Monday, May 20, 2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் - தகுமா?


’’1952ல் லஷ்மணசாமி முதலியார் கமிஷன் அளித்த அறிக்கைதான் தாய்மொழிவழிக் கல்வியை அங்கீகரித்தது. ஆங்கிலேயர் வகுத்திருந்த சட்டங்களின்படி ஆங்கிலவழிக் கல்விக்கு மட்டுமே அனுமதி இருந்தது. தாய்மொழிவழிக் கல்வி என்கிற உரிமையை போராடித்தான் பெற்றோம். இந்தப் போராட்ட வரலாறை தூக்கியெறிந்து தமிழக அரசு திடீரென்று ஆங்கில வழிக் கல்வியை அரசுப் பள்ளிகள் துவங்கவிருப்பதாக அறிவித்திருப்பது மிகத் தவறு.’’ என்கிறார் கல்வியாளர் இரா. நடராசன்.

தமிழக அரசின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த தமிழகத்தில் ஆங்கிலவழிக்கல்விக்கு எதிர்ப்பு என்பது இயல்பான ஒன்றுதான். மும்மொழிக் கொள்கையை எதிர்த்து இருமொழிக்கொள்கை வந்தாலும், அந்த இருமொழிகளில் ஒன்றாக வேண்டுமானால் ஆங்கிலத்தை அனுமதிக்கலாமேயொழிய, ஒரே மொழியாக ஆங்கிலத்தை அனுமதிப்பதை திராவிட, தமிழ் தேசிய அமைப்புகள் வரவேற்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றன. இன்னொரு பக்கம், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்ப, நவீன அடிமைகளை உருவாக்க கல்வி மற்றும் மொழிக் கொள்கைகள் வார்க்கப்படுகின்றன என்றும் அந்தக் கொள்கைகளை எதிர்ப்பதற்கு மாறாக, இவ்வாறு அரசுப்பள்ளிகளிலேயே ஆங்கிலப் பயிற்றுமொழியைத் திணிப்பது என்பது அவற்றின் முன் சரணடைகிற செயலாகவே இருக்கிறது என்றும் எதிர்காலத் தமிழ்த்தலைமுறைகளை சுயசிந்தனையற்ற கூட்டமாக மாற்றுகிற இந்த முடிவை எதிர்ப்பதாகவும் இடதுசாரி முகாமின் குரலாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கூறுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் 19,000 பேருக்கும் மேற்பட்டோர் வென்றனர். அவர்களில் வெறும் 5 பேர் மட்டுமே அரசுப் பள்ளியில் வேலை வேண்டாம் என்று விருப்பம் தெரிவித்தவர்கள். மற்ற அனைவருமே அரசுப் பள்ளிகளில்தான் வேலை செய்ய விரும்புகிறார்கள். தகுதித் தேர்வில் வென்றவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் பணியாற்றுகிறார்கள். ‘’அப்படியெனில் தகுதித் தேர்வில் வெல்லாதவர்கள்தான் தனியார் பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள். காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதை மிக முக்கியமான விஷயமாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வருக்கு, தகுதித் தேர்வில் வென்றவர்கள் பணியாற்றுவது அரசுப் பள்ளிகளில்தான் என்று பெருமையாக ஏன் அறிவிக்கவில்லை? அப்படியெல்லாம் அறிவித்தால் மக்களுக்கு அரசுப் பள்ளிகளின்மீது ஓரளவுக்கேனும் நம்பிக்கை ஏற்படும். ஆனால் அரசோ மறைமுகமாக தனியார் பள்ளிகளைத்தான் ஊக்குவிக்கிறது’’ என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

ஒரு மொழியாக ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதை நம் கல்வியாளர்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதுவே பயிற்றுமொழி என்பதில்தான் சிக்கல் தொடங்குகிறது. மொழியறிவு என்னும் சொல்லே தவறான ஒன்று. மொழிப்புலமைதான் இருக்கமுடியும். அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள் பெரும் ஆராய்ச்சியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் வந்த வரலாறு உண்டு. மெக்காலே கல்விமுறை மனப்பாடத்தை போதிக்கிறது. மனனம் செய்து தேர்வில் வெற்றிபெறும் மதிப்பெண் முறையில் ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்களில் எத்தனை பேர் புரிந்துகொண்டு படிக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. 

