் பத்திரிகையாளர், சக ஊழியர் மீது காவல்துறை ஆணையரிடம் நேரில் சேன்று புகார் அளித்த சேதியை தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களிலும் பார்த்தோம். திரை உலகில் வெளியே சோல்லப்படாத சேதிகள் நிறைய உண்டு. "பொதுவாக சினிமாத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கு வரும் பிரச்சினைகளை யாரும் வெளியே சோல்வதில்லை" என்கிறார் ரேவதி.

ஷோ கேசில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருக்கும் அலங்காரப் பொம்மைகளைப் போல பெண்கள் சமூகத்தில் நடத்தப்படுகிறார்கள் எனப் பெண்ணியவாதிகள் குறைப்பட்டுக் கொள்வதுண்டு. ஆனால், அந்தக் கண்ணாடிப் பெட்டியின் கூரையை உடைத்துக்கொண்டு நிறைய பெண்கள் வெளியே வந்து ஜீவனோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அப்படி உடைத்துக்கொண்டு வரும்போது அவர்கள் அடைந்த காயங்களிலிருந்து இன்னமும் ரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. அதற்கு நம் சமூகம், பெண்களைப் பார்க்கும் பார்வையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடவில்லை என்பதும் ஒரு காரணம்.
******************
பிறந்தது ஐ.நா. மகளிர் அமைப்பு


ஐ.நா. சபையில் சுகாதாரத்திற்கு, குழந்தைகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று ஒவ்வொரு துறை சார்ந்து தனித்தனியாக அமைப்புகள் உண்டு. பெண்களுக்கு? இது வரை இல்லை. அந்தக் குறை நீங்கிவிட்டது. பாலினச் சமத்துவத்தை நோக்கமாகக் கொண்டு ஐ.நா.விற்கான பெண்கள் அமைப்பு தொடங்கப்படுகிறது இந்த அமைப்பை உருவாக்க ஆதரவு தெரிவித்து 192 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. எந்தவித எதிர்ப்புமின்றி இத்தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. ‘ஐக்கிய நாடுகள் சபை மகளிர் அமைப்பு’ என்ற பெயரில் இவ்வமைப்பு செயல்படவிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘UN Women’ என்றழைக்கப்படும். இதற்கான தீர்மானம் ஜூன் 30 அன்று நிறைவேற்றப்பட்டது.

ஏற்கெனவே ஐ.நா.வில் பெண்களின் பிரச்சினைகளுக்காகச் செயல்பட்டு வரும் 4 அமைப்புகள் இப்போது ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. உலகளவில் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் பாரபட்சமின்றி அனைத்து நாடுகளிலும் உள்ளன. இந்நிலையில் அவர்களின் பிரச்சினைகளைச் செவிமடுப்பதற்கான ஒரு களமாக, அமைப்பாக இந்த அமைப்பு சேயல்படும்.

இந்த அமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்புதல் பெற நான்காண்டுகள் தேவைப்பட்டன. இதற்காக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மகளிர் அமைப்புகளோடு ஐ.நா. சபையில் உள்ள பிற மகளிர் அமைப்புகள் ஒன்றிணைந்து இப்பணியை மேற்கொண்டன. பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, பெண்களின் முன்னேற்றத்திற்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துப் பாடுபடும் என துணைப் பொதுச் செயலர் ஆஷா ரோஸ்மிகிரோ தெரிவித்தார். அவரே இந்த மகளிர் அமைப்பின் தலைமைப் பொறுப்பையும் ஏற்கிறார். வரும் 2011ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இப்புதிய அமைப்பு செயல்படத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் மீதான வன்முறை, ஒடுக்குமுறைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகளின் மீதான வன்முறை, பாலியல் வன்முறைகள் போன்ற குற்றங்களை ஆய்வு சேது அவற்றைக் குறைப்பதற்கும், அறவே நீக்குவதற்குமான தருணம் வந்து விட்டது என்று மகிழ்கின்றனர் பெண்ணியவாதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும். இந்த அமைப்பு பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே, மனித உரிமைகளுக்காகவும், பெண்கள் நலனில் அக்கறை கொண்டும் இயங்கி வரும் அமைப்புகளோடு கைகோர்த்து தனது பணிகளைச் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- கவின் மலர்
(நன்றி: புதிய தலைமுறை)

Thursday, September 09, 2010

தலைநகர் சென்ற கலைமகள்

புதுடில்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா என்றழைக்கப்படும் தேசிய நாடகப் பள்ளி - நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட அத்தனை பேரின் கனவுக் கல்லூரி. அத்தனை மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு நாடகப்பள்ளி. அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் வருவதால் ஒரு குட்டி இந்தியாவே அங்கிருக்கும். நாடு முழுவதும் விண்ணப்பிக்கும் மாணவர்களில் 30 பேர் மட்டும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தேடுக்கப்பட்டு இக்கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இங்கு இந்தி மட்டுமே பயிற்று மொழி. இந்தி தெரியவில்லையென்றால் சிரமம்தான்.

தமிழ்நாட்டிலிருந்து பல பேர் இக்கல்லூரிக்குச் சென்று பயின்றிருந்தாலும், பெண்கள் யாரும் இது வரை சென்றதில்லை என்பது வியப்பான உண்மையாய் இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து தேசிய நாடகப் பள்ளிக்குச் சென்ற முதல் பெண் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழிக்கு அருகே உள்ள தேவசகாயம்மவுண்ட் என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஜானகி.



