Friday, September 09, 2011

செங்கொடிக்கு ஒரு கடிதம்


தோழி செங்கொடிக்கு!

எப்படி இருக்கிறாய் என்று நான் இனி உன்னைக் கேட்க முடியாது. எங்கே இருக்கிறாய் என்பது மட்டுமே தெரியும். காஞ்சி மக்கள் மன்றத்தில், நீ வளர்ந்த கம்யூனில் இருக்கிறாய். மண்ணில் புதைக்கப்பட்டு இருக்கிறாய் நீ. இன்னும் சில நாட்களில் உன் உடல் புழுக்களுக்கு இரையாகக் கூடும். புன்னகை தவழ்ந்த உன் முகம் செல்லரித்துப் போகக் கூடும். பறையெடுத்து ஆடிய உன் கைகள் இற்றுப்போய் வெறும் எலும்புகளாக மட்டுமே மிஞ்சக் கூடும். ஆனாலும் நீ வாழ்கிறாய்!

அன்புத் தோழி செங்கொடி! நான் உன்னை அறிந்தவளில்லை. நமக்குள் அறிமுகம் இல்லை. ஆனால் எனக்குத் தெரியும். நீ சாதாரணமானவள் அல்ல. அதை உன் பெயரே பறைசாற்றும். செங்கொடி...பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். ஆனால் எம்மை விட்டுப் பிரிந்து பறந்து சென்றுவிட்டது நியாயமா தோழி?

மூன்று உயிர்கள் மரித்துப் போய்விடக்கூடாது என்று தமிழகமே திரண்டு போராடுகையில், நீயும் போராடி இருக்கிறாய். போராட்டத்தில் உன்னை இணைத்துக் கொண்டிருக்கிறாய். .

உன் மரணத்தை கோழைத்தனம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் வீரமரணம் என்றும் நான் சொல்ல மாட்டேன். வெறும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் நீ முடிவெடுக்கவில்லை. உன் முடிவை முட்டாள்த்தனம் என்றும் என்னால் போகிறபோக்கில் சொல்லிவிட முடியவில்லை. முதல் நாள் முத்துக்குமாரின் கடிதத்தை நீ வாசித்திருக்கிறாய். ‘முத்துக்குமார் போல இன்னொருவர் இன்றைய சூழலில் தன்னைத் தானே மாய்த்துக்கொண்டால் அன்று எழுந்த எழுச்சி போல இன்றைக்கு ஏற்படுமா?’ என்று நீ உன் தோழிகளிடம் கேட்டிருக்கிறாய் என்று அவர்கள் இப்போது சொல்கிறார்கள்.


நீ நினைத்ததை செய்து முடித்த திருப்தியோடு இப்போது உறங்கிக்கொண்டிருக்கிறாய். ஆனால் உன்னைப் பிரிந்து வாடும் நெஞ்சங்கள்?

உன் உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்த அந்த இரவு, வெளியே கூட்டம் அலைமோதியது. அனைவர் கரங்களிலும் நீ எழுதிய கடித்த்தின் நகல் உன் கையெழுத்தில்! சுதந்திரத்திற்குப் பின்னான இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் காரணத்துக்காக உயிர் நீத்த முதல் பெண் நீ தான் என்பதை திருமாவளவன் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார். அப்போது என் உடல் சிலிர்த்தது. ஆனால் அதையும் மீறி உன் மரணம் எத்தகைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது, அதிர்ச்சியளித்தது என்பதை நீ அறிய மாட்டாய். உனக்குத் தெரிந்திருக்கும் செங்கொடி! சிவகங்கைச் சீமை வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, உடலெங்கும் வெடிமருந்தைக் கட்டிக்கொண்டு வெள்ளையர்களின் ராணுவக்கிடங்கில் குதித்து ஆயுதங்களை அழித்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குயிலியின் கதையை நீ அறிந்திருப்பாய்.  உன் மரணத்தை நீயே தேடிக்கொண்டது பற்றிய விமர்சனங்கள் ஆயிரம் இருந்தாலும், நீ நம்பிய உன் கொள்கைக்கு நீ உண்மையாய் இருந்திருக்கிறாய். அந்த உண்மைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உன் உடலைக் காண நான் உள்ளே செல்லவில்லை. என்னைப் போலவே பலரும் உன்னை அப்படியொரு கோலத்தில் பார்க்க மனது வராமல் நின்றிருந்தனர். அந்த இரவு பூராவும் காஞ்சி அரசு மருத்துவமனை வளாகம் மனிதத்தால் நிரம்பியது.

