Thursday, October 31, 2013

’இணைய’ சாதிகள்

சமூக வலைத்தள ஊடகங்களாகிய ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை இன்றைக்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துபவை என்றும் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடியதாகவும் உள்ளது. ஒரு திரைப்படம் வெளியானால் கூட ஃபேஸ்புக்கில் அதற்கு என்ன எதிர்வினை என்பதில் திரைத்துறையினர் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட சமூக வலைத்தளங்களில் உண்மையில் ஆக்கபூர்வமாக ஏதாவது நடைபெறுகிறதா அல்லது வெறும் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்படுகின்றவா என்கிற ஆராய்ச்சியில் இறங்கினால், இவற்றை ஆக்கபூர்வமாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே உள்ளனர். குறிப்பாக சமூக வலைத்தளத்தில் இயங்கும் பெரும்பாலான தமிழர்களின் உளவியல் ஆபத்தானதாக உள்ளது.

முன்பொரு காலம் இருந்தது. தெருக்களிலும், ஊர்ப்பெயர்களிலும் உள்ள சாதிப் பெயர்களை அகற்றிய காலம் அது. நபர்களின் பெயருக்குப் பின்னாலும் சாதியைப் போடுவது இழிவென கருதப்படும் தமிழ்நாட்டின் இந்த நிலைக்கு பெரியார் உட்பட பல சீர்த்திருத்தவாதிகள் சாதி ஒழிப்புக்காக போராடியிருக்கின்றனர். அதன் காரணமாக வெளிப்படையாக சாதிவெறியைக் காட்டுவது தவறு என்றிருந்தது.ஆனால் இன்றைக்கு மிக பூதாகரமாக சாதிவுணர்வு வெளியே வர சமூக ஊடகங்கள்  ஒரு வாய்ப்பாக அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. நன்கு படித்த வேலையில் இருக்கும் ஓர் தமிழ் இளைஞன் ஓர் அரசியல் கட்சியின்பால், ஒரு சமூக இயக்கத்தின்பால், ஒரு திரைப்பட கலைஞரின்பால் ஈர்க்கப்படுவதை புரிந்துகொள்ள முடியும். தேடல் உருவாகும் வயதில் அந்தத் தேடலுக்கான ஒரு வடிகாலாய் ஏதோ ஒன்றை நினைத்து அதில் ஈடுபடுவதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் தன் சாதியின் பின்னால் அணிவகுக்கும் ஆபத்தான போக்கில் இளைஞர்கள் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி குழுக்கள் வலைத்தளங்களில் இயங்குகின்றன. அவற்றில் உறுப்பினர்களாக எந்த கூச்சமும் இன்றி இந்த படித்த தலைமுறை இயங்குகிறது. . தன் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்கிறது. இப்படி எல்லாமும் செய்யும் இந்த இளைய தலைமுறை தனக்கான அடையாளமாய் சாதியைத் தாங்கிப் பிடிப்பது அதிர்ச்சிகரமானது. இந்த திடீர்ப் போக்குக்கு என்ன காரணம்?

சமூக வலைத்தளங்களை உற்றுநோக்குபவரும் திரைப்பட இயக்குநருமான  ராம் ‘’உலகமயமாக்கலின் வீழ்ச்சி இது. சாதி மதம் என்று நம்மை குழு குழுவாகப் பிரித்துவிட்டது உலகமயமாக்கல். பெரியாரை நவீனமயமாக்கலுடன் தொடர்புபடுத்தலாம். நவீனமயமாக்கல் உற்பத்தியை அதிகரித்தது. அது தொழிற்துறையுடன் தொடர்புடையாதகவும் இருந்தது. ஆனால் உலகமயமாக்கல் உற்பத்தியை விட சேவைத்துறைக்கு முன்னுரிமை கொடுக்கிறது. அது இயல்பாகவே தனி சாதி, தனிக்குழு , தனி மதம் என்பதில் போய் முடிகிறது. நிலவுடைமை சமுதாயத்தின் கூறுகளாகவே சாதி இன்றைக்கு இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாகவே சாதியை மீட்டுருவாக்க முனையும் முயற்சிகளைப் பார்க்கிறோம். இனி தேசம், தேசியம் என்கிற சொற்களுக்கு அர்த்தமில்லாமல் போகும்.  சாதி போன்ற தனித்தனி அடையாளங்கள்தான் கலாசாரம் என்று பார்க்கப்படும். நிலைமை இன்னும் மோசமாகும்’’ என்கிறார்.