‘’தாய்மொழியில் கல்வி கற்காத ஒரு சமூகத்திலிருந்து பாரதி, தாகூர் போன்ற மொழியாளுமை நிறைந்தவர்கள் கிடைக்கமாட்டார்கள். தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழியானால், சிந்திப்பது வேறுமொழியில் என்றாகிவிட்டால் அது ஒரு சமூகத்துக்கு எவ்வளவு பெரிய பின்னடைவு! அறிவியல்பூர்வமாகவும் தாய்மொழியில் பாடங்கள் கற்கும் குழந்தையின் புரிதல் இன்னும் மேம்பட்டதாகவே இருக்கும்’’ என்கிறார் இரா.நடராசன்.

இந்தியாவின் முதல் கல்விக்குழு, கோத்தாரி குழு, யஷ்பால் குழு,  2005 தேசிய கல்வித் திட்டம், இந்திய அரசு பிறப்பித்த 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம், சமச்சீர்க் கல்வி குறித்து ஆய்வு செய்தளித்த முத்துக்குமரன் குழு என்று எல்லாமுமே தாய்மொழி வழி கல்வியையே வலியுறுத்துகின்றன. ஆகவே தொடக்கக் கல்வியில் ஆங்கிலத்தை பயிற்றுமொழியாக்குவதை கல்வியாளர்கள் எதிர்க்கிறார்கள். மேலும், அரசுப் பள்ளிகளில் பயிலும் தமிழவழி மாணவர்களுக்கும், ஆங்கிலவழி மாணவர்களுக்குமிடையே பாகுபாடுகள் தோன்றக்கூடிய வாய்ப்புள்ளது. இது சம உரிமை மற்றும் சமூக நீதிக்கே உலைவைப்பதாகவும் மாறிவிடக்கூடிய அபாயமும் உண்டு. அரசின் தன் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறி சிதம்பரத்தில், தமிழக மாணவர் முன்னணி போராட்டம் நடத்தியது.

அரசின் இந்த அறிவிப்பை வரவேற்பதாகக் கூறுகிறார் உளவியலாளர் பிருந்தா ஜெயராமன். ‘’ஒரு மொழியை கற்றுக்கொள்ள குழந்தைப் பருவத்தைவிட சிறந்த பருவம் வேறு இல்லை. குழந்தைப் பருவத்தில் நான்கைந்து மொழிகளைக் கூட இயல்பாக கற்றுக்கொள்ள முடியும். நம் ஊரில் மேற்படிப்பு எல்லாமே ஆங்கிலத்திலுள்ள சூழலில் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழில் கற்றுவிட்டு திடீரென்று ஆங்கிலத்தில் கற்க மாணவர்கள் கஷ்ட்பபடுகின்றனர். இந்த சிரமம் இனி இல்லை. அத்துடன் மாறிவரும் தொழில்நுட்ப யுகத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே புதிய விஷயங்களுக்கான நூல்கள் வருகின்றன. இந்திய மொழிகளின் ஆராய்ச்சிக்காகவெல்லாம் பணம் ஒதுக்குவதில்லை. ஆகவே சிறு வயதில் இருந்தே ஆங்கிலத்தில் கற்றுக்கொள்வது பின்னாளில் பலனளிக்கும். ‘’ என்கிறார்.