மறுநாள் மதியம் உன் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு காஞ்சி மக்கள் மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நீ வாழ்ந்த இடத்திற்குப் பயணமானது உன் உடல். பத்து கிலோமீட்டர் தொலைவை உன் உடலைச் சுமந்த வாகனம் கடந்து சென்றது. பல்வேறு இயக்கத்தினர் கலந்து கொண்ட அந்த ஊர்வலம் காஞ்சி நகரத்தின் வீதிகளில் சென்றபோது காஞ்சி நகர மக்கள் வீதியின் இருமருங்கிலும் நின்றனர். நகர எல்லையைக் கடந்து ஒரு வயல்பகுதியில் உன் உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது, தொலைவில் ஒரு பெண் வயற்காட்டினிடையே உன்னைப் பார்க்க ஓட்டமாய் ஓடிவந்தார். கூட்டமாய் ஓரிடத்தில் பெண்கள் திரண்டு உன் அழகோவியமான உருவத்தை வரைந்த பதாகையை உயர்த்திப் பிடித்து வந்த தோழர்களிடம் சொல்லி அந்த பதாகையை கையில் வாங்கித் தொட்டுப் பார்த்து கண்ணீர் விட்டு கதறியதை எப்படி நாங்கள் மறப்பது?

வழியெங்கும் மக்கள் எழுப்பிய உணர்ச்சிமிகு முழக்கங்கள் விண்ணைப்பிளந்தன. ஆனால் கேட்பதற்கு உன் செவிகள் செயலிழந்திருந்தன. பத்து கிலோமீட்டர் தொலைவைக் கடந்து நீ வாழ்ந்த ஊரான மங்ககலப்பாடிக்கு உயிரற்ற உடலாய் சென்று சேர்ந்தாய. உன்னோடு வாழ்ந்த மக்களின் கதறலுக்கிடையே உன் உடல் இறக்கப்பட்டது.

அந்த இடத்தில் தானே நீ நடமாடியிருப்பாய்? அந்த இடத்தில் தானே நீ உன் ஆட்டக்கலைப் பயிற்சிகளையும் ஒத்திகைகளையும் மேற்கொண்டிருப்பாய்? அந்த இடத்தில்தானே உன் அரசியல் அறிவை நீ வளர்த்துக் கொண்டிருப்பாய்? அந்த இடத்தில் தானே உன் கனவுகள் அலைந்து கொண்டிருக்கும்? நீ வாழ்ந்த வாழ்க்கை எல்லோருக்கும் வாய்க்காது. கம்யூன் வாழ்க்கை என்றால் நம்மில் பலருக்குத் தெரியாது. குடும்பத்தை விட்டு நீங்கி ஒரு பொதுவான இடத்தில் பொதுவான செயல்பாட்டுத் திட்டத்தோடு இணைந்து கூட்டாக வாழும் வாழ்க்கை உனக்கு வாய்த்திருந்தது. பாலின பேதமின்றி வாழும் அந்த வாழ்க்கை வாழ்ந்த நீ கொடுத்து வைத்தவள். ஆனால் அந்த வாழ்க்கையை நீ முழுதுவதுமாக வாழாமல் போய்விட்டதில் தான் எங்களுக்கு வருத்தம்!