சாதியரீதியான அணிதிரட்டலை சமூக வலைத்தளங்கள் மிக இயல்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கின்றன. எப்படி பழைய நண்பர்களை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒன்று திரட்ட முடிகிறதோ அதுபோலவே தன் சாதியைச் சார்ந்தவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரை அடையாளம் காண்பதும், தன்னுடன் இணைத்துக்கொள்வதும் எளிதாக உள்ளது. முன்பெல்லாம் சாதிக்காரர்களை திரட்ட மாநாடுகளும் கூட்டங்களும் நடந்தன. இப்போது சமூக ஊடகங்கள் அவற்றை மிகவும் எளிதாக்குகின்றன. இணையதளத்தில் இயங்கும்  ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியே கூட்டங்கள் நடைபெறுகின்றன. சாதி வெறி அவர்களை தனிப்பட்ட தாக்குதல்களிலும், பாலியல்ரீதியான சொல்லாடல்களை பயன்படுத்துவதிலும் ஈடுபடவைக்கின்றன.

‘’வெளியில் சொல்ல வெட்கப்பட்ட சாதி அடையாளத்தை இன்றைக்கு தமிழர்கள் பெருமையாக போட்டுக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தவரை வேலை பார்க்கும் இடத்தில் அல்லது வேறு ஒரு பொதுவெளியில் சாதிப் பெயரைச் சொல்லி ஒருவரை திட்டிவிட்டுப் போய்விட முடியுமா? அப்படிச் செய்தால் பலருக்கு பதில் சொல்லவேண்டும். அது கேவலம் என்கிற பார்வை இங்கே ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தி சோதனை செய்துபார்க்கும் கடைசி முயற்சியாக சமூக ஊடகங்களை சாதியவாதிகள் பயன்படுத்துகிறார்கள். முகமூடிகளை பயன்படுத்திக்கொண்டு எந்த சாதியினரையும் மதத்தினரையும் இகழும் வசதி இங்கே இருக்கிறது. சமுதாயத்தின் உண்மை முகம் இங்கே வெளிப்படுகிறது’’  என்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.

‘’ஒரு உதாரணம் சொல்கிறேன். பொது வாழ்க்கையில் தமிழ்த்தேசியவாதிகள் திராவிட இயக்கங்களை இணைத்துக்கொண்டுதான் எல்லா இயக்கங்களையும் முன்னெடுக்கின்றனர். ஆனால் சமூக ஊடகங்களில் மட்டும் தமிழ்தேசியவாதிகள் தொடர்ந்து திராவிட இயக்கங்களை திட்டுவதையும் தாக்குவதையும், அவர்களை ஒழித்துக்கட்டவேண்டும் என்று செயல்படுவதையும் பார்க்க முடிகிறது. ஆக வெளியில் வேறு மாதிரி செயல்பட்டாலும் அவர்களின் உள்ளத்தில் உள்ளதை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திவிடுகிறார்கள். ஆக சமூக ஊடகங்கள் அடிமனதில் உள்ளவற்றை வெளிச்சம்போட்டுக் காண்பிக்க ஓர் இசைவான இடமாக இருக்கிறது. ஆணாதிக்கவாதிகள் பெண்களுக்கு எதிராகவும், சாதியவாதிகளும் தாழ்த்தப்பட்ட மக்களை ஒழித்துக்கட்டவேண்டும் என்கிற எண்ணத்தில் வெளியில் குறைவாகப் பேசினாலும் சமூக ஊடகங்களில் அதிகமாக எழுதுகின்றனர். சமூகத்தை பிரதிபலிப்பதை விட சமூக ஊடகங்கள் சமூகத்தின் அகமனதை திறந்து காட்டுகின்றன எனலாம். இது ஆரோக்கியமான போக்கு அல்ல.’’ என்கிறார்.

