Friday, November 14, 2008

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11 வது மாநில மாநாடு

வணக்கம்!

வாழ்வின் புனைவுகளுடன் உயிர்ப்பின் ரகசியம் தேடி வறுமையைப் புதைக்கும் உன்னதக் கனவுகளோடு உலகை அழகுபடுத்துகிரார்கள் எழுத்தாளர்களும் கலைஞர்களும்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உலகை அழகுபடுத்தும் இருபதாயிரம் (20,000) எழுத்தாளர்களையும், ஓவியர்களையும், கலைஞர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கி வருகிறது.

நவீன எழுத்தாளர்கள் தமிழின் பாரம்பரிய எழுத்தாளுமையைப் பற்றிக் கொள்ளும் வகையில் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து சங்க இலக்கிய பயிலரங்குகளை நடத்தி வருகிறோம்.

உலக அரங்கின் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமாய் முன் நிற்கும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வியல் கோரிக்கையாகும் நலவாரியத்தைப் பெற்றுத் தந்து தொடர்ந்து அக்கலைஞர்களோடு இணைந்து நிற்கிறோம்.

ஆண்டுதோறும் தமிழின் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர் உள்ளிட்ட கலைஞர்களை கௌரவிக்கிறோம். உலகின் சிறந்த திரைப்படங்களைத் திரையிட்டு மக்களின் திரைப்பட ரசனையை மேம்படுத்துகிறோம்.

ஜனநாயக மாண்புகளை, மக்கள் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் மக்கட்திரள் இயக்கங்களை நடத்தி வருகிறோம். எமது கலை இலக்கிய இரவுகள், கவிதை திருவிழாக்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் நாடக நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரளுகிறார்கள்

எமது அமைப்பின் 11 வது மாநில மாநாடு 2008 டிசம்பர் 18,19,20 மற்றும் 21 தேதிகளில் சென்னை கோடம்பாக்கத்திலுள்ள பத்மராம் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து கலைஞர்களும் எழுத்தாளர்களும் சென்னையில் சங்கமிக்கிறார்கள்.

இம்மாநாட்டை நடத்தித்தர எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரைப்பட இயக்குனர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

நடிகரும், இயக்குனருமான பத்மஸ்ரீ கமல்ஹாசன், அமீர்கான், சமூகசேவகரும் திரைப்படக் கலைஞருமான சபனா ஹாஷ்மி, சமூகப்போராளியும், எழுத்தாளருமான ஆனந்த் தெல்டும்ப்டே, பண்பாட்டு அறிஞர் கே.என்.பணிக்கர் இவர்களுடன் தமிழகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மாநாடு வெற்றிபெற நீங்கள் துணைநிற்க வேண்டுமென அன்புடன் அழைக்கிறோம் பொருளுதவி, நிதியுதவி என உங்கள் பங்களிப்பைக் கோருகிறோம்.

நன்றி!

அன்புடன்,
பாலு மகேந்திரா, இயக்குனர்,
தலைவர், வரவேற்புக்குழு

மின்னஞ்சல் : tnpwa11thstateconference@gmail.com
தொடர்புக்கு : 94440 85385, 94441 40344, 96001 28199, 044-24339024


காசோலைகள் மற்றும் வரைவோலைகளை "TamilNadu Progressive Writers' Association' என்ற பெயரில் எடுக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

புதிய எண்: 421, இரண்டாவது தளம்,
(பாரதி புத்தகாலயம்)
அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 18.

Friday, October 03, 2008

கொரில்லாப் போர் - சே குவேரா

தமிழில்: சண்முகராஜ் & கவின்மலர்.
(நன்றி : புதுவிசை)

கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெற்ற வெற்றியானது சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளைப் போல கதாநாயகத்தன்மைக்கு கிடைத்த வெற்றி அல்ல. லத்தீன் அமெரிக்க மக்களின், மறுக்கப்படக்கூடாது என கூறப்பட்ட பழமைவாத கொள்கைகளையும் உடைத்தெறிந்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எதைக் காட்டுகிறதென்றால், ஒடுக்கப்பட்ட மக்கள் விழித்தெழுந்து ஒருநாள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வார்கள் என்பதைத்தான். அது கொரில்லாப் போர்முறையின் மூலமாகக்கூட இருக்கலாம்.
கியூபப் புரட்சியானது புரட்சி இயக்கங்களை நடத்துவதற்கு மூன்று முக்கிய அடிப்படைப் பாடங்களை அளித்துள்ளதாக நாம் கருதலாம். அவை:
(1) மக்கள் படையானது போரில் ராணுவத்தை வெற்றி கொள்ள முடியும்.
(2) புரட்சிக்கான அனைத்துக்கூறுகளும் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. புரட்சி தானாகவே அவைகளை உருவாக்கும்.
(3) அமெரிக்கக் கண்டத்தில் வளர்ச்சியடையாத பகுதிகளில் கிராமப்புறங்களே ஆயுதப் போருக்கு ஏற்றவை.
தோல்வியையே எதிர்பார்க்கும் சிலரின் மனநிலை அல்லது தங்களை ஏதோ ஒரு சக்தி செலுத்தும் என்று பாசாங்காக எண்ணிக் கொண்டு அடக்குமுறை ராணுவத்திற்கு எதிராக எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போலியான புரட்சியாளர்களின் மனநிலை - மேற்கூறியவற்றில் முதல் இரண்டு கூற்றுகளும் இவர்களுக்கு எதிரானவை. இப்பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும்வரை க்யூபாவில் முதலில் இவை பெரும் விவாதத்துக்கு உள்ளாகின. தற்போது அமெரிக்கா முழுவதும் இவை விவாதப் பொருளாகியுள்ளது. இயற்கையாக, கொரில்லா நடவடிக்கையின் மூலம் மக்களின் உணர்ச்சிவேகத்தை அதிகப்படுத்துவதால் மட்டும் புரட்சி உருவாகிவிடாது. அடிமட்ட மக்களை ஒன்று திரட்டுதல் என்பது ஓர் இயக்கத்திற்கு மிகவும் அவசியம் என்பதை நாம் எப்பொழுதும் மனதில் கொள்ளவேண்டும். சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை உள் விவாதங்களாக நடத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை மக்கள் இனங்காண வேண்டும். அடக்குமுறை சக்திகள் பொதுவான சட்டத்திட்டங்களுக்கு எதிராக தங்களை ஆட்சி அதிகாரத்தில் நிலைநிறுத்திக் கொள்ளுமானால், அங்கு அமைதி என்பது ஏற்கனவே முறிந்ததாக கருதப்படுகிறது.
இச்சூழ்நிலையில் மக்களின் அதிருப்தி வெகுவேகமாக ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிப்படும். ஆள்வோரின் நடவடிக்கைகளால் மக்களின் உணர்வானது கொஞ்சம் கொஞ்சமாக யுத்தத்திற்கு தயாராகும். அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் வாக்குரிமையை உண்மையாகவோ கள்ளத்தனமாகவோ பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பூர்வமான அரசியலமைப்பு இருக்குமானால் கொரில்லா போர் வெடிப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. ஏனெனில் அமைதியான முறையில் போராடுவதற்கான இடம் அங்கே இன்னமும் தீர்ந்து போகாமல் மிச்சமிருக்கும்.
இதில் மூன்றாவது கூற்று, போர் தந்திரங்களைப் பற்றியது. நாம் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், பொதுவாக போராட்டங்கள் நகர்புறங்களை மையமாக வைத்தே நடத்தப்படுகிறது என்று கூறுவோர் வளர்ச்சியடையாத அமெரிக்க கிராமப்புறங்களின் அதிகமான பங்களிப்பை மறந்து விடுகின்றனர். அதற்காக திரட்டப்பட்ட தொழிலாளிகள் வாழும் நகர்ப்புறங்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அரசியலமைப்பு சட்டங்கள் மறுக்கப்பட்டு அல்லது நிராகரிக்கப் பட்டு இம்மக்கள் ஆயுதப்போராட்டத்திற்கு முன்வருவதற்கான உண்மையான சாத்தியக்கூறுகளை கவனமாக ஆராய வேண்டும். இந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பான தொழிலாளர் இயக்கங்கள் பெரும் ஆபத்துக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. அதனால் இவர்கள் ஆயுதம் தாங்காமல் மிகவும் ரகசியமாக செயல்பட வேண்டும். ஆனால் கிராமப்புறங்களில் அதிக இடைஞ்சல்கள் இருக்காது. இங்கு அடக்கு முறை சக்திகள் கண்காணிப்பதற்கான வாய்ப்பு குறைவு. ஆகவே இங்கு வசிக்கும் மக்களின் ஆதரவை ஆயுத போராளிகள் பெற முடியும்.
க்யூபா ஆயுதப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியின் அனுபவங்களைக் கொண்டு இந்த மூன்று முடிவுகளையும் மிகத் தெளிவாக பின்னர் ஆராயலாம். இவையே நமது அடிப்படை பங்களிப்பு என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்த வேண்டியுள்ளது. கொரில்லாப் போர் என்பது மக்கள் போராட்டங்களின் பல வித தன்மைகளையும் முகங்களையும் கொண்டிருந்தாலும் அடக்குமுறை சக்திகளிடமிருந்து விடுதலை அடைவதே பொதுவான தன்மையாக இருக்கும். போர் என்பது அறிவியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இவ்விதிகளை உதாசீனப்படுத்துபவர்கள் நிச்சயமாக தோல்வியையே தழுவுவார்கள் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். இதையெல்லாம் மையப்படுத்தியே கொரில்லா போரும் இவ்விதிகளுக்குட்பட்டு இருந்தாலும் இதற்காக தனியே விதிகள் உள்ளன. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு புவியியல் மற்றும் சமூகத்தன்மையைக் கொண்டிருந்தாலும் கொரில்லா போரைப் பொறுத்தவரை பொதுவான விதிகளை இவர்கள் அனைவரும் ஆயுதப் போராட்டத்தில் கையாள்கிறார்கள்.
இப்பொழுது நமக்கு முக்கியப் பணி என்னவென்றால், விடுதலையை விரும்பும் மக்களுக்காக நாம் போரின் அடிப்படைக் கொள்கைகளை கண்டறிவதும், பின்பற்ற வேண்டிய விதிகளை வகுப்பதும், நம்முடைய அனுபவங்களை பொதுமைப்படுத்தியும், மற்றவரின் தேவைக்காக அவற்றிற்கு ஒரு பொது வடிவம் கொடுப்பதும் ஆகும். முதலில் நாம் ஒரு கேள்வியை முன்வைப்போம். யார் யார் கொரில்லாப் போராளிகள்? ஒருபக்கம் அடக்குமுறை சக்திகளும் அதன் பிரதிநிதியான கட்டுக்கோப்பான ராணுவமும் உள்ளன. இவர்களுக்கு அயல்நாட்டு உதவிகளும் உள்ளன. இன்னொரு பக்கம் நாட்டுமக்களோ அல்லது அடக்குமுறை சக்திகளால் ஒடுக்கப்பட்ட பகுதிகளோ உள்ளது. நாம் முக்கியமாக உலகுக்கு தெரிவிக்க வேண்டியது என்னவென்றால் கொரில்லாப் போர் என்பது மக்களின் போர் என்பதாகும். கொரில்லா யுத்தக்குழு என்பது ஆயுதம் தரித்த மையம். இது மக்களுக்கு முன் செல்லும் காவல்படை. கொரில்லாப் படையின் மகத்தான சக்தி மக்களிடமிருந்து கிடைக்கிறது. இதற்கு ராணுவத்தைவிட தாக்குதல் சக்தி குறைவாக இருப்பதால் இதனை குறைத்து மதிப்பிடக்கூடாது. கொரில்லா யுத்தப்படை என்பது அதிகபட்சமான மக்களின் ஆதரவுடன் குறைந்த அளவு ஆயுதங்களைக் கொண்டு அடக்குமுறை சக்திகளுக்கு எதிராக உருவாகும் அமைப்பு.
அந்தந்த இடங்களின் மக்கள் ஆதரவை கொரில்லா போராளிகள் பெற்றிருப்பது மிகவும் அவசியம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் , ஒரு இடத்தில் கொள்ளைக்காரக்கும்பல் செயல்படும்போது இவர்களிடமும் கொரில்லாக்களிடம் காணப்படும் தலைமை மீதான விசுவாசம், வீரம், நிலத்தின் தன்மையை அறிந்து வைத்திருப்பது, ஆயுதங்களை பயன்படுத்துவது என அனைத்து தன்மைகளையும், பண்புகளையும் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு தன்மையில் இவர்கள் வேறுபடுகிறார்கள். அதாவது மக்களின் ஆதரவு இவர்களுக்கு கிடைப்பதில்லை. பொதுவாக கொள்ளைக்கும்பல்கள் பொதுமக்களால் பிடிக்கப்படும்போது அழித்தொழிக்கப்படுகிறார்கள். ஏன் கொரில்லாப் போராளி போரிடுகிறான்? கொரில்லாக் குழுக்களின் செயல்பாடுகளையும் மக்களிடம் அதற்கிருக்கும் ஆதரவையும், அதன் போராட்ட வடிவத்தையும் கொண்டு இக்கேள்விக்கு நாம் விடையளிக்கலாம். கொரில்லாப் போராளி என்பவன் சமூகப் போராளி. இவன் அடக்கு முறையாளர்கள் மேல் மக்கள் கொண்டிருக்கும் கோபத்திலிருந்து உருவாகி ஆயுதம் தரித்து போரிடுகிறான் என்பது மறுக்க முடியாத உண்மை.
மேலும் இவன் சமூக மாற்றத்திற்காகவும் ஆயுதமில்லாத தங்களது சகோதர, சகோதரிகளை பெருந்துன்பதிலிருந்தும், அவமானங்களிலிருந்தும் விடுவிக்க ஆயுதம் ஏந்துகிறான். தன்னைத்தானே அர்ப்பணித்துக்கொண்டு கூட அடக்குமுறைசக்திகளாக விளங்கும் நிறுவனங்களை அழித்தொழிக்கும் பண்பு இவனிடம் உண்டு. கொரில்லா யுத்த தந்திரங்களை முழுவதும் ஆராய்ந்தோமானால், ஒவ்வொரு போராளியும் தன்னை சுற்றியுள்ள கிராமப்புறங்களை நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், நுழைவாயில், வெளியேறும் இடம், வேகமாக முன்னேறக்கூடிய இடம், மறைந்து கொள்ள ஏதுவான இடங்கள் போன்றவற்றை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். ஆக, குறைந்த மக்கள் தொகை கொண்ட காடு போன்ற இடத்தில்தான் கொரில்லா போராளி செயல்பட முடியும் என்பது விளங்கும். இப்பகுதிகளில் சீர்திருத்தத்திற்கான போராட்டங்களே முக்கியமானதாக இருக்கும். அதிலும் நிலவுடைமையை மாற்றுவது முக்கியமானதாக இருக்கும். விவசாயிகளுக்கு நிலங்கள், கால்நடைகள் போன்றவையே வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. அவையே அவனுக்கு கல்லறையாகவும் இருக்கின்றன. இந்நிலையிலிருந்து விவசாயியை மீட்டெடுக்க கொரில்லாப் போராளி துணை நிற்பான். கொரில்லாப் போரில் இரண்டு வகை உண்டு. முதல் வகை சோவியத்-யூனியனில் உக்ரைனிய போராளிகள் போரிட்ட போது காணப்பட்டது போன்ற வாடிக்கையான பெரிய படைகள் ஈடுபடுத்தப்படும் போர். இவ்வகைப் போர் பற்றி நாம் அதிகம் ஆராய வேண்டியதில்லை.
இரண்டாம் வகைப் போர் நாம் ஆர்வமாக ஆராயப்பட வேண்டியதாகும். இவ்வகைப் போரில் ஆயுதம் தாங்கிய குழு அரசு அதிகாரத்தில் உள்ள சக்திகளை எதிர்த்து போரிடும். அதிகார சக்தி காலனியாதிக்கமாகவும் இருக்கலாம். இவ்வகைப் போராளிகள் குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் இருப்பார்கள். சித்தாந்தரீதியாக அவர்களின் குறிக்கோள் என்னவாக இருந்தாலும், போரிடுவதற்கான பொருளாதார நோக்கம் நிலச்சீர்த்திருத்தமாகவே இருக்கும். மாவோ சீனத்தின் தென்பகுதியில் தொழிலாளர் குழுக்கள் தோற்கடிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டன. ஆனால் கிராமப்புறங்களின் வழி யாக நிலச்சீர்திருத்தத்தை குறிக்கோளாகக் கொண்டு வழிநடத்தப்பட்ட நெடும்பயணத்திற்கு பின் அவை தம்மை நிலைநிறுத்திக் கொள்வதில் வெற்றி பெற்றன. பிரெஞ்சு காலனியாதிக்கத்தை எதிர்த்து போரிட்ட ஹோசிமின்னின் போராட்டம் நெல் விவசாயிகளை மையப்படுத்தியே இருந்தது. இந்த இரண்டிலும் ஒரு பொதுவான கட்டமைப்பு உள்ளது. அதாவது இவை இரண்டுமே ஜப்பானின் ஆக்கிரமிப்பை தடுத்து தேச உணர்வை வெளிப் படுத்தினாலும், நிலத்திற்கான அந்த யுத்தத்திற்கான பொருளாதார அடிப்படைகள் மறையவில்லை. அல்ஜீரியாவை எடுத்துக் கொண்டோமேயானால் நாட்டின் பொருளாதாரம் என்பது அராபியர்களால் உருவாக்கப்பட்டாலும் அனேகமாக அவர்களின் அனைத்து நிலங்களையும் லட்சக்கணக்கான பிரெஞ்சு குடியேறிகளே அனுபவிக்கிறார்கள்.
போர்ட்டரிக்கா போன்ற தீவுகளில் பாட்டாளிகள் அதிகமாக இருந்தபோதிலும் அங்கு நில ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்ற கொரில்லா புரட்சி வெடிப்பது அங்கே சாத்தியமில்லை. ஏனெனில் தமக்கிடையேயான வேறுபாடுகளால் தேசத்தின் பெயரால் அவர்களால் ஒன்று பட முடியவில்லை. இவ்வகை வடிவங்கள் வெவ்வேறு வகையாக இருந்தாலும் பொதுவான மைய சிந்தனையை முன் வைத்தது. சிறுவிவசாயிகளும், க்யூபப் பண்ணைகளில் வேலை செய்த அடிமைகளும் ஒன்று சேர்ந்து முப்பது வருடங்களாக நிலவுரிமைப் போராட்டத்தை நடத்தினார்கள். கொரில்லாப் போரின் வளர்ச்சியை கணக்கில் எடுத்துக் கொண்டோமானால், கொஞ்சம் கொஞ்சமாக அதன் செயல் பாட்டுதன்மையில் இருந்து மாறி கொரில்லாக் குழுக்களை யுத்த முனையில் நிறுத்தவேண்டும். இவ்வகை போர் தனித்துவத்தையும் மீறி மற்ற போர்வகைகளுக்கு கருவாகவும், தொடக்கமாகவும் இருக்கும். எனவே கொரில்லாப் படையின் யுத்த தன்மையை மாற்றி, வாடிக்கையான போர் முறைக்கு கொண்டு வரும் காரியம், எதிரியை பல யுத்தக் களங்களில் பலமுறை வென்றெடுக்கும் காரியத்திற்கு நிகரானது. போரில் வெற்றி நிச்சயம் என்ற நிலை வரும் வரை யுத்தமோ, சண்டையோ அல்லது தாக்குதல்களோ இருக்ககூடாது. கொரில்லா வீரனை இப்படி வரையறுக்கிறார்கள்: கொரில்லா போராளி என்பவன் யுத்தத்தின் jesuit எனலாம். (jesuit என்றால் 1534 -இல் இக்நோசியாஸ் லயோலா என்பவர் தொடங்கிய ஏசுநாதர் சங்கத்தைச் சேர்ந்தவர் என்று பொருள்). கொரில்லா வீரன் ரகசியமாக செயல்பட வேண்டும். எதிரிகளை ஏமாற்ற வேண்டும். ஆச்சர்யப் படத்தக்க வகையில் மறைந்திருந்து தாக்குதல் நடத்த வேண்டும். போர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சில முறைமைகளில் இருந்து சில சூழல்களில் மாறுபடவும் வேண்டி இருக்கும். இது ஒரு தனிப்பட்ட jesuitism.
போர் என்பது ஒருவர் மற்றொருவரை எதிர்த்துப் போராடி அழிக்கும் போராட்டம். படைகளை பயன்படுத்துவதோடு போரில் வெற்றி பெற பலவித தந்திரங்களையும், விதிகளையும் செய்ய வேண்டியிருக்கும். போர்த்தந்திரம் என்பது திட்டங்கள் குறிக்கோள்களை அடைய செய்யப்படும் செயல்களின் தொகுப்பாகும். அதாவது எதிரியின் பலவீனங்களை கணக்கிட்டு இத்தந்திரங்கள் திட்டமிடப்பட வேண்டும். யுத்தமுனையில் இருக்கும் பெரிய ராணுவத்தின் போர்ப்படை பிரிவுகளின் செயல்பாடுகள் கொரில்லாக் குழுக்களின் செயல்பாடுகளை ஒத்திருக்கும். இதுவும், ரகசியமாக செயல்படுவது, எதிரியை ஏமாற்றுவது மற்றும் திடீரென தாக்குதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.
இந்த குணங்கள் இல்லையெனில் எதிர்முகாமின் கண்காணிப்பு, சரியாக செயல்படுகிறதென்று பொருள். மிகப்பெரிய பரப்பளவு கொண்ட இடங்களாக இருந்தால் எதிரிகளால் எல்லாவற்றையும் தனக்குக் கீழ் கண்காணிப்பில் வைத்திருக்க முடியாது. இந்த மாதிரி இடங்களில் கொரில்லாப் போர்வீரர்கள் தங்களுக்குள்ளேயே பிரிவுகளாக பிரிந்து திடீர் திடீர் என தாக்குதல் நடத்தி எதிரிகளை நிலைகுலையச் செய்வார்கள். இது கொரில்லாப் போராளியின் கடமையும் கூட. "தாக்கு! ஓடு!" என்பது சுருக்கமாக சொல்லுதல். இதையே துல்லியமாக சொல்வதென்றால் "தாக்கு! ஓடு! மறை விடத்தில் பதுங்கிக்கொள்! மீண்டும் தாக்கு! ஓடு!". எதிரிக்கு ஒய்வு கொடுக்காமல் இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும். சில நேரங்களில் வாடிக்கையான போர்முறைகளிலிருந்து எதிர்மாறான தகுதிகளையும் கொண்டிருக்கும்.
அதாவது நேருக்கு நேராக முன் சென்று போரிடுவதை கொரில்லா போர் தவிர்க்கிறது. ஆனால் கொரில்லா போரின் முடிவு என்னவாக இருக்குமென்றால் "வெற்றி பெறு! எதிரியை நிர்மூலமாக்கு! ". எவ்வகைப் போரிலும் இறுதியாய் நிகழ்வது இதுதானே!? கொரில்லாப் படை முழு வெற்றிபெறும் தகுதியை பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்பது இதிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிகிறது. கொரில்லாப் படை படிப்படியாக முன்னேறி ராணுவத்திற்குண்டான அனைத்து குணங்களையும் பெறுவதற்கான ஆரம்பநிலையாகும். இந்த தகுதியைப் பெற்றபின் எதிரியின் மீது தாக்குதல் நடத்தி முழு வெற்றி பெற முடியும். கொரில்லாப் படையே ராணுவத்தின் ஆரம்பமாக இருந்தாலும், ராணுவமே இறுதி வெற்றியை பெறும். நவீன யுத்தத்தில் படைப்பிரிவின் தளபதி தனது வீரர்கள் இருக்கையில் அவர்முன் எதிரியோடு நேருக்கு நேர் போரிட்டு உயிரைவிட வேண்டிய அவசியமில்லை.
கொரில்லா படையில் ஒவ்வொரு வீரனும் தன்னைத்தானே தனக்கு தளபதியாய் கருத வேண்டும். இதில் சாதகமான தன்மை என்னவென்றால் ஒவ்வொரு கொரில்லா வீரனும் எப்போது வேண்டுமானாலும் உயிரைத் தர தயாராகவே இருக்கிறான். அதுவும் கற்பனையான காரணத்திற்கு அல்ல... கற்பனை நிஜமாவதற்கு... இதுவே கொரில்லா போர் முறைக்கான அடிப்படை. ஒரு சிறிய கொரில்லா குழு ஆயுதம் தாங்கிய காவல்படையாக செயல்பட்டு, அக்குழுவை ஆதரிக்கும் பெரிய மக்கள் படை களத்தில் இறங்குமுன்னதாகவே உடனடி குறிக்கோள்களுக்காக போரிடும். ஆனால் அந்த போர் பழைய காலாவதியான கொள்கைகளை தூக்கி எறிந்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி அதன் மூலம் இறுதியாக சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகவே நடத்தப்படுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது மதிப்பு குறைவான இத்தகைய செயல்கள்கூட உயர்வான இடத்தை பெறுகின்றன. அந்த உயர்வான இடமே இறுதியில் அவர்கள் பெறுவது. இறுதி என்பது துயரமான முடிவைக் குறிப்பதல்ல. இலக்கை குறிப்பது! போராட்ட குணம், எந்த காலத்திலும் அச்சமின்மை, வளைந்து கொடுக்காத தன்மை ஆகியவையும் கொரில்லா போர்வீரனின் உயர்வான குணங்கள்.