உன் உடல் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டு உன்னை உன் தோழர்கள் வந்துப் பார்த்து உனக்கு அஞ்சலி செலுத்தியவண்ணம் இருக்க, நீ அமைதியாய் கண்ணாடிப் பேழைக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாய். மேல்தளத்தில் உன் உடலை என்ன செய்வது என்கிற விவாதம் நடந்துகொண்டிருந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்காக உன் உடல் சென்னையில் வைக்கப்படவேண்டும் என்பது பலரது கோரிக்கையாக இருந்தது. உன்னோடிருந்த காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷும், ஜெஸ்ஸியும், காவல்துறை அனுமதியளித்தால் எடுத்துச்செல்லுங்கள் என்றனர். ஆனால் காவல்துறை அனுமதியளிக்குமா? பல இயக்கங்களின் பிரதிநிதிகள், தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் கூடியிருந்தனர் செங்கொடி!. அரசியல் கட்சித்தலைவர்கள், தலித் தலைவர்கள், இடதுசாரித் தலைவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று ஒரு முப்பது பேர் வரை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோம் தோழி!உன் உடலை எங்கே புதைப்பது? என்ன செய்வது? என்று முடிவு செய்வதற்காக கூட்டப்பட்டக் கூட்டம் கிட்டத்தட்ட  இரண்டு மணிநேரம் நடந்தது. வெளியே வந்திருந்த கூட்டம் பதைபதைப்பாகக் காத்திருக்க, அவரவர் கருத்தை அவரவர் முன்வைக்க சூடான விவாதங்கள் தொடங்கின. இளைஞர்கள் ஒருபுறம் உன் உடலை சென்னைக்கு எடுத்துச் சென்று பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும் என்று கடுமையாக வாதிட்டனர். ஒரு கட்டத்தில் கடும் வாக்குவாதம் நடக்க, சென்னைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எடுத்துச் சொன்னார்கள் தலைவர்கள். எத்தனை சிக்கல்கள் வந்தாலும், குண்டடிப்பட்டாலும் அதைத் தாங்கத்தயாராக இருப்பதாக இவர்கள் சொன்னார்கள். ஆனால் தலைவர்களோ அதனை வேண்டாமென்றனர். “எங்களுக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வழிகாட்டுதல் படி நாங்கள் செயல்படுகிறோம். நீங்கள் மனது வைத்தால் காவல்துறையிடம் பேசி அனுமதி வாங்க முடியும்” என்று அரசியல் கட்சித் தலைவர்களிடம் கேட்டனர் பல்வேறு அமைப்பினர். ஆனால் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தனர் தலைவர்கள். ஒரு கட்டத்தில் இளைஞர்கள் உணர்ச்சி வேகத்தில் பேசுவதாக தலைவர்கள் கூறினார்கள். நீ எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி “செங்கொடியின் கடிதத்துக்கு என்ன பொருள்? அவள் கூறிய போராட்டத்தை நாம் முன்னெடுக்கப் போவதில்லையா?” என்று கேட்டனர் சிலர். இறுதியில் முடிவு நீ சார்ந்த காஞ்சி மக்கள் மன்றத்தின் கைகளில் விடப்பட்டது.  நீ வாழ்ந்த அந்த வீட்டில்தான் உன்னைப் புதைக்க வேண்டுமென்று ஏற்கனவே நீ கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய மகேஷ் உன் உடலை எடுத்துப் போவது குறித்து எந்த ஆட்சேபணையும் இல்லையென்றும், ஆனால் எந்த சிக்கலும் இல்லாமல், காவல்துறையின் அனுமதியோடுதான் எடுத்துப் போக வேண்டும். எங்கு எடுத்துச் சென்றாலும் மீண்டும் இங்கே, இதே வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்து ஒப்படைத்துவிட வேண்டும் என்று கூறிவிட, அதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டன. இறுதியில் காவல்துறையின் அனுமதி பெறும் அளவுக்கு இன்னமும் சக்தி பெறாத சிறிய இயக்கத்தினரும், தனிநபர்களும் தங்கள் கோரிக்கையை ஏமாற்றத்தோடு கைவிட்டனர். உன் உடலை அங்கேயே அடுத்த நாள் முழுதும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பதென்றும், அதற்கடுத்த நாள் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் முடிவானது. இத்தனையும் மேலே மாடியில் நடக்கையில் நீ கீழே உன் சுற்றத்தார் புடைசூழக் கிடந்தாய்.

அன்றைக்கு மங்கலப்பாடி கிராமத்தை விட்டுக் கிளம்புகையில் மனம் கனத்துக் கிடந்தது. அதற்கடுத்த முழு நாளும் நீ அங்கேயே நீ வாழ்ந்த வீட்டிலேயே இருந்தாய். உன் சிரிப்பொலி அலங்கரித்த அந்த வீட்டில் உன் கனத்த மௌனம் காற்றில் பரவியிருந்த்து. உன் இறுதி நிகழ்வுக்காகக் காத்திருந்தாய். 31 ஆகஸ்ட் அன்று காலை, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனைக்கு நீதிமன்றம் எட்டுவார காலத்தடை விதித்தது. மகிழ்ச்சியில் துள்ளிய பலரும் “செங்கொடி ஒரு நாள் பொறுத்திருந்து பார்த்திருக்கலாமே” என்று ஆதங்கப்பட்டதைக் காண முடிந்தது. உன் இறுதிச்சடங்கிற்கு பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த மக்கள் திரளுக்கு நடுவே உன் உடல் புதைக்கப்பட்டதாக செய்தி வந்தது..

