எப்போதும் தனது கவிமனநிலையைத் தக்க வைத்துக் கொள்வது ஒரு கவிஞருக்கு சவாலானது. மனம் சஞ்சலம் அடையும்போதும், தாங்கவியலாத துயரத்தில் உழலும்போதும், காதலில் பொங்கும்போதும், அளவு கடந்த மகிழ்ச்சியில் துள்ளும்போதும், கோபம் கொண்டு அறச்சீற்றம் கொள்ளும்போதும் என உணர்வுகளால் உந்தப்படும்போதெல்லாம் ஓர் அருவிபோல் நுரைத்துக்கொண்டு கவிதை கொட்டும். கவிதை எழுதத்தூண்டும் இந்த உணர்வெழுச்சியை தக்கவைப்பது என்பது பெரும்பாடு. இந்தக் கவிதையை நான் தான் எழுதினேனா..என்று எண்ணி வியப்பதும், அத்தகைய மனநிலை மீண்டும் வாய்க்காதா என்று ஏங்கித்தவிப்பதுமான ஒரு சூழல் துயரமானது. கவிமனத்தை மீட்டெடுப்பதற்கான விருப்பம் எப்போதும் இருந்தாலும் நினைத்தபோதெல்லாம் அது முடிவதில்லை. ஆனால் இந்த மனிதர் மட்டும் எப்போதும் கவிமனநிலையைத் தக்கவைத்துக்கொண்டு வலம் வருவது எப்படி என்றெண்ணி நான் வியக்கும் மனிதர் யூமாவாசுகி.
யூமாவின் கைகளில் மொழி விளையாடுகிறது. அதிலும் ஒரு மழலையாக விளையாடுகிறது. மழலையின் மொழி அறிவுப் போர்வையை வலிந்து போர்த்திக்கொள்வதில்லை. தன்னளவில் உண்மையாய் குழந்தமையுடன் சிரிக்கும் மொழி அது. குழந்தையின் முகத்தில் தோன்றும் வசீகரப் புன்னகையை ஒத்த யூமாவின் மொழி, குழந்தைகள் குறித்த கவிதைகளில் உச்சத்தைத் தொடுகிறது. இந்தக் கவிதைகளை மேலும் உயர்வு செய்யும் விதமாக அமைந்திருக்கும் மணிவண்ணனின் ஒவியங்கள் தம்மளவிலேயே தனித்துவச் சிறப்புடன் பிரகாசிக்கின்றன
குழந்தைகளுக்காக எழுதுவது, குழந்தைகள் குறித்து எழுதுவது என்ற இரண்டில் குழந்தைகளுக்காக எழுதுவது மிக மிகச் சிரமம். குழந்தைகளின் மனவுலகுக்குள் நுழைந்துபார்க்கும் திறனும் உள்ளமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும் அது பெரியவர்களுக்கானதாக மாறிவிடும் அபாயத்தோடுதான் குழந்தைகளுக்காக எழுதவேண்டியிருக்கிறது. ஆனால் யூமாவாசுகி ஏராளமான நூல்கள் குழந்தைகளுக்காக எழுதி இருக்கிறார். வேற்றுமொழிகளில் குழந்தைகளுக்கென்று இருக்கும் எழுத்துக்களைத் தேடிப்பிடித்து தமிழில் அளித்து வருபவர்.
குழந்தைகள் குறித்த கவிதைகளில் குழந்தைகளை வியந்து நோக்குவது, அவர்கள் மேல் அன்பு காட்டுவதான கவிதைகள் ஒரு வகை. ஆனால் குழந்தையுடன் ஒரு சக பயணியாகவே தனது கவிதைகளில் கூட வருகிறார் யூமா. குழந்தைக்குத் தோழனாக, பாதுகாவலனாக, தந்தையாக, சேவகனாக, ரட்சகனாக, பார்வையாளனாக என்று தனது கவிதைகளில் பல அவதாரங்கள் எடுக்கும் யூமாவாசுகி பல சமயம் தானும் குழந்தையாகி விடுவதைக் காண முடிகிறது. ஆனால், இவற்றில் எந்த பாத்திரமும் வகிக்காமல், குழந்தைகள் மேல் மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்ட யூமா உச்சம் தொடுவது குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த கவிதைகளில்தான். எழுதிப் பழக வேண்டிய கைகளிலால் கடுமையான வேலைகளைச் செய்யும் அவர்கள் அடையும் வேதனைகளை சொற்களால் வடித்த கவிதைகளில்தான். அதிகார மமதையுடன் மீனா என்கிற வேலைக்காரச் சிறுமியிடம் ஏவல் செய்யும் முதலாளிக்கு நேர் எதிரான மனநிலையுடன் குற்றவுணர்வோடு பக்கத்து வீட்டில் குடியிருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு முறை தன் பிஞ்சுக் கரங்களால் கடினமான வேலைகளை அவள் செய்யும்போதும் அவள் தனக்குப் பிடித்தமான வேறொன்றைச் செய்ய தான் துணையிருப்பதாக கனவு காண்கிறார். ஒரு நாள் அவள் வீட்டுக்கு வெளியே துரத்தப்படுகிறாள்.