”ஒவ்வொரு மாணவருக்கும் 18 லட்ச ரூபாய் செலவு செய்கிறது அரசு. மாதந்தோறும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்குகிறது. 1963ல் இருந்து தேசிய நாடகப் பள்ளி செயல்படுகிறது. கர்நாடகா போன்ற மாநிலங்களிலெல்லாம் இதுவரை கிட்டத்தட்ட 45 பேர் இப்பள்ளியில் பயின்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து இதுவரை ராமானுஜம், கோபாலி, கே.எஸ்.ராஜேந்திரன், ராஜூ, சண்முகராஜா, பாரதி, ராஜேஷ் ஆகிய 7 பேர் மட்டுமே பயின்றிருக்கிறார்கள்  இத்தனை ஆண்டுகளில். தலித் சமூகத்தைச் சார்ந்த, மக்கள் மத்தியில் பணியாற்றக்கூடிய குழுவிலிருந்து செயல்பட்ட ஜானகி தமிழ்நாட்டிலிருந்து செல்லும் முதல் பெண்ணாகி இருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை தரக்கூடிய விஷயம்.” என்கிறார் நாடகவியலாளர் பிரளயன்.

ஜானகியின் தந்தை செங்கல் சூளையில் கூலி வேலை செய்பவர். அம்மா விவசாயக்கூலி. “நான் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கு மேல் படிக்க வைக்க வீட்டில் வசதியில்லாததால் என்னை வேலைக்குப் போகச் சொன்னார்கள். அப்போது ’களரி’ கலைக்குழுவில் கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் என்று நிறைய ஆட்டக்கலைகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இதையெல்லாம் பார்த்த எனக்கு அதையெல்லாம் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வந்தது. வீட்டில் சொல்லி அனுமதி பெற்று கலைக்குழுவில் சேர்ந்தேன். நிகழ்ச்சிகளுக்குச் செல்லுவதால் கிடைக்கும் பணமும் வீட்டிற்குக் கொஞ்சம் உதவியாக இருந்தது. அதன்பின் ‘முரசு’ கலைக்குழுவில் சேர்ந்தேன். கலைக்குழுக்களின் மூலம் எனக்கு சமூகம் குறித்த அக்கறையும் விரிந்த பார்வையும் வந்து சேர்ந்தன. சுற்றி நடப்பவற்றை கவனிக்க ஆரம்பித்தேன். கலைக்குழுவில் ஊர் ஊராகச் சென்று நிறைய வீதி நாடகங்கள் போடுவோம். அந்த அனுபவம் எனக்கு நிறைய கற்றுத்தந்தது. விசாலப் பார்வையை எனக்குள் ஏற்படுத்தியது. அதுதான் எனக்குள் நாடகம் குறித்த வேட்கையை உண்டுபண்ணியது.” என்கிறார்.

தேசிய நாடகப்பள்ளியில் சேருவதற்கான முதல் தகுதியே இந்தி தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஆங்கிலமாவது தெரிந்திருக்கவேண்டும். ஜானகிக்கு இந்தி சுத்தமாகத் தெரியாது. ஆங்கிலம் சரியாகப் பேச வராது. எப்படி சமாளித்தார்?

“நாடக் முகாம் ஒன்று நடந்த்து. அப்போதுதான் தேசிய நாடக பள்ளி பற்றி அறிந்துகொண்டேன். முகாமில் பயிற்சி பெற்ற பின் அதில் பயில்வதற்கு விண்ணப்பித்தேன். ஆனால் நேர்முகத்தேர்வில் என்னால் சரியாக பேச முடியவில்லை. எனக்கு விடை தெரிகிறது. தமிழில் சொல்லச் சொல்லி இருந்தால் கடகடவென்று சொல்லி இருப்பேன். ஆனால் ஆங்கிலத்தில் பேச வரவில்லை. அதில் நான் தேர்வாகவில்லை. அதன்பின் எங்கள் கலைக்குழு எனக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு என்னை ஆங்கில வகுப்புக்கும் இந்தி வகுப்புக்கும் அனுப்பினார்கள். அடுத்த ஆண்டு விண்ணப்பிப்பதற்கு முன் இரண்டு மொழிகளையும் கற்றுக்கொள்ள என்னை எங்கள் முரசு கலைக்குழு ஊக்குவித்த்து. அடுத்த ஆண்டு விண்ணப்பித்து நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றபின் டெல்லிக்குச் செல்வதற்கு முன் நாடக இயக்குனர் அ.மங்கை என்னை அவரது வீட்டிலேயே தங்க வைத்து ஒரு மாதம் ஆங்கில இலக்கணம் கற்றுத்தந்தார். பிரளயன், பார்த்திபராஜா, சண்முகராஜா போன்ற பல பெரிய நாடக ஆளுமைகள் என்னை ஊக்குவித்தனர். கலைக்குழு தான் என்னை இப்போதும் என் படிப்புக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு என்னை படிக்க வைக்கிறது.” என்கிறார் நெகிழ்ச்சியாக



நாடக இயக்குநர் அ.மங்கை “ஜானகியிடம் தமிழ்நாட்டு நாடகச்சூழல் மிகவும் எதிர்பார்க்கிறது. மக்கள் கலைகள், மக்கள் பிரச்சனைகளின் அடிப்படையில் நாடகங்களைக் கையாளும் ஒரு குழுவிலிருந்து ஒரு பெண்ணுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் பெருமைப்படத்தக்க விஷயம். ஜானகியின் குடும்பம் ஒன்றும் கலைக்குடும்பம் அல்ல. பொருளாதாரத்திலும் பின் தங்கிய குடும்பம் தான். ஆகவே இப்படி ஒரு பின்னணியிலிருந்து ஒருவர் நாடகப்பள்ளிக்கு தேர்வானதில் இரட்டிப்பு சந்தோஷம். மொழி ஜானகிக்கு பிரச்சனையாக இருந்தது. ஆனாலும் ஓராண்டு மொழியை கற்றுக்கொள்ளும்போது அவர் தனது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் இழக்காமல் இருந்த்து பெரிய விஷயம். தேசிய நாடகப்பள்ளி என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக இருக்கும்போது இந்தியும் ஆங்கிலமும் தெரிந்தால் தான் அங்கு செல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. இந்தப் பிரச்சனை நெடுங்காலமாக நீடித்துக்கொண்டே இருக்கிறது” என்கிறார்.