உன் உடலை என்ன செய்வது என்று முடிவெடுக்கும் கூட்டத்தில் நான் கேட்ட ஒரு குரல் இப்படிச் சொன்னது “சரியான வழிகாட்டுதல் இல்லாத, சரியான தலைமை இல்லாத ஒரு சமூகத்தில் தற்கொலைகளை தவிர்க்கமுடியாது. ஆனால் அது தற்கொலை அல்ல. கொலைதான். செங்கொடியின் மரணம் தற்கொலை அல்ல. அது கொலைதான்” என்றது அந்தக் குரல்.
ஆமாம் செங்கொடி! கையறு நிலையில் ஒரு சமூகமே நின்றுகொண்டிருக்கையில் வேறு வழியின்றிதான் இந்த நிலைக்கு நீ வந்திருப்பாய்.  உன் மரணம் தமிழக அரசிற்கு விடப்பட்ட எச்சரிக்கை மணியென்பதை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சொல்கிறது. முதல்நாள் குடியரசுத்தலைவரின் ஆணையை மாற்ற முதல்வருக்கு அதிகாரமில்லை என்றவர் மறுநாளே இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றியதில் உன் மரணத்திற்கும், உன் உடலைச் சுமந்து காஞ்சி நகர் வீதிகளில் வந்த அந்த ஊர்வலத்திற்கும் பங்கிருக்கிறது. ஒரு வகையில் நீ நினைத்ததை சாதித்துவிட்டாய். ஆனால் நீ எங்களுக்குத் திரும்பக் கிடைப்பாயா? தலித்-பழங்குடி சமூகமான இருளர் சமூகத்திலிருந்து  சமூகத்திற்காகப் போராட வந்த, போராட்ட குணம் கொண்ட,  உன்னை நாங்கள் இழந்து விட்டோமே! இந்த இழப்பை ஈடுசெய்ய முடியுமா? உன் மரணத்திற்குப் பின் உன் பாதையை பலர் தேர்ந்தெடுத்துவிடக்கூடாதே என்கிற பதைபதைப்பு தந்த பலரின் மரண அவஸ்தையை வார்த்தைகளில் விவரிக்க இயலாது செங்கொடி! நீ போய்விட்டாய். ஆனால் உன்னை யாரும் பின் தொடர்ந்து விடக்கூடாது என்பதே எங்கள் கவலை. உயிரின் மதிப்பு உன்னை இழந்த பின் அதிகம் தெரிகிறது செங்கொடி! மூவர் உயிர்காக்க நடந்த போராட்டத்தில் உன் உயிரை நீ மாய்த்துக் கொளவதை எப்படிச் சகிப்பது? பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உன் மரணச்செய்தி கேட்டபோது துடித்துக் கதறினார். “வேண்டாம் பிள்ளைகளா! நான் என் மகனின் உயிரைக் காப்பாற்றத்தானே 21 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறேன். இன்னொரு உயிரைக் கொடுத்தா என் மகன் உயிரைக் காக்க வேண்டும். ஏன் இப்படிச் செய்தாய் செங்கொடி?” என்று கதறினார். தீராத துன்பத்தை உன் மரணம் அவருக்குத் தந்து விட்டதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

செங்கொடி! இப்படி போராட்டக்களத்தில் ஒவ்வொருவரும் உயிர் நீக்க நினைத்தால்...போராடயாரிருப்பார்? உன்னோடு போகட்டும் இந்த உயிர் நீக்கும் போராட்டம். வேறொருவர் இப்படி உயிர்நீத்து “ஆமாம்! எங்கள் சமூகம் வழிகாட்டுதலின்றித்தான் இருக்கிறது.” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டாம்! இது எங்கள் கனவு. ஆனால் கனவுகள் அனைத்தும் உண்மையாகி விடுவதில்லை.

போராட்டத்தன்மை மற்றும் போராட்டக் களத்தின் மீதான விமர்சனமாய் உன் மரணத்தை நீ அளிக்க, அதைக் கொச்சைப்படுத்தி ஆதாயம் தேடும் ஊடகங்களின் பார்ப்பன ஆணாதிக்கத் திமிரை அடக்க பல கோடி செங்கொடிகள் உருவாகி, உயிர் நீக்காமல் போராட வேண்டும்!