’கற்பனையல்லாது நிஜத்தில்
நான் அவளுக்குச் செய்த்தெல்லாம்
‘உன்னைப் பற்றி எப்போதாவது எழுதுவேன் மீனா’
என்று என் குறிப்பு நோட்டில் அந்த இரவில்
எழுதி வைத்ததுதான்’
என்கிறார். நம் வாழ்நாளில் நாம் பார்த்த குழந்தைத் தொழிலாளர்கள் கண்முன் வந்து போகிறார்கள். ஒரு கணமேனும் அவர்களை கருணையுடன் எண்ணிப் பார்க்கவைக்கும் கவிதை.
’’பெரு விழுதுகளில் இருத்தி நான் ஊஞ்சலாட்டும்போது
மேகத்தைத் தொட்டு வந்த ஈரத்தை
என் கரங்களில் அருளினாளோ..”
என்ற வரிகளின் பிரமிப்பிலிருந்து மீள வெகுநேரமாகிறது.
அன்புகாட்ட எவருமின்றி தவிக்கும் குழந்தைகள், துடித்தழும் குழந்தைகள், ஏந்திக்கொள்ள கரங்களற்ற குழந்தைகள், யாசிக்கும் குழந்தைகள் என்று பல்வேறுபட்ட குழந்தைகளை சமீபிக்கும் வழியின்றி துடித்துத் தவிக்கும் வேதனையையும், அச்சத்தின் துடிப்புகளுக்குள் எப்படி என் ஆறுதலின் முத்தங்களைக் கடத்தும் வழியறியாமலும், விரும்பியதொன்றின் பெயர் ஏதென்று தெரியாமல் ஏங்கிச் சிணுங்கும் பிடிவாதத்தின் தேவையை பூர்த்தி செய்வது எப்படி என்றும், கொஞ்சிக்கொண்டாடுதற்கு ஆளின்றி சோம்பிய குழந்தைகளை எப்படி சமீபிப்பதென்றும் ஏங்கும் பரிதவிப்பையும் அவர் விளக்குகையில்...குழந்தைகளின்மீது பொங்கும் அன்பைப் போல கவிஞர் மேல் அன்பு பொங்குகிறது..
‘’வீடுகளில் வெள்ளையடித்து மறைக்கப்படுகிற
அவர்களின் கிறுக்கல்களை
என் சுவர்களில் தோன்றச் செய்யும் மந்திரம்தான் என்ன?’’
என்று கேட்கிறார் யூமா. எனக்கென்னவோ வெள்ளையடிக்கப்பட்டாலும் யூமாவின் கண்களுக்கு மட்டும் அந்தக் கிறுக்கல்கள் புலப்படும் என்றே தோன்றுகிறது.
உலகின் எந்த மூலையிலும் உள்ள குழந்தைக்கும் அதன் அன்னைக்கும் இடையேயான உறவு அற்புதமானது. குழந்தை பேசும் மழலை தாய்க்குத்தானே முதலில் புரிகிறது. நமக்குப் பொருள்விளங்கா குழந்தையின் மிழறல்கள் பூக்களுக்குச் சமம் என்கிறார்.
வாசித்த நாள் முதல் பலரிடம் சொல்லி, வியந்து, பல முறை ஈரம் கசிய வைத்த கவிதையொன்று இந்தத் தொகுப்பில் இருக்கிறது. ‘மதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள்’. சட்டைப்பையில் கோலிக்குண்டுகளைச் சுமந்து, மதுக்கடையில் குற்றேவல் புரியும் ஒரு சிறுவன் குறித்த கவிதை.. எப்போது வாசித்தாலும் நெஞ்சம் நெகிழ்ச்சியில் உருகி விழிகளில் நீர் பெருக்கெடுக்கவைக்கும் கவிதை. எத்தனை குழந்தைகளின் விளையாட்டுநேரத்தை நாம் தட்டிப் பறித்திருக்கிறோம்? அச்சிறுவன் மதுக்கடையில் பணிபுரிந்தாலும் மனம் தன் வயதையொத்த சிறுவர்களுடன் விளையாட ஏங்குவதையும், அவன் மீது அன்புடன் நெகிழ்ந்த நெஞ்சங்களின் மனிதநேயத்தையும் அற்புதமாகப் படம் பிடித்துக்காட்டும் இந்தக் கவிதை எத்தகைய கல்மனதையும் அசைத்துப் பார்த்துவிடும். ‘என்னுடன் வந்துவிடு. நான் உன்னை விளையாட அழைத்துச் செல்கிறேன். இனி நீ வேலை செய்யவேண்டாம், விளையாடு, படி, உனக்குப்பிடித்தமானதைச் செய்’ என்று அச்சிறுவனை மனதளவில் மதுபானக்கடையிலிருந்து நாம் அழைத்துச் சென்றுவிடுகிறோம்..