ஏற்கனவே ஒரு தமிழ்ப்பெண் தேசிய நாடகப் பள்ளியில் படித்திருக்கிறார். ஆனாலும் அவர் டெல்லி வாழ் தமிழர். ஆக, தமிழ்நாட்டிலிருந்து நம் பெண் ஒருவர் தேசிய நாடகப்ப்பள்ளியில் சென்று சேர்ந்திருக்கிறார். இப்போது இரண்டாம் ஆண்டு படிக்கிறார் ஜானகி.

கல்லூரி வாழ்க்கை குறித்து உற்சாகமாக பேசத் தொடங்குகிறார்.
“அங்கு வெவ்வேறு மாநிலங்களிலிருந்து மாணவர்கள் வந்திருப்பதால் முதலில் மொழி பிரச்சனை இருந்த்து. எனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியால் கடும் சிரம்மாய் இருந்த்து. எனக்கு சில சமயம் இந்தியில் நட்த்தும் பாடங்கள் புரியாது. அப்போதெல்லாம் வகுப்பில் இடையில் நிறுத்தி அது என்ன என்று கேட்டு தெரிந்து கொள்ளாமல் அடுத்த வார்த்தை பேச ஆசிரியரை விட மாட்டேன். மாணவர்களிடமும் அப்படித்தான். என்னைப் பார்த்தாலே வகுப்பு மாணவர்கள் கொஞ்ச நாள் அய்யோ இவள் அது என்ன் இது என்ன என்று கேள்வி கேட்பாள் என்று பயந்து ஓடினார்கள். என்னைப் பார்த்து இவளுக்கு என்ன தெரியும் என்று நினைத்தவர்களும் உண்டு. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு வகுப்பிலும் நான் என்னை வெளிப்ப்டுத்த்த் துவங்கினேன். Body movements வகுப்பில் நான் தான் முதல் எப்போதும். எனக்கு ஏற்கனவே ஆட்டக்கலைகள் அத்தனையும் அத்துப்படி என்பதால் மிக எளிதாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்வேன். சில சமயங்களில் ஆசிரியர் வரவில்லையென்றால் என்னையே வகுப்பெடுக்கச் சொல்கிறார் இப்போதெல்லாம். இரண்டு இந்தி நாடகங்களிலும் நடித்துவிட்டேன்.” எனும் ஜானகி இப்போது தேசிய நாடகப் பள்ளியின் செல்லப் பிள்ளையாகி விட்டார்.

“நாங்களெல்லாம் துறைக்கு வந்த புதிதில் எங்களுக்கு வழிகாட்ட யாருமில்லை. எங்களுக்கெல்லாம் தேசிய நாடகப் பள்ளி என்று ஒன்றிருப்பதே தெரியாது. எங்கள் ஏக்கத்தையும் கனவையும் ஜானகி மூலம் நாங்கள் தீர்த்துக்கொள்கிறோம். ஜானகியின் திறமை மேல் நம்பிக்கை இருக்கிறது. ஒரு மிகப்பெரிய ஆளுமையாக ஜானகி தமிழ் நாடகத்துறையில் வரும் நாள் விரைவில் வரும்” என்கிறார் ஜானகி சார்ந்திருக்கும் முரசு கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த்.

- கவின் மலர்


நன்றி : புதிய தலைமுறை

Tuesday, August 31, 2010

பணிக்குச் செல்லாத பெண்கள் பிச்சைக்காரர்களா?

ஒரு சராசரி இந்தியப் பெண் ஒரு நாளில் எவ்வளவு வேலை செய்வாள்? பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண் என வைத்துக்கொள்வோம். காலையில் எழுந்து, பாத்திரம் துலக்கி, காபி போட்டு, சமைத்து, கணவனுக்கும், குழந்தைகளுக்கும் உணவு பரிமாறி, வீட்டை சுத்தம் செய்து, மீண்டும் மதிய உணவு சமைத்து, துணி துவைத்து, உலர்த்தி, மீண்டும் இரவு உணவு சமைத்து.. அப்பாடா..!  ஒரு நாளின் பெரும்பகுதி உழைத்துக்கொண்டே இருக்கும் இவர்களை மிக எளிதாக “வீட்டில் சும்மாதான் இருக்கா” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு அகர்வால் என்ற 39 வயது பெண், சாலை  விபத்தில் உயிரிழந்தார்.. அவருடைய கணவர் அகர்வால் இரு சக்கர வாகனத்தை  ஓட்டிக்கொண்டிருக்கும்போது பின்னால் அமர்ந்து செல்கையில் விபத்து ஏற்பட்டது. இது குறித்த இழப்பீட்டு வழக்கை விசாரித்த வாகன விபத்து இழப்பீடு நடுவர் மன்றம் மற்றும் அலகாபாத் மேல் நீதிமன்றம் ஆகியவை இரண்டரை லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கி தீர்ப்பளித்தன.

இல்லத்தரசியாக இருந்த ரேணுவின் மாத வருமானம் 1250 ரூபாய் என்று கணக்கிட்டு அவருடைய கணவரின் வருமானத்துடன் ஒப்பீடு செய்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரேணுவின் கணவர் அகர்வால் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, சிங்வி ஆகியோர் அடங்கிய குழு விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின்போது 2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் 36 கோடி இல்லத்தரசிகளை பிச்சைக்காரர்கள்,  பாலியல் தொழிலாளிகள் மற்றும் சிறைக் கைதிகள் என பதிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது நீதிபதிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எல்லோருக்கும் உணவளிப்பது உட்பட அனைத்து வேலையை செய்து கொண்டு தான் செலவழிக்க தொகை வேண்டுமென்றால் கணவனை எதிர்பார்த்திருப்பதால் பிச்சைக்காரர்களென்றும் கணவனின் உடல்தேவையை பூர்த்தி செய்வதால் பாலியல் தொழிலாளிகளென்றும் நாள் முழுதும் வீட்டிலேயே அடைபட்டுக் கிடப்பதால் சிறைக்கைதிகளென்றும் நினைத்துவிட்டார்களோ என்னவோ?