உயர்கல்வி நூல்கள் எதுவும் தமிழில் இல்லை. தஞ்சாவூரைச் சேர்ந்த மருத்துவர் ஜெயராமன் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு தமிழ் மீது கொண்ட அளவற்ற பற்று காரணமாக தமிழில் எம்.பி.பி.எஸ். பாடங்களை மொழிபெயர்த்தார். தனது எம்.டி. தேர்வையும் தமிழிலேயே எழுதினார். ஆனால் தமிழில் தேர்வெழுதியதால் அவருக்கு எம்.டி. பட்டம் மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயராமன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவர் உருவாக்கிய எம்.பி.பி.எஸ். பாடத்திட்டத்தின் மொழியாக்கமும் அரசின் அங்கீகாரத்துக்காக காத்திருக்கிறது. ஜெயராமனைப் போல எத்தனையோ வல்லுநர்கள் , சட்டம், மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் இருப்பார்கள். அவர்களைக் கொண்ட குழு ஒன்றை அழைத்து உயர்கல்வி முழுவதையும் தமிழில் உருவாக்குவதுதான் அறிவியல்பூர்வமான அணுகுமுறையாக இருக்கும். ஆனால் அதைவிட்டுவிட்டு அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலத்தைப் புகுத்துவது சிக்கலானது. தமிழக தொடக்கப்பள்ளிகளில் ஓராசிரியர், ஈராசிரியர் முறை உள்ளது. அவர் ஒருபோதும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவராக இருக்கப்போவதில்லை. ஒரு கணித ஆசிரியரையோ, அறிவியல் ஆசிரியரையோ ஒரு பள்ளிக்குப் போட்டுவிட்டு அவரேதான் எல்லா பாடங்களையும் நடத்துவதையும் நாம் பார்க்கிறோம். அப்படி இருக்கையில் ஆங்கிலவழிக் கல்வி கொண்டுவருவது ஓராசிரியர் ஈராசிரியர் பள்ளிகளில் சிக்கலை உருவாக்கும். ஆசிரியர் - மாணவர் விகிதாசாரம் 1:20 என்று உலகெங்கும் உள்ளது போல் இல்லாவிட்டாலும் 1:40 என்று கூட இல்லை. தமிழகத்தில் 1:80 ஆக உள்ளது. ஆகவே ஒவ்வொரு குழந்தைக்கும் கூடுதல் கவனம் கொடுக்கவேண்டி இருக்கும். ஆனால் ஆசிரியர் எண்ணிக்கை அதற்கு உதவாது. இது போன்ற சிக்கல்களுக்கு அரசு என்ன செய்யப்போகிறது என்பது கேள்விக்குறி.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி இல்லையென்பதால் மக்கள் ஆர்வமாய் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை என்பதாலேயே இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அரசு கூறுவதை மறுக்கிறார்  பிரின்ஸ் கஜேந்திரபாபு. ’’அரசே ஒருவிதத்தில் அரசுப்பள்ளிகள் தரமற்றவை என்று ஒத்துக்கொள்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தில் முதல் 10 இடம் பிடிக்கும் ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களை அரசே 28,000 வரை செலவு செய்து ‘உயர்கல்வி தரும் உயர்கல்வி நிறுவனம்’ ஒன்றில் படிக்கவைக்கிறது. பெரும்பாலும் தனியார் பள்ளிகளில்தான் படிக்கவைக்கப்படுகிறார்கள். இது மறைமுகமாக அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லை என்பதை அரசே ஒப்புக்கொள்வதுதான். அரசே இப்படி இருந்தால் மக்களும் தனியார் பள்ளிகளைத்தானே தேடிப் போவார்கள். ஆங்கில மீடியம் இல்லாததால்தான் மக்கள் அரசுப் பள்ளிகளை நாடவில்லை என்பது உண்மையல்ல. தரமில்லாததால் வரவில்லை என்பதுதான் உண்மை. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். பள்ளிகளில் தேவையான ஆசிரியர்கள் இல்லை. கட்டமைப்பு வசதிகள் இல்லை. கழிப்பறை இல்லை, அப்படியே இருந்தாலும் அதைத் துப்புரவு செய்ய ஏற்பாடுகள் இல்லை,  நல்ல கட்டடம் இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் மேம்படுத்தாமல் ஆங்கிலவழிக் கல்வி என்று அறிவித்தால் யாரும் வரமாட்டார்கள். வெறுமனே தமிழன்னைக்கு 100 கோடி ரூபாய்க்கு சிலை வைப்பதற்கு பதில் அந்தத் தொகையில் இவற்றை செய்யட்டும் முதலில்’’ என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.


நன்றி : இந்தியா டுடே


No comments:

Post a Comment