Monday, September 28, 2009

புதைப்பதற்கோர் இடம் தேடி...

-- கவின் மலர்--

நன்றி: பாடம்

ரு காலைப்பொழுது. சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து பேருந்து ராயப்பேட்டை மருத்துவமனை நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கி ஐஸ்ஹவுஸ் நோக்கி பீட்டர்ஸ் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். மேம்பாலத்தைக் கடந்து வரும்போது அசாதரணமான ஒரு காட்சி கண்ணில்பட்டது. ஒரு காவல்துறை வாகனம்...ஆங்காங்கே தென்பட்ட காக்கிச்சட்டைகள். இத்தனை காலையிலேயே எதற்கு இவ்வளவு காக்கி உடுப்புகள் இங்கே என யோசித்தவாறே அவ்விடத்தைக் கடந்து விட்டேன். காலை நாளிதழ் ஒன்றை வாங்கிப் புரட்டுகையில் சின்னதாய் ஒரு செய்தி கண்ணில்பட்டது. “ராயப்பேட்டையில் இருபிரிவினருக்கிடையே மோதல்” என்று தலைப்பு. காக்கிச்சட்டைகள் அதிகாலையிலேயே தென்பட்டதற்கான காரணம் புரிந்தது. ஆனாலும் நாளிதழின் செய்தி தெளிவானதாக இல்லை. விநாயகர் ஊர்வலத்திற்கு இன்னும் நாளிருக்கிறது. பின் என்ன மோதல் என்ற கேள்வி மண்டையைக் குடைந்தது. ராயப்பேட்டையில் உள்ள நண்பர்களிடத்தில் விசாரித்தபோது கூறிய தகவல்கள் அவற்றை எழுத வேண்டும் என்று தூண்டின. நடந்த மோதல் இரண்டு மதங்களுக்கிடையேயானது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு நண்பர்கள் தெரிவித்த தகவல் வேறுமாதிரியானது.

இசுலாமியர்களிலேயே சிறுபான்மையினராக “காதியானி” என்று ஒரு பிரிவு இருக்கிறது. அப்பிரிவில் உள்ளவர்களை அஹமதியாக்கள் என்று அழைக்கின்றனர். இவர்கள் மிகச் சொற்பமே. சிறுபான்மையினராக இருப்பது எங்கும் எப்போதும் ஆபத்துதான். வரலாற்றில் அதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ராயப்பேட்டையில் நடந்தது மற்றுமொரு உதாரணம். இந்த காதியானிக்களில் ஒருவர் இயற்கை எய்தி விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய இடமில்லை. இசுலாமியர்கள் இறந்தால் அடக்கம் செய்யுமிடத்தில் இவர்களை அனுமதிக்கவில்லை. இரண்டு நாட்கள் உடலை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அலைந்திருக்கிறார்கள். இடம் கிடைத்தபாடில்லை. இசுலாமியர்களின் சவ அடக்கம் செய்யும் இடம் ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ளது. அங்கே வேறு ஒருவருக்காக வெட்டப்பட்ட குழியில் வேறு வழியின்றி இந்த காதியானியின் உடலை அடக்கம் செய்துவிட்டுப் போய்விட்டனர். எவருக்காக குழி வெட்டப்பட்டதோ அவருடைய உடலை அடக்கம் செய்ய வருகையில் ஏற்கனவே வேறு உடலை அதில் அடக்கம் செய்திருப்பதை அறிந்து விசாரிக்கையில் உண்மை தெரிந்தபின்னர் இருபிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. காவல்துறை வரவேண்டிய அளவுக்கு இக்கலவரம் எல்லைமீறியது. ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட காதியானியின் உடலை அப்புறப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கு உடன்பட்டு காவல்துறை புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுத்தது. அந்த உடல் அரசு பொது மருத்துவமனையின் பிணக்கிடங்கில் வைக்கப்பட்டது. சவக்கிடங்கில் வைக்கப்பட்டது அந்த காதியானியின் உடலா? மனிதாபிமானமல்லவா?

இதற்குமுன் ஒருமுறை ஒரு காதியானி இறந்தபோது புதைக்க இடமிருக்காது என்பதால் விமானம் மூலம் வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்று புதைத்திருக்கிறார்கள். பணம் இருந்தால் ஆறடி நிலத்தை வெளிநாட்டில் கூடப் பெற்றுவிடலாம். வறியவனுக்கு இரண்டு நாள் அலைச்சலும் ஒரு கலவரமும் அரசு மருத்துவமனையின் பிணக்கிடங்குமே மிஞ்சுகின்றன.

