தமிழில்: சண்முகராஜ் & கவின்மலர்.
(நன்றி : புதுவிசை)
கியூபாவில் பாடிஸ்டா சர்வாதிகாரத்திற்கு எதிராக அம்மக்கள் ஆயுதப்புரட்சியின் மூலம் பெற்ற வெற்றியானது சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளைப் போல கதாநாயகத்தன்மைக்கு கிடைத்த வெற்றி அல்ல. லத்தீன் அமெரிக்க மக்களின், மறுக்கப்படக்கூடாது என கூறப்பட்ட பழமைவாத கொள்கைகளையும் உடைத்தெறிந்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எதைக் காட்டுகிறதென்றால், ஒடுக்கப்பட்ட மக்கள் விழித்தெழுந்து ஒருநாள் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்வார்கள் என்பதைத்தான். அது கொரில்லாப் போர்முறையின் மூலமாகக்கூட இருக்கலாம்.
கியூபப் புரட்சியானது புரட்சி இயக்கங்களை நடத்துவதற்கு மூன்று முக்கிய அடிப்படைப் பாடங்களை அளித்துள்ளதாக நாம் கருதலாம். அவை:
(1) மக்கள் படையானது போரில் ராணுவத்தை வெற்றி கொள்ள முடியும்.
(2) புரட்சிக்கான அனைத்துக்கூறுகளும் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. புரட்சி தானாகவே அவைகளை உருவாக்கும்.
(3) அமெரிக்கக் கண்டத்தில் வளர்ச்சியடையாத பகுதிகளில் கிராமப்புறங்களே ஆயுதப் போருக்கு ஏற்றவை.
தோல்வியையே எதிர்பார்க்கும் சிலரின் மனநிலை அல்லது தங்களை ஏதோ ஒரு சக்தி செலுத்தும் என்று பாசாங்காக எண்ணிக் கொண்டு அடக்குமுறை ராணுவத்திற்கு எதிராக எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போலியான புரட்சியாளர்களின் மனநிலை - மேற்கூறியவற்றில் முதல் இரண்டு கூற்றுகளும் இவர்களுக்கு எதிரானவை. இப்பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும்வரை க்யூபாவில் முதலில் இவை பெரும் விவாதத்துக்கு உள்ளாகின. தற்போது அமெரிக்கா முழுவதும் இவை விவாதப் பொருளாகியுள்ளது. இயற்கையாக, கொரில்லா நடவடிக்கையின் மூலம் மக்களின் உணர்ச்சிவேகத்தை அதிகப்படுத்துவதால் மட்டும் புரட்சி உருவாகிவிடாது. அடிமட்ட மக்களை ஒன்று திரட்டுதல் என்பது ஓர் இயக்கத்திற்கு மிகவும் அவசியம் என்பதை நாம் எப்பொழுதும் மனதில் கொள்ளவேண்டும். சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை உள் விவாதங்களாக நடத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை மக்கள் இனங்காண வேண்டும். அடக்குமுறை சக்திகள் பொதுவான சட்டத்திட்டங்களுக்கு எதிராக தங்களை ஆட்சி அதிகாரத்தில் நிலைநிறுத்திக் கொள்ளுமானால், அங்கு அமைதி என்பது ஏற்கனவே முறிந்ததாக கருதப்படுகிறது.
இச்சூழ்நிலையில் மக்களின் அதிருப்தி வெகுவேகமாக ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிப்படும். ஆள்வோரின் நடவடிக்கைகளால் மக்களின் உணர்வானது கொஞ்சம் கொஞ்சமாக யுத்தத்திற்கு தயாராகும். அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் வாக்குரிமையை உண்மையாகவோ கள்ளத்தனமாகவோ பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பூர்வமான அரசியலமைப்பு இருக்குமானால் கொரில்லா போர் வெடிப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. ஏனெனில் அமைதியான முறையில் போராடுவதற்கான இடம் அங்கே இன்னமும் தீர்ந்து போகாமல் மிச்சமிருக்கும்.