தங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளனர். ”இந்தியா முழுவதும் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் அனைவரும் குழந்தைகளை பெற்றுத் தருவது, வேலைகளை செய்வது, வீடுகளில் உணவு தயாரிப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள குடும்பப்
பெண்களால் செய்யப்படும் வேலையின் ஆண்டு மதிப்பு ரூ. 30 இலட்சத்து 66 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இல்லத்தரசி ஒருவர் பலியானால் அவருடைய பணியின் மதிப்பைக் கொண்டு இழப்பீட்டுத் தொகையை கணக்கிடுவது சரியாக இருக்காது. எனவே, உயிரழந்த ரேணுவின் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை 6 இலட்சம் ரூபாயாக அதிகரிக்க உத்தரவிடப்படுகிறது. மேலும் வழக்குச் செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்.”

தற்போது நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பிலாவது தவறு திருத்தப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், விபத்து காப்பீடு மற்றும் சொத்தில் பாகம் பிரித்தல் போன்றவற்றில் இல்லத்தரசிகளுக்கு தேவையான பங்கை உறுதி செய்யும் விதத்தில் பல்வேறு சட்டங்களிலும் பாராளுமன்றம் மூலமாக திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது

கேரளாவில் தேசிய இல்லத்தரசிகள் சங்கம் ஆரம்பித்து அதனை தொழிற்சங்கமாக பதிவு செய்ய அரசை அணுகியபோது வீட்டு வேலை செய்யும் பெண்களை தொழிலாளர்களாக கணக்கிலெடுக்க முடியாது என்றார் பதிவாளர். இச்சங்கத்தில் மாநிலத்தலைவர் சுலோசனா “ஒவ்வொரு பெண்ணும் தன் குழந்தைகளை பராமரிக்க, வீட்டு வேலைகளை செய்ய என்று 273 நிமிடங்களை அன்றாடம் செலவு செய்கிறாள். பெண்களின் பங்கு என்பது சுற்றுச்சூழல், தண்ணீர் பற்றாக்குறை போன்ற சமூக விஷயங்களோடு தொடர்புடையது. ஆனாலும் நம் பெண்கள் தங்கள் உழைப்பு ஊதியத்திற்குரியது என்கிற உண்மையை அறியாமல் தானிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயமாக வயதான் காலத்தில் ஓய்வூதியம் கூட வழங்கவேண்டும்” என்கிறார்.

ஏற்கனவே வெனிசுலாவிலும், உக்ரைனிலும் இல்லத்தரசிகளுக்கு தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. வெனிசுலா நாட்டில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு கணிசமான தொகையை ஊதியமாக அளிக்கின்றது அந்நாட்டு அரசாங்கம். சென்ற ஆண்டு இரான் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட மோசன் ரெசேல் தான் பதவிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவதாக வாக்குறுதியளித்து பிரச்சாரம் செய்தார். இப்படியெல்லாம் நம் நாட்டில் சம்பளம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கேவலப்படுத்தாமல் இருக்கலாமில்லையா?

Monday, July 19, 2010

கேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் செவிகளால்...)

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நடிகை ராதிகாவின் பேட்டி ஏதோவொரு பத்திரிகையில் வெளியாகிருந்தது. அவர் லண்டனைச் சேர்ந்த வெள்ளைக்காரரை மணம் புரிந்த புதிதில் அந்தப் பேட்டி வெளியானது. அதில் அவர் கூறியிருந்தது -  “என் கணவரும் நானும் டிவி பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் சிவாஜியும், பாலாஜியும் நடித்த ‘பொன்னொன்று கண்டேன்’ பாடல் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த்து. ஒருவரை ஒருவர் கைகளைப் பிடித்துக்கொண்டும், அணைத்துக்கொண்டும் பாடியாடும் காட்சியைப் பார்த்த என் கணவர் என்னிடம் “அவர்கள் இருவரும் ஹோமோக்களா?” என்று கேட்டார். நான் “இல்லை. அவர்கள் நண்பர்கள்” என்றேன். “பின் ஏன் அணைத்துக்கொண்டு பாடியாடுகிறார்கள்?” என்றார். 

ஓரினப்புணர்ச்சியாளர்களை, அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் சமூகம் பார்க்கும் பார்வை வேறாக இருக்கிறது. ஒரு வெள்ளைகாரரால் மிக இயல்பாக ’அவர்கள் ஓரினப்புணர்ச்சியாளர்களா?’ என்று கேட்க முடிகிறது. இது ஒரு சாமான்ய இந்தியருக்கு சாத்தியமா? அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்குக் கூட சாத்தியமா? நம் திரைப்படங்கள் ‘அவனா நீ?’ என்ற அளவில் அதை நகைச்சுவைக்குப் பயன்படுத்துகின்றன.
-          ராதிகாவின் அந்தப் பேட்டி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போதெனக்கு பள்ளிப்பருவம். ஹோமோசெக்ஸ் என்றால் என்னவென்று சரியாகப் புரியாத ஒரு வயது. இரு ஆண்கள் சம்பந்தப்பட்டது என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. கொஞ்ச காலம் கழித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜான் டேவிட் என்ற கொலையாளி நாவரசு என்ற மாணவரை ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததனால் கொலை செய்ததாக ஊடகங்கள் தெரிவிக்க அது குறித்த ஒரு வித அசூயை உண்டாகி இருந்தது.