Tuesday, September 30, 2008

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கண்டனக்கூட்டம்.

கடந்த 22 செப், 2008 அன்று போரூரில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தமுஎச 11-வது மாநில மாநாட்டு பிரச்சாரத் துவக்க விழாவில், இந்து முன்னணி மதவெறியர்களின் தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் கண்டனக்கூட்டம்.

30-09-2008, செவ்வாய்க்கிழமை
மாலை 5.30 மணி
இடம் - ஆற்காடு ரோடு,
காரம்பக்கம்ம்(அண்ணா சிலை அருகில்)
போரூர்

தப்பாட்டம் - போக்குவரத்து தொழிலாளர்கள்.
இசைப்பாடல்கள் - தமுஎச தோழர்கள்.
தபேலா - சுந்தர்
கண்டனம் முழங்கிட...
ச. தமிழ்ச்செல்வன், மாநில பொதுச்செயலாளர், தமுஎச.
விடுதலை ராசேந்திரன், பெரியார் திராவிடர் கழகம்
வழக்கறிஞர் ச. செந்தில்நாதன்
கவிஞர் இன்குலாப்
எழுத்தாளர் பிரபஞ்சன்
கவிஞர் சூரியதீபன், தமிழ்படைப்பாளிகள் முன்னணி
பேராசிரியர் அ.மார்க்ஸ்
எழுத்தாளர் இராசேந்திரச் சோழன், தமிழ்படைப்பாளிகள் முன்னணி
திருமிகு. த. வெள்ளையன், வணிகர் சங்கத் தலைவர்
இயக்குனர் சீமான்
கூத்துப்பட்டறை ந. முத்துசாமி
பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால்
பத்திரிக்கையாளர் ஜவஹர்
தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம்
கவிஞர். இரா.தெ. முத்து
ஓவியர் சந்துரு
ஓவியர் வீரசந்தானம்,
தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்
பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன்
ஓவியர் மருது
தலித்முரசு புனித பாண்டியன்
பேராசிரியர். சி. லட்சுமணன்
தோழர் அன்புத் தென்னவன், திராவிட இயக்கப் பேரவை
ஓவியர் புகழேந்தி
புலவர் பா. வீரமணி
நாடகக் கலைஞர் காளீஸ்வரன்
கவிஞர் பச்சியப்பன்
கவிஞர் கார்முகில்
ஓவியர் நடராஜ்
ஓவியர் கார்த்திகேயன்
ஓவியர் மனோகர்
ஓவியர் வின்சி
திருமிகு கிருபானந்த சாமி துறைமுகத் தமிழ்ச்சங்கம்
கருப்புப் பிரதிகள் நீலகண்டன்
உதயம் வ.செல்வம்
தோழர் கருணாகரன், போக்குவரத்து சம்மேளனம், சி.ஐ.டி.யு.
தோழர் ச. அசோகன்
நாடகக் கலைஞர் ஜேசுதாஸ்
தோழர் சந்தோஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
தோழர் ஸ்டாலின், இந்திய மாணவர் சங்கம்
வழக்கறிஞர் அ. காரல் மொழி
தோழர் எம். சேகர், ஆட்டோ சங்கம், சி.ஐ.டி.யு.
நாடகக் கலைஞர். கி. அன்பரசன்
கவிஞர் நா.வே.அருள்
எழுத்தாளர் மணிநாத்
எழுத்த்டாளர் பா.ராமச்சந்திரன்

இவர்களுடன்...
போரூர் பகுதி அனைத்துக் கட்சித் தலைவர்கள்

அனைவரும் வாரீர்! கண்டனம் முழங்கிட...

Wednesday, August 20, 2008

இணைய இதழ் வாசகர்கள் யார்? சந்திப்பு: -கவின்மலர் (நன்றி : தீக்கதிர்)

(www.keetru.com இணைய இதழ்மூலம் ஏராளமான இதழ்களை இணைய வாசகர்களிடம் கொண்டு சேர்த்து வரும் ரமேஷ், பாஸ்கர் ஆகியோரிடம் இணையதள வாசிப்புபற்றி சில கேள்விகளும், அவர்களின் பதில்களும்...)

இணைய இதழ்களின் வாசகர்களுக்கும் அச்சுப் பத்திரிகைகளின் வாசகர் களுக்கும் என்ன வேறு பாடு?

இணைய வாசகர்கள் தங்களது அலுவலக வேலைகளுக்கிடையே அல்லது ஓய்வு நேரத்தில் வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இணைய இதழ்கள் பக்கம் எட்டிப் பார்ப்பவர்கள்.ஆனால், அச்சுப் பத்தி ரிகைகளின் வாசகர்கள், வாசிப்பதை ஓர் இயக்க மாகக் கொண்டவர்கள். வாசிப்பதை அவர்கள் விவாதிப்பார்கள். தங்கள் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கண்டித்து கூட்டம் நடத்துவார்கள். சிலர் புத்தகங்களை எரித்து போராட்டம் கூட நடத்துவார்கள்.

இணைய இதழ்களின் வாசகர்கள் பெரும்பாலும் புலம் பெயர்ந்த தமிழர் களாகவே உள்ளதாகத் தெரிகிறது. இது ஏன்?

புலம் பெயர்ந்த தமிழர் களுக்கு இயற்கையாகவே நமது மண்ணின், மொழி யின் தொடர்பு அறுந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய அக்க றையும், ஆர்வமும் இருக் கிறது. அவர்களுக்கு இணைய இதழ்களின் மூலமே தங்க ளது தாய் மண்ணைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. கீற்று தளத்தை எடுத்துக் கொண்டால் ஐம்பது விழுக் காடு வாசகர்கள் இந்தியா விலும், ஐம்பது விழுக்காடு வாசகர்கள் வெளிநாடுக ளிலும் இருக்கிறார்கள். ஆனாலும் கூட எங்களுக்கு வரும் எதிர்வினைகளை எடுத்துப் பார்த்தால் அவை களில் பெரும் பகுதி வெளி நாடு வாழ் தமிழர்களிடம் இருந்து வருவதாகத்தான் இருக்கிறது.

ஒரு அச்சுப் பத்திரிகை யின் பதிப்பாளருக்கு பத்திரிகை எவ்வளவு விற் கிறது என்ற புள்ளி விவரம் தெரியும். ஆனால் இணைய இதழ்களில் இந்தக் கணக்கு எப்படி எடுக்கப்படுகிறது?

அச்சு இதழ்களை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று கணக்கு போடுவது தோராயமாகத்தான். 3000 பிரதிகள் விற்கிறது என்றால் 3000 x 5= 15,000 பேர் படிப்ப தாகத் தான் கணக்கு போடுவார் கள். இந்த 5 என்பது ஒரு பத் திரிகையை ஒருவர் வாங்கி னால் அதை 5பேராவது வாசிப் பார்கள் என்ற கணிப்பின் அடிப்படை யில் கூறப்படுவது. ஆனால், இணைய இதழ்களைப் பொறுத் தவரை எத்தனை பேர் படிக்கி றார்கள் என்பதை மிகத் துல்லியமாக கணக்கிட்டு சொல்லும் வகையில் தொழில்நுட்பம் இருக் கிறது.உதாரணமாக கீற்று இணை யதளத்தை 79 நாடுகளில் வாசிக்கிறார்கள் என்ற விவரம் எங்களுக்குத் தெரியும். அது மட்டுமல்ல, எவ்வளவு நேரம் இணை யத்தில் இருந்தார்கள், எத்தனை பக்கங்கள் வாசித் தார்கள், எத்தனைபேர் மீண்டும் மீண்டும் இணைய தளத்திற்கு வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எத்தனை பேர் வாசித்தார்கள், எந்தப் பக்கத்தை வாசகர்கள் அதிகம் விரும்பி படிக்கிறார்கள். இந்தியாவில் இருந்து எத்தனை பேர், அமெரிக்காவில் இருந்து எத்தனைபேர், எந்த சர்வீஸ் ப்ரோவைடரில் (பிஎஸ்என் எல், ஏர்டெல் போன்றவை) இருந்து எத்தனை பேர் போன்ற துல்லியமான புள்ளி விவரங்களை இணைய இதழ் நடத்து பவர்களால் பெற முடி யும். இவ்வளவு ஏன்? தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவேடார் நாட்டில் கீற்றுக்கு ஒரு வாசகர் இருக் கிறார் என்ற விவரம் கூட எங்களுக்குத் தெரியும். அங்கே இருக்கும் தமிழர்களில் இவர் மட்டுமே அரசியல் இலக்கியத்தில் ஆர்வ முள்ளவராக இருக்க லாம்.

அதேநேரத்தில், சாரு நிவேதிதா போன்றவர்கள் தங்களது வலைத்தளத்தை ஐந்த ரை லட்சம் பேர் படிக் கிறார்கள் என்று சரடு விடுவதையும் எளி தில் கண்டு பிடித்து விட லாம்.`network traffic-ஐ அறிய உதவும் `Third party' இணைய தளங்கள் மூலம் ஒரு இணைய இதழை எத்தனை பேர் படிக் கிறார்கள் என்பதை தோராய மாக கணக்கிட முடியும்.

பொதுவாக இணைய இதழ்களின் வாசகர்கள் எப் படிப்பட்டவர்கள்? எந்த நிலைப்பாட்டில் உள்ளவர் கள்? இணையம் ஆர்.எஸ். எஸ். காரர்கள் கையில் இருக் கிறது என்று ஒரு கருத்து நில வுவது உண்மைதானா?

முன்னர் அப்படி ஒரு நிலை இருந்தது உண்மை தான். இப் போது மாற்றுச் சிந்தனை உடை யவர்களும் இணையத்தில் அதிகரித்து விட்டார்கள். முன் னர் பெரி யாரியத்தையும், மார்க் சியத்தையும் அவர்களால் மிக எளிதாக விமர்சித்து விட்டுப் போக முடிந்தது. இப்போது எழுதினால், மிகக் கடுமையான எதிர்வினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். கீற்று தொடங் கப்பட்டபோது, பார்ப்பனியத் தை விமர்சிக்கும் கட்டுரை களை வெளியிட்டால், ஆதர வாக ஓரிரு மின்னஞ்சல்கள் மட்டுமே வரும். எதிராக நிறைய வரும். இப்போது சரிக்குச் சரியாக இருக்கிறது.