பத்து வருடங்களுக்கு முன் புதுகை பூபாளம் கலைக்குழுவினர் ஊர் ஊராய் சென்று போட்ட ஒரு நாடகம் ”மயானம்”. ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இறந்த உடலை அடக்கம் செய்ய இடுகாடு கிடைக்காமல் ஒவ்வொரு இடுகாடாக அலைந்து ஆதிக்க சாதிகளிடம் ஏச்சும் பேச்சும் வாங்கி அல்லாடி... அந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் அலைந்து திரிந்து எங்கேயும் இடம் கிடைக்காதபோது செத்த பிணம் எழுந்து குமுறும்..

உங்க மனசில் உள்ள சாதிவெறியை முதலில் புதைங்கடா! அதுக்குப் பிறகு என்னைப் புதைங்கடா!!

நாடகத்தில் பிணம் எழுந்து பேசலாம். நிஜத்தில்....எத்தனையோ அனாதைப்பிணங்களொடு பிணங்களாய்.. எல்லா உறவுகளோடும் வாழ்ந்துவிட்டு உயிர்போன பின் அனைவரும் இருந்தும் அந்த காதியானியை அனாதையாக்கியது எது? அவர் தேர்ந்தெடுத்த மார்க்கமா? மனித மனங்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய மதம் மீதான பற்றுதானே?

மனித மனங்களை பண்படுத்தவே மதங்கள் ஆதியில் தோன்றின என்ற ஆன்மீகவாதிகளின் கூற்றை சந்தேகப்படவேண்டியிருக்கிறது மதம் அபின் போன்றது என்ற கார்ல் மார்க்ஸின் கூற்றுதான் ஒத்துக்கொள்ளக்கூடியதாயுள்ளது.

இந்தியாவின் பஞ்சாபில் உள்ள காதியான் என்ற நகரத்தில் பிறந்தவர் ஹத்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது(1835 – 1908) . அவர்தான் அஹமதியா முஸ்லீம் கம்யூனிட்டியை 1885 இல் தோற்றுவித்தார். காதியானி என்றால் காதியான் நகரத்தில் வாழ்பவர் என்று பொருள். அஹமதியா இயக்கத்தின் நோக்கம் “அனைவரையும் நேசி; எவரையும் வெறுக்காதே” (Love for All; Hatred for None) என்பது. ஈசா நபி (Jesus) உயிர் பெற்று எழுந்து காஷ்மீருக்கு வந்து வாழ்ந்ததாக காதியானிக்கள் நம்புகிறார்கள். நபிகள் நாயகமே இறைதூதர்; இறை தூதரின் வருகை நடந்து முடிந்த ஒன்று என்பது இசுலாமியர்களின் கருத்து மிர்ஸா குலாம் அஹ்மது இறைதூதர் என்பது காதியானிக்களின் கருத்து. காதியானிக்கள் காபிர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

காதியானிக்கள் தங்களை இசுலாமியர்கள் என்று அழைத்துக் கொள்வதை ஜியா-உல்-ஹக் ஆட்சியின்போது பாகிஸ்தான் அரசு 1984 இல் ஒரு சட்டம் இயற்றித் தடுத்தது. அச்சட்டத்தின்படி எந்த காதியானியாவது தன்னை இசுலாமியர் என்று கூறினால் அதற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

அஹமதியா இயக்கம் உலகெங்கும் 15,055 மசூதிகள், 510 பள்ளிக்கூடங்கள், 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. குரானை 118 மொழிகளில் மொழியாக்கம் செய்திருக்கிறது. 193 நாடுகளில் இவ்வியக்கம் பரவியிருக்கிறது. 200 மில்லியன் மக்கள் பின்பற்றுகிறார்கள்.