காலம் உருண்டோடியபின், 2008 இல் டெல்லியில் ’காலக்கனவு’ நாடகத்திற்காகச் சென்ற போது ஓரினச்சேர்க்கையாளர்களின் ஒன்றுகூடல் விழாவிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கலை நிகழ்வுகளால் மனதை கொள்ளை கொண்ட அவர்களின் உலகத்தை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. ராதிகாவின் பேட்டியைப் பார்த்தததற்கும், டெல்லி நிகழ்விற்கும் இடையே பல ஆண்டுகள் இடைவெளி. இந்த இடைவெளியில் காலமும், நண்பர்களும், இயக்கங்களும், கொஞ்சம் போன்ற வாசிப்பும், சில ஓரினச்சேர்க்கையாளர்களின்  தோழமையும் என் பார்வையை மாற்றியிருந்தன. டெல்லியில் நடக்கும் அந்த நிகழ்வு ஜெர்மன் தூதரகத்தில் உள்ள ஒரு அரங்கில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. என்.டி.டி.வி. போன்ற சானல்களில் அந்நிகழ்வுகளை காண்பிக்கிறார்கள்.
காதல் – சாதி, மொழி, மதம், நாடு அனைத்தையும் கடந்தது. பாலினம் கடந்ததா? ஆண் – பெண் உறவும் ஈர்ப்பும் கலவியும் இயற்கை. ஓரினச்சேர்க்கையோ, இருபாலினச் சேர்க்கையோ இயற்கைக்கு மாறானதா?

அவர்கள் சமீபத்தில் திருநங்கைகளும், திருநம்பிகளும் நடத்திய கோரிக்கை பேரணிக்கான நோட்டீஸ் ஒன்றில் இவ்வாறிருக்கிறது.

“2011 ஆம் ஆண்டு தேசிய அளவில் மேற்கொள்ளப்படவிருக்கும் மக்கள்
கணக்கெடுப்பில் திருநங்கைகளும், திருநம்பிகளும் , அவர்கள் தேர்வு
செய்யும் பால்/ பாலின பிரிவினையைத் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
இப்பொழுதுள்ள "ஆண்/ பெண்" என்ற குறுகிய வரையறைக்குள் திணிப்பதைத்
தவிர்க்கவேண்டும்.”

”சாதி இரண்டொழிய வேறில்லை” என்பதே நம் சமூகத்தில் முற்போக்கென அறியப்பட்ட நிலையில் ’இதோ நாங்களும் இருக்கிறோம்’ என்று உரிமையோடும் வலியோடும் வந்து போராடுகிறது ஒரு மூன்றாம் பாலினம். மூன்றாம் பாலினம் என்பதா பெண்ணினத்தில் சேர்ப்பதா என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள மட்டுமே முடியும். கூடு விட்டு கூடு பாய்ந்தால் மட்டுமே உணர முடியும். அவர்களுக்கு இயற்கையிலேயே தன் பாலினத்தின் மீது மட்டுமே ஈர்ப்பு வருகிறது என்பது எப்படி செயற்கையானதாக இருக்க முடியும்? இயற்கைக்கு முரணானதாக இருக்க முடியும்?

ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம் நாஸ் பவுண்டேஷன் ஐ.பி.சி 377
ஐ எதிர்த்து தொடுத்திருந்த வழக்கில் “வயதுவந்த இருவரின் விருப்பத்துடன்
தனிமையில் நடக்கும் பால் சம்பந்தப்பட்ட உறவு குற்றமல்ல“ என்று தீர்ப்பு
வழங்கியது. தலைமை நீதிபதிகள் ஏ. பி. ஷா மற்றும் எஸ் முரளீதர் அவர்கள்
வழங்கிய இத்தீர்ப்பு ஓரினக்காதல் குற்றமற்றது என்று அறிவித்தது.

இதோ இன்னுமொரு கோரிக்கை..

“எல்லோருக்கும் தேவையான முறையான மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெற
வேண்டும். ஒருவருடைய பாலியல் வெளிப்பாட்டை மாற்றுவது என்னும் பேரில்
மருந்துகள் மூலமும், மின் அதிர்ச்சி சிகிச்சை வழங்குவது மூலமும்
செய்யப்படும் கொடூர முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும்.
அறிவியல்பூர்வமற்ற, ஆதாரபூர்வமற்ற இந்த முயற்சிகள், மருத்துவப் பணியின்
நன்னெறிகளை அவமதிக்கும் செயல்பாடு என்பது தவிர மனித உரிமை மீறலும் கூட”

-          மேற்கண்ட கோரிக்கை ஒரு கணம் இதயத்தை நிறுத்தி பின்னர் மீண்டும் துடிக்க வைத்த்து.

”
எங்களுடைய விழைவுகளை இயற்கையானவை என்று ஏற்றுக்கொள்ளும்படியும், எங்களது உடை , காதல், வாழ்க்கைத் துணை ஆகியவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தை எங்களுக்கு அனுமதிக்குமாறு எங்களது குடும்பங்களைக் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் விருப்பத்திற்கு மாறாக ஆண்-பெண் திருமண உறவிற்குள் எங்களை திணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.”

-          இது குடும்பங்களுக்கான கோரிக்கை. எங்கள் விருப்பத்திற்கு மாறாக எங்களை ஆண்-பெண் திருமண உறவிற்குள் எங்களை திணிக்க வேண்டாம் என்று கேட்கும் குரலின் வேதனையை உணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் புரிந்துகொள்ளமுடிகிறது.