உணவு விடுதி ஒன்றில் பணிபுரியும் இரு சிறுவர்கள் தங்கள் முதலாளிக்குத் தெரியாமல் ரகசியமாய்ப் பேசிக்கொள்ளும் கவிதையில் அஞ்சி அஞ்சிப் பேசும் சன்ன வார்த்தைகள் வண்ணத்துப் பூச்சிகளாகின்றன. எவருடையை அதட்டலுக்கோ பேச்சை நிறுத்திவிட்டு ஏவல் செய்ய ஓடுகையில் வண்ணத்துப்பூச்சிகளால் ஆன பால்வீதி அணைந்து கடைசியாய் உயிர்விடும் ஒன்றி இறகுத் துடிப்பு ஓய்கிறது அவர்களின் முகத்தில்.
‘தீராத கணக்கு’ கவிதையில் வரும் அந்த்த் தாயிடம் பேசும் வார்த்தைகள்..என்ன சொல்ல? குழந்தையைக் காட்டிப் பிச்சையெடுக்கும் தாயிடம் ’என் முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம் அல்லது என்னை அடித்துப் பிடுங்கியிருக்கலாமே. அந்தக் குழந்தை என்ன பாடுபட்டது’ என்று கேட்கும் யூமா இறுதியில் ‘தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க ஏன் உனக்குத் தெரியவில்லை?’ என்கிறார். குழந்தையின் உயிருக்காக தன் உயிரை ஒப்புக்கொடுக்க துணியும் கவி உள்ளம் பின் வேறென்ன சொல்லும்?
‘‘எங்கே யாருக்கு அவர்கள் கையசைத்தாலும்
அங்கே நானும் நின்று ஏற்றுக்கொள்வதெப்படி’’
என்று இவ்வுலகின் எல்லா தேசங்களிலும் உள்ள குழந்தைகள் யாருக்காக்க் கையசைத்தாலும் அதை அங்கே சென்று ஏற்றுக்கொள்ளும் வித்தையை யாசிக்கிறார் கவிஞர். அத்தனை குழந்தைகளின் கையசைப்பும் கவிஞருக்குத் தானாக வந்து சேர்ப்பித்துவிடும் வல்லமை இந்தக் கவிதைக்கு உண்டு. கவிஞரை நோக்கி கையசைக்கும் ஒரு சிறு குழந்தையாக நாமும் உருமாறிப்போகிறோம்..இந்தத் தொகுப்பை வாசித்து முடித்ததும்.
’இதை எழுதும்போது எவ்வளவு சுலபமாக
எவ்வளவு இசைவாக எவ்வளவு அழகாக
இதயத்திலிருந்து ரத்தத்தைத் தாள் மீது
மசியாக விட்டுக்கொடுக்கிறது பேனாமுனை’’
என்கிறார். இவை கவிதைக்காக எழுதப்பட்ட வார்த்தைகளாகத் தோன்றவில்லை. உண்மைதான். இதயத்தின் குருதியே பேனாமுனை வழியே கொட்டியதுபோன்ற கவிதைகளே இத்தொகுப்பு முழுக்கக் வாசிக்கக் கிடைக்கின்றன.
உயிரை உலுக்கும் வரிகளை எழுதிவிட்டு யூமாவாசுகி அவர் பாட்டுக்குத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். எப்போதும் கிரீடத்தை கீழே வைக்காமல் சுமந்துகொண்டு திரிகிறவர்கள் இருக்கும் உலகில், நான் எழுத்தாளன் என்கிற கர்வமோ, கவிஞன் என்கிற செருக்கோ அற்ற எளிமையான மனிதராகவே எப்போதும் இருக்கிற யூமாவை வாழ்த்தும் தகுதி எனக்கில்லை. வாசிப்பின் மீது தீராத தாகத்தை ஏற்படுத்திய யூமாவாசுகி என்கிற அற்புத மனிதருக்கு, அவருடைய எழுத்துக்கு, அவர் அளித்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பிற்குப் பரிசாக அல்ல...கைம்மாறாக.. பெரும் அன்பும், முத்தங்களும் தவிர வேறெதுவும் கைவசம் இல்லை.
-கவின் மலர்,
சென்னை
04.08.2012
No comments:
Post a Comment