ஆனால் இசுலாமியர்களோ வேறு மாதிரி கூறுகிறார்கள். ” சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முஸ்லிம சமுகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த சதியே காதியானிகளை முஸ்லிம் என்ற அடையாளப் படுத்தியதாகும். இத்திட்டதை சரியாக அடையாளம் கண்டு கொண்ட சர்வதேச முஸ்லிம் சமுதாயமும் இவர்களை தனி மதமாக அறிவித்தனர். அதனால் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் வசிக்கிற இவர்களை முஸ்லிம் அல்லாத சிறுபான்மை இனமாக அந்நாடுகள் அறிவித்துள்ளன. சர்வதேச இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு இவர்கள் தனி மதத்தினர் என்பதை அடையாளப் படுத்தியது. சவூதி அரசும் அவ்வரே அறிவித்து ஹஜ்ஜுக்கான அனுமதியை அவர்கள் கோர முடியாது என்று அறிவித்தது.
முஸ்லிம் சமூகத்திற்கும் காதியானிகளுக்கும் இடையே எந்த வித தொடர்பும் இல்லாத சூழ்நிலையில் பிரிட்டிஷை தொடர்ந்து இந்தியாவிலும் காதியானிகளை முஸ்லிம் என்று அடையாளப் படுத்தும் முயற்சி தொடந்து நடக்கிறது. காதியானிகளின் இஸ்லாமியத் தொடர்பை விட இந்து மதத் தொடர்பே வலுவானது. அதன் காரணமாக பாபர் பள்ளிவாசலை உடைக்கச் சென்ற குழுவில் கூட அவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
ஒரு இறந்து போன உடலை புதைத்தல் என்ற மனிதாபிமானத்தை தாண்டி இதற்குள் இருக்கிற அரசியல் விளையாட்டைக் கருத்தில் கொண்டே அவ்வாறு புதைக்கப் பட்டதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் சொந்தப் பிணங்களை வைத்தே அரசியல் நடத்த அவர்கள் முயற்சி செய்வதால் தான் ஒவ்வொரு காதியானியின் மரணமும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. புதைக்கப் பட்ட பிணத்தை தோண்டி எடுத்திருக்க வேண்டுமா என்றும் சிலர் கேட்கின்றனர். பிரச்சினைகள் இனி தொடராமல் தீர்க்கும் எனில் அதில் தவறொன்றும் இல்லையே ? “


இந்த ரீதியிலேயே வலைப்பூ ஒன்றில் தன் கருத்தை பதிந்திருக்கிறார் ஒருவர். இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று தெரியவில்லை.

சாதத் ஹசன் மண்டோ “கம்யூனிஸ்டுகளிடம் கொடுப்பதற்கு வெறும் வார்த்தைகள்தான் இருக்கும். பணம் இருக்காது. எனவே நான் காதியானி ஆவேனே தவிர நிச்சயம் கம்யூனிஸ்ட் ஆக மாட்டேன்” என்கிறார்

“1908ல் மிர்சாகுலாம் அகமதுவின் மரணத்திற்கு பிறகு காதியானிகள் பலநிலைகளில் சிறுபான்மையின-ராக ஒடுக்கப்பட்டார்கள். 1974ல் சுல்பிகர் அலி பூட்டோவால் காதியானிகள் இஸ்லாம் அல்லாதவர் என பிரகடனப்படுத்தப்பட்டனர். சவுதி அரேபியா அரசாங்கம், காதியானிகளுக்கு மெக்காவிற்கு செல்ல விசா வழங்குவதை நிறுத்தி வைத்தது. தென்ஆப்பிரிக்க நீதிமன்றமும் காதியானிகளை முஸ்லிம் அல்லாதவர் என அறிவித்தது. இத்தகையப் பின்னணியில் மண்டோ தன்னை காதியானியாக ஒரு வேளை மாறுவேன் என்ற குரலை மைய அதிகார இஸ்லாத்திற்கு மாற்றாக ஓர் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை பிரதிநிதியின் குரலாகி கூட அர்த்தப்படுத்தலாம் “ என்கிறார் ஹெச்.ஜி.ரசூல்.

உலகின் மிக மிக பிற்போக்கான மதமாக இந்துமதம்தான் இருக்கிறது. ஆயிரம் சாதிகள், ஏற்றத்தாழ்வுகள், அதன் பெயரால் தீண்டாமை, ஒடுக்குமுறை என எல்லாமே இந்து மதத்தில் உள்ளது. இந்துமதம் ஒழிந்தால்தான் மூடநம்பிக்கைகள் ஒழியும் என பெரியார் நம்பினார். இந்துமதத்தை ஒழிக்க பெரியார் மதமாற்றத்தை முன்வைத்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த மதம் இஸ்லாம்.

“இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை.

ஆதித் திராவிடர்களை நான், 'இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

ஐந்து மணிக்கு தீண்டத்தகாதவனாகக் கருதப்படுபவன் ஐந்தரை மணிக்கு லுங்கியும் துருக்கித்தொப்பியும் அணிந்தவுடன் தீண்டத்தக்கவனாக மாறிவிடுகிறான்.”


என்கிறார் பெரியார் (சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. 'குடி அரசு' 2.8.1931).

தனது குடியரசு இதழில் தொடர்ந்து இஸ்லாம் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டார். சமதர்ம நெறிகளைக் கொண்ட ஒரு மார்க்கமாக இஸ்லாமை பெரியார் அணுகினார். இந்து மதத்தின் சாதிய வேர்களை அடியோடு பிடுங்கும் சக்தி இஸ்லாம் மதத்திற்கே உண்டு என்பது பெரியாரின் நம்பிக்கை. ஒரு இந்து, கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறினால் தனது சாதியையும் எடுத்துக் கொண்டுபோய் அங்கே சேர்ப்பது நடக்கிறது. நாடார் கிறிஸ்துவர்கள், வன்னிய கிறிஸ்துவர்கள், தலித் கிறிஸ்தவர்கள் என்று கிறிஸ்துவ மதத்திற்குள்ளும் சாதி தலைவிரித்தாடுகிறது. தலித்துகளுக்கு தனி தேவாலயங்கள் இருக்கின்றன. ஆனால் இஸ்லாம் அப்படியல்ல. சன்னி,ஷியா முஸ்லீம்கள் என்று இஸ்லாமில் பிரிவுகள் உண்டு. ஆனால் இந்துமதத்தில் பார்ப்பனீயம் உள்ளதைப் போல இஸ்லாமில் இல்லை. அதனால்தான் இந்திய சூழலில் பெரியார் இஸ்லாமை கொண்டாடினார். ஆனாலும் ராயப்பேட்டையின் நிகழ்வுகள் மகிழ்ச்சி தருவதாக இல்லை.

“ஏன் ஒரு பெண் நபி கூட இல்லை” என்று கேட்டதற்க்காக ஹெச்.ஜி. ரசூல் மீது ஜமாத் நடவடிக்கை எடுத்தது. “லஜ்ஜா” எழுதியதற்காக தஸ்லிமா நஸ்ரின் நாடு கடத்தப்பட்டார். பெங்களூருக்கு ஒரு பொது நிகழ்ச்சிக்காக வந்தபோது மேடையில் மத வெறியர்களால் தாக்கப்பட்டார். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஒரு மௌலானா மிகுந்த ஆணவத்துடன் ஒரு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார். தஸ்லிமாவை மணக்க இஸ்லாமில் யாரும் தயாராய் இல்லையெனவும், தான் அவருக்கு வாழ்க்கை தந்து உதவ தான் தயாராய் உள்ளதாகவும் விளம்பரப்படுத்தியிருந்தார். தஸ்லிமா அதற்கு 20 நிபந்தனைகள் விதித்து அவற்றிற்கு அவர் தயார் என்றால், தான் அவரை மணப்பதாக பதில் விளம்பரம் கொடுத்தார். நிபந்தனைகளில் சில...

1) மணமகனுக்கு எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் ஏதுமில்லை என்று மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

2) மனைவி அழைத்தபோதெல்லாம் வந்து பணிவிடை செய்யத் தயாராய் இருக்க வேண்டும்.

3) மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் மனைவியை தொடக்கூடாது.

4) மனைவி இரு ஆண்நண்பர்கள் வைத்துக்கொள்ளலாம். அவர்களோடு உடலுறவு வைத்துக் கொள்ளவும் உரிமை உண்டு.

5) ஒருவேளை பின்னாளில் ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் கணவர் அதற்குத் தயாராய் இருக்கவேண்டும்.

6) வீடு கூட்டுதல், துப்புரவு பணிகள், துணி துவைத்தல், சமைத்தல் என அத்தனையையும் கணவனே செய்ய வேண்டும்.

7) வெளியே செல்லும்போது கணவன் பர்தா அணிந்து முகத்தை மூடியவாறே செல்லவேண்டும்.

