Saturday, July 09, 2011

சமச்சீர் கல்வி தடை... சாதி உணர்வு காரணமா?

மிழ்நாட்டில் எந்த ஒரு விஷயமும் ஒரு மாதத்துக்கு மேல் செய்திகளில் அடிபடாது. ஆனால், சமச்சீர்க் கல்வி விவகாரம்... இதில் விதிவிலக்கு. சமச்சீர்க் கல்வி குறித்த விவாதங்களும் விவகாரங்களும் தொடர்கின்றன.

 சமச்சீர்க் கல்விப் பாட நூல்களில் ஆட்சேபகரமானவை என்று கூறி, சில பகுதிகளின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வருகிறது தமிழக அரசு. தமிழ்ப் பாட நூலில் இலக்கியம் இருட்டடிப்பு செய்யப்படுவதாக, இலக்கியவாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும், அறிவொளி இயக்கம் மூலம் கிராமங்கள்தோறும் மக்களுக்குக் கல்வி கற்றுத் தந்தவரும், எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வனிடம் உரையாடியதில் இருந்து...


''தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே கல்வி குறித்து  விசாலமான பார்வை இல்லை. ஆனால், முந்தையஆட்சி யின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மட்டும் இதுகுறித்து ஆழ்ந்த அக்கறையும் தெளிவும்கொண்டு இருந்தார். அதன் காரணமாகவே, இந்த அளவுக்காவது சமச்சீர்க் கல்வி வாய்ப்பு சாத்தியமாகி இருக்கிறது. இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கல்வி குறித்த பார்வை என்ன என்பதை, சமச்சீர்க் கல்வி நூல்களை ஆய்வு செய்ய அவர் உருவாக்கி உள்ள குழுவை வைத்தே அளவிட முடியும். சமச்சீர்க் கல்வி நூலில் இடம்பெற்றுள்ள கவிஞர் அப்துல் ரகுமானின் மிகப் பிரபல வரிகள் இவை -


'வேலிக்கு வெளியே
தலை நீட்டிய
என் கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே...
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்?’


விடுதலை உணர்வின் வீரியம் உரைக்கும் அற்புத வரிகள் இவை. இவற்றை ஸ்டிக்கர்கொண்டு மறைக்கிறார்கள். அவர் தி.மு.க. சார்பானவர் என்று கருதி, அப்படிச் செய்து இருக்கிறார்கள். பாவேந்தர் பாரதிதாசனையும் விட்டுவைக்கவில்லை இந்த அரசு. அவரு டைய ஆத்திசூடியையும் மறைத்தாயிற்று. அவர் திராவிட இயக்க முன்னோடிக் கவிஞர். அ.தி.மு.க. என்கிற ஆளும் கட்சியின் பெயரில் 'திராவிட’ என்கிற சொல் இருக் கிறது. ஆனால், கட்சியின் பெயர் அளவில் மட்டுமே திராவிடம் இருக்கிறது. புரட்சிக் கவிஞருக்கே இந்தக் கதியா?

தைப் பொங்கல் குறித்தான பாடத்தையும் நீக்கி இருக்கிறது அரசு. தைத் திருநாளை தி.மு.க. அரசு தமிழ்ப் புத்தாண்டு தினமாக அறிவித்ததால் இந்த நீக்கம். தமிழர்கள், காலங்காலமாகக் கொண்டாடி வரும் பண் பாட்டை, இப்படி ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துவிட முடியுமா என்ன?
சமச்சீர்க் கல்வி விவகாரத்தை, ஓர் ஆரிய - திராவிடக் கருத்தியல் போராட்டமாகவே நாங்கள்  பார்க்கிறோம். இது ஏதோ தி.மு.க.கொண்டு வந்தது, அதை அ.தி.மு.க. நிறுத்திவைக்கிறது என்று புரிந்துகொள்ளக் கூடாது. ஏன் சில பகுதி களை ஒட்டி மறைக்கிறோம் என்று மக்களுக்கு அரசு இன்னமும் விளக்கம் சொல்லவில்லை.
கருத்தியல் சூழலில் இந்த மாதிரியான ஒரு நிலை இருப்பது ஆபத்தானது. ஏகலைவன்காலத் தில் இருந்தே ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப் பட்டு வந்த கல்வி, இப்போதும் சமூகத்தின் படி நிலையில் கீழே இருப்பவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்கிற எண்ணமே, அரசு செய்யும் இந்தக் குழப்படிகளுக்குக் காரணம். உண்மையான சமச்சீர்க் கல்வியின் முதல் படிதான் இந்த நூல்கள். அப்படியும் வெறுமனே 10 சதவிகித சமச்சீர்க் கல்வி மட்டுமே பாட நூல்கள் மூலம் நிறைவேற்றப் பட்டு இருந்தது. ஆனால், இந்த 10 சதவிகிதத் தையே அனுமதிக்கவில்லை என்றால், 'தரமான கல்வியை அளிப்போம்’ என்று சொல்லிய இந்த அரசின் மேல் நம்பிக்கை இழக்க வேண்டி இருக்கிறது. இங்கு நிகழ்வது ஒரு தத்துவப் போராட்டமே!’’