”
எங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்பொழுது நியாயமாகவும்,
பொறுப்புணர்ச்சியுடனும் செயல்படும்படி பத்திரிகைகளை கேட்டுக்கொள்கிறோம். எங்களைப் பற்றிய கற்பிதங்களையும் தவறான தகவல்களையும் தொடர்ந்து
வெளியிடுவதையும் தவிர்க்கவும். எங்களையும் எங்களது பிரச்சனைகளையும்
கொச்சைப்படுத்தும் விதங்களில் சித்தரிப்பதைத் தவிர்க்கவும்”

 இது ஊடகங்களுக்கான கோரிக்கை. இக்கோரிக்கைகள் எல்லாவற்றிலுமே ஒருவித இரைஞ்சும் தொனி இருப்பதானது மிகவும் தொந்தரவு செய்வதாயிருக்கிறது. ஆனால் அப்படி இரைந்து கேட்க வேண்டிய நிலை தான் இன்று இருக்கிறது.

கேரள மாநிலம்  கோட்டயம் மாவட்டம் சங்களச்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் நான்கு மாணவர்களை தற்காலிகமாக நீக்கியது. ஓரினச்சேர்க்கை சமூகத்தில் நடப்பதை பிரதிபலிக்கும் ‘Secret minds’ என்ற 5 நிமிட குறும்படத்தை அவர்கள் உருவாக்கியதை தவறென்று கூறி அந்த மாணவர்களை நீக்கியது நிர்வாகம்.  இயக்குநர் ஜோ பேபி, எம்.ஏ. (சினிமா மற்றும் தொலைக்காட்சி) இறுதியாண்டு மாணவர். “நான் என்ன இங்கே நடக்காததையா சொல்லி விட்டேன்?” என ஆதங்கப்பட்டார். பூனை கண்ணை மூடிக்கொண்டால் இருட்டாகி விடுமா என்ன?

இதேபோன்றதொரு நிலைமை நண்பன் ஸ்ரீஜித்திற்கும் ஒருமுறை ஏற்பட்டது. அவன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இதே போல ஒரு ஐந்து நிமிட குறும்படம் எடுத்ததற்காக அவனை கல்லூரி நிர்வாகம் 20 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து வைத்திருந்தது.

இப்படி ஒரு புரிதலில் நம் சமூகம் இருக்கையில், ஸ்ரீஜித் தான் இயக்கிய ’கேட்பதும்.. கேட்பதும்..” நாடகத்திற்கு அழைத்திருந்தான். அவன் எங்களுக்குச் சின்னப்பிள்ளை. செல்லப்பிள்ளை. எங்கள் நாடகக்குழுவினருக்கு அவன் ஒரு ஆண் என்பது மறந்துபோகும் எங்கள் ‘காலக்கனவு’ நாடகத்தில் அவன் நடிப்பிட வடிவமைப்பாளர். எங்கள் நாடகத்தில் ஒரு வசனம் வரும் “ஆண்களை பொறுப்புள்ளவர்களாக்குவது எப்படி?” என்று. அவனிடம் நாங்கள். “நீயாச்சும் ஆகித்தொலையேன்” என்போம்.

எங்கள் இனிய நண்பன் ஸ்ரீஜித் இயக்கிய நாடகமாயிற்றே என்று ஆவலுடன் நாடகத்தைப் பார்க்கச் சென்றேன். அதில் வசுமித்ர- ஆதிரன் எழுதிய ‘கள்ளக்காதல்’ கவிதைத்தொகுதியிலிருந்து கவிதைகள் எடுத்தாளப்பட்டிருப்பதை ஏற்கனவே சொல்லியிருந்ததால் வசுமித்ரவும் வந்திருந்தார். நாடகத்திற்கு முன்னால் வேறு பல நிகழ்வுகள் இருந்ததால் நாடகம் தொடங்க தாமதமானது. வசுமித்ர அவசரமாகச் செல்ல வேண்டி இருந்ததால் மனதில்லாமல் புறப்பட்டுச் சென்றார்.
வசுமித்ர! நீங்கள் இருந்திருக்க வேண்டும் என்று நாடகம் பார்த்து முடிக்கையில் தோன்றியது.



செய்தித்தாள்களில் வரும் பாலியல் கிளுகிளுப்புச் செய்திகளோடு நாடகம் தொடங்குகிறது. சிறிது நேரத்தில் ஸ்ரீஜித்தும் அநிருத் வாசுதேவனும் மாறிமாறி

“உண்மையில் கேட்க நினைப்பது
 ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர் என்று
 இனி எவ்வாறு நடந்துகொள்வீர் என்று”

என்று பார்வையாளர்களை நோக்கிக கூறும்போது நிற்க வைத்து கன்னத்தில் அறைவிட்டது போலிருக்கிறது

நிறைய கவிதைகளை நாடகத்தினூடாக எடுத்தாண்டிருக்கிறார்கள். இதை ஒரு கவிதை நாடகம் என்று கொள்ளலாம்.  இன்குலாப்பின்

“யார் வகுத்த விதியில்
எங்கள் காதல் அடங்கும்
எந்த மேகலையின் சுரபியில்
மனத்தீ அடங்கும்”

இரண்டு கேள்வியுடனான இவ்வரிகள் மனசுக்குள் ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்புகின்றன.

“நம்மிருவருக்குமிடையே  ஓர் ஒப்பந்தம். கொஞ்ச காலம் நீ நானாகவும் நான் நீயாகவும் வாழ வேண்டுமென.ஒப்பந்தக் காலம் முடிவடைந்த பொழுதொன்றில் சந்தித்துக் கொண்டோம்,நீ நீயாகவும் நான் நானாகவும்”

சுகிர்தராணியின் இவ்வரிகளிற்கான காட்சிகளுக்குப் பின் ஒலிக்கின்றன கீழ்கண்ட வரிகள்

“நாங்கள் சிந்திய கண்ணீர் 
நீங்கள் சிந்திராத வரையிலும்
எங்களை உணர்வது அரிது ”

 -                  புரிந்துகொள்ளப்படாத அவலம் குரலில் வேதனையாய் ஒலிக்கிறது. அற்புதமான உடல் மொழி, அளவான வசனங்கள், அநிருத் வாசுதேவனின் உச்சரிப்பு அவ்வசனங்களுக்கும் கவிதைகளுக்கும் உயிர் கொடுக்கின்றன.