இணைய இதழ்க ளுக்கு விளம்பரங்கள் பெறுவதில் சிக்கல்கள் உள்ளனவா?

அது நீங்கள் என்ன நிலைப் பாட்டுடன் இணை யத்தை நடத்துறீர்கள் என் பதைப் பொறுத்தது. விளம் பரங்களுடன் இலாபகரமான இணையங்களும் இருக்கின்றன. தானாக முன்வந்து யாரும் விளம்பரம் தந்ததில்லை. அர சியல் நிலைப்பாடு காரண மாக விளம்பரங்களை அளிப் பதற்கு தயங்குகிறார்களோ என்னவோ? என்ன இருந் தாலும் தினமலருக்கு கிடைக் கும் விளம்பரங்கள் தீக்கதிருக்குக் கிடைக்காது தானே?

Thursday, August 07, 2008

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி--2008”

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம கடந்த ஆண்டு நடத்தியது போலவே இந்தஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.

முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு : ரூ.2,000

மற்றும் தேர்வுபெறும் சிறந்த சிறுகதை ஒவ்வொன்றிற்கும் ரூ.250 பரிசளிக்கப் படுவதோடு, கதைகள் சிறந்த இலக்கிய இதழ்களில் வெளியிடப்படும்.இந்த ஆண்டு பரிசுத்தொகையை,பிரபல திரைக்கவிஞர் நா.முத்துக்குமார் வழங்குகிறார்.

விதிமுறைகள்:

ஒருவரே எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.பக்க அளவும், கதைக் கரு தேர்வும் எழுத்தாளர் சுதந்திரம். கதை, தனது சொந்தக் கற்பனையே என்றும் வெளிவராதது என்றும் உறுதிதந்து, பெயரைத் தனித்தாளில் முகவரி, தொலைபேசி எண்ணுடன் தரவேண்டும். (கதைப் பக்கங்களில் எழுதியவர் பெயர் முகவரி இருக்கக் கூடாது)

வெளிநாடுகளில் இருப்போர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, கதைகளை அனுப்பலாம்.

சிறுகதைகள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் : 11-09-2008
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
----------------------------------------------------------------------
நா.முத்து நிலவன்,
(துணைப் பொதுச்செயலர் -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)
96, சீனிவாச நகர் 3ஆம் தெரு,
புதுக்கோட்டை – 622 004
செல்பேசி : 94431-93293
மின்னஞ்சல் : naamuthunilavan@yahoo.co.in

Friday, July 25, 2008

வாழும் கவிதைகளை வழங்கி விடடு....வாழ மறுத்த ஒரு கவிக்குயில்

- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்)

அவமானப்படுத்தப்பட்டவள்

உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்என்னைக் கண்டெடுத்துள்ளேன்
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக் கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்உறுதி பெற்றது.
நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
என்னைஅவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்
ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.
என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.

-சிவரமணி, (1990)
வயது 22

சிவரமணி - ஈழத்து பெண் கவிஞர். ஈழத்து இலக்கியங்களில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும் பெயர். நம்பிக்கை தெறிக்கும் அவளது வரிகள் எத்தனையோ உள்ளங்களுக்கு உத்வேகம் அளித்தன . மிக குறுகிய காலத்திலேயே ஈழச்சூழலில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவள். இலங்கையின் பெண்ணிய இயக்கங்களோடு தொடர்ந்து தன்னை இணைத்துக்கொண்டு பம்பரமாய் செயல்பட்டவள்.


தன் ஆக்டோபஸ் கரங்களால் பொதுத்தளம், தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுமே அவளை நெருக்கியது. அவளை நினைக்கும்போது மனம் கனத்துதான் போகிறது. 23 வயதே ஆன அந்த இளம் பெண் அத்தனை சின்ன வயதிலேயே புகழ்க்கொடி நாட்டினாள். ஈழத்து பெண்ணாகிய அவளின் ஆரம்பகால கவிதைகளில் தெறித்த நம்பிக்கை சிறிது சிறிதாக தேய்ந்து போர் பற்றிய சலிப்பும் சமூகம் பற்றிய கோபமும் விரக்தியாய் மாறி கவிதைகளின் முகவரியை மாற்றவே செய்தன. ஆனாலும் சிவரமணி தன் மனதிற்கு உண்மையாய் இருந்தாள். அவள் அடி மனதின் எண்ணங்கள் அவள் கவிதைகளில் வார்த்தை வடிவம் பெற்று வந்து விழுந்தன. ஆகவே அவளின் கவிதைகள் அவளை காட்டும் கண்ணாடியை இருந்தன. அதுவே அவளுக்கு சுமையாகவும் போயிற்று. அத்தனை சீக்கிரம் ஒரு பெண்ணை ஏற்றுக்கொண்டு விடுமா இந்த ஆண்களின் சமூகம்? அவள் நிர்பந்தங்களால் சுழற்றி அடிக்கப்பட்டாள். சமூகத்தோடு விடாது போராடினாள். மனதோடு பெரும் போராட்டம் நடத்தினாள்.


எத்தனையோ கவியரங்களில் இன்னும் கவிதை வாசித்து கொண்டிருக்க வேண்டிய அந்த இளம் குயில் ஒரு கட்டத்தில் கவிதை எழுதுவதை நிறுத்தியது. தன் கவிதைகள் யாரிடம் இருந்தாலும் அதை அழித்து விடுமாறு வேண்டி கேட்டுக்கொண்டது. ஆம்! சிவரமணி அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தன் வாழ்வை தானே முடித்துக்கொண்டாள். 23 வயது வரை மட்டுமே வாழ்ந்து முடித்த அவள் வாழ்ந்தது போதும் என எண்ணி 1991 மே 19ம் தேதி யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டாள். அவளின் இறப்பைப்போல் அதிர்ச்சி தருகிறது இறக்கும்முன் அவள் செய்த செயல். தன் கைவசமிருந்த தன்னுடைய அத்தனை கவிதைகளையும் நெருப்பில் இட்டு எரித்து விட்டுச் சென்றிருக்கிறாள். அந்த நெருப்போடு அவள் கவிதைகளும் உணர்வுகளும் சேர்ந்து அழிந்து போயின. தன் இறுதிக்கடிதத்தில் தன் நண்பர்கள் யாரிடமாவது அவளுடைய கவிதைகள் மிச்சமிருந்தால் அவற்றையெல்லாம் அழித்து விடும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தாள். அத்தனை போரையும் உறைய வைத்து விட்டு உலகத்தை விட்டு சென்ற சிவரமணியின் கவிதைகளில் இலங்கையின் மட்டகளப்பு பல்கலைக்கழத்தின் பேராசிரியை சித்ரலேகா மௌனகுருவிடம் எஞ்சியிருந்த அவளுடைய 22 கவிதைகள் அவரால் நூலாக பதிக்கப்பட்டு இன்று அவை மட்டுமே சிவரமணி என்ற பெண் கவிஞரின் பதிவாக நம்மிடையே கிடைத்திருக்கின்றன. ஏன் பெண்ணே? ஏன் உன் கவிதைகளையும் சேர்த்து அழித்துவிட்டு சென்றாய்? சித்ரலேகா மௌனகுரு நூல் முன்னுரையில் குறிப்பிட்டது போல் "ஆண்கள் தங்கள் கவிதைகளை தங்களின் வெற்றியாக பார்க்கிறார்கள். பெண்களோ தங்களின் வடிகாலாக பார்க்கிறார்கள்".- எத்தனை உண்மையான வார்த்தைகள்.! அதனால்தானே தன்னை அழிக்கும்முன் தன் சுவடுகளை அழித்துக் கொண்டாள் சிவரமணி?

சிவரமணி இறந்து 16 வருடங்கள் கடந்து விட்டன. அவளுக்கு பின்னும் அவள் கவிதைகள் வாழ்கின்றன. அவள் கவிதைகள் பல கடுமையான சமூக அரசியல் விமர்சனமாக இருந்தன. இன்று அவை ஈழத்தமிழர் வாழ்வில் உண்மையாகவே உள்ளது.

"ஓரு சிறிய குருவினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய் வீசப்படும்
ஓவ்வொரு குருதி தோய்நத
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும்
காரணமாய்எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்."

நம்மிடம் வாசிக்க கிடைத்த இது போன்ற சில கவிதைகளைத்தவிர அத்தனையும் அழித்து விட்டு செல்ல முடிந்த அவளால் தன் நினைவுகளை அவளுடைய அன்பர்களிடமிருந்து அழிக்க முடியவில்லை

கிடைத்தவற்றில் சில:

"எனக்கு உண்மைகள் தெரியவில்லை
பொய்களை கண்டுபிடிப்பதும்
இந்த இருட்டில்
இலகுவான காரியமில்லை…
தெருவில் அவலமும் பதற்றமுமாய்
நாய்கள் குலைக்கும் போது
பூட்டப்பட்ட கதவுகளை
மீண்டும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு
எல்லோரும் தூங்கப்போகும் நேரத்தில்
நான்
நாளைக்கு தோன்றுகின்ற சூரியன் பற்றி
எண்ண முடியாது
இரவு எனக்கு முக்கியமானது
நேற்றுப் போல்
மீண்டும் ஒரு நண்பன் தொலைந்து போகக்கூடிய
இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது."

எமது விடுதலை

நாங்கள் எதைப் பெறுவோம்
தோழர்களே
நாங்கள் எதைப் பெறுவோம்?
இன்பமும் இளமையும்
இழந்து நின்றோம்
ஏக்கமும் ஏழ்மையும்
சுமந்து வந்தோம்
நாங்கள் எதைப் பெறுவோம்?
விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்
தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?
நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை."

இலங்கையின் போர்ச்சூழலில் அவள் எழுதிய கவிதைகள் இவை.

முனைப்பு

பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.
என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர்.
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.
எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும்.
ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரக் கொட்ட
என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்
தலைகுனிந்து போனதாய்க்
கனவு கண்டனர்.
ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்.

--சி. சிவரமணி.

