நீயற்ற பொழுதுகள்
வெறுமையாய் கழிகின்றன
என் ஏக்கத்தின்
தீராத பெருமூச்சு
புயலாகிச் சீறுகிறது கடற்பரப்பில்
பெருமூச்சோ சிறுமூச்சோ
என் சுவாசக் காற்றல்லவா அது
ஆனந்தமாய் உள்ளிழுத்துக்கொள்
தெறிக்கும் நீர்த்திவலைகளில்
என் தொடுகையை உணர்வாயா அன்பே
என் கண்ணீர் கரிக்கும உப்புநீரை
சுவைத்துப் பார்
பாதம் தொடும் அலைகளில்
முத்தங்களை அனுப்புகிறேன்
பெற்றுக்கொண்டதுபோக
மிச்சமிருக்கும் முத்தங்களால்
காதலர்களின் கரையோர காலடித்தடங்களை அழிக்கிறேன்
நாம் கைகோர்த்து நடக்கும் நாள்வரை
காதலரின் தடயங்களை அழித்துக்கொண்டேயிருப்பேன்
அவர்களிடத்தில் இரக்கம் கொள்ளாதே
கவனம் அன்பே
என்றேனும்
காதலர்கள் வந்துபோனதன்
அடையாளமாய்
அழிபடாத காலடித்தடங்கள்
தென்படக்கூடும்
அன்றைக்கு
நான் மட்டும் எங்கோ
கரை ஒதுங்கி இருப்பேன்
கடலை தூதனுப்புகிற உங்கள் வார்த்தைகளில் அலைகளின் பேரிரைச்சலை தாண்டிக்கொண்டு கேட்கிறது பிரிவின் மௌனச் சத்தம்.
ReplyDelete"காதலர்களின் கரையோர காலடித்தடங்களை அழிக்கிறேன்
நாம் கைகோர்த்து நடக்கும் நாள்வரை
காதலரின் தடயங்களை அழித்துக்கொண்டேயிருப்பேன்"
இந்த வரிகளில் இருக்கிற நியாயத்தை புரிந்துகொள்ள முடியாமலிருப்பினும் அதிலிருக்கும் வலியையும்..பிரிவு தரும் விரக்தியையும்..புரிந்து கொள்ள முடிகிறது.
"அன்றைக்கு
நான் மட்டும் எங்கோ
கரை ஒதுங்கி இருப்பேன்”
இந்த வரிகள் தருகிற அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. வேண்டா.......ம்.
"அன்றைக்கு
நாம் ஏதோவோர் கடற்கரையில்
கைகோர்த்து நடந்துகொண்டிருப்போம்”
என்று எழுதவேண்டும் உங்கள் விரல்கள்.
நன்றி