சங்கரி, சக்தி நடராஜ் ஆகியோரின் உடல் பேசுகிறது.  
சுந்தரராமசாமியின்

“நீ யார்?
மனிதன் தானா?
அப்படியென்றால் என்ன ஊர்”

எனத்தொடங்கும் கவிதை வரும் காட்சியில் நாடகமாந்தர்களோடு ஒரு முகமூடியும் கதாபாத்திரமாகவே வருகிறது. நாடகத்தின் மிக அழகான காட்சி அது.  சுமதியின் “பாயுமொளி நீ எனக்கு” பாடல் செவிகளில் தேனாகப் பாய்கிறது.



“நண்ப
ஆணாகிய என்னிடம் ஆணாகிய நீ
முத்தங்கள் கேட்டு நச்சரிக்கிறாய்
முரட்டுத்தனமாக மறுதலிக்கிறேன்.
முத்தங்களுக்கேது பால்பேதம் என்கிறாய்
அருவருப்பின் உச்சமென்கிறேன்
புன்னகை புரிகிறாய்
உடல் கூசுகிறது நினைத்தாலேவென்கிறேன்
பூத்த புன்னகை சிரிப்பாகிறது
உன் உறுதி கண்டு பயந்து
விலகியோடுகிறேன் சிரிப்பொலி
அடைத்த பாதைகள் விலக்கி

நண்ப
கனவில் நான் உனக்கு இட்ட
நீண்ட முத்த்த்திற்கு பின் நான் பெண்ணானேன்
நீயும் பெண்ணானாய்

நண்ப
பெண்ணாகிய நீ பெண்ணாகிய என்னிடம்
முத்தங்கள் கேட்டு நச்சரிக்கிறாய்
நாணத்துடன் மறுதலிக்கிறேன்
பால் பேதங்கள் அற்ற்வை முத்தங்கள்

வசுமிதர – ஆதிரனின் இந்தக் கவிதை நாடக மாந்தர்களிடையே உச்சரிக்கப்பட்டபோது ஒரு புதிய பொருள் கொள்ளத்தக்கதாயிருந்தது. ஆணாகிய அவன் ஆணாகிய அவனிடம் முத்தம் கேட்பதை நூதனமாக்கியுள்ள நிலையில் பால் பேதங்கள் அற்றவை முத்தங்கள் என்கிற தீர்ப்பெழுதும் கவிதையும் நாடகமும் பரவசப்படுத்துகின்றன. முத்தம்-எத்தனை இனிமையானது? மனதிலுள்ள அன்பையெல்லாம் கூட்டி உமிழ்நீரின் தித்திப்பைக் கலந்து அளிக்கும் முத்தத்தின் சத்தமோ, நிசப்தமோ அதற்கு ஈடேது? ஆனால் அதற்கும் பால்பேதம் பார்க்கும் உலகினை நாடகம் சாடிச் செல்கிறது.

”ஆண்-பெண் உறவுகள் என்கிற ஏற்றுக்கொள்ளப்பட்ட விழைவுகளுக்கும், பாலின அடையாளங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே நிற்பவை எங்களுடைய அன்பும், காதலும், அடையாளமும். இவை இயற்கைக்குப் புறம்பானவை என்றும் வெளிநாட்டு இறக்குமதி என்றும் சமுதாயத்தால் தூற்றப்பட்டாலும் எங்களுக்கு இயற்கையானவை, நம்முடைய பண்பாட்டில் தொன்றுதொட்டு இருந்து வருபவை. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் பாலியல் மற்றும் பாலின வரையறைகளுக்குள் அடங்காதவர்கள் என்ற காரணத்தால் எங்களது மனித உரிமைகள் மறுக்கப்படுவது அநீதி” என்று முழங்கும் குரலோடு முடிகிறது நாடகம்.

ஒரு குறுங்கனவினை கண்டுகளித்த திருப்தியும் மகிழ்வும் உடலைத் தொற்றிக்கொள்கிறது நாடகம் முடிகையில் உடல்மொழிகளாலான ஒரு நாடகத்திற்கு சொற்களின்றி மௌனமாக உடல்மொழியால் மட்டுமே பாராட்ட முடிந்தது என்னால். விடைபெற்றுக் கிளம்புகையில் ஸ்ரீஜித்  கேட்ட கேள்வி இன்னமும் செவிகளில் ஒலிக்கிறது

”பொறுப்புள்ள ஆணாக நான் மாறிட்டேனா?”



