Monday, March 25, 2013

பரதேசி

'எரியும் பனிக்காடு' நாவலை பாலா பரதேசியாக எடுக்கப் போகிறார் என்று 2011 டிசம்பர் மாதம் கேள்விப்பட்டேன். அப்போதே பயமாக இருந்தது. ஏனென்றால் 'அவன்-இவன்' பார்த்த பாதிப்பில் இருந்து இன்னமும் மீளாமல் இருந்தேன். அத்துடன் விபத்தில் அடிபட்டு வேலை வெட்டி எதுவும் செய்யாமல் மருத்துவமனையில் இருந்தேன் 24 மணி நேரமும் சதா எதையாவது சிந்தித்துக்கொண்டிருந்த எனக்கு இந்த தகவல் கொஞ்சம் கலவரத்தை உண்டுபண்ணியது. பாலா எப்படி இந்த நாவலை எடுககப் போகிறார் என்று இரண்டு நாட்கள் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்போது கூட படத்தின் தன்மை குறித்தும், எடுக்கப்படும் விதம் குறித்தும்தான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருபோதும் பாலா அதை தன் கதை என்று சொல்வார் என்று நினைக்கவேயில்லை. 
 
 

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், தேயிலை எஸ்டேட்டுகளில் கூலிவேலைக்குச் சென்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவம் செய்யச் சென்ற ஆங்கிலேய பாதிரியார் பி.எச். டேனியல் எழுதிய ‘ரெட் டீ’ என்கிற ஆங்கில நாவலின் தமிழாக்கமான ‘எரியும் பனிக்காடு’ நாவலை பாலா ‘பரதேசி’ ஆக செல்லுலாய்டில் உருவாக்கியிருக்கிறார். இந்த நாவலை படமாக்கவேண்டும் என்கிற பாலாவின் முனைப்பு நல்ல விஷயம்தான். அத்தோடு வழக்கமாக கதாநாயகன் வன்முறை தாண்டவமாடும் படமாக இல்லாமல், தொழிலாளர்கள் அடக்குமுறைக்கும் கொடுமைக்கும் ஆளாவதை படத்தில் காட்டியிருப்பதும் பாலாவின் படங்களில் பரதேசியை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

படத்தின் பலம் செழியனின் ஒளிப்பதிவும் உடைகள் தேர்வும் தான். அவைதான் நம்மை அந்த காலகட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அதர்வாவின் நடிப்பு அற்புதம். அதிலும் ஒன்றுமறியா அப்பாவியாய் ஊரில் நடமாடும்போதும், ஊரே கேலி பேசினாலும் புறந்தள்ளி சிரித்துக்கொண்டே இருப்பதும், கஷ்டப்பட்டு மரம் வெட்டியபின் கூலி கிடைக்கவில்லை என்று அழுது புலம்பும்போதும் மனதைத் தொடுகிறார். வேதிகாவின் பாத்திரப் படைப்புதான் அதீதமாகப் படுகிறது. பெரியப்பா இறந்துபோயிருக்கும் நிலையில் ஒருவனை அப்படியா கேலி செய்து பார்ப்பாள் ஒருத்தி? இயல்பாக இல்லை. அதுபோலவே ஊரார் நெல்சோறு சாப்பிடவேண்டும் என்று தன் கணவனின் மரணத்தை மறைக்க நினைப்பது சரி. ஆனால் மொத்த ஊரும் நெல்சோறுக்காக ஒரு மரணத்தை மறைப்பதாகக் காட்டுவது நெருடுகிறது. இதில் எவர் முகத்திலும் கவலையின் ரேகைகூட இல்லை. கிண்டலும் கேலியுமாக சந்தோஷமாக அதர்வாவை வம்பிழுக்கிறார்கள்.அவர்களுக்கு மனிதத் தன்மையே இல்லையா என்ன? தன்ஷிகா தன் வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார். அதர்வாவின் பாட்டியாக வரும் கச்சம்மா நடித்ததாகவே தெரியவில்லை. பாத்திரங்களுக்குப் பொருத்தமான கலைஞர்களை தேர்வு செய்தது பாலாவின் பலம். ஆனால், நாஞ்சில் நாடனின் வசனங்களைப் பேசும் அதர்வாவும், வேதிகாவும் உச்சரிக்கும் தமிழில் 2012ம் ஆண்டு வாடை அடிக்கிறது.