இதில் மூன்றாவது கூற்று, போர் தந்திரங்களைப் பற்றியது. நாம் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், பொதுவாக போராட்டங்கள் நகர்புறங்களை மையமாக வைத்தே நடத்தப்படுகிறது என்று கூறுவோர் வளர்ச்சியடையாத அமெரிக்க கிராமப்புறங்களின் அதிகமான பங்களிப்பை மறந்து விடுகின்றனர். அதற்காக திரட்டப்பட்ட தொழிலாளிகள் வாழும் நகர்ப்புறங்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் அரசியலமைப்பு சட்டங்கள் மறுக்கப்பட்டு அல்லது நிராகரிக்கப் பட்டு இம்மக்கள் ஆயுதப்போராட்டத்திற்கு முன்வருவதற்கான உண்மையான சாத்தியக்கூறுகளை கவனமாக ஆராய வேண்டும். இந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பான தொழிலாளர் இயக்கங்கள் பெரும் ஆபத்துக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. அதனால் இவர்கள் ஆயுதம் தாங்காமல் மிகவும் ரகசியமாக செயல்பட வேண்டும். ஆனால் கிராமப்புறங்களில் அதிக இடைஞ்சல்கள் இருக்காது. இங்கு அடக்கு முறை சக்திகள் கண்காணிப்பதற்கான வாய்ப்பு குறைவு. ஆகவே இங்கு வசிக்கும் மக்களின் ஆதரவை ஆயுத போராளிகள் பெற முடியும்.
க்யூபா ஆயுதப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியின் அனுபவங்களைக் கொண்டு இந்த மூன்று முடிவுகளையும் மிகத் தெளிவாக பின்னர் ஆராயலாம். இவையே நமது அடிப்படை பங்களிப்பு என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்த வேண்டியுள்ளது. கொரில்லாப் போர் என்பது மக்கள் போராட்டங்களின் பல வித தன்மைகளையும் முகங்களையும் கொண்டிருந்தாலும் அடக்குமுறை சக்திகளிடமிருந்து விடுதலை அடைவதே பொதுவான தன்மையாக இருக்கும். போர் என்பது அறிவியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இவ்விதிகளை உதாசீனப்படுத்துபவர்கள் நிச்சயமாக தோல்வியையே தழுவுவார்கள் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். இதையெல்லாம் மையப்படுத்தியே கொரில்லா போரும் இவ்விதிகளுக்குட்பட்டு இருந்தாலும் இதற்காக தனியே விதிகள் உள்ளன. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு புவியியல் மற்றும் சமூகத்தன்மையைக் கொண்டிருந்தாலும் கொரில்லா போரைப் பொறுத்தவரை பொதுவான விதிகளை இவர்கள் அனைவரும் ஆயுதப் போராட்டத்தில் கையாள்கிறார்கள்.
இப்பொழுது நமக்கு முக்கியப் பணி என்னவென்றால், விடுதலையை விரும்பும் மக்களுக்காக நாம் போரின் அடிப்படைக் கொள்கைகளை கண்டறிவதும், பின்பற்ற வேண்டிய விதிகளை வகுப்பதும், நம்முடைய அனுபவங்களை பொதுமைப்படுத்தியும், மற்றவரின் தேவைக்காக அவற்றிற்கு ஒரு பொது வடிவம் கொடுப்பதும் ஆகும். முதலில் நாம் ஒரு கேள்வியை முன்வைப்போம். யார் யார் கொரில்லாப் போராளிகள்? ஒருபக்கம் அடக்குமுறை சக்திகளும் அதன் பிரதிநிதியான கட்டுக்கோப்பான ராணுவமும் உள்ளன. இவர்களுக்கு அயல்நாட்டு உதவிகளும் உள்ளன. இன்னொரு பக்கம் நாட்டுமக்களோ அல்லது அடக்குமுறை சக்திகளால் ஒடுக்கப்பட்ட பகுதிகளோ உள்ளது. நாம் முக்கியமாக உலகுக்கு தெரிவிக்க வேண்டியது என்னவென்றால் கொரில்லாப் போர் என்பது மக்களின் போர் என்பதாகும். கொரில்லா யுத்தக்குழு என்பது ஆயுதம் தரித்த மையம். இது மக்களுக்கு முன் செல்லும் காவல்படை. கொரில்லாப் படையின் மகத்தான சக்தி மக்களிடமிருந்து கிடைக்கிறது. இதற்கு ராணுவத்தைவிட தாக்குதல் சக்தி குறைவாக இருப்பதால் இதனை குறைத்து மதிப்பிடக்கூடாது. கொரில்லா யுத்தப்படை என்பது அதிகபட்சமான மக்களின் ஆதரவுடன் குறைந்த அளவு ஆயுதங்களைக் கொண்டு அடக்குமுறை சக்திகளுக்கு எதிராக உருவாகும் அமைப்பு.
