Monday, July 14, 2014

பொன்னியின் செல்வன்

மதுரையின் டி.வி.எஸ். லட்சுமி சுந்தரம் அரங்கம் நிரம்பி வழிந்தது. கல்கியின் பொன்னியின் செல்வனை மேடையில் கண்டுவிட துடித்தனர். எழுதப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவுபெறும் இந்த வேளையில் மேஜிக் லேண்டன் குழுவினரின் உருவாக்கத்தில் கல்கியின் வரலாற்றுப் புகழ் பெற்ற நாவல் மேடை வடிவம் கண்டிருக்கிறது. 1999ல் மேடையேறிய இந்த நாடகத்தை இந்த ஆண்டு மீண்டும் மேடையேற்றியுள்ளனர். அப்போது சின்ன பழுவேட்டரையாக நடித்த பேராசிரியர் மு.ராமசாமி இப்போது பெரிய பழுவேட்டரையராக நடிக்கிறார். அப்போது நடித்த நாசர் இப்போது இல்லை. இப்படி சிற்சில மாற்றங்கள்




தோட்டாதரணியின் பிரம்மாண்டமான மேடை அமைப்பு முதலில் பார்வையாளர்களை உள்ளிழுக்கிறது. முதல் காட்சியிலேயே பல கால எந்திரத்தில் பயணித்து பல நூற்றாண்டுகளைத் தாண்டிவிட முடிகிறது. பொன்னியின் செல்வன் என்கிற மகத்தான காவியத்தை வாசித்தவர்களுக்கு நாவலின் நிகழ்வுகள் ஒரு திரைப்படம் போல கண்முன் நகரும் அதிசய அனுபவத்தை அடைந்திருப்பர். அந்த அதிசய அனுபவத்தை மேடையிலும் எதிர்ப்பார்த்துச் செல்பவர்களுக்கு நாவல் தரும் கற்பனைக் காட்சிகள் இன்னும் உவப்பாக இருக்கக்கூடும். ஏனெனில் அப்படியான ஒரு கதையை மேடையில் கொண்டு வருவதென்பது சவாலானது. திரைப்படமாகும் சாத்தியம் வேண்டுமானால் அதிகமாக இருக்கிறதே ஒழிய நாடக மேடைக்கே உள்ள  சில வரையறைகள் பிரம்மாண்டத்தை காட்சிப்படுத்த இயலாத ஒன்றுதான்.. ஆனாலும் பொன்னியின் செல்வன் நாடகத்தை நாம் கண்கொட்டாமல் பார்க்கிறோம். ஒரு காட்சியும்கூட அலுப்புத் தட்டாமல் விறுவிறுவென்று செல்கிறது நாடகம். 

கடலில் சுழிக்காற்று ஏற்படுவது ஓர் அத்தியாயம் முழுவதும் நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சியினை எவ்வாறு மேடையில் கொண்டுவரப்போகிறார்கள் என்கிற ஆவல் பார்வையாளர்களுக்கு இருந்தது. ஒரு பெரும் கூட்டமான மனிதர்களை வைத்து சுழிக்காற்றையும் கடலின் கோரத்தாண்டவத்தையும் அபிநயிக்க வைத்திருப்பது புத்திசாலித்தனம். அவர்களுடைய கரங்களின் அபிநயத்தில் சிறு சிறு அலைகளாக வெண் நுரை பொங்குவதையும் கடலில் கப்பல் காற்றில் அலைக்கழிந்து ஆடுவதையும் காண முடிகிறது. பிரமிக்க வைத்த காட்சி இது.  அருள் மொழி வர்மனை ஏன் மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்கிற கேள்வியுடன் நாகப்பட்டினம் சூடாமணி விஹாரத்தை மக்கள் முற்றுகையிடும் காட்சிக்குப் பின் வரும் கடல் பொங்கி ஊருக்குள் வரும் காட்சியை நாடகத்தில் வைக்காமல் விட்ட புத்திசாலித்தனமும் பிரமிக்கவே வைக்கிறது.  இப்போது நாம் சுனாமி என்று அழைக்கும் கடற்கோள் குறித்த வர்ணனைகளை மிகத் துல்லியமாக கல்கி தந்த அத்தியாயம் அது. 

