மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கும் அவலம் நீடித்துவரும் நிலையில், அந்த துப்புரவுப் பணியை அருந்ததியின தலித் மக்கள்தான் செய்துவருகிறார்கள். அவர்களில் யாரேனும் இறந்தால் அடக்கம் செய்ய இடுகாடு கூட இல்லாமல் அல்லாடுவது ஒரு சமூக வன்முறை. 40 ஆண்டுகாலமாக இடுகாட்டுக்கான போராட்டத்தில் இருக்கின்றனர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில் வசிக்கும் சுமார் 70 குடும்பங்கள். மாவட்ட நிர்வாகம் தொடங்கி தலைமைச் செயலகம் வரை அரசிடம் பல முறை புகார் மனுக்கள் அளித்தும் இடுகாடு வசதி ஏற்படுத்தப்படவில்லை என்று கூறி வடுகபாளையம் கிராமமக்கள் சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு செப் 13 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இத்தனை நாட்களாக அங்கிருந்த ஒரு புறம்போக்கு நிலத்தையே இடுகாடாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அந்த இடம் ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. மழைக் காலங்களில் அந்த இடத்தை பயன்படுத்தமுடியாது. அருகில் உள்ள கால்வாயிலிருந்து தண்ணீர் ஊறி அங்கே கால்வைக்க முடியாது. அந்த சமயங்களில் 8 கி.மீ. சுற்றிக்கொண்டுதான் இடத்தைச் சென்றடைய முடியும். அதற்கும் வந்தது வினை. அரசு இனி அந்த இடத்தை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டது. அப்படியென்றால் இடுகாட்டுக்கென்று தனியே இடம் ஒதுக்கித் தாருங்கள் என்று கேட்டபின், தலித் மக்கள் குடியிருப்புக்கு அருகிலேயே ஓரிடத்தை இடுகாட்டுக்கென ஒதுக்கியது. ’’ஆனால் தலித் மக்கள் அந்த இடத்தை இடுகாடாக பயன்படுத்துவதை ஆதிக்கசாதியான கவுண்டர் சாதியில் உள்ள சிலர் அனுமதிக்கவில்லை.’’ என்கிறார் போராட்டக்குழுவில் இருக்கும் லோகநாதன். பிரச்சனை ஆனவுடன் பெருந்துறை வருவாய் வட்டாட்சியர், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினரும் வந்து இடத்தை பார்வையிட்டு மறு உத்தரவு வரும்வரை யாரும் இடத்தை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துவிட்டுச் சென்றனர். ’’ஆனால் ஆதிக்கசாதி தரப்பைச் சேர்ந்த டி.கே.பெரியசாமி என்பவரின் தூண்டுதலின்பேரில் அந்த இடத்தில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் அந்த இடத்தை குளமாக மாற்றவும் முயற்சி நடக்கிறது. அப்படியென்றால் நாங்கள் இடுகாட்டுக்கு எங்கே செல்வது’’என கேட்கின்றனர் தலித் மக்கள்.
மே மாதம் 15ம் தேதியன்று முருகன் என்பவர் இறந்துவிட, அவரை புதைக்கக்கூடாது என்று தகராறு ஆகிவிட, தலித் மக்கள் பிணத்துடன் சென்று சாலை மறியலில் அமர்ந்தனர். காவல்துறை பிணத்தை கைப்பற்றி முன்பு பயன்படுத்திவந்த இடுகாட்டில் வைத்து அடக்கம் செய்துவிட்டு ஒரு பெண் உட்பட தலித் மக்கள் 35 பேர் மீது அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டி முதல் தகவல் அறிக்கை போடப்பட்டதாக ஊர்மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதில் 26 பேரை விசாரணை செய்ய அழைத்துச் சென்று சிறையில் அடைத்தது காவல்துறை.
இந்த வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், இடுகாட்டு வசதி செய்து தருமாறும் கோரியே மக்கள் பலவிதத்திலும் போராடிவருகின்றனர். இது குறித்து காவல்துறை ஆய்வாளர் சிவகுமாரிடம் பேசியபோது ‘’வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து நான் முடுவெடுக்கமுடியாது. அரசாங்க மேலதிகாரிகள் உத்தரவு போட்டால் வாபஸ் பெற தயார்.’’ என்கிறார். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆனபின்னும் தலித் மக்களுக்கு மட்டும் செத்தால் புதைக்க நாதியில்லாத நாடாகவே இந்தியா இருக்கிறது என்பது மட்டும் முகத்தில் அறையும் உண்மை.
No comments:
Post a Comment