ஊர்மக்கள் அனைவரும் கால்நடையாக எஸ்டேட்டுக்குப் பயணமாகும் காட்சி கண்ணீர் வரவழைக்கிறது. ஆனால் மண்ணே போய்வரவா...காடே போய்வரவா போன்ற வைரமுத்துவின் வழக்கமான வரிகளைத் தவிர்த்திருக்கலாம். மற்றபடி வைரமுத்துவின் வரிகள் கவர்கின்றன. படத்தின் உயிர்நாடியாக இருந்திருக்கவேண்டிய ஜீ.வி.பிரகாஷ்குமாரின் இசை பாடல்களில் நன்றாக இருந்தாலும், பின்னணி இசையில் முற்றிலுமாக கைவிட்டுவிட்டது. அதிலும் அந்த மருத்துவமனை காட்சியில் காதுகளைக் கிழிக்கும் வயலின் ஓசை ஒருசோறு பதம் ரகம். தொடக்கத்தில் கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் திரைக்கதை, எஸ்டேட்டுக்குள் நுழைந்தவுடன் சரசரவென்று போகிறது . எஸ்டேட்டுகளின் உள்ள ‘லயன்’ வீடுகள் காலனி போல வரிசையாகவே இருக்கும். ஆனால் படத்தில் சமவெளியில் இருப்பது போன்றே மலைப்பகுதியிலும் குடிசைகள் இருக்கின்றன.

சேது,நந்தா மாதிரி படங்களில் தேவையற்ற காட்சிகள் இருக்காது. ஆனால் இந்தப் படத்தில் தேவையற்ற காட்சிகள் நிறைய ஆக்ரமிக்கின்றன. நாவலாசிரியர் பி.எச்.டேனியல், படத்தில் பரிசுத்தம் என்கிற பாத்திரமாக்கப்பட்டிருக்கிறார். எந்த மருத்துவர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலைகண்டு இறங்கி வருத்தப்பட்டு அதைப் பதிவு செய்தாரோ, அவர்களுக்காக சங்கம் அமைக்க பாடுபட்டாரோ அவர் கேலிப்பொருள் போல, மதமாற்றம் செய்ய மட்டுமே வந்தவர்போல சித்தரித்திரிக்கப்பட்டிருப்பது படைப்பு நேர்மையற்றது. பரிசுத்தமும் அவருடைய ஆங்கிலேய மனைவியும் ஆடிப்பாடும் காட்சி ரசனை குறைவான வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. கொள்ளை நோயில் தன்ஷிகா சாகக்கிடக்க, அவர்கள் அப்பத்தைத் தூக்கியெறிந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதுபோன்ற காட்சியமைப்புகள் துருத்திக்கொண்டு தெரிகின்றன. மருத்துவமும், கல்வியும் கிறிஸ்துவ மிஷனரிகள் இன்றி இந்தியாவில் இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது என்கிற வரலாற்று உண்மைக்கு மாறாக, கிறிஸ்துவர்கள் மதப்பிரசாரம் மட்டுமே செய்தார்கள். மருத்துவமே செய்யவில்லை என்கிறது பரதேசி. இந்தக் காட்சிகள் அனைத்துமே படத்தின் கதையோட்டத்துக்குத் தொடர்பே இல்லாமல் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது படத்தின் தரத்தை பாதாளத்திற்கு இட்டுச் செல்கிறது. ‘எரியும் பனிக்காடு’ நாவலில் எஸ்டேட் வேலைக்குச் செல்பவர்கள் சாதிய பாகுபாடு காரணமாக உள்ளூரில் கஞ்சிக்கு வழியின்றித் தவித்த தலித்துகள் என்பது மிக ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் ஒரு கடையில் பலகையின்மேல் அமர அதர்வாவுக்கு அனுமதி மறுக்கப்படும் ஒரே ஒரு காட்சியில் மட்டும் அப்படி ஓர் உணர்வை பார்வையாளருக்குத் தருகிறது பரதேசி. இப்படியான காட்சிகளால்தான் முற்பாதியை நிரப்பி அவர்கள் ஊர்விட்டு ஊர்சென்று எஸ்டேட்டுக்குச் செல்வதற்கான காரணங்களை அடுக்கி இருக்க வேண்டும். பிற்பாதியில் மிஷனரிகள் குறித்த காட்சிகளுக்குக் கொடுத்த நேரத்தை இத்தகைய காட்சிகளுக்குத் தந்திருந்தால், பரதேசியை எந்தத் தயக்கமும் இன்றி பாராட்டலாம். பாலாவின் நேர்மை மீதும் நமக்கு கேள்வி எழுந்திருக்காது. மொழிபெயர்ப்பு செய்த இரா.முருகவேளிடம் கதை உரிமையைப் பெற்ற மறுநாளில் இருந்து தொடர்புகளை துண்டித்துக்கொண்டார் என்று ச.பாலமுருகம் தெரிவித்திருப்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நாவலில் உள்ளது போல் கணவன் - மனைவியாக எஸ்டேட்டுக்கு வராமல் இயக்குநர் மனைவியை மட்டும் கிளைமாக்ஸில் வரவைத்திருப்பது புத்திசாலித்தனம். அதுவே படத்திற்கு பலம் சேர்க்கிறது.இப்படி சிற்சில மாற்றங்களைச் செய்தாலும் பரதேசியின் கதை ‘எரியும் பனிக்காடு’ நாவல்தான். அப்படியிருக்கையில் ’மூலக்கதை - பி.எச்.டேனியல்’ என்றலலவா டைட்டிலில் போட்டிருக்கவேண்டும்? அவருக்கு வெறும் நன்றி கார்டு போட்டுவிட்டு, கதை என்று பாலா தன் பெயரைப் போடுவது அதிர்ச்சியாய் இருக்கிறது. நாஞ்சில் நாடன் கதை, ஜெயமோகன் கதை எல்லாவற்றையும் இணைத்தார் பாலா. அதனால் கதை அவருடையதுதான் என்கிறார்கள் சிலர். இந்தப் படத்திற்கு எந்த வகையிலும் பொருந்தாத உதவாத அந்தக் கதைகளை ஏன் வலிந்து திணிக்கவேண்டும்?அது படைப்பு சுதந்திரம் என்றால், அது நாவலின் மையக்கருவுக்கு அப்படியே நேர் எதிரானதாக இல்லாமல் இருக்க வேண்டும். அதுபோலவே நாவலின் முன்னுரையில் வரும் ஆதவன் தீட்சண்யாவின் கவிதைவரிகளையும் மிகச் சிறிய மாற்றம் செய்து படத்தின் ஆரம்பத்தில் தன் பெயரில் பயன்படுத்தி இருப்பதையும் ஏற்கமுடியாது. தரமான படமாக வந்திருக்கவேண்டிய படம் பரதேசி. படைப்பு நேர்மை தவறியதால் படத்தை பாராட்ட முடியவில்லை.

