Thursday, May 29, 2014

ஆதாமின் மகன் அபு - ஒரு பார்வை


ஆதாமிண்டே மகன் அபு - மலையாளத் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பு இது. ஹஜ் பயணம் செல்ல விரும்பும் அபுவும் அவரது மனைவி ஆயிஷாவும் அதற்காக படும் பாடுகள்தான் கதை என்று ஒற்றைவரியில் சொல்லிவிட முடியாத படம் இது. ஏனெனில் படம் இறுதியில் சொல்லும் சேதி சக உயிர்கள்மீதான நேசம் எல்லாவற்றையும்விட முக்கியம் என்பதே.

மலையாளத்தில் வெளியான ’ஆதாமிண்டே மகன் அபு’ தமிழ்நாட்டில் இப்போது தமிழ் பேசுகிறார். ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் பின்னணியில் நகரும் படத்தின் மிகச் சிறப்பான அம்சம் பாத்திரங்களுக்கேற்ற நடிகர்களின் தேர்வுதான். அபுவாக வரும் சலீம் குமாரின் நடிப்பு மனதைக் கரைத்து நெகிழ்த்துகிறது. பள்ளிவாசலின் தொழுகை ஒலியுடன் தொடங்கும் படத்தில் இஸ்லாத்தின் கூறுகள் படம் நெடுக விரவியிருக்கின்றன. அதிகம் அறியப்படாத கேரள இஸ்லாமியர்களின் பண்பாடு படத்தை நகர்த்திச் செல்கிறது. 

ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்வையாளர்கள் மனதில் பதிய வைப்பதற்காக முதல்பாதி முழுவதையும் எடுத்துக்கொள்கிறார் இயக்குநர். ஆகவே முதல்பாதி மிக மெதுவாகவே நகர்கிறது. இரண்டாம் பாதியில் படம் நம்மை கட்டிப்போடுகிறது. கோவிந்தன் வாத்தியாரைப் பார்க்கப் போகும் அபுவிடம் ‘இறைவன் முன்னால் மனிதன் சுயநலவாதியாகத்தான் இருந்துவிடுகிறான். ஆனாலும் மெக்காவில் எங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கேட்கும் இடத்தில் நெகிழ்ந்துதான் போகிறது மனம். அதுபோலவே மரவேலைகள் செய்யும் ஜான்சன் உளுத்த மரமாகி விட்டது பலாமரம் என்றாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சொன்னபடி முழு பணத்தையும் தருவதும், நாணயம் முக்கியம் என்று அதை வாங்க மறுத்து ஹஜ் பயணத்தையே கைவிடும் அபுவையும் போன்ற மனிதர்களைக் காண்பது அபூர்வமாகத்தான் இருக்கிறது. தன் கையிலிருந்து ஐம்பதாயிரம் எடுத்துவந்து பயணத்துக்காகத் தரும் கோவிந்தன், ஹஜ் செல்வை ஏற்றுக்கொள்ள முன்வரும் அக்பர் டிராவல்ஸ் உரிமையாளர் போன்ற மனிதர்களை திரையில்தான் பார்க்கமுடியுமோ என்கிற ஏக்கம் தோன்றுவதைத் தடுப்பதற்கில்லை. 

தமிழ்ப் பதிப்பில் சவுண்ட் இன்ஜினியரிங்கில் குறைபாடுகள் தெரிகின்றன. தொலைவில் பேசுபவர்களும் அருகில் பேசுபவர்களும் ஒரே ஒலியளவில் பேசுகின்றனர். அத்துடன் மொழிமாற்றப் படங்களுக்கு வழக்கமாக குரல் கொடுப்பவர்களின் அதே குரல்களை பயன்படுத்தாமல் புதிய குரல்களைப் பேசவைத்திருந்தால் படத்தின் பலம் இன்னும் கூடியிருக்கும். ஐசக்கின் பின்னணி இசை பேச வேண்டிய இடத்தில் பேசி, மௌனிக்கவேண்டிய தருணங்களில் மௌனிக்கிறது. மது அம்பாட்டின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு பாத்திரமாகவே வருகிறது.