சமூக ஊடகங்களில் சாதிரீதியான அணிதிரட்டல் என்பதை ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் ஒடுக்கும் சாதியினருக்கும் ஒரே அளவுகோல் வைத்துப் பார்க்ககூடாது என்கிறார் எழுத்தாளர் பாமரன். ‘’அச்சத்திலும் பாதுகாப்பின்மை காரணமாகவும் ஒன்றாகச் சேரும் ஒடுக்கப்படும் சாதியினரையும், அச்சுறுத்த ஒன்றாக சேரும் ஆதிக்க சாதிக்காரர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. இது மதங்களுக்கும் பொருந்தும். உளவுத்துறைக்கு சமூக ஊடகங்கள் மிகப்பெரிய உதவி புரிகின்றன. ஆதிக்க சாதி அடையாளத்துடன் நூறு பேர் வந்தால், அதில் பாதி உளவுத்துறையின் வேலை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏற்கனவே சாதிரீதியாக பிரிந்துகிடக்கும் தமிழ்ச்சமூகத்தை மேலும் பிரித்தாளும் சூழ்ச்சியை அதிகாரம் செய்யும். என்னை கோபப்படுத்தவேண்டுமென்றால் எந்தப் பெயரில் வரவேண்டும், என்ன சொல்லி திட்டவேண்டும் என்பதையும் உளவுத்துறை அறியும். சாதியவாதிகள் பாதி உளவுத்துறை பாதி என்றுதான் சமூக ஊடகங்களின் சாதிய மோதல்களை பார்க்கவேண்டும். அப்படிப் பார்க்க நாம் தவறுகிறோம் என்று நினைக்கிறேன்’’ என்கிறார் பாமரன்.

”இணையத்தில் இருக்கிறார்கள் என்பதாலேயே அவர்கள் அறிவால் நவீனமானவர்கள் என்று கூறமுடியாது. கௌரவக் கொலைகளை, சாதிய வன்முறைகளை ஆதரிப்பவர்களாகவும், சாதிமறுப்பு திருமணங்களை எதிர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். நமக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற எண்ணம் வேறு. சாதிக்கு எதிரானவர்களை இழிவு செய்கிறார்கள். அவர்களை நட்புப் பட்டியலில் இருந்து நிக்கி ப்ளாக் செய்யவேண்டும். நிலைமை மோசமானால் காவல்துறைக்கும் செல்லலாம். அனைவரும் சமம் என்னும் ஜனநாயக நாட்டில் அவர்கள் செயல்பட இடமில்லை. நாஜிக்களுக்கு எதிராக ஐரோப்பாஅவில் எழுச்சி உண்டானது போல இங்கும் உருவாக வேண்டும்’’ என்கிறார் தலித் ஆதரவு கருத்துக்காக ட்விட்டரில் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதால் காவல்துறையில் புகார் அளித்த எழுத்தாளர் மீனா கந்தசாமி. அவரது புகார் மீது இதுவரை நடவடிக்கை ஏதுமில்லை.