எந்தெந்த அத்தியாயங்களை எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற தேர்வு மிகச் சரியாகவே இருக்கிறது. அதுபோலவே நடிகர் தேர்வும். ஆதித்த கரிகாலனின் வருகைக்குப் பின் மேடை நிறைவானதாக மாறுகிறது. பிரபுமணி அத்தனை இயல்பாக நடிக்கிறார் எனினும் பசுபதியின் பாதிப்பிலேயே நடிக்கிறார். நந்தினியாய் வரும் மீரா கிருஷ்ணனின்  குரலும் கம்பீரமும் மறக்கவியலாதது. இயல்பிலேயே சாகசக்காரியாய் கல்கியால் வர்ணிக்கப்பட்ட கோடிக்கரை பூங்குழலியாக நடித்த காயத்ரி ரமேஷின் உடல்மொழி அந்த பாத்திரத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது. மிக அநாயசமாக சுவர்களில் தாவி ஏறுவதும், ஓடுவதுமாக வீரமகள் ஒருத்தியை கண்முன் நிறுத்துகிறார். 'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?' என்று பூங்குழலி பாடும் பாடலில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கவேண்டும் பின்னணி பாடிய பெண்.

வந்தியதேவனின் பாத்திரத்தை வர்ணிக்கையில் கல்கி இப்படிக் கூறுவார் “மஞ்சள் பூசிய முகத்தைப் பார்த்தாலே அவனுக்கு தலை கிறுகிறுத்துவிடும்”. அதை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறார் வந்தியதேவனாக நடித்த ஸ்ரீகிருஷ்ணா தயாள்.. கதாநாயகத்தனமும் வேண்டும். கொஞ்சம் கிறுக்குத்தனமும் சாகசமும் வீரமும் காதலும் மையலும் கொண்ட அந்த பாத்திரம் மேடையில் அப்படியே உலவுகிறது. 

பசுபதி வடிவமைத்த சண்டைக்காட்சிகள் கூடுதலாய் ஈர்க்கின்றன. உடைகள் வடிவமைத்திருக்கும் ப்ரீத்தி ஆத்ரேயாவுக்கு சிறப்பான நன்றியைச் சொல்லலாம். உயிரைக்கொடுத்து நடித்தாலும் வெளியே தெரியாமல் முகத்தையே முக்கால்வாசி மறைத்துவிடும் கிரீடங்கள் நகைகள் எலலாம் இல்லாமல் அளவான உடைகள். பானுவின் கச்சிதமான ஒப்பனை நடிப்பில், காதல் காட்சிகளில் வழியும் இனிமையான புல்லாங்குழல் இசை, இளவரசரின் வருகையை கட்டியம் கூறும் முரசு என்று இசைக்குழு நாடகத்துக்கு உயிர் தந்திருக்கிறது.  இடைவேளையில் வெளியே சென்றவர்களை வந்து முரசறைந்து உள்ளே வரும்படி கூறிய சமயோசிதத்தை மக்கள் ரசிக்கவே செய்தார்கள். 

வசனங்கள், குறிப்பாக ஈழப்போர் குறித்த உரையாடல்கள் சமகால அரசியலுடன் ஒத்துப்போகின்றன. பூங்குழலி அறிமுகமாகும் காட்சியில் கடல் நீலத்தில் தெரியும் அந்த ஒளி இன்னமும் கண்களில் நிற்கிறது. நேர்த்தியான ஒளியமைப்பு இன்னொரு பாத்திரமாகவே நாடகம் முழுவதும் கூடவே வருகிறது. 

மந்தாகினி இறக்கும் காட்சி துண்டாக முடிவதுபோன்ற உணர்வைத் தருகிறது. ஆழ்வாக்கடியான் நம்பி பாத்திரம்தான் இன்னும் கொஞ்சம் பூசினாற்போல் இருந்திருக்கவேண்டும். பொன்னியின் செல்வன் நாவலை வாசிக்காமல் நாடகம் பார்க்க வருபவர்களுக்கு கதைமாந்தர்கள் எந்தளவு மனதில் பதிவார்கள் என்பது சந்தேகமே. இடையிடையே இருவர் வந்து இக்கால உடையில் தோன்றி பார்வையாளர்களிடம் பேசுகிறார்கள். யானை உருவத்தை மேடையில் கொண்டு வரும்போது கால்களில் அணிந்திருக்கும் பேன் தெரிவது. அரேபியர்களை குறிக்கும் உடைக்காக ஷேக்குகள் அணிந்திருக்கும் முழு அங்கியை அணிந்து வருகிறார்கள். இப்படி சில குறைகள் இருந்தாலும் ஈர்க்கவே செய்கிறான் பொன்னியின் செல்வன்.

(நன்றி: இந்தியா டுடே)

No comments:

Post a Comment