Wednesday, June 18, 2008

குஜராத்: சோதனைச்சாலையல்ல தொழிற்சாலை

- கவின்மலர் (நன்றி : புதுவிசை)
கலைஞர்களை மதிக்காத சமூகமோ, இயக்கமோ எதுவாயினும் சிறந்து விளங்க முடியாது. சமூகத்தை உள்வாங்கி கலையின் மூலம்- அது இசையோ நாடகமோ சிற்பமோ ஓவியமோ நாட்டியமோ எதுவாயினும் அதன் மூலம் வெளிப் படுத்தும் கலைஞர்கள் சுதந்திரமாக சிந்தித்தால் மட்டுமே சிறந்த படைப்புகள் வெளிவரும். மாறாக, விலங்கு பூட்ட நினைக்கும் சமூகம் தன்னைத்தானே கூண்டில் அடைத்துக் கொள்ளும் அல்லது அடைக்கப்படும்.
இலக்கணத்தை மீறுபவனே கலைஞன். மீறல்களை ஏற்க மறுப்பவர்கள் மதவெறிப் போர்வைக்குள் பதுங்கிக் கொள்கின்றனர். இந்த மதவாதிகளின் தாக்குதலுக்கு சமீபகாலமாக உள்ளாகி வருகிறது கலைத்துறை. சல்மான் ருஷ்டி, எம்.எப். ஹ¤சேன், அமீர்கான், தீபா மேத்தா, மீராநாயர், ஷில்பா ஷெட்டி -இப்படி பட்டியல் நீள்கிறது. நடிகர் மம்முட்டி குஜராத்தை சுட்டிக்காட்டினால் சங்பரிவார் கும்பல் கேரளாவில் கொடும்பாவி கொளுத்துகிறது. காங்கிரசும் இதற்கு உடந்தை.
இதே கேரளத்தில் இன்னொரு சம்பவம். கோட்டயம் மாவட்டம் சங்களச்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் நான்கு மாணவர்களை தற்காலிகமாக நீக்கியது. ஓரினச் சேர்க்கை சமூகத்தில் நடப்பதை பிரதிபலிக்கும் ‘Secret minds’ என்ற 5நிமிட குறும்படத்தை அவர்கள் உருவாக்கியது தவறாம். நான்கு மாணவர் களில் ஒருவர் படத்தயாரிப்பாளர், இன்னொருவர் இயக்குநர், மற்ற இருவரும் நடித்தவர்கள். இயக்குநர் ஜோ பேபி, எம்.ஏ. (சினிமா மற்றும் தொலைக்காட்சி) இறுதியாண்டு மாணவர். “நான் என்ன இங்கே நடக்காததையா சொல்லி விட்டேன்?” என ஆதங்கப்படுகிறார். இவரது முந்தைய படங்கள் ‘பொண்ணு’- டீன்ஏஜ் பருவத்திலேயே கர்ப்பமாவது பற்றியது, ‘God’s own country’-பிச்சையெடுப்பது பற்றியது. இவை இரண்டுமே மாணவர்களுக்கான படவிழாவில் விருதுகள் பெற்றவை.
‘Secret minds’ வசனமற்ற, இசை மட்டுமே கொண்டது. ஒரு திரைப்பட நிறுவனம் நடத்தும் படவிழாவிற்காக சமர்ப்பிக்கப்பட்ட போதுதான் கல்லூரி நிர்வாகம் இக்குறும் படம் பற்றித் தெரிந்து உடனே அது தொடர்பான மாண வர்களை தற்காலிக நீக்கம் செய்துள்ளது. கலைத்திறன் கொண்ட தம் மாணவர்களுக்கெதிராய் திரும்புபவர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றி துணை நிற்கவேண்டிய கல்வி நிறுவனமே இப்படி அதிரடி நடவடிக்கையில் இறங்கியதைக் கண்டு அம்மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களே இல்லையா என்ன? நடப்பவைகளை சொல்லாமல் இருந்தால் அவையெல்லாம் இல்லை என்றாகிவிடுமா?
இதற்கு நேர்மாறானது குஜராத். அங்கே கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள் தங்கள் மாணவனுக்கு துணை நிற்க, பல்கலைக்கழக நிர்வாகம் சங்பரிவார் கும்பலுக்கு துணை போனது. குஜராத்தின் மஹாராஜா சாயாஜிராவ் (எம்.எஸ்) பல்கலைக்கழகம் வடோதராவில் உள்ளது. ஆந்திராவின் தச்சர் குடும்பத்தில் பிறந்த சந்திரமோகன் அங்குதான் நுண்கலைத்துறையில் முதுகலை பயில்கிறார்.
இனி...மே 9, 2007
காலை. எம்.எஸ். பல்கலைக்கழக மாணவர்கள் உற்சாகத்துடன் தங்கள் கலைப்படைப்புகளை பார்வைக்கு வைத்துவிட்டு பரபரப்புடன் வளைய வருகிறார்கள். ஆசிரியர்கள் படைப்புகளை மதிப்பிட்டுக் கொண்டே வருகிறார்கள். தேர்வும், மதிப்பீடும் நடந்து கொண்டிருக்கின்றன.
மாலை 3.30 மணி. நீரஜ் ஜெயின் (உள்ளூர் பாஜக பிரமுகர்) தலைமையில் ஒரு கும்பல் நுண்கலைத்துறைக்குள் நுழைகிறது. செய்தியாளர்களும் அந்த கும்பலோடு வருகிறார்கள். கும்பலால் அழைக்கப்பட்ட காவல்துறையினர் இரண்டே நிமிடத்தில் அங்கே வந்தடைகிறார்கள். ஆனால் அதற்கும் முன்னமேயே சந்திரமோகனை தாக்கி விடுகின்றனர். பல்கலைக்கழக அனுமதியோ, துறைத் தலைவர் சிவாஜி பணிக்கரின் அனுமதியோ பெறாமல், முதல் தகவல் அறிக்கையோ (எப்.ஐ.ஆர்) கைது வாரண்டோ இல்லாமலேயே சந்திரமோகனையும், அவரது நண்பர் வெங்கட் ராவையும் காவல்நிலையம் இழுத்துச் செல்கிறார்கள் காவல்துறையினர்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க சிவாஜி பணிக்கரையும், ஆசிரியர்களையும் மாணவர்களையும் கேவலமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்ததோடு சுதந்திரமாக மிரட்டவும் ஆரம்பிக்கிறது நீரஜ் ஜெயின் தலைமையிலான குண்டர் கும்பல். சிவாஜி பணிக்கர் துணைவேந்தருக்கும் உயரதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தும் அவர்கள் தரப்பிலிருந்து எவ்வித உதவியும் வரவில்லை. எந்த உயரதிகாரியும் துறைக்கு வரவேயில்லை. துறை சார்ந்த ஒரு நிகழ்வில் நடந்த இந்த மோசமான குறுக் கீட்டை இரக்கமற்ற தன்மையுடனும் பல்கலைக்கழகம் அணுகியது விந்தைதான்.
சர்ச்சைக்குரிய ஐந்து ஓவியங்களை சீல் வைக்க உத்தர விடுகிறார் காவல் உதவி ஆணையர் டி.ஆர்.பாரிமர்.
நீரஜ் ஜெயின் கும்பல் அந்த ஓவியங்களை கிழித்து சேதப் படுத்துகிறது. மாணவர்கள் காவல்துறை ஆணையருக்கு புகார் மனு தயாரிக்கின்றனர். பல்கலைக்கழக சார்பதி வாளர் அம்மனுவை சாயாஜி கன்ஜ் காவல்நிலையத்தில் அளிக்கச் சொல்கிறார். காவல்துறையினர் புகாரை பதிவு செய்ய மறுக்கின்றனர். பிறகு பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கை போடாமல் விடுகின்றனர். புகாரை வைத்து எப்.ஐ.ஆர். போடுவதற்கு காவல்துறை ஆணையரோடு பேச்சுவார்த்தை நடக்கிறது. துறைத்தலைவர் சிவாஜி பணிக்கரிடமும் வாக்குமூலம் வாங்குகின்றனர். நள்ளிரவில் சந்திரமோகனுக்கெதிரான எப்.ஐ.ஆர். சட்டப்பிரிவு 153ஏவின் கீழ் பதிவு செய்யப்படுகிறது. மாணவர்கள் அளித்த புகார் கிடப்பில் போடப்படுகிறது. சமூக நீதிக்கான மையம் (Centre for Social Justice) இப் பிரச்னையை கையாள ஒரு வழக்கறிஞரை நியமிக்கிறது.
மே 10, 2007 காலை 10.30 மணிக்கு சந்திரமோகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். கூடவே மாணவர்கள் சார்பில் ஒரு பிரதிநிதியும், வழக்கறிஞரும் சந்திரமோகனுக்கு ஜாமீன் வாங்க வருகிறார்கள். வி.எச்.பி.யின் பெரும் கும்பல் வேறு அங்கே வந்து, சந்திரமோகன் மீது முட்டி மோதி அச்சுறுத்துகிறது. எனவே நீதிபதி அவரை பரோடா மத்திய சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிடுகிறார். காவல் துறை நீதிமன்றத்தில் எப்.ஐ.ஆர். சமர்ப்பித்தபோது இரு புது சட்டப்பிரிவுகள் 293ஏ, 293பி சேர்க்கப்பட்டிருக்கின்றன. 3.30 மணிவரை வழக்கு தள்ளி வைக்கப்படுகிறது. மீண்டும் வி.எச்.பி. கும்பலின் அத்துமீறலால் மறுநாள் மதியம் 2.30 மணிக்கு வழக்கு தள்ளி வைக்கப்படுகிறது. மறுநாளோ நீதிபதி வரவில்லை. தொடர்ந்து வரும் அடுத் தடுத்த நாட்கள் சனி-ஞாயிறாக இருப்பதால் மேலும் இரு நாட்களுக்கு சந்திரமோகன் ரிமாண்ட் செய்யப்படுகிறார்.
மாணவர்களும், ஆசிரியர்களும் துணைவேந்தரை அணுகி இரண்டு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கின்றனர்.
1.தேர்வினை இடையூறு செய்ததற்காக நீரஜ் ஜெயின் மீது எப்.ஐ.ஆர். தாக்கல் செய்யும் வகையில் பல்கலைக் கழகம் புகாரளிக்க வேண்டும். 2. சந்திரமோகனுக்கு அனைத்து சட்ட உதவிகளையும் செய்யவேண்டும்.
கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு பதிலாக மாணவர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களின் உணர்வுகளை புண் படுத்தியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என துணைவேந்தர் நிர்பந்திக்கிறார். தவறு செய்யாத போது மன்னிப்பு கோரப்போவதில்லை என உறுதியுடன் புறக்கணிக்கின்றனர் ஆசிரியர்களும் மாணவர்களும்.மாலைவரை பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து ஒரு உதவியுமில்லை. வேண்டுமானால் துறைத்தலைவர் சிவாஜி பணிக்கர் தனது சொந்தமுறையில் புகார் தாக்கல் செய்ய லாம். பல்கலைக்கழகம் சார்பாக அல்ல என்கிறார் துணை வேந்தர். இதுவும் நிராகரிக்கப்படுகிறது. பல்கலைக்கழ கம் சார்பாக நீரஜ் ஜெயினுக்கெதிராக எந்தவொரு நட வடிக்கையையும் எடுப்பது என்ற விஷயத்தில் துணைவேந்தரின் குரல் மிக விநோதமாகவே ஒலிக்கிறது.
மே 11, 2007
இந்திய, மேற்கத்திய ஓவியங்களில் பாலியல் சித்தரிப்பு தொடர்பான ஓவியக் கண்காட்சிக்குத் திட்டமிடப்பட்டு மாணவர்களால் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மதியம் 3 மணியளவில் கண்காட்சி தயாராக இருக்கிறது. பலர் வந்து பார்வை யிட்டு செல்கின்றனர். நிலைமை மிகவும் மோசமாகவும் பரபரப்பாகவும் மாற ஆசிரியர்கள் மட்டும் வளாகத்தை விட்டு வெளியேறலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் செய்தியாளர்களில் ஒருபகுதியினர் அதற்கு அனு மதிக்கவில்லை. ஆகவே ஆசிரியர்கள் கலை-வரலாறு துறையின் உள்ளே நுழைந்து கதவை தாழிட்டுக் கொள்கின்றனர். துணைப்பதிவாளர் 4 மணிக்கு வந்து கண் காட்சியை மூடச்சொல்லி வேண்டுகோள் விடுக்கிறார். “அமைதியான முறையில் மாணவர்கள் தம் எதிர்ப்பை ஓவியங்கள் மூலம் காண்பிக்கிறார்கள். இது அவர்கள் முடிவு. இதை நான் மூட முடியாது” என மறுக்கிறார் சிவாஜி பணிக்கர். கண்காட்சியை மூட எழுத்துவழி உத்தரவு துறைத்தலைவருக்கும் பிற ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் கண்காட்சி தொடர்கிறது.
பிறகு முன்னாள் துணைவேந்தர் பல்கலைக்கழக சிண்டி கேட் உறுப்பினர்கள் சிலரோடு வந்து, சிவாஜி பணிக்கரை கண்காட்சியை மூடச்சொல்லி முதலில் வேண்டுகோள் விடுத்து பின்னர் கட்டளையிடுகின்றனர். பணிக்கர் தங்க ளுக்கு வளைந்து கொடுக்கமாட்டார் என உறுதியான பின் கண்காட்சி பலவந்தமாக இழுத்து மூடப்படுகிறது. “எத்தனையோ முறை கோரியும் இதுவரை எவ்வித உதவி யும் மாணவர்களுக்குக் கிடைக்காதபோது பல்கலைக் கழக நிர்வாகத்தின் எந்த செயலுக்கான நோக்கமும் நல்ல தாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்? ஆகவே நான் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கே துணைநிற்பேன்” என்கிறார் பணிக்கர். கண்காட்சி மூடப்பட்டு விடுகிறது. இப்போது கண்காட்சியைப் பார்க்க வந்த பாஜகவினர் சிலரின் நடவடிக்கையும் பேச்சும் காது கூசும்படி அமைந்திருக்கிறது. எந்த அளவிற்கென்றால் சில ஆசிரியைகளை நோக்கி “நாங்கள் உங்கள் நிர்வாண ஓவியங்களை இந்த சுவற்றில் பார்க்க விரும்புகிறோம்!” என்று சொல்லும் அளவிற்கு.
இரவு 10 மணிக்கு சிவாஜி பணிக்கரின் இல்லத்தின் வாசலில் தற்காலிக பதவி நீக்க அறிவிப்பு ஒட்டப்படுகிறது. நீக்கத்திற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்பட வில்லை. உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி மஹேஸ்வரி என்ற மற்றொரு துறையின் தலைவர் நுண்கலைத் துறைக்கு பொறுப்பாக்கப்பட்டிருக்கிறார். (ஆசிரியர்கள் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து பல்கலைக் கழகத்திற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.)
மே 12, 2007
மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தியா முழுவதிலும் கலைஞர்கள் வெவ்வேறு வடிவங்களில் மதவெறிக்கு எதிர்ப்பைத் தெரிவித்து, கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்குகின்றனர்....
அதேசமயம், பரோடாவில் விசுவ இந்து பரிஷத்தோடு சேர்ந்து கிறித்துவ பாதிரிகளும் எதிர்ப்பு நடவடிக்கை களில் இறங்கினர். உருப்படியான காரணங்களுக்காக இருதுருவங்கள் ஒன்று சேர்ந்தால் பாராட்டலாம். இங்கே இவர்கள் ஒன்று சேர்ந்திருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அல்லவா? சிலுவையையும், இயேசுவையும் அவமானப்படுத்திவிட்டதாம் ஓவியம். சிவனும் பார்வதியும் அணைத்தபடி இருக்கும் ஓவியம் இந்துக் கடவுளர்களை இழிவுபடுத்திவிட்டதாம். இவர்கள் கஜூராஹோ கோயில் சிற்பங்களைப் பார்த்தேயில்லையா? அஜந்தா ஓவியங்களைப் பார்த்ததில்லையா? இவ்வளவு ஏன்? வாத்ஸாயனரின் காமசூத்திரத்தை கிழித்தெறிந்தா விட்டார்கள்?
ஒரு மாணவன் வரைந்த ஒரு ஓவியத்தால் அவமானப்படும் அளவுக்கு சக்தி குறைந்தவையா சிலுவையும், இயேசுவும், இந்து மதக் கடவுளர்களும்? இட்டுக்கட்டிய புராணம் சொல்கிறதே சிவனுக்கும் பார்வதிக்கும் இரண்டு பிள்ளைகள் இருந்ததாக! அவர்கள் என்ன டெஸ்ட் டியூப் முறையிலா முருகனையும், விநாயகனையும் பெற்றார்கள்? முருகனை அங்கம் அங்கமாக வர்ணிக்கும் கந்தசஷ்டி கவசத்தின் பொருள் தெரியாமலேயே பாடிக்கொண்டு திரிபவர்கள் இவர்கள். இவர்கள் விரும்பிப் பார்க்கிற திரைப்படங்களில்தான் எத்தனை ஆபாசக் குப்பைகள் வருகின்றன. அவற்றுக்கெல்லாம் எதிராகப் போராடினார்களா? இல்லையே! கலாச்சாரப் பாதுகாவலர்கள் என்று தங்களைத் தாங்களே பறை சாற்றிக் கொண்டு செய்யும் அபத்தங்களும், அத்துமீறல்களும் எல்லையற்றுப் போய்விட்டன.
திரைப்பட ஆபாசக் குப்பைகளை விட்டுவிட்டு பெரியார் திரைப் படத்தின் ஒரு நாத்திகப் பாடலுக்கு தடை கேட்டு நீதிமன்றம் போகின்றனர். இவர்கள் குஜராத் கலவரங்களின் போது எத்தனை இஸ்லாமியப் பெண்களை வன் புணர்ச்சிக்குள்ளாக்கினர்? அந்தக் காட்சிகளையெல்லம் விடவா இந்த ஓவியங்கள் ஆபாசமாகப் போய்விட்டன? மைக்கேல் ஏஞ்சலோவின் ‘டேவிட்’ ஓவியத்தின் முன் நிற்கும் ஒருவனுக்கு அவனுடைய ஆண்குறி மட்டுமே தெரிந்தால், அது வரைந்த மைக்கேல் ஏஞ்சலோவின் குற்றமல்ல. பார்ப்பவர் கண்களில் இருக்கிறது குற்றம்.
