Saturday, January 08, 2011

இரவைக் கொண்டாடுவோம்

(புத்தகச்சந்தையை ஒட்டி 7.1.2011 அன்று மாலை வெளியிடப்பட்ட “இரவு” நூலிற்காக எழுதப்பட்ட கட்டுரை இது. கவிஞர் மதுமிதா தொகுத்த இந்நூலில் 36 எழுத்தாளர்கள் தங்களுடைய இரவு குறித்த கருத்துகள், மனப்பதிவுகள், அனுபவங்கள், கதை, கவிதை ஆகியவற்றை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்கள். சந்தியா பதிப்பம் இதனை வெளியிட்டுள்ளது)ரவு 10 மணியானால் என் தந்தை இப்படி சொல்வார்

“என் சாம்ராஜ்ய நேரம் தொடங்கிசிடுச்சு

உண்மைதான். எனக்கும் அப்படியே. ஊரெல்லாம் உறங்கத் தயாராய் இருக்கும் பொழுதில் நாம் மட்டும் ஏதோ ஒரு வேலைக்காக தயாராவது ஒரு வித கர்வத்தையளிக்கும். படிக்கிற காலத்தில் நான் படிக்க அமருகிற நேரம் இரவு 10 மணியாய் இருக்கும். விடிய விடிய என்னால் அதிகாலை 4 மணி வரை கூட படிக்க முடியும். ஆனால் 10 மணிக்குத் தூங்கி காலை 4 மணிக்கு எழ மட்டும் என்னால் முடியாது.

ஊரே விழிக்கும் வேளையில் தூங்குகிறாய். என்று அதிகாலையில் விழித்து விடும் என்னுடைய நண்பர்கள் கேட்பார்கள். இந்த தலைகீழ்த்தன்மை எனக்குப் பிடித்திருக்கிறது. இரவு எப்போதும் என்னை தாலாட்டியதில்லை. மாறாக உற்சாகம் கொள்ள வைக்கிறது.

இசை கேட்கும் இரவு, இலக்கியம் வாசிக்கும் இரவு, நண்பர்களுடன் பொழுதுபோக்கும் இரவு, மேடையில் கழியும் இரவு, தனிமை கனத்திருக்கும் இரவு, உற்சாகம் பொங்கும் இரவு, எழுதத் தூண்டும் இரவு என்று பல இரவுகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் பொதுவாகவே எழுத்துக்களில் இரவு என்பதை இருளாகவும், இருளை கருப்பாகவும், கருப்பை துக்கத்தின் அல்லது ஒரு நெகடிவ் தன்மைக்கான குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.  பகல் ஒளி மிகுந்தது. வெளிச்சமானது; அதில் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை; எல்லோருடைய கண்களும் பார்க்கும் வண்ணம் பகலில் தவறுகள் நிகழாது என்கிற மாயத்தோற்றம் உண்டு. உண்மையில் தவறு செய்ய நினைப்பவருக்கு பகலென்ன இரவென்ன? சொல்லப்போனால் இரவுகளில் வீட்டில் காத்திருக்கும் துணையோ, உறவோ ஏதோ ஒன்றிற்காக வீட்டிற்குத் திரும்பும் நெருக்கடி நிறைய பேருக்குண்டு. ஆகவே தவறுகள் அல்லது தவறுகள் என்று கருதப்படுபவையெல்லாம்  அதிகமாக பகலில் நிகழவே வாய்ப்பு அதிகம்.

மனிதன் தூங்கும்போதுதான் தப்பு செய்யாமலிருக்கிறான் என்று யாரோ சொன்ன பொன்மொழி உண்டு. ஆகவே ஊர் உறங்கும் இரவில் நிகழும் தவறுகளை விட பகலில் நிகழும் தவறுகள் அதிகமாக இருக்கக் கூடும். இரவு என்பதை துக்கத்தின் குறியீடாகவும், தவறுகளின் குறியீடாகவும் திரைப்படங்களிலும், கதைகளிலும், கவிதைகளிலும் காண்கிறோம். என்னைப் பொறுத்தவரை இரவு கொண்டாட்டத்திற்குரியது. இரவை நான் கொண்டாடுகிறேன்.