இப்படி 20 நிபந்தனைகளை விதித்தார் தஸ்லிமா. அதோடு மூச்சு காட்டவில்லை மௌலானா. இதில் ஆண்நண்பர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள மனைவிக்கு உரிமை உண்டு என ஒரு நிபந்தனையில் கூறுகிறார். தஸ்லிமா. எது அப்படியே பெரியாரின் குரல். ( "கணவன் இரண்டு ஆசை நாயகிகளை வைத்திருந்தால் மனைவியும் இரண்டு ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ளலாம்” என்கிறார் பெரியார்.)

தஸ்லிமாவின் இந்த நிபந்தனைகள் இன்று அப்படியே ஆணுலகம் அனுபவித்து வருபவைதானே. இவை அனைத்து மதத்தைச் சார்ந்த ஆண்களுக்கும் பொருந்தும். மதமாற்றம் கூட ஆண்களுக்கு மட்டுமே பொருத்தமானதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பெண்களுக்கு இஸ்லாமியர்களால் இழைக்கப்படும் அநீதிகள் சொல்லி மாளாது. இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ள நெறிமுறைகள் பெண்களுக்கு உதவுவதாகவே உள்ளன. ஆனால் நடைமுறையில்...? உதாரணமாக பெண்களை ஆண்கள் பொருள் கொடுத்து மணந்து கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாமிய நெறி. நடைமுறையில் பெண் வீட்டிலேதான் மணமகனுக்கு பொருள் அளிக்கின்றனர். கணவனை இழந்தோர்க்கு மறுமணம் உட்பட இஸ்லாம் காட்டும் முற்போக்கான விஷயங்கள் ஏராளமிருப்பினும் பழமைவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது இஸ்லாம். இந்து மதத்தை ஒழிப்பதற்கு மதமாற்றத்தை நம்பிக்கையோடு முன்வைத்த பெரியார் இஸ்லாத்தை மனதில் வைத்துதான் முன்வைத்தார். இந்து மதம் ஒழிய இஸ்லாத்தில் உள்ள அடிப்படைவாதிகளின் பழமைவாதம் களையப்பெற வேண்டும். தஸ்லிமா நஸ்ரின், ஹெச்.ஜி.ரசூல் போன்றோருக்கு நேர்ந்தது போல் பிறருக்கு நேராமல் பார்த்துக் கொண்டால் இஸ்லாம் நம் நாட்டின் முக்கியமான மதங்களில் முற்போக்கான மதம் என ஒத்துக்கொள்ளலாம்.

5 comments:

  1. வலைப்பக்கத்தில் மீண்டும் எழுத வந்திருப்பது மகிழ்ச்சி. முக்கிய விவாதங்களைத் தூண்டும் பதிவு. தமிழ்மணம், தமிழிஸ் போன்ற திரட்டிகளில் இணைத்தால் பலரும் படிப்பார்களே! கமெண்ட் இடுவதற்கு word verification கேட்கிறது. செட்டிங்க்ஸில் போய் எடுத்து விடலாமே!

    ReplyDelete
  2. Anonymous9:35 pm

    super i like this post of yours

    ReplyDelete
  3. Thanks for focussing struggle of poor and powerless/voiceless people!please continue your important work!

    ReplyDelete
  4. yes..frankly speaking article..In Thaslima matter the left parties also changed their attitudes considering political/electoral gains.That is true..vimalavidya

    ReplyDelete
  5. எம்.எப்.ஹுசேன் கத்தாருக்குப் போய்விட்டார். தஸ்லிமா நஸ்ரின் பங்களாதேஷை விட்டு கல்கத்தாவிற்கு வந்து இப்போது அவர் இருக்குமிடம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. எல்லா மதங்களிலும் பழமைவாதிகளும் அடிப்படைவாதிகளும் இருக்கிறார்கள். அவர்களால் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. அரசாங்கங்கள் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும்.

    கீழ்கண்ட வாசகங்கள் ஹுசேன் சொன்னவை. வேதனை நிரம்பிய அவருடைய வரிகளை வாசிப்பதற்குள் கண்கள் குள்மாகின்றன.

    I dont feel that anyone betrayed me in India. But no one questioned when sangh parivar targeted me. I love India, but India rejected me. I am saying this with deep pain in heart. Now Qatar is my place. Here no one controls my freedom of expression. I am very happy here. - Artist M.F.Hussain.

    ReplyDelete