சென்ற ஆண்டு சமச்சீர்க் கல்விப் புத்தகங்கள் வெளியானபோது, இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன், பெரியார் தொடர்பான பாடம் அதில் இடம் பெற்றதற்குக் கண்டனம் தெரிவித் ததை நாம் மறந்துவிட முடியாது. வேறு எவற்றை எல்லாம் ஸ்டிக்கர்கொண்டு மறைத்து இருக்கிறது அரசு?

’’'சிரிப்பதா... அழுவதா?’ என்கிற தலைப்பில் ஒரு தாத்தா சிரிப்பதுபோன்ற படம் இருக்கிறது. அதை மறைத்து இருக்கிறது அரசு. அதைப் பார்த்தால், முன்னாள் முதல்வர் கருணாநிதிபோல்கூட இல்லை. தாத்தாவே பாடப் புத்தகத்தில் இருக்கக் கூடாதா என்ன?'' என்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.

தி.மு.க. அரசு அச்சடித்த சமச்சீர்க் கல்விப் பாட நூல்கள் தரமற்றவையாக இருப்பதாக, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. 'சமூக நீதி என்கிற பெயரில் தரமற்ற பாடத் திட்டத்தை மாணவர்கள் மீது திணிக்க மனுதாரர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர்’ என்றும் கூறி இருக்கிறது.
உண்மையில் அரசு சொல்வதுபோல, சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்கள் தரமற்றவையா?

''இல்லவே இல்லை! தேசியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் (NCERT) புத்த கங்களைவிட தரமானவை!'' என்கிறது தமிழ்நாடு அறிவி யல் இயக்கம். இந்த இயக்கம்  அண்மையில் ஒரு கள ஆய்வு மேற்கொண்டு, சமச்சீர்க் கல்விப் புத்தகங்களின் தரம் குறித்து அறிக்கை அளித்து இருக்கிறது. இந்த ஆய்வில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்றனர். ''மெட்ரிகுலேஷன் பள்ளி நூல்களுக்கும், NCERT பாட நூல்களுக்கும் சற்றும் தரத்தில் குறையாமல் இருப்பதோடு, சில பாடங்களில் குறிப்பாக, 10-ம் வகுப்பு கணித, அறிவியல் பாடங்கள் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தைவிட மேம்பட்டே இருக்கின்றன. மாணவர்களை மையப் படுத்தி பாட நூல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. மதிப்பீட்டு முறைகள் நவீன அறிவியல் அணுகுமுறையில் உருவாக்கப்பட்டு உள்ளன. கேள்விகளும்கூட சிந்தித்து விடை அளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. பாட நூல் வடிவமைப்பு மேம்பட்டு உள்ளது!'' என்கிறது அந்த அறிக்கை.

