Wednesday, October 29, 2014

ராஜம் கிருஷ்ணன் - சலனமடைந்து அணைந்த தீபம்


அக்டோபர் 19, 2014  அன்று நம்மை விட்டு மறைந்தார் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்இறுதிக்காலத்தில் மிகவும் சிரமப்பட்டார் உடலாலும் உள்ளத்தாலும் அவர் அடைந்த இன்னல்கள் பல உண்டு. கணவர் இழந்தவுடன் அவருடைய வீடு உள்ளிட்ட சொத்துகள் அபகரிக்கப்பட்ட நிலையில் அனாதரவாக நின்றவர் விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில்தான் இருந்தார். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் நோயால் பாதிக்கப்பட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து மருத்துவமனை நிர்வாகம்தான் அவருக்கென உணவளித்து அவருக்கென்று ஓர் அறையை ஒதுக்கி செவிலியர்களையும் ஒதுக்கி பார்த்துக்கொண்டது. மருத்துவமனையின் டீன் இதற்கெல்லாம் ஏற்பாடு செய்தார். அவ்வபோது அவருடைய எழுத்து நண்பர்களும் வாசகர்களும் அவரை சந்திக்கச் செல்வதுண்டு. யாராவது சந்திக்க வந்தால் அவருடைய முகம் மலர்ந்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக பேசவே முடியாமல் போய்விட்ட அவருடைய நிலை சில நாளிதழ்களிலும் பத்திரிகைகளிலும் செய்தியாக வந்தது.

1925ல் பிறந்தவருக்கு 15 வயதிலேயே திருமணம் நடந்தது. கணவரின் ஒத்துழைப்பால் நூல்களை வாசிக்கத் தொடங்கி எழுத வந்தார். இடதுசாரிகளுடன் நெருக்கமாக இருந்தவர் ராஜம் கிருஷ்ணன். அவருடையபாதையில் பதிந்த அடிகள்நாவலில் இன்றைய இளம் தலைமுறை இடதுசாரி இளைஞர்களுக்கே தெரியாத மணலூர் மணியம்மா குறித்து எழுதியிருக்கிறார். இன்றைய நாகப்பட்டினம் மாவட்டமான அன்றைய கீழத்தஞ்சை மாவட்டத்தில் நிலச்சுவான்தாரை எதிர்த்ததற்காக மர்மமான முறையில் இறந்துபோன மணலூர் மணியம்மா பற்றிய ஒரேயொரு பதிவு இவருடைய நாவல் மட்டுமே. அதில் ஷாயாஜி போன்ற இடதுசாரி இயக்கப் பெண்கள் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். பெண்களின் பிரச்சனைகள், மீனவர் துயரம் என அவருடைய எழுத்து மக்கள் பிரச்சனைகளைப் பேசியதால் இடதுசாரிகளுக்கு நெருக்கமானார். எத்தனை விருதுகள் பெற்றிருந்தாலும் அவருடைய இறுதிக்காலம் துயரத்தில்தான் கழிந்தது. எந்த நாவலை எழுதவும் களம் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து எழுதுபவர் ராஜம் கிருஷ்ணன். சாகித்ய அகாடமி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்

சில மாதங்களுக்கு முன் ஒரு பொது நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் ராஜம் கிருஷ்ணன். வந்திருந்தார் என்று சொல்வது பொருத்தமாக இருக்காது. அவரை அங்கு கொண்டுவந்து சேர்த்திருந்தது ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம். ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் குறித்த கூட்டம் அது. வாழும் காலத்தில் ஓர் எழுத்தாளரை கொண்டாடாத இச்சமூகத்தில் அவருடைய இறுதி நாட்களில் அவர் உயிருடன் இருக்கையிலேயே அந்நிகழ்வை நடத்தவிடவேண்டும் என்று அவருடைய எழுத்தை நேசிப்பவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். சென்னை அடையாறில் உள்ள டி.என்.ராஜரத்னம் அரங்கத்தில் அந்நிகழ்வு நடந்தது. நிகழ்வில் அவர் தூர்தர்ஷனுக்கு அளித்த நேர்காணல் ஒளிபரப்பானது. அந்த உருவம்தானா இது என்கிற அதிர்ச்சியை அளித்தது அங்கு ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பது போலவே அமர்ந்திருந்த ராஜம் கிருஷ்ணனின் உருவம். இளைத்துக் குறுகி ஒரு குழந்தையைப் போல் இருந்தார். அவர் குறித்து ஒவ்வொருவரும் மேடையில் பேசப் பேச அவருக்குப் புரிகிறது. ஆனால் எதுவும் பேச முடியவில்லை. ஒரு மழலையைப் போல் அவர் தேம்பி அழுத ஒலி அந்நிகழ்வு முழுக்க கேட்டுக்கொண்டே இருந்தது. ராஜம் கிருஷ்ணனின் அந்த துயரம் தோய்ந்த விசும்பும் குரல், அடையாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள அந்த அரங்கத்தைச் சுற்றிய காற்றோடு கலந்துவிட்டிருந்தது.

(நன்றி : இந்தியா டுடே)

2 comments:

  1. here is a more robust rajam krishnan, at her best... https://www.youtube.com/watch?v=ICaj2RLgoVI

    ReplyDelete
  2. Anonymous2:26 am

    Greetings I am so thrilled I found your web site, I
    really found you by accident, while I was looking on Yahoo for
    something else, Anyways I am here now and would just like to
    say thanks for a incredible post and a all round interesting blog (I also love the theme/design), I don't have
    time to read through it all at the minute but I have bookmarked it and also
    included your RSS feeds, so when I have time I will be back to read much more, Please do keep up the
    excellent job.

    My web site :: pirate kings hack spin

    ReplyDelete