செங்கொடி! உனக்குப் பிரியாவிடை கொடுத்தனுப்பினோம். நீ வாழ்கிறாய் எங்கள் நெஞ்சங்களில்! ஆனால், எங்கள் நெஞ்சங்களில் வாழ்வதை விட, எங்களோடு நீ வாழ்ந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்போம். இந்த மகிழ்ச்சியை தமிழ்ச்சமூகம் எங்களுக்கு விட்டு வைக்குமா? இனியாவது?
இந்தக் கேள்விக்கு விடை உன்னைப்போன்ற, என்னைப்போன்ற யார் கையிலும் இல்லை. ஒரு தலைமையோ, வழிகாட்டுதலோ இல்லாத இச்சமூகம் என்ன செய்யப் போகிறது?  தற்கொலைகளால் போராட்டக்களத்தை நிரப்பப் போகிறதா? நம் வரலாறு தற்கொலைத் தேதிகளால் எழுதப்படுமா?

சாதியை கணக்கிலெடுக்காத தமிழ்த்தேசியமும்,  மக்களின் விருப்பத்தை அல்ல இயக்கத் தொண்டர்களின் விருப்பத்தைக்கூட அறியாத இடது அரசியலும்,  தங்களுக்கான அரசியலை முன்னெடுக்க முடியமல் தொடர்ந்து தங்களின் இருப்புக்காய் போராடும் தலித் அரசியலும்,  தொடங்கிய பாதையை விட்டு வெகுதூரம் போய்விட்ட திராவிட அரசியலும், எங்கனம் எங்களுக்குத் வழிகாட்டக் கூடும்? இந்த உண்மையை உரக்கச் சொல்வதற்காக நீ மாய்த்துக்கொண்டாயோ?

செங்கொடி! உன்னை யாரும் பின் தொடர்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டே உன் பாதையில் செல்! பின் தொடர்ந்தால் கொலைகள் தொடர்கின்றன என்று பொருள். அது தனிமனிதக் கொலை அல்ல. ஒரு சமூகக் கொலை. சித்தாந்தங்களை கற்பித்தவர்களின் தோல்வி. கற்றுக்கொண்டவர்களின் தோல்வி. கையறு நிலையின் வெற்றி.

ஏதாவது செய்யச் சொல்கிறது உணர்வு. என்னவென்று கேட்கிறது அறிவு. உணர்வுக்கும், அறிவுக்குமான ஊடாட்டத்தில் மெல்ல விலகுகிறது பனித்திரை. எதிரே பிரம்மாண்டமாய் நிற்கிறது என் கையறு நிலை. கிழித்துச்செல்ல எத்தனிக்கிறேன். கிழிபட்டுப் போகிறேன். கிழிசல் ஓட்டைகளுக்கு இடையே நம்பிக்கை கண் சிமிட்டுகிறது நட்சத்திரங்களின் வடிவில்! – இப்படித்தான் முடிக்க நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை தோழி! கிழிபட்டுப் போவதுதான் தற்போதைய அரசியல் சூழலில் சாத்தியம். உனக்கு நேர்ந்ததும் இதுவே.

அனைத்துக் கதவுகளும் இறுக மூடிக்கொண்ட ஒரு வீட்டினுள், வெளியேற இயலாமல், மீட்பருக்காகக் காத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் போல இன்னும் எத்தனை காலம் கழியப்போகிறது? விடைகாண இயலாத இப்படியான பல கேள்விகளால் நிறைந்திருக்கிறது மனம். கேள்விகளின் கனம் போலவே துயரத்தின் கனமும்,  இப்பூமியில் காற்று நிரம்பியிருப்பது போல மனமெங்கும் நிரம்பியிருக்கின்றது தோழி!

இப்படிக்கு,
உன் தோழி

2 comments:

  1. //சிவகங்கைச் சீமை வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, உடலெங்கும் வெடிமருந்தைக் கட்டிக்கொண்டு வெள்ளையர்களின் ராணுவக்கிடங்கில் குதித்து ஆயுதங்களை அழித்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குயிலியின் கதையை நீ அறிந்திருப்பாய்// அன்புமிக்க கவின் மலர் - சிறப்பாக சொன்னீர்கள். செங்கொடி மரணம், மனிதத்தின் அழியா பழி. சட்டம் தூக்கு தண்டனையை திரும்ப பெற வேண்டும். ஆனால் இந்த வரி மட்டும் சற்றே விலகிச்செல்கிறது. ஏன் எல்லாவற்றிக்கும் சாதியை முதன்மை படுத்த வேண்டும். தமிழனாகவே பிறந்தோம்... அதே தமிழனாகவே இறப்போம். நன்றி...

    ReplyDelete
  2. Arumaiyana Varikal madam... Valthukal

    ReplyDelete