ஊர் அடங்கிய பின்னர் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வரும் சன்னமான இசை ஆளை மயக்கும். என் சிறுவயதில் பள்ளிப் பிராயத்தில் இசையில்லாத இரவுகளே இல்லை எனலாம். ஒரு வானொலிப்பெட்டி வீட்டில் இருந்தது. நான் படித்தாலும், எழுதினாலும், அந்த வானொலியில் திரைப்படப்பாடல் ஒலித்துகொண்டேயிருக்கும். பகல் பூராவும் துள்ளல் இசைப்பாடல்களை ஒலிபரப்பினாலும், இரவுகளில் மட்டும் வானொலியில் எனக்கு மிகவும் விருப்பமான மெலடி பாடல்கள் ஒலிபரப்பாகும்போது அதை விட மனசிருக்காது. வானொலியைக் கேட்டுக்கொண்டே எல்லாவற்றையும் செய்வேன். ரேடியோ கேட்டுக்கிட்டே படிக்கிறியே? எப்படி மனசில் பதியும்என்று அம்மா திட்டிக்கொண்டே இருப்பது இன்னமும் காதில் ரீங்காரமிடுகிறது. ஆனாலும் விடமாட்டேன். இரவுகளிலும் இது தொடரும்.  அதிகாலையில் எழுந்து படித்தால் நன்றாக மனதில் பதியும் என்று பிறர் சொன்னதைக் கேட்டு நான் சிலநாட்கள் அதையும் முயன்றிருக்கிறேன். ஆனால் அதிகாலை கண்விழிப்பு எனக்கு தூக்கத்தையே கொடுத்தது. என் உடல் அப்படி பழகியிருந்தது எனக்கு மிகப்பெரும் பிரச்சனையிருந்த்து. அதனால் வழக்கம் போலவே இரவுகளையே தேர்ந்தெடுத்தேன் படிப்பதற்கு. உறங்கச் செல்லும் வேளையில் இளையராஜாவின் இசை எனக்கு கைகொடுத்திருக்கின்றது.

என் நண்பர்கள் என்னை ‘ராப்பிசாசுஎன்றும் ‘ராக்கோழிஎன்றும் செல்லமாய் அழைப்பார்கள். இரவில் படிக்கும் பழக்கமே பின்னாளில் என் பணிகளையும் இரவுகளில் செய்ய வைத்தது. பணிநிமித்தம் முக்கியமான கட்டுரை எழுதவேண்டுமென்றால் அவ்வபோது அதை இரவுக்குத் தள்ளிப்போட்டு எழுதுவேன். என்னுடைய பயணங்கள் அனைத்துமே இரவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். இரவுப்பயணம் அலாதியானது. அதிலும் ரயிலில் இரவுப் பயணம் அற்புதம்.

ஒரு நொடி கூட உறங்காமல் விழித்திருந்த இரவுகள் நிறைய உண்டு. அவை பெரும்பாலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய கலை இரவுகள் தான். “சிவராத்திரிக்கு கண்விழிக்கும் நீங்கள் ஒரே ஒரு நாள் இந்த கலை இரவுக்காக கண்விழியுங்கள்என்று பிரசாரம் நடக்கும்.  நாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கூட கலை இரவுகள் களைகட்டும். நான் கலை இரவுகளில் இயக்கப் பாடல்களைப் பாடுவேன். விடிய விடிய கண்விழித்து கலை நிகழ்வுகளைக் காண வரும் மக்கள் கூட்டத்தைப் பார்க்க வியப்பாகவே இருக்கும். அதிலும் நாகப்பட்டினம் நகரில் நடக்கும் கலை இரவு ஊர்த்திருவிழா போல. சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தெல்லாம் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் டிராக்டர்களிலும், வேன்களிலும் மாலை 6 மணியிலிருந்தே வந்து அவுரித்திடலை நிரப்பி விடுவார்கள். வங்கக்கடலே திடலில் வந்து சங்கமமானதைப் போல பார்க்க அத்தனை ஆனந்தமாயிருக்கும். அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் இந்த கலை இரவில் பாடுவது அதிலும் மக்கள் பாடல்களை அவர்களுக்காக பாடுவது என்பது மிகுந்த மனநிறைவையும் உற்சாகத்தையும் கொடுக்கும். நான் முதலில் ஒரு பார்வையாளராகத்தான் கலை இரவிற்குச் செல்லத் தொடங்கினேன்.  என்னை மாற்றிய பெருமையும் இந்த கலை இரவிற்கு உண்டு.