அந்தந்த இடங்களின் மக்கள் ஆதரவை கொரில்லா போராளிகள் பெற்றிருப்பது மிகவும் அவசியம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் , ஒரு இடத்தில் கொள்ளைக்காரக்கும்பல் செயல்படும்போது இவர்களிடமும் கொரில்லாக்களிடம் காணப்படும் தலைமை மீதான விசுவாசம், வீரம், நிலத்தின் தன்மையை அறிந்து வைத்திருப்பது, ஆயுதங்களை பயன்படுத்துவது என அனைத்து தன்மைகளையும், பண்புகளையும் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு தன்மையில் இவர்கள் வேறுபடுகிறார்கள். அதாவது மக்களின் ஆதரவு இவர்களுக்கு கிடைப்பதில்லை. பொதுவாக கொள்ளைக்கும்பல்கள் பொதுமக்களால் பிடிக்கப்படும்போது அழித்தொழிக்கப்படுகிறார்கள். ஏன் கொரில்லாப் போராளி போரிடுகிறான்? கொரில்லாக் குழுக்களின் செயல்பாடுகளையும் மக்களிடம் அதற்கிருக்கும் ஆதரவையும், அதன் போராட்ட வடிவத்தையும் கொண்டு இக்கேள்விக்கு நாம் விடையளிக்கலாம். கொரில்லாப் போராளி என்பவன் சமூகப் போராளி. இவன் அடக்கு முறையாளர்கள் மேல் மக்கள் கொண்டிருக்கும் கோபத்திலிருந்து உருவாகி ஆயுதம் தரித்து போரிடுகிறான் என்பது மறுக்க முடியாத உண்மை.
மேலும் இவன் சமூக மாற்றத்திற்காகவும் ஆயுதமில்லாத தங்களது சகோதர, சகோதரிகளை பெருந்துன்பதிலிருந்தும், அவமானங்களிலிருந்தும் விடுவிக்க ஆயுதம் ஏந்துகிறான். தன்னைத்தானே அர்ப்பணித்துக்கொண்டு கூட அடக்குமுறைசக்திகளாக விளங்கும் நிறுவனங்களை அழித்தொழிக்கும் பண்பு இவனிடம் உண்டு. கொரில்லா யுத்த தந்திரங்களை முழுவதும் ஆராய்ந்தோமானால், ஒவ்வொரு போராளியும் தன்னை சுற்றியுள்ள கிராமப்புறங்களை நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், நுழைவாயில், வெளியேறும் இடம், வேகமாக முன்னேறக்கூடிய இடம், மறைந்து கொள்ள ஏதுவான இடங்கள் போன்றவற்றை நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். ஆக, குறைந்த மக்கள் தொகை கொண்ட காடு போன்ற இடத்தில்தான் கொரில்லா போராளி செயல்பட முடியும் என்பது விளங்கும். இப்பகுதிகளில் சீர்திருத்தத்திற்கான போராட்டங்களே முக்கியமானதாக இருக்கும். அதிலும் நிலவுடைமையை மாற்றுவது முக்கியமானதாக இருக்கும். விவசாயிகளுக்கு நிலங்கள், கால்நடைகள் போன்றவையே வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. அவையே அவனுக்கு கல்லறையாகவும் இருக்கின்றன. இந்நிலையிலிருந்து விவசாயியை மீட்டெடுக்க கொரில்லாப் போராளி துணை நிற்பான். கொரில்லாப் போரில் இரண்டு வகை உண்டு. முதல் வகை சோவியத்-யூனியனில் உக்ரைனிய போராளிகள் போரிட்ட போது காணப்பட்டது போன்ற வாடிக்கையான பெரிய படைகள் ஈடுபடுத்தப்படும் போர். இவ்வகைப் போர் பற்றி நாம் அதிகம் ஆராய வேண்டியதில்லை.
இரண்டாம் வகைப் போர் நாம் ஆர்வமாக ஆராயப்பட வேண்டியதாகும். இவ்வகைப் போரில் ஆயுதம் தாங்கிய குழு அரசு அதிகாரத்தில் உள்ள சக்திகளை எதிர்த்து போரிடும். அதிகார சக்தி காலனியாதிக்கமாகவும் இருக்கலாம். இவ்வகைப் போராளிகள் குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் இருப்பார்கள். சித்தாந்தரீதியாக அவர்களின் குறிக்கோள் என்னவாக இருந்தாலும், போரிடுவதற்கான பொருளாதார நோக்கம் நிலச்சீர்த்திருத்தமாகவே இருக்கும். மாவோ சீனத்தின் தென்பகுதியில் தொழிலாளர் குழுக்கள் தோற்கடிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டன. ஆனால் கிராமப்புறங்களின் வழி யாக நிலச்சீர்திருத்தத்தை குறிக்கோளாகக் கொண்டு வழிநடத்தப்பட்ட நெடும்பயணத்திற்கு பின் அவை தம்மை நிலைநிறுத்திக் கொள்வதில் வெற்றி பெற்றன. பிரெஞ்சு காலனியாதிக்கத்தை எதிர்த்து போரிட்ட ஹோசிமின்னின் போராட்டம் நெல் விவசாயிகளை மையப்படுத்தியே இருந்தது. இந்த இரண்டிலும் ஒரு பொதுவான கட்டமைப்பு உள்ளது. அதாவது இவை இரண்டுமே ஜப்பானின் ஆக்கிரமிப்பை தடுத்து தேச உணர்வை வெளிப் படுத்தினாலும், நிலத்திற்கான அந்த யுத்தத்திற்கான பொருளாதார அடிப்படைகள் மறையவில்லை. அல்ஜீரியாவை எடுத்துக் கொண்டோமேயானால் நாட்டின் பொருளாதாரம் என்பது அராபியர்களால் உருவாக்கப்பட்டாலும் அனேகமாக அவர்களின் அனைத்து நிலங்களையும் லட்சக்கணக்கான பிரெஞ்சு குடியேறிகளே அனுபவிக்கிறார்கள்.