சாதியவாதிகள் ஒருபுறம் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும் தொடர்ந்து ஜனநாயகவாதிகளும் முற்போக்கு இயக்கங்களும் எதிர்வினை ஆற்றுவதையும் காண முடிகிறது. ஆனால் இவர்களின் உரையாடலில் உள்ள நாகரிகமும் பண்பும் சாதிய அடையாளங்களுடன் வருபவர்களிடம் இல்லை. கெட்டவார்த்தைகள் மூலம் ஒருவரை கோபமடையச் செய்யும்போது உரையாடலின் தரம் குறைகிறது. எதிர்வினை ஆற்றுபவர்கள் பலர் அத்துடன் உரையாடுவதை நிறுத்திக்கொள்வதால் சாதியவாதிகள் சுதந்திரமாகவும் எதிர்க்குரலற்றும் சுதந்திரமாக உலவுவதைக் காணமுடிகிறது. சாதிகொரு குழு உள்ளதுபோன்றே சாதி ஒழிப்புக்கென்றும் குழுக்கள் உள்ளன என்றாலும் அப்படிப்பட்ட குழுக்களும், தனிநபர்களும் குறைவானவர்களே. 
சமூக ஊடகத்தில் எழுத, எழுத்தாளராகவோ, அறிவுஜீவியாகவோ, அறிவாளியாகவோ இருக்கவேண்டுமென்கிற அவசியம் இல்லை. சாமானிய மக்களும் எழுதலாம் என்பதே சமூக ஊடகங்களின் சிறப்பு. ஆனால் அது தவறாக பயன்படுத்தப்படும்போது அதற்கென சட்டங்கள் தேவை என்கிறார் திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதி. ’’ஒரு பொதுமேடையில் ஒரு தலித் குறித்து தவறாக சாதிப்பெயர் சொல்லித் திட்டினால் எப்படி பி.சி.ஆர். வழக்கு போடமுடியுமோ அதுபோலவே சமூக ஊடகத்தில் எழுதினாலும் போடவேண்டும். கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் எதைவேண்டுமானாலும் எழுத முடியுமா என்ன? ’’ என்கிறார் பாலபாரதி.

நன்றி: இந்தியா டுடே

6 comments:

 1. // இணையதளத்தில் இயங்கும் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியே கூட்டங்கள் நடைபெறுகின்றன. சாதி வெறி அவர்களை தனிப்பட்ட தாக்குதல்களிலும், பாலியல் ரீதியான சொல்லாடல்களை பயன்படுத்துவதிலும் ஈடுபட வைக்கின்றன.//

  நன்றாகச் சொன்னீர்கள். சில பதிவர்கள் தான் சார்ந்து இருக்கும் கட்சியின் கட்டளையின் பேரில் இப்படி எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். பேஸ்புக் போன்ற தளங்களில் வெளிப்படையாகவே செய்கிறார்கள்.


  ReplyDelete
 2. நிகழ்வுகளை சரியாக கவனித்துவருகீறீர்கள்.

  ReplyDelete
 3. மிக முக்கியமான, அழுத்தமான கருத்துக்கள் கொண்ட பதிவு தோழர் !

  ReplyDelete
 4. எனது பாராட்டுரைகள்.

  ReplyDelete
 5. இணைய சாதி அரசியல்வாதிகளுக்கு சாதி அரசியலின் அடிப்படையே தெரியவில்லை, சாதி அரசியலை திறம்பட செய்பவர்கள் திராவிடர்களே. அதற்கு திராவிட அரசியல் அதில் இருக்கும் விஜயநகரத்தன்மை எல்லாவற்றையும் பார்க்கவேண்டும், எம்.ஜி.ராமச்சந்திர மேனன் என்ற ஜாதிப்பெயரை விட எம்.ஜி.யார் தமிழ்ப்பெயராகிவிடும் இதுதான் ஜாதிப்பெயரை நீக்கியதன் உண்மையான அரசியல். எம்.ஜி.யார் ஒரு உதாரணம் மட்டுமே, அரசு அதிகாரம், அரசியல் பெரும்பதவிகளில் ஜாதி வெறியர்கள் என்று ஏலம் விடப்படும் ஜாதிக்காரர்ள் இருக்கமாட்டார்கள், ஆனால் ஜாதிகளை ஒழித்ததாக பெயரில் மட்டும் அழித்தவர்கள் அதிகம் இருப்பார்கள் அதுதான் உண்மையான ஜாதி அரசியல்.
  ஜாதிப்பெயரை நீக்கியதன் மூலம் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு எதாவது நன்மை நடந்ததா என்றால் விடை புரியும் உங்களுக்கு.

  ReplyDelete
 6. https://www.facebook.com/paramanandan.anandan.3/posts/281472152001833?ref=notif&notif_t=like

  ReplyDelete