எத்தனையோ கற்றுக்கொண்டேன் அந்த கலை இரவுகளில். வாழ்க்கையை, மக்கள் பிரச்சனைகளை, நம்மை மீறிய ஒரு உலகமிருப்பதை எனக்கு என் பள்ளிப்பருவத்திலேயே அடையாளம் காட்டியது கலை இரவுகள் தான். கலை இரவுகளை நான் அதிகம் நேசிக்கிறேன். இந்த இருபதாண்டுகளில் கலை இரவு என்னும் வடிவம் பழகிப்போய் அது பழையதாகி இருக்கலாம். மக்களிடம் பேச ஒரு புது வடிவத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமிருக்கலாம். ஆனால் என் வயதையொத்தவர்களிடம் கலை இரவுகள் ஏற்படுத்திய தாக்கத்தை நேரடியாக நான் கண்டிருக்கிறேன். கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், தேவராட்டம் என்று எல்லாவிதமான ஆட்டக்கலைகளையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது கலை இரவு. மண்ணின் கலைகளை ரசிக்கக் கற்றுக்கொடுத்தது. மக்கள் பாடல்களை கரிசல் குயில் கிருஷ்ணசாமி அண்ணனின் குரலில் இரவெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பாரதி கிருஷ்ணகுமார் போன்ற எத்தனையோ சிறந்த உரை வீச்சாளர்களின் பேச்சுக்களைக் கேட்டு என் பள்ளிப்பருவத்தில் கண்ணீர் விட்டிருக்கிறேன். இந்த இரவுகள் தான் என்னை ஆளாக்கின. சமூகத்தை நேசிக்க வைத்தன. என் சுயநலத்தைப் பொசுக்கின. என் வாசிப்பை அதிகப்படுத்தின. அரசியலில் ஆர்வம் கொள்ள வைத்தன. மக்களுக்காய் யோசிக்க, ஒரு சொட்டாவது விழிநீரை வெளியேற்ற வைத்தன, என் கலையை வளர்த்தன. நானும் ஓரிரவில் இரவு 11 மணி வாக்கில் முதன் முதலில் நாகை அருகே திருக்குவளையில் நடந்த கலைஇரவில் மேடையேறிப் பாடினேன். அன்றைக்குக் கிடைத்த மகிழ்ச்சி என் வாழ்நாளில் இனி கிட்டுமா என்று தெரியவில்லை. அன்றையிலிருந்து நிறைய மேடைகள், எத்தனையோ நகரங்களில் கிராமங்களில் என்று இயக்கப்பாடல்களைப் பாடியாகி விட்ட்து.

இன்று ஒரு பத்திரிகையாளராய் நானிருக்கிறேன். எழுதுகையில் இரவுகளில் எழுதினாலும் அது என்றைக்கு யாரை எப்போது எப்படி சென்றடைகிறது என்பது நமக்குத் தெரியாது. இதைவிடவும் எனக்கு ஒரு கலைஞராய் கலை இரவில் மக்களிடையே பாடுவது அதிக மனநிறைவையும், மகிழ்வையும் அளித்தது. இந்த இரவு வீணாகவில்லை. உருப்படியாய் எதோ செய்கிறோம் என்கிற நிறைவை அளித்தது.

ஒவ்வொரு கலை இரவை முடித்துவிட்டு வந்தபின்னும், பல இரவுகள் நானும் என் பெற்றோரும் அதுகுறித்து சிலாகித்துப் பேசியவண்ணம் இருப்பதெல்லாம் இப்போதும் மனக்கண்ணில் நிழலாடுகின்றன. என் தந்தை தமுஎகசவின் மாவட்டச் செயலாளராய் இருந்தார். அதனால் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார். அவரும் ஒரு ராக்கோழி என்பதால் எல்லா வேலைகளையும் இரவுகளில் தான் செய்வார். அம்மா “அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்குஎன்று என்னை கேலி பேசுவார்.