போர்ட்டரிக்கா போன்ற தீவுகளில் பாட்டாளிகள் அதிகமாக இருந்தபோதிலும் அங்கு நில ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்ற கொரில்லா புரட்சி வெடிப்பது அங்கே சாத்தியமில்லை. ஏனெனில் தமக்கிடையேயான வேறுபாடுகளால் தேசத்தின் பெயரால் அவர்களால் ஒன்று பட முடியவில்லை. இவ்வகை வடிவங்கள் வெவ்வேறு வகையாக இருந்தாலும் பொதுவான மைய சிந்தனையை முன் வைத்தது. சிறுவிவசாயிகளும், க்யூபப் பண்ணைகளில் வேலை செய்த அடிமைகளும் ஒன்று சேர்ந்து முப்பது வருடங்களாக நிலவுரிமைப் போராட்டத்தை நடத்தினார்கள். கொரில்லாப் போரின் வளர்ச்சியை கணக்கில் எடுத்துக் கொண்டோமானால், கொஞ்சம் கொஞ்சமாக அதன் செயல் பாட்டுதன்மையில் இருந்து மாறி கொரில்லாக் குழுக்களை யுத்த முனையில் நிறுத்தவேண்டும். இவ்வகை போர் தனித்துவத்தையும் மீறி மற்ற போர்வகைகளுக்கு கருவாகவும், தொடக்கமாகவும் இருக்கும். எனவே கொரில்லாப் படையின் யுத்த தன்மையை மாற்றி, வாடிக்கையான போர் முறைக்கு கொண்டு வரும் காரியம், எதிரியை பல யுத்தக் களங்களில் பலமுறை வென்றெடுக்கும் காரியத்திற்கு நிகரானது. போரில் வெற்றி நிச்சயம் என்ற நிலை வரும் வரை யுத்தமோ, சண்டையோ அல்லது தாக்குதல்களோ இருக்ககூடாது. கொரில்லா வீரனை இப்படி வரையறுக்கிறார்கள்: கொரில்லா போராளி என்பவன் யுத்தத்தின் jesuit எனலாம். (jesuit என்றால் 1534 -இல் இக்நோசியாஸ் லயோலா என்பவர் தொடங்கிய ஏசுநாதர் சங்கத்தைச் சேர்ந்தவர் என்று பொருள்). கொரில்லா வீரன் ரகசியமாக செயல்பட வேண்டும். எதிரிகளை ஏமாற்ற வேண்டும். ஆச்சர்யப் படத்தக்க வகையில் மறைந்திருந்து தாக்குதல் நடத்த வேண்டும். போர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சில முறைமைகளில் இருந்து சில சூழல்களில் மாறுபடவும் வேண்டி இருக்கும். இது ஒரு தனிப்பட்ட jesuitism.
போர் என்பது ஒருவர் மற்றொருவரை எதிர்த்துப் போராடி அழிக்கும் போராட்டம். படைகளை பயன்படுத்துவதோடு போரில் வெற்றி பெற பலவித தந்திரங்களையும், விதிகளையும் செய்ய வேண்டியிருக்கும். போர்த்தந்திரம் என்பது திட்டங்கள் குறிக்கோள்களை அடைய செய்யப்படும் செயல்களின் தொகுப்பாகும். அதாவது எதிரியின் பலவீனங்களை கணக்கிட்டு இத்தந்திரங்கள் திட்டமிடப்பட வேண்டும். யுத்தமுனையில் இருக்கும் பெரிய ராணுவத்தின் போர்ப்படை பிரிவுகளின் செயல்பாடுகள் கொரில்லாக் குழுக்களின் செயல்பாடுகளை ஒத்திருக்கும். இதுவும், ரகசியமாக செயல்படுவது, எதிரியை ஏமாற்றுவது மற்றும் திடீரென தாக்குதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.