அத்தர் விற்பவர், தேநீர்க் கடை நடத்துபவர், குடை வியாபாரி, டிராவல்ஸ் உரிமையாளர், ஆசிரியர், மரக்கடை வியாபாரி, வீட்டிலேயே பால்வியாபாரம் செய்யும் பெண், ஹஜ்ரத், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர், சைக்கிளில் பால் விற்பவர் என்று பலவிதமான தொழில்கள் செய்யும் சாமான்ய மனிதர்கள் படம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். “நான் இறந்தபிறகு நீ வந்திருந்தால் என் மன்னிப்பு கிடைக்காமல் நீ திரும்பியிருப்பாய் அல்லவா?’ என்று சுலைமான் கேட்கும் இடமும், ‘அவர்களுக்கு டீ வாங்கித்தரும் வாய்ப்பு இனியொரு முறை எனக்குக் கிடைக்காமல் போகலாம்” என்று அபு தேநீருக்குக் காசு தரும் இடமும், ‘அத்தர் விற்கப் போகும் நான் நீ தனியா இருப்பாய் என்றுதானே மூணே நாளில் திரும்பி வருவேன்’ என்று அபு ஆயிஷாவிடம் உரைக்கும்போதும் தெரியும் அந்த வயோதிகத் தம்பதிகளுக்கிடையிலான அன்பும் நமக்குச் சொல்லும் சேதி ஏராளம். 

படம் முழுவதும் பொங்கும் மனித நேயமும், வேறுபாடுகள் கடந்த சக மனிதர்கள்மீதான பேரன்பும் நிஜ வாழ்க்கையில் நாம் பார்க்கும் அனுபவிக்கும், கேள்விப்படும் அத்தனை பாகுபாடுகளையும் ஒருகணம் மறந்து கனவுலகில் சஞ்சரிக்க வைத்து நெகிழ்த்துவது படத்தின் வெற்றி. 

*********

ஆதாமிண்டே மகன் அபு மலையாளப்படத்தின் தமிழ்ப்பதிப்பான ஆதாமின் மகன் அபு படத்தின் பிரத்யேகக் காட்சி முடிந்து வெளியே வருகிறார் அதன் இயக்குநர் சலீம் அகமது. ஒலிபெருக்கி முன் நின்று பேசும் டி.ராஜேந்தர் கண்களில் கண்ணீர். திடீரென்று ‘அல்லா’ என்று குரலெடுத்துப் பாடுகிறார். அப்படியொரு பாதிப்பை பார்வையாளர் மத்தியில் ஏற்படுத்திய படத்தின் கதைக்களம் உட்பட பல விஷயங்களை எப்படி தேர்வு செய்தார் சலீம்?

“டிராவல்ஸ் அண்ட் டூரிசம் படிப்பில் டிப்ளமோ பெற்றவன் என்பதால் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்போது ஏராளமான மனிதர்களை சந்தித்திருக்கிறேன். ஒரு முறை விமானத்தில் ஒரு தம்பதியிடம் பேசியபோது மாடுகளை விற்று அவர்கள் ஹஜ் பயணத்துக்கு வந்திருப்பதைச் சொன்னார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். இப்படத்தில் காணப்படும் எல்லாமே நிஜத்தில் மனிதர்களுக்கு நிகழ்ந்தவைதான். அந்த அனுபவத்தில்தான் இந்தப் படத்தை எடுத்தேன்’ என்கிறார் சலீம்

சலீமுக்கு கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாத்தனூர் தான் சொந்த ஊர். பள்ளிப்படிப்பு அங்கேயே முடித்தார். பி.காம். பட்டதாரி. சிறுவயதிலிருந்தே நாடகங்கள் போடுவது , மிமிக்ரி செய்வது என்று கலைஞராகவேதான் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் சலீம். “ஆயிரம் மேடைகள் ஏறியிருப்பேன்’ என்கிறார்.  திருச்சூர் நாடகப் பள்ளியில் மாஸ்டர் ஆஃப் தியேட்டர் ஆர்ட்ஸ் பட்டம் பெற்றவர். பின் சூர்யா தொலைக்காட்சி சேனலில் பணியாற்றினார்.

2011ல் வெளியான ஆதாமிண்டே மகன் அபு படம் பல தரப்பிலும் விருதுகளைக் குவித்தது. அந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பின்னணி இசை ஆகியவற்றுக்கான விருதுகளைப் பெற்றது. அந்த ஆண்டு ஆஸ்கருக்காக இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஒரே படமும் இதுவே. அரபு மற்றும் துருக்கி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் மலையாளப்படமும் இதுவே. 