அண்மையில், இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அறிவியல் இயக்க நிர்வாகிகள், ''ஒன்றாம், ஆறாம் வகுப்புப் பாட நூல்கள் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட போது, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இதன் தரம் குறித்துக் குறை கூறவில்லை. ஓர் ஆண்டு கழித்து இப்போது குறை கூறுவது ஏன்? நிறுத்திவைத்துள்ள பாடப் புத்தகங் களை மக்களின் கண்களுக்குக் காட்டாமலேயே, அவற்றைத் தரம் இல்லை என்று அரசு சொல்கிறது. அவை வெளியிடப்பட்ட பின் அரசு தடை செய்து இருந்தால், மக்களிடம் இருந்து மிகப் பெரிய எதிர்ப்பை அரசு சந்தித்து இருக்கும்!'' என்கிறார்கள்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ''மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சமச்சீர்க் கல்வியை எதிர்ப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அவர்களுக்கு வியாபார நோக்கம் இருக்கிறது. ஆனால், அரசு எதிர்ப்பதன் பின்னணியை நாம் யோசிக்க வேண்டும்!'' என்று சிந்தனையைத் தூண்டுகிறார்.

''நம் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்ட வரலாறு தவறான வரலாறு. சமச்சீர்க் கல்வி அவற்றை எல்லாம் சரிசெய்து, நிஜமான வரலாற்றை மாணவர்களுக்கு வழங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்துத்வா சக்திகள்தான் சமச்சீர்க் கல்வியை எதிர்த்து வந்திருக்கின்றன. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சோ என்று பலரும் எதிர்க் கின்றனர். கிராமப்புறங்களில் பாடம் நடத்திக்கொண்டு இருந்த ஆசிரியரும்கூட இந்த சமச்சீர்க் கல்வி புத்தகம் எழுதியதில் பங்கேற்று இருக்கிறார். இது உண்மையிலேயே பாராட்டுக்கு உரிய விஷயம். வெறுமனே நகரங்களில் படிக்கும் மாணவர் களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மட்டுமே உருவாக்கியவை அல்ல இந்தப் புத்தகங்கள். பெரும்பாலான மெட்ரிகுலேஷன் பள்ளிகள், எப்போதுமே 10-ம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம்  வகுப்பிலேயே நடத்தத் தொடங்கிவிடும். அப்படி கோடை விடுமுறையிலேயே இணையத்தில் இருந்து சமச்சீர்க் கல்வி நூல்களைப் பதிவிறக்கம் செய்து நடத்தத் தொடங்கிவிட்ட மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களே, நூல்கள் மிகத் தரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்'' என்கிறார்.

தமிழ்நாடு அரசு நியமித்த சமச்சீர்க் கல்விக் குழு, இந்நேரம், தனது அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்து இருக்கும். உயர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து, மிகச் சில நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும். 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்பது, தேர்தல் முடிவுகள் வரும்போது மட்டும் அரசியல் கட்சிகள் சொல்வது.

ஆனால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்களின் தீர்ப்பை எதிரொலிக்குமா?

நன்றி : - ஆனந்த விகடன்

5 comments:

  1. //ஆனால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்களின் தீர்ப்பை எதிரொலிக்குமா?//

    நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அம்மன்றம் காப்பாற்ற வேண்டும். காத்திருப்போம்

    ReplyDelete
  2. theerppukkal thiruththappadalaam,me kortil.

    ReplyDelete
  3. Anonymous5:34 pm

    ந‌ல்ல‌ க‌ட்டுரை. உண்மையும் கூட‌...இதைப் ப‌ற்றி ப‌ல‌ இட‌ங்க‌ளில் நான் பின்னூட்ட‌ம் இட்டுள்ளேன். அவ‌ற்றை எல்லாம் தொகுத்து வ‌ழ‌ங்குகின்றேன்.

    ReplyDelete
  4. நல்ல கட்டுரை. செயா, செய்யாதது அனைத்தையும் செய்தாலும் சமச்சீர்கல்வி பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துவிட்டதால் (நன்றி அம்மா) இனி அதை யாராலும் தடுக்க முடியாது. இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு சமச்சீர்கல்வி வந்தே ஆக வேண்டும். கல்வி வியாபாரிகள் இனி ஆங்கிலத்தை நம்பியே கல்லா கட்டவேண்டும். அதிலும் தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்கினால் பழையபடி சாராயம் காய்ச்சவோ-கடத்தவோதான் போக வேண்டும்

    ReplyDelete
  5. நல்ல ஆழமான கருத்தாக்கமுள்ள கட்டுரை!

    ReplyDelete