என் படிப்பை முடித்துவிட்டு பணிநிமித்தம் நான் செனைக்கு வந்தபோது சென்னை சட்டென்று இரவு 10 மணிக்கெல்லாம் உறங்கும் நகரமாகிவிடுவதைப் பார்க்க வியப்பாய் இருந்தது. எங்கள் ஊரில் திரைப்படத்திற்குச் செல்வதென்றால் பெரும்பாலும் இரண்டாவது காட்சிக்குத்தான் செல்வோம் இங்கே 10 மணிக்கு நகரம் உறங்கிவிடுவதைப் பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது. தூங்கா நகரம் என்ற பெயருக்காகவே மதுரையை மிகவும் பிடிக்கும்.

ஒரு நேரத்தில் என் வேலை போய், வீட்டிற்கு வாடகை கொடுக்க இயலாத சூழலில் வீட்டை காலி செய்து பொருட்களையெல்லாம் நாகையில் உள்ள பெற்றோர் வீட்டில் கொண்டு வைத்துவிட்டு நான் மட்டும் தோழர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் ஒரு வீடு. ஏராளமான நண்பர்களைப் பெற்றிருக்கும் நான் ஓரிடத்தில் தங்க இயலாமல் போகும்போது இன்னொரு தோழியோ தோழனோ கைகொடுத்த நிலைமை இருந்தது. தோழர்கள் ஓவியா, நீலகண்டன், அமுதா, ரேவதி, நீதிராஜன், ஜாஃபர், நா.வே.அருள், அ.குமரேசன், லட்சுமி, கலைமுகில், ராஜன்குறை, மோனிகா, மலர்விழி, மல்லிகா, கல்பனா, பாரதி புத்தகாலயம் சிராஜுதீன், அ.மங்கை போன்ற பலருடைய வீடுகளிலும், தமுஎகசவின் மாநிலக்குழு அலுவலகத்திலும் குறைந்தபட்சம் ஒரு இரவாவது தங்கியிருக்கிறேன்.

மாலை அரை அலுவலகம், அதன்பின்னர் கூட்டங்கள் அல்லது தோழர்களை சந்தித்தல் என்று இரவு வரை தாக்குபிடித்தாலும் இரவு 9 மணிக்கு எங்கு போவது என்ற கேள்வி எழும். யார் அந்த நேரத்தில் ஊரில் அல்லது வீட்டில் இருக்கிறார்கள் என்று கைபேசியில் பேசிவிட்டு அங்கே போய்விடுவது வழக்கம். எனக்கென்று ஒரு டி.வி.எஸ். சாம்ப் இருக்கிறது. அதனால் எத்தனை மணியானாலும் இரவில் எங்கு வேண்டுமானாலும் போய்விடும் வசதி இருந்த்து. “டான் குயிக்ஸாட்டின் குதிரை போன்றது உங்கள் வாகனம். டான் குயிக்ஸாட் தனது குதிரை இரவு எங்கே களைத்து நிற்கிறதோ அங்கே தங்கி விடுவான். அது போல்வே இரவு இறுதியாக உங்கள் வண்டி நிற்கிறதோ அங்கே தங்கி விடுகிறீர்கள்என்று ஒரு முறை கவிஞர் லீனா மணிமேகலை என்னிடம் கூறியதை அவ்வபோது நினைத்துக்கொள்வேன்..

தோழர்கள் நீலகண்டன், அமுதா, மலர்விழி – இவர்களோடுதான் அதிக இரவுகளை கழித்திருக்கிறேன் அந்த காலகட்டத்தில். அப்போது மலர்விழிக்கு சொந்தமான அச்சகம் ஒன்றில் நீண்டநாள் தங்கியிருந்தேன். மறக்க முடியாத இரவுகள் அவை.