இப்படத்தில் ஹஜ் செல்லும் பயணிகளுக்கான வகுப்பு ஒரு காட்சியில் வரும். கேரளாவில் பல இடங்களில் ஹஜ் வகுப்புகளில் இத்திரைப்படம் போட்டுக் காண்பிக்கப்படுகிறது என்கிறார் சலீம். இஸ்லாம் சமூகத்தில் சிலர் சினிமாவை ஹராம் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுண்டு. ஆனால் சலீமுக்கு அப்படியான எதிர்ப்பு எதுவும் இல்லை. “ஹராம் என்று சினிமாவை ஏன் சொல்கிறார்கள். அதிலுள்ள தவறான அம்சங்களால்தான். ஆனால் நான் அப்படியான ஒரு காட்சியையும் வைக்கவில்லையே” என்கிறார் சலீம். 

சலீமுடன் பணியாற்றிய மது அம்பாட் இந்தியா டுடேயிடம் “  இது ஒரு பட்ஜெட் படம்.  நான் படங்கள் அதிகம் ஒப்புக்கொள்வதில்லை. அவர் எனக்கு கதைசொன்ன விதத்திலேயே நான் மிகவும் கவரப்பட்டேன். தரமான ஒளிப்பதிவுக்கான எல்லா சாத்தியங்களும் நிறைந்த படமாக இப்படம் இருக்குமெனவும் நான் நம்பினேன். அதன்படியே இப்படம் விருது பெற்றுத் தந்துவிட்டது. நானும் சலீமும் ஈருடல் ஓருயிர் போலாகிவிட்டோம் ” என்கிறார்.

ஆதாமின் மகன் அபு படத்தின் பின்னணி இசை அமைத்த ஐசக் தாமஸ் சலீமுடன் பணியாற்றிய அனுபவத்தை சிலாகிக்கிறார். “எனக்கு அவர் முழு சுதந்திரம் தந்தார். எங்கே இசை தேவை, எங்கே வேண்டாம் என நானே முடிவு செய்ய அனுமதித்தார். ஒரு படத்தில் இயக்குநர்தான் தெரியவேண்டும். துருத்திக்கொண்டு இசையமைப்பாளரோ அல்லது வேறு ஒரு தொழில்நுட்பக் கலைஞரோ தெரியக்கூடாது என்று நினைப்பேன். அப்படித்தான் இந்தப் படத்தில் பணியாற்றினேன். எந்த பின்னணி இசை, சத்தம், பாடல்கள் என்று எதுவுமே இல்லாமல் படத்தைப் பார்த்தபோதே இப்படம் பல்வேறு விருதுகளைக் குவிக்கப்போகிறது என்று சொன்னேன். அது உண்மையாகிவிட்டது” என்கிறார்.

சலீமின் இரண்டாவது படம் குஞ்சனத்திண்டே கடா. மம்முட்டி நடித்த அப்படம் ஆகஸ்ட் 2013ல் வெளியானது. இவருடைய அடுத்த படத்திற்கான திட்டமிடுதலில் ஈடுபட்டிருக்கிறார். துபாய் சென்று வாழும் ஏராளமான கேரளாக்காரர்களின் பாடுகள் இங்கு பதிவு செய்யப்படாதது. துபாய் வாழ்க்கையை மையமாகக் கொண்டுதான் அடுத்தப் படத்தின் கதை அமையும் என்கிறார் சலீம். “நானும் சலீமும் 1967ல் முதன்முதலில் கேரளாவிலிருந்து துபாய்க்கு படகு மூலம் சென்ற ஒருவரை சந்தித்துப் பேசினோம். அன்றிலிருந்து இன்றுவரை துபாயிலிருந்து வரும் பணம்தான் ஏராளமான கேரளாக்காரர்களை வாழவைக்கிறது. அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட சலீமின் அடுத்தப் படம் ‘பத்தே மாரி’ அடுத்த ஆண்டு வெளியாகும். அதிலும் நான் தான் ஒளிப்பதிவாளர்” என்கிறார் மது அம்பாட்.

1 comment:

  1. மனது அலிபாய்கிறதுய்டத்தைப்பார்க்க

    ReplyDelete