***
பல்கலைக்கழக வளாகத்திற்குள் சந்திரமோகன் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது வெளியாட்களுக்கு எப்படித் தெரியும்? ஆக உள்ளேயே ஏதோ ஒரு கறுப்பு ஆடு இந்த ஓவியங்கள் பற்றி சங்பரிவார் கும்பலுக்கு தகவல் அனுப்பித்தானே அவர்கள் வந்திருப்பார்கள். பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக நடைபெறும் Internal Assessment தேர்விற்காக நடத்தப்படும் கண் காட்சியைப் பற்றி வெளியே தகவல் கொடுத்த புல்லுருவியையும், தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்ய வேண்டிய காவல்துறை சந்திரமோகனை கைது செய்து சிறையிலடைத்தது. நடப்பது நரேந்திர மோடியின் ஆட்சியல்லவா? காட்சிகள் இப்படித்தான் இருக்கும்.
காவல்துறை கண்காணிப்பில் இருந்த சந்திரமோகனுக்காக, துறை ஆசிரியர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தி னரை சந்தித்து சட்ட உதவி வேண்டினர். நிர்வாகமோ சந்திரமோகனும், நுண்கலைத்துறையும் நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றது. இதைத் தொடர்ந்து மாணவர்களும், ஆசிரியர்களும் அவசரக் கூட்டம் நடத்தி உள்ளூர் விஎச்பி குண்டர்களின் மீதும் பாஜகவின் நீரஜ் ஜெயின் மீதும் பல்கலைக்கழகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்க மிட்டனர்.
நடந்ததோ அதற்கு நேர்மாறாக! துணை வேந்தர் மனோஜ் சோனி, நீரஜ் ஜெயினை வெற்றிலை பாக்கு வைக்காத குறையாக வரவேற்று நடந்தவற்றிற்கு வருத்தமும் தெரிவித்தார். நுண்கலைத் துறைத்தலைவர் சிவாஜி பணிக்கர் “பொதுமக்களுக்காக நடத்தப்படாத, பாடத்திட்டத்திற்காக நடத்தப்படும் ஒரு கண்காட்சியில் அந்நியர்கள் எப்படி நுழையலாம்?” என்று கேள்வி எழுப்புகிறார். துணைவேந்தரோ இன்றுவரை பதில் கூற மறுக்கிறார். மாணவனின் கருத்து சுதந்திரத்திற்காக அவரோடு தோள்கொடுத்த சிவாஜி பணிக்கர் மீது அடுத்த குறி பாய, அவர் தலைமறைவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சந்திரமோகன் மீது 153, 114, 295ஏ, 295பி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. அவரை ஜாமீனிலும் விடவில்லை. 295ஏ- மதவுணர்வை புண்படுத்தியதற்காக, 153பி- தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டதற்காக.
இந்த கல்லூரி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உயர்ந்த படைப்பாற்றலுக்கும், தரத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் பேர்போனது. 50களில் இதன் முதல் துணைவேந்தராக இருந்த வரன்ஸா மேத்தாவிலிருந்து 80களில் இருந்த பிக்கு பரேக் வரை கொள்கைகளுக்காக துணைநின்றனர். இப்போதைய நிகழ்வுகளை உற்று நோக்கினால் அரும் பாடுபட்டு முன்னோர்களால் கட்டிக் காப்பாற்றப்பட்ட பெருமையை காற்றில் பறக்கவிட்டுள்ளது நிர்வாகம் என்பது விளங்கும்.
நிர்வாகம் அழைக்காமல் காவல்துறை கல்வி நிறுவனத் திற்குள் வரக்கூடாது என்கிறது சட்டம். காவல்துறையோ “சில அசாதாரண சூழ்நிலைமைகளில் யாரும் அழைக்காமலேயே நாங்கள் வரலாம்” என்கின்றது. அங்கே அமைதியாக நடந்திருக்க வேண்டிய தேர்வினை குலைத்து அசாதாரண சூழலை உருவாக்கிய சங்பரிவார் கும்பலையல்லவா கைது செய்திருக்க வேண்டும்? அதை விடுத்து ஓவியம் வரைந்த மாணவனை அல்லவா கைது செய்திருக்கிறது? மோடியின் காவல் துறை ஆணையர் தாக்கூரோ “மாணவர்களோ ஆசிரியர்களோ நீரஜ் ஜெயின் மீது புகார் தர முயலவில்லை. யாரும் தாக்கப்படவில்லை. சந்திர மோகனின் ஓவியங்கள் ஆபாசமாக இருந்ததால் கைது செய்தோம். ஆனால் துன்புறுத்தவில்லை. மோசமாக நடத்தவில்லை” என்றார்.
ஆனால் மாணவர்களும் ஆசிரியர்களும் கையெழுத்திட்டு அவருக்கு அனுப்பிய புகார் மனுவின் நகலை ஊடகங்களுக்கும் அனுப்பி, அதில் வெளியாகிவிட ஆணையரின் புளுகுமூட்டை அவிழ்ந்துபோனது. பல்கலைக்கழக தேர்வை குலைத்தது வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, சந்திரமோகனை தாக்கியது, குண்டர்களை உசுப்பேற்றி பல்கலைக்கழக சொத்துக்களை சேதப்படுத்த தூண்டியது ஆகிய குற்றங்களுக்காக நீரஜ் ஜெயின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.
***
சமீபகாலம் வரை சிவாஜி பணிக்கர் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இச்சம்பவத்திற்குப் பின் அவர் வாழ்க்கை நேர்மாறாக மாறிவிட்டது. இந்திய சிற்பக்கலை, ஓவியக்கலை பற்றிய அவரது நூல்கள் மிக முக்கியமானவை. உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது வசிக்கும் அவருடைய பழைய மாணவர்கள் அவருக்கு நேர்ந்த கதியைப் பார்த்து அதிர்ந்துபோய் ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர். கல்வித்துறை மற்றும் கலைத்துறையின் போராட்டச் சின்னமாக அவர் தற்போது அறியப்படுகிறார். பஜ்ரங்தள் குறிவைத்துள்ள தால் அவர் தலைமறைவாய் இருக்க வேண்டியதாயிற்று. 06.07.2007 அன்று பள்ளிக் குழந்தைகளின் தேசிய ஓவியக் கண்காட்சியைத் தொடங்கிவைக்க ஆமதாபாத் வந்த பணிக்கரையும் அவரது ஓட்டுநரையும் கடுமையாக தாக்கிய சங்பரிவார் வெறியர்கள் அவரது காரையும் சேதப் படுத்தியுள்ளனர். ( தி இந்து 07.07.07)
தனது மாணவன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர் கூறியது: “இது ஒரு தனிமனிதனின் பிரச்னை அல்ல. கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் சுதந்திரம் தொடர்பான மிக இன்றியமையாத பிரச்னை இது. தன்னாட்சியையும், சுதந்திரத்தையும் யாரோ பறித்துக் கொண்டு போய்விட நாங்கள் அனுமதிக்க முடியாது.”
அவர் தனிமனிதரல்ல. குஜராத்தின் அறிவு ஜீவிகள் என கூறிக் கொள்பவர்கள் பழமைவாதிகளாய் இருப்பதையும், கல்வி காவியமாக்கப்படுவதையும் எதிர்க்கும் பல கல்வியாளர்கள் அவருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.“
பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டு அமர்த்தப்பட்டவர்கள். அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.க்கு மிக மிக விசுவாசமாக இருக்கின்றனர். இங்கே அறிவு வறுமை காணப்படுகிறது.
விவேகம் குறைந்து வருகிறது” என்கிறார் நூலாசிரியர் மற்றும் சமூகவியலாளரான அக்யூட் யாக்னிக். “இலக்கிய அமைப்பான குஜராத்தி சாகித்திய பரிஷத் 2002ம் ஆண்டு கலவரங்களின் போதும், சூ•பி கவிஞரான வலிகுஜராத்தியின் கல்லறை போன்ற கலாச்சார சின்னங்கள் தகர்க்கப்பட்டபோதும் அமைதி காத்தே இருந்தது. வகுப்புவாதத்திற்கெதிராக கணேஷ் டேவி பேசியபோது அவரை புறக்கணித்தது அந்த அமைப்பு. குஜராத்தின் ஊடகங்கள் கூட இந்துத்துவா விற்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. ஆகவே அறிவுத் துறையில் எல்லா முனைகளிலும் வெற்றிடமே உள்ளது. இங்கு விவாதங்களே இல்லை” என்கிறார்.
“குஜராத்தில் சகிப்புத்தன்மையின்மையும் இந்துமத வெறியும் கூடுதலாக இருக்கின்றன. காந்தியை குஜராத் மக்கள் மறந்துவிட்டனர். பொருளாசை கொண்டவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் மாறிவிட்டனர்” என்று டெஹல்காவுக்கு அளித்த பேட்டியில் குறிப் பிட்டார் என்பதற்காக டேவியை அவர் சார்ந்துள்ள குஜராத்தி சாகித்ய பரிஷத் அமைப்பினரே அவரை “குஜராத்தின் எதிரி” என்றழைத்து தேஜ்கட்டில் அவரது நிறுவனத்தில் நடக்கவிருந்த அமைப்பின் மாநாட்டை வேறு இடத்திற்கு மாற்றினர். “அவர்கள் எப்போது என்னை புறக்கணிக்கின்றனரோ அப்போது நான் கூறியவை உண்மை என்று நிரூபிக்கின்றனர். பரிஷத்தின் தலைவர் மாரடைப்பால் காலமானபோது செய்தித்தாள்களில் அவரது மரணத்திற்கு நான்தான் காரணம் என செய்திகள் வந்தன.
இதுபற்றி அமைப்பின் குமார் பால் தேசாயிடம் விசாரித்தபோது கருத்து கூற மறுத்து விட் டார். மாநிலத்தில் நடப்பவை சுத்த பைத்தியக்காரத் தனமாகவும், அச்சமூட்டுபவையாகவும் உள்ளன. நான் மாநிலத்தில் எல்லோரையும் குறை சொல்லவில்லை. பொதுவாக இருக்கும் நிலைமையைக் கூறுகிறேன். என்னை ஆதரிக்கவும் இங்கே சிலர் உள்ளனர். ஆனால் பரந்து நோக்கினால் நிலைமை அச்சமூட்டுவதாக இருக்கி றது. யாவரும் சொல்வதுபோல் குஜராத், இந்துத்துவா சோதனைச்சாலை அல்ல. இது இந்துத்வா தொழிற் சாலை,” என்கிறார் டேவி.
வடோதரா குஜராத்தின் கலாச்சார தலைநகரம் என பெயர் பெற்றது. அதன் மணிமகுடமாய் நிகழ்ந்து வந்தது எம்.எஸ். பல்கலைக்கழகம். வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருந்து நிறைய மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பார்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக, வெளிநாட்டு மாணவர் களுக்கான சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது.
“என் மாணவப் பருவம் பலநாட்டு மாணவர்களுடனான அறிமுகத்தில் தொடங்கி, அவர்களோடு வாழ்ந்து, மிகச் சிறப்பானதாக இருந்தது. ஆனால் நான் பல்கலைக்கழகத்திலிருந்து படிப்பை முடித்து வெளியேறும் சமயம் வெளி நாட்டு மாணவர்களுக்குத் தடைவந்தது. பொதுவாக ஒரு காரணமில்லாத வெறுப்பு அம்மாணவர்கள் மீது பலருக்கு இருந்தது. அவர்களால் உள்ளூர் மாணவர்கள் சேர்க்கை இடங்களை இழக்கிறார்கள் என்ற உணர்வோடும் சகிப்புத்தன்மையில்லாமலும் இங்கு பலருள்ளனர்,” என்கிறார் பழைய மாணவர் ஒருவர்.
80களில் பரிவாரத்தின் பல்வேறு கிளைகள் மாநிலத்தில் ஆக்டோபஸ் கரங்களை நீட்டிப் பரவின. இன்று வேலைகளைக் காட்ட சங்பரிவாரம் அன்றே தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்திருக்கிறது. குஜராத்தில் மிகக் குறைந்த பல்கலைக்கழகங்களே உள்ளன. “பல்கலைக் கழகங்களுக்கு காவிமயமானவர்களால் பெருத்த ஆபத்து விளைவிக்கப்பட்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் தொடர்புள் ளோர் என்ற ஒரே காரணத்திற்காக உயர் பதவிகளில் தகுதியற்றோர் நியமிக்கப்படுகின்றனர். அதனால் தரம் கெடுகிறது. ஆர்.எஸ்.எஸ். தனக்குப் பிடிக்காத எதையும் காலில் போட்டு மிதிக்கவே முயலும். சில ஆசிரியர்கள் குறிப்புணர்ந்து பாதுகாப்பாக வளைந்து கொடுத்து நடந்து கொள்கின்றனர்,” என்கிறார் கலவரங்களின் போது இரு முறை தாக்கப்பட்ட சமூக ஆர்வலரும் இயற்பியலாளருமான கே. பந்துக்வாலா.
வகுப்புவாதத்திற்கெதிரான சுவரொட்டிகளைத் தயாரித் ததற்காக 1990களின் ஆரம்பத்திலேயே எம்.எஸ். பல் கலைக்கழகத்தின் மிகச்சிறந்த ஓவியர் குலாம் முகமது ஷேக், தனது சகாக்களாலேயே எதிர்க்கப்பட்டு பணியை விட்டு விலகிக் கொண்டார். “அவர் சென்றது ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு- எங்கள் துறைக்கு” என்கிறார் பணிக்கர். “நிலைமை இப்படியே தொடர்ந்தால் எங்கள் பாடத்திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியான நிர்வாண ஓவியங்கள் வரைதல் என்பதையே நீக்கச் சொல்வார்கள். நாங்கள் அதற்கு எப்படி ஒத்துக்கொள்ள முடியும்,?” என்கிறார்.
எம்.எஸ். பல்கலைக்கழகம் மிகச் சுதந்திரமானதாக ஒரு காலத்தில் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக காவிமய மாக்கப்பட்டு இன்று விஎச்பி செலவில் வளாகத்திலேயே பூஜைகள் நடத்தப்படுகிறது. பாஜக மாணவர் அணியினர் மாணவிகளுக்கு இந்திய உடையையே அணியவேண்டும் என கட்டளையிடுகிறார்கள்.“
2002ம் ஆண்டின் படுகொலைகளுக்கெதிராக குரல் கொடுத்த எந்த ஒரு ஆசிரியருக்கும் பதவி உயர்வு இது வரை அளிக்கப்படவில்லை. தற்போது கூட உயர்ந்த தகுதிகளைக் கொண்ட ஒரு ஆசிரியருக்கு பேராசிரியர் பதவி மறுக்கப்பட்டது. இதுபோன்று அடிக்கடி நிகழும்,” என்கிறார் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர். வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் மதவெறி எப்படியெல்லாம் புகுத்தப்படுகிறது என்பதை ஆராய்ந்த ஒரு ஆசிரியைக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டு அவரும் பணியிலிருந்து விலகிவிட்டார்.“
சிறையிலடைக்கப்பட்ட தங்கள் மாணவனை மீட்க பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டபோதும் அமைதி காத்தது. நான் இன்றே பணிவிலகல் கடிதம் கொடுத்துவிட்டு விலகிப்போய் விடலாம் ஆனால் இந்த கல்வி நிறுவனத்திற்கு நாளை என்ன நடக்கும்?” _என்று வினவுகிறார்
பணிக்கர்.சந்திரமோகன் ஸ்ரீலமன்துலா மட்டுமே இந்த ஆண்டு லலித்கலா தேசிய அகடமி விருது பெற்ற மாணவர். ஆந்திர மாநிலம் மதனப்பள்ளிக்கு அருகே உள்ள முலுகு கிராமத்தில் தச்சர் குடும்பத்தில் பிறந்தவர். 2004-05ல் ஜே.என்.டி.யு கல்லூரியில் நுண்கலை பயின்று முதுகலைக்காக இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவரோடு இளங்கலை பயின்ற ஆத்ரஸ் பாஜி சம்பவம் நடந்த அன்று சந்திரமோகனோடு இருந்திருக்கிறார். “நான் எதை ஓவியமாக்க வேண்டும் என நினைத்தேனோ அதை வரைந்தேன். அவ்வளவுதான்.”- சந்திரமோகன் தன் ஓவியம் சிதைக்கப்படுவதற்கு முன் கூறியவார்த்தைகள் இவை.
அவர் இளங்கலை பயின்ற கல்லூரியில் அவரை மிகவும் அமைதியானவர் என்கின்றனர். “அவர் இங்கே பயிலும் போது இப்படியெல்லாம் வரையவேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தியதேயில்லை. இங்கே மாணவர்கள் கொடுக்கப்படும் கருத்தை மையமாக வைத்தே வரைய வேண்டும். ஆனால் முதுகலை பயில்கையில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த அதிக சுதந்திரம் கிடைக்கிறது” என்கிறார் சந்திரமோகனின் பேராசிரியர் ஒருவர்.
சந்திரமோகன் தனது ஓவியங்களுக்காகவும், கண்காட்சிக்காகவும் பெருந்தொகை செலவிட்டுள்ளார். இவ்வளவு விலைகொடுத்து அவர் பெற்றது சங்பரிவாரத்தின் அடி உதைகளும் 21 வழக்குகளும் 6 நாள் சிறை வாசமும்தான்.
தன் மகனை சிறையிலடைத்ததையோ, நாடு முழுவதும் இந்தப் பிரச்சனை பெரிதாக பேசப்படுவதையோ எதையும் அறியாமல் சந்திரமோகனின் பெற்றோர் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தரும் செய்தி.