நான் நேசிக்கும் இரவுகள் எனக்கு பெரும் சோதனையாய் அமைந்த காலமும் வந்தது. அப்போதுதான் ஈழத்தின் பேரவலமும், நெஞ்சில் நீங்காத காயத்தை உண்டாக்கிய இறுதிப் போரின் நேரம். அந்த செய்திகளும் காட்சிகளும் கண்டு விம்மி வெடிக்கும் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அந்த அச்சகத்தில் தான் நான் பல இரவுகளை மலர்விழியோடு கழித்தேன். பிரபாகரனின் உடல் என்ற ஒன்றை தொலைக்காட்சியில் கண்டபோது என் சிறுவயதிலிருந்து நேசித்த ஒரு பிம்பம் இப்போதில்லை என்கிற உண்மையை நம்ப மறுத்தது மனம். இரவுகளில் இணையத்தில் மூழ்கி பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்று குழம்பித் தவித்து ஒவ்வொரு புகைப்படமும் வெளியாக வெளியாக உறைந்து போனேன். புலிகள் மேலிருந்த விமர்சனமெல்லாம் மறந்து போய் பித்து மனநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன் அந்த சமயத்தில்.

அன்றாடம் இரவுகளில் இரண்டு மூன்று மணி வரை நானும் மலர்விழியும் அமர்ந்து இணையத்தில் ஈழம் குறித்த செய்திகளை வாசிப்பது படங்களை சேகரிப்பது என்பதை வாடிக்கையாக வைத்திருந்தோம். கோடரிகொண்டு பிளக்கப்பட்ட பிரபாகரனின் கபாலமும், எண்ணற்ற மக்கள கொத்து கொத்தாய் மடிந்த அவலமும் உறங்கவிடாமல் என் இரவுகளை இம்சித்தன. நான் இரவுகளில் வேலை செய்பவளாதலால் என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் போனது. இணையத்தில் கிடைக்கப்பெறும் அத்தனை காணொளிகளையும் படங்களையும் பார்த்துப் பார்த்து குழம்பி பித்து நிலையில் இருந்தேன் எனலாம். இரவுகள் எல்லாமே இணையத்தில் வீணாகின. ஒரு கட்டத்தில் இவற்றில் எந்த புகைப்படத்தையோ காணொளியையோ இனி பார்க்கக்கூடாது என்று முடிவு செய்து தவிர்க்கத் தொடங்கினேன். இது என் இரவுகளை மீண்டும் எனதாக்கிக் கொள்ளும் ஒரு யுக்தி. மீளாத் துயரிலிருந்து என்னை நானே மீட்டெடுக்க நிர்பந்தித்துக்கொண்டேன். இன்று வரை ஈழம் என்ற பெயரில் வரும் எந்த காணொளியையும் படத்தையும் பார்ப்பதேயில்லை நான். இந்த முயற்சி ஓரளவிற்கு கைகொடுத்தது. மீண்டும் என் இரவுகள் எனக்குச் சொந்தமாயின. மீண்டும் இரவுகளில் வேலை செய்யத் தொடங்கினேன். அதன்பின் தான் அதிகமாக எழுத்த் தொடங்கினேன் என்று நினைக்கிறேன்.

ஐஸ்ஹவுஸ் மசூதி போகும் வழியில் ராயப்பேட்டையில் இருந்தது நாங்கள் இருந்த அச்சகத்தின் அலுவலகம். ஒரு கட்டிடத்தின் சின்ன சந்திற்குள் நுழைந்து உள்ளே வந்தால் அச்சகம். அந்த சின்ன சந்தில் இரவில் மட்டும் படுக்க வரும் இரண்டு வயதான் பாட்டிகள் இருந்தார்கள். நான் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தாண்டித்தான் அச்சகத்திற்குள் வருவேன். ஒவ்வொரு முறையும் இருட்டில் அவர்களை மிதித்து விடக்கூடாதே என்று ஜாக்கிரதையாக வருவேன். சிலசமயம் மிதித்துவிடுவதும் உண்டு. அந்த பாட்டிகள் எங்களுக்கு காவல் போலிருந்தார்கள். அவர்களைத் தாண்டித்தான் யாராயிருந்தாலும் உள்ளே வரவேண்டும். ஒரு நாள் விசாரித்தபோது ஒரு பாட்டி சொன்னார் “பகலில் எங்காவது போயிடுவேன். நாலு காசு வேணும்ல சாப்பிட.. நைட்டு எங்கே போறது. தூங்கணுமே. அதான் இந்த சந்துக்கு வந்து படுத்துடுவேன்.என்றது பாட்டி. அவருடைய மகனும் மகளும் இதே ஊரில் இருப்பதாகவும் ஆனால் இவரை கைவிட்டுவிட்டதாகவும் சொன்னபோது வேதனை அதிகமானது. இன்னொரு பாட்டிக்கும் கிட்டத்தட்ட இதே கதைதான். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருந்தார்கள். இந்த தள்ளாத வயதில் அந்தப் பாட்டிகளின் நடைபாதை வாழ்க்கை துயரமானது.

