தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தத் திட்டமாக இருந்தாலும் அது அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும் வரைதான் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. இதற்கு திருநங்கைகள் நலவாரியமும் விதிவிலக்கல்ல. கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டதால் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது வாரியம். ஆரம்பத்தில் மிகவேகமாக செயல்பட்ட வாரியம் இப்போது என்ன செய்கிறதென்றே தெரியவில்லை.
2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி நலவாரியம் அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல் 15 அன்று திருநங்கைகள் தினம் கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. திருநங்கைகள் நலவாரியத்தில் மொத்தம் 23 பேர். அதில் 9 பேர் திருநங்கைகள்; மற்றவர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள். இந்த நலவாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் 2011ம் ஆண்டு வரை இருந்தது. ‘’வாரியத்தின் கூட்டம் 2011க்குப் பிறகு நடக்கவில்லை. புதிய உறுப்பினர்கள் நியமனமும் நடைபெறவில்லை’’ என்கிறார் பிரியாபாபு. இந்த நலவாரியம் திருநங்கைகளுக்கென்று தனியாக சில திட்டங்களை செயல்படுத்துவது, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மக்களுக்கான திட்டங்களில் திருநங்கைகளையும் இணைப்பது என்று இரண்டு வழிகளில் செயல்பட்டது. திருநங்கைகள் சுயதொழில் தொடங்க 20,00 வரை கடனுதவி, தையல் எந்திரங்கள் வழங்குதல், சிகிச்சைக்காகவோ, பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காகவோ சென்னைக்கு வரும் திருநங்கைகள் தங்குவதற்கான தற்காலிக விடுதி, திருநங்கைகளுக்கென அடையாள அட்டை ஆகியவை திருநங்கைகளுக்கான திட்டங்கள்.
திருநஙகைகளுக்கான இலவச நிலப் பட்டா வழங்குதல், வீடு வழங்கும் திட்டம், சுய உதவிக் குழுக்கள் உருவாக்குதல், கல்வி, வேலைவாய்ப்பு, காப்பீட்டுத் திட்டம், ரேஷன் அட்டை மூலம் எல்லோரையும்போல ரேஷன் பொருட்களைப் பெறுதல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல் என்று பல திட்டங்கள் நலவாரியத்தின் மூலம் செயல்படத் துவங்கின. ‘’திருநங்கைகள் நலவாரியத்தின் முக்கிய பங்களிப்பாக நான் நினைப்பது மருத்துவமனையில் இலவசமாக பாலின மாற்று சிகிச்சை செய்துகொள்ளும் திட்டம்தான்.’’ என்கிறார் பிரியாபாபு. முதலில் சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி போன்ற குறிப்பிட்ட மருத்துவமனைகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அரசுக்கு இவ்விஷயத்தில் ஆர்வம் இருந்த அளவுக்கு தொடக்கத்தில் நம் மருத்துவர்களுக்கு இதில் அனுபவமில்லை என்கிறார்கள் திருநங்கைகள். ‘’எனக்கு சென்னை அரசுப் பொது மருத்துவமனையில்தான் அறுவை சிகிச்சை நடந்தது. இதில் அனுபவம் உள்ள மருத்துவர்கள் இல்லாததால், ஒரு திருநங்கையின் வாழ்வில் அறுவை சிகிச்சை சரியாகச் செய்யவில்லை என்றால் அவ்வளவுதான். அறுவை சிகிச்சைக்குப் பின்னால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்தெல்லாம் எதுவுமே சொல்லவில்லை. ஒரு திருநங்கைக்கு சரியாக செய்யாமல் மீண்டும் மீண்டும் 3 முறை செய்தார்கள். அவர்கள் கற்றுக்கொள்ள நாங்கள் நான்கைந்து பேர் பரிசோதனை எலிகளாக்கப்பட்டோம். இப்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்வதில்லை. கீழ்ப்பாக்கத்தில் மட்டுமே செய்கிறார்கள். எங்களுக்கு நிகழ்ந்தது போல் இப்போது நடப்பதில்லை. அது வரையில் பரவாயில்லை’’ என்கிறார் ஒரு திருநங்கை.
திருநங்கைகளுக்கு வீடுகொடுக்கும் திட்டம் நன்றாகவே செயல்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஊருக்கு வெளியில்தான் ஒதுக்குபுறமாக வீடுகள் ஒதுக்கப்பட்டன. இந்தக் குறை இருந்தாலும் ஒரு திருநங்கைக்கு இருப்பிடம் என்பது மிகவும் அவசியம். வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு வெளியேறிய திருநங்கைகளுக்கு சொந்தமாக ஒரு வீடு என்பதே மிகப்பாதுகாப்பானது என்கிற வகையில் அதை அனைவருமே ஆதரித்தனர்.
‘’நானும் லிவிங் ஸ்மைல் வித்யாவும் நலவாரியத்தை ஒரு லேப் டாப் வாங்கிக் கேட்டு அணுகினோம். நாங்கள் படித்திருக்கிறோம் என்பதால் அது பல வகையிலும் எங்களுக்கு உதவும் என்று நம்பினேம். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அலைக்கழித்தார்கள். இறுதியில் லேப் டாப்புக்கு பணம் தர முடியாது. 20,000 ரூபாய் கடனுதவி வாங்கிக்கொள்ளுங்கள். அதையும் நான்கு திருநங்கைகள் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றார்கள். ஏதாவது சுயதொழில் செய்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்றார்கள். இது போதும் உங்களுக்கு என்கிற தொனிதான் அரசு அதிகாரிகளிடம் தென்பட்டது. வாடிக்கையான தையல் மெஷின் போன்ற உதவிகள் வழங்குவது போன்றவற்றை மட்டுமே செய்தார்கள். ஆனாலும் இந்த அளவுக்காவது நலவாரியம் செயல்பட்டதே என்று நாங்கள் சந்தோஷப்பட்டோம்’’ என்கிறார் ஏஞ்சல் கிளாடி.
ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவையெல்லாம் நல வாரியம் அமைப்பதற்கு முன்பே திருநங்கைகளுக்குக் கிடைத்திருந்தாலும், மேலும் ஒழுங்குப்படுத்தப்பட்டது நலவாரியம் அமைக்கப்பட்டபின்புதான். மற்ற நாடுகளில் திருநங்கைகள் எந்த பாலின அடையாளத்தை விரும்புகிறார்களோ அதன்படியே மாற்றிக்கொள்ளலாம். அதாவது பாலின அறுவை சிகிச்சை முடிந்தவுடன், ‘பெண்’ என்று தனது எல்லா சான்றிதழையும் மாற்றிக்கொள்ளலாம். இதன்மூலம் பணியிடங்களில், வேலைவாய்ப்பில், கல்வி நிறுவனங்களில் என்று எங்குமே அவர்கள் பாகுபாட்டை எதிர்கொள்வதில்லை. ஆனால் இந்தியாவில் அறுவைசிகிச்சை செய்துகொண்டபின் பெயரை மாற்றிக்கொண்டாலும் பிறப்புச் சான்றிதழ் உட்பட எல்லா சான்றிதழ்களையும் மாற்றுவதில் பல சிக்கல்கள் உள்ளன. ’’இதனால் ஒரு சான்றிதழில் பழைய ஆண் அடையாளத்திலும், வேறொரு சான்றிதழில் புதிய அடையாளத்திலும் நாங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறோம். இதனால் அரசு அலுவலக நடைமுறைகளில் ஏகக் குழப்பங்கள். எங்கே சென்றாலும் திருநங்கை என்கிற அடையாளத்துடனேயே வாழ வேண்டியிருக்கிறது. பெண்ணாக நாங்கள் பார்க்கப்படுவதில்லை. இதுபோன்ற சிக்கல்களுக்கெல்லாம் நலவாரியம் ஒரு தீர்வு தரும் என்று நம்பினோம். ஆனால் இப்படி கிடப்பில் போடப்பட்டிருப்பதைப் பார்த்தால் கவலையாக இருக்கிறது’’ என்கிறார் ஒரு திருநங்கை. எல்லா திருநங்கைகளும் பெண் என்கிற அடையாளத்தை விரும்புவதில்லை. ஒரு சிலர் மூன்றாம பாலினமாகப் பார்க்கப்படவேண்டும் என்கிற கருத்தை முன்வைக்கிறார்கள்.
‘’அடையாள அட்டை போன்றவற்றை வழங்குவதோ அல்லது திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்குவதையோவிட நலவாரியம் என்பது திருநங்கைகளின் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் ஒரு கரமாக செயல்படவேண்டும். பாலியல்ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொள்வது, குடும்பச் சிக்கல்களை எதிர்கொள்வது, கல்வி - வேலைவாய்ப்பில் சம உரிமை போன்றவற்றுக்கு நலவாரியம் முன்னுரிமை கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.’நலவாரியம் திருநங்கைகளுக்கு மட்டுமானதாக இல்லாமல், திருநம்பிகளுக்கானதாகவும் இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். திருநங்கைகளைவிட திருநம்பிகளுக்குத்தான் சிக்கல்கள் அதிகம். ஆகவே அவர்களையும் இந்த நலவாரியத்தில் இணைத்துக்கொண்டு, திருநங்கைகள் நலவாரியம் என்ற பெயரில் இல்லாமல் பாலின சிறுபான்மையினர் நலவாரியம் என்கிற பெயரில் விரைவில் மீண்டும் செயல்பட துவங்கவேண்டும்; இதற்கு தமிழக முதல்வர் ஆவன செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’’ என்கிறார் லிவிங் ஸ்மைல் வித்யா.
சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதியை தொடர்பு கொண்ட போது ''திருநங்கைகள் மீது அக்கறையுள்ள அரசு இது. திண்டுக்கல் அருகே முதன் முதலாக திருநங்கை ஒருவருக்கு அரசு வேலை வழங்கியிருக்கிறோம் திருநங்கை களுக்கு பென்ஷன் வழங்குகிறோம். குழுக் களாக உள்ள அவர்களை ஒன்றிணைக்க வேண்டும். புதிய உறுப்பினர்களைக் கொ ண்டு நலவாரியத்தைப் புதுப்பிக்க இருக்கிறோம். அதற்கான முயற்சியில் இருக்கிறது அரசு'' என்றார்.
நலவாரியத்தின் முக்கிய திட்டமான சென்னையில் திருநங்கைகளுக்கான தற்காலிக விடுதி இப்போது செயல்படுவதில்லை. சென்னை கோட்டை அருகே இருந்த அந்த விடுதி பலருக்கு உதவியாக இருந்தது. அதுபோலவே 20,000 கடனுதவியும் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இப்படி நலவாரியத்தின் செயல்பாடுகள் நின்று இப்போது கோமா நிலையில் இருக்கும் திருநங்கைகள் நலவாரியம் மீண்டும் செயல்படவேண்டும் என்பது பாலின சிறுபான்மையினராகிய அவர்களின் எதிர்ப்பார்ப்பு. நிறைவேற்றுமா தமிழக அரசு?
நன்றி : இந்தியா டுடே
No comments:
Post a Comment