Saturday, June 14, 2008

எத்தனை எத்தனை என்.ஜி.ஒ-க்கள்?

- கவின் மலர் (நன்றி : தீக்கதிர்)

தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஒ) தொடங்குவது குறித்த வழிமுறைகளை விளக்குவதற்கான ஒரு பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அங்கே கிடைத்த தகவல்கள் மிக பயனுள்ளதாக இருந்ததோடு பகிர்ந்து கொள்ள வேண்டியதாகவும் இருந்தது.

நம்புங்கள்! இன்னும் கொஞ்ச நாளில் தடுக்கி விழுந்தால் ஒரு என்.ஜி.ஒ அமைப்பின் அலுவலகத்தில்தான் விழவேண்டி வரும். நாட்டில் அத்தனை என்.ஜி.ஒ க்கள் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 1,94,00,000 என்.ஜி.ஒ க்கள் உள்ளன. சென்னை நகரில் மட்டும் 18,000 என்.ஜி.ஒ க்கள் செயல்படுகின்றன. அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் இந்தியாவில் நிகழ்ந்ததால் இத்தனை நிறுவனங்கள் தோன்றினவா? இதுவும் ஒரு காரணம்தான் என்றாலும் உண்மையான நிலையை பார்த்தால் வேறு மாதிரி இருக்கிறது. எல்லா கோயில்களும், சர்ச்சுகளும், மசூதிகளும்,குருத்வாராக்களும் என்.ஜி.ஒ வாகவே பதிவு செய்யபடுகின்றன. விளையாட்டு தொடர்பான நிறுவனங்களும் அப்படித்தான். இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு என்.ஜி.ஒ என்பது நிறைய பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஏன்? கல்வி நிறுவனங்களும் சுய உதவி குழுக்களும்தான்!