ஒரு இரவு நான் அலுவலகத்திலிருந்து என் வண்டியில் வந்துகொண்டிருந்தேன். பீட்டர்ஸ் சாலையோர நடைபாதையில் புதிதாய் பளீர் விளக்கொளியில் ஒரு ஷாமியானா பந்தல் போடப்பட்டு கூட்டமாக இருந்தது. சரியாய் கவனிக்காமல் வந்து அச்சகத்தில் புகுந்தேன். திடீரென்று உறைத்தது. இரண்டு நாளைக்கு முன்புதான் நான் வழக்கம்போல இரவு வரும்போது பாட்டி முனகிக்கொண்டிருந்தது. வயிறை வலிக்குதுஎன்றது. மறுநாள் காலையில் பாட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இரண்டு நாளாயிற்று..அவசரமாய் வெளியே வந்தேன். விளக்கு வெளிச்சத்தை நோக்கி நடந்தேன். நடைபாதையிலேயே ஷாமியானா போடப்பட்டு, பளீர் விளக்கொளியில் பாட்டி சவப்பெட்டிக்குள் கிடந்ததைப் பார்த்தேன். இன்னொரு பாட்டி என்னைக் கணடதும் ஓடி வந்து கண்ணீர் விட்டது. நான் ஒரு வார்த்தையும் பேசாமல் அச்சகத்தில் நுழைந்தேன். நடைபாதையில் வாழ்ந்து நடைபாதையிலேயே மறுநாள்  பாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட இருக்கிறது. தாங்க இயலாமல் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினேன். மலர்விழிக்கு கைபேசியில் அழைத்து தகவல் சொல்ல முடியாமல் விம்ம, அவள் உடனே கிளம்பி வந்தாள். அதற்கு முன் நீலகண்டனும், அமுதாவும் வந்து நின்றார்கள். பாட்டியின் உடல் இருக்கும் இட்த்திற்குப் போவோம் என்றார்கள். எனக்கென்னவோ அங்கு போகவேண்டுமென்று தோன்றவில்லை. போகவும் இல்லை. பாட்டியின் சடலம் நடைபாதையில் அன்று இன்னொரு பாட்டி இன்னும் சிலரின் துணையுடனும் இரவு முழுதும் இருந்த்து. அந்த இரவு முழுதும் சவப்பெட்டிக்குள் கிடந்த பாட்டியைப் போலவே நானும் கிடந்தேன் அச்சகத்தினுள்.

நமக்காவது அச்சகம் இருக்கிறது. நண்பர்கள் இருக்கிறார்கள். நடைபாதைவாசிகளுக்கு யாரிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ளும் எனக்கு பாட்டியின் உடலோடு இரவைக் கழித்து இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய இன்னொரு பாட்டியின் உருவம் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறது.

நட்சத்திரங்கள் பகலில் விழிகளுக்குப் புலப்படுவதில்லை. அவை மனிதர்களுக்குக் காட்சி தர தேவைப்படுவதும் ஒரு இரவுதானே?

இரவைக் கொண்டாடுவோம்!


5 comments:

 1. நல்ல பதிவு.

  //இரவைக் கொண்டாடுவோம்!//

  ஆம், கொண்டாடுவோம்! :)

  ReplyDelete
 2. உணர்ந்து உள் வாங்கினேன் நன்றி.

  ReplyDelete
 3. நல்லா இருக்கு

  ReplyDelete
 4. நல்ல பதிவு, தமிழ்மணத்தில் ஓட்டு போட முடியவில்லை :(

  ReplyDelete