ஈழத்துப் பெண்ணை தமிழகத்து மருமகளாக்கியதால் நாம் ‘நந்தா’வைக் கொண்டாடினோம். சேது படத்தில் ‘அக்ரஹாரத்தில் பாலியல் விடுதியா?’ என்று கொதிப்பார்கள். அப்போது நாம் கேட்கவில்லை ‘ஏன்? அப்ப மற்ற தெருக்களைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?’ என்று நாம் கேட்கவில்லை. ‘பார்ப்பனப் பெண் பாலியல் விடுதிக்கு வர வெட்கமாக இல்லை?’ என்று நாயகன் கேட்கும்போதும், ‘அப்படியென்றால் மற்ற சாதிப் பெண்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்’’ என்று நாம் கேட்கவில்லை. ஒரு முழு பாட்டையுமே பாலா சமஸ்கிருதத்தில் வைத்தபோதும் நாம் கேள்வி கேட்கவில்லை. சேதுவின் அழகியலுக்காவும், கலை நேர்த்திக்காகவும் வாய்மூடி இருந்தோம். வெகுஜனபத்திரிகைகள் போற்றிப் புகழ்ந்த சேது குறித்து ‘நந்தன்’ இதழ் மட்டுமே இந்தக் கேள்விகளை அப்போது முன்வைத்தது. நாம் கேட்கத் தவறிய கேள்விகள்தான் பின்னாளில் உருமாறி மாற்றுத்திறனாளிகள் இவ்வுலகில் வாழத் தகுதியற்றவர்கள் என்று தீர்ப்பு கூறிய ‘நான் கடவுளா’கவும், இட ஒதுக்கீட்டுக்கு எதிரானதாகவும் மாட்டுக்கறி உண்பவர்களை இழிவானவர்களாகக் காட்டும் ஆதிக்க சாதித் திமிராக ‘அவன் - இவன்’ ஆகவும், இப்போது உச்சகட்டமாக ‘பரதேசி’யாகவும் உருமாறி நிற்கிறது. இதை உலக சினிமா, உள்ளூர் சினிமா என்றெல்லாம் கொண்டாடுவதன் மூலம் பி.எச்.டேனியலையும் எரியும் பனிக்காட்டையும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும் கொச்சைப்படுத்தாமல் இப்போதாவது கேள்வி கேட்போம்.

No comments:

Post a Comment