ஒத்த கருத்துடைய, தொண்டு செய்ய அக்கறை கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் இணைந்து என்.ஜி.ஒ தொடங்கலாம். ஒருவர் மட்டும் கூட ஒரு என்.ஜி.ஒ நடத்தலாம். பதிவு செய்யலாம். செய்யாமலும் விடலாம். மேற்சொன்னவை எல்லாம் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. நாட்டில் பதிவு செய்யாமல் எத்தனை இருக்கிறதோ தெரியவில்லை. வெளிநாடுகளில் இருந்து நிதி நன்கொடை பெறவேண்டுமானால் அந்த என்.ஜி.ஒ கட்டாயம் பதிவு செய்யபட்டிருக்க வேண்டும். அதோடு மத்திய அரசின் அனுமதி பெற்று மட்டுமே பெற வேண்டும். ஆண்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற்றால் இந்திய அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும். இத்தனை விதிகள் இருந்தாலும் வரும் நிதி சரியாக பயனாளிகளுக்கு போய்ச்சேர்கிறதா என சரி பார்க்கும் வழிமுறைகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன. சுனாமிக்கு மட்டும் இந்தியாவுக்கு வந்த நிதி எக்கச்சக்கம். ஆனால் நாம் நடந்தவற்றை கண்கூடாக கண்டோம்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ள மாநிலங்கள் குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம். முதல் இரண்டு மாநிலங்களில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் நிறைய நிறுவனங்கள் தோன்றியிருக்கலாம்;தமிழ்நாட்டில் சுனாமிக்கு பிறகு புற்றீசல் போல் அவை முளைததை கண்ணால் கண்டதால் அதிலும் சந்தேகமில்லை; மேற்கு வங்கத்தில் எப்படி என்ற கேள்வி குடைந்து எடுக்க பயிற்சியாளரிடம் என் சந்தேகத்தை கேட்க அவர் கூறிய பதில் - "மேற்கு வங்கத்தில் சிந்திப்பவர்களும் சமூக அக்கறை கொண்டவர்களும் அதிகம்".

பொதுவாக முதியோர் நலம், விவசாயம், குழந்தைகள், உடல் ஊனம், பேரழிவு மேலாண்மை, கல்வி, சுற்றுசூழல், சுகாதாரம், எச்.ஐ. வி/எய்ட்ஸ், வீடுகட்டுதல், குறுங்கடன், மக்கள் தொகை பெருக்கம், வறுமை, கிராமப்புற மேம்பாடு, பழங்குடியினர், தண்ணீர், பெண்கள் போன்ற விஷயங்களை கையில் எடுத்து இந்நிறுவனங்கள் செயல்படுவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அரவாணிகள் மத்தியில் செயல்படும் என்.ஜி.ஒ க்கள் ஒன்றிரண்டு மட்டுமே.

இந்நிறுவனங்கள் அனைத்திலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் ஆண்களே இருக்கின்றனர் என்றது புள்ளி விவரம். ஆனால் என்.ஜி.ஒ க்களில் கீழ்மட்டத்தில் பணிபுரிபவர்களில் பெண்களே அதிகமாக ஏன் இருக்கின்றனர் என்ற என் கேள்விக்கு "பெண்கள்தான் குறைந்த ஊதியத்தில் கூட மனநிறைவோடு பணிபுரிய முடியும்." என்ற பதில் கிடைத்தது. ஊதியமே பெறாமல் வீட்டில் அத்தனை வேலைகளையும் ஒரு வேலைக்காரியை போல் செய்யும் பெண்களுக்கு எதோ கொஞ்சம் கொடுத்தால் கூட அந்த பணம் அவர்களுக்கு பெரிதாக தெரிகிறது. பொது துறையோ, தனியார்த்துறையோ, மூன்றாம் துறை என்றழைக்கப்படும் இந்த துறையோ எதுவாக இருந்தாலும் அங்கே அவர்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்பட முடியுமோ அப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது. கீழ்மட்டத்தில் மட்டும் ஏன் பெண்கள் அதிகமிருக்கின்றனர் என்ற என் கேள்வியை நான் கேட்டதும் அங்கே பட்டறைக்கு வந்திருந்த ஒருவர் எனக்கு பெண்ணியவாதி என்று பெயரிட்டார். ஏன் என்று கேள்வி கேட்டாலே அவர்களுக்கு பெண்ணியவாதி என்று பெயரிடும் ஒரு சமூக கட்டமைப்பில் வாழ்கிறோம் என்ற உண்மை கசப்பாக கண் முன் நிற்கிறது. ஆக ஒரு சராசரி பெண் இவ்வகை கேள்வி கேட்க விழைய மாட்டாள், கேட்க கூடாது என்ற பொது புத்தியில் இருந்து அந்த ஆண்மகன் எனக்கு பெண்ணியவாதி என பெயரிட்டார்.

இன்னும் ஒருவர் "முதியோர், பெண்கள், குழந்தைகள் என அத்தனை பேர் மத்தியிலும் செயல்படும் என்.ஜி.ஒ க்கள் இருக்கையில் ஆண்களுக்கான என்.ஜி.ஒ எதாவது இருக்கிறதா?" என்றார். "ஆண்களுக்கு பொதுவாக என்ன பிரச்சனை இருக்கிறது? அவர்களுக்காக என்.ஜி.ஒ செயல்பட?" என்று நான் கேட்க, "நான் சொல்லலை? அவங்க பெண்ணியவாதின்னு" என்றார் முதலாமவர் மீண்டும். ஆண்களுக்கான சுய உதவி குழுக்கள் மட்டும் இருக்கின்றன என்றார் பயிற்சியாளர்.

சட்டப்படி என்.ஜி.ஒ க்கள் தொடங்கப்படும்போதே அதன் குறிக்கோள்களும், செயல்பட போகும் தளத்தையும் நிர்ணயிக்க வேண்டும். ஆனால்,சில என்.ஜி.ஒ க்கள் சீசனுக்கு தகுந்த மாதிரி குறிக்கோள்களை மாற்றி கொள்வது எப்படி? உதாரணமாக பெண்களுக்காக என ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் காலப்போக்கில் திடீரென மீனவர்களுக்கான நிறுவனமாக செயல்பட்டது. பின் சேது சமுத்திர திட்ட எதிர்ப்பு இயக்கம் நடத்தியது. இது எப்படி என்ற என் கேள்விக்கு கிடைத்த பதில் இது. - "'குறிக்கோள்களை குறிப்பிடும்போது பிரச்சனையில் உள்ளவர்களுக்காக இந்நிறுவனம் தொடங்கப்படுகிறது' என ஒரு வரியை சேர்த்து விட்டால் பிரச்சனை தீர்ந்தது. அந்த நேரத்தில் அந்த பிரச்சனை இருந்தது. அதனால் நாங்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்தோம் என்று சொல்லிக்கொள்ளலாம்."

இன்னொரு நபர், தான் ஒரு என்.ஜி.ஒ நடத்துவதாகவும் அதில் அரசாங்க அலுவலகங்களிலும் இன்ன பிற இடங்களிலும் லஞ்சம் வாங்குபவர்களை கையோடு பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பதாகவும், வடசென்னையில் செயல்படுவதாகவும், விருப்பபட்டால் தென்சென்னை ஏரியாவுக்கும் தன் சேவையை விரிவுப்படுத்துவதாகவும் கூறி எல்லோருக்கும் தன் விசிடிங் கார்டை கொடுத்தார். பார்த்தும் சிரிப்பு தாங்கவில்லை. அவர் காங்கிரஸ்காரர் என்று காட்டி கொடுத்தது அது.

சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் செயல்பட இந்தியாவில் உள்ள என்.ஜி.ஒ க்கள், தங்கள் மாதிரியாக கொண்டிருப்பது அறிவியல் இயக்கத்தை தான் என்றார் பயிற்சியாளர். இதுவரை செயல்பட்ட, செயல்பட்டுக்கொண்டிருக்கும் என்.ஜி.ஒ க்களுக்கு புரியாத புதிராக இருப்பது ஒரே ஒரு விஷயம் தான். ஊதியம் கூட இல்லாமல் தன்னார்வ தொண்டர்களை கொண்டு மட்டுமே அறிவொளி இயக்கத்தால் எப்படி இத்தனை சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற முடிந்தது என்பதே அது என்றார் பயிற்சியாளர். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் அவ்வளவு பெரிய அளவிலும், சிறப்பாகவும் வெற்றி பெற எந்த என்.ஜி.ஒ வாலும் முடியவில்லை என்றார்.

"நமக்கு நன்கொடை அனுப்புவதால் வெளிநாடுகளுக்கு என்ன லாபம்?" என்று ஒருவர் எழுப்பிய கேள்விக்கான பதில் மிக முக்கியமானது. "எந்த நாட்டிலிருந்து பணம் வந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. சந்தேகப்பட வேண்டியதில்லை. அமெரிக்காவிலிருந்து வந்தால் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தனக்கு லாபம் இல்லாமல் அமெரிக்கா ஒரு டாலர் கூட வீணாக்காது. இந்தியாவை அவர்களின் சந்தையாக மாற்றுவதற்காகவே, அவர்களின் பொருட்களை இங்கே கொண்டு வந்து விற்கும் நோக்கத்தில் தான் அமெரிக்கா இங்கே உள்ள என்.ஜி.ஒ க்களுக்கு நன்கொடை அனுப்புகிறது. உதாரணமாக திருநெல்வேலி பகுதியில் கோகோகோலா நிறுவனம் அங்கே உள்ள மக்களுக்கு தொண்டு செய்கிறேன் என்று கூறிக்கொண்டு வந்தது. இதற்குப் பின்னே அந்நிறுவனத்தின் தண்ணீர் தேவை இருந்தது. அங்கே தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க பொதுமக்களை தாஜா செய்து நல்ல பெயர் எடுத்து நைசாக தண்ணீர் எடுக்க முயற்சி செய்தது. இது ஒரு உதாரணம் தான். இன்னும் நிறைய இருக்கின்றன. அமெரிக்கா நிறுவனங்களிடம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நாம் ஏமாந்து போவோம். "

நான் பயிற்சி பட்டறையில் எழுப்பிய இரண்டு கேள்விகளுள் ஒரு கேள்விக்கு சரியான பதில் வரவில்லை. ஒரு கேள்விக்கு மிக சரியான பதில் வந்தது.

பதில் வராத கேள்வி : "அரசாங்கம் செய்ய வேண்டிய விஷயங்களை என்.ஜி.ஒ க்கள் செய்வதன் மூலம் அரசாங்கம் அதன் கடமையை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எனக்கு என்.ஜி.ஒ செய்யும். எனக்கு தேவையானது கிடைத்தால் போதும் என்ற மனநிலையை மக்களிடையே என்.ஜி.ஒ க்கள் வளர்க்கின்றன.அவனது போராட்ட உணர்வை மங்க செய்து, அதன் மூலம் அரசாங்கத்தை கேள்வி கேட்க விடாமல் செய்வது எந்த வகை நியாயம்?"

பதில் வந்த கேள்வி: "இத்தனை பிரச்சனைகளை கையில் எடுத்து கொண்டு செயல்படும் என்.ஜி.ஒ க்கள் இருக்கின்றன. தலித்கள் பிரச்னையை கையில் எடுத்துக்கொண்டு செயல்படும் என்.ஜி.ஒ எதாவது ஒன்று சொல்லுங்கள்!!"

பதில் : "எல்லா என்.ஜி.ஒ. க்களும் பெரும்பாலும் தலித்கள் மத்தியில்தான் செயல்படுகின்றன. அவர்கள்தான் திறந்த மனதுடன் இருக்கிறார்கள். "

நான் எழுப்பிய துணை கேள்வி: "தலித்கள் மத்தியில் செயல்படுவது,. என்.ஜி.ஒ க்கள் தலித் பகுதிக்கு சென்று அவர்களுக்கு தேவையானதை செய்வது வேறு. ஆதிக்க சாதியினரால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக செயல்படுவது வேறு. அப்படி செயல்படும் என்.ஜி.ஒ இருக்கிறதா?"

பதில்: "இல்லை. அப்படி ஒரு என்.ஜி.ஒ இருந்தால், நன்கொடை தர யாரும் முன்வர மாட்டார்கள்."