சென்ற ஆண்டு மே மாதம் ஈழத்தில் நடந்த நிகழ்வுகளுக்குப்பிறகு ஈழப்போராட்டத்திற்கான இயக்கங்களில் மிகத் தீவிரமாக செயல்பட்டான் ஸ்ரீஜித். பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தான். ஈழம் தொடர்பான உண்மையான அக்கறை அவனுக்கிருப்பதை நானறிவேன். அதோடு கூட திருநங்கைகளுக்காக, ஓரினச்சேர்க்கையாளர்களுக்காகவென்று அவர்களோடு இணைந்து பல போராட்டங்களிலும், நிகழ்வுகளிலும் பங்கெடுத்திருக்கிறான். அதற்காகவே  அவனை அவமானப்படுத்தவென்றே பொது சபையில்  அவனுக்கு சிக்னல் கொடுத்து அழைத்த பெரிய மனிதர்களெல்லாம் கூட இருக்கிறார்கள்.  இந்நிலையில் ஒரு பொது நிகழ்விற்குச் சென்ற ஸ்ரீஜித்தை அவனுடைய நண்பர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு கேள்விகள் எழுப்பியுள்ளனர். ’தி வீக்’ பத்திரிகையில் பணிபுரியும் கவிதா முரளிதரன் இலங்கைக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை தான் பணியாற்றும் இதழுக்காக தொகுத்தளித்திருந்தார். அந்த தொகுப்பு இலங்கை அரசிற்கு ஆதரவாக இருந்ததாகவும் அப்படிப்பட்டவரிடம் நீ எப்படி நட்பாய்  இருக்கலாமென்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கவிதா முரளிதரன் எழுதியதில் மாற்றுக்கருத்து இருந்தால் அதை நியாயமாக அவரிடம்தான் கேட்க வேண்டும். அத்தோடு இதைத்தான் எழுதவேண்டும் என்று யாருக்கும் யாரும் கட்டளை போட முடியாது. மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவிக்கலாம். அவ்வளவுதான். ஆனால் அன்று ஸ்ரீஜித்திடம் சண்டையிட்ட அவர்கள்  பிரச்சினைக்கு சிறிதும் சம்பந்தமேயில்லாமல் நக்கல் தொனியில் உதிர்த்த வார்த்தைகள் இவை “நீங்க ஈழப்போராட்டத்திற்கு மட்டுமில்லை. ஒரு மாதிரியானவங்களுக்கும் கூட நீங்க போராடுவீங்க இல்லையா?”

அதென்ன ஒருமாதிரியானவர்கள்? யார் அவர்கள்? யார் அந்த ஒரு மாதிரியானவர்கள்? அந்த ஒருமாதிரியானவர்களோடு ஸ்ரீஜித்தை ஒரு உணவகத்தில் பார்த்த ஒரு நாளில் “நீங்க ஏன் அவங்க கூடவெல்லாம் இருக்கீங்க. கேவலமா இருக்கு?” என்றிருக்கிறார்கள். தோழர்களே! ஈழ மக்களின் வலியும் வேதனையும் தாங்கமுடியாதது. அவர்களுக்காக போராடும் அதே வேளையில் இங்கு தமிழ்நாட்டில் நடக்கும் எத்தனை பிரச்சனைகளில் நீங்கள் பங்கெடுத்தீர்? இங்குள்ளவர்களுக்கு நேரும் துன்பங்களில் எத்தனை துன்பங்களுக்காக போராடினீர். இன்றளவும் ரெட்டைக்குவளை உள்ள கடைகளை பெரியார் திராவிடர் கழகம் பட்டியலிட்டுக் காண்பிக்கிறதே. உத்தபுரத்தில் இன்னும் எரிகிறதே? சிதம்பரத்தில் நந்தன் நடந்த பாதையை மூடி வைத்திருக்கிறார்களே? சாதி விட்டு சாதி கல்யாணம் செய்து கொண்ட காரணத்திற்காக ஜோடிகளை கொன்று தீர்க்கிறார்களே? திண்ணியத்தில் மலம் தின்னக் கொடுக்கிறார்களே? பெண்களை அன்றாடம் இழிவுபடுத்துகிறார்களே எல்லா இடத்திலும்? சாதியக் கொடுமை தலைவிரித்தாடுகிறதே? என்ன நடவடிக்கை? எதற்காகவாவது நீங்கள் வந்திருக்கிறீர்களா? ஓரினச்சேர்க்கையாளர்களுக்காகவும், திருநங்கைகளுக்காகவும் போராடுவது என்பது உங்களுக்கெல்லாம் அத்தனை கேவலமாகி விட்டதா? அவர்கள் மனிதர்கள் இல்லையா? இச்சமூகத்தில் ஒரு அங்கமில்லையா? அவர்களுக்காக நடக்கும் போராட்டங்களையெல்லாம் நக்கல் செய்வீர்களென்றால் உங்கள் போராட்டங்களை அவர்கள் நக்கல் செய்யலாமா? ஆனால் அவர்கள் செய்யவில்லை தோழர்களே! அவர்கள் அவர்களால் முடிந்த வரை சென்ற ஆண்டு ஒரு உண்ணாநிலை போராட்டத்தை அறிவித்து நடத்திக்காட்டினார்கள். எந்தப் போராட்டமும் ஈழம் என்கிற விஷ்யத்தில் அடையாளப் போராட்டமாக மட்டுமே இருக்க முடியும். எந்தப் போராட்டமும் எதையும் செய்துவிடாது என்ற போதிலும் உங்கள் உணர்வுகளை எங்களால் மதிக்க முடிகிறது. ஆனால் ஈழத்தைத் தவிர மற்றெதற்காகவாவது போராடினால் உடனே “ஈழத்திற்கு என்ன செய்தாய்?” என்று கேட்டு அதை மிதிக்கும் உங்களை மதிக்க முடியவில்லை. ஒடுக்கப்பட்டவர்களிலேயே மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ள திருநங்கைகளில் சாதி, மதம், தமிழ், சிங்களம் என்ற பாகுபாடு இல்லை. அவர்களை மனிதர்களாக ஏற்றுக்கொள்வதற்கே படாத பாடு பட வேண்டி இருக்கிறது. இதற்காக போராடாத ஒரு நபர் ஈழத்திற்காக போராடுவதை நான் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனால் ஈழத்திற்கும் போராடி விட்டு, திருநங்கைகளுக்காகவும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்காகவும் போராடும் ஒருவரை நீங்கள் குற்றம் சொல்கிறீர்கள். ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். இவ்வளவுதானா உங்கள் புரிதல்?

திருநங்கைகளும், ஓரினச்சேர்க்கையாளர்களும் ஈழத்திலும் உண்டு நண்பர்களே!