இந்த குணங்கள் இல்லையெனில் எதிர்முகாமின் கண்காணிப்பு, சரியாக செயல்படுகிறதென்று பொருள். மிகப்பெரிய பரப்பளவு கொண்ட இடங்களாக இருந்தால் எதிரிகளால் எல்லாவற்றையும் தனக்குக் கீழ் கண்காணிப்பில் வைத்திருக்க முடியாது. இந்த மாதிரி இடங்களில் கொரில்லாப் போர்வீரர்கள் தங்களுக்குள்ளேயே பிரிவுகளாக பிரிந்து திடீர் திடீர் என தாக்குதல் நடத்தி எதிரிகளை நிலைகுலையச் செய்வார்கள். இது கொரில்லாப் போராளியின் கடமையும் கூட. "தாக்கு! ஓடு!" என்பது சுருக்கமாக சொல்லுதல். இதையே துல்லியமாக சொல்வதென்றால் "தாக்கு! ஓடு! மறை விடத்தில் பதுங்கிக்கொள்! மீண்டும் தாக்கு! ஓடு!". எதிரிக்கு ஒய்வு கொடுக்காமல் இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும். சில நேரங்களில் வாடிக்கையான போர்முறைகளிலிருந்து எதிர்மாறான தகுதிகளையும் கொண்டிருக்கும்.
அதாவது நேருக்கு நேராக முன் சென்று போரிடுவதை கொரில்லா போர் தவிர்க்கிறது. ஆனால் கொரில்லா போரின் முடிவு என்னவாக இருக்குமென்றால் "வெற்றி பெறு! எதிரியை நிர்மூலமாக்கு! ". எவ்வகைப் போரிலும் இறுதியாய் நிகழ்வது இதுதானே!? கொரில்லாப் படை முழு வெற்றிபெறும் தகுதியை பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்பது இதிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிகிறது. கொரில்லாப் படை படிப்படியாக முன்னேறி ராணுவத்திற்குண்டான அனைத்து குணங்களையும் பெறுவதற்கான ஆரம்பநிலையாகும். இந்த தகுதியைப் பெற்றபின் எதிரியின் மீது தாக்குதல் நடத்தி முழு வெற்றி பெற முடியும். கொரில்லாப் படையே ராணுவத்தின் ஆரம்பமாக இருந்தாலும், ராணுவமே இறுதி வெற்றியை பெறும். நவீன யுத்தத்தில் படைப்பிரிவின் தளபதி தனது வீரர்கள் இருக்கையில் அவர்முன் எதிரியோடு நேருக்கு நேர் போரிட்டு உயிரைவிட வேண்டிய அவசியமில்லை.
கொரில்லா படையில் ஒவ்வொரு வீரனும் தன்னைத்தானே தனக்கு தளபதியாய் கருத வேண்டும். இதில் சாதகமான தன்மை என்னவென்றால் ஒவ்வொரு கொரில்லா வீரனும் எப்போது வேண்டுமானாலும் உயிரைத் தர தயாராகவே இருக்கிறான். அதுவும் கற்பனையான காரணத்திற்கு அல்ல... கற்பனை நிஜமாவதற்கு... இதுவே கொரில்லா போர் முறைக்கான அடிப்படை. ஒரு சிறிய கொரில்லா குழு ஆயுதம் தாங்கிய காவல்படையாக செயல்பட்டு, அக்குழுவை ஆதரிக்கும் பெரிய மக்கள் படை களத்தில் இறங்குமுன்னதாகவே உடனடி குறிக்கோள்களுக்காக போரிடும். ஆனால் அந்த போர் பழைய காலாவதியான கொள்கைகளை தூக்கி எறிந்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி அதன் மூலம் இறுதியாக சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகவே நடத்தப்படுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது மதிப்பு குறைவான இத்தகைய செயல்கள்கூட உயர்வான இடத்தை பெறுகின்றன. அந்த உயர்வான இடமே இறுதியில் அவர்கள் பெறுவது. இறுதி என்பது துயரமான முடிவைக் குறிப்பதல்ல. இலக்கை குறிப்பது! போராட்ட குணம், எந்த காலத்திலும் அச்சமின்மை, வளைந்து கொடுக்காத தன்மை ஆகியவையும் கொரில்லா போர்வீரனின் உயர்வான குணங்கள்.