சங்கர மடத்துக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. இந்த முறை சங்கரமடம் சிக்கியிருப்பது ஊழல் முறைகேடு குற்றச்சாட்டில். சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு இம்முறைகேடுகள் விசாரிக்கப்படவேண்டும் என்கிறது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் தொடர்ந்த பொதுநல வழக்கில்தான் இப்படியொரு தீர்ப்பு வந்திருக்கிறது. பொதுவாக பொதுமக்களுக்கு சேவை செய்யும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக பணம் பெறும்போது, அந்தப் பணத்தை அளிக்கு நன்கொடையாளர்களின் அந்தப் பணத்துக்கு வரிவிலக்கு உண்டு. வருமான வரிச்சட்டத்தின் 80ஜி பிரிவின்படி வரிவிலக்கு அளிக்கப்படும். ஆனால் சட்டம் மிகத் தெளிவாகவே மதம் தொடர்புடைய எந்த அறக்கட்டளைக்கோ, மதம் பரப்பும் அறக்கட்டளைக்கோ அளிக்கப்படும் நிதிக்கு அப்படியான வரிவிலக்கு கூடாது என்கிறது. ஆனால் சங்கர மடத்தின் ஆளுகைக்குட்பட்ட சில அறக்கட்டளைகள் மதத்தைப் பரப்புவதற்கும் வேதங்களை பரப்புவதற்கும், பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த அர்ச்சகர்களுக்கான நலத்திட்டங்களுக்கும், கோயில் கட்டுவதற்கும், சிலைகளை நிறுவதற்கும் என முற்றிலும் மதம் தொடர்பான விஷயங்களுக்காக மட்டுமே நிதியைச் செலவிடும் இந்த அறக்கட்டளைகள் பொதுமக்களிடமிருந்து நிதியைப் பெறுகின்றன. அந்த நிதி மதம் தொடர்பான விஷயங்களுக்கு பயன்படுத்தபப்டுகின்றது. ஆகவே அரசுக்கு கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் இழப்பு ஏற்படுகிறது. எனவே சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் பெறப்படும் இந்தப் பணத்துக்கு வரிவிலக்கு அளிக்கக் கூடாது என்றும் இந்த அறக்கட்டளைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதற்குத் துணைபோன வருமான வரித்துறை மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரியும் சரவணன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அளித்த தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் வருமான வரித்துறை (வரிவிலக்கு) இயக்குனர் ஜெனரலை 80ஜி கீழ் அளிக்கப்பட்ட வரிவிலக்குகளை சரிபார்க்குமாறும், தவறாக பயன்படுத்தப்பட்டிருக்குமாயின் , மக்கள் சேவை தவிர பிற விஷயங்களுக்கு நிதி செலவிடப்பட்டிருக்குமானால், அந்த அறக்கட்டளைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் தீர்ப்பளித்தது.
ஒவ்வொரு அறக்கட்டளையாகவே பார்க்கலாம்.
சென்னை அபிராமபுரத்திலுள்ள ஸ்ரீ சங்கர பக்த ஜன சபா அறக்கட்டளை 2012 பிப்ரவரி 28 அன்று தேசிய நாளிதழ்களில் ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதில் வெளிப்படையாகவே ஒரு சிலையை நிறுவுகையில் அதற்கு தங்கத்தில் உள்ளும் புறமும் அலங்கரிக்கவேண்டும் என்பதற்காக நன்கொடைகள் கேட்கப்பட்ட்ருந்தது அறக்கட்டளையின் கணக்குப்படியே அதற்கு ஆகும் செலவு 225 லட்சம். அத்துடன் பொதுமக்களுக்கான அந்த விளம்பரத்தில் இதற்கு பொதுமக்கள் நிதி அளித்தால் அந்தத்தொகைக்க்க் 1961 வருமான வரிச் சட்டத்தின் 80ஜி பிரிவின் கீழ வரிவிலக்கு உண்டு என்றும் அறிவித்திருந்தது. இன்னும் ஒரு படி மேலே போய் தங்கமாகப் பெறப்படும் நன்கொடைகளுக்கும் 80ஜி வரிவிலக்கு உண்டு என்றது அந்த விளம்பரம்.
80ஜியின் விளக்கம் 3 இவ்வாறு சொல்கிறது: “மக்களின் சேவையைத் தவிர வேறெதற்காகவும், அது முழுமையாகவோ அல்லது குறைந்த அளவோ கூட மத இயல்புகொண்டதாக அச்சேவை இருக்குமாயின் வரிவிலக்கு கிடையாது”
இதன்படி பார்த்தால், இந்த அறக்கட்டளை மதம் தொடர்புடைய ஒரு சிலையை நிறுவி அலங்கரிப்பதில் பொதுமக்கள் சேவை துளியும் இல்லை. அத்துடன் இது மதத்துடன் தொடர்புடையது. எனவே இது முற்றிலும் தவறு என்கிறார் சரவணன்
அத்துடன் 80ஜியின் 5வது பிரிவு சொல்வது இது: ”பணமாகப் பெறப்படும் தொகைக்கு மட்டுமே வரிவிலக்கு. பொருளாகப் பெறப்பட்டால் வரிவிலக்கு கிடையாது”
ஆனால் விளம்பரமோ தங்கமாகப் பெற்றாலும் வரிவிலக்கு உண்டு என்று சொல்கிறது.
சென்னை கோட்டூர் கார்டன் பகுதியிலுள்ள காஞ்சி மூதூர் அர்ச்சகர்கள் நல அறக்கட்டளை பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சகர்களுக்கென உருவாக்கப்பட்ட ஒன்று. கிராமப்புறங்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு நிதியுதவி அளிப்பது இதன் முதல் இலக்கு. ஒரு குறிப்பிட்ட மதத்தின், அதிலும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அர்ச்சகர்களுக்கென்று இந்த நிதி செலவிடப்படுகிறது. இதுவும் சட்டவிரோதமே.
”இப்படியொரு வாதம் முன்வைக்கப்பட்டது. தலித் மக்களுக்கு செலவு செய்யப்படும் தொகைக்கு எப்படி வரிவிலக்கு அளிக்கப்படுகிறதோ அதன்படிதான் இதுவும். அது சாதி அடிப்படையில்தானே? அதுபோல அர்ச்சர்கர்களுக்கான நலத்திட்டங்களும் சாதி அடிப்படையில்தான் என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. எஸ்.சி./எஸ்.டி.யினர் மத்தியில் செயல்படும் அறக்கட்டளைகளுக்கு இது பொருந்தாது. 80ஜி பிரிவு மிகத் தெளிவாகவே சொல்கிறது. ஒடுக்கப்பட்டுள்ள எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை சாதி அடிப்படையிலானது என்று பார்க்கக் கூடாது என்று கூறி அதற்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறது.” என்கிறார் வழக்கறிஞர் சரவணன்.
சென்னை கோபாலபுரத்திலிருந்து இயங்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாலஷ்மி மாத்ருபூதேர்வரர் அறக்கட்டளை 80ஜி தவறாக பயன்படுத்தப்படுவதற்கு மிகச் சிறந்த உதாரணம். இந்த அறக்கட்டளை உருவாக்கபப்ட்டதே ஒரு சாதியைச் சேர்ந்த மதத்தலைவர் ஒருவருக்கு கோயில் கட்டுவதற்காக மட்டுமே. அதுபோலவே கோவையில் இயங்கும் ஸ்ரீ ஜகத்குரு அறக்கட்டளையும் கேரளாவின் பாலக்காட்டில் இயங்கும் வேத ரக்ஷ்ன சமிதியும் இந்து மத வேதங்களைப் பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதால் இவை முற்றிலுமாக மதம் தொடர்பானவை.
மேற்கூறிய அத்தனை அறக்கட்டளைகளுமே காஞ்சி சங்கரமடத்துடையவை. இவை அனைத்துக்கும் அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு 80ஜி வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. அத்தனை அறக்கட்டளைகளுக்குமான இணையதளங்களில் நோக்கம் மிகத்தெளிவாகவே மதச்சார்புடையதாகவே வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“அப்பர் கேஞ்சஸ் சுகர் மில்ஸ் லிமிடெட் எதிர் வருமான வரி இயக்குநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பில் சேவை என்பதில் மத நோக்கம் அறவே வராது என்றும் பெறப்படும் நிதி பணமாக மட்டுமே இருக்கவேண்டுமென்றும் கூறியிருக்கிறது. மெலும் ஈஸ்ட் இந்தியா இண்டஸ்ட்ரீஸ் (மெட்ராஸ்) பிரைவேட் லிமிடெட் வழக்கில் ‘ஓர் அறக்கட்டளையின் அனைத்து நோக்கங்களும் மக்கள் சேவையாக இருக்கவேண்டும். ஒரே ஒரு நோக்கம் வேறாக இருந்தாலும் வரிவிலக்குக்கு தகுதியில்லை’ என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருப்பதை என் மனுவில் சுட்டிக்காட்டினேன்.” என்கிறார் சரவணன்
இதில் அதிர்ச்சி என்னவெனில் இந்த வருமான வரிவிலக்குகளை வருமான வரித்துறை எப்படி வழங்கியது என்பதுதான். இந்த முறைகேட்டுக்கு துறையிலுள்ள அதிகாரிகளும் துணைபோயிருக்கிறார்கள் என்று நீதிமன்ற வாதங்களில் முன்வைக்கப்பட்டதையடுத்தே இப்படியொரு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. “இத்தீர்ப்பு தவறு நடந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறது என்கிற வகையில் வரவேற்கப்படவேண்டிய தீர்ப்புதான். ஆனால் குறிப்பாக இந்த ஐந்து அறக்கட்டளைகளை சுட்டிக்காட்டி நான் வழக்கு தொடர்ந்திருந்தாலும் தீர்ப்பில் பொதுவாக இப்படி முறைகேடுகளில் ஈடுபடும் அனைத்து அறக்கட்டளைகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. ஆகவே எங்களை குறிப்பாகச் சொல்லவில்லை என்று அவர்கள் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. ” என்கிறார் சரவணன்.
மக்களிடமிருந்து?வரிவிலக்கு பெறலாம் என்கிற முன்னறிவிப்புடன் பெறப்படும் திட்டங்கள் பெரும்பாலும் நிதியை அள்ளித்தர வல்லவை. ஏனெனில் நம் மக்களும் நிதியாண்டு இறுதியான மார் மாதத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை எப்பாடுபட்டாவது குறைக்கவேண்டும் என்ற உந்துதலுடன் ஊதியத்தின் ஒரு பகுதிக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்பதால் உற்சாகமாக நன்கொடை அளிக்க முன்வருகிறார்கள்.
இப்பிரச்சனையில் விளக்கம் கேட்க சங்கர மடத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டும் விளக்கம் பெற முடியவில்லை. முறைகேடுகளில் ஈடுபடும் எல்லா அறக்கட்டளைகள் மிதும் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதே சமூக அக்கறை கொண்டவர்களின் எதிர்ப்பார்ப்பு.
(நன்றி: இந்தியா டுடே)
(நன்றி: இந்தியா டுடே)
Are you prepared for a debate on this published matter supposedly on your BLOG and I will prove your ignorance of law and your bias like